24 August 2010

மீண்டு வந்த சோழன்...!

வணக்கம் மக்களே...

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ எனது இந்த வலைப்பதிவு உறவினர்களிடம் அறிமுகம் பெற்றுவிட்டது. அமெரிக்காவில் இருந்தெல்லாம் வாழ்த்துச் செய்தி வருவதாக ஊருக்குள்ளே பேசிக்கொள்கிறார்கள். ஒரு வகையில் என் உறவினர்கள் இப்பொழுதாவது என் எண்ணங்களையும் கொள்கைகளையும் தெரிந்துக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான். ஆனால், கழிவறையில் அமர்ந்து கனநேரம் சிந்தித்தபோது இனி எல்விராவையும் நெப்போலியனையும் பற்றியெல்லாம் எழுத முடியாதே என்று அடிவயிற்றில் ஓர் கலக்கம் ஏற்பட்டது. எனது கருத்து சுதந்திரத்தில் நானே கல்லடித்துக்கொண்டது போல தோன்றியது. மேலும் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்தும், கட்டிலில் புரண்டு புரண்டு படுத்து சிந்தித்தும் ஒரு முடிவுக்கு வந்தேன். எழுதுவேன். என்னவெல்லாம் என் மனதில் தோன்றுகிறதோ, எல்லாவற்றையும் எழுதுவேன். யார் என்ன நினைத்தாலும் கவலையில்லை.

ஆகட்டும்... சில வாரங்களுக்கு முன் என் தந்தையின் உடல்நிலை சரியில்லாதது பற்றியும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பற்றியும் எழுதியிருந்தேன். இப்போது வாசகர்களாகிய உங்கள் வார்த்தைகள் பலிக்க, உறவினர்களின் பிரார்த்தனைகள் பலிக்க நோய்வாய்ப்பட்டிருந்த ராஜேந்திர சோழனாகிய (!!!) என் தந்தை மீண்டு வந்திருக்கிறார். அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளவே இந்தப் பதிவு. நான் கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது போலவே கருப்புச்சட்டையில் கம்பீரமாகவே வீடு திரும்பினார் தந்தை. அதுமட்டுமில்லாமல் டிஸ்சார்ஜ் ஆவதற்கு முந்தய நாளே தங்கையாரிடம் வீட்டு மொட்டைமாடியில் புத்தம் புதிய திராவிடர் கழக கொடியை ஏற்றச் சொல்லிவிட்டார்.

வீட்டுக்குள் நுழைந்ததும் அய்யம்மா (என் தந்தையின் தாயார்) ஆரத்தி எடுக்க அப்பா புதிய பூமி படத்தில் வரும் எம்.ஜி.ஆர் போல முரண்டுபிடித்தார். அடுத்த பத்து நாட்களுக்கு அடுத்ததடுத்து உறவினர்களும் நண்பர்களும் வந்து அப்பாவிற்கு தைரியம் சொன்னபோது தான் உறவுகளின் உன்னதத்தை உணர்ந்துக்கொண்டேன். அப்பாவிற்கு பிடிக்குமே என்று  ஒரு டி.வி.டி முழுக்க எம்.ஜி.ஆர் ஒளிப்பாடல்களை தேடித்தேடி சேகரித்து வைத்திருந்தேன். எம்.ஜி.ஆர் பாடல்களை பார்த்த உற்சாகத்திலா என்று தெரியவில்லை, அப்பா எதிர்பார்த்ததைவிட வேகமாகவே இயல்புவாழ்க்கைக்கு திரும்பிவிட்டார். இப்போது சாத்துக்குடி பழங்களையும் ஆப்பிள்களையும் யாருக்கு கொடுப்பது என்று தெரியவில்லை.

(சிறிய எழுத்துக்கள் தெரியாவிடில் வலது க்ளிக் செய்து தனித்திரையில் பார்க்கவும்)
நடந்து முடிந்த இந்த சம்பவங்களில் இருந்து நான் சில பாடங்களை கற்றுக்கொண்டேன். நீங்களும் சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. விளையாட்டுப்பிள்ளையாகவே சுற்றித்திரிந்த நான் இனியாவது கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட வேண்டுமென்று உச்சிமண்டைக்கு உரைக்க ஆரம்பித்திருக்கிறது. குடும்பத்து பெரியவர்களுக்கு நான் புத்திமதி சொல்கிறேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். தந்தையை இந்நிலைக்கு ஆளாக்கியதில் முக்கிய பங்கு புகைக்கு இருக்கிறது. வயதில் மூத்தவர்களாகவும் அறிவில் சிறந்தவர்களாகவும் விளங்கும் நீங்கள் இதை உணர்ந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். சிலர் உயிரை மயிராக நினைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம். ஆனால் உங்களை சுற்றி இருக்கும் நாலு பேருக்கு நீங்கள் தான் உலகம் என்று உணர்ந்து செயல்படுங்கள். நான் எழுதும் இந்த வார்த்தைகள் வீண்போகாது என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். நாயர் கடையிலும், சதர்லேண்ட் வாசலிலும் ஊதித்தள்ளும் பெருமக்களுக்கும் மேற்கூறிய வார்த்தைகள் பொருந்தும். நாற்பது வயது தாண்டியபிறகு ஞானம் பெற்று பயனில்லை. கேட்கவே மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்கள் நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த "ரத்தகண்ணீர்" படத்தை ஒரு முறை மறக்காமல் பார்த்துவிடுங்கள்.

கடந்த இரண்டு மாதங்களில் அப்பாவிற்கு ஊன்றுகோலாய் இருந்து உதவிய உறவுகளையும் நட்பையும் நன்றி சொல்லி அந்நியப்படுத்த விரும்பவில்லை. ஆனால் சிலருடைய பெயரை சொல்லியே ஆகவேண்டும். நான் இருக்க வேண்டிய இடத்தில் வாரிசாக இருந்து உதவிய மைத்துனர் அசோக், ரத்தத்தின் ரத்தமாக இருந்து உதவிய அருண் அண்ணன், அம்மா வீட்டில் இல்லாத் சமயங்களில் மீண்டும் எனக்கும் என் தங்கைக்கும் தாயாக இருந்து அன்பை பொழிந்த அய்யம்மா, தந்தைக்கு பசியாற்ற பாசத்தோடு உணவு கொண்டுவந்த சுப்புலட்சுமி அத்தை, "ஜோதிடசிகாமணி" திருமதி. அவல்பொரி மரகதமணி அத்தை, கேட்ட போதெல்லாம் விடுமுறை கொடுத்து ஒத்துழைத்த அணித்தலைவர் ராஜகோபால் (பேசாமல் பெயரை ராஜபக்சே என்று மாற்றிக்கொள்ளலாம்), மற்றும் பாசம் படைத்த உறவுகள், நலம் நாடிய நட்புக்கள், வர்த்தகர் சங்க, அச்சக உரிமையாளர் சங்க மற்றும் திராவிடர் கழக தோழர்கள் உங்கள் அனைவரின் பொற்பாதங்களையும் தொட்டு வணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

அடையாறு மருத்துவமனை பற்றிய எனது கடந்த பதிவை படிக்காதவர்கள் கீழுள்ள இணைப்பை சொடுக்கி படித்துக்கொள்ளலாம் :-

Post Comment

21 August 2010

நாங்கள் மாக்கான் அல்ல

வணக்கம் மக்களே...

ஒவியாவிற்காக களவாணி, சமந்தாவிற்காக பானா காத்தாடி, சுனைனாவிற்காக வம்சம் இப்படி பார்க்க வேண்டிய பல படங்கள் பட்டியலில் இருக்க கா(ஜொள்ளு)க்காக நான் மகான் அல்ல படத்தை பார்க்க சென்றிருந்தேன். தமிழகத்தின் வருங்கால முதல்வர்களுள் ஒருவரான கார்த்தி படம் என்பதால் திரையரங்க வராண்டா முழுவதும் பச்சையும் மஞ்சளுமாக கொடிகள் தென்பட்டன. இந்த படத்தை பற்றி சொல்வதற்கு முன்னால் திரையரங்கத்தில் ஒளிபரப்பப்பட்ட மூன்று ட்ரைலர்களை பற்றி சொல்லிவிடுகிறேன்.

1. பாஸ் என்கிற பாஸ்கரன்:
ஆர்யா - நயன்ஸ் நடிப்பில் வெளிவர இருக்கும் ரொமாண்டிக்கான காமெடி படம். சிவா மனசுல சக்தி எடுத்த அதே கும்பல் இந்தப் படத்தையும் எடுத்திருக்கிறது. படம் முழுவதும் சந்தான மனம் வீசுவது ப்ளஸ் பாயின்ட்.

2. வ - குவார்ட்டர் கட்டிங்:
இப்படி ஒரு படம் தயாரிப்பில் இருப்பது பலருக்கு தெரியாது என்றே நினைக்கிறேன். துரை தயாநிதி - மிர்ச்சி சிவா கூட்டணியில் மற்றுமொரு ஸ்பூப் தமிழ் படம். கொஞ்சம் சரோஜா, கொஞ்சம் ஆட்டோ (ஓரம் போ) சாயலில் தோன்றியது.

3. மங்காத்தா (அட... விசிலடிங்கப்பா...)
இந்த ட்ரைலரை படத்தை விட அதிகமாக எதிர்பார்த்து சென்றேன். ஆனால் ட்ரைலரில் ஒன்றுமே காட்டவில்லை என்றுகூட சொல்லலாம். இருட்டில் தல போன்ற ஒரு உருவம் துப்பாக்கியை தடவிக்கொண்டிருப்பதாக காட்டினார்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக "summer 2011" என்று போட்டு கடுப்பாக்கி விட்டார்கள்.

இனி மெயின் பிக்சருக்கு போவோம்...

கதைச்சுருக்கம்
தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் ஹீரோவின் கதை. இத்துடன் பதிவை முடித்துவிட்டு தமிழ்மணத்தில் சமர்ப்பித்துவிடலாமா என்று தோன்றுகிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு கமல் நடிப்பில் வெளிவந்த சிங்காரவேலன் படத்தில் கூட இப்படி ஒரு கதையை வைத்து கிண்டலடித்திருப்பார்கள். அப்படி ஒரு இடிச்சபுளி கதையை இருபத்தியோராம் நூற்றாண்டில் எடுத்து நம்மை இழிச்சவாயனாக்க முயன்றிருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஏன் "நான் மகான் அல்ல" என்று பெயர் வைத்தார்கள் என்று சத்தியமாக தெரியவில்லை. ஏதோ எம்.ஜி.ஆர், ரஜினி படங்களின் பெயர்களை வைக்கிறோம் என்று ஒரு கும்பல் பித்து பிடித்து அலைந்துக்கொண்டிருக்கிறது.

முதல் பாதி முழுக்க கார்த்தியின் அலப்பறைகள், காஜலுடன் காதல் என்று ஜாலியாக செல்கிறது. இரண்டாம் பாதி ட்ராஜெடி. யாராவது படம் பார்க்கப்போனால் முதல் பாதி முடிந்ததும் எழுந்து வந்துவிடுங்கள். நாமெல்லாம் படம் பார்க்கப்போவதே மனது விட்டு சிரிக்கவும் ரசிக்கவும் தானே.

கார்த்தி
கிட்டத்தட்ட பையா படத்தில் பார்த்த அதே கார்த்தி. எதை பற்றியும் கவலைப்படாத அசால்ட். ஒன்றுக்கும் பயன்படாத நாயகனை தாங்கிப்பிடிக்கும் நண்பர் கூட்டம். வேலையில்லா பட்டதாரி. நாயகியை கண்டவுடன் காதல். இந்தப் படத்தில் கூட நாயகன் பெயர் ஜீவா தான். (ஷிவா, ஜீவா என்ற பெயர்களையே நாயகனுக்கு மாற்றி மாற்றி வைப்பது பற்றி நான் ஏற்கனவே பல பதிவுகளில் புலம்பித்தள்ளிவிட்டேன்). இதற்கு மேல் சொல்வதற்கு எதுவுமே இல்லை.

காஜல் 
இதற்கு முன்னால்கூட பழனி, மோதி விளையாடு உள்ளிட்ட சில தமிழ் படங்களில் தோன்றியிருக்கிறார். ஆனால் இந்த அளவுக்கு முந்தய இயக்குனர்கள் அழகாக காட்ட தவறியிருக்கிறார்கள். காஜலுக்கு தமிழ் தெரியாது என்பதால் நிச்சயம் தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. படத்தில் காஜலின் பெயர் ப்ரியா. பக்கத்து வீட்டு பெண் கேரக்டராம் (ம்ம்ம்... எங்க பக்கத்து வீட்டுல இப்படி ஒரு பெண் இருந்தால் நல்லாத்தான் இருக்கும்). படத்தின் முதல் பாதியில் மட்டும் சில காட்சிகளில் தோன்றியிருக்கிறார். இரண்டாம் பாதியில்...? ஒரு பேச்சுக்காக கூட காட்டவில்லை. அட... க்ளைமாக்ஸ்ல கூட வரலைங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

மற்றும் பலர்
மற்ற அனைவருக்குமே சின்னச்சின்ன பாத்திரங்கள்தான். "நந்தா" படத்தில் சின்ன சூர்யாவாக நடித்தவர் இந்தப் படத்தில் ஒரு இளம் வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். வழக்கமாக தமிழ் சினிமாக்களில் பெண்ணை பெற்றவராக வருபவர் (அலைபாயுதே படத்தில் ஷாலினிக்கு, பாய்ஸ் படத்தில் ஹரிணிக்கு, சித்திரம் பேசுதடி படத்தில் பாவனாவிற்கு, கிரீடம் படத்தில் த்ரிஷாவிற்கு இப்படியாக பல படங்களில் தந்தையாக நடித்தவர்) இந்தப் படத்திலும் காஜலின் தந்தையாக வந்து செல்கிறார். "வெண்ணிலா கபடிக்குழுவில்" 50 பரோட்டா சாப்பிட்ட சூரி, கார்த்தியின் நண்பனாக வந்து சில காட்சிகளில் மனதை கவர்கிறார்.

எனக்குப் பிடித்த சில காட்சிகள்:
கார்த்தியின் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே பல படங்களில் காட்டப்பட்டிருந்தாலும் ஏன் குடும்பத்தை அப்படியே பிரதிபலித்ததால் மிகவும் பிடித்திருந்தது. நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கும்போதும் நக்கல்ஸ் குறையாத அப்பா, பொய்க்கோபம் காட்டியபடியே பர்சிலிருந்து பணமெடுத்து கொடுக்கும் அம்மா, டிவி ரிமொட்டுக்காக சண்டை போடும் தங்கை என்று அப்படியே எங்கள் வீட்டை ஜெராக்ஸ் எடுத்து காட்டியதோடு மட்டுமில்லாமல் பொறுப்பில்லாமல், வேலைவெட்டியில்லாமல் இருக்கும் நாயகனின் பாத்திரத்தையும் கச்சிதமாக காட்டியிருந்தார்கள்.

கார்த்தி முதல் நாள் வேலைக்கு போகும் காட்சியும், அதை அவரது தாய் தந்தையர் ஊரெல்லாம் சொல்லி பெருமைபடுவதும் நெகிழ வைத்தது. அப்படி ஒரு நாளுக்காகத்தான் காத்திருக்கிறேன்.

பாடல்கள்:
இரண்டாம் பாதியில் ஒரு பாடல்கூட இல்லை. முதல் பாதியில் இரண்டே இரண்டு பாடல்கள் வந்தது போல ஞாபகம். அவற்றில் அல்லாரும் ஏற்கனவே கேட்ட கண்ணோரம் காதல் வந்தால்... பாடல் மட்டும் மனதில் நின்றது. மற்றபடி சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.

தீர்ப்பு:
கார்த்தியின் வெற்றிப்பட வரிசையில் நிச்சயம் இந்தப்படம் சேராது. தமிழ் ரசிகர்கள் அந்த அளவுக்கு கிறுக்கர்கள் இல்லையென்று நம்புகிறேன். ஆனால் மதுரைக்காரர் தயாரிப்பில் வெளிவந்திருப்பதால் ஓட்டப்படலாம். படத்தில் ஒரு சின்ன ஆறுதல்: இரண்டாம் பாதி எப்படியும் அழுகாச்சி என்று இண்ட்ரவல் விடும்போதே தெரிந்துவிட்டது. நல்லவேளையாக நாயகனின் தங்கையையோ, நாயகியை வைத்தோ வக்கிரமாக கதையை நகர்த்தி கலங்கடிக்கவில்லை. 

இந்தப் படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் எழுத நான் மகான் அல்ல...
இப்படி ஒரு படத்தை ஹிட்டாக்குவதற்கு நாங்கள் மாக்கான் அல்ல...
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN

Post Comment