31 March 2014

ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும் - ஆடியோ போஸ்ட்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆடியோ போஸ்ட் வெளியிட வேண்டுமென்பது என்னுடைய நீண்டநாள் அவா. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை முயற்சி செய்தேன். தோல்வி. மொத்தம் நூற்றி எழுபத்தைந்து முறை அந்த ஆடியோ கேட்கப்பட்டிருப்பதாக தரவு சொல்கிறது. அதில் நானே ஐம்பது முறை கேட்டிருப்பேன். எத்தனை பேர் முழுவதுமாக கேட்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதற்குப் பிறகு ஆடியோ முயற்சி ஏதும் செய்யவில்லை.

ஆடியோ போஸ்ட் வெளியிடுவதில் நிறைய சிரமங்கள் உள்ளன. முக்கியமானது இரைச்சல். நள்ளிரவில் அறையில் மின்விசிறியை எல்லாம் கூட நிறுத்திவிட்டு பதிவு செய்ய தயாரானேன். சி.பி.யூவிலிருந்து ஒரு சத்தம், கடிகாரம் டிக் டிக் என்று அடிக்கிறது. ‘நிசப்தத்தை’ புறக்கணித்துவிட முடியாத இடத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். கடிகாரத்தை நிறுத்தியிருந்தால் இன்னும் கூட சத்தம் குறைந்திருக்கும். அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாமென விட்டுவிட்டேன். அடுத்தது குரல். சென்ற முறை பதிவிட்டபோது வாய்ஸ் சர்பத் சாப்பிட்டு பேசியது போல இருக்கிறது என்று சிலர் சொன்னார்கள். என்னுடையது இயல்பிலேயே அப்படித்தான். சாதாரணமாக பேசும்போது பிரச்சனையில்லை. ஏதாவது திட்டமிட்டு பேசினால் நாக்கு குழறும். ஒவ்வொரு பத்தியாக பதிவு செய்து அடோசிட்டியில் ஒன்று சேர்த்திருக்கிறேன்.

இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்க விரும்பினேன். ஆனால் அநியாயத்துக்கு ஐந்தரை நிமிடங்கள் வரை நீண்டுவிட்டது. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...!



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 March 2014

மரப்பல்லி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

அனுபவம் #1
இந்த காலத்து பசங்க குமுதம், ஆனந்த விகடன் தாண்டி எதையும் படிப்பதில்லை என்று அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார் ஒரு பெரியவர். தீவிர இலக்கியமில்லை’ன்னாலும் வாமு கோமு வரைக்குமாவது படிங்கப்பா என்று ஒருநாள் புலம்பினார். அவருடைய கூற்றைக் கொண்டு நவீன இலக்கியத்திற்கான வாசல்படி வாமு கோமு என்று நானாகவே புரிந்துகொண்டேன். அப்போது அவருடைய 'எட்றா வண்டியை' என்ற புத்தகம் இணையத்தில் பிரசித்தி பெற்றிருந்தது. அதிலிருந்தே துவங்கலாம் என்று முடிவெடுத்து டிஸ்கவரி புக் பேலஸை புரட்டியபோது எனக்கு அது கிடைக்கவில்லை. 'நாவலல்ல கொண்டாட்டம்' என்ற புத்தகம் கையில் கிடைத்தது. வாங்கிக்கொண்டேன்.  அந்தமான் சென்றபோது கப்பல் பயணத்தில் அந்த புத்தகத்தை பிரித்தேன். தொடர்வதற்கு முன்பு ஒன்றை சொல்லி விடுகிறேன், நான் சுஜாதா நாவல்கள், கிழக்கு வெளியீடுகள் போன்றவற்றை மட்டும் படிக்கும் லைட் ரீடிங் ஆசாமி. ஒரேயொரு முறை எ.பேன்சி பனியனும் படித்துவிட்டு பேயறை வாங்கியவன். அப்படிப்பட்ட நான் கொண்டாட்டத்தை படித்திருக்கக்கூடாது. பெக்குக்கு ஒரு பிராண்ட் மாற்றி அடித்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒன்றிற்கு ஒன்று தொடர்பில்லாமல் இருந்தன அதன் அத்தியாயங்கள். ஒருவேளை பின்நவீனத்துவம் என்றாலே இப்படித்தான் இருக்குமோ என்று வெறுப்புற்றேன். அதன்பிறகு நான் என் பாணி வாசிப்பிற்கு திரும்பிவிட்டேன்.

அனுபவம் #2
புத்தகக்காட்சி உயிர்மை அரங்கில் அனு, அக்கா, ஆண்ட்டி, ஆயா மாதிரி வயது வேறுபாட்டுடன் ஒரு பெண்கள் குழு புடவைக்கடை நினைப்பிலோ என்னவோ புத்தகங்களை புரட்டிப்போட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள். நான் கூட என்னவோ சமையல் குறிப்பு புத்தகத்தை தேடுகிறார்களோ ? அதெல்லாம் இங்க கிடைக்காது’ன்னு எடுத்துச் சொல்லலாமா என்று நினைத்தேன். அதற்குள் அந்த அக்கா வாமு கோமுவின் ஒரு புத்தகத்தை எடுத்து ஆண்ட்டியிடம் காட்டினார். ஆண்ட்டி அதன் முகப்பை பார்த்துவிட்டு, ‘வாமு கோமுவா ? அவருது எல்லாம் ஒன்னுபோல இருக்கும்...’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இரு மோசமான அனுபவங்களையும் தாண்டி வாமு கோமுவின் புத்தகங்களை படிக்க வேண்டுமென ஒரு ஆர்வம் ஏனோ என்னிடம் மிச்சமிருந்தது. இருக்கவே இருக்கிறார் ஆபத்பாந்தவன் ஆரூர் மூனா. புத்தகக்காட்சியில் வாமு கோமுவின் ஐந்து புத்தகங்களை வாங்கியிருக்கிறார். முதற்கட்டமாக அதிலிருந்து மரப்பல்லியை உருவி வந்தேன். லெஸ்பியன் உறவு சம்பந்தப்பட்ட கதை என்று கேள்விப்பட்டதால் அதற்கு முன்னுரிமை.

அட்டகாசமாக ஹார்ட் பவுண்ட் செய்யப்பட்டு, புக்மார்க் எல்லாம் வைக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. உண்மையில் மரப்பல்லிக்கு அவை தேவையில்லை. மொத்தம் நூற்றி ஐம்பது பக்கங்கள் மட்டுமே. எழுத்துக்கூட்டி படித்தால் கூட சில மணிநேரங்களில் முடித்துவிடலாம். அப்புறம் ஏன் புக்மார்க் ?

வாமு கோமுவைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் என்று யாராவது எழுதினால் மறக்காமல் ‘பாலியல் எழுத்தாளர் என்று விமர்சிக்கப்படும்’ என்ற அடைமொழியை சேர்த்துவிடுகிறார்கள். அவ்வாறு அடைமொழி கொடுத்துவிடுவதால் அவரை பாலியல் எழுத்தாளர் என்று விமர்சிப்பது தவறான கருத்து என்று நிறுவ முனைகிறார்கள். 

நான் படித்த பிரதியின் உரிமையாளர் உப்புநாய்களை பற்றி எழுதும்போது சேர்த்துக்கொண்ட வரிகள் :-
காமம் கலந்து நாசூக்காகவும் கிளர்ச்சியாகவும் எழுதுவது வேறு. சரோஜாதேவி டைப் புத்தகங்களை தாண்டும் அளவுக்கு வக்கிரம் புடித்து எழுதுவது வேறு. அரைகுறை எழுத்தாளர்கள் வாமுகோமுவைப் பார்த்து எப்படி பட்டும்படாமலும் எழுதுவதை என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

புத்தகத்தை படித்து முடித்ததும் எனக்கு மேற்கண்ட வரிகள் நினைவுக்கு வந்தன. உண்மையைச் சொன்னால் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. 

ஆறாவது அத்தியாய முடிவிலிருந்து சில வரிகள்:
மணிபாரதியின் கீழ் உதட்டை சப்பி எடுத்தவளை அப்படியே கட்டிக்கொண்டு தூக்கியபடி படுக்கையறைக்கு நுழைந்தான். நாமெல்லாம் காத்தாடி சுத்துவதை உன்னிப்பாக கவனிக்கிறோம். காத்தாடியை காட்டிய கேமரா கீழே இறங்கி படுக்கையில் கிடக்கும் ஜோடியை காட்டுமா என்று ஆவலுடன் இருக்கிறோம்.

ஒருவேளை ஆரூர் மூனா இதுபோன்ற வரிகள் எதையாவது படித்துவிட்டு அடடா பச்சையாக எல்லாவற்றையும் விவரிக்காமல் காட்சியை கட் செய்திருக்கிறார் என்று நினைத்திருக்கக்கூடும். அப்படி நினைத்திருந்தால் அவருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

கொச்சையான வார்த்தைகள் பயன்படுத்தி எழுதுவது ஒருவகை, கொச்சையான கதையம்சம் வைத்து எழுதுவது இன்னொரு வகை. வாமு கோமுவுடையது இரண்டாவது.

பி-கிரேடு படங்கள் பார்த்திருக்கிறீர்களா ? பெரும்பலான பி-கிரேடு படங்கள் ஒரு நாயகன் – மூன்று நாயகிகள் என்ற கோட்பாட்டை தழுவி எடுக்கப்பட்டிருக்கும். ஒரே நாயகியை காட்டிக்கொண்டிருந்தால் போரடிக்கும் என்பதால் மாற்றி மாற்றி சீன் காட்டுவார்கள். சமீபத்தில் அசைவம் என்ற பி-கிரேடு படம் பார்க்க கிடைத்தது. அதன் பிரதான நாயகி செம ஃபிகர். கதை இதுதான். நாயகன் நாயகியை ஏதோ ஒரு காரணத்திற்காக திட்டமிட்டு திருமணம் செய்துகொள்கிறான். அதன்பிறகு ஒரு வல்லிய சந்தர்ப்பத்தில் நாயகியின் தங்கையை அனுபவிக்கிறான். ஒரு கட்டத்தில் நாயகியின் அம்மாவையும் பலவந்தப்படுத்தி அனுபவிக்கிறான். கடைசியில் எல்லோரும் எல்லாரையும் பழி வாங்கிக்கொண்டு சாகிறார்கள். 

கிட்டத்தட்ட அதே பாணி கதைதான் மரப்பல்லி. மணிபாரதி என்பவன் நாயகன். அவனுடைய மனைவி இறந்துவிட்டாள். அவனுக்கு பக்கத்து வீட்டில் கணவனிடம் சுகம் கிடைக்காமல் தாய் வீட்டில் வந்து அண்டியிருக்கும் ஒருத்தி, அவளுடைய திருமணமாகாத தங்கை, மணிபாரதியின் மகளுடைய ‘கணவனை பிரிந்து வாழும்’ டீச்சர். மாறி மாறி பிட்டுக்கள். இடையே ஒரு லெஸ்பியன் பிட்டு. அவ்வளவுதான் மரப்பல்லி.

அசைவமாக எழுதுவதோ அதை வாசிப்பதோ எனக்கு பிரச்சனை இல்லை. உண்மையில் நான் அதனை விரும்புகிறேன். ஆனால் இந்த புத்தகத்தில் மனித உணர்வுகள், குறிப்பாக பெண்ணின் உணர்வுகள் படுகேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதே என் வருத்தம். போதாத குறைக்கு ஓரினச்சேர்க்கையை பற்றி எந்தவித புரிந்துகொள்ளுணர்வும் இல்லாமல், மறைமுகமாக அதனை எதிர்த்தும் எழுதியிருக்கிறார் வாமு கோமு. ஒருபால் உறவெல்லாம் பேத்தல். பெண்களுக்கு சுகம் வேண்டுமென்றால் at last ஒரு ஆணிடம் தான் பெண் வரவேண்டும் என்று சொல்கிறார். மரப்பல்லியை படித்தால் ஏதோ ஊரில் உள்ளவர்கள் எல்லாரும் ஓழுக்காக மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக கடைசி சில அத்தியாயங்கள் வக்கிரம். ப்ரியா மனிபாரதியை பிறந்ததிலிருந்து அண்ணா என்றே அழைத்திருக்கிறாள். திடீரென ஒரு சமயத்தில் மணிபாரதி ப்ரியாவை கட்டிப்பிடித்து, உதட்டை கடித்து, பின்புறத்தை பிசைந்ததும் ப்ரியா ஒத்துழைக்கிறாள்.

மரப்பல்லி இனத்தில் ஒருபால் உணர்வு உண்டு என்பதால் குறிப்பாக அப்பெயர் சூட்டியதாக திலீபன் எழுதியிருக்கிறார், எனக்கு வேறு மாதிரியான அர்த்தம் தோன்றுகிறது. ஒருபால் உறவு என்பது மரத்தால் செய்யப்பட்ட உயிரற்ற பல்லியை போன்றது என்று அர்த்தத்தில் எழுதியிருப்பதாக தோன்றுகிறது. 

நல்ல விஷயங்கள் என்று சொல்வதானால், வாமு கோமுவின் வட்டார பேச்சு வழக்கில் உள்ள எழுத்து நடை. அதில் அவர் ஸ்பெஷலிஸ்ட் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மைதான். ஐந்தாவது அத்தியாயத்தில் ஆண்களால் பாதிக்கப்பட்ட ப்ரியா தன்னுடைய காதலி ஜெனிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். க்ளாஸ். பேசாமல் அதை மட்டும் ஒரு சிறுகதையாகவோ அல்லது அதனை மையக்கருவாக வைத்து ஒரு நாவலோ எழுதியிருந்தால் பிரமாதம் என்றிருக்கலாம்.

மரப்பல்லி
வா.மு.கோமு
எதிர் வெளியீடு
160 பக்கங்கள்
ரூ.150

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 March 2014

வேலைக்கார நாயி !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

விகடன் மேடையில் கடந்த நான்கு வாரங்களாக கே.எஸ்.ரவிகுமார் பதில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நாகேஷ், நடிகர் திலகம் பற்றி, படையப்பாவில் டான்ஸ் ஆடியது பற்றி, ரகுவரனின் ‘ஐ நோ’ ரகசியம் என உண்மையோ பொய்யோ படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. சிலர் ரஜினி – கமலை வைத்து படம் இயக்குவீர்களா...? அப்படி இயக்கினால் படத்தின் ஒன்லைன் என்ன...? என்பது போன்ற ஹைப்போதெட்டிக்கல் கேள்விகளை கேட்டு வைக்கிறார்கள். முத்து படத்தில் ஜெயலலிதாவை சீண்டும் வகையில் வசனம் வைத்தது பற்றி ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு மட்டும் வசதியாக தப்பித்துக் கொண்டார். இதையெல்லாம் படித்ததும் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. முத்தாய்ப்பாக முந்தாநாள் தொலைக்காட்சியில் படையப்பா ஒளிபரப்பியதால் பதிவாகவே எழுதிவிட்டேன்.

பொதுவாக கே.எஸ்.ரவிகுமாரை இந்தமாதிரி படங்கள் மட்டும்தான் இயக்குவார் என்று வகைப்படுத்திவிட முடியாது. ஒட்டுமொத்தமாக அவர் ஒரு நல்ல எண்டர்டெயினர். ஆனால் நாட்டாமை, ஊர் பெரியவர் வகையறா சமாச்சாரங்கள் என்றால் அவருக்கு அல்வா மாதிரி. அது குறித்து ஒரு வாசகர் கேட்டிருக்கும் கேள்விக்கு அவருடைய பதிலை முதலில் பார்த்துவிடலாம்.

'பண்ணையார்’, 'நாட்டாமை’, 'ஜமீன்எல்லாம் எப்போதோ ஒழிந்துவிட்டன. ஆனால், சினிமாவில் மட்டும் ஏன் இன்னமும் விடாமல் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?

'இது எனக்கான கேள்விதான்! நகரத்தைவிட கிராமங்கள் இன்னைக்கு ரொம்ப வேகமா மாறிட்டு வருது. அண்ணனுக்கு மரியாதை கொடுக்கும் தம்பி, பெத்தவங்களைப் பத்திரமாப் பார்த்துக்கும் பிள்ளைகள், விவசாயம், கிராமக் கட்டுப்பாடு... இதெல்லாம் கிட்டத்தட்ட வழக்கொழியும் நிலைமையில் இருக்கு.

சென்னைலயே வளர்ந்த எனக்கு முதல்முறையா கிராமத்துல தங்கியிருந்தப்போ, அதெல்லாம் ஆச்சரியமா இருந்தன. அதனாலேயே கிராமங்கள் இப்பவும் எனக்கு இஷ்டம். ஆனா, அந்த விஷயங்கள் இவ்வளவு சீக்கிரம் காலாவதி ஆகும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. அதான், 'இப்படி எல்லாம் இருந்திருக்காங்கனு இப்போதைய தலைமுறைக்கு ரீ-க்ரியேட் பண்ணிக் காட்டணும்னு நினைச்சேன். அதனாலதான் அந்த மாதிரி படங்கள் எடுக்கிறேன். தவிர சென்டிமென்ட், ஆக்ஷன், காதல், காமெடினு மசாலா தூவுறதுக்கும் கிராமத்து சப்ஜெக்ட்லதான் பெரிய ஸ்கோப் இருக்கு!''

சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக போன்ற படங்கள் அவருடைய அந்த வகை படங்களில் சிறப்பானவை. அஜித்தை வைத்து வரலாறு என்றொரு படம் இயக்கினார். நகர வாழ்க்கையை மையமாக கொண்ட படம்தான். ஆனால் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தெரியும், வரலாறும் அவருடைய வழக்கமான ஊர் பெரியவர் டெம்ப்ளேட் கதைதான். பணக்கார அஜித், அவருக்கு கீழே நிறைய வேலைக்காரர்கள், இளவயது அஜித்தை சின்ன அய்யா என்று அழைப்பார்கள், இடிச்சபுளி செல்வராஜ் போன்ற ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் பட்டாளம், கிளைமாக்ஸில் ஒரு உயிர் தியாகம். கெட்ட கேட்டுக்கு அஜித் ரசிகர்கள் வரலாறை க்ளாஸ் + மாஸ் என்று கூவிக்கொண்டு இருந்தார்கள். அதைப்பற்றி இன்னொரு நாள் விரிவாக பார்க்கலாம்.

இப்படி கே.எஸ்.ஆரின் பெரும்பாலான படங்களில் தவறாமல் அங்கம் வகிப்பவர்கள் வேலைக்காரர்கள். அதுவும் அதிபயங்கரமான விசுவாசம் கொண்ட வேலைக்காரர்கள். ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டின் உறுப்பினர்களை விட வேலைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். முதலாளிகள் அவ்வப்போது டென்ஷன் ஆகும்போதெல்லாம் வேலைக்காரர்களின் கன்னத்தில் பளாரென ஒரு அறைவிட்டு தங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்வார்கள். கன்னத்தில் அறை விடுகிற பழக்கம் நடைமுறை வாழ்க்கையில் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. சினிமாவில் தான் எதற்கெடுத்தாலும் கன்னத்தில் அறைகிறார்கள். அதுவும் காதலை ப்ரொபோஸ் செய்ததற்கெல்லாம் அறைகிறார்கள். அத்தனை சிறிய பிரதேசத்தில் தூரத்தில் இருந்து எப்படி குறி பார்த்து அறைகிறார்கள் என்பதே ஆச்சரியக்குறியாக இருக்கிறது.

பாட்டாளி படத்தில் ஒரு காட்சி. ரம்யா கிருஷ்ணன் ஒரு வேலைக்காரரிடம் மீன்தொட்டியை இடம் மாற்றும் பணியை ஒப்படைப்பார். ஒப்படைக்கும் முன்பே ஒரு அறை விடுவார். தவறு செய்வதற்கு முன்பே அறைந்துவிட்டால் தவறு செய்யமாட்டார் என்று வேறு வியாக்கியானம் பேசுவார். கொஞ்ச நேரத்தில் பணியாளர் மீன் தொட்டியை கீழே போட்டு உடைத்துவிட்டு அதான் ஏற்கனவே அறைஞ்சிட்டீங்களே என்று சொல்வார். அதே ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் காபி டம்ளரை தவறவிட்டதற்காக செளந்தர்யாவை அறைய வருவார். நல்லவேளையாக சூப்பர்ஸ்டார் தடுத்து விடுவார். அவருடைய நிறைய படங்களில் வேலைக்காரர்களை அறையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தவிர, வேலைக்கார நாயி என்ற பதம் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படும். இதுபோன்ற அறைகள், வசனங்கள் பெரும்பாலும் திமிர் பிடித்த கதாபாத்திரம் ஒன்று செய்வதாக காட்டினாலும் எனக்கென்னவோ கொஞ்சம் டூ மச் என்றுதான் தோன்றுகிறது.

நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் எல்லோரும் வேலைக்காரர்களை நன்றாகவே நடத்துகிறார்கள். நிறைய பேர் தங்கள் குடும்ப உறுப்பினரை போல கவனித்துக் கொள்கிறார்கள். அதுவும் கே.எஸ்.ஆர் பார்த்து ரசித்த கிராமங்களில் என்றால் கேட்கவே வேண்டாம், நிச்சயமாக வேலைக்காரர்களை நன்றாக கவனித்து அவர்கள் வீட்டு நல்ல காரியங்களை கூட முன்னின்று நடத்தித் தருகிறார்கள். ஒருவேளை முன்பொரு காலத்தில் வேலைக்காரர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டிருக்கலாம். அவருடைய படங்களில் வரும் பண்ணையார், நாட்டாமை, ஜமீன் போல வேலைக்காரர்களை அறைவதும், நாய் என்று விளிப்பதும் கூட வழக்கொழிந்துவிட்ட செய்கைகள் என்றே கருதுகிறேன்.

ஒருவேளை இன்னமும் யாராவது அப்படி இருந்தால் கூட அதையெல்லாம் சினிமாவில் சரி என்பது போல காட்டுவது முறையல்ல. இனியாவது கே.எஸ்.ஆர் அதுபோன்ற காட்சிகளை தவிர்க்கலாம்.

செய்வீர்களா கே.எஸ்.ரவிகுமார்...? நீங்கள் இதைச் செய்வீர்களா...?

அடுத்து வருவது: மரப்பல்லி

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 March 2014

பிரபா ஒயின்ஷாப் – 24032014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்ற வாரத்தில் ஒருநாள் ஹிக்கின்பாதம்ஸ் சென்றிருந்தேன். துறை சார்ந்த புத்தகம் ஒன்றை வாங்குவதற்கான விஜயம். புத்தகம் கிடைத்தபிறகு ஒரு சுற்று மற்ற புத்தகங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஜெயா டீச்சரை கண்டேன். கூடவே நான்கு வயது சுமார் மகனையும் கூட்டி வந்திருந்தார். Flashback...! நான் உயர்நிலை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம். எங்கள் பள்ளி மாணவர்கள் பி.டி.மாஸ்டர் என்றாலே அலறுவார்கள். கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் அப்படித்தான் என நினைக்கிறேன். பி.டி.மாஸ்டரின் பெயர் ஸ்ரீநிவாசன். நெற்றியில் செங்குத்தாக மூன்று கோடுகளை வரைந்திருப்பார். மற்ற வாத்தியார்களைப் போல சின்ன பிரம்பு அவருக்கு உபயோகப்படாது. ஆறு அடி நீளத்துக்கு சிலம்பத்திற்கு பயன்படுத்துவது போல ஒன்றை வைத்திருப்பார். அப்போது தான் தப்பியோட முயற்சிப்பவர்களை துரத்தி அடிக்க முடியும். அவர் அந்த பிரம்பை எடுத்துக்கொண்டு நடந்துவந்தால் அப்படியே நம்முடைய மூதாதையர்களை பார்த்தது போல இருக்கும். திடலில் விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்கள் எல்லாம் சிதறி ஓடுவார்கள். அவருடைய மகன் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் மாணவர்களை துரத்தி துரத்தி அடித்த பாவம்தான் அந்த விபத்துக்கு காரணம் என்று சில மாணவர்கள் பேசிக்கொள்வார்கள். 

நான் ஒன்பதாவது வகுப்பிற்கு சென்றபோது புதிதாக எங்கள் பள்ளியில் ஒரு பி.டி.ஆசிரியை சேர்ந்திருந்தார். அவர்தான் ஜெயா டீச்சர். பயல்களுக்கு வேறு பனித்துளி பார்க்கிற வயதாச்சே...! ஜெயா டீச்சரை அங்கங்கே ஓரமாக சைட் அடித்துக்கொள்வோம். ஜெயா டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். சரிதான், அவர் மட்டும் அவ்வளவு ஸ்ட்ரிக்டாக இருந்திருக்காவிட்டால் வரம்பு மீறி சேட்டை செய்திருப்பார்கள் மாணாக்கர். திமிர்தான் பெண்களுக்கு வேலி என்று கமலஹாசன் சொல்லியிருக்கிறார். ஹிக்கின்பாதம்ஸில் ஜெயா டீச்சரை பார்த்ததும் எல்லாம் நினைவுக்கு வந்து கூடவே உதட்டோரத்தில் ஒரு புன்னகையும் வந்தது. நல்லவேளையாக டீச்சருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. தெரிந்தாலும் பேசுவதாக இல்லை. இனி பழைய ஆசிரியர்களை சந்திக்க நேர்ந்தால் மறந்தும் கூட அவர்களிடம் பேசிவிடக் கூடாது. குறைந்தபட்சம் அவர்களைப் பற்றிய பிம்பமாவது நம்முடைய மனதில் நல்லபடியாக இருக்கட்டும் என்றொரு எண்ணம். ஒன்பதாம் வகுப்பு மாணவனைப் போலவே ஜெயா டீச்சரை திருட்டுத்தனமாக சைட் அடித்து கிளம்பிவிட்டேன்.

ஹிக்கின்பாதம்ஸ் என்றதும் தொடர்ச்சியாக நூலகம் நினைவுக்கு வருகிறது. சிறுவயதிலிருந்தே நூலகம் எனக்கு விருப்பமான ஒரு இடம். எனினும் இந்நாள் வரைக்கும் ஒரு நூலகத்தின் பலனை ஒருமுறை கூட நான் முழுமையாக அனுபவித்ததில்லை. முந்தய பத்தியில் குறிப்பிட்ட அதே உயர்நிலை பள்ளியில் ஒரு நூலகம் இருந்தது. பள்ளி நேரம் முடிந்தபிறகு போய் படிக்கலாம். புத்தகங்கள் பூட்டிய கண்ணாடி அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எந்த புத்தகம் வேண்டுமென நூலகரிடம் கை காட்டினால் அவர் நல்ல மூடில் இருந்தால் மட்டும் எடுத்துக் கொடுப்பார். பிரச்சனை என்னவென்றால் அவர் பெரும்பாலான நேரங்களில் நல்ல மூடில் இருக்க மாட்டார். அதுபோன்ற நேரங்களில் வேறு வழியில்லாமல் வெளியே இறைந்து கிடக்கும் பள்ளி ஆண்டு மலர்களை எடுத்து புரட்ட வேண்டியிருக்கும். புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்ற விதிமுறை இருந்தாலும் கூட நூலகரின் சிடுசிடு மூஞ்சி நினைவுக்கு வந்து அந்த ஆசையே போய்விடும். மேனிலை பள்ளியிலும் கிட்டத்தட்ட அப்படித்தான். அங்கே பெண் நூலகர் என்பதால் சிடுசிடுப்புக்கு பஞ்சமிருக்காது. அதுவுமில்லாமல் அப்போதெல்லாம் பள்ளி முடிந்ததும் கேர்ள்ஸ் ஸ்கூலை நோக்கி உசேன் போல்ட் வேகத்தில் ஓட வேண்டும், பஸ் ஸ்டாப்பில் நின்று சைட்டடிக்க வேண்டும் என்பது போன்ற கடமைகள் இருந்ததால் நூலகம் பெரிதாக தெரியவில்லை. 

கல்லூரி நூலகத்தில் படிப்பு சார்ந்த புத்தகங்கள் தவிர்த்து அதிக புத்தகங்கள் இருக்காது. அதிலும் தமிழ் மருந்துக்கு கூட இருக்காது. ஆங்கில நாளிதழ்கள், இந்தியா டுடே, கணினி சம்பந்தமான சஞ்சிகைகளை வாசிக்கலாம். கல்லூரி நூலகத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் நான்கு மணிக்கு கல்லூரி பேருந்துகள் கிளம்பிவிடுவதால் அதன்பிறகு வளாகத்தில் மாணாக்கர் நடமாட்டம் அதிகமிருக்காது. நூலகத்தில் இரண்டு பேர் அமர்ந்திருந்தால் சாதனை. தள்ளுமுள்ளு இல்லாமல் நிதானமாக வாசிக்கலாம். அதைவிட முக்கியமாக தினசரி ஒரு மணிநேரம் எந்த தொல்லையும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கோவிலை எப்படி உணர்வார்களோ அதுபோல நான் நூலகத்தை உணர்ந்துக்கொண்டிருந்த சமயம் அது. மேலும் அங்குள்ள நூலகர்களுக்கு புன்னகை செய்ய தெரிந்திருந்தது. அதில் ஒரு நூலகர் இப்பொழுது கேப்டன் தொலைக்காட்சியில் ரவி பெர்னாட் ரேஞ்சுக்கு இருக்கிறார். படிப்பெல்லாம் முடிந்தபிறகு ஒருநாள் அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகத்திற்கு சென்றிருந்தேன். நிறைய பழைய புத்தகங்களாகவே இருந்தன. பாக்கியம் ராமசாமியின் புத்தகம் ஒன்றை சிறிதுநேரம் புரட்டிவிட்டு திரும்பினேன். கன்னிமாரா என்று சொல்கிறார்களே அந்த நூலகத்திற்கு இதுவரைக்கும் நான் சென்றதே கிடையாது. 

திருவொற்றியூரில் ஒரு நூலகம் நீண்டகாலமாக இருக்கிறது. தற்போது அதனை புதிப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு சேர்த்து நூலகத்துடனான என்னுடைய தொடர்பையும் புதிப்பித்துக்கொள்ள ஒரு விருப்பம். புதுப்பிப்பு பணிகள் முடியும் வரை நூலகம் தற்காலிகமாக பின் பக்கத்தில் நடத்தப்படுகிறது என்று செல்வின் சொல்லியிருந்தார். போய்ப் பார்த்தால் நூலகம் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. செல்வினை நம்ப முடியாது. சரியாக தெரியவில்லை என்றால் கூட தெரிந்த மாதிரியே அடித்துவிட்டுவிடுவார். என்னடா இது சோதனை என்று அருகிலுள்ள பூங்காவிற்குள் நுழைந்தேன். அந்த பூங்காவைப் பற்றிய சுவையான நினைவுகள் என்னிடம் நிறைய உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் எழுத முடியாது. வேறொன்றும் இல்லை, சொன்னா உதைப்பீங்க. நான்கு பள்ளிச்சிறுமிகள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மாநிறமாக லட்சணமாக இருந்தாள். பேச்சு கொடுக்கலாம் என்று நினைப்பதற்குள் செல்வின் வந்துவிட்டார். நூலகம் அதன் பழைய இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. தற்காலிகமாக இயங்குவதால் புத்தகங்கள் கொஞ்சமாக இருந்தன. தேர்தல் முடிந்ததும் புது கட்டிடத்திற்கு போய்விடுவோம் என்று சொன்னார் நூலகர். உறுப்பினராக விண்ணப்ப படிவம் வாங்கி வந்தோம்.

இதற்கிடையே என் இல்லத்திலிருந்து நடை தொலைவிலேயே ஒரு நூலகம் இருப்பதாக என் தாயார் சொன்னார். ஏன் விடுவானேன் என்று அங்கேயும் சென்றேன். அது நூலகம் அல்ல. படிப்பகம். நாளிதழ்கள், சஞ்சிகைகள் மட்டும் வைத்திருக்கிறார்கள். மின்சார செலவை கட்டுப்படுத்தும் பொருட்டு மின்விசிறியை போடுவதில்லை. சென்ற பாவத்திற்காக வியர்க்க வியர்க்க ஆனந்த விகடனை புரட்டிவிட்டு திரும்பினேன்.

*****

ரொம்ப போரடித்துவிட்டேனோ...? சற்று இளைப்பாறலாம். நேற்று தொலைக்காட்சியில் படையப்பா ஒளிபரப்பினார்கள். ஏற்கனவே பலமுறை கேட்டு, பார்த்திருந்தாலும் ஏனோ சுத்தி சுத்தி வந்தீக என்ற பாடல் பிடித்துவிட்டது. செக்ஸியாக இருப்பதாக தோன்றுகிறது. இங்கே செக்ஸி என்று குறிப்பிடுவது செளந்தர்யாவையோ அவருடைய தொப்புளையோ அல்ல. ஹரிணியின் குரலையும், சிணுங்கல்களையும் தான்...! கேட்டுப் பாருங்கள்.


அடுத்து வருவது: வேலைக்கார நாயி...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 March 2014

வாசித்தவை – 3

அன்புள்ள வலைப்பூவிற்கு,


பத்து செகண்ட் முத்தம்
ரசி என்கிற தமிழரசி ஒரு ஓட்டப்பந்தயக்காரி. நூறு மீ தூரத்தை 9.58 நொடிகளில் கடந்திருப்பது தற்போதைய உலக சாதனை. செய்திருப்பவர் உசேன் போல்ட். பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் ஃப்ளாரென்ஸின் 10.49 உலக சாதனை. பெண்கள் யாரும் பத்து நொடிக்கு குறைவான நேரத்தில் ஓடியதில்லை. அதுதான் நாயகி ரசியின் லட்சியமாக இருக்கிறது. அவளுடைய மாமனும் பயிற்சியாளருமான ராஜ் மோகன் அவளை அப்படித்தான் வளர்த்திருக்கிறான். அதற்காக சராசரி பதின்பருவ பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய சந்தோஷங்களை எல்லாம் பறித்து வைத்திருக்கிறான். ஒரு கட்டத்தில் காதல் ரசியின் லட்சியத்திலிருந்து அவளை திசை மாற வைக்கிறது. பத்து செகண்ட் முத்தத்தை பூர்த்தி செய்தாளா ரசி...?

சுமார் நூறு பக்கங்கள் கொண்ட சிறிய நாவல்தான். நாவல் முழுக்க ரசிக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பு தொற்றிக்கொண்டே வருகிறது. இங்க்லீஷ்காரன் என்ற திரைப்படத்தில் வரும் சத்யராஜ், நமீதா பகுதி கிளைக்கதையை ப.செ.மு.விலிருந்து உருவியிருக்கக்கூடும். ரசி க்ளைமாக்ஸில் திருந்தும் வில்லன் போல கடைசி பக்கத்தில் திருந்துவது அப்படி ஒன்றும் ஏற்புடையதாக இல்லை.

பத்து செகண்ட் முத்தம் – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.80 – ஆன்லைனில் வாங்க

காதல் விதிகள்
ரிச்சர்ட் டெம்ப்ளர் என்னும் மேலை நாட்டு எழுத்தாளர் வேலை விதிகள், காதல் விதிகள், செல்வம் சேர்க்கும் விதிகள் போன்ற தலைப்புகள் உட்பட சில சுயமுன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றை கிழக்கு மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. அந்த நூல்களை எப்போதோ ஒரு சமயம் ஆர்வக்கோளாரில் வாங்கி வைத்திருந்தேன். அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒரு கிளான்ஸ் புரட்டிப் பார்த்தேன். மொழிபெயர்ப்பு என்பதாலேயே இருபது பக்கங்களை தாண்ட முடியவில்லை. யோகா சாமியார்களை போல பொத்தாம் பொதுவாக காதலுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

உண்மையில் காதல் என்பதற்கு பொதுவான விதிகள் எல்லாம் வகுக்க முடியாது என்பது என்னுடைய அபிப்ராயம். அது ஒரு கஸ்டமைஸ்ட் உணர்வு. காதலிப்பவர், காதலிக்கப்படுபவர், அவர்களுடைய பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகளை பொறுத்து காதலின் தன்மையும் அதற்கான விதிகளும் வேறுபடுகின்றன.

காதல் விதிகள் - ரிச்சர்ட் டெம்ப்ளர் - கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

கிளியோபாட்ரா
நான் அபுனைவு புத்தகங்களை அவ்வளவாக விரும்புவது கிடையாது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. பத்து பக்கங்களை தாண்டுவதற்குள் நித்திராதேவி வந்து என்னை கட்டி அணைத்துக் கொள்வாள். ஆனால் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் என்றால் ஒரு ஆர்வக்கோளாரில் வாங்கிவிடுவேன். குறிப்பாக அய்யா இன்போஸிஸ் நாராயணமூர்த்தி, தோழர் அனில் அம்பானி, பில் கேட்ஸு போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களின் அட்டையை பார்த்தாலே எனக்கு நரம்பெல்லாம் புடைத்துக் கொள்ளும். வாங்கி அடுத்தநாளே படித்து கிழித்து அவர்களைப் போலவே பெரிய ஆட்களாகி விட வேண்டுமென்ற உத்வேகம். ஆனால் வாங்கியபிறகு அவற்றை பிரித்து அரை பக்கம் கூட படித்ததில்லை.

கிளியோபாட்ரா அப்படியில்லை. சிறுவயதிலிருந்தே கிளியோபாட்ரா என்றால் ஒரு மதிமயக்கம். இருப்பினும் ஆங்காங்கே படித்த செய்தி துணுக்குகளை தவிர கிளியோபாட்ரா பற்றிய நூல்களை படித்தோ, திரைப்படங்களை பார்த்ததோ இல்லை. சில மாதங்களுக்கு முன்பு சீமாட்டி வெலிங்கடன் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சியின் போது கிழக்கு வெளியீடான கிளியோபாட்ராவை வாங்கியிருந்தேன்.

முதல் இரண்டு அத்தியாயங்கள் முறையே ஒன்றாம், பன்னிரண்டாம் டாலெமிகளைப் பற்றி சொல்கிறது. அதன்பின் கிளியோபாட்ரா அறிமுகமாகி நூல் பிடித்தாற்போல அவருடைய மரணம் வரை செல்கிறது. ரோமப் பேரரசுகளான ஜூலியஸ் சீசரையும், மார்க் ஆண்டனியையும் காதலில் வீழித்தியவள். நிச்சயம் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டியது கிளியோபாட்ராவின் வரலாறு...!

கிளியோபாட்ரா – முகில் – கிழக்கு பதிப்பகம் – ரூ.150 – ஆன்லைனில் வாங்க

60 அமெரிக்க நாட்கள்
சுஜாதா மூன்றாவது முறையாக அமெரிக்க சென்றபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பை படித்துவிட்டு வழக்கமான பயணக்கட்டுரைகள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். ஒருவகையில் பயணக்கட்டுரை தான். ஆனால் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றியோ டிஸ்னிலேன்ட் சென்றுவந்த அனுபவத்தையோ எழுதிவிடவில்லை. 

பொதுவாக அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறையையும் அங்கே குடிபெயர்ந்த இந்தியர்களின் நிலையையும் அலசுகிறது நூல். தவிர அமெரிக்க அரசியல், தொழில்நுட்பம் என்று ஏனைய விஷயங்களையும் எழுதியிருக்கிறார். இறுதியில் முத்தாய்ப்பாக அமெரிக்காவில் குடிபெயர விரும்பும் இந்தியர்களுக்கு சில அறிவுரைகள் சொல்லியிருக்கிறார். எப்போதோ எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை தற்சமயம் படிக்கும்போது சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்றே தோன்றுகிறது.

60 அமெரிக்க நாட்கள் – சுஜாதா – உயிர்மை – ரூ.65 – ஆன்லைனில் வாங்க

மனிதனும் மர்மங்களும்
ஆவிகள், பறக்கும் தட்டுகள், வேற்றுகிரக வாசிகள், இன்னபிற ஆமானுஷ்யங்களை பற்றி எழுதியிருக்கிறார் மதன். ஆரம்பத்தில் இதையெல்லாம் உண்மையிலேயே மதன் தான் எழுதினாரா சுத்த பேத்தலாக இருக்கிறதே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புத்தகம் தனக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது.

குறிப்பாக, மார்கன் ராபர்ட்ஸன் பற்றிய தகவல். அவர் ஒரு எழுத்தாளர். 1898ல் கப்பல் விபத்து சம்பந்தமாக கற்பனையாக ஒரு நாவல் எழுதியிருக்கிறார், கற்பனை கப்பலின் பெயர் டைட்டன். அவர் எழுதிய பல விஷயங்கள் 1912ல் விபத்தை சந்தித்த டைட்டானிக்குடன் ஒத்துப்போகிறது. இறுதியில், வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்து மனிதனின் விந்தணு, கருமுட்டை மாதிரிகளை சேகரித்து செல்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

எனினும் இவற்றையெல்லாம் மதன் புனைவாக எழுதியிருந்தால் பட்டைய கெளப்பியிருக்கும் என்பது என் எண்ணம்...!

மனிதனும் மர்மங்களும் – மதன் – கிழக்கு பதிப்பகம் – ரூ.140 – ஆன்லைனில் வாங்க

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 March 2014

ஆப்ரா கா டாப்ரா !


Post Comment

5 March 2014

வா நீ கபூர் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவில் அவ்வப்போது வட பாவ் நடிகைகள் தோன்றுவதுண்டு. ஏன் உலக அழகிகளையும், பிரபஞ்ச அழகிகளைக் கூட தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. அவர்களில் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் தவிர்த்து வேறு யாரும் தமிழர்களை அவ்வளவாக ஈர்த்ததில்லை. லாரா தத்தா, யுக்தா முகி போன்றவர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் விஜய் நடிப்பில் தமிழன் என்ற படம் வெளிவந்திருந்தது. எனது சமூக அறிவியல் ஆசிரியை என்ன காரணத்திற்காகவோ அதனை பார்த்திருக்கிறார். மறுநாள் வகுப்புக்கு வந்து மாணவர்களிடம் புலம்பித் தீர்த்துவிட்டார். யாரு அவளையெல்லாம் உலக அழகியாக தேர்ந்தெடுத்தது என்று அறச்சீற்றம் கொண்டவரை அமைதிப்படுத்தவே சிரமப்பட்டுவிட்டோம். அந்த நடிகையின் பெயர் ப்ரியங்கா சோப்ரா. எனக்கு ப்ரியங்கா சோப்ராவின் மேல் உதடுகளை பார்க்கும் போதெல்லாம் மேற்கிந்திய தீவு பந்து வீச்சாளர் கர்ட்லி அம்ப்ரோஸ் நினைவுக்கு வருவார். ஆனால் பாருங்கள் ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் சக்கை போடு போட்டார். அவருடைய கோரமான பல்வரிசையை நீயா நானா ஆசாமிகள் வர்ணிக்கிறார்கள். அதுபோல வித்யா பாலன் என்று தமிழில் அக்கா, அண்ணி கதாபாத்திர முக அமைப்பு கொண்ட ஒருவர் அங்கே சென்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். ஹிந்திவாலாக்களின் ரசனையை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம். இப்படி அவ்வப்போது பாலிவுட் சீமாட்டிகள் தமிழில் தலை காட்டுகிறார்கள் இல்லையா...? பாட்டியாவையும், அகர்வால்களையும் கணக்கில் கொள்ள வேண்டாம். அவர்களெல்லாம் தமிழர்களாக இனம் மாறிவிட்டார்கள். அவர்கள் தவிர்த்து, மாற்றான் படத்தில் இஷா ஷெர்வானி வந்து ஒரு ஆட்டம் போட்டு பார்த்தார். பில்லாவில் ப்ரூனா அப்துல்லா வந்தார். ம்ஹூம் யாரும் தேறவில்லை. திடீரென தற்சமயம் யாரோ வாணி கபூராம். சில வாரங்களாகவே அவரைப் பற்றிய விளம்பரங்கள் தூள் பரத்துகின்றன. பண்பலையில் வந்து பேசுகிறார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார், தமிழ் கற்றுக்கொள்ள போகிறேன் என்றெல்லாம் பேட்டி கொடுக்கிறார். என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை..? ஒருநாள் கூத்துக்கு ஏனய்யா வேக்ஸிங் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். பின்னே, ஏதோ ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார். அடுத்து குட்டிக்கர்ணம் அடித்தாலும் தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காது. ஏன் சிரமப்பட்டு தமிழெல்லாம் கற்றுக்கொள்கிறார் என்று வருத்தப்பட்டேன்.

என் எண்ணம் அவ்வாறாக இருந்தமைக்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. வாணி கபூரின் கன்னங்கள். உட்புறமாக ஒடுங்கியிருந்த கன்னங்கள். தாமரைக் கன்னங்கள் என்று கதாநாயகியை வருணித்து மகிழ்ச்சியுறும் மக்கள் எப்படி வாணி கபூரை ஏற்றுக்கொள்வார்கள் என்பதே என் ஐயப்பாடு. எனினும், பிற்பாடு ஒரு விஷயத்தை தெரிந்துக்கொண்டேன். வாணியிடம் உள்ள பாகங்களில் கன்னங்களை தவிர வேறெதுவும் ஒடுங்கியிருக்கவில்லை.

வாணி கபூருடைய தாயார் கருவுற்றிருந்த சமயம் குங்குமப்பூவை கிலோ கணக்கில் சாப்பிட்டிருக்கக்கூடும். சும்மா செக்கச் செவேலென கோயமுத்தூர் கொய்யா போல இருக்கிறார். உயரத்தில் அனுஷ்காவை விட ரெண்டு இன்ச் தான் குறைவாக இருப்பார். தலப்பாக்கட்டியை நினைவூட்டுகிறது வாணியுடைய வாளிப்பான கால்கள். டெல்லியில் பிறந்து, வளர்ந்து, இந்திரா காந்தி பல்கலையில் சுற்றுலா மேலாண்மை படித்த வாணி, தன்னைப் பற்றி தமிழகத்திலுள்ள உள்ள ஒரு வலைப்பதிவர் வர்ணித்து எழுதுவார் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். யாஷ் சோப்ரா என்று மும்பையில் ஒரு பெருந்தலை. தமிழ் சினிமாவில் ஏ.வி.மெய்யப்பர் போல ஒரு மரியாதைக்குரிய பெரியவர் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய மகனான ஆதித்யா சோப்ரா தான் வாணி முத்துவை தமிழ் சினிமாவிற்கு கொணர்ந்திருக்கிறார். மொத்தமாக மூன்று படங்கள் நடித்துத்தர வேண்டுமென வாணியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் ஆதித்யா. அந்த சமயமாக பார்த்து கோலிவுட்டில் கால் பதிக்க ஆதித்யா சோப்ரா விரும்பியது நம்முடைய நற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ் படங்களில் அதிகபட்சமாக எத்தனை உதட்டு முத்த காட்சிகளை பார்த்திருப்பீர்கள்...? அவற்றில் பெரும்பாலானவை பொடனியில் கேமரா வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அப்படியெல்லாம் இல்லாமல் நிறுத்தி நிதானமாக கோன் ஐஸ் சாப்பிடுவது போன்ற முத்தத்தை பார்த்திருக்கிறீர்களா...? நியாயமாக தமிழ் சினிமா நடிகைகள் வாணிக்கு பாத பூஜை செய்துவிட வேண்டும். சிலர் ஆஹா கல்யாணத்தில் இடம்பெற்ற உதட்டு முத்த காட்சியையே ஆஹா ஓஹோ என்கிறார்கள். அவர்கள் அம்மணி ஷுத் தேசியில் சுஷாந்த் சிங்கிற்கு அடித்த கிஸ்ஸை பார்த்திருக்க வேண்டும். ஆஹா கல்யாணத்தில் பன்ச் சாங் என்று ஒன்று வருகிறது பாருங்கள். பஞ்சு நெஞ்சு கொண்டவர்கள் தாங்க மாட்டார்கள். இடுப்பு விஷயத்தில் தமிழர்களுக்கு நன்றாகவே இறக்கம் காட்டியிருக்கிறார்.

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் சார்பாக ஏதோ மூன்று பட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பேசிக்கொள்கிறார்கள். ம்ஹூம். அடுத்து தமிழ் சினிமா நாயகர்களுடன் ஒரு வலம் வந்து கடைசியாக கமலுடன் ஜோடி சேருவது வரை வாணியை நாங்கள் விடுவதாக இல்லை. வேண்டுமானால் ஆதித்யா சோப்ராவை தமிழில் படம் எடுத்துக்கொள்ள சொல்லுங்கள்.

தொடர்புடைய சுட்டி: தன்வி வியாஸ்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 March 2014

பிரபா ஒயின்ஷாப் – 03032014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

Such an eventful weekend...!

நீண்ட நாட்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் மெரினா மகிழ்ச்சிக்கு பல வாயில்கள் கொண்ட ஒரு வீடு. கடலலையில் கால் நனைக்கலாம், மணலில் காலாற நடக்கலாம், மல்லாக்க படுத்துக்கொண்டு அண்டவெளியை வேடிக்கை பார்க்கலாம், சைட் அடிக்கலாம் அல்லது அமைதியாக ஏதேனும் ஒரு கல்லிருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். நான் கடைசி வாசலை தேர்ந்தெடுத்தேன். கடற்கரையில் காக்கைகள் அராஜகம் செய்கின்றன. எனக்கு சில அடிகள் தள்ளி ஒரு எளியவர் அமர்ந்து உணவு பொட்டலத்தை பிரித்தார். சரியாக பத்து நொடிகள் ஆகியிருக்கும், எங்கிருந்தோ பத்து, பன்னிரண்டு காக்கைகள் வந்து அவரை சூழ்ந்துகொண்டன. நானாக இருந்தால் சோத்துப்பொட்டலத்தை போட்டுவிட்டு ஓடியே போயிருப்பேன். அந்த மனிதருக்கு அது வழக்கம் போல. அவர் பாட்டுக்கு அசராமல் சாப்பிட்டு முடித்தார். அதுவுமில்லாமல் காக்கைகள் மிகத் தாழ்வாக பறக்கின்றன. என் தலைக்கு மிக மிக அருகில் சில காகங்கள் பறப்பதும், நான் பயந்துபோய் குனிந்துகொள்வதும், அப்புறம் யாராவது பார்த்திருப்பார்களோ என்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அசடு வழிவதாகவோ பொழுது போனது.

புகைப்படம்: தி ஹிந்து
காக்கைகள் என்றதும் நினைவுக்கு வருகிறது. எனக்கு சில மூடநம்பிக்கைகள் உள்ளன. ஆனால் எனக்கோ மற்றவர்களுக்கோ எந்த தொந்தரவும் தராதவை. சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஒருமுறை தலையில் முட்டினால் கொம்பு முளைத்துவிடும் என்று ஜெனிலியா நம்புவார். ஜெயம் ரவி நீ இதையெல்லாமா நம்புற...? என்று கேட்கும்போது நல்லா இருக்குல்ல என்று சிரித்தபடி பதிலளிப்பார் ஜெனிலியா. அதுபோல தான் எனக்கு சில நம்பிக்கைகள். விஷயம் இதுதான். தினமும் காலையில் எங்கள் வீட்டு வாசலில் ஒரு குறிப்பிட்ட காகம் வந்து கரைகிறது. உடனே தாத்தா வந்துவிட்டார் என்று அதற்கு கொஞ்சம் உணவுப்பொருள் வைப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த காக்காவும் சளைத்ததில்லை. உப்புமாவோ, வெண் பொங்கலோ வைத்தால் சீண்டாது. உணவை எடுத்துக்கொண்டு போய் வைக்க தாமதமானாலும் விடாமல் கரைந்து கொண்டிருக்கும். அதுவும் அசாதாரண குரலில். ஏதோ சுனாமி வரப்போகிறது என்று எச்சரிப்பது போல இருக்கும். என்றோ ஒருநாள் அந்த காக்கைக்கு உணவளித்து அது தினமும் வந்து பழகியிருக்கக்கூடும். அல்லது உண்மையாகவே மறைந்த முன்னோர்கள் காக்கைகளாக உரு பெறுகிறார்களோ என்னவோ...?

அப்படி அவர்கள் காக்கைகளாக உருப்பெறும் பட்சத்தில் அவர்களுடைய வாழ்நாள் எவ்வளவாக இருக்கும் என்று தேடினேன். காக்கைகளை நாம் ஆங்கிலத்தில் Crow என்று அழைத்தாலும் அவற்றிற்கு Raven என்ற பெயரும் உண்டு. காக்கைகளில் பல இனங்கள் இருக்கின்றன. பொதுவாக காக்கைகள் இருபது வயது வரை வாழ்கின்றன. அதாவது உருமாறும் நமது மூதாதையர்களின் வாழ்நாள் இருபது வருடங்கள். அதன்பிறகு அவர்கள் என்னவாக ஆகிறார்கள் என்று யாராவது கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதிகபட்சமாக ஒரு காக்கை 59 வயது வரை வாழ்ந்திருப்பதாக நம்பப்படுகிறது. டாட்டா என்று பெயரிடப்பட்ட அந்த காக்கை ஒரு செல்லபிராணியாக வீடுகளில் வளர்ந்திருக்கிறது. ஒருவேளை அதனை அதிக கவனம் செலுத்தி வீட்டுச்சூழலில் வளர்த்தமையால் கூட அத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்கலாம். இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. டாட்டாவை விட வேறு எந்த காக்கையும் அதிக ஆண்டுகள் வாழ்ந்ததில்லை என்று எப்படி சொல்ல முடியும். உலகில் உள்ள எல்லா காக்கைகளின் வயதையும் சென்சஸ் அதிகாரிகள் கணக்கெடுத்து வைத்திருக்கிறார்களா என்ன...?

சரி, காகங்கள் பற்றிய கரைதலை நிறுத்திக்கொள்வோம். நேற்று காலை ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. நண்பர் அருள் செல்வன் அவருடைய குறும்பட ஷூட்டிங்கை பார்ப்பதற்கு அழைத்திருந்தார். வெட்டி ப்ளாக்கர்ஸ் சிறுகதை போட்டியில் ரஜினியிசம் என்ற சிறுகதை நிறைய பேருடைய நினைவிலிருக்கும். அதை எழுதியவர் தான் இந்த அருள் செல்வன். ஏற்கனவே சொம்பு, மொக்கை பையன் சார் உட்பட ஐந்தாறு குறும்படங்களில் பணியாற்றியிருக்கிறார். எல்லாமே சராசரிக்கு மேல் என்று சொல்லக்கூடிய அளவில் இருந்தன. அவற்றில் சொம்பு என் விருப்பதிற்குகந்தது. எல்லா படங்களையும் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். தற்சமயம் H2SO4, பொண்ணு ஒன்னு கிடைக்கல என்று இரு குறும்படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு உற்சாகமான அணியையும் தன்னகத்தே வைத்திருக்கிறார் அருள். பெங்களூரில் ஒரு உலக பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணனுக்கு நடிப்பதில் பேரார்வம். அருளுக்காக பெங்களூரிலிருந்து சென்னை வந்து நடித்து கொடுத்துவிட்டு செல்கிறார். கிட்டத்தட்ட அருளின் எல்லா படங்களிலும் கிருஷ்ணன் நடித்திருக்கிறார். எந்த வேடம் கொடுத்தாலும் இயல்பாக நடித்துவிடுகிறார். இந்தமுறை அருள் செல்வன் குழுவினர் நாளைய இயக்குநரில் பங்குபெற இருப்பதாக ஒரு தகவல் காதில் விழுந்தது. அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்...!

பார்க்க: சொம்பு

அங்கிருந்து மதிய உணவிற்கு அண்ணா நகர் ஸீ ஷெல்ஸுக்கு அழைத்துச் சென்றார் அஞ்சாசிங்கம். ஏதோ மட்டன் ரான் பிரியாணி என்று சொல்லிக்கொண்டிருந்தார். நான் கூட ஆட்டுத்தொடையை அப்படியே கொண்டு வந்து வைப்பார்கள் போல என்று நம்பிக்கொண்டிருந்தேன். வண்ணமயமான உணவகம். ஏராளமான மேட்டுக்குடி யுவதிகளும், சீமாட்டிகளும் சில தடிமாடுகளுடன் வந்து செல்கிறார்கள். கைகளை கழுவிவிட்டு வருவதற்குள் சைட்டடிக்க தோதான இடத்தில் அமர்ந்துகொண்டார் சிவக்குமார். சரி, வளர்ற பிள்ளையாச்சே’ன்னு விட்டுத்தர வேண்டியதாக போய்விட்டது. கேபிள், கே.ஆர்.பி, பிரபு கிருஷ்ணா ஆகியோரை நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆரூர் மூனாவும் வந்திருந்தார். பிரியாணி வெகு சுமார். பில்லுக்கு பணம் செலுத்திய அஞ்சாசிங்கத்துக்கு என்னுடைய அனுதாபங்கள்.

முந்தய பத்தி எங்கு போய் முடியும் என யூகித்திருப்பீர்கள். வேறென்ன, கழுதை கெட்டா குட்டிச்சுவரு. ஆனால் மது பழக்கத்தை நிறுத்தியபிறகு மற்றவர்கள் மது அருந்துவதை வேடிக்கை பார்ப்பது துயரமாக இருக்கிறது. அதிலும் ஒருத்தர் குரியர் நெப்போலியனுக்கு பக்க வாத்தியமாக வெண்ணிலா ஐஸ்க்ரீமை சுவைக்கிறார். என்ன கருமம்டா...! போனதற்கு உருப்படியாக ஆரூராரிடமிருந்து ராஜீவ்காந்தி சாலை, உப்புநாய்கள், மரபல்லி ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறேன்.

சமீபத்தில் எழுதியது: தெகிடி

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment