அன்புள்ள வலைப்பூவிற்கு,
கடந்த இடுகை: வீரகனூர்பட்டி
சமணர் கோவில்
கொல்லிமலை ஒரு பேச்சுலர்’ஸ் பேரடைஸ் என்றுதான் சொல்லவேண்டும்.
கொல்லியில் நீங்கள் கோவில்களைத் தவிர மற்ற போக்கிடங்களுக்கு சென்றால் அங்கே
குழுவாக மது அருந்திக்கொண்டிருக்கும் ஆடவர்களை சாதாரணமாக பார்க்கலாம். மேலும்
ஆங்காங்கே காலி மது புட்டிகள் வீசப்பட்டிருக்கும். இதனாலும் வேறு சில
காரணங்களாலும் இங்கே குடும்பமாக அதிகம் பேர் செல்வதில்லை. செல்லக்கூடாது
என்றில்லை. சில கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொள்பவர்கள் செல்லலாம்.
எப்படி செல்வது...?
சென்னையிலிருந்து சுமார் 400 கி.மீ. பெங்களூரிலிருந்து சுமார் 300
கி.மீ. சொந்த வாகனத்தில் சென்றால் எட்டிலிருந்து ஒன்பது மணிநேரத்திற்குள்
சென்றுவிடலாம். சென்னையிலிருந்து செல்பவர்கள் செங்கல்பட்டு, திண்டிவனம்,
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ராசிபுரம் வழியாக செல்லலாம். ஒரு ஐம்பது
கி.மீ கூடுதலாக சுற்ற தயாராக உள்ளவர்கள் வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி
வழியாக வரலாம். இந்த வழியில் சிறப்பம்சம் ரோடு அட்டகாசமாக இருக்கிறது.
பேருந்தில் அல்லது ரயிலில் செல்பவர்கள் நாமக்கல் சென்று அங்கிருந்து
செம்மேடு அல்லது நேரடியாக அறப்பளீஸ்வரர் கோவில் செல்லும் பேருந்தை பிடிக்கலாம்.
ஆனால், மலை மீது உள்ள இடங்களை சுற்றிப்பார்க்க தனி வாகனம் இருந்தால் தான் சரியாக
இருக்கும். எனவே நாமக்கல்லிருந்து தனியார் வாகனத்தை வாடகைக்கு
பிடித்துக்கொள்ளலாம்.
எங்கே தங்குவது...?
பெரும்பாலான தங்கும் விடுதிகள் செம்மேட்டையும் அதனை ஒட்டியும்
அமைந்திருக்கின்றன. முன்பே ஒருமுறை சொன்னது போல கொல்லியில் ரிஸார்ட் என்கிற
வார்த்தையே ஒரு மாயை. குடும்பத்துடன் செல்பவர்கள் கொஞ்சம் பாங்கான விடுதியில் தங்க
விரும்பினால் P.A.Holiday Innல்
தேர்ந்தெடுக்கலாம். ஓரளவிற்கு கெளரவமான இடத்தில் தங்க விரும்பும் நல்ல தம்பிகள் நல்லதம்பியில் தங்கலாம். தண்ணிவண்டி தம்பிகளுக்கு ஏரோ மேன்ஷன், SKGV லாட்ஜ். இவற்றில் SKGV
லாட்ஜ் மட்டும் செம்மேட்டில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்கிறது. இதில் சாதக,
பாதகங்கள் உண்டு. ஒரு அவசரத்திற்கு பிளாஸ்டிக் கிளாஸ் வாங்கக்கூட கடை இருக்காது.
ஆனால் மனித நடமாட்டம் குறைவான பகுதியில் தனிமையாக பொழுதைக் களிக்கலாம்.
எத்தனை நாட்கள்...?
மூன்று நாட்கள். வெள்ளி காலை கிளம்பி மாலை சென்றடைந்து, சனி சுற்றிப்
பார்த்து, ஓய்வெடுத்து, ஞாயிறு திரும்புவது கச்சிதமான திட்டம். நேரமில்லாதவர்கள்
இரண்டு நாட்களில் பயணத்திட்டத்தை சுருக்கிக்கொள்ளலாம்.
என்ன பார்க்கலாம்...?
கொல்லியில் என்னென்ன இடங்களை பார்க்கலாம் என ஒரு பட்டியல் இருக்கிறது.
கூடவே அவற்றை எந்த வரிசையில் பார்ப்பது என்றும் ஒரு முறை இருக்கிறது. நானே
பிரத்யேகமாக தயாரித்த இந்த வரிசைமுறையை பின்பற்றினால் உங்கள் நேரத்தை சேமிக்கலாம்.
6. ஆகாயகங்கை
9. மாசிலா அருவி
10. நம்ம அருவி (வரைபடத்தில் இல்லை)
14. தாவரவியல் பூங்கா
முதல் நான்கு இடங்களை போகும் வழியிலேயே / தினத்திலேயே
பார்த்துவிடலாம். அடுத்த எட்டு இடங்களை மறுநாள் காலை துவங்கி ஒவ்வொன்றாக
பார்த்துவிட்டு இறங்கலாம். கடைசி எட்டை மூன்றாவது நாள் அல்லது திரும்பும்போதோ
பார்க்கலாம்.
எப்போது செல்லலாம்...?
ஆகாயகங்கையில் வருடம் முழுக்க நீர்வரத்து இருக்கிறது. குறிப்பிட்டு
சொல்வதென்றால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்றால் தட்ப வெப்பம்
செமத்தியாக இருக்கும். எல்லா அருவிகளிலும் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.
கோவில்கள் மீது விருப்பம் உள்ளவர்கள், கொங்கலாய் அம்மன் கோவில் திருவிழாவை காண
விழைபவர்கள் ஏப்ரலில் செல்லலாம். வருடாவருடம் நடைபெறும் வல்வில் ஓரி திருவிழாவை
பார்க்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் செல்லலாம்.
எங்கே வாங்கலாம்...?
கொல்லி செல்லும்போது ஒரு முழு பகார்டி பாட்டிலை இங்கிருந்து சுமந்துச்
சென்றோம். அங்கே சென்று பார்த்தால் செம்மேட்டில் அழகாக, அளவாக ஒரு டாஸ்மாக்
இருக்கிறது, அங்கே பகார்டி கிடைக்கவும் செய்கிறது. பொதுவாகவே கொல்லிமலை
குடிகாரர்களின் சொர்க்கம் போல தோன்றுகிறது. எந்த மூலைக்கு திரும்பினாலும்
சுற்றுலாவாசிகள் மறைவாக உட்கார்ந்து குடித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கு
பார்த்தாலும் காலி புட்டிகள். குடித்துவிட்டு பாட்டில்களை பாறைகளின் மீது வீசி
சிதறடிப்பது இங்குள்ளவர்களின் கைப்பழக்கம் போலிருக்கிறது.
முடிந்தவரைக்கும் சுற்றுச்சூழலை, இயற்கையை நாசம் செய்யாமல், சக
சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் கொல்லியைக் கொண்டாடுங்கள். இத்துடன்
கொல்லிமலை பயணக்கட்டுரைகள் அதிகாரப்பூர்வமாக நிறைவுபெறுகிறது.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|