அன்புள்ள வலைப்பூவிற்கு,
இவ்வாரம் சமீபத்தில் வெளியான இரண்டு
திரைப்படங்களைப் பற்றி பார்க்கப் போகிறோம். (காலா இல்லை).
முதலாவது – ஆந்திரா மெஸ் !
நான்கு வருடங்களுக்கு முன்பு (சரியாகச்
சொல்வதென்றால் ஐந்து) வரவேண்டிய திரைப்படம். தமிழில் ஆரண்ய காண்டம்
வருகைக்குப்பின் நிறைய ஹீஸ்ட் படங்கள் வரத்துவங்கின. அதாவது சின்னச் சின்ன
திருட்டு வேளைகளில் ஈடுபடுபவர்கள் பெருசா ஒரு முறை அடிச்சிட்டு செட்டில் ஆக முனையும்
கதைகள். ஆ.கா.விற்கு பிறகு இந்த எட்டு வருடங்களில் குறைந்தது நூறு படங்களாவது
இதேபோன்ற கதையுடன் வெளிவந்திருக்காது ? ஆனால் நாம் அவற்றையெல்லாம் பார்த்து
பார்த்து சலித்தபின் சாவகாசமாக வெளிவந்திருக்கிறது ஆந்திரா மெஸ். க்வெர்க்கியான
வில்லன் – அதாவது கோமாளி. ஒரு காட்சியில் மிகவும் சீரியஸான செய்தியை அடியாட்கள்
வந்து வில்லனிடம் சொல்கிறார்கள். நம்ம ஆள் வித்தியாசமான வில்லன் அல்லவா. அதனால்
கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல் வறுத்த மீனை சப்பி சப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
அதுவும் க்ளோஸப் ஷாட்டில், சப்பும் போது ஸ்லர்ப் ஸ்லர்ப் என்று சத்தம் வேறு.
வில்லன்கள் என்றாலே ஏ....ய் என்று உச்சஸ்தாயியில் சப்தம் எழுப்பிக்கொண்டிருந்த
சமயத்தில் இதுபோன்ற காட்சி வந்திருந்தால் ரசித்திருக்கலாம். இப்போது இதையெல்லாம்
பார்க்கும்போது எரிச்சலும், அருவருப்பும் வருகின்றன. சரி விடுங்கள், இதுபோன்ற
படங்களை ஏற்கனவே போதுமான அளவிற்கு கழுவி ஊற்றிவிட்டமையால் ஆந்திரா மெஸ்ஸில் உள்ள
பாஸிடிவ் விஷயங்களை மட்டும் பார்க்கலாம்.
ஒளிப்பதிவு
முகேஷ் என்பவர் (அநேகமாக அறிமுகம்)
ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நிறைய இடங்களில் ஒளியாற்றலை கச்சிதமாக
பயன்படுத்தியிருக்கிறார். டைட்டில் போடத்துவங்கியதிலிருந்தே இவரது ஒளிப்பதிவு
திறமைகள் தனியாகத் தெரிவதை கவனிக்கலாம். படத்துவக்கத்தில் ஒரு மொக்கையான நகைச்சுவை
காட்சி. அதிலே கூட ஒளிப்பதிவாளர் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.
உச்சகட்டமாக சித்தம் பாடலைச் சொல்லலாம்.
கலை
இங்கே கலை என்று குறிப்பிட்டிருப்பது
முதலில் அரங்கு வடிவமைப்பு, இடத்தேர்வு போன்றவற்றை. கதை நடக்குமிடம்
புரவிப்பாளையம் ஜமீன்தாரின் இல்லம் என்பதால் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றைத் தேர்வு
செய்திருக்கிறார்கள். ஒருமுறை ஏற்காடு சென்றிருந்தபோது இண்டேகோவின் விடுதியில்
தங்கியிருந்தோம். அங்கே அல்லது அதன் கிளை விடுதிகளில் ஒன்றில்தான் இதனை
படமாக்கியிருக்க வேண்டும். பொதுவாகவே படம் முழுக்க ரசனை சார்ந்த விஷயங்கள் விரவிக்கிடக்கின்றன.
ஓவியங்கள், அலங்காரங்கள், வசனம், இசை, நடன அசைவுகள். புரவிப்பாளையம் ஜமீனாக
நடித்திருக்கும் அமரேந்திரன் கூட ரசனையாக வாழ்வது குறித்து அவ்வப்போது வசனம்
பேசுகிறார். (வசனம் – மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமார்). மறுபடியும் சித்தம்
பாடல் எவ்வளவு ரசனையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று கவனிக்க வேண்டுகிறேன்.
திட்டமிடல் ஏதுமில்லாமல் ஆந்திரா மெஸ்ஸை
எஸ்கேப்பில் முதல்நாள் முதல்காட்சி பார்த்தேன். மொத்த படக்குழுவும் எனக்குப்
பின்னால் அமர்ந்துதான் படம் பார்த்தது. ஹீரோ வேறு கல்யாண வீட்டில் மணப்பெண்ணின்
சகோதரர் போல குறுக்க மறுக்க ஓடிக்கொண்டிருந்தார். அனைவரும் புதுமுகங்கள் என்பதால்
கொஞ்சம் கூகுள் செய்து பார்த்ததில் இரண்டு ஆச்சர்யமான மனிதர்களைப் பற்றி
தெரிந்துகொண்டேன்.
1. ஏ.பி.ஸ்ரீதர்
படத்தில் கிட்டத்தட்ட ஹீரோ இவர்தான்.
நிஜத்தில் பிரபல ஓவியர் மற்றும் சிலிக்கான் சிற்பக்கலைஞர். சில வருடங்களுக்கு முன்
சென்னை ஈ.சி.ஆரில் துவங்கப்பட்ட 3D ஆர்ட் மியூஸியம் பற்றி நீங்கள்
அறிந்திருக்கலாம். பார்வையாளர்களுடன் சேரும்போது முற்று பெறக்கூடிய வகை
ஓவியங்களைக் கொண்ட அந்த மியூஸியத்தின் நிறுவனர் இவர்தான்.
அது மட்டுமல்லாமல், சென்னையில்
பழமையான கேமராக்கள் அருங்காட்சியகம் மற்றும் சிலிக்கான் சிலை அருங்காட்சியகம்
இரண்டையும் இவர் நிறுவி, நடத்தி வருகிறார். அப்துல் கலாம், அன்னை தெரஸா, அமிதாப்,
மைக்கேல் ஜாக்சன், தோனி, சார்லி சாப்ளின், ஜாக்கி சான், அர்னால்ட் போன்றவர்களின்
சிலிக்கான் சிலைகளை இவர் வடிவமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின்
நெருங்கிய நண்பர்.
3D மியூஸியம் |
2. தேஜஸ்வினி
டபுள் பேரல் கண்னை கையில் தாங்கியபடி
கம்பீரமாக அறிமுகமாகிறார் தேஜஸ்வினி.
தமிழில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருக்கிறார். நிஜத்தில் இவர் ஒரு இன்டீரியர் டிஸைனர். லிங்குசாமி அலுவலகம், தோட்டாதரணி வீடு (தோட்டாதரணிக்கே !), ஃபோர் ஃபிரேம்ஸ் திரையரங்கம் போன்றவை இவரது இன்டீரியர் டிஸைனில் உருவானவை. சினிமாக்காரர்களுக்காக வேலை பார்த்து அவர்களில் யாரேனும் பார்ப்பதற்கு ச்சும்மா ஸ்ரீதேவி மாதிரி இருக்கீங்க, நடிக்கலாமே என்று உசுப்பேத்தி விட்டிருக்கக்கூடும். இவர் ஒரு பகுதி நேர ஓவியரும், விலங்கு ஆர்வலரும் கூட. முக்கியக் குறிப்பு இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது என்பதுதான்.
தமிழில் ஏற்கனவே சில படங்களில் நடித்திருக்கிறார். நிஜத்தில் இவர் ஒரு இன்டீரியர் டிஸைனர். லிங்குசாமி அலுவலகம், தோட்டாதரணி வீடு (தோட்டாதரணிக்கே !), ஃபோர் ஃபிரேம்ஸ் திரையரங்கம் போன்றவை இவரது இன்டீரியர் டிஸைனில் உருவானவை. சினிமாக்காரர்களுக்காக வேலை பார்த்து அவர்களில் யாரேனும் பார்ப்பதற்கு ச்சும்மா ஸ்ரீதேவி மாதிரி இருக்கீங்க, நடிக்கலாமே என்று உசுப்பேத்தி விட்டிருக்கக்கூடும். இவர் ஒரு பகுதி நேர ஓவியரும், விலங்கு ஆர்வலரும் கூட. முக்கியக் குறிப்பு இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது என்பதுதான்.
படம் முடிந்தபிறகு ஸ்ரீதரை சந்தித்து சில
வார்த்தைகள் பேசினேன். வழக்கம் போல ஹீரோயின் அம்மையாரைச் சுற்றி ஒரு ராணுவப்படை
போல படக்குழுவினர் பாதுகாத்து வந்ததால் அவருடன் பேச முடியவில்லை.
இரண்டாவது படம் – டிக் டிக் டிக் !
இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படம்
என்கிறார்கள். அதற்கு ஒரு சாரார் எம்.ஜி.ஆர் நடித்த கலையரசி (1963) தான் முதல்
ஸ்பேஸ் படம் என்றும், இன்னொரு சாரார் கலையரசி ஏலியன் படம்தான் ஸ்பேஸ் படமல்ல
என்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ‘இந்தியாவின்’, ‘முதல்’, ‘ஸ்பேஸ்’
என்பதை எல்லாம் கொஞ்சம் ஓரமாக வைத்துவிடுவோம். முதலில் இது படமா என்பதே எனக்கு
சந்தேகமாக இருக்கிறது. திரையரங்கிற்கு வருபவர்கள் அனைவரும் முட்டாள்கள் அல்லது
இந்த ரசிகர்களுக்கு இவ்வளவு போதும் என்று நினைக்கும் ஒருவரால் மட்டும்தான் இவ்வளவு
கேவலமாக படம் எடுக்க முடியும்.
ஏற்கனவே படத்தின் டிரைலரில் சில சமிஞ்சைகளை
கொடுத்திருந்தார்கள். அதன்படி இப்படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்று ஒரு
யூகம் வைத்திருந்தேன். ஆனால் என் யூகத்தை பொய்யாக்கி அதைவிடவும் மோசமாக
அமைந்திருக்கிறது டிக் டிக் டிக். முதலில், சினிமாக்காரர்கள் சில தொழில்களைப்
பற்றி (குறிப்பாக தொழ்ல்நுட்பம் சார்ந்த) ஸ்டடி செய்ய வேண்டும்.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் என்பவர் தந்திரமாக நம்
கண்களுக்கு தெரியாமல் சில வித்தைகளைச் செய்பவர். உதாரணத்திற்கு, எஸ்கேப்
ஆர்டிஸ்டின் கையில் விலங்கு போடப்பட்டிருந்தால் அவரது கையில் அல்லது வேறெங்கோ
மறைத்து வைத்திருக்கும் குண்டூசி அளவிலான சாதனத்தைக் கொண்டு பார்வையாளர்களுக்கு
தெரியாமல் விலங்கை அவிழ்ப்பார். மாறாக நம் சினிமாக்களில் (டிக் டிக் டிக் மற்றும்
மெர்சல்) சட்டென ஒரு நொடியில் ஹீரோ கையிலிருக்கும் விலங்கு வில்லன் கைக்கு மாறுவதெல்லாம் எஸ்கேப் ஆர்ட்டில் சேராது. அதற்கு பெயர் ஓழ்.
பத்தடி தூரத்தில் ஹீரோவுக்கு தொடர்பில்லாமல் நின்றுக்கொண்டிருக்கும் மகனின்
பாக்கெட்டில் ஹீரோ பொருளை வைக்கிறார். கேட்டால் எஸ்கேப் ஆர்டிஸ்ட் என்கிறார்கள்.
அடுத்து ஹேக்கர்கள். ஏற்கனவே ஏராளமான
படங்களில் ஹேக்கர்கள் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் அவர்களைப் போதுமான அளவு
வைத்து செய்திருக்கிறார்கள். இதிலே உச்சகட்டம். ஒரு காட்சியில் டிவியில் இந்தியா
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ரன் அவுட்
அப்பீல் மூன்றாம் நடுவருக்குப் போய் பேட்ஸ்மேன் செளகர்யமாக ரீச் ஆகியிருக்கிறார்.
உடனே நம் ஹேக்கர் கையில் ஒரு சின்ன உட்டாலக்கடி சாதனத்தை வைத்துக்கொண்டு மூன்றாம்
நடுவரின் சிக்னலை ஹேக் செய்து ‘அவுட்’ காட்டுகிறார். சரி தொலையட்டும் என்று
விட்டால் அதே உட்டாலக்கடி சாதனத்தை வைத்து சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன் சிக்னலையே ஹேக்
செய்கிறார்கள். கொடுமை !
இவை தவிர்த்து நிலாவில் கேஷுவலாகப் போய்
லேண்ட் ஆவது (இடைவேளை டுவிஸ்டாம்), அப்புறம் ஸ்கூட்டி ஓட்டும் பேரிளம் பெண் போல
அங்கிருந்து டேக் ஆஃப் ஆவது, சீன ஸ்பேஸ் ஸ்டேஷனிலிருந்து மிஸைலை திருடுவது, விண்வெளி
ஓடத்தில் ஃபைட் சீன், வில்லன்கள், மகனைக் கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுவது,
சென்டிமென்ட், தேசப்பற்று என்று அப்பப்பா. அதிலே பாருங்கள். வில்லன் ஹீரோவின் மகனை கடத்தி
வைத்துக்கொண்டு மிஸைலை அவரிடம் ஒப்படைக்காவிட்டால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்.
தர்க்கப்படி மிஸைலை வில்லனிடம் ஒப்படைக்காவிட்டால் மகன் மரணமடைவான். ஒப்படைத்தால்
மகனுடன் சேர்த்து நான்கு கோடி மக்கள் மரணம் அடைவார்கள். நம்ம கேனை மச்சான் ஜெயம்
ரவி என்னவென்றால் மகனைக் காப்பாற்ற வேண்டுமென வில்லனுக்கு சாதகமாக செயல்படுகிறார்.
சில பேர் இன்டர்ஸ்டெல்லார்,
கிராவிட்டியுடன் ஒப்பிடக்கூடாது என்கிறார்கள். ஆல்ரைட் ஒப்பிடவே இல்லை. அப்படி
ஒப்பிட்டால் கூட இந்திய தரத்துக்கு, பட்ஜெட்டுக்கு, மார்க்கெட்டுக்கு கிராபிக்ஸ்
அபாரம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் கதை, திரைக்கதையில் எல்லாம் பார்வையாளர்களை
உட்கார வைத்து மொட்டை போட்டிருக்கிறார்கள்.
ஷக்தி செளந்தர்ராஜன் என்கிற ஆசாமி ஒவ்வொரு
ஃபர்னிச்சராக போட்டு உடைத்துவிட்டு, தான் மட்டும் அந்த பாதிப்பிலிருந்து லாவகமாக
தப்பித்துக் கொள்கிறார். முதல் ஸ்பேஸ் படம் என்று எப்படியோ பார்வையாளர்களை ஏமாற்றி
திரையரங்கிற்கு வர வைத்தாகிவிட்டது. அதனால் இப்படம் வசூலில் பாதிப்பிருக்காது. ஆனால்
தமிழில் அடுத்த பத்து வருடத்துக்கு யாரும் ஸ்பேஸ் படத்தைப் பற்றி யோசித்துப்
பார்க்க முடியாதபடி அந்த உடைமையை நாசம் செய்தாயிற்று. அடுத்து நம்ம ஆள், ஃபர்ஸ்ட்
வேம்பயர் மூவி, ஃபர்ஸ்ட் மான்ஸ்டர் மூவி என்று ஏதாவது ஃஃபர்னிச்சரை உடைக்கக்
கிளம்புவார்.
டிக் டிக் டிக் பார்த்தபிறகு எனக்கு
ஆந்திரா மெஸ் அபாரமாக இருப்பதாகத் தோன்றுகிறது.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|