Showing posts with label rajula. Show all posts
Showing posts with label rajula. Show all posts

28 February 2015

எஸ்.எஸ்.ரஜூலா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சிறு வயதிலிருந்தே கப்பல்கள் மீது எனக்கு ஒரு ‘க்ரேஸ்’ உண்டு. நான் அந்தமானுக்கு கப்பலில் செல்ல முடிவு செய்தபோது அனுபவஸ்தர்கள் எச்சரித்தார்கள். சில மணிநேரங்களில் கப்பல் போரடித்துவிடும் என்றார்கள். அப்படியெல்லாம் நடக்காது என்று நான் உறுதியாக நம்பினேன். யாருடைய பேச்சையும் கேட்காமல் கப்பலில் பயணித்தேன். கப்பல் என்னை ஏமாற்றவில்லை. குறிப்பாக, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்துகொண்டு கையில் ஒரு தம்முடன் நண்பர்களுடன் அரட்டை அடித்த அந்த இரண்டு நாட்களை நினைத்தால் இப்போதும் கூட இன்னொரு முறை கிடைக்காதா ஏக்கமாக இருக்கிறது. முழுமையாக இரண்டரை தினங்கள் நம்மைச் சுற்றி வெறும் கடல் மட்டும் என்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத பரவச அனுபவம்.

அப்போதிலிருந்தே கப்பல் மீதான எனது ஆவல் ஒரு சுற்று கூடுதலாகிவிட்டது. பின்பொரு நாள் எதார்த்தமாக ஆயிரத்தில் ஒருவன் (புதியது) படம் பார்த்தபோது அதில் இடம்பெற்ற கப்பல் நான் பயணம் செய்தது என்று நினைவுகூர்ந்து சிலாகித்துக்கொண்டேன். துப்பாக்கி க்ளைமாக்ஸ் நினைவிருக்கிறதா ? அது படமாக்கப்பட்ட கப்பலின் பெயர் சாகர் சந்தானி. ஆராய்ச்சிக் கப்பல். சமீபத்தில் பார்த்த அனேகன் படத்தில் ஒரு கப்பல் காட்சி வருகிறது. பக்கா இந்திய பயணிகள் கப்பல். பார்த்ததும் பரவசமாகி கப்பலின் பெயரை திரையில் தேடினேன். நான் எதிர்பார்த்த கப்பல் இல்லை. கப்பலின் பெயர் எஸ்.எஸ்.ரஜூலா. (உண்மையில் ரஜூலா கப்பல் தற்சமயம் அழிக்கப்பட்டுவிட்டது என்று பின்னர் தெரிந்துக்கொண்டேன். எனவே படத்தில் இடம்பெற்றது என்ன கப்பல் என்று தரமான பிரதி வந்ததும் கண்டுபிடிக்க வேண்டும்).

எஸ்.எஸ்.ரஜூலா. வரலாற்று சிறப்புமிக்க கப்பலாக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டு தான் கூகுள் செய்தேன். அவ்விதமே. டாக்டர் எஸ்.ஜெயபாரதி என்கிற பேராசிரியர் ரஜூலா கப்பலைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். 

ரஜூலா கப்பல் 1923ம் ஆண்டு பார்க்லே நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. கப்பலின் பெயரில் உள்ள எஸ்.எஸ் என்பது ஸ்டீம் ஷிப் (நீராவிக் கப்பல்) என்பதை குறிக்கிறது. 

முந்தைய தலைமுறை மலேசிய / சிங்கை வாழ் இந்தியர்களுக்கு ரஜூலா கப்பலை கண்டிப்பாக நினைவிருக்கும். சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வழியாக பர்மா, பினாங்கு (மலேசியா), சிங்கப்பூர், அந்தமான், நிகோபர், இந்தோனேசியா பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் கப்பல். மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாய்மரக்கப்பல்களில் பயணம் செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட நீராவிக்கப்பல்கள் அறிமுகமாயின. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் லட்சக்கணக்கான கூலிகள் மலேசியா, சிங்கப்பூருக்கு (அப்போது பிரிட்டிஷ் மலாயா) அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் போக்குவரத்துக்காக ரஜூலா உட்பட சில கப்பல்கள் செயல்பட்டு வந்தன. இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் கல்கத்தா இந்திய தலைநகராகவும், பர்மா பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு அங்கமாகவும் செயல்பட்டு வந்தது. 

தினசரி அலுவலகத்திற்கு பேருந்திலோ ரயிலிலோ பயணிப்பவர்கள் வாடிக்கையான சக பயணிகளின் முகங்கள் பரிட்சயம் ஆகியிருக்கும் அல்லவா ? இதே போல கப்பலிலும் ஒருவருக்கு ஒருவர் பரிட்சயமான பயணிகள் உண்டு என்றால் நம்ப முடிகிறதா ? கப்பலின் கடைசி வகுப்பில் இதுபோன்ற வாடிக்கையான ஆசாமிகளை காண முடியும். பெரும்பாலும் வியாபாரிகளாக இருப்பார்கள்.

இன்றைய இந்திய பயணிகள் கப்பல்களில் டீலக்ஸ், இரண்டாம், மூன்றாம் மற்றும் பங்க் வகுப்புகள் உள்ளன. பங்க் என்பது ரயிலில் உள்ளது போல மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட ஒரு நீண்ட அறை. ரஜூலாவில் இவை தவிர்த்து ‘டெக்’ என்ற வகுப்பும் இருந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட ரயிலில் உள்ள முன்பதிவு செய்யாதவர்களுக்கான பகுதியைப் போன்றது. தனியாக இடம் ஒதுக்கப்பட மாட்டாது. சீக்கிரமாக ஏறி கிடைத்த இடத்தில் படுத்துக்கொள்ள வேண்டியதுதான். இது குறித்து உற்சாகமாக குறிப்பிடுகிறார் ஜெயபாரதி. அந்தக்கால திரையரங்குகளில் முக்கால்வாசி தரை டிக்கெட்டுதான், அப்புறம் பெஞ்ச் வரிசைகள், கடைசியாக இருக்கைகள். இருக்கை ஆட்கள் எல்லாம் இறுக்கமாக அமர்ந்து படம் பார்க்கும்போது தரை டிக்கெட் பகுதியில் கொண்டாட்ட மயமாக இருக்கும். அதுபோல டெக்கில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவும், வியாபாரிகளாகவும் இருப்பார்கள். இவர்களுக்குள் பயண நேரத்திற்குள் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டு ஆடிப் பாடிக்கொண்டு இருப்பார்களாம்.

ரஜூலா போக்குவரத்து காரணமாக நாகப்பட்டினத்தில் அந்திக்கடை என்ற சந்தை பிரபலமாக இருந்தது. சென்னையின் பர்மா பஜார் போன்றது. சாக்லேட்டுகள், சிகரெட்டுகள், சிறிய ட்ரான்ஸிஸ்டர்கள் உட்பட நம்மவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் பல வெளிநாட்டு பொருட்கள் அந்திக்கடையில் விற்பனையாகும்.

இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவை ஜப்பான் கைப்பற்றியது. அந்த சமயத்தில் பர்மாவை மீட்கும் பொறுப்பு லார்ட் மவுண்ட் பேட்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தனது கடற்படைக்காக ரஜூலாவை பர்மாவிற்கு வரவழைத்துக்கொண்டார். அது மருத்துவ கப்பலாக செயல்பட்டது.

ரஜூலாவை பழுதாகாத கப்பல் என்று அன்றைய காலகட்டத்தில் சொல்வார்கள். 1966ல் ஏற்பட்ட புயலையும் பேரலைகளையும் தாக்கு பிடித்தது ரஜூலா. ‘ரங்கத்’ என்ற பெயரில் சிலகாலம் ஓடிய ரஜூலா இறுதியாக 1974ம் ஆண்டு மஹாராஷ்திர கப்பல் உடைக்கும் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு உடைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.

அனேகன் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் காட்சி அது. மேலோட்டமாக பார்த்தால், அந்த காட்சிக்கு கப்பலை பற்றிய டீடெயிலிங் தேவையே இல்லை. எனினும், ரஜூலாவையும், ரஜூலாவிற்கும் பர்மாவுக்கும் இடையேயான தொடர்பையும் நினைவுகூர்ந்து அதனை காட்சிப்படுத்திய படக்குழுவினரை வியக்காமல் இருக்க முடியவில்லை.

உதவிய சுட்டிகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 February 2015

அனேகன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

அனேகனை பொறுத்தவரையில் முதல் ஈர்ப்பு தங்கமாரி பாடல். தனுஷுக்கு மட்டும் எப்படி சென்சேஷனல் ஹிட்ஸ் அமைகின்றன ? அதற்காக படம் பார்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை, சில நாட்கள் முன்பு வரை. ட்ரைலரை பார்த்தால் ஏதோ ஃபேண்டஸி இத்யாதிகள் இருக்கும் போல தோன்றியது. அங்கே தான் சரண்டர் ஆகிவிட்டேன்.

வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெறும் (ஒரே ஜோடியின்) காதல் கதைகள். காதல் என்றதும் எல்லா படங்களிலும் செய்வது தானே என்று சலித்துக்கொள்ள வேண்டாம். இது வேற லெவல். என்னைக் கேட்டால் இங்கேயே நிறுத்திக்கொண்டு திரையரங்கிற்கு செல்வது உத்தமம் என்பேன். மற்றவர்கள் தொடர்க.

தனுஷுக்கு தன்னுடைய பன்திறனை வெளிப்படுத்தக்கூடிய அட்டகாசமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜஸ்ட் லைக் தட் அஸால்ட் பண்ணியிருக்கிறார். குறிப்பாக காளி கதாபாத்திரம்.

அமைராவை முதலில் பார்க்கும்போது சவசவ என்று ஒரு மாதிரியாக இருப்பதாக தோன்றுகிறது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே ஐஸ்க்ரீம் சாப்பிடும் ஒரு அழகான குழந்தை போல நம் மடியில் வந்து சமத்தாக அமர்ந்துகொள்கிறார்.

அமைராவை விடுங்கள். ஐஸ்வர்யா என்று ஒருவர் நடித்திருக்கிறார். கிறிஸ்தவர்கள் ‘தேவன் மகிமை’ என்பார்களே, அது என்னவென்று உணர்ந்துகொண்டேன். முன்னவர் சாத்வீகம் என்றால் இவர் ப்ரச்சோதகம். சங்க இலக்கிய வர்ணனைகளுக்கு ஒப்பான புருவங்கள், கூரான மூக்கு, வரைந்து வைத்த ஓவியம் போன்ற வசீகரமான முகம். தென்னக சினிமாவுக்கு ஒரு பிபாஷா கிடைத்துவிட்டார்.

கார்த்திக் ஒரு MNCயின் பாஸ் என்கிற வகையில் தோரணையாக நடித்திருக்கிறார், ஆனால் வில்லனாக கொஞ்சம் கடுப்படிக்கவே செய்கிறார். ஜகன் போன்ற ஆட்களை ஏனோ தமிழ் சினிமா தொடர்ந்து வீணடிக்கிறது. சும்மா உல்லுல்லாயிக்கு இரண்டு பழைய வில்லன் நடிகர்கள்.

அனேகனுடைய பெரும்பான்மையான பாராட்டுகள் சுபாவிற்கு. குறுகிய வட்டத்திற்குள் அடைந்துவிடாமல் கதையை வில்லென வளைத்திருக்கிறார்கள். எவ்வளவு டீடெயிலிங் ? அபாரம் என்றுதான் சொல்ல வேண்டும். வருடத்தின் துவக்கத்திலேயே சுபாவிடமிருந்து இரண்டு அட்டகாசமான கதைகள் வந்திருக்கின்றன. இன்னும் நிறைய வர வேண்டும் என்கிற ஆர்வம் எழுகிறது.

தங்கமாரி பாடல் பார்வையாளர்களை ஒரு தெய்வீகநிலைக்கு அழைத்துச் செல்கிறது. அனேக மக்கள் இந்த ஒரு பாடலுக்காகவே திரையரங்கிற்கு வருகிறார்கள். கொண்டாடுகிறார்கள். உண்மையில் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படி தரைக்குத்து பாடலை இசைத்திருப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது. எனக்கென்னவோ இது மரணகானா விஜிக்கு போகவேண்டிய க்ரெடிட்ஸ் என்று தோன்றுகிறது. கூடவே பாடலை பாடிய மற்றவர்களுக்கும், எழுதியவர்களுக்கும். எல்லா பாடல்களும் தரமாக இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ஆத்தாடி ஆத்தாடி பாடலில் பவதாரணியின் குரல் இதமளிக்கிறது. ஒரு தெளிவான நீரோடையை போல நிதானமாக இருக்கிறது தெய்வங்கள் இங்கே பாடல். அது மட்டுமில்லாமல் விஷுவலில் விர்ச்சுவலாக பர்மாவை பார்த்த பரவசம் கிடைக்கிறது. YOLO பாடல் வேறு வகையான விஷுவல் பரவசம். ஒன்றிரண்டு ஷாட்டுகளில் வந்தால் கூட ஐஸ்வர்யாவின் விளைவுகள் செம ஹாட்.

முதலில் படத்தின் குறைகள். பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தால் தர்க்க ரீதியாக நிறைய கேள்விகள் எழுப்பலாம் தான். ஃபேண்டஸி படம் என்பதால் அவற்றைப் பற்றி பெரிதாக கவலைப்பட தேவை இல்லை. ஆனால், படம் முடிந்தபிறகு எதற்காக அய்யா ஒரு அரை மணிநேர க்ளைமாக்ஸ். அப்புறம், அந்த கத்தி சொருகும் காட்சி உச்சக்கட்ட பேத்தல்.

சமீப படங்களில் டுஸ்டுகள் எளிதில் யூகிக்கக்கூடிய வண்ணம் இருந்தது இல்லையா ? அந்த விஷயத்தில் அனேகன் ஆறுதலாக இருக்கிறது. குருஜி கொடுத்த டேப்லட், ஒரு கையை பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்திருக்கும் மாமா கேரக்டர் என்று நம்மை சாமர்த்தியமாக திசை திருப்பிவிட்டு டுஸ்டு கொடுத்திருக்கிறார்கள்.

புனைவு என்ற வார்த்தைக்கு ஒரு அட்டகாசமான உதாரணமாக வெளிவந்திருக்கிறது அனேகன். பர்மாவிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய காட்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையும் கற்பனையும் கலந்த கச்சிதமான காக்டெயில் அது. அனேகனில் உள்ள ஒரு வசதி. கதையை நமக்கு பிடித்தமான பர்ஸப்ஷனில் புரிந்துக்கொள்ளலாம். மறு ஜென்மம் குறித்த கதையாகவும் நம்பலாம். அல்லது ELOPOMINE என்கிற மாத்திரையால் ஏற்பட்ட மனக்குறைபாடு என்றும் புரிந்துக்கொள்ளலாம். உண்மையில் காளி – கல்யாணி கதை தவிர்த்து மற்றவை (முருகப்பா, இளமாறன்) வெறுமனே கதாநாயகியின் கற்பனையாகக் கூட இருக்கலாம். பார்வையாளர்களாக மட்டும் அல்லாமல் கதையில் பங்கெடுத்துக்கொள்ளும் ரசிகர்களுக்கு பல கதவுகளை திறந்து வைத்து காத்திருக்கிறது அனேகன்.

மற்றொரு வசதி, ஒரு தேர்ந்த நாவலில் வருவது போல ஆங்காங்கே குறிப்புகள் கொடுத்துக்கொண்டே போயிருக்கிறார்கள் கதாசிரியர்கள். பர்மா அரசியல், எஸ்.எஸ்.ரஜூலா, மிங்குன் பகோடா (6174 நினைவிருக்கிறதா ?), அமைராவின் டேபிளில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், தலைவாசல் விஜய் வரைந்துக் கொண்டிருக்கும் ஓவியம் இப்படி நிறைய. விருப்பமுள்ளவர்கள் இவற்றை தேடித் தெரிந்துகொள்ளலாம். மற்றவர்கள் வெறும் பொழுதுபோக்காகவும் எடுத்துக்கொள்ளலாம். தரை லோக்கல் காட்சிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது காளி எபிசோட்.. ஹை-டெக் ஆட்களுக்கு கேமிங் அலுவலக காட்சிகள். பாடல்கள், ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள், க்ளாஸ், மாஸ். சுருங்கச் சொல்வதென்றால் ஃபுல் மீல்ஸ்.

தமிழில் எல்லாம் இதுமாதிரி படங்கள் வராதா என்று ஏங்குபவர்களுக்கு செமத்தியாக வந்திருக்கிறது அனேகன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment