29 August 2013

கவர்ச்சிநடிகையும் கரப்பான்பூச்சிகளும்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நானும் குமாரும் பல படிநிலைகளை கடந்து அந்த அறைக்குள் நுழைந்திருந்தோம். அது ஒரு சிறிய பாழடைந்த அறை. தனியார் மதுக்கூடங்களில் படர விட்டிருப்பதை போல மங்கலான மஞ்சள் ஒளி. ஆறுக்கு நான்கு அளவில் ஒரு ஸ்டீல் கட்டில், அதன் மீது தூசி படிந்த பழைய மெத்தை. உபயோகமற்ற பழைய பொருட்கள் சில சிதறிக்கிடக்கின்றன. சுவற்றோரமாக ஒரு பழைய டேப் ரெக்கார்டர், ரசனை வாழ்க ! ரசிகன் வாழ்க !! என்ற சித்ராவின் குரலை சன்னமாக அறையில் பரப்பிக்கொண்டிருந்தது. கீழே ஒரு சிகரெட் துண்டு பொசுக்கப்பட்டு புகைந்துக்கொண்டிருந்தது. இன்னும் நான்கைந்து இழுப்புகளாவது இழுக்கலாம். அதற்குள் அவசரப்பட்டு பொசுக்கியிருக்கிறார்கள். யார் ? தெரியவில்லை. நான்கைந்து கரப்பான்கள் விமானிகள் சாகசம் செய்துக் காட்டுவதைப் போல குறுக்கமறுக்க பறந்துக்கொண்டிருந்தன.

முதலில் என்னையும் குமாரையும் பற்றி சொல்லிவிடுகிறேன். நானும் குமாரும் பிறந்ததிலிருந்தே நண்பர்கள். அதற்காக ஒத்த சிந்தனை உடையவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். அப்படியே எதிர்மறையானவர்கள். நான் உன்னால் முடியும் தம்பி பார்த்துவிட்டு ச்சே நாமளும் நாட்டுக்காக ஏதாவது பண்ணனும்டா’ன்னு உணர்ச்சிகரமாக பேசும்போது அவன் மைக்கேல் மதன காமராஜன் பார்த்து குபுகுபுவென சிரித்துக்கொண்டிருப்பான். நான் வறுமையின் நிறம் சிவப்பு என்றால் அவன் சிகப்பு ரோஜாக்கள். ஆனால் அவனுக்கு ஸ்ரீப்ரியா தான் பிடிக்கும். எனக்கு ஸ்ரீதேவி. உன் ஆளுக்கு மூக்கு மட்டும்தான்டா பெருசா இருக்கு’ன்னு சொல்லி கெக்கேபிக்கே’ன்னு சிரித்து தொலைப்பான். அரிதாக எங்களுக்கென சில ஒருமித்த குணங்களும் உள்ளன. அப்படியொன்று தான் Katsaridaphobia. அது ஒரு மனநோய் என்று சொன்னால் மிகையாகத் தோன்றக்கூடும். அது ஒரு பயம். கரப்பான்களை கண்டால் ஏற்படக்கூடிய பயம். அதீத பயம். கரடியோடு அறையில் தங்கச்சொன்னால் கூட தங்கிவிடுவோம், ஆனால் கரப்பான்களோடு தங்க மாட்டோம். கரப்பான்களில்லாத வீடு ஏது ? இருக்கலாம். ஆனால் அவைகளுக்கும் எங்களுக்கும் ஒரு ரகசிய ஒப்பந்தம் இருந்தது. அவை எங்களுடைய வேண்டுகோளுக்கிணங்க பகலில் வெளிவராது, நாங்கள் இரவில் அவற்றை தொந்தரவு செய்யமாட்டோம். சில பின்னிரவுகளில், முட்டிக்கொண்டு வந்தால் கூட விடியும் வரை அடக்கி விடுவது உண்டு. தப்பித்தவறி என்றாவது ஒருநாள் ஒப்பந்தம் மீறப்பட்டு பகலில் அவை வெளிவந்தால் அவ்வளவுதான் ! நானாவது பரவாயில்லை. மூன்றாவது ஆள் யாராவது இருந்தால் பயப்படாதது போல காட்டிக்கொள்வேன். பயமில்லாத மாதிரி நடிப்பதுதான் தைரியம் என்று கமலே சொல்லியிருக்கிறாரே. ஆனால் அவனோ அலறித் துடித்திடுவான். அடுத்த இரண்டு நாட்களுக்கு கரப்பான்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுவான்.

எதற்காக இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால் முதல் பத்தியில் விவரித்த அந்த பாழடைந்த அறையில் கரப்பான்கள் பறந்துக்கொண்டிருக்கின்றன. அதுவும் பாரதியார் கவிதை பூனைக்குட்டிகளை போல வெவ்வேறு நிறங்களில் - பச்சை, மஞ்சள், நீலம். நீளமும் அதிகம். ஒவ்வொன்றும் சுமார் ஆறு அங்குல நீளம் இருக்கக்கூடும். ஏனோ அறையை விட்டு வெளியேறத் தோன்றவில்லை. குண்டு வெடித்தால், துப்பாக்கிச்சூடு நடந்தால் எல்லோரும் தரையில் குப்புற படுப்பார்களே, அதுபோல அந்த ஸ்டீல் கட்டிலிற்கு அடியில் படுத்துக்கொண்டோம். கரப்பான்கள் கொஞ்ச நேரம் பறந்துவிட்டு ஓய்ந்துவிடும் என்பது எங்கள் எண்ணம் அல்லது அவை ஒன்றோடு ஒன்று புணர்ந்துக்கொள்ள துவங்கலாம். குப்புற படுப்பதில் இன்னொரு நன்மையும் இருந்தது. அந்த கேடுகெட்ட கரப்பான்களை கண்ணால் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நிமிடங்கள் நகர்ந்தன. கரப்பான்கள் ஓய்வதாக தெரியவில்லை. மாறாக கட்டிலுக்கு அடியிலும் பறந்து வரத்துவங்கின. அவை உண்மையிலேயே பறந்து வந்தனவா அல்லது எங்கள் பிரமையா என்று தெரியவில்லை. பிரமையாகத்தான் இருக்கக்கூடும். இதை டைப்படித்துக் கொண்டிருக்கும் கூட என் கால்களில் ஒரு கரப்பான் ஊர்ந்துக்கொண்டிருப்பதை போல உணர்கிறேன்.

பொறுத்தது போதும் பொங்கியெழு என்ற கண்ணாம்பாள் வசனத்தை பேசிக்கொண்டே குமார் எழுந்துவிட்டான். அவனது பயம் எல்லை கடந்துபோய் தைரியமாக மாறியிருந்தது. கீழே சிதறிக்கிடந்த கழிவுப்பொருட்களில் எதையோ தேடினான். நவநாகரிக பெண்கள் அணியும் உயர்-குதிகால் காலணி ஒன்று அவன் கைகளில் கிடைக்கிறது. அதை எடுத்து கரப்பானின் முகத்தில் கடுங்கோபத்துடன் அறைகிறான். கரப்பானை கவிழ்த்திப் போட்டது போல கரகரவென ஒரு கன்னிப்பெண்ணின் சிரிப்பு சப்தம். ஒரு பிரபல சினிமா நடிகையின் சாயல். அதுவும் கவர்ச்சி நடிகை. கண்களை கசக்கிக்கொண்டு எழுந்தேன். அவளேதான் ! அரைஜான் செருப்பை வைத்து அறைந்தால் நான் இறந்துவிடுவேனா என்ன ? சொல்லிவிட்டு மறுபடியும் சிரிக்கிறாள். இம்முறை கலகலவென. இறக்கத்தான் இல்லையே தவிர அவளுடைய இடது கன்னம் செருப்படியால் பழுத்திருந்தது. எனக்கு புரியவில்லை. குமாரா கவர்ச்சி நடிகையை அறைந்தான். அவன் அவளுடைய பரம ரசிகன் ஆயிற்றே. அந்த நடிகை அறிமுகமான திரைப்படம். ஆமாம் அப்போது அவள் வெறும் நடிகை. ‘கவர்ச்சி’ அடைமொழி இல்லை. அந்த படத்தில் ஒரு காட்சி, நடிகை சில கோப்புகளோடு கதாநாயகனிடம் வருவார். அப்போது அதிலிருந்து காகிதங்கள் காற்றில் பறக்கும். நடிகை குதித்து குதித்து காகிதங்களை பிடிப்பார். குட்டைப் பாவாடை அணிந்திருப்பார். அந்தக் காட்சியை திரையரங்கில் பார்த்தபோது குமார் ஸ்க்ரீனுக்கு முன்னால் போய் நின்றுக்கொண்டு, ஸ்க்ரீனை தூக்கிப் பார்த்தால் புதிதாக ஏதாவது தெரியுமா என்று யோசித்தவன். அதுகூட பரவாயில்லை. தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் ஒரு பாடல். நடிகை கவர்ச்சி நடிகையாகியிருந்தார். அந்த பாடலில் நம்ம நடிகை, அனுஷ்காவுடன் போட்டி போட்டுக்கொண்டு ஆ(ட்)டுவார். அதில் நடிகை இடுப்பை ஆட்டும்போது அவளுடைய தொப்புளில் ஏற்படும் அதிர்வையும் முனியாண்டி விலாஸில் ஹாப்பாயில் போட்டு எடுத்துவந்து மேசையில் வைக்கும்போது அதன் மஞ்சள்கருவில் ஏற்படும் அதிர்வையும் ஒப்பிட்டு வர்ணிப்பான். ரசனைக்காரன். அவனா அவளை அறைந்தான் ?

இப்போது நடிகையின் மீதான குமாரின் விசுவாசத்தை சோதிக்கவோ யோசிக்கவோ நேரமில்லை. உடனடியாக அவளை ஏதாவது செய்தாக வேண்டும். அதாவது கொன்றாக வேண்டும். சுற்றிமுற்றி ஆயுதங்களை தேடுகிறேன். விரைவாக செயல்பட்டு அந்த அறைக்குள்ளிருந்து இன்னொரு அறைக்கு செல்லக்கூடிய கதவை திறக்கிறேன். அங்கேயும் ஒரு கட்டில். அதன்மீது ஒரு வெள்ளைக்கார ஜோடி அமர்ந்தபடி புணர்ந்துக்கொண்டிருக்கிறது. அறைக்குள் பறந்துக்கொண்டிருந்த மற்ற கரப்பான்களாக இருக்கலாம். ஏற்கனவே சிறுவயதில் ஒருமுறை பல்லிகள் புணர்வதை பார்த்த பாவம் என்னிடம் சேர்ந்திருந்தது. இது வேறயா என்று கதவை அவசர அவசரமாக அடைத்துவிட்டு திரும்புகிறேன்.

குமாருக்கு குழப்பம் உச்சத்திலிருந்தது. குறிப்பாக விவரிக்கப்பட்டுள்ள சம்பவம் எந்த காலகட்டத்தில் நடைபெற்றது ? அல்லது இனிமேல் நடைபெற போகிறதா ? சில கமல் படங்களின் பெயரையும், ஸ்ரீப்ரியாவையும், ஸ்ரீதேவியையும் அவன் குறிப்பிட்டிருப்பதை படிக்கும்போது சம்பவம் எழுபதுகளிலோ எண்பதுகளிலோ நிகழ்ந்திருக்கக்கூடும். ஆனால் இருபத்தியோராம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டழகி கவர்ச்சி நடிகை வருகிறாளே ?

சிந்தித்துக்கொண்டே திரும்பியபோது நடிகை மின்விசிறியின் உதவியோடு தலைகீழாய் தொங்கிக்கொண்டிருக்கிறாள். மேசையின் மீது கத்திரிக்கோல் இருக்கிறது. அதை வைத்து அவளைக் கொல்வதற்கு ஏதேனும் சாத்தியங்கள் இருக்கிறதா ? என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே அதனருகிலிருந்த புத்தம் புதிய வில்கின்சன் ஸ்வார்ட் ப்ளேடு கண்ணில் படுகிறது. தப்பு – பார்வையில் படுகிறது. கண்ணில் பட்டால் ரத்தம் குபுகுபுவென கொட்டிவிடாது. ப்ளேடை கொண்டுவந்து தொங்கிக்கொண்டிருக்கும் அவளுடைய கைகளில் கோடுகள் இழுக்கிறேன். ரத்தம் கசிகிறது. மணிக்கட்டில் ஆழமாக ஒரேயொரு கீறலிட்டால் ஆளு க்ளோஸ் என்று மூளை சொல்கிறது. ஆனால் மனது மறுக்கிறது. முன்ன பின்ன கொலை செய்திருந்தால் தானே !

இப்பொழுதும் என்னுடைய அறைக்குள் அந்த கவர்ச்சி நடிகை சலனமில்லாமல் தொங்கிக்கொண்டிருக்கிறாள் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 comments:

Katz said...

அருமை பிரபா! முடிவில் தான் கொஞ்சம் சரியாய் புரிந்து கொள்ள முடியவில்லை.

Muraleedharan U said...

kalyanappayyan ini ella nadikayum Karappan poochi !!!

'பரிவை' சே.குமார் said...

கரப்பான் பூச்சி - நடிகை நல்லா இருக்கு...

கலக்கலா எழுதியிருக்கீங்க...

வவ்வால் said...

பிரபா,

அகவெளி,புறவெளி,விண்வளி அல்லது சிந்து சமவெளியின் அகப்பாடு ,புறப்பாடு அல்லது கூப்பாடா இப்பதிவு அவ்வ் !

கக்கூஸ் காண்ட்ராக்டர் said...

இன்னும் கொஞ்ச நேரம் "இருந்தா" தான் என்ன?
ஏன் அவசரம் ஏன் அவசரம் சொல்லு பிரபா?

சேக்காளி said...

//புதிய வில்கின்சன் ஸ்வார்ட் ப்ளேடு கண்ணில் படுகிறது. தப்பு – பார்வையில் படுகிறது. கண்ணில் பட்டால் ரத்தம் குபுகுபுவென கொட்டிவிடாது//
இவ்ளோ நாளும் ஒம்ம பேருக்கு(philosophyprabhakaran) வெளக்கம் தெரியாம இருந்தேன்.அத நீக்கிபுட்டேருய்யா

மருதலலி கிருஷ்ணா said...

நான்லாம் tubelight. கொஞ்சம் வெளக்கமா சொல்லியிருக்கலாம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ல.ச.ராமாமிர்தத்தின் கதை ஒன்றை படித்தாற்போல் இருக்கிறது. நல்ல நடை கைவரப் பெற்றிருக்கிறாய்.வாழ்த்துக்கள்.