26 March 2018

பிரபா ஒயின்ஷாப் – 26032018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நிதியாண்டின் முடிவில் இருக்கிறோம். தொடர்ச்சியாக எனது அலைபேசிக்கு கடந்த இரு வருடங்களாக ஐ.டி. ரிடர்ன் சமர்ப்பிக்கவில்லை என்று குறுந்தகவல் வந்துக் கொண்டிருந்தது. இந்த ஃபைனான்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நான் கொஞ்சம் வீக். பே ஸ்லிப்பில் எவ்வளவு பிடித்தம், எதற்காக பிடித்தம் என்றெல்லாம் கூர்ந்து கவனிப்பது கிடையாது. லோன் கட்டும் சுமைகள் இல்லாத, கிரெடிட் கார்டு வைத்துக் கொள்ளாத எளிய மனிதன். என் பழைய கம்பெனியில் ஃபார்ம் பதினாறு கொடுத்ததும் ஒரு தனியார் நபர், நூறு அல்லது நூற்றி ஐம்பது வாங்கிக்கொண்டு அவராகவே ஐ.டி. ரிட்டர்ன்ஸ் சமர்ப்பித்துவிடுவார். (அப்பொழுதெல்லாம் எனக்கு ஃபார்ம் பதினாறு என்பது கான்ஃபிடென்ஷியல் ஆவணம் என்கிற விஷயமே தெரியாமல் டேபிள் மீது பப்பரப்பா என்று போட்டு வைத்திருப்பேன்). புது அலுவலகம் சேர்ந்தபிறகு ஐ.டி. ரிட்டர்ன்ஸ் என்கிற சம்பிரதாயத்தையே மறந்திருக்கிறேன். ஒரு வழியாக அந்த பழைய நபரை தொடர்புகொண்டு, பாஸ்வேர்ட் வாங்கி, எவ்வாறு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று இரவெல்லாம் ஆராய்ந்து இரண்டு வருட ஐ.டி. ரிட்டர்ன் சமர்ப்பித்தாயிற்று.

ஒவ்வொரு முறை படிவம் நிரப்புவதில் சந்தேகம் வரும் போதெல்லாம் க்வோரா (Quora) என்னும் தளத்தில் யாரோ சில புண்ணியவான்கள் எழுதிய பதில்கள் உதவின. இந்த க்வோராவைப் பற்றி சில வருடங்களுக்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். மென்பொருள் துறையில் கோடிங் செய்பவர்கள் அனைவரும் ஸ்டேக் ஓவர்ஃப்ளோ என்கிற தளத்தை அறிந்திருப்பார்கள். ஒருவகையில் பலருக்கு குலதெய்வமே அதுதான். ஃப்ரெஷ்ஷராக சேர்ந்த சமயத்தில் கோடிங்கின் இடையே எங்கேயாவது போய் லாக் ஆகிக்கொள்ளும் தருணங்களில், ஸ்டேக் ஓவர்ஃப்ளோவில் நமக்காகவே ஒருவர் துல்லியமாக பதில் அளித்திருப்பார். அதுபோல இந்த க்வோராவில் எல்லாவற்றிற்கும் பதில் உண்டு. எல்லாவற்றிற்கும். 2047ல் இந்தியாவின் பிரதமராக யார் இருப்பார் ?, சிறிய ஆண்குறி இருப்பதால் அனுகூலங்கள் என்னென்ன ?, லேப்டாப்பில் ஃபைல்களை டவுன்லோட் செய்வதால் அதன் எடை கூடுமா ?, ராக்கி சவந்துக்கு ஆஸ்கர் கிடைக்குமா ?, ஜைனர்கள் சுயமைதுனம் செய்வார்களா ? என்று கேள்வி எத்தனை அபத்தமாக இருந்தாலும் அதற்கும் ஒரு நான்கு பேர் சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு கேள்விக்கு பதில் தெரிந்துகொள்வதற்கு கூகுள் மூலம் க்வோராவுக்கு நுழைபவர்கள் தவிர்த்து, போரடிக்கும்போது ரேண்டமாக க்வோராவில் சில கேள்வி – பதில்களை படித்து பொழுதுபோக்குபவர்களும் உண்டு என்று அறிகிறேன்.

க்வோராவில் கேட்கப்பட்ட கேள்வி
ஏன் இப்படி எல்லோரும் க்வோராவில் மாய்ந்து மாய்ந்து பதில் சொல்கிறார்கள் ? இத்தனைக்கும் நீங்கள் எப்படி உயிரை உருக்கி பதில் சொன்னாலும் க்வோரா உங்களுக்கு பத்து பைசா கூட தரப்போவதில்லை. முன்பு யாஹூ ஆன்ஸர்ஸ் என்றொரு தளம் இருந்தது. க்வோராவோடு ஒப்பிடும்போது யாஹூவில் சீரியஸான கேள்வி / பதில்களை பார்க்க முடியாது. அதிலும் பதிலளிப்பவர்களுக்கு பணம் எல்லாம் கிடையாது. அனால் பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பாயிண்ட்ஸ் உண்டு. நீங்கள் எத்தனை கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள், அவற்றில் எத்தனை சிறந்த விடையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதையெல்லாம் பொறுத்து ரேட்டிங் கொடுக்கப்படும். கிட்டத்தட்ட ஃபேஸ்புக் லைக்ஸ் மாதிரி பயனற்றது என்றாலும் பயனாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யம் உண்டு. க்வோராவில் அது கூட கிடையாது. அப்படியும் ஏன் மக்கள் க்வோராவில் பதிலளிக்கிறார்கள் என்கிற என் கேள்வியை ஏற்கனவே க்வோராவிலேயே நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு க்வோராவில் சில பேர் – ‘அறிவை வளர்த்துக்கொள்ள / பகிர்ந்துகொள்ள’, ‘நான்கு பேருக்கு உதவி செய்ய’ என்றெல்லாம் ஜல்லி அடித்திருக்கிறார்கள். சிலர் நியாயமாகவும் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

**********

இப்போது எனக்கு ஒரு கிரேஸியான கேள்வி மனதில் தோன்றியது. தினசரி காலை சாலையில் இறங்கி நடக்கிறேன். கீழே பார்த்துக்கொண்டே நடந்தால் தோராயமாக பத்து, பதினைந்து அடிகளுக்கு ஒருவர் எச்சில் துப்பி வைத்திருக்கிறார். பெரும்பாலும் அவை ஈரம் குறையாமல் அப்போது துப்பிய ஃப்ரெஷ் எச்சிலாக இருக்கிறது. குறிப்பாக நிறைய மனிதர்களை கவனிக்கும்போது அவர்களால் எச்சில் துப்பாமல் வாழவே முடியாது என்பதுபோல வழக்கமாக அதைச் செய்கின்றனர். எனது சந்தேகம் என்னவென்றால் நானெல்லாம் எனது வாழ்நாளில் ஒருமுறை கூட பொது இடங்களில் உமிழ்ந்தது கிடையாது. ஒருவேளை நான் அப்நார்மலாக இருக்கிறேனா ?

சிள் வண்டை துப்பும் போட்டி !
க்வோராவில் படித்த விடைகளின் படி எச்சில் துப்பும் பழக்கம் உலகெங்கும் பரவலாக நடக்கும் ஒன்றுதான். (ஆனால் அவர்கள் பொது இடங்களில் துப்புவார்களா என்பது வேறு விஷயம்). ஆண்கள் தான் இந்த வேலையை அதிகம் செய்கிறார்கள். இது முழுக்க முழுக்க பழக்கத்திலிருந்து வருவது என்கிறார்கள். அதாவது சிறுவயதிலிருந்து மற்றவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுதல். பலருக்கு சிகரெட் அல்லது புகையிலை பழக்கத்தின் காரணமாக துப்பும் பழக்கம் தொற்றிக் கொள்கிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எச்சில் துப்பும் போட்டிகள் கூட நடைபெறுகின்றன. அமெரிக்காவில் இறந்துபோன சிள் வண்டி வாயில் வைத்துக் கொண்டு துப்பும் போட்டி பழக்கத்தில் இருந்திருக்கிறது. (பார்க்க படம்).

**********

க்வோராவில் இப்படி லிங்க் விட்டு லிங்க் தாவி கடைசியில் மனிதகுலத்தின் ஆதாரமான விஷயத்துக்கு வந்துவிட்டேன். செக்ஸ் ! செக்ஸின் போது பொதுவாக ஆண்கள் என்னென்ன தவறு செய்கிறார்கள் என்று ஒரு நிபுணர் பட்டியலிட்டிருக்கிறார்.

- எடுத்ததும் உதட்டில் முத்தமிடுவது. செக்ஸின் துவக்கம் முத்தம் என்று நம் சினிமாக்களில் நமக்கு தவறாக கற்பிக்கப்பட்டுள்ளது. (பொடனியில் கேமரா).
- ஏதோ ஹவர் சைக்கிள் எடுத்ததைப் போல பெண்ணின் உடலை அவசர அவசரமாக கையாள்வது.
- பெண்களுக்கு தாடி வைத்திருப்பவர்களை பிடிக்கிறது, செக்ஸின் போது அல்ல.
- மார்க்கெட்டில் மாம்பழத்தை தரம் பார்த்து வாங்கும் பாணியில் முலைகளை போட்டு கசக்குவது.
- லவ் பைட்ஸ் சுவாரஸ்யமானது தான். ஆனால் ஒரு எல்லை உண்டு.
- ரேடியோவில் ஸ்டேஷன் மாற்றுவது போல முலைக்காம்புகளை பிடித்து திருகக்கூடாது.
- பெண்ணுடலில் கிளர்ச்சியூட்டும் பகுதிகள் நிறைய உள்ளன. மேல்நாடு, கீழ்நாடு, மத்திய பிரதேசத்தில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது.
- நகம் வளர்ப்பது. தேவைப்படும் ஒரு விரலில் மட்டுமாவது வெட்டுதல் நல்லது.
- போர்னோ பார்த்துவிட்டு அதில் வருவது போல செய்யச் சொல்லி இணையை டார்ச்சர் செய்வது. உ.தா. ப்ளோ ஜாபின் போது பின் மண்டையை இறுக்கமாக பிடித்து தொண்டை வரை உள்ளே தள்ளுவது, திரவத்தை குடிக்கச் சொல்லி வற்புறுத்துவது.
- ஆபாசமான வார்த்தைகள் பேசுவது. (விதிவிலக்குகள் உண்டு).
- வித்தியாசமான பொஸிஷன் செய்கிறேன் என்று இணையை பெண்டு நிமிர்த்துவது.
- மொத்த எடையையும் இணையின் மீது போட்டு இயங்குவது.
- வேலை முடிந்தபிறகு இணைக்கு முந்தி பாத்ரூமுக்கு ஓடுவது.
- பாத்ரூம் போய்விட்டு வந்து குப்புற அடித்து தூங்குவது !

இப்பட்டியலை தயாரித்தவர் மேலை நாட்டவர் என்று நினைக்கிறேன். இந்தியர்களைப் பொறுத்தவரையில் தொண்ணூறு சதவிகித ஆண்களுக்கு ஃபோர் ப்ளே என்றால் என்னவென்றே தெரியாது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 March 2018

பிரபா ஒயின்ஷாப் – 19032018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற ‘கூகுள் ஃபார் தமிழ்’ நிகழ்வு பற்றி நிறைய தமிழ் வலைப்பதிவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். சனிக்கிழமை இரவு நண்பரிடமிருந்து அழைப்பு கிடைக்கப்பெற்று, ஞாயிறு பதிவு செய்து, திங்கள் மாலையில் தான் நிகழ்வை உறுதி செய்தார்கள். செவ்வாய் காலையில் நிகழ்வு !

இந்நிகழ்வில் கண்டிப்பாக கலந்துக்கொண்டே ஆக வேண்டுமென முடிவு செய்த காரணம், வெட்கத்தை விட்டுச் சொல்வதென்றால் சாப்பாடுதான் ! கண்டிப்பாக நிகழ்வு பெரிய ஸ்டார் ஹோட்டலில் நடைபெறும், மதிய உணவு மற்றும் ஹை டீ இருக்கும் என்று தெரியும். (2011 இண்டி ப்ளாக்கர் மீட் நினைவிருக்கிறதா ?) எதிர்பார்த்தது போலவே இந்நிகழ்வு சென்னை ஹயாத்தில் நடைபெற்றது. ஏராளமான தமிழ் வலைப்பதிவர்களும், ட்விட்டர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்து போனால் மொத்த இருநூற்றி சொச்ச முகங்களில் பத்து பேருக்கு மேலே யாரையும் அடையாளம் தெரியவில்லை. அத்தனை பேரும் ரீடர்ஸ் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், அப்பாவியாக. நிகழ்வில் எத்தனை பேர் ஆட்சென்ஸ் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது ஏறக்குறைய முழு அரங்கும் கை தூக்கியபோது தான் இந்நிகழ்வின் வீரியம் புரிந்தது. அடுத்ததாக ஒரு பெண் தன்னுடைய யூடியூப் சேனலுக்கு மூன்று லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக சொல்லி இன்னொரு அதிர்ச்சியை கொடுத்தார். மொத்தத்தில் தப்பான இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று கொஞ்ச நேரத்திலேயே புரிந்துவிட்டது. இணையத்தில் தமிழை வாழ வைப்பதே வலைப்பதிவர்கள் மற்றும் ஃபேஸ்புக் எழுத்தாளர்கள் தான் என்றொரு எண்ணம் இருந்தது. அவற்றைத் தாண்டி தனியாக இன்னொரு உலகம் இயங்கிக்கொண்டிருப்பதை தெரிந்துக்கொண்டேன். இந்நிகழ்வில் தெரிந்துகொண்ட விஷயங்களை யோசிக்கும்போது இப்படி தண்டத்துக்கு வலைப்பூவை வைத்து உருட்டிக்கொண்டிருப்பதற்கு பதிலாக பேசாமல் கண்டென்ட் ரைட்டராக மாறி பணம் சம்பாதிக்கலாம் என்கிற யோசனை எட்டிப்பார்க்கிறது.

கூகுள் தமிழ் என்றாலும் மேடையில் பேசிய பெருந்தகைகளில் ஒருவரின் கொச்சைத் தமிழ் தவிர்த்து வேறு யாருக்கும் தமிழே வரவில்லை. கலந்துகொண்டவர்கள் ஆங்கிலம் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் என்றாலும் தமிழுக்கான நிகழ்வு என்பது தமிழில் நடைபெறுவது தானே பொருத்தம். மற்றபடி சாப்பாடு விஷயத்தில் எதிர்பார்த்ததை விடவே அசத்திவிட்டார்கள். காலையில் ஆறு வகையான ஜூஸ், ஃப்ரூட் சலாதுடன் மற்ற டிபன் வகைகள். மதியம் சூப்பில் துவங்கி, மட்டன், சிக்கன், மீன் என்று கடைசியாக குளோப் ஜாமூன், பான் ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் என்று டெஸர்டுடன் முறையான விருந்து. இடையில் காலை, மாலை இருவேளைகளில் ஹை டீ அதிலே வேறு கோழி வறுவல், சாண்ட்விச் என்று பிரமாதப்படுத்திவிட்டார்கள். இனி அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வு சென்னையில் நடைபெறும் என்று சொன்னது விருந்தின் இறுதியில் கொடுக்கப்பட்ட வெற்றிலை – பாக்கு போல நிறைவாக இருந்தது.

**********

ஐ.டி. அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் வொர்க் ஃப்ரம் ஹோம்என்கிற பதம் என்னைப் பொறுத்தவரையில் ஒரு ஆக்ஸிமோரான். வொர்க்’, ‘ஹோம்இரண்டும் தனித்தனி தீவுகள். வீட்டில் வேலை செய்யக்கூடாது என்றில்லை. இங்கே வொர்க் என்பதை அலுவலக வேலை என்கிற அர்த்தத்தில் குறிக்கிறேன். வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டிருக்கும்போது நாம் மட்டும் தனியறையில் உட்கார்ந்து க்ளையண்டுடன் போனில் இங்க்லீஷில் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது அலுவலக நேரத்தில் ஓய்புக்கு போன் செய்து பக்கத்து சீட்டு நபருக்கு கேட்கும்வகையில் கொஞ்சிக் கொண்டிருப்பதோ கூடா செயல்கள். இரண்டாவது காரியத்தை நான் ஒருபோதும் செய்ததில்லை. ஆனால் முதல் காரியத்தை தவிர்க்கவே முடியாது. ராத்திரி ஒன்றரை மணிக்கு அல்லது பிரம்ம முஹுர்த்தத்தில் வீட்டில் முக்கியமான வேலையில் இருக்கும்போது (தவறாக புரிந்துகொள்ள வேண்டியதில்லை. பெரும்பாலான ஒயின்ஷாப் பதிவுகள் பிரம்மமுஹூர்த்ததில் தான் எழுதப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க) யாராவது கால் செய்து ஸாரி டூ டிஸ்டர்ப் யூஎன்று சம்பிரதாயமாக ஆரம்பிக்கும்போது, ‘த்தா... அதெல்லாம் உன் ஸாரி மயிரெல்லாம் தேவையில்ல. விஷயத்தை மட்டும் சொல்லு...என்று வாய் வரைக்கும் வார்த்தைகள் வருவதை தவிர்க்க முடிவதில்லை.

என் ஏழு வருட ஐ.டி. வாழ்க்கையின் முதல் நான்கு வருடங்களில் நான் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்ததே இல்லை. துவக்கத்தில் எனக்கு அப்படி ஒரு சலுகையே வழங்கப்படவில்லை என்றாலும் பின்னாளில் அச்சலுகை வழங்கப்பட்ட பிறகும்கூட, வைராக்கியமாக அதனை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறேன். டிசம்பர் 3, 2015 வெள்ளத்தினால் சென்னையே ஸ்தம்பித்துப் போயிருந்தது. பெரும்பாலான அலுவலகங்கள் விடுமுறை அறிவித்துவிட்டனர். இருப்பினும் என் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வராததால் பாதி தூரம் கிளம்பிப் போய் கிண்டியிலிருந்து ஈக்காட்டுத்தாங்கல் வரை முட்டியளவு மழை நீரில் சேதுபதி ஐ.பி.எஸ். க்ளைமாக்ஸில் டிரைனேஜில் நடந்துசெல்லும் குட்டிப்பையன் போல (சாத்து நடை சாத்து.. தும் தும்சிக்கு சிக்கு...!) நடந்து சென்றிருக்கிறேன்.

அத்தனை வருடங்கள் கே.எஸ்.ரவிகுமார் படங்களில் வரும் வேலைக்காரன் போல விசுவாசமாய் (தல ரெஃபரன்ஸ் !) உழைத்துக் கொண்டிருந்தவனுக்கு திடீரென ஒரு தருணத்தில் விசுவாச மீட்டர் சடாரென இறங்கியது. சாச்சுரேஷன் பாயிண்ட் என்பார்கள். ஐ.டி. முதலாளிகள் எல்லாம் நாச்சியார் டீஸரில் ஜோதிகா சொல்லும் வார்த்தையை ஒத்தவர்கள் என்று உணர்ந்துக்கொண்ட தருணம். அதன்பிறகு சகஜமாக வொர்க் ஃப்ரம் ஹோம் எடுப்பது, ஸ்டொமக் அப்செட் என்று ஓலோத்துவிட்டு லீவ் எடுப்பது, எட்டு மணிநேர வேலை என்று கணக்கு வைத்துக்கொண்டு பணிபுரிவது என்று எல்லோரையும் போல என்னை மாற்றிக்கொண்டேன்.

ஒருவர் வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷன் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் அவர் வழக்கமாக வேலை பார்க்கும் நேரத்தை ஒப்பிடும்போது இருபது சதவிகித நேரம் மட்டுமே வேலை செய்கிறார் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. மீதமுள்ள எண்பது சதவிகித நேரம் மார்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கி வருவது, குழந்தைக்கு ஆய் கழுவி விடுவது, அம்மாவுடன் சேர்ந்து சுமங்கலி / பிரியமானவள் பார்ப்பது, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போடுவது போன்ற உபகாரமான செயல்களில் கழிகிறது.

இவை தவிர்த்து வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷனில் நிறைய சலுகைகள் உள்ளன.

- காலை, மாலை இருவேளைகளும் சேர்த்து சுமார் மூன்று மணிநேர பிரயாண நேரத்தை தவிர்க்கலாம். குறிப்பாக வடசென்னையில் வசிக்கும் என் போன்றவர்களுக்கு இது மிகப்பெரிய விஷயம். இதனால் காலையில் அவசர அவசரமாக எழுந்துகொள்ள வேண்டியதில்லை. பத்து மணிக்கு அலுவல் என்றால் ஒன்பதரைக்கு எழுந்தால் போதும்.

- வொர்க் லைஃப் பேலன்ஸ். குடும்ப சிக்கல்கள் சீராகும். எங்களை கவனிப்பதே இல்லை என்கிற மனைவி குழந்தைகளின் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கலாம். கூடவே அவ்வப்போது மனைவி போட்டுத்தரும் டீ, மதியம் பிரத்யேகமாய் செய்த மஷ்ரூம் ஃபிரைட் ரைஸ், மாலை வாழைக்காய் பஜ்ஜி என்று நிறைய அனுகூலங்கள் உண்டு.

- ஆர்டரிங் ஃப்ரம் ஆசிப் அல்லது டோனட்ஸ் எனிஒன் ? என்று சக ஊழியர்களிடமிருந்து வரும் மெயிலைப் பார்த்து டெம்டாகி அதற்காக ஒரு முன்னூறு ரூபாய் தண்டம் அழ வேண்டியதில்லை.

- மச்சான், நேத்து தினேஷ் கார்த்திக் அடிச்ச சிக்ஸ் பாத்தியா... ஹய்யோ ஒத்தா பறக்குது என்று தொடங்கி பாம்பு டான்ஸ், கீம்பு டான்ஸ் என்றெல்லாம் வெட்டிப் பேச்சு கேட்க வேண்டியதில்லை. உயரதிகாரிகள் அடிக்கும் சிக் ஜோக்குகளுக்கு சிரிக்க வேண்டியதில்லை.

சரி, வொர்க் ஃப்ரம் ஹோமில் உள்ள கெட்ட விஷயங்கள் -

- மேலே சொன்ன சலுகைகளே சில சமயங்களில் உபத்திரவமாகி விடுவதுண்டு. உதாரணமாக, வீட்டில் குழந்தை இருந்தால் சுத்தம். அது சட்டென கீ-போர்டின் மீது ஏறி அமர்ந்துகொண்டு பட்டன்களை பெயர்த்து எடுக்க முயற்சி செய்யும். முதுகில் ஏறிக்கொண்டு உப்புமூட்டை தூக்கச் சொல்லும்.

- நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில், சிக் ஜோக்ஸ் பரிமாறிக்கொள்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கு வீட்டில் தனித்த சூழலில் பணிபுரிவது மன உளைச்சலை தரும்.

- ஆபீஸில் இருப்பது போல முறையான டெஸ்க் சேர் பெரும்பாலான வீடுகளில் இருப்பதில்லை. இருந்தாலும் சோபாவில் காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்தோ அல்லது கட்டிலில் குப்புற படுத்துக்கொண்டோ வேலை செய்கிறார்கள். இதனால் ஏற்படும் முதுகுவலி மற்றும் மெளஸை ஏடாகூடமான பொஸிஷனில் இருந்து இயக்குவதால் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிவரும். (அடிக்கடி வொர்க் ஃப்ரம் ஹோம் எடுப்பவர்கள் வீட்டிலேயே வசதியாக வொர்க் ஸ்டேஷன் அமைத்துக் கொள்வது நல்லது).

பொதுவாக வெள்ளிக்கிழமையானால் ஊருக்கு கிளம்பிப் போகும் ஆட்கள் அம்மா, அப்பா, அத்தாச்சியை பார்த்த சந்தோஷத்தில் திங்களன்று மீண்டும் நரகத்துக்கு திரும்ப மனமில்லாமல் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான குடும்பஸ்தர்கள் குழந்தைகள், மனைவியுடன் நேரம் செலவிடவே வொர்க் ஃப்ரம் ஹோம் எடுக்கிறார்கள். மற்றபடி, ஒயின்ஷாப் எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்பதற்காக எல்லாம் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுப்பது அயோக்கியத்தனம் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 March 2018

பிரபா ஒயின்ஷாப் – 12032018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வார வாசிப்பு சுஜாதாவின் மெரினா ! கணேஷ் – வஸந்த் தோன்றும் குறுநாவல். பொறுப்பில்லாத ஒரு பணக்கார இளைஞன் ஒருநாள் இரவு மெரினாவில் தன் நண்பர்களுடன் களித்துக்கொண்டிருக்கிறான். அப்போது எதிர்பாரா விதமாக அங்கே ஒருவனுடன் பிரச்சனையாகி அடிதடியில் முடிகிறது. மறுநாள் மெரினாவில் ஒரு அனாமதேய சடலம் கண்டுபிடிக்கப்படுகிறது. இதனை மையமாக வைத்து நாவலின் கதை போகிறது. இந்நாவலை தோராயமாக சுமார் ஒன்றே கால் மணிநேரத்திலேயே படித்து முடித்துவிட்டேன் (112 பக்கங்கள்). 

இது வழக்கமான வேகத்தை விட கொஞ்சம் அதிகம் என்று நினைக்கிறேன். காரணம், சுஜாதாவின் இலகுவான மொழிநடையா அல்லது கிண்டிலா என்று தெரியவில்லை. சோதனைகள் செய்து பார்க்க வேண்டும். அக்காலத்தில் கதைகளில், குறிப்பாக பிரபல வார இதழ்களில் அவை வெளிவரும்போது அவற்றிற்கென ஒரு மாரல் இருக்க வேண்டுமென கருதப்பட்டுள்ளது. தப்பு செய்பவன் நிச்சயம் தண்டனை அனுபவிப்பான் என்பது மாதிரி. அதனாலேயே மெரினா போன்ற நாவல்களில் வரும் கிளைமாக்ஸில் ஒரு செயற்கைத்தனம் இழையோடுகிறது.

**********

தமிழக அரசின் நாற்பத்தி நான்காவது சுற்றுலா பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பார்க்கிங்கில் சில்லறை கேட்பானே என்று பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளை துழாவிக்கொண்டிருந்த சமயம் ஹண்ட்ரட் சார் என்று அதிர்ச்சி கொடுத்தார் அந்த ஆசாமி ! ஒரு காலத்தில் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வரம் இந்த சுற்றுலா பொருட்காட்சி. (இப்போது கீழ்த்தட்டு மக்களுக்கு கிடையாது). ஒரு பக்கம் பறவைகள் உலகம், ஹாரர் ஹவுஸ், காஞ்சனா 3, பார்பி ஹவுஸ் (அத்தனை பேரும் பித்தலாட்டக்காரர்கள்) போன்ற தலங்கள், இன்னொரு பக்கம் ஃபேன்ஸி ஸ்டோர், ராஜஸ்தான் ஊறுகாய், ஜமுக்காள வகையறாக்கள், நடுவில் டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, கரும்புச்சாறு என உணவுவகைகள். 

நேப்பியர் பாலத்திலிருந்து பொருட்காட்சி (படம்: இணையம்)
இவ்விடத்தில் நிறைய அழகான, இளமையான, சிற்றிடை கொண்ட, சரிந்துவிடுமோ என்ற பதறக்கூடிய மெல்லிய ஷிஃபான் சேலை, பின்பக்கம் முடிச்சுகள் கொண்ட டிஸைனர் பிளவுஸ் அணிந்த, மார்வாடி மனைவிகள் உலவுவதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. குரான், பைபிள் இலவசமாக தருகிறார்கள். மிடில்கிளாஸ் (கணவன் – மனைவி)கள் வெவ்வேறு ஆட்கள் போல நடந்துசென்று ஆளுக்கொரு குரான் / பைபிள் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள் (என்ன செய்வார்கள் ?) டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு செல்லும் முன் அரசுக்கூடங்கள் பலவற்றில் விளக்குகளை அணைத்துவிட்டார்கள். எல்லா அரங்கு முகப்புகளிலும் நடுவில் ஜெயலலிதா படமும் இருபுறமும் தாய்மாமன்கள் போல எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

**********

டிவியில் விஷாலும் ஸ்ரீதிவ்யாவும் காதல் செய்யும் ஒரு பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஸ்ரீதிவ்யாவை பார்த்ததும் எனக்கு பல ஞாபகங்கள் வந்து போனது. நன்றாக வந்திருக்க வேண்டிய நடிகை. கீர்த்தி சுரேஷ், தான்யா ரவிச்சந்திரன் (பெருமூச்சு !) மற்றும் சசிகுமாரும் விஜய் ஆண்டனியும் போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்திய மீடியாக்கர் நடிகைகளின் வரவாலும் மார்க்கெட் இழந்த துரதிர்ஷ்டசாலி. இருப்பினும் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஹீரோயினாக பத்து படங்கள் என்பதே பெரிய சாதனைதான் !

கறுவாக்காட்டு கருவாயனுடன் ஸ்ரீதிவ்யா
மேற்படி பாடலில் ஒரு காட்சி. புதுமணத்தம்பதியான விஷாலும் ஸ்ரீதிவ்யாவும் சினிமாவுக்கு போகிறார்கள். அங்கே (ஒரு) குழந்தையுடன் இருக்கும் ஒரு தம்பதியை விஷால் ஸ்ரீதிவ்யாவிடம் காட்டுகிறார். பதிலுக்கு ஸ்ரீதிவ்யாவோ ஏழு குழந்தைகளுடன் வரும் ஒரு தம்பதியைக் காட்டி தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.

இன்னொரு பாடல் காட்சி. நித்யா (மேனன்) தன் தாயாரிடம் அவரை விட ஒரு குழந்தை அதிகமாக பெற்றுக்காட்டுவதாக சவால் விடுகிறார். அப்படத்தில் நித்யாவின் தாயார் பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை பத்தொன்பது !

இது தமிழ் சினிமாவின் நீண்ட கால கிளிஷேக்களில் ஒன்று. ஹீரோயின் ஹீரோவிடம் எனக்கெல்லாம் ஒன்னு, ரெண்டு போதாது, டஸன் கணக்கில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், பாடலின் லிரிக்ஸில் ஹீரோ ஹீரோயினிடம் நூறு பிள்ளைகள் பெற்றுக் கொடுக்கச்சொல்லி கேட்பதும் (தோராயமாக கணக்கிட்டால் இந்த ப்ராசஸை முடிக்க 72 ஆண்டுகள் ஆகும்), அக்குழந்தைகள் படிக்க தனி பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்பதும்... அப்பப்பா ! தமிழ் சினிமா வசனகர்த்தாகளுக்கும், பாடலாசிரியர்களுக்கும் அதிக காதல் என்றால் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்று யாரோ தவறாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். 

வரலாறும் அப்படித்தான் சொல்லிக் கொடுக்கிறது. நம்மூரின் காதல் சின்னமாம் தாஜ் மஹால் புகழ் ஷாஜஹான் – மும்தாஜ் கதையை கவனியுங்கள். 1612ல் ஷாஜஹானுக்கும் மும்தாஜுக்கும் திருமணம் நடைபெறுகிறது. 1631ம் ஆண்டு தனது பதினான்காவது பிரசவத்தின் போது மும்தாஜ் உயிரிழக்கிறார். பத்தொன்பது ஆண்டுகளில் பதினான்கு குழந்தைகள். யோசித்துப் பார்த்தால் ஷாஜஹான் மும்தாஜுக்கு மிகப்பெரிய மன மற்றும் உடல் உளைச்சலை கொடுத்திருக்கிறார். நியாயமாக செளதியில் கொடுப்பதாக சொல்லப்படும் அக்கொடூர தண்டனையை ஷாஜஹானுக்கு வழங்கியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் சரக்கடித்த மறுநாள் காலை இனி இந்த கருமத்தை தொடவே கூடாது என்று தோன்றுவது போல, குழந்தையை பெற்றெடுக்கும் தருணத்தில் பெண்களுக்கு இன்னொரு குழந்தையெல்லாம் முடியவே முடியாது என்று தோன்றுமாம். பிரசவ வைராக்கியம் ! ஆனாலும் இந்திய பொது மனப்பான்மையின்படி பெரும்பாலானோர் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இது பெண்களின் கோணம். ஆண்களைப் பொறுத்தவரையில் தன் மனைவியின் பிரசவத்தின்போது லேபர் வார்டுக்குள் அனுமதிக்கப்பட்ட ஆண், அவளிடம் அடுத்த குழந்தை கேட்கமாட்டான் என்கிறார்கள். இப்பொழுதெல்லாம் பெரும்பாலான தம்பதியர் ஸ்கூல் ஃபீஸை நினைத்து பயந்தே இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதில்லை.

ஸ்டாட்ஸ் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். ஃபியோதர் வஸில்யேவ் என்கிற ரஷ்ய விவசாயியின் முதல் மனைவி மொத்தம் 69 குழந்தைகள் பெற்றெடுத்திருக்கிறார். (பிரசவக்கணக்கு 27; 16 ட்வின்ஸ், 7 ட்ரிப்லெட்ஸ், 4 க்வாட்ரப்லெட்ஸ்). கின்னஸ் சாதனைப் பட்டியலின் படி அதிக குழந்தைகள் பெற்றேடுத்திருக்கும் பெண் இவர்தான். இருப்பினும் திருமதி.வஸில்யேவின் இச்சாதனை பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

தங்கள் இருபது குழந்தைகளுடன் ரேட்ஃபோர்ட் தம்பதியர் (படம்: The Sun)
ஆண்களைப் பொறுத்தவரையில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதில் அவர்களது பங்கு வெகு சுலபமானது என்பதாலும், அக்காலத்தில் பாலிகாமி சாதாரண விஷயம் என்பதாலும் வகை தொகையில்லாமல் பெற்றுப்போட்டிருக்கிறார்கள். செங்கிஸ்கான் டி.என்.ஏ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது ஆசியாவின் ஒரு பகுதியை (மங்கோலியா, வடக்கு சைனா, கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான் பகுதிகள்) எடுத்துக்கொண்டால் எட்டு சதவிகித மக்கள் செங்கிஸ்கானின் வழி வந்தவர்கள் என்கிறார்கள். 

பெர்டோல்ட் வெய்ஸ்னர் என்கிற செக்ஸ் மருத்துவ ஆராய்ச்சியாளர், தனது மருத்துவமனைக்கு வரும் குழந்தையில்லா பெண்களின் மீது தனது விந்தணுக்களை செலுத்தி அறுநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வரை பெற்றெடுத்திருப்பதாக குறிப்புகள் சொல்கிறது.

தமிழ் சினிமாவைப் பாருங்கள். நம் இளையதளபதி விஜய் என்னவோ இருபது குழந்தைகள் பெற்றெடுப்பது என்பது ஆண்மை பொருந்திய செயல் என்பதுபோல மாமியாரிடம் சைகை செய்கிறார். நல்லவேளையாக நித்யா இரண்டு குழந்தைகள் பெற்றபிறகு போய் சேர்ந்துவிட்டார். இப்போது என்னுடைய கவலையெல்லாம் எலிக்குஞ்சு மாதிரி இருக்கும் ஸ்ரீதிவ்யா ஏழெட்டு குழந்தைகள் பெற்றெடுக்க முடியுமா என்பதுதான் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 March 2018

பிரபா ஒயின்ஷாப் – 05032018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மருத்துவர் கந்தனின் பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு வெளியான கவிதைத்தொகுப்பு நையாண்டி மேளம். இதன் இரண்டாம் பாகம் கடந்த செவ்வாயன்று திருவொற்றியூரில் வெளியிடப்பட்டது. 

இந்நிகழ்வில் நான் கலந்துகொண்ட விதம் இயல்பானது. விழாவுக்கு முந்தைய நாள் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரைக் காணச் சென்றிருந்தேன். வழக்கமாக தனிப்பட்ட முறையில் பேச்சு கொஞ்சம் நீளும் என்றாலும் இம்முறை ஜெண்டாமைஸினை செலுத்துவதிலேயே குறியாக இருந்துவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்து சந்திக்குமாறு கூறினார். அப்போது கூட புத்தக வெளியீடு பற்றி கூறவில்லை. வீட்டில் எதேச்சையாக விழா குறித்தும், கிரேஸி மோகன் சிறப்புரை என்றும் சொன்னார்கள். மறுநாள் சீக்கிரமாக அலுவலகத்தில் இருந்து கிளம்ப வேண்டுமென்று நினைத்த தருணத்தில் வழக்கம் போல வேலை வந்து சேர, வீடு திரும்பவே மணி எட்டரை ஆகிவிட்டது. (விழா முடியவில்லை என்று வெளியே கேட்ட சொற்பொழிவு சப்தத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்). அவசர அவசரமாக கிளம்பிப் போனால் இல.கணேசன் பேசிக்கொண்டிருந்தார். விழா தலைமை அவர்தான் போலிருக்கிறது. 

விழா மேடையில் (புகைப்பட மூலம்: மா.கி.ரமணன்)
இந்நிகழ்வை நடத்தியது திருவொற்றியூர் பாரதி பாசறை. (பிற்பாடு பாசறையின் துணைத் தலைவரே மருத்துவர் தான் என்று தெரிந்துக்கொண்டேன்). இப்பாசறையை நிறுவியர் முனைவர் புலவர் மா.கி.ரமணன் என்பதால் அவரும் மேடையில் அமர்ந்திருந்தார். ரமணன் அய்யாவுக்கும் எனக்கும் ஒரு சுவாரஸ்யமான, குறிப்பிடத்தகுந்த பந்தம் உண்டு. துரதிர்ஷ்டவசமாக அவர் தீவிர வலதுசாரி மற்றும் இந்துத்துவ ஆதரவாளர். ஆனால் எனக்குக் கிடைத்த சிறந்த தமிழாசிரியர் ரமணன் அய்யாதான். நான் சென்று கொஞ்ச நேரத்தில் இல.கணேசன் பேசி முடித்தார். ரமணன் அய்யா மைக்கை நிறைத்துக்கொண்டு தமிழில் இல்லை என்று பொருள் தரும் ‘இல’ என்று சொல்லில் முடியுமாறு நான்கைந்து சொற்றொடர்களை ஒப்பித்தார். (இந்த ஆள் இன்னும் திருந்தவே இல்லை). அதன்பிறகு கிரேஸி மோகன் பேசினார்.

புத்தக வெளியீடு (மூலம்: தினமலர்)
பொதுவாக திருவொற்றியூருக்கு மத்திய / தென் சென்னையில் வசிக்கும் நண்பர்களை அழைத்தால் வரும் வழியெல்லாம் தூரத்தை வியந்து புலம்பிக்கொண்டே வருவார்கள். கடைசியில் ஆந்திரா பார்டருக்கே வந்து விட்டோம் என்று சொல்லி பெரிதாக சிரிப்பார்கள். கிரேஸியும் இதையே சொல்கிறார். வந்துரும் வந்துரும் என்று நீண்டநேரம் காரில் அழைத்து வந்ததை நினைவு கூர்கிறார். இல.கணேசனுக்கு ரொம்ப ஈஸி இங்கேயிருந்து டெல்லி ரொம்ப பக்கம் என்கிறார். தொடர்ந்து பேசிய கிரேஸி மோகன் படபடவென நிறைய நகைச்சுவை ஒன்லைனர்களை எடுத்துவிட்டுக் கொண்டிருந்தார். புத்தகத்தைப் பற்றி பேசும்போது இது நையாண்டி மேளமில்லை மெய்யாண்டி மேளம் என்று ஸிக் ஜோக் அடித்தார். மருத்துவரை மரபுக்கவிதைகள் முயன்று பார்க்கப் பணித்தார். இப்படியாக நவீன இலக்கியத்தின் கவனத்துக்கு வராமலேயே ஒரு நிகழ்வு நடந்து முடிந்தது.

நவீன இலக்கியங்களில் காணக்கிடைக்காத ஒரு காட்சியை இந்நிகழ்வில் கண்டேன். விழா முடிந்தபிறகு ஒரு வி.ஐ.பி. அவசரமாக முகப்புக்கு வந்து, புத்தகத்தின் இருபது பிரதிகளை மொத்தமாக வாங்கினார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. எப்பேர்ப்பட்ட வஸ்தாது புத்தகமாக இருந்தாலும் கவிக்கோ மன்றத்திலோ, டிஸ்கவரியிலோ நடைபெறும் புத்தக வெளியீட்டில் யாரும் இத்தனை பிரதிகள் வாங்கிப் பார்த்திருக்கிறீர்களா ? நான் வாங்கிய ஒரு பிரதியையும் சேர்த்து குறைந்தது நூறு பிரதிகளாவது அன்றைய தினம் விற்பனை ஆகியிருக்கும். எத்தனை பெரிய சாதனை இது ?

புத்தகத்தை ஒரு கிளான்ஸ் புரட்டினேன். மருத்துவர் என்பதால் முதுமை, மரணம், குடிப்பழக்கம், குழந்தையின்மை போன்ற விஷயங்களைச் சுற்றி நிறைய கவிதைகள். புத்தகத்திலிருந்து இரண்டு குறுங்கவிதைகள் –

உயிரோட்டமாய் கோழி படம்
கீழே வாசகம்: கிலோ 120 ரூபாய் !

தினசரி காலண்டர் திருதிருவென விழித்தது
பிப்ரவரி முப்பதைக் கேட்டபோது !

அடுத்த முறை மருத்துவரை சந்தித்தால் சில யோசனைகளை சொல்ல வேண்டுமென நினைத்திருக்கிறேன். முதலில் மருத்துவர் இந்த பாரதி பாசறை ஆசாமிகளையெல்லாம் விட்டு வெளியே வர வேண்டும். கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு தன் மருத்துவ அனுபவங்களை நேரடியாகவோ, புனைவாகவோ எழுத வேண்டும். இதனை ஒரு வாசகர் விருப்பம் போல கேட்க இருக்கிறேன்.

**********

தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் அதன் போக்கையே மாற்றியமைத்தது துள்ளுவதோ இளமை. நான் ஒன்பதாம் வகுப்பு முடித்திருந்த சமயம் துள்ளுவதோ இளமை வெளிவந்தது. அப்போது என் வயதையொத்த பருவத்தினர்களுள் இரண்டே வகைதான். துள்ளுவதோ இளமை பார்த்தவர்கள், பார்க்காதவர்கள். நானெல்லாம் அப்போது அதன் தலைப்பை உச்சரிப்பதற்குக் கூட தயங்கும் நிலையில் இருந்தேன். அதனை தியேட்டருக்கு போய் பார்ப்பதை எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. என் வீட்டில் அப்போது கட்டுப்பாடுகள் அதிகம். கட்டிப்புடி கட்டுப்பிடிடா பாடலின் காரணமாக குஷி படம் பார்ப்பதற்கே எனக்கு அனுமதி மறுக்கப்பட்ட காலம் அது. அப்போது து.இ. பார்த்த பாக்கியசாலிகள் வந்து கதை கதையாக அளந்து விடுவார்கள். அதன் காட்சிகளை விஸ்தாரமாக விவரிப்பார்கள். அப்பொழுதெல்லாம் அப்படத்தை பார்க்க வேண்டும் என்பது பெரும் ஏக்கமாகவே இருந்தது.

காலப்போக்கில் துள்ளுவதோ இளமையை மறந்தே போனேன். ஒரு படத்தில் அஜித் தனது தங்கைக்கு சின்ன வயதில் ஆசைப்பட்டு கேட்ட பொருட்களை வாங்கித் தருவார். அது போல தற்போது எனது நிறைவேறா ஆசையை தணிக்கும் பொருட்டு துள்ளுவதோ இளமை பார்த்தேன். (யூடியூபில் கிடைக்கிறது). அவ்வளவு சீனெல்லாம் இல்லை. பள்ளி மாணவ – மாணவிகள் மத்தியில் சிகரெட், குடிப்பழக்கம், மஞ்சள் புத்தகங்கள், இனக்கவர்ச்சி, சுயமைதுனம், செக்ஸ் என்று போகிறது கதை. ஆங்கிலத்தில் கமிங் ஆஃப் ஏஜ் என்கிறார்கள். பருவ வயதினருக்கான படங்கள். தமிழில் துள்ளுவதோ இளமை அப்படிப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு சீரழிவு திரைப்படம். பருவ வயதினரை தவறு செய்துப்பார்க்கத் தூண்டும் திரைப்படம். படம் முழுக்க சீரழிவைக் காட்டிவிட்டு கடைசியாகக் கூட பெற்றோர்களை குற்றம் சாட்டி முடிக்கிறார்கள். அந்த வகையில் படத்தில் வரும் பெற்றோரை விட மோசமானவர் கஸ்தூரி ராஜா. துள்ளுவதோ இளமை திரைப்படம் செய்த ஒரே நற்காரியம் என்றால் காண்டம் பற்றிய (ஓரளவு) விழிப்புணர்வு ஏற்படுத்தியது தான். 

துள்ளுவதோ இளமைக்கு பிறகு தமிழில் பருவ வயதினருக்கான படங்கள் நிறைய வெளிவந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கது பாய்ஸ். (பாய்ஸ் வெளிவந்தபோது என் வீட்டில் கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டிருந்தது). துள்ளுவதோ இளமையின் திருத்தப்பட்ட வடிவம்தான் பாய்ஸ் என்பது இப்போது படம் பார்க்கும்போது தெரிகிறது. பாய்ஸில் விவேக், து.இ.யில் ரமேஷ் கண்ணா. இரண்டிலும் பையன்கள் விலைமாதுவிடம் செல்கிறார்கள். வீட்டை விட்டு கூட்டாக வெளியேறுகிறார்கள். இருப்பினும் துள்ளுவதோ இளமையில் உள்ள நெகடிவ் விஷயங்கள் இதில் குறைவு. பாய்ஸ் நாயகர்கள் ஏதாவது சாதிக்க வேண்டுமென நினைக்கிறார்கள், சாதிக்கிறார்கள். பாய்ஸின் முதல் பாதி அபத்தங்கள் இரண்டாம் பாதியிலேயே களையப்பட்டுவிடுகிறது. அது சரி, ஆனந்த விகடனில் துள்ளுவதோ இளமைக்கு என்ன ரேட்டிங் கொடுத்தார்கள் ?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment