வணக்கம் மக்களே...
உங்களுள் பலரது உயிரை காப்பாற்ற வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ஏன் உயிரையும் பொருட்படுத்தாமல், நண்பர்கள் பலரது எதிர்ப்பையும் மீறி, ஏன் தன்மானத்தை எல்லாம் இழந்து இந்தப் படத்தை முதல்நாள் முதல்காட்சி பார்த்துவிட்டு சுடச்சுட பதிவிடுகிறேன். எளிதாக டிக்கெட் கிடைத்து விடுமென்ற காரணத்தினால் அம்பத்தூர் ராக்கி திரையரங்கத்தை தேர்ந்தெடுத்தேன். நண்பர்கள் யாரும் தைரியமாக முன்வராததால் தனியாகவே சென்றேன். ரயில் பயனத்திலிருந்தே கல்லூரி மாணவர்கள் என்று சொல்லிக்கொண்ட சில கழிசடைகள் சுறா புராணம் பாடியபடி வந்தனர். தலைவலியோடு தான் திரையரங்கிற்கு சென்றேன்.
திரைக்கு முன்...
- இந்த பால் வடியும் முகத்தைப் பாருங்கள். (பேனரில் பீய்ச்சியடித்த பால்தான் முகத்தில் வடிகிறது). இந்த பச்சைமண்ணுக்கு என்னங்க தெரியும். ஐவரும் விஜய் ரசிகராம்...!
- திரையரங்கு வாசலில் ஒரு குழு பிச்சையெடுத்துக் கொண்டிருந்தது. அதுசரி, எங்கே கூட்டம் கூடுகிறதோ அங்கே தானே எடுக்க முடியும். அவர்களில் குறிப்பாக விஜய் பேனரை காட்டி, "இது எங்க அண்ணன் படம்" என்று சொல்லி பிச்சை எடுத்த பெண்ணின் யுக்தி எனக்கு பிடித்திருந்தது.
- மற்றுமொரு பேனரில் விஜய் ஹெலிகாப்டரில் இருந்து தலைமை செயலகத்தின் மொட்டைமாடியில் இறங்குவது போல கிராபிக்ஸ் செய்திருந்தார்கள். அப்படியே விஜய் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டிருந்தால் தேவலை என்று நினைத்துக்கொண்டேன்.
- நல்லவேளையாக திரையரங்கில் எனதருகில் அமர்ந்திருந்தவர் என் இனமாகவே இருந்தார். விஜய்யின் அறிமுகக் காட்சியில் நாங்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டோம்.
கதைச்சுருக்கம்
யாழ் நகர் என்ற மீனவ கிராமத்திற்கு அறிவிக்கப்படாத தலைவராகவும், அவங்க வீட்டு பிள்ளையாகவும் இருந்து வருகிறார் விஜய். அடிப்படை வசதிகள் கூட இல்லாத அந்த கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் கான்க்ரீட் வீடுகள் கட்டிகொடுக்க வேண்டுமென்பதே விஜய்யின் லட்சியம். (ரசிகர்களையெல்லாம் கிறுக்கனாக்குவது கூட விஜய்யின் லட்சியம்தான்... இருப்பினும் நான் சொல்வது கதையில் அவர்கொண்ட லட்சியத்தை பற்றி மட்டும்தான்). தீம் பார்க் கட்டுவதற்காக மீனவ கிராமத்தையே ஆட்டையை போட திட்டமிடுகிறார் வில்லன். விஜய் வில்லனின் திட்டத்தை முறியடித்தாரா...? தனது லட்சியத்தை நிறைவேற்றினார என்பதே மீதிக்கதை.
மீண்டும் விஜய் நடிப்பில் ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படம். "விஜய்க்கு என்ன ஆச்சு...?" என்று ஒட்டுமொத்த கிராமமே படபடத்துக்கொண்டிருக்கும்போது கடலுக்குள் இருந்து சுறாநீச்சல் போட்டபடி விஜய் அறிமுகமாகும் காட்சியிலிருந்தே அபத்தம் ஆரம்பித்துவிடுகிறது.
அடுத்தடுத்த காட்சிகளில் வரிசையாக வடிவேலு, தமனா, வில்லன் தேவ் கில் என்று என்று அறிமுகப் படலம். அல்லக்கையாக வந்து அடிவாங்கிக்கொண்டே இருக்கும் கேரக்டரில் வடிவேலு. பல இடங்களில் சலிப்பூட்டினாலும் சில இடங்களில் டைமிங்கில் பின்னி எடுக்கிறார்.
நாய்க்குட்டி காணாமல் போனதால் தற்கொலை முயற்சி செய்யும் தமனா, எப்போதும் போல தமிழ் சினிமாவின் லூசுப்பெண். நான்கு பாடல்களில் மட்டும் தோன்றியிருக்கிறார்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வில்லன் என்று வித்தியாசமே இல்லாத ஒரு வில்லனை அறிமுகப்படுத்துவார்கள். இதப் படத்திலும் அப்படித்தான்.
படத்தின் முதல்பாதி முடிவதற்குள் பலமுறை கைகடிகாரத்தைப் பார்த்துவிட்டேன். அப்படி ஒரு இழுவை. இரண்டாம் பாதி ஆரம்பித்தபிறகு லாஜிக்கெல்லாம் எதுவும் கிடையாது. தீயில் எரிந்தபிறகும் கூட விஜய் உயிருடன் வருகிறார்.
டாக்டர் விஜய்
முற்றிலும் மாறுபடாத கதாப்பாத்திரத்தில் விஜய். இந்தப் படத்தில் திடீரென சுயமரியாதை, தன்னம்பிக்கை, தமிழன் என்று என்னென்னவோ பிதற்றியிருக்கிறார். பல்லைப் பிரிக்காமல் பன்ச் டயலாக்குகள் பேசியபடி வருகிறார். போக்கிரியில் பார்த்த அதே அசால்ட் ஆறுமுகம். பட்டும்படாமலும் அரசியல் பேசியிருக்கிறார். ஆங்காங்கே சூப்பர்ஸ்டாரை இமிடேட் செய்ய முயன்றிருக்கிறார். சிலர் விஜய் காமெடி காட்சிகளில் சிறப்பாக நடிப்பதாக கூறுகின்றனர். என்னைப்பொறுத்தவரையில் விஜய் திரையில் தோன்றினாலே காமெடிதான்.
தங்கத்தாரகை தமனா
பூர்ணிமா என்னும் பணக்கார வீட்டுப்பெண் கேரக்டரில் தமனா. ஒரு கோடி கேட்ட தமனாவை தெருக்கோடியில் நிற்க வைத்துவிடுவார்கள் போல. பாடல் காட்சிகளிலாவது கொஞ்சம் காட்டியிருக்கலாம். (நடிப்பை சொன்னேங்க). புடவை கட்டிக்கொண்டு வரும் ஒரே ஒரு பிரேமில் மட்டும் அழகாக தெரிகிறார். இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை.
வைகைப்புயல் வடிவேலு
அம்ப்ரெல்லா எனும் கதாப்பாத்திரத்தில் விஜய்யின் எடுபிடியாக வடிவேலு. வடிவேலுவின் காமெடி, செய்ததையே செய்தது போல இருந்தாலும் விஜய்யின் தலைவலி காட்சிகளுக்கு மத்தியில் சற்றே ஆறுதல் தந்தது.
புதுமுக வில்லன் தேவ் கில்
வழக்கமான தமிழ் சினிமா வில்லன்தான். மந்திரியாக இருந்துக்கொண்டு அண்டர்கிரவுண்ட் வேலைகளில் ஈடுபடுகிறார். முதல் பாதியில் கொஞ்சமாக கவர்ந்தாலும் இரண்டாம் பாதியில் கத்தியே சாகிறார்.
மற்றும் பலர்
வில்லனின் கைக்கூலிகளாக ஸ்ரீமன், இளவரசு.ஸ்ரீமனுக்கு பார்த்து சலித்த பாத்திரம். மங்குனி அமைச்சர் இளவரசு வில்லனருகில் இருந்துக்கொண்டு அவ்வப்போது வசனங்களால் சேம் சைடு கோல் போட்டபடி வளம் வருகிறார். இது தவிர்த்து ராதா ரவி, மதன் பாப், யுவராணி, விஜய்யின் அம்மாவாக வரும் குணச்சித்திர நடிகை என்று பலர் நடித்திருந்தாலும் யாருக்கும் அதிக காட்சிகள் இல்லை.
பாடல்கள்
எப்போதும் விஜய் படத்தில் பாடல்களெல்லாம் ஹிட்டாகி விடும். இந்த முறை சன் பிக்சர்ஸ் என்பதால் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் பாடல்கள் எதுவும் மனதில் உட்காரவில்லை. தெலுங்கு பில்லாவில் இருந்து ஆட்டையை போட்ட "நான் நடந்தால் அதிரடி..." பாடலும் விஜய்யின் நடனமும் மட்டும் சூப்பர். "தஞ்சாவூர் ஜில்லாக்காரி..." பாடலில் "பொம்மாயி..." வரிகள் மட்டும் காதுகளில் குளிர்ந்தது. அனாலும் தமனாவின் டவுசரை விஜய் ஏற்றி ஏற்றி இறக்கியது அசிங்கமாக இருந்தது.
எனக்கு பிடித்த காட்சி:
விஜய் ஒரு காட்சியில் ராதா ரவியிடம் மீனவர்களின் வாழ்க்கை நிலை பற்றி சொல்வார். அந்தக் காட்சி உண்மையில் உருக்கமாக இருந்தது. இதே வசனத்தை வேறு எந்த நடிகராவது சொல்லியிருந்தால் கண்ணீர் கசிந்திருக்கும். விஜய் சொன்னதால் சிரிப்புதான் வந்தது. இருப்பினும் படத்தில் உருப்படியான ஒரு காட்சியென்று இந்தக் காட்சியை சொல்லலாம்.
தீர்ப்பு
எல்லோரும் சரியாக கதை கேட்பதில்லை என்று விஜய்க்கு அட்வைஸ் செய்துக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய கவலை, அட்வைஸ் எல்லாமே விஜய் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அறியாமைக்கூட்டத்திற்குத்தான். உங்கள் தறுதளபதியின் போதைக்கு நீங்கள் ஊறுகாயாக பயன்படுத்தப்படுகிறீர்கள். உங்களை உசுப்பேற்றி அந்த உஷ்ணத்தில் உங்கள் தலைவர் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார். இதை நீங்களெல்லாம் உணர்ந்துக்கொள்ளும் வரை உங்கள் தலைவன் திரையில் சொன்னது போல தமிழன் சுயமரியாதை இல்லாமல்தான் இருப்பான்.
என்றும் அன்புடன்,
N R PRABHAKARAN
|