7 January 2013

பிரபா ஒயின்ஷாப் - 07012013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

வருடக்கடைசி என்றாலே டாப் 10 திரைப்படங்கள், பாடல்கள், சம்பவங்கள், டாப் 10 பரபர, டாப் 10 சொற சொற என்று ஆளாளுக்கு ஆரம்பித்துவிடுகிறார்கள். இது பெரும்பான்மை தரப்புக்கு சலிப்பை ஏற்படுத்தினாலும் பிரபல ஊடகங்களுக்கு டாப் 10 பட்டியலை வெளியிடுவது கடமை என்றாகிவிட்டதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இனிவரும் வருடக்கடைசிகளில் டாப் 10 கற்பழிப்புகள், டாப் 10 வங்கிக்கொள்ளைகள், டாப் 10 கள்ளக்காதல்கள், டாப் 10 என்கவுண்டர்கள் போன்ற பட்டியல்கள் வெளிவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


சனிக்கிழமை காலை சாவகாசமாக பத்து மணிக்கு கண் திறந்தேன். மின்சாரம் மிஸ்ஸிங். ஷட் டவுன் என்று அம்மா சொன்னார். என் அம்மா தான். தினத்தந்தியின் கடைசி மூன்று வண்ண பக்கங்களை புரட்டினேன். எல்லாம் லோ பட்ஜெட் குப்பைகள். நேரே ஓடியன்மணிக்கு செல்வோம், என்ன படம் பார்க்கப்போகிறோம் என்பதை கடவுளோ, தற்செயலோ அதுவே தீர்மானிக்கட்டும் என்று நடையை கட்டினேன். அருந்ததீ வேட்டை போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. வியர்வை மழையில் நனைத்தாலும் பரவாயில்லையென வீடு திரும்ப எத்தனித்தேன். யூ ஆர் மை ஒன்லி ஹோப் என்று சரண்யா மோகன் சிணுங்கினாள். சந்திரமுகி, அருந்ததீ, காஞ்சனா வரிசையில் என்றெல்லாம் மிரட்டி உள்ளே அனுப்பினார்கள். ஆனால் அவைகளின் கால்தூசு என்றுதான் சொல்ல வேண்டும். கதை, திரைக்கதைக்காக பெரிதாக யோசிக்கவில்லை போல. என்னைப் பொருத்தமட்டில் எந்தவித திகில், த்ரில், அதிர்ச்சியில்லாமல் தட்டையாக நகர்ந்து கடைசியில் வழக்கம்போல சாமியாரின் உதவியோடு சரண்யா மோகன் மீள்கிறார்.

வாழ்நாளில் முதல்முறையாக ஜாக்கி சான் படமொன்றை முழுமையாக திரையரங்கில் பார்த்திருக்கிறேன். தமிழில், என்பது ஆறுதல். CZ12 - பரபர பரபரவென்று படுவேக திரைக்கதை. ஆரம்பத்தில் தொடர்வதற்கு கொஞ்சம் சிரமப்பட்டேன். ஜேம்ஸ்பாண்ட் படங்களை போல ஜாக்கி சாதனங்களை பயன்படுத்துகிறார். நிறைய மசாலாத்தனங்கள், லாஜிக் பூ சுற்றல்கள் இருந்தாலும் ரசிக்க முடிந்தது. ரஜினியை ஏன் நம் மக்கள் ரசிக்கிறார்கள் என்ற உளவியல் புரிகிறது. தமிழ் மொழிமாற்றம் அட்டகாசம். இதுதான் ஜாக்கியுடைய கடைசி அடிதடி படம் என்ற செய்தி அதிர்ச்சி. ஐ வில் மிஸ் ஜாக்கி. (ஐ மீன் ஜாக்கி சான்).

மரணம் யாருக்கும் எப்பொழுதும் வரலாம். ஆனால் அது மிகச்சிறிய கவனக்குறைவால் அநியாயமாக ஏற்படும்போது மனது கிடந்து தவிக்கிறது. உறவினர் வீட்டு மொட்டைமாடியில் விளையாடச் சென்ற பன்னிரண்டு வயது சிறுவன் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பியை தொட்டதால் உடல் கருகி ஊயிரிழந்திருக்கிறான். புகைப்படத்துடன் செய்தித்தாளில் வெளியாகி ஒரு கனம் உலுக்கியெடுத்து விட்டது. சிறுவனின் பெற்றோர்களின் நிலையை கற்பனை செய்யமுடியவில்லை. இதுகுறித்து EBயில் முன்பே புகார் கொடுத்து, அவர்கள் “சரி செய்கிறோம். அதுவரை யாரும் மொட்டைமாடிக்கு செல்ல வேண்டாம்.” என்று மட்டும் சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களுக்கு பழுதான அரசு இயந்திரத்தை நொந்து பிரயோஜனமில்லாத போது நாமே முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

உதாரணத்திற்கு, குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் பொதுவாக செய்யும் சில தவறுகள் உள்ளன. அவற்றை களைந்தாலே நலம். குழந்தைகளிடம், பேய் வருது, சாப்பிடலைன்னா பூச்சாண்டி கிட்ட பிடித்து கொடுத்துவிடுவேன் என்று பயம் காட்டுவது. போலவே கரப்பான்பூச்சி, பல்லி போன்றவற்றிற்கு பயம்காட்டி வளர்ப்பது. அதேசமயம், மின்சாரம், சாலை போக்குவரத்து, மொட்டை மாடி உயரம் போன்ற நியாயமான பயம் கலந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்னும் நிறைய இருக்கு. நினைவுக்கு வரும்போது எழுதுகிறேன்.

இப்பொழுதெல்லாம் வித்தியாசமாக ட்ரைலர் கட் செய்வதே வழக்கமான விஷயமாகி விட்டது. இனி வரும் காலங்களில் இந்த ட்ரெண்ட் போரடிக்க ஆரம்பித்து விடும் போல இருக்கிறது.



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 January 2013

THE MAN FROM THE DEEP RIVER

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கேணிபல் படங்களின் தந்தை என்று கருதப்படும் ருஜ்ஜெரோ தியோதாதோ (Ruggero Deodato) ஜங்கிள் ஹோலோகொஸ்ட் படத்தினை 1975ல் வெளியிட்டார். அதற்கும் முன்பே உம்பெர்தோ லென்சி (Umberto Lenzi) 1972ல் இயக்கிய படம்தான் The Man From The Deep River. எனினும் இதனை நேரடி கேணிபல் படமாக கருத இயலாது. படத்தில் காட்டப்படும் பிரதான காட்டுவாசி இனத்தினர் நரமாமிசம் உண்பதில்லை. நரமாமிசம் சாப்பிடும் அவர்களின் எதிரணியினரை மையப்படுத்தி கதை நகரவில்லை. மற்றபடி கேணிபல் என்ற பதத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்திய படம் என்று இதனை எடுத்துக்கொள்ளலாம்.



Il paese del sesso selvaggio என்ற இத்தாலிய தலைப்பு கொண்ட திரைப்படம் Deep River Savages, Sacrifice, Mondo Cannibale என்கிற பெயர்களாலும் அறியப்படுகிறது. அதிகப்படியான வன்முறைக்காட்சிகள் நிறைந்திருந்தாலும் ஒரு மெல்லிய காதல் கதையுடன் பயணிக்கிறது.

தாய்லாந்து - பர்மா எல்லைப்பகுதியில் இன்னமும் நாகரிக உலகுடன் தொடர்பில்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் காட்டுவாசிகளின் வாழ்வியல். படத்தின் கதை உண்மையல்ல எனினும் அம்மக்களின் பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் அத்தனையும் உண்மையே என்ற செய்தியுடன் படம் துவங்குகிறது.

ப்ராட்லி, ப்ரிட்டிஷ் வனவிலங்கு புகைப்படக்கலைஞர். தன் பணியின் பகுதியாக தாய்லாந்துக்கு வருகை தந்திருக்கிறான். சிறிய படகொன்றில் தன்னுடைய வழிகாட்டியுடன் தாய்லாந்து மழைக்காடுகளுக்குள் பயணிக்கிறான். இரு நாட்கள் பயணம் தொடர்கிறது. இனியும் தொடர்வது ஆபத்து என்று வழிகாட்டி எச்சரிக்கிறான். ப்ராட்லியும் இசைந்து மறுநாள் காலை திரும்பிவிட முடிவெடுக்கிறார்கள்.

காலையில் வழிகாட்டி பிணமாக ஒதுங்கியிருக்கிறான். அவனருகில் நெருங்கும் ப்ராட்லி காட்டுவாசிகளால் சிறைபிடிக்கப்படுகிறான். அவர்கள் அவனை ஏதோ கடல்வாழ் உயிரினம் என்றே பாவிக்கிறார்கள். காட்டுவாசி பிரிவினருக்கும் கேணிபல் பிரிவினருக்குமிடையே அடிக்கடி சண்டை நடக்கிறது. தலைவர் மகள் மராயா ப்ராட்லியின் பால் ஈர்க்கப்படுகிறாள். அவன் மராயா குடும்பத்தின் அடிமையாக நடத்தப்படுகிறான். மராயாவின் தாய் தைமாவிற்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்திருக்கிறது. சில நாட்களில் கேரன் - மராயா திருமணம் நடைபெறவிருக்கிறது அதன்பிறகு உன்னை விடுவித்துவிடுவார்கள் என்று நம்பிக்கையூட்டுகிறாள். எனினும் காட்டுவாசிகள் அசந்த சமயம் தப்பிக்க முயல்கிறான் ப்ராட்லி. அப்போது நடைபெறும் மோதலில் கேரனை கொன்றுவிடுகிறான் ப்ராட்லி.

அதன்பிறகு ப்ராட்லிக்கு ஒரு வெற்றியாளனுக்குரிய மரியாதை கிடைக்கிறது. அவனை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயார்படுத்தி தங்களுள் ஒருவனாக இணைத்துக்கொள்கிறார்கள். மராயாவின் மனம் கவர்ந்து மணம் கொள்கிறான். மராயா கருவுருகிறாள். இந்நிலையில் அவளது உடல்நிலை மோசமாகி, கண்பார்வை பறிபோகிறது. அவளை காப்பாற்றும் நோக்கில் நாகரிக உலகிற்கு அழைத்துவர முற்படுகிறான் ப்ராட்லி. எனினும் காட்டுவாசி குழுவினர் அனுமதிக்கவில்லை. மராயா ஆண்குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மறைகிறாள். ப்ராட்லி முற்றிலும் காட்டுவாசியாக மாறி,அவர்களை கேணிபல்களிடம் இருந்து பாதுகாத்து வாழ்வதோடு படம் நிறைவடைகிறது.

பிற்காலத்தில் மேலும் சில கேணிபல் படங்களில் தோன்றிய இவான் ரசிமோவ், பர்மிய நடிகை மீ மீ லாய் இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக மற்ற கேணிபல் படங்கள் போலில்லாமல் மீ மீ லாய், மிக அழகாக தோன்றி பரவசமூட்டுகிறார்.



குறிப்பிட்ட அந்த தாய்லாந்து - பர்மா காட்டுவாசி இனத்தினரின் வாழ்க்கைமுறைகளை ஆங்காங்கே சொல்லியிருக்கிறார்கள். கணவன் இறந்து இறுதிசடங்குகள் முடிந்ததும், சிதை எரிந்துமுடிந்த இடத்தில் மனைவியை படுக்கவைத்து வேண்டியவர்கள் புணர்ந்துக்கொள்ளலாம் என்பது ஒரு சான்று. அதேபோல திருமண வயதை அடைந்த பெண், துளையிடப்பட்ட ஒலைக்குடிசையினுள் அமர்த்தப்படுகிறாள். திருமணத்திற்கு தயாராய் இருக்கும் ஆண்கள் ஒவ்வொருவராக துளைக்குள் கையை நுழைத்து மணமகளை தொடலாம். யாருடைய தொடுதல் அவளுக்கு பிடித்திருக்கிறதோ அவனே மணமகன். பாம்பின் விஷம் தொய்த்த அம்புகளை தயார் செய்வது போன்ற நல்ல உதாரனங்களும் இருக்கின்றன.

கேணிபல் படங்கள் என்றாலே கீறி - பாம்பு சண்டையை கட்டாயம் காட்ட வேண்டுமென்ற செண்டிமெண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. பன்றி, முதலை, உடும்பு வேட்
டைகளும் வழக்கம் போல தவறாமல் இடம் பெற்றிருக்கின்றன.

கேணிபல் படங்களை பார்க்க விரும்பும், அதே சமயம் இளகிய மனமுடையவர்கள் இந்த படத்தை ஓர் ஆரம்பமாக கருதி பார்க்கலாம்.

படத்தின் ட்ரைலர்:



தொடர்புடைய சுட்டிகள்:
Cannibal Holocaust
Cannibal Ferox
 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment