அன்புள்ள நிலாவுக்கு,
01/01/2015
உன் அம்மா நீ கருவில் இருக்கும்போதே உனக்காக எழுதத் துவங்கிவிட்டாள்.
நான் இன்றிலிருந்து துவங்குகிறேன். வருடங்கள் பல கழித்து நீ இதை படிக்கும்போது
மனம் மகிழ்வாய் என்று நம்புகிறேன்.
04/01/2015
இன்று மாலை முதன்முறையாக நீ குப்புற திரும்பி படுத்தாய். உன்
அம்மாதான் முதலில் பார்த்து குதூகலித்தாள். துரிதமாக கேமராவை எடுத்து உன்னை சில
புகைப்படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன்.
01/03//2015
நீ, நான், அம்மா மூவரும் வடிவுடையம்மன் கோவிலுக்கு சென்றோம். உன்
அம்மா உன்னை கடவுள் நம்பிக்கையுள்ளவளாக வளர்க்க அவளாலான எல்லா முயற்சிகளையும்
எடுத்து வருகிறாள். எனக்கு உன் மீது நம்பிக்கை இருக்கிறது.
06/04/2015
விடுமுறை நாட்களில் நீயும் அப்பாவும் நெருக்கமாகி விட்டோம். நீ
அப்பாவைக் கண்டாலே உற்சாகமாக சிரிக்கிறாய். நாளை அலுவலகத்தில் அப்பா உன்னை மிஸ்
பண்ணப் போகிறேன்.
நீ வளர்ந்தபிறகு நாமிருவரும் சத்யதேவையும் ஈஷாவையும் போல ஒரு நீண்ட
பயணம் போக வேண்டும்.
15/04/2015
இன்று நாமெல்லாம் குயின்ஸ்லேண்ட் சென்றோம். உன்னை மோஷன்
ஸ்டிமுலேட்டரில் அழைத்துச் சென்றோம். இரண்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை
மட்டும்தான் அனுமதிப்போம் என்றார் ஆபரேட்டர். அதையும் மீறி உன்னை தூக்கிக் கொண்டு
போனோம். நல்லவேளையாக ரைட் மொக்கையாக இருந்தது. நீ தூங்கிவிட்டாய்.
25/04/2015
நீ இப்பொழுதெல்லாம் அதிகம் அடம் பிடிக்கிறாய். குறிப்பாக உன் கையில்
உள்ள பொருட்களை வாங்கினால். இன்றைய தேதியில் உனக்கு பிடித்த பொருட்கள்: பிளாஸ்டிக்
கவர், நியூஸ் பேப்பர், டிவி / ஏசி ரிமோட்.
06/05/2015
அப்பா கார் வாங்கியிருக்கிறேன். செகண்ட் ஹேன்ட் தான். அப்பா இன்னும்
முழுமையாக காரோட்ட கற்றுக்கொள்ளவில்லை என்பதால் அசோக் மாமாதான் வீடு வரைக்கும்
காரோட்டி வந்தார். நாமெல்லாம் காரில் ஒரு சுற்று போய்விட்டு வந்தோம்.
24/05/2015
நீயும், நானும், அம்மாவும் இன்று ஷாப்பிங் போனோம். அங்கே பதின்ம வயது
பெண்ணொருத்தி உன்னையே சுற்றிச்சுற்றி வந்தாள். அழகாக இருந்தாள். அவளையும் அவளுடைய
அப்பாவையும் பார்க்கும்போது உன்னையும் என்னையும் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு
பார்ப்பது போல இருந்தது. ஒரே ஒரு வித்தியாசம். அவளுடைய அப்பா ஸ்கூட்டர் ஓட்டினார்.
01/07/2015
இன்று அப்பா வீட்டில் இல்லாதபோது நீ அம்மாவை கன்னம் கிள்ளி கொஞ்சினாயாம். உன் அம்மா அதனை ஒரு பெரிய விஷயமாக சொல்லி மகிழ்வுற்றாள். பாவம், நீயும் நானும் செய்துகொள்ளும் ரகசிய கொஞ்சல்கள் உன் அம்மாவுக்கு தெரியாது.
இன்று அப்பா வீட்டில் இல்லாதபோது நீ அம்மாவை கன்னம் கிள்ளி கொஞ்சினாயாம். உன் அம்மா அதனை ஒரு பெரிய விஷயமாக சொல்லி மகிழ்வுற்றாள். பாவம், நீயும் நானும் செய்துகொள்ளும் ரகசிய கொஞ்சல்கள் உன் அம்மாவுக்கு தெரியாது.
14/07/2015
சமீப நாட்களாக நீ ரைம்ஸ் பார்க்கத் துவங்கியிருக்கிறாய். தற்போது
உனக்கு விருப்பமான ரைம்ஸ் சில :- Baa Baa Black Sheep, Machli Jal Ki Rani, குள்ள
குள்ள வாத்து.
25/07/2015
உன்னை முதன்முறையாக திரையரங்கிற்கு அழைத்துச் சென்றோம். படம்:
பாகுபலி. படம் துவங்கியதும் DTS ஒலியமைப்பின் காரணமாக நீ பயப்பட துவங்கிவிட்டாய்.
அம்மா உன் காதுகளை மூடி உன்னை அணைத்துக்கொண்டாள். இடைவேளை வரை நீ நன்றாக
தூங்கிவிட்டாய். அதன்பிறகு நீ பழகிவிட்டாய் என்று நினைக்கிறேன். பயப்படாமல் படம்
பார்க்கத் துவங்கிவிட்டாய்.
21/08/2015
அப்பா உனக்காக ஜப்பானிலிருந்து திரும்பிய நண்பன் மூலமாக ஜப்பானிய
பாரம்பரிய உடையான Yukata Set வாங்கியிருக்கிறேன். மூன்று வயதுக்கான உடை என்பதால்
இப்போதைக்கு நீ அணிய முடியாது. பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறோம்.
நீ சோபாவையோ கட்டிலையோ அல்லது சுவரையோ பிடித்து எழுந்து நிற்க
முயல்கிறாய், விரும்புகிறாய். நிற்கவும், நடக்கவும் துவங்கிவிட்டால் உன் சேட்டைகள்
அதிகமாகும் என்று பயமாகவும் ஆசையாகவும் இருக்கிறது.
22/08/2015
உன்னுடைய பாட்டிம்மா (அப்பாவின் அய்யம்மா) இன்று மாலை 3:30 மணியளவில்
இறந்துவிட்டார்.
உனக்கு பாட்டிம்மாவை ஞாபகம் இருப்பது கஷ்டம்தான். பாட்டிம்மாவுக்கு
கடைசி காலத்தில் சாப்பாடு ஊட்டி விடும்போது நீ ஆச்சரியமாகவும் ஆசையாகவும்
பார்ப்பாய். உன்னை பார்க்கும்போதெல்லாம் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்துக்
கொள்வார் பாட்டிம்மா.
07/10/2015
உன்னுடைய பிறந்தநாள் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அப்பா
உன்னுடைய நூற்றுக்கணக்கான புகைப்படங்களை வைத்து இரண்டு Collage
உருவாக்கியிருக்கிறேன். அவற்றை உன் பிறந்தநாள் விழா அரங்கில் டிஸ்ப்ளே செய்வதாக
திட்டம்.
24/10/2015
நாமெல்லாம் ஜெயா பெரியம்மாவின் திருமணத்திற்காக மதுரை
வந்திருக்கிறோம்.
மாலையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றோம். நீ கோவிலில் உள்ள
விளக்குகளுக்கு அருகிலேயே நிற்க வேண்டுமென அடம் பிடித்தாய். அம்மா உனக்கு
குங்குமம் வைத்து விட்டதை அப்சர்வ் செய்து நீயும் எங்களுக்கு அதே போல
வைத்துவிட்டாய்.
14/11/2015
ஊரில் இருந்து கிச்சு பெரியம்மா குடும்பத்துடன் வந்திருக்கிறார்.
நாமெல்லாம் சேர்ந்து சினிமாவுக்கு போனோம். படம்: தூங்காவனம், தேவி திரையரங்கம்.
திரையரங்கிற்குள் சென்றதும் நீ கொஞ்சம் மிரண்டு போய்விட்டாய். அப்பா கூட
முதன்முறையாக தேவி திரையரங்கம் சென்றபோது அதன் பரந்துவிரிந்த திரையைப் பார்த்து
மிரண்டேன்.
17/12/2015
நீயும் நானும் அம்மாவும் இன்று மெரீனா கடற்கரைக்கு சென்றோம். உன்னை
கடற்கரைக்கு அழைத்துச் செல்வது இதுவே முதல்முறை. நானும் அம்மாவும் காதலர்களாக
மெரினாவுக்கு வந்திருக்கிறோம். கணவன் – மனைவியாக வந்திருக்கிறோம். முதன்முறையாக
அப்பா – அம்மாவாக வருகிறோம்.
23/12/2015
நீ இப்போது சில எளிய வார்த்தைகளை பேச கற்றுக்கொண்டாய். Duck என்கிறாய்.
Bat என்கிறாய். டாய் பாக்ஸில் இருந்து பொருளின் பெயரைச் சொல்லி எடுக்கச் சொன்னால்
சரியாக எடுக்கிறாய்.
அம்மா உனக்கு குப்பைகளை குப்பைத்தொட்டியில் கொண்டு போய் போட சொல்லிக் கொடுத்திருக்கிறாள்.
எதையாவது கொடுத்து குப்பைத்தொட்டியில் போடச் சொன்னால் சரியாக போட்டுவிடுகிறாய். ஆனால்,
பவுடர் போட்டு முடித்ததும் பவுடர் டப்பாவை கொண்டு போய் குப்பையில் போடும்
சேட்டையெல்லாம் கூட செய்கிறாய்.
|