அன்புள்ள வலைப்பூவிற்கு,
சிறு வயதிலிருந்தே கப்பல்கள் மீது எனக்கு ஒரு ‘க்ரேஸ்’ உண்டு. நான்
அந்தமானுக்கு கப்பலில் செல்ல முடிவு செய்தபோது அனுபவஸ்தர்கள் எச்சரித்தார்கள். சில
மணிநேரங்களில் கப்பல் போரடித்துவிடும் என்றார்கள். அப்படியெல்லாம் நடக்காது என்று
நான் உறுதியாக நம்பினேன். யாருடைய பேச்சையும் கேட்காமல் கப்பலில் பயணித்தேன். கப்பல்
என்னை ஏமாற்றவில்லை. குறிப்பாக, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்துகொண்டு கையில் ஒரு
தம்முடன் நண்பர்களுடன் அரட்டை அடித்த அந்த இரண்டு நாட்களை நினைத்தால் இப்போதும் கூட இன்னொரு முறை கிடைக்காதா
ஏக்கமாக இருக்கிறது. முழுமையாக இரண்டரை தினங்கள் நம்மைச் சுற்றி வெறும் கடல்
மட்டும் என்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத பரவச அனுபவம்.
அப்போதிலிருந்தே கப்பல் மீதான எனது ஆவல் ஒரு சுற்று கூடுதலாகிவிட்டது.
பின்பொரு நாள் எதார்த்தமாக ஆயிரத்தில் ஒருவன் (புதியது) படம் பார்த்தபோது அதில்
இடம்பெற்ற கப்பல் நான் பயணம் செய்தது என்று நினைவுகூர்ந்து சிலாகித்துக்கொண்டேன்.
துப்பாக்கி க்ளைமாக்ஸ் நினைவிருக்கிறதா ? அது படமாக்கப்பட்ட கப்பலின் பெயர் சாகர்
சந்தானி. ஆராய்ச்சிக் கப்பல். சமீபத்தில் பார்த்த அனேகன் படத்தில் ஒரு கப்பல்
காட்சி வருகிறது. பக்கா இந்திய பயணிகள் கப்பல். பார்த்ததும் பரவசமாகி கப்பலின்
பெயரை திரையில் தேடினேன். நான் எதிர்பார்த்த கப்பல் இல்லை. கப்பலின் பெயர்
எஸ்.எஸ்.ரஜூலா. (உண்மையில் ரஜூலா கப்பல் தற்சமயம் அழிக்கப்பட்டுவிட்டது என்று
பின்னர் தெரிந்துக்கொண்டேன். எனவே படத்தில் இடம்பெற்றது என்ன கப்பல் என்று தரமான
பிரதி வந்ததும் கண்டுபிடிக்க வேண்டும்).
எஸ்.எஸ்.ரஜூலா. வரலாற்று சிறப்புமிக்க கப்பலாக இருக்கக்கூடும் என்று
நினைத்துக்கொண்டு தான் கூகுள் செய்தேன். அவ்விதமே. டாக்டர் எஸ்.ஜெயபாரதி என்கிற
பேராசிரியர் ரஜூலா கப்பலைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.
ரஜூலா கப்பல் 1923ம் ஆண்டு பார்க்லே நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. கப்பலின்
பெயரில் உள்ள எஸ்.எஸ் என்பது ஸ்டீம் ஷிப் (நீராவிக் கப்பல்) என்பதை குறிக்கிறது.
முந்தைய தலைமுறை மலேசிய / சிங்கை வாழ் இந்தியர்களுக்கு ரஜூலா கப்பலை
கண்டிப்பாக நினைவிருக்கும். சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வழியாக பர்மா,
பினாங்கு (மலேசியா), சிங்கப்பூர், அந்தமான், நிகோபர், இந்தோனேசியா பகுதிகளுக்கு
செல்லக்கூடிய பயணிகள் கப்பல். மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்
பாய்மரக்கப்பல்களில் பயணம் செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. பத்தொன்பதாம்
நூற்றாண்டின் இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட நீராவிக்கப்பல்கள் அறிமுகமாயின.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் லட்சக்கணக்கான கூலிகள் மலேசியா, சிங்கப்பூருக்கு
(அப்போது பிரிட்டிஷ் மலாயா) அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் போக்குவரத்துக்காக
ரஜூலா உட்பட சில கப்பல்கள் செயல்பட்டு வந்தன. இடைப்பட்ட இந்த காலகட்டத்தில்
கல்கத்தா இந்திய தலைநகராகவும், பர்மா பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு அங்கமாகவும்
செயல்பட்டு வந்தது.
தினசரி அலுவலகத்திற்கு பேருந்திலோ ரயிலிலோ பயணிப்பவர்கள் வாடிக்கையான
சக பயணிகளின் முகங்கள் பரிட்சயம் ஆகியிருக்கும் அல்லவா ? இதே போல கப்பலிலும்
ஒருவருக்கு ஒருவர் பரிட்சயமான பயணிகள் உண்டு என்றால் நம்ப முடிகிறதா ? கப்பலின்
கடைசி வகுப்பில் இதுபோன்ற வாடிக்கையான ஆசாமிகளை காண முடியும். பெரும்பாலும் வியாபாரிகளாக
இருப்பார்கள்.
இன்றைய இந்திய பயணிகள் கப்பல்களில் டீலக்ஸ், இரண்டாம், மூன்றாம்
மற்றும் பங்க் வகுப்புகள் உள்ளன. பங்க் என்பது ரயிலில் உள்ளது போல மூன்றடுக்கு
படுக்கைகள் கொண்ட ஒரு நீண்ட அறை. ரஜூலாவில் இவை தவிர்த்து ‘டெக்’ என்ற வகுப்பும்
இருந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட ரயிலில் உள்ள முன்பதிவு செய்யாதவர்களுக்கான
பகுதியைப் போன்றது. தனியாக இடம் ஒதுக்கப்பட மாட்டாது. சீக்கிரமாக ஏறி கிடைத்த
இடத்தில் படுத்துக்கொள்ள வேண்டியதுதான். இது குறித்து உற்சாகமாக குறிப்பிடுகிறார்
ஜெயபாரதி. அந்தக்கால திரையரங்குகளில் முக்கால்வாசி தரை டிக்கெட்டுதான், அப்புறம்
பெஞ்ச் வரிசைகள், கடைசியாக இருக்கைகள். இருக்கை ஆட்கள் எல்லாம் இறுக்கமாக அமர்ந்து
படம் பார்க்கும்போது தரை டிக்கெட் பகுதியில் கொண்டாட்ட மயமாக இருக்கும். அதுபோல டெக்கில்
பயணிப்பவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவும், வியாபாரிகளாகவும்
இருப்பார்கள். இவர்களுக்குள் பயண நேரத்திற்குள் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டு ஆடிப்
பாடிக்கொண்டு இருப்பார்களாம்.
ரஜூலா போக்குவரத்து காரணமாக நாகப்பட்டினத்தில் அந்திக்கடை என்ற சந்தை
பிரபலமாக இருந்தது. சென்னையின் பர்மா பஜார் போன்றது. சாக்லேட்டுகள், சிகரெட்டுகள்,
சிறிய ட்ரான்ஸிஸ்டர்கள் உட்பட நம்மவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் பல
வெளிநாட்டு பொருட்கள் அந்திக்கடையில் விற்பனையாகும்.
இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவை ஜப்பான் கைப்பற்றியது. அந்த
சமயத்தில் பர்மாவை மீட்கும் பொறுப்பு லார்ட் மவுண்ட் பேட்டனிடம்
ஒப்படைக்கப்பட்டது. அவர் தனது கடற்படைக்காக ரஜூலாவை பர்மாவிற்கு
வரவழைத்துக்கொண்டார். அது மருத்துவ கப்பலாக செயல்பட்டது.
ரஜூலாவை பழுதாகாத கப்பல் என்று அன்றைய காலகட்டத்தில் சொல்வார்கள்.
1966ல் ஏற்பட்ட புயலையும் பேரலைகளையும் தாக்கு பிடித்தது ரஜூலா. ‘ரங்கத்’ என்ற
பெயரில் சிலகாலம் ஓடிய ரஜூலா இறுதியாக 1974ம் ஆண்டு மஹாராஷ்திர கப்பல் உடைக்கும்
நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு உடைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.
அனேகன் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் காட்சி அது. மேலோட்டமாக
பார்த்தால், அந்த காட்சிக்கு கப்பலை பற்றிய டீடெயிலிங் தேவையே இல்லை. எனினும்,
ரஜூலாவையும், ரஜூலாவிற்கும் பர்மாவுக்கும் இடையேயான தொடர்பையும் நினைவுகூர்ந்து அதனை
காட்சிப்படுத்திய படக்குழுவினரை வியக்காமல் இருக்க முடியவில்லை.
உதவிய சுட்டிகள்:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|