28 July 2013

நஷா


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இந்தியாவில் காந்திக்கு பிறகு அரை ஆடை மனிதர் என்று குறிப்பிடக்கூடிய தகுதி உள்ள ஒரே ஆள் – பூனம் பாண்டே ! இந்தியா கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றால் நிர்வாண நடை போடுவேன் என்று அறிக்கை விட்டு பலரை ‘க்ளீன் போல்ட்’ ஆக்கியவர். சொன்னபடி நடக்கவில்லை என்பது வேறு விஷயம், எனினும் அப்படிச் சொல்வதற்கே ஒரு ‘பெரிய மனது’ வேண்டும். (யாருப்பா அது ? இரண்டு வேண்டுமென்று கூட்டத்திலிருந்து சத்தம் போடுவது). அதைத் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘இந்தா அடுத்த பதினஞ்சு நிமிஷத்துல குளிக்கப் போறேன்’, ‘இதோ இன்னொரு அரை மணி நேரத்தில் டவுசரை கழட்டப் போறேன்’ என்று சொல்லிச் சொல்லி போட்டோக்களை போட்டுத்தள்ளிய ஸ்ட்ரிப்டீஸிங் ராட்சசி. நிறைய இளைஞர்கள் ட்விட்டர் அக்கவுண்ட் துவங்கியதே அம்மணியை பின்தொடரத்தான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பூனம் பாண்டே குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தன்னுடைய அரை நிர்வாண படத்தை வெளியிடப்போவதாக ட்வீட் போட்டால் போதும். டைம்லைனில் இருப்பவர்களுக்கெல்லாம் கை தேயத்தேய வேலை பார்ப்பார்கள் – வேறென்ன, கைகடிகாரத்தில் நேரத்தை பார்ப்பதற்கு தான் ! அப்படியெல்லாம் சமகால இளைஞர்களின் மத்தியில் எழுச்சி சிந்தனையை தூண்டிய பூனம் பாண்டேயின் முதல் (மற்றும் கடைசி ?) முழுநீள திரைப்படமாக வெளிவந்திருக்கிறது – நஷா !

நஷாவை பார்க்க முற்பட்டபோது முதலில் எனக்கு சமூகத்தின் மீது கடுமையான கோபமே மிஞ்சியது. ஆதாகப்பட்ட சென்னையில் இரண்டே இரண்டு திரையரங்கில் மட்டுமே நஷா வெளியாகியிருக்கிறது என்றால் கோபம் வராதா என்ன ? அதுவும் ஒவ்வொரு காட்சி மட்டும் ! என்ன மாதிரியான சம்முவத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் ? வெளியிட்ட திரையரங்குகளில் ஒன்று AGS, மற்றொன்று PVR. ஏஜிஎஸ்ஸில் சமயங்களில் ஆள் சேரவில்லை என்றால் காட்சியை ரத்து செய்துவிடுவார்கள். அதாவது நாம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு வில்லிவாக்கம் வரை லொங்கு லொங்கென்று ஓடவேண்டும். அவர்கள் சுலபமாக காட்சியை ரத்து செய்துவிட்டு புக்கிங் சார்ஜ் போக டிக்கெட் விலையை மட்டும் திருப்பிக்கொடுப்பார்கள். எனவே அமிஞ்சிக்கரைக்கு பயணித்தேன். டிக்கெட் கிடைப்பதில் பெரிய தள்ளு முல்லு எல்லாம் கிடையாது. அரங்கம் முழுக்க ஹிந்திவாலாக்கள். பாலின பேதமின்றி கூட்டம் சேர்ந்திருந்தது. இனி நஷா !

பூனம் பாண்டே சோப்பு நுரைகளை மட்டும் அணிந்தபடி குளிக்கும் காட்சியுடன் தான் படம் துவங்குகிறது. ஒருவேளை செண்டிமெண்டாக இருக்கலாம். கதை என்றால் பல்லாண்டுகளாக சீன் படங்களுக்கே உரித்தான ரதி நிர்வேத கதைதான். மேனிலை பள்ளியில் பயிலும் சில பதின்பருவ மாணவ / மாணவியரைச் சுற்றி கதை நகர்கிறது. அவர்களில் ஒருவன் தான் நம் நாயகன். அவருக்கு ஏற்கனவே ஒரு காதலியும் இருக்கிறாள். அச்சமயம் மாணவர்களை எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிடீஸில் ஈடுபடுத்தும் பொருட்டு பணியேற்கிறார் பூ.பா. பூ.பா.வைக் கண்டதும் மாணவர்கள் ஜொள்ளு வடிக்கின்றனர். மாணவிகள் பொறமை கொள்கின்றனர். நாயகன் மட்டும் இரவில் பூ.பா.வை நினைத்து சுயமைதுனம் செய்கிறார். கள்ளங்கபடமில்லாத பூ.பா மாணவர்களிடம் வெகு இயல்பாகவும் நெருக்கமாகவும் பழகுகின்றனர். இது எல்லா பயல்களுக்குள்ளும் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், நாயகன் மட்டும் ஒருபடி மேலே போய் பூ.பா.வை காதலிப்பதாக நினைத்துக்கொள்கிறார்.

படத்தில் ட்விஸ்ட் என்பதால் புதிய பத்தியில் எழுதுகிறேன். பூ.பாவின் அஜானபாகுவான காதலர் கதையிலும் பூ.பாவின் சதையிலும் என்ட்ரி கொடுக்கிறார். சூடு பிடிக்கிறது ! பூ.பாவின் காதலருக்கும் நம்ம ஹீரோ பயலுக்கும் அடிக்கடி பனிப்போர் நடக்கிறது. ஒருநாள் இரவில் பூ.பாவின் வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்து கட்டிலறைக்குள் எட்டிப்பார்க்கிறார் நாயகன். உள்ளே பூ.பா. அவருடைய காதலருடன் ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ விளையாடிக்கொண்டிருக்கிறார். வெளியில் சத்தம் கேட்டதும் உடலில் துணியை சுற்றிக்கொண்டு கையில் விளக்குடன் வருகிறார். துணி அருகிலிருக்கும் டேபிளில் சிக்கி அவிழ்ந்துக்கொள்ள நாயகன் முன்பு ஷேம் ஷேம் பப்பி ஷேமாக நிற்கிறார். உணர்ச்சிவசப்பட வேண்டாம் – நமக்கு புறமுதுகு தரிசனம் மட்டும் தான் ! இடைவேளை.

அடுத்தடுத்த டுவிஸ்டுகள். பூ.பாவின் காதலர் மாணவியர்களுள் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்று பூ.பாவிடம் வசமாக சிக்கிக்கொள்கிறார். ப்ரேக் அப். அதேபோல நாயகனும் தன்னுடைய காதலிக்கு முன்பு ‘பழைய’ என்ற முன்வையை சேர்த்துவிடுகிறார். ஏற்கனவே தன்னை நிர்வாணமாக பார்த்துவிட்டதால் நாயகன் மீது கோபமாக இருக்கிறார் பூ.பா. இருப்பினும் காதலரை பிரிந்துவாடும் அவருக்கு ஆறுதல் தேவை இல்லையா ? நாயகன் தோள் கொடுக்கிறார். முன்பைவிட நெருக்கமாக பழக துவங்குகின்றனர் – இருவரும் ஒன்றிணைந்து சரக்கடிக்கும் அளவிற்கு. நிற்க. பூ.பா இன்னமும் கள்ளங்கபடமில்லாமல் தான் பழகுகிறார். நாயகன் தன்னை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் பூ.பா வேலையை துறந்துவிட்டு ஊருக்கு செல்லத் தயாராகுகிறார். எஸ், நீங்கள் எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் பிட்டு வருகிறது – பூ.பாவின் வீட்டுக்குச் சென்று போக வேண்டாமென இறைந்து மன்றாடுகிறார் நாயகன். ஒரு கட்டத்தில் பூ.பாவுக்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துவிடுகிறது. எனினும் இது தவறு என்றுணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயல்கிறார். ஆனாலும் அடுத்த கட்டத்திலேயே உடைந்து உருகிவிடுகிறார். உதடுகள் உறிஞ்சிக்கொள்கின்றன. உடல்கள் பினைந்துக்கொள்கின்றன. நாயகன் பூ.பாவுக்குள் ஊடுருவுகிறார். அடுத்த காட்சியில் பூ.பாவின் வீட்டு வாசலில் பூட்டு தொங்குகிறது. அவருடைய குரலில் ஒரு நீண்ட வாய்ஸ் ஓவர். ஹிந்தியில் என்பதால் எனக்கு புரியவில்லை. நாயகன் தன் பழைய நண்பர்களுடனும், காதலியுடனும் இணைவதுடன் திரை இருள்கிறது.

பூனம் பாண்டே படத்தையே “தூக்கி நிறுத்தியிருக்கிறார்” என்றுதான் சொல்லவேண்டும். சர்வசாதாரணமாக உள்ளாடை மட்டும் அணிந்து ஜாக்கிங் போகிறார். காதலருடன் நிமிடத்திற்கு நான்குமுறை உதட்டுமுத்தம் பரிமாறிக்கொள்கிறார். போதாத குறைக்கு நாயகனின் கனவில் வேறு அடிக்கடி வந்து தொலைக்கிறார். என்ன ஒன்று, கடைசி வரைக்கும் பெரிதாக எதையும் காட்டவில்லை என்பதுதான் வருத்தம் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 July 2013

சாஃப்ட்வேர்க்காரன் சம்பளத்திற்கு எதிர்வினை !

அன்புள்ள வலைப்பூவிற்கு,


நான் பிழைப்பிற்காக தகவல் தொழில்நுட்ப துறையை அண்டியிருந்தாலும் கூட, இன்னமும் கலாசார ரீதியாக என்னுடைய சக பணியாளர்களுடன் ஒன்ற முடியாத நடுத்தர வர்க்க சாதாரணனாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். ஆறாயிரம் ரூபாய்க்கு கூலர்ஸ் வாங்குவது, இரண்டாயிரம் ரூபாய்க்கு சென்ட் பாட்டில் வாங்குவது என சில த.தொ பணியாளர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை பார்த்து கடுகடுப்பானாலும் கூட இணையவெளியில் அதனை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவ்வாறு வெளிக்காட்டுவது மல்லாக்க படுத்துக்கொண்டு உமிழ்ந்துக் கொள்வதற்கு சமம் அல்லது நம்முடைய பதிவை தெரியாத்தனமாக மேனேஜர் படித்துவிட்டு “வொர்க் கல்ச்சருன்னா என்னன்னு தெரியுமாய்யா உனக்கு ? என்று லெக்ச்சர் எடுக்கக்கூடும் என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.

அதையும் தாண்டி வா.மணிகண்டனுடைய சமீபத்திய பதிவை படித்ததும் ஒரு வயிற்றுக்கடுப்பு கிளம்பியது. கூடை வச்சிருக்குறவங்களுக்கெல்லாம் லைட்டு கொடுக்குறதில்லை என்பது போல பின்னூட்டப்பெட்டியை மூடி வைத்திருப்பவர்களுக்கெல்லாம் கருத்து / எதிர்வினை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் வா.மணியின் பதிவை படிக்கும் பொது தரப்பு ஆட்கள், த.தொ பணியாளர்களை பார்த்து அய்யோ பாவம் என்று உச்சு கொட்டுவதற்குள் என்னுடைய கருத்தை பதிவு செய்துவிட விரும்புகிறேன்.

வா.மணியின் பதிவை நான் முழுமையாக எதிர்க்கவில்லை. பிள்ளைகள் பெற்ற ஒரு குடும்பத்தலைவராக அவர் அவருடைய கவலைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள சில சால்ஜாப்பு காரணங்களை படிக்கும்போது தான் எதைக்கொண்டு சிரிப்பது என்று தெரியவில்லை. தவிர, பிற துறைகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் த.தொ ஆட்களை விட அதிகம் சம்பாதிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். த.தொ பணியாளர்களும் எல்லோரைப் போலவும் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மற்ற வேலைகளோடு ஒப்பிடும்போது த.தொ பணியாளர்கள் அதிகம் உழைக்கிறார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதை ஒப்புக்கொள்ள இயலாது.

அவருடைய சாஃப்ட்வேர்க்காரன் பற்றிய பதிவு – “என்னத்த சம்பாதிக்கிறோம் ? வேன் ஹியூசனில் சட்டை வாங்குவதற்கும், கே.எப்.சியில் கோழிக்கறி சாப்பிடுவதற்கும், பிள்ளைக்குட்டிகளை ஷாப்பிங் மால்களுக்கு அழைத்துச் செல்வதற்கே மொத்த பணமும் காலியாகிவிடுகிறது. ஆச்சு பார்த்தீங்களா ? மாசக்கடைசியில் நாங்களும் கடன் வாங்கித்தான் பொழப்பை ஓட்டுறோம். நாங்களும் உங்களை மாதிரி அன்றாடங்காய்ச்சிகள் தான் !” என்கிற ரீதியில் செல்கிறது.

மணிகண்டனின் பதிவுடைய முதல் சில பத்திகள் பொருளாதார வீழ்ச்சிக்கு பிந்தைய த.தொ பணியாளர்களின் வாழ்க்கையைப் பற்றி புலம்புகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் த.தொ ஆட்களின் சம்பளம் கணிசமாக குறைந்துவிட்டது உண்மைதான். ஆனால் திறமை உள்ளவர்கள் யாரும் தெருவுக்கு வந்துவிடுவதில்லை. “ஆடி” காரில் போய்க்கொண்டிருந்தவர்களை திடீரென அம்பாஸடருக்குள் அமர வைத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது இவர்களுடைய வாழ்க்கை. அதன்பிறகு, “என்னய்யா பெருசா காசை வாங்கிட்டோம் ? மிஞ்சி மிஞ்சிப்போனா பிச்சைக்காசு ஐம்பதாயிரம். அதை வைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் தெரியுமா ?” என்று தொடர்கிறார்.

// ஐ.டி கம்பெனிகள் என்ன கரட்டடிபாளையத்திலும், வள்ளியாம்பாளையத்திலுமா இருக்கின்றன? பெங்களூரிலும் சென்னையிலும் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை பன்னிரெண்டாயிரத்துக்கு குறைவாக வாடகைக்கு பிடிக்க முடிவதில்லை- அதுவும் கூட ஊருக்கு ஒதுக்குப் புறமாகத்தான் இந்த வாடகையில் கிடைக்கும். //

பெருநகரங்களில் சொந்தவீடு இல்லாமல் தங்கி பணிபுரிவது என்பது சிரமமான விஷயம் தான், அதிலும் குடும்பம் குட்டியோடு இருப்பதென்றால் ரொம்ப கஷ்டம் தான். ஆனால் பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிக்கும் அனைவருமே பன்னிரெண்டாயிரம் கொடுத்து தான் வசிக்கிறார்களா ? ஏன் ஆறாயிரம், எட்டாயிரத்திற்கெல்லாம் வாடகை வீடுகள் கிடைப்பதில்லையா ? நிச்சயமாக கிடைக்கும். ஆனால், பகட்டாக வாழ்ந்து பழக்கப்பட்ட நம் ஆட்கள் கொஞ்சம் விசாலமாக, கார் பார்க்கிங்குடன் கூடிய, பால்கனி வசதி கொண்ட போன்ற சில சொகுசுக்களை எதிர்பார்ப்பதால் பன்னிரெண்டாயிரம் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறது. (வீட்டு வாடகையை பொறுத்தவரையில் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணமே பொருளாதார வீழ்ச்சிக்கு முந்தய த.தொ சமுதாயம் தான் என்பதை மறந்துவிட வேண்டாம்). அப்புறம் பெட்ரோல் செலவு, இன்டர்நெட் செலவு (!!!), பிள்ளைகளின் படிப்புச் செலவு போன்ற சில நியாயமான காரணங்களை சொல்லியிருக்கிறார்.

// இது போக பெரும்பாலான கம்பெனிகளில் திங்கள், செவ்வாய் ஃபார்மல் ட்ரஸ்’, புதன், வியாழன் செமி ஃபார்மல்’, வெள்ளியன்று கேசுவல்என்ற நடைமுறை உண்டு. வான் ஹூசனிலும், பீட்டர் இங்க்லாண்டிலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சட்டை எடுக்க முடிகிறதா? அதுவும் டீம் பாலைவனமாக இருந்துவிட்டால் பரவாயில்லை. ஒன்றிரண்டு ஃபிகர்கள் இருந்துவிட்டால் அவர்களுக்கு வேண்டியாவது மாதம் ஒரு செட் துணி எடுக்க வேண்டியிருக்கும். ஆக இதுக்கு சராசரியாக மாதம் ஒரு ஐந்திலிருந்து நான்காயிரம் வரை. //

கவுண்டர் வாய்ஸ்: அவனவனுக்கு ஒன்னுக்கு வரலைன்னு வருத்தப்படுறான். இவனுக்கு இளநியில தண்ணி வரலையாம் !

நான் தெரியாமல் தான் கேட்கிறேன், சென்னை / பெங்களுருவில் வேன் ஹியூசன், பீட்டர் இங்க்லேண்ட் தவிர வேற ஜவுளிக்கடைகளே இல்லையா ? ஒருவேளை பிராண்டட் சட்டை அணியாவிட்டால் உடலில் அரிப்பெடுக்குமா ? (ஃபிகர்களுக்காக புதுத்துணி எடுக்க வேண்டியிருக்கிறது என்பது நகைச்சுவைக்காக எழுதிய வரிகளாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்).

// இந்தச் செலவை எல்லாம் செய்து முடித்தாலும் சம்பளப் பணத்தில் பத்தாயிரம் ரூபாய் மிச்சமிருக்கிறது அல்லவா? அதுக்கு வினை வைக்கத்தான் கிரெடிட் கார்ட், பெர்சனல் லோன் EMI என்று ஏதாவது வந்து சேர்ந்துவிடுகிறது. //

ஏதோ செய்யாத பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கும் தொனியில் எழுதியிருக்கிறார். நீ ஏன் மேன் லோன் வாங்குற ? எதுக்கு EMI கட்டுற ? பகட்டான வாழ்க்கையைத் தேடி வாங்கிய கடனைத்தானே ஓய் அடைக்கிறீர்கள் ?

// இத்தனையும் போக கே.எஃப்சி, பீட்ஸா கார்னர் என்று வாயைத் திறந்து கொண்டிருக்கும் பூதங்களுக்கு கிள்ளியும் அள்ளியும் போட வேண்டியிருக்கிறது. //

கே.எப்.சி, பீட்சா கார்னரில் சாப்பிட்டுத் தொலைக்காமல் பெருநகரங்களில் வாழவே முடியாதா ? எனக்குத் தெரிந்து எல்லா மென்பொருள் நிறுவன வளாகங்களின் சுற்று வட்டாரங்களிலும் ஓரிரு தள்ளுவண்டிக்கடைகள், ஃபாஸ்ட் ஃபுட் நிச்சயமாக இருக்கும். நம்மவர்களும் கரட்டடிபாளையத்தில் இருந்து சென்னைக்கு வந்த புதிதில் அந்த மாதிரி கடையில் எல்லாம் சாப்பிட்டிருப்பார். இப்பொழுது கொஞ்சம் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதால் அதுபோன்ற ரோட்டுக்கடைகளை பார்த்தால் முகம் சுழிப்பதும் ஸ்டோமக் அப்செட் ஆகிடும் என்று சொல்லி சீன் போடுவதுமாக பொழுதைக் கழிக்கின்றனர்.

// அரசு ஊழியர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் சம்பளம் எந்தவிதத்திலும் குறைவில்லை. இப்பொழுதெல்லாம் அரசாங்க ஊழியர்களின் சம்பளமே நாற்பது ஐம்பதைத் தொடுகிறது. அவர்களுக்கு சம்பளமா முக்கியம்? கிம்பளம்தானே மெயின் மேட்டர். சேனல்களில்  எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதுகளைத் தொடுகிறார்கள். ஐடிக்காரன் மட்டும் என்ன பாவம் செய்தான்? //

பிற துறையினர் எல்லாம் நோகாமல் நோம்பி கும்பிடுவது போல அல்லவா இருக்கிறது. கல்லூரி பேராசிரியர்கள் சர்வசாதாரணமாக ஐம்பதை தொடுகிறார்களாம். என்னடா இது சோதனை ? ஒருவேளை வயதை குறிப்பிடுகிறாரோ ? யாரும் வேலைக்குச் சேர்ந்ததும் போய் பேராசிரியராக அமர்ந்துவிட முடியாது. பேராசிரியராக முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும், விரிவுரையாளராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் மணிகண்டனுக்கு தெரியாதா என்ன ? முனைவர் பட்டம் எல்லாம் ஒரு விஷயமா என்று வெளியிலிருந்து பார்ப்பவர்கள் வெகுசாதாரணமாக சொல்லிவிடலாம், த.தொ தொழிலாளர்கள் எளிதாக பணம் சம்பாதிப்பதாக வெளியாட்கள் நினைக்கிறார்களே அது போல.

பொதுவாகவே மணிகண்டனின் வரவு செலவு கணக்கு தப்புக்கணக்காக தோன்றுகிறது. கணக்கு பாடத்தில் அவரு கொஞ்சம் வீக் போல. இருவரும் சம்பாதிக்கிறோம் என்றபடி ஆரம்பித்த அவருடைய பதிவு போகப் போக இருவருக்கும் பொதுவான செலவுகளை அவருடைய சம்பளத்திலிருந்து மட்டும் குறைத்துக்கொண்டு ஆச்சு பார்த்தீங்களா ? ஐம்பதாயிரம் காலி என்று கணக்கை முடித்துவிட்டார். தவிர, மணிகண்டன் போல பிள்ளைக்குட்டிகள் பெற்றெடுத்த த.தொ பணியாளர்கள் இந்நேரம் சொந்த வீடு, கார், சுவற்றில் மாட்டுகிற தொலைக்காட்சி என்று செட்டில் ஆகியிருப்பார்கள்.

// ஒருவேளை ப்ரோமோஷன் கிடைத்து சம்பளம் லட்ச ரூபாயைத் தொட்டாலும் எதுவும் மிச்சம் ஆகாது. கார் வாங்கி அதற்கு EMI, பெட்ரோல், ஒருவேளை டிரைவர் வைத்தால் அவர் சம்பளம் பன்னிரெண்டாயிரம் ரூபாய். //

இதுதான் ஃபினிஷிங் டச். ஆக, ஒரு லட்சமில்லை எத்தனை லட்சங்கள் வாங்கினாலும் கூட எல்லாவற்றையும் தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ / பகட்டான வாழ்க்கைக்கோ செலவு செய்துவிட்டு மாசக்கடைசியில் எங்க பர்ஸும் காலியாத்தான் இருக்கு, நாங்களும் ஏழைங்க தான் என்று புலம்புவார்கள். மனிதர்கள் அவரவர் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்வது இயல்புதான். ஆனால் புலம்பக்கூடாது. நாய் வேஷம் போட்டா குரைச்சுதான் ஆகணும்னு தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல த.தொ வேலை என்பது நாமாகவே வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்ட நாய் வேடம். குரைத்து தான் ஆகவேண்டும். விருப்பமில்லையென்றால் சர்வசாதாரணமாக ஐம்பதை தொடுகிற பேராசிரியராக பணிபுரியலாமே ? பொறியியல், MCA முடித்தவர்களுக்கு நிச்சயமாக கல்லூரி விரிவுரையாளர் பணி கிடைத்துவிடும். அதுவும் இல்லையென்றால் த.தொ இளைஞர்கள் அடிக்கடி ஃபேஷனுக்கு சொல்வதைப் போல ஊருக்கு போயி வெவசாயம் பார்க்கலாம் அல்லது கரட்டடிபாளையத்திற்கோ வள்ளியாம்பாளையத்துக்கோ போய் எருமை மாடு மேய்க்கலாம் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 July 2013

அந்தப்பக்கம் போயிட்டுவா நீ


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இருவருமே மும்பையில் பிறந்தவர்கள், வெண்ணெய்க்கட்டி நிறம், கொழுக் மொழுக் உடல்வாகு, கொஞ்சம் ஒரே மாதிரியான முக அமைப்பு. கவனிக்க: கொஞ்சம் தான். இவ்வளவுதான் குஷ்பூவுக்கும் ஹன்சிகாவுக்கும் உள்ள ஒற்றுமைகள். அதற்காக எல்லாம் ஹன்சிகாவை ‘சின்ன குஷ்பூ’ என்று அழைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குஷ்பூவுடன் ஒப்பிடும்போது மன்னிக்க அந்த வார்த்தையை பயன்படுத்த என் மனம் ஒப்பவில்லை. உடல் வாகிற்காக வேண்டுமானால் ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று சொல்லலாம். அதில் கூட கூடிய விரைவில் குஷ்பூவை சின்ன ஹன்சிகா என்று அழைக்கும் நிலை ஏற்படலாம். குஷ்பூ ஆரம்பத்திலிருந்தே அழகுப்பதுமையாக மட்டுமில்லாமல் நடிப்புத்திறனையும் பெற்றிருந்தார். உடல் வனப்புடன் கூடிய வசீகரமான முக லட்சணமும் அவரிடம் அமைந்திருந்தது. எல்லாவற்றையும் விட குஷ்பூவிடம் ஒரு ஆளுமை இருந்தது. அதுதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பிரதான அம்சம். அத்தகைய குஷ்பூவின் சிறப்புத்தன்மைகள் அனைத்திலும் ஹன்சிகா சுமார் என்று கூட சொல்ல முடியாது. அப்படியிருக்கும் போது ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று அழைப்பதில் துளியேனும் நியாயம் இருக்கிறதா ? வேண்டுமென்றால் கொஞ்சூண்டு குஷ்பூ என்று அழைத்துக்கொள்ளலாம். சரி குஷ்பூவுடனான ஒப்பிடலை ஒதுக்கிவிடலாம். பொதுவாக ஹன்சிகாவிடம் அப்படியென்ன தான் இருக்கிறது.

ஹன்சிகா தமிழில் நடித்த முதல் படமான “மாப்பிள்ளை” பார்த்திருக்கிறீர்களா ? சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை. தனுஷ் நல்ல நடிகர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், முழுநீள ஆக்குசன் திரைப்படம் என்றால்தான் மனிதர் முருங்கைமரம் ஏறிவிடுகிறார். அதிலும் பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் உச்சக்கட்ட வன்முறை. அதசரி, தனுஷ் கதை நமக்கெதற்கு. ஹன்சிகாவிடமே வருவோம். லைஃப்பாய் பயன்படுத்தினால் அழிந்துபோகக்கூடிய கிருமிகளின் சதவிகித நடிகைகள் தமிழில் தங்கள் சொந்தக்குரலில் பேசி நடிப்பதில்லை. அதற்கு முதலில் தமிழ் தெரிய வேண்டும். போய்த் தொலையட்டும். குறைந்தபட்சம் வாயசைப்பதையாவது ஒழுங்காக செய்யலாம் இல்லையா ? மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவின் உதட்டசைவை பார்த்தால் ஓங்கி சுவற்றில் போய் முட்டிக்கொள்ள தோன்றும். உதாரணத்திற்கு, ‘திருவண்ணாமலை’ என்ற சொல்லுக்கு ஹன்சிகா உதடசைத்தால் ஏதோ கெட்டவார்த்தையில் திட்டுவது போல தெரியக்கூடும். பாடல்காட்சிகளில் அதைவிட மோசம். ஒருவேளை ஹன்சிகாவின் உதட்டசைவு சிக்கலின் காரணமாகத்தான் அவரை படம்பிடிக்கும் கேமராக்கள் கழுத்துக்கு கீழேயே படம் பிடிக்கின்றனவோ என்னவோ ?

சச்சின் படத்தில் விஜய் ஒரு வசனம் பேசுவார். “...ஓசியில கிடைக்குதுன்னு சீஸ் பர்கர், சீஸ் பீட்சால்லாம் தின்னு தின்னு தின்னு இப்படி அஞ்சரையடி பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு...” என்று போகிற வசனம். நியாயமாக ஸ்லிம் ஜெனிலியாவிற்கு கொஞ்சம் கூட பொருந்தாத வசனம் அது. இருப்பினும் நடைமுறையில் ஹன்சிகாவிற்கு கனக்கச்சிதமாக பொருந்தும். வெண்ணையினால் செய்யப்பட்ட ஐந்தரையடி உருவமாகத்தான் ஹன்சிகா என் கண்களுக்கு தோன்றுகிறார். கெளதம் மேனன் படப்பாடல்களின் இடையிடையே மேலைநாட்டு பெண்கள் வந்து சம்மர்சால்டெல்லாம் அடிப்பார்களே, அவர்களில் ஒருவராக வேண்டுமென்றால் ஹன்சிகாவை ஏற்றுக்கொள்ளலாம். “இவ்வளவு பேசுகிறாயே... ஹன்சிகாவையும் உன்னையும் தனியறையில் வைத்து அடைத்தால் என்ன செய்வாய் ?” என்றொரு குரூர மனப்பான்மையுடைய கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டால், சாரி பாஸ் அப்போதைக்கு சுப்பையா என்கிற மானஸ்தன் உங்கள் கண்களுக்கு அகப்பட மாட்டான். நிஜவாழ்க்கையில் நாம் சந்திக்கும் சுமார்மூஞ்சிகளோடு ஒப்பிடும்போது, ஆமாம் ஹன்சிகா அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் சினிமா நடிகை என்ற தளத்தில் யோசித்துப்பார்க்கும்போது தான் சிக்கல் துவங்குகிறது.

தமிழன் எப்போது ஹன்சிகாவிடம் தன்னை ஒப்புவித்தான் என்று சிந்தித்துப் பார்க்கும்போது மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஏன் வேலாயுதம் வெளிவந்தபோது கூட தமிழன் தடுமாறாமல் தான் இருந்திருக்கிறான் என்று தெரிய வருகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி என்றொரு பாழாய்ப்போன சினிமா வந்து தொலைத்தது. அதில் இடம்பெற்ற அழகே அழகே என்ற பாடலில் இறுக்கமான மஞ்சள்நிற உடையணிந்து பாலைவனத்தில் ஓடிவந்து தமிழர்களுக்குள் கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஹன்சிகா. “பார்ப்பதற்கே மெத்து மெத்து என்று இருப்பதால், தன் பெயரை ஹன்சிகா மெத்துவானி என்று அவர் மாற்றி வைத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.” – ஒ.க.ஒ.க.வில் ஹன்சிகாவைக் கண்டு மயங்கிய ஒரு பிரபல எழுத்தாளர் இப்படி எழுதியிருக்கிறார். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் பார்ப்பதற்கு மெத்து மெத்து என்றால் என்ன அர்த்தம் ? “மெத்து மெத்து” என்பது காட்சியுணர்வா அல்லது தொடுவுணர்வா ? ஒருவேளை அந்த பிரபலம் அதனை தொட்டுப்பார்த்து மெத்து மெத்து என்று இருக்கிறதே என்று உணர்ந்திருப்பாரோ ? ம்ம்ம்... அப்படியே இருந்தால் தான் என்ன செய்ய முடியும். சரி, மறுபடியும் கட்டுரையின் சாரத்திற்கு வருவோம். ஆமாம், ஒ.க.ஒ.க படப்பாடலில் ஹன்சிகாவின் கழுத்துக்கு கீழே பகுதிகள் கிறங்கடிக்கத்தான் செய்தன. ஆனால் முகலட்சணம் என்று ஒன்று இருக்கிறதே.

அதே ஒ.க.ஒ.க படத்தில் ஒரு கதாபாத்திரம் ஹன்சிகாவின் BMI, உடையலங்கார உணர்வு, பல் தெரிகிற சிரிப்பையெல்லாம் பார்த்து அலறுகிறது. ஹன்சிகா தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிடத்தான் லாயக்கு என்றி எள்ளி நகையாடுகிறது. நாம் BMI லெவலுக்கெல்லாம் போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஹன்சிகாவின் பல்லு தெரிகிற சிரிப்பை பற்றி யோசிக்கும்போது சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது – “ஆத்தா... பையனை கூட்டிட்டு போய் வேப்பல அடிக்கணும் போல இருக்குது... நீ சிரிக்காத ஆத்தா...!”

திடீரென எனக்கு ஹன்சிகாவின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு ? சமீபத்தில் வெளிவந்த தீ.வே.செ.கு திரைப்படம் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு மென்பொருள் நிறுவனம். அங்கே பணிபுரியும் ஆண் ஊழியர்கள் யாரும் அழகான பெண்களையே பார்த்திருக்க மாட்டார்கள் போலும். ஹன்சிகாவை கண்டதும் கிலோலிட்டர் கணக்கில் ஜொள்ளு வடிக்கிறார்கள். லிப்ட் திறந்துவிடுவது தொடங்கி வாகனத்தில் லிப்ட் கொடுப்பது வரை விழுந்தடித்து ஊழியம் செய்கிறார்கள். ஐ.டி இளைஞர்கள் என்ன அப்படியா காய்ந்துபோய் இருக்கிறார்கள். எனக்கென்னவோ தீ.வே.செ.கு ஒட்டுமொத்த தகவல்தொழில்நுட்ப ஊழியர்களையும் அவமானப்படுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது. ஹன்சிகாவைப் போன்ற வட இந்திய மைதாநிற அழகிகளை ரசிப்பதைவிட திராவிட பாரம்பரியத்தில் வந்த கோதுமை நிற தன்ஷிகாவை ரசிக்கலாம்.

ஹன்சிகா மோத்வாணி – அந்தப்பக்கம் போயிட்டுவா நீ !

தொடர்புடைய சுட்டி: அமலா பால்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 July 2013

ஒரு மழைநேர மாலைப்பொழுதும் சில கஜுராக்களும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அது ஒரு மாலை நேரம். வெறுமனே மாலை நேரம் என்றெல்லாம் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. கார்மேகங்கள் சூழ்ந்து மழை பொழிவதற்காக காத்திருந்த மிக மிக ரம்மியமான மாலைப்பொழுது. அலுவலகத்தில் அரக்க பறக்க மின்னஞ்சலொன்றை தட்டச்சிக் கொண்டிருந்தேன். இதை மட்டும் அனுப்பி முடித்துவிட்டால் சீக்கிரம் வீட்டுக்குப் போய் முந்தானை முடிச்சு சீரியல் பார்க்கலாம், ஜொள்ளு வடிய வடிய சேட்டுக்கடை ஜிலேபி இரண்டை உள்ளே தள்ளலாம். எல்லாவற்றையும் விட முக்கியமாக ரமாவின் தினசரி வசையருவியிலிருந்து தப்பிக்கலாம். “ஸ்லர்ப்” – அன்றைய தினத்தின் ஆறாவது டீயின் கடைசி மடக்கை குடித்தேன், கூடவே மின்னஞ்சலையும். ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வெளியேறத் தயாரானேன். ரிசப்ஷனில் பாலா தன்னுடைய கணினித்திரையில் எதையோ வெறித்துப்பார்த்தபடி இருந்தாள். என்னைப் பார்த்ததும் கொஞ்சம் மிரட்சியுடன் எழுந்து நின்றாள். நான் அவளை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. தப்பித்தவறி அவள்மீது பார்வை பட்டுவிட்டால் ராத்திரியெல்லாம் தூங்கவிடாமல் படுத்தியெடுத்து விடுவாள் ராட்சசி. இருப்பினும் அவளைக் கடந்துவந்த பின், பார்த்திருக்கலாமோ என்று தோன்றியது.

Thanks: gapingvoid.com

பாலாவை காணத்தவறிய விழிகளின் மீதுள்ள கோபத்தை பைக்கின் கிக் ஸ்டார்ட்டர் மீது காண்பித்தேன். அது உறுமியபடி வேகமெடுத்தது. அதிகபட்சம் இரண்டு சிக்னல்களை கடந்திருக்க மாட்டேன், ஒரு கவிதைத்துளி என் மீது சிந்திய உணர்வு. அதெல்லாம் இருக்காது என்றெண்ணியபடியே வண்டியின் வேகத்தை அதிகரித்தேன். அடுத்ததடுத்து கவிதைத்துளிகள் என்னை சீண்டிக்கொண்டிருந்தன. சில நிமிடங்களில் வானிலிருந்து அதீத கவிதைகள் பொழிய ஆரம்பித்தன. ஆம், பெருமழை. அடடே முந்தானை முடிச்சு பார்க்க முடியாதே ! ம்ம்ம் பரவாயில்லை ரமாவிடம் கதை கேட்டுக்கொள்ளலாம். மொத்தமாக நனைந்து முடிவதற்குள் டீக்கடையின் ஓரமாக வண்டியை செலுத்திவிட்டு ஒதுங்கினேன்.

அது நாயர் டீக்கடை என்று சொன்னால் க்ளேஷேவாக இருக்கும். தாராளமாக நின்றால் ஐந்து பேர் நிற்கக்கூடிய அந்த டீக்கடையின் வெளிப்பகுதியில் மழையின் காரணமாக சுமார் இருபது பேர் நின்றுக்கொண்டிருந்தோம். அதாவது அடைந்திருந்தோம். நான்கைந்து ஐ.டி. பணியாளர்கள், ஒருவன் கையில் டீ கிளாஸும் ஒருத்தியின் விரலிடுக்கில் கிங்ஸும் அகப்பட்டது. ஒரு தாத்தா அவருடன் அழைத்து வந்திருந்த சிறுமிக்கு ஜாம் பன் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அது அவரை சட்டை செய்யாமல் குர்குரே கேட்டு அடம் பிடித்துக்கொண்டிருந்தது. ஒருத்தி சுற்றியிருந்த காடா துணிக்கிடையே இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தது. அவளுடைய ஸ்கூட்டி என்னுடைய ஸ்ப்ளெண்டருடன் சேர்ந்து நனைந்துக்கொண்டிருந்தது. எனக்கு எதிரில் ஒருத்தன் வாழைக்காய் பஜ்ஜியை தினத்தந்தியில் வைத்து பிதுக்கி கொடுமைபடுத்திக் கொண்டிருந்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டேயிருந்த எனக்கு சற்றே அயர்ச்சியான காரணத்தினால் “மாஸ்டர்... ஒரு டீ...!” என்று அலறினேன்.

பட உதவி: கூகிள்
டீ சொல்லிவிட்டு சட்டென திரும்பியபோது தான் அந்த காக்கி நிற வஸ்து என் கண்களில் பட்டது. அதற்கு கஜூரா என்று பெயர். முதலில் கஜூராவின் குணநலன்களை ஒப்பித்துவிடுகிறேன். கஜூரா கிட்டத்தட்ட சதுர வடிவத்தில் இருக்கும், சமயத்தில் மாஸ்டரின் கைவண்ணத்தை பொறுத்து வடிவம் மாறுபடும். போண்டாவை போலவே கஜூராவும் ஒரு இனிப்பு பண்டம். எனினும் போண்டாவைக் காட்டிலும் திடமானது. ஒரு கஜூராவை கையில் எடுத்தால் சாப்பிட்டு முடிக்க பத்து நிமிடங்கள் வரை ஆகலாம். நிற்க. என்னைப் போன்ற திறன் படைத்தவர்கள் இரண்டு நிமிடங்களிலேயே கூட தின்று முடிக்கலாம். என்னுடைய நினைவுக்குவியலிலிருந்து அரைக்கால் சட்டை அணிந்திருந்த நான் தேன்மொழியிடமிருந்து கஜூராவை அபகரித்துத் தின்ற காட்சியை “சார்... டீ...” என்ற பாழாய்ப்போன மாஸ்டரின் குரல் கலைத்து தொலைத்தது.

ஒரு கையில் டீ கிளாஸை வாங்கியபடி மறு கையில் கஜூரா ஒன்றினை எடுத்து வாயில் வைத்தேன். அய்யுய்யோ ! நான் கஜூராவையா சாப்பிடுறேன்... கடவுளையே சாப்பிடுறேன். நான் கடைசியாக கஜூரா சாப்பிட்டது எப்போது என்று நினைவில்லை. ஆனால் நிச்சயமாக பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். கஜூரா சாப்பிடுவதில் ஒரு மிகப்பெரிய நன்மை உள்ளது. வயிறு துரிதமாக நிரம்பிவிடும். கஜூராவை கடித்தபடியே உலகத்தைப் பற்றி சிந்திக்க துவங்குகிறேன். உலகம் ஏன் கஜூராவைப் போல சதுரமாக அல்லாமல் போண்டாவை போல உருண்டையாக இருக்கிறது. ஆனால் அத்தகைய உலகத்தில் வாழக்கூடிய வாழ்க்கை மட்டும் போண்டாவை போல மென்மையாக அல்லாமல் கஜுராவைப் போல கடினமானதாக இருக்கிறதே ! போண்டாவின் சுவை போண்டாவில் இல்லை, அதன் இடையிடையே தென்படும் மிளகில் தான் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறாராம். அதுபோலத்தான் கஜூராவும். கஜூராவின் சுவை கஜூராவில் இல்லை, அதனை மெல்லும் வாயில்தான் இருக்கிறது. அடுத்ததடுத்து கஜூராக்களை லபக்கிக்கொண்டிருந்தேன். கடைசியாக ஒரேயொரு கஜூரா மட்டும் பலகார பலகையில் எஞ்சியிருந்தது.

பட உதவி: கூகிள்
ஒரு புதிய மனிதர் டீக்கடைக்குள் நுழைகிறார். உடைந்து விழுந்து விடுவாரோ என்று அச்சப்படுகின்ற வகையில் ஒல்லியான தேகம், வழுக்குப்பாறை போன்றதொரு சொட்டைத்தலை, தன்னுடைய அளவிற்கு பொருந்தாத முழுக்கை சட்டை, பாலைவனச்சோலை காலத்து பேண்ட், கழுத்தில் ருத்திராட்ச கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை. கணநேரம் கஜூராவை மறந்து கண்ணசைக்காமல் அந்த மனிதரை பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன வாங்க வந்திருப்பார் ? மாஸ்டரிடம் ஒற்றை விரலைக்காட்டி சைகையில் ஏதோ சொன்னார். ரெகுலர் கஷ்டமராக இருக்கக்கூடும். பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். அது புகையை கக்கியது. அடுத்த சில நிமிடங்களில் அவர் சைகையில் குறிப்பிட்ட பானம் அவருடைய கைகளுக்கு வந்தது. அது டீ ! டீயை ஒரு மிடறு குடித்துவிட்டு சிகரெட்டை இழுத்தார். அதுவே சில நிமிடங்களுக்கு தொடர்ந்தன. சிகரெட் தன்னுடைய கடைசி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்தது. திடீரென ஒரு சுதாரிப்பு. நான் ஏன் அவரையே நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன் ? உண்மையில் எனக்கு என்ன பிரச்சனை ? ஏதோவொரு உண்மை உரைக்க அவர் மீதிருந்து என்னுடைய பார்வையை விலக்கிக்கொண்டேன். கடைசி கஜூராவை எடுக்க கையை நீட்டினேன். என்னை முந்திய ஒரு கை அதனை அபகரித்துவிட்டது. அது அவருடைய கை. அவருக்கும் கஜூரா பிடிக்கும் போலிருக்கிறது. வந்த கோபத்திற்கு அவரை நாலு மிதி மிதிக்கவேண்டும் போல தோன்றியது. எனக்கொரு தேன்மொழி இருந்தது போல அவருக்கொரு கனிமொழி இருந்திருக்கலாம் என்று நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மழை குறைந்திருந்தது.

சாலையில் வாகனங்கள் நகர ஆரம்பிக்கின்றன. நான் என்னுடைய நந்தவனத்தேரை நகர்த்தி அதன் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முற்படுகிறேன். அதற்குள் பாலைவனச்சோலை கடைசி கஜூராவை விழுங்கிவிட்டு அவருடைய வாகனத்தை எடுக்கிறார். அவரைக் கண்டதும் எனக்குள் சிறு அதிர்ச்சி. அவர் என்னைக்கண்டு லேசாக புன்னகைக்கிறார். கஜூராவை அபகரித்ததற்காக மன்னிப்பு கேட்கும் புன்னகை. புது உற்சாகத்துடன் வண்டியை கிளப்பி வேகமெடுக்கிறேன். அவரும் வண்டியை எடுத்துக்கொண்டு எனக்கு நேரெதிர் திசையை நோக்கி தன்னுடைய பயணத்தை துவங்குகிறார். சிறு தூறலுக்கிடையே தொடர்கிறது எங்கள் பயணம்... சாலையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் கூட !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment