Showing posts with label devi. Show all posts
Showing posts with label devi. Show all posts

5 January 2015

ஃபேஸ்புக் பொண்ணு - சரோஜா தேவி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தாண்டு உற்சாகமாகவும் உணர்ச்சிமயமாகவும் துவங்கியிருக்கிறது. உயிர்மையின் பத்து புதிய நூல்கள் கடந்த சனியன்று (03/01/2014) அண்ணா சாலை புக் பாயிண்டில் வெளியானது. அவற்றில் இரண்டு எனது விருப்பப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்களுடையது. அவ்விருவரும் வலையுலகின் கணேஷ் – வசந்த் போன்றவர்கள் (இருவரில் யார் வசந்த் என்பதற்கு அரங்கிற்கு வந்த ரசிகைகள் சாட்சி). ஒன்று, ‘லக்கிலுக்’ யுவகிருஷ்ணா எழுதிய சரோஜாதேவி. மற்றொன்று, அதிஷாவின் ஃபேஸ்புக் பொண்ணு.

கொஞ்சம் தாமதமாகவே புக் பாயிண்டுக்கு சென்றோம். சூழ்நிலை ஒத்துழைத்தால் சில புகைப்படங்கள் எடுக்கலாம் என்று கேமராவை (Canon powershot SX150) எடுத்துச் சென்றிருந்தேன். அங்கே சென்றால், பிரபு காளிதாஸ், உமா மகேஸ்வரன் லாவோ ஸு, சுதர்ஸன் ஹரிபாஸ்கர் போன்ற புகைப்பட ஜாம்பவான்கள் ஆளுக்கொரு SLR வைத்து சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். போதாமைக்கு ஒருவர் வீடியோவும் எடுத்துக்கொண்டிருந்தார். கமுக்கமாக அமர்ந்துக்கொண்டேன்.

வானொலி தொகுப்பாளர் கண்மணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். எதிர்பார்த்த லவ் குரு வரவில்லை. எங்கெங்கு காணினும் பிரபலங்கள். வெளியிட வேண்டிய புத்தகங்கள் வந்து சேரவில்லை. நீதியரசர் சந்துரு வேறு அவுட் ஆஃப் சிலபஸில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் போரடிக்கத் தான் செய்தது.

சற்று நேரத்தில் வெளியே போன் பேசுவதற்கு சென்றுவந்த நண்பர் ‘புக்ஸ் வந்துடுச்சு’ என்ற இன்பத்தேனை என் காதில் பாய்ச்சினார். என்னது மொளகா பஜ்ஜி போட்டுட்டாங்களா ? என்று பாய்ந்தோடி இரண்டு புத்தகங்களையும் முதல் ஆளாக வாங்கினேன், அதுவும் மேடையில் புத்தகம் வெளியிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே.

இருவரிடமும் ஆட்டோகிராப் வாங்க வேண்டும். எங்கே பேனா இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று எண்ணி அதையும் வீட்டிலிருந்தே கொண்டு வந்திருந்தேன். வெளியீடு முடிந்து எழுத்தாளர்கள் மேடையிலிருந்து இறங்கியதும், இருவரிடமும் ஆட்டோகிராப் வேண்டி நின்றேன். கையொப்பத்திற்கு ஐயாயிரம் கேட்காத நல்லிதயம் கொண்டவர்கள். அதிஷா சுருக்கமாக ‘அன்புடன் அ’ என்று முடித்துக்கொண்டார். யுவகிருஷ்ணா அவரிடமிருந்த சிகப்பு மை நிரப்பப்பட்ட ஹீரோ பேனாவால் ஏதோ எழுதி கையொப்பமிட்டார். ஆறு புத்தகங்கள் எழுதியவருக்கு கூட ஆட்டோகிராப் போடும்போது கை நடுங்கும் என்று நான் உணர்ந்துகொண்ட தருணம் அது. யுவகிருஷ்ணா எனக்கான ஆட்டோகிராபில் என்ன எழுதினார் என்பதை தட்டச்சினால் என் கைகளும் நடுங்கக்கூடும் (பார்க்க படம்). உணர்ச்சிமயமான தருணத்தில் எனது தகுதிக்கு மீறிய அப்படியொரு வார்த்தையை யுவகிருஷ்ணா எழுதிவிட்டாலும் கூட, அதனால் நான் கொண்ட மகிழ்ச்சி அளவில்லாதது. என்ன ஒன்று, வீட்டில் காட்ட முடியாத புத்தகம் என்பது தான் சிறிய வருத்தம்.

ஆக, ஃபேஸ்புக் பொண்ணு, சரோஜாதேவி ஆகிய புத்தகங்கள் அதனதன் ஆசிரியர்கள் ‘முதல்’ கையொப்பமிட்ட பிரதிகள் என்னிடம் உள்ளன. இதன் மதிப்பு சில வருடங்களுக்கு பிறகு லட்சங்களில் இருக்கக்கூடும்.

ஃபேஸ்புக் பொண்ணை இன்னும் வாசிக்கவில்லை. சரோஜா தேவியை பொறுத்தவரையில் ஏற்கனவே சொன்னதுபோல் எல்லாம் வலைப்பூவில் வாசித்த கட்டுரைகள். ஆயினும், என்னைப் பொறுத்தவரையில் ஒரு சிலபஸ் புத்தகம் போல பாதுகாக்க வேண்டியது. சுஜாதா நாவல்களை படிக்கும்போது வெறுமனே வாசகனாக இல்லாமல் நாமும் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஒன்று ஏற்படும். யுவகிருஷ்ணாவின் எழுத்துகளும் அப்படித்தான். அவருடைய சொல்லாடல்கள் ‘எழுச்சி’யூட்டுகின்றன. என்றும் இணைய சுஜாதா அவர் மட்டும்தான் !

ஒரு ஆறுதலான விஷயம், தினகரனின் முதன்மை ஆசிரியர் சில நாட்களுக்கு முன்பு சரோஜா தேவி புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். அதில் புத்தகத்தில் உள்ள தலைப்புகளை வரிசையாக பட்டியலிட்டு இறுதியாக ‘காஜல் அகர்வால்’ என்று முடித்திருந்தார். அதை வாசித்த நான்கூட கொஞ்சம் பொருமினேன். இப்போது இல்லை. அவர் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் காஜல் அகர்வால் உட்பட சுமார் ஏழு கட்டுரைகள் புத்தகத்தில் இல்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 April 2013

பிரபா ஒயின்ஷாப் - 08042013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்னையில் ஒரு நாள் - படம் பற்றியதல்ல. என்னுடைய பள்ளிப்பருவ நண்பர் ஒருவர் திடீரென முந்தய வாசகத்தில் குறிப்பிட்ட படத்திற்கு டிக்கெட் எடுத்து வைத்திருப்பதாக அழைத்தார். நண்பர் என்னைப்போன்ற  ஏழைகளை தன்னுடைய டெபிட் கார்டை வைத்து சொறிந்துவிடக் கூடியவர். தங்க முட்டையிடும் வாத்து. அவருடைய அன்பின் பாதையில் சென்று S2 மாலில் சுற்றி ப்ளாக் ஃபாரஸ்ட், சாக்கோ லாவா கேக்கெல்லாம் வாங்கி சாப்பிட்டாயிற்று. அடுத்தது தாக சாந்தி. அங்கே இங்கே என்று சுற்றித்திரிந்து இறுதியில் கழுதை கெட்டா குட்டிச்சுவரு என்ற சொலவடைக்கு ஒத்து தி.நகர் ஈகிள் பாருக்கு சென்று அமர்ந்தோம். நண்பர் சிக்நேச்சர் தவிர்த்து வேறு எதையும் தொடுவதில்லை என்று தன்னுடைய வரலாற்று பெருமையை பேசிக்கொண்டிருந்தார். சிக்நேச்சர் டேபிளுக்கு வந்தது போல இருந்தது. அடுத்த நிமிடம் நண்பர் திரவத்தை ஒரே மடக்கில் குடித்துவிட்டு சைட் டிஷ்ஷை சாப்பாடு போல சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். எனக்கு மட்டும் ஏன் இந்தமாதிரியான நண்பர்கள் வாய்க்கிறார்கள். என்னுடைய குணநலன்களுக்கு ஒத்திசைகிற நண்பர் வாழ்நாளுக்கும் கிடைக்க வாய்ப்பே இல்லை. எல்லோருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். இயற்கையின் படைப்பில் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள். இன்னமும் எனக்கான பரமனை தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.

*************************

ஜுராசிக் பார்க் 3Dயில் வெளிவந்திருக்கிறது. நான் முதன்முதலில் பார்த்த ஆங்கிலப்படம் அது தானென்று நினைக்கிறேன். என் வயதையொட்டிய இளைஞர்களில் பெரும்பான்மைக்கு ஜுராசிக் பார்க் படத்தின் மீதான சுவாரஸ்ய நினைவுக் குவியல் இருக்கக்கூடும். தேவி வளாக திரையரங்கங்கள் கிட்டத்தட்ட என்னுடைய ஹோம் தியேட்டர் போலாகிவிட்டன. வாரத்தில் ஏதாவது ஒரு படமாவது தேவியில் பார்த்துவிடுகிறேன். கூட்டமும் அதிகம் சேருவதில்லை என்பதால் ஏதோ எனக்கு மட்டும் ஸ்பெஷலாக திரையிடுவது போன்ற உணர்வு தோன்றி உற்சாகமூட்டுகிறது. ஜுராசிக் பார்க்கை தேவி பாலாவில் பார்த்தேன். நான்கைந்து ஆங்கில 3D படங்களின் ட்ரைலர் காட்டினார்கள். அத்தனையும் அசத்தலாகவே இருக்கின்றன. அவற்றை புரிந்துக்கொள்ள வேண்டியாவது ஆங்கிலம் கற்க வேண்டும். திரையரங்குகளில், ஒரு கையெழுத்து, மாறியது தமிழனின் தலையெழுத்து என்று ஒரு செய்திப்படம் போடுகிறார்கள். அதைப்பார்க்கும்போது புகையிலை தரக்கூடிய கொடிய... மிகவும் கொடிய நோய் அப்படியொன்றும் அருவருப்பாக தோன்றவில்லை. நல்லவேளை முகேஷ் இதையெல்லாம் பார்ப்பதற்கு உயிரோடு இல்லை. தமிழில் டிஜிட்டல் ரெஸ்டோரேஷன் பம்மாத்து போலவே ஹாலிவுட்டில் 3D டக்கால்ட்டி போல. எனினும், 3D நுட்பம் தாண்டி கிளாசிக் சீரியஸ் என்பதற்காக டைட்டானிக், ஜுராசிக் பார்க் போன்றவைகளை மறுபடி பார்க்கலாம். அநேகமாக அடுத்த மாதத்தில் ஷெர்லின் சோப்ராவின் இயல்பான நடிப்பில் காமசூத்ரா 3D வெளியாகக்கூடும்.

*************************

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சம்பவங்களும் நமக்கு ஏதோவொன்றை சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. உதாரணத்திற்கு நீயா நானா. சில சமயங்களில் சில்லறைத்தனமான தலைப்புகளை ஒட்டி விவாதம் நடந்தாலும் கூட அதிலிருந்து ஒன்றிரண்டு படிப்பினைகளாவது கிடைத்து விடுகின்றன. நேற்றைய நிகழ்ச்சியில் இரண்டு பேர் பேசியது எனக்கு மனதளவில் தெளிவைக் கொடுத்தது. முதலாவது, 56 இடங்களில் நேர்முகத்தேர்விற்கு சென்று வேலை கிடைக்காமல் 57வது இடத்தில் பணம்கட்டி ஏமாந்து தற்கொலைக்கு முயன்று மீண்ட இளைஞர். ஒருமுறை தற்கொலைக்கு முயன்றாலும் கூட, பணம் கட்டி ஏமாந்தாலும் கூட, தற்போது அத்தகைய குழப்பங்களில் இருந்து மீண்டு தீர்மானமான வாழ்க்கையை எட்டியிருக்கும் அந்த இளைஞர் என்னுடைய கண்களுக்கு சாதனையாளராகவே தெரிகிறார். நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறவிருந்த தற்கொலை தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

இரண்டாவது சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட திருநங்கை. நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கிற திருநங்கைகள் எப்படியிருக்கிறார்கள். பகலில் ரயிலில் கைதட்டி பிச்சை எடுக்கிறார்கள், மாலையில் டாஸ்மாக்கில் குடித்துக் களிக்கிறார்கள், இரவில் சப்வேக்களுக்கு அருகில் நின்று அழைக்கிறார்கள். சரி, அதைப்பற்றி இன்னொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன். ஊடகங்களில் வெளிப்படும் திருநங்கைகள் தங்களுக்கென்று ஒரு துக்க பிலாசபி வைத்திருப்பார்கள். எங்களுக்கும் மனசிருக்கு என்பது போன்ற நெஞ்சை அடைக்கும் துக்கம் கலந்த வார்த்தைகளை வெளிப்படுத்துவார்கள். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர் அதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டவராக தெரிந்தார். எவ்வளவு நாள் தான் நானும் செண்டிமெண்டாவே ஃபீல் பண்ணுறது என்று கேட்டு, மிகவும் ஹாஸ்யமாக தன்னுடைய வித்தியாச அனுபவங்களை சில நிமிடங்கள் பகிர்ந்துக்கொண்டார். அவர் தன்னுடைய ஞான நிலையை அடைய எத்தனை இன்னல்களை கடந்து வந்திருப்பார் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது. மற்ற திருநங்கைகள் அவரை ஒரு முன்னோடியாக எடுத்துக்கொள்ளலாம்.

*************************

தொண்டை மண்டலத்தைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்த விஜய நகரப் பேரரசில் ராயர் என்ற கன்னட பிராமணர்கள் பலர் முக்கியப் பதவிகளை வகித்தனர். ராயர்களுக்கு அதன் பொருட்டு அரசு மானியமாக அளித்த சென்னையின் வடக்குப்பகுதி ராயர்கள் வசித்த ராயர்புரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி ராயபுரம் ஆனது. ராயபுரம் சென்ற நூற்றாண்டின் துவக்கம் வரை உயர் வகுப்பினர் வசிக்கும் செல்வபுரியாய் இருந்த செய்தி இன்று பலருக்கும் தெரியாது. வசதிமிக்க பார்சி இனத்தவரும், ஆங்கில கனவான்களும் சிரும்பி வசித்த கடற்கரையுடன் கூடிய ராயபுரத்தின் கடந்தகாலம் அடங்கிவிட்ட பேரலையாய் நம்முன் நிற்கிறது. (ராயபுரம் பற்றி நம்ம சென்னை ஏப்ரல் மாத இதழில்...)

*************************

உலகிலேயே அருவருப்பான உணவுகள் என்று சில உள்ளன; போலவே குரூரமான முறையில் தயார் செய்யப்படும் உணவுகள் சில உள்ளன. மேற்கூறிய இரண்டு பட்டியலிலும் இடம்பெற தகுதியுள்ள ஜப்பானிய மீன் உணவுவகை - இகிஸுகுரி. உணவகத்தில் ஒரு தொட்டியில் மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மீனை காட்டினால், உடனடியாக சமையல் வல்லுநர் அதனை பிடித்து உயிருடன் சமைத்துக் கொடுப்பார். உயிருடன் எப்படி சமைப்பது ? பார்க்க காணொளி:


இப்ப சொல்லுங்க, இனிமேல் தியேட்டரில் முகேஷை பற்றிய செய்திப்படம் போடும்போது கண்ணை மூடிக்கொள்வீர்களா ?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 March 2013

ஒன்பதுல குரு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அறுபதுகளில் பீச் பார்ட்டி என்கிற அமெரிக்க படம் வெளிவந்து வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து அதே சாயலில் சில படங்கள் வெளிவந்தன. தமிழில் வெளிவந்த கோவா கிட்டத்தட்ட அந்த ரகம் என்று கொள்ளலாம். போலவே டீன் ஃப்லிம்ஸ் என்றொரு ஜான்ரா உள்ளது. பதின்பருவ வயதினரை குறி வைத்து எடுக்கப்படும் அத்தகைய படங்கள், முதல் காதல், காம உணர்ச்சிகள், பெற்றோருடன் கலாசார இடைவெளி போன்றவற்றை மையப்படுத்தி அமைந்திருக்கும். கவர்ச்சி தூக்கலாக இருக்கும். ஒன்பதுல குரு விளம்பரங்கள் அந்த படங்களை நினைவூட்டியது. லட்சுமி ராயின் இருப்பு, மந்த்ராவின் மீள்வருகை போன்ற தகவல்களாலும் திரையரங்கிற்கு உந்தப்பட்டேன்.


திரைப்படங்கள் மிக மோசமாக இருக்கும் பட்சத்தில் கதையே இல்லை என்று கிண்டலடிப்பது விமர்சன க்ளிஷே. ஆனால் உண்மையிலேயே ஒன்பதுல குருவில் கதையை மிகவும் சிரமப்பட்டு தேட வேண்டியிருக்கிறது. வாழ்க்கையை கொண்டாடும் சில பேச்சுலர்கள் திருமணத்திற்குப் பின் பேச்சு இல்லாதோராகி விடுகின்றனர். குடும்பத்தை விட்டு விலகி மீண்டும் பேச்சுலராக முடிவெடுக்கிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்களே ROTS.

ஒன்பதுல குரு ஒரு நகைச்சுவை திரைப்படம் என்று சொல்வது தான் உச்சக்கட்ட நகைச்சுவையாக படுகிறது. நான்கைந்து நல்ல நகைச்சுவைகளை வைத்துக்கொண்டு, ஏராளமான சிரிப்பே வராத பாடாவதி காமெடிகளை சேர்த்து, கோர்வையாக இல்லாமல் பயங்கர மொக்கையாக இருக்கிறது.

பராசக்தியில் நடிகர் திலகம் அறிமுகமானபோது, “மீன்குஞ்சு மாதிரி வாய வாய தொறக்குறான்...” என்று கமெண்ட் அடித்தார்களாம். வினய்யும் அதேபோல அடிக்கடி வாயை திறக்கிறார் என்பதற்காக அவரை சிவாஜியாகவோ, வாயை கோணலாக வைத்துக்கொண்டு இழுத்து இழுத்து பேசுவதால் ரஜினியாகவோ, படத்தில் பில்லா என்ற பெயரை சூட்டிக்கொண்டதற்காக அஜித்தாகவோ கருதிவிட முடியாது. வினய்க்கு பொருந்தாத வேடம். குறிப்பாக பாடல்காட்சிகளில் அவருடைய வாயசைப்பு நாசம்.

சத்யன், ப்ரேம்ஜியின் நடிப்பு எரிச்சலும் இரைச்சலும் கலந்த கூட்டுக்கலவை. அரவிந்த் அகாஷும் உடன் இணைந்து சலம்பாதது ஆறுதலளிக்கிறது. ஒன்பது குருவின் பிரதான வேடங்களில் முதலில் நடிப்பதாக இருந்தவர்கள், நகுல், சிவா, சந்தானம், ப்ரேம்ஜி. ஒப்பீட்டளவில் நல்ல காம்பினேஷன். பவர் ஸ்டாரின் கோமாளித்தனங்களை எல்லாம் ஒருமுறை தான் ரசிக்க முடியும்.


லட்சுமி ராய் - மங்களகரமான பெயர். புத்தம் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் போல பளபளப்பாக இருக்கிறார். மைதா மாவை பிசைந்து செய்யப்பட்ட ஐந்தே முக்கால் அடி சிலை. மனோபாலாவின் மனைவியாக வருபவர் வல்லிய கேரளத்து பெண்குட்டி. சோனா, மந்த்ரா போன்ற டபுள் டக்கர் ஆண்ட்டிகள் வீணடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமல்ல, லட்சுமி ராய், சாம்ஸ், பவர் ஸ்டார் போன்ற நல்ல ரிசோர்ஸஸ் வீணடிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர், வசனம் எழுதியவர் எல்லாம் பெரிதாக எதுவும் உழைக்கவில்லை. பழைய பாடல்கள், பழைய படங்களின் பிண்ணனி இசை, பிரபலமான வசனங்கள், இதையெல்லாம் கொஞ்சம் டிங்கரிங் செய்தோ செய்யாமலோ சொருகியிருக்கிறார்கள். முதலில் பழைய பாடல்களை பயன்படுத்துவதற்கு தடை கொண்டுவர வேண்டும். ஆல்ரைட், சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் ஆரம்பித்த போது ரசிக்க வைத்தது. ஆனால் அதையே தொடர்ந்து செய்தால் ? ஒரு ரம்மியமான இரவுப்பொழுதில் வா வா அன்பே அன்பே பாடலையோ கடலோர கவிதைகள் பாடலையோ கேட்கும்போது உங்களுக்கு சோனாவும் ப்ரேம்ஜியும் நினைவுக்கு வந்தால் எப்படி இருக்கும் ? மாட்டு சாணம்.

திருமணம் செய்துகொள்பவர்கள் ஒன்பதுல குரு, எட்டுல சனி, மூணுல ராகு என்று ராசி, ஜாதகமெல்லாம் பார்த்து திருமணம் செய்வதை விட, தமக்கு மனதளவில் பொருத்தமான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஒன்பதுல குருவின் மையக்கருத்தாக நாமே வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம். படக்குழுவினரை பொறுத்தவரையில் மந்த்ரா, சோனா, லட்சுமி ராய், அப்புறம் நிறைய துணை நடிகைகளை பெங்களூருக்கு அழைத்துச் சென்று நன்றாக கூத்தடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. நீங்கள்லாம் நல்லா வருவீங்க !

ஒன்பதுல குரு - தேவி திரையரங்கில் பத்து ரூபாய் டிக்கெட் எடுக்கும் சாமர்த்தியம் இருப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment