25 March 2015

ரசிகன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கால்களை படித்து முடித்த கையோடு நான் தொட்ட அடுத்த நாவல் ரசிகன். இதிலிருந்து என்னுடைய மன உறுதியையோ அல்லது நாவலின் மீது வைத்துள்ள நம்பிக்கையையோ உணர்ந்து கொள்ளலாம்.

முன்னுரையில் அபிலாஷ் நாவலை எப்படி எழுதினார் ? என்ன மாதிரியான சிரமங்களை எதிர்கொண்டார் ? என்பது குறித்து சுருக்கமாக எழுதியிருக்கிறார். எழுதும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அபிலாஷின் முன்னுரை கட்டாய பாடம்.

இடதுசாரி கொள்கையுடைய எண்பதுகளின் இளைஞனான சாதிக் என்பவனே நாவலின் மைய கதாபாத்திரம். அவனுடைய வாழ்வின் மூன்று வெவ்வேறு காலகட்டங்களை நாவல் ஒரு பார்வையாளனாக, நண்பனாக உடனிருந்து கவனித்து நமக்கு விவரிக்கிறது.

நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் மாற்று சினிமா, மலையேற்ற சுற்றுலா, சிற்றிதழ் சிந்தனைகள் என்று ஒரு நாடோடியைப் போல அதன் விருப்பத்திற்கேற்ப பயணிக்கிறது. தீவிர இடது சாரி கொள்கை பிடிப்பு கொண்ட சாதிக் வறுமையின் கோர பிடியிலும் கூட ‘செங்கதிர்’ என்ற சிற்றிதழை விடாமல் நடத்தி வருகிறான். அவன் லெளகீக வாழ்க்கையில் ஈடுபாடற்றவனாக செயல்படுகிறான். நாவலின் இரண்டாவது பாகத்தில் அவன் அந்த காலகட்டத்தில் கேரளாவில் பிரபலமாக இருந்த பேரலல் காலேஜில் விரிவுரையாளராக பணிபுரிகிறான். அவனுடைய கொள்கை பிடிப்புகள் சற்று தளர்ந்திருக்கின்றன. ரெஜினா என்கிற பெண்ணை காதலிக்கிறான். காதலுக்காக பல இன்னல்களை சந்திக்கிறான். சிறைக்கு கூட செல்கிறான். மூன்றாவது பாகத்தில், அவனுடைய குணநலன்கள் மொத்தமாகவே மாறிப் போயிருக்கின்றன. அவன் ஒரு தீவிர ரஜினி ரசிகனாக இருக்கிறான். நிறைய குடிக்கிறான். அவனுடைய செயல்பாடுகள் கிட்டத்தட்ட ஒரு மனப்பிறழ்வு ஏற்பட்டவனைப் போல இருக்கின்றன.

அபிலாஷின் முந்தைய நாவலுக்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலும் நாகர்கோவில் / கன்னியாகுமரி வட்டார பேச்சு மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் அப்பா காணாமல் போய்விடுகிறார். இரண்டிலும் அடிக்கடி கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று யாராவது வெட்டியாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே மிக மொண்ணையான விவாதம் கடவுள் உண்டா இல்லையா என்பதாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் உண்டா இல்லையா என்று மணிக்கணக்கில் எந்தவித கன்க்லூஷனும் இல்லாமல் விவாதிப்பதை விட அலகு குத்திக் கொள்வதோ, தீ மிதிப்பதோ கூட பெரிய மூட நம்பிக்கையில்லை.

முக்கியமாக இரண்டு நாவல்களில் உள்ள பொதுவான சிக்கல், கண்டதையும் எழுதி வைத்திருப்பது. மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். சில நொடிகளில் வெவ்வேறு தலைப்புகளில் எண்ணற்ற விஷயங்களை சிந்திக்கக்கூடிய ஆற்றல் படைத்தது மனித மனம். ஆனால் அப்படி மனித மனம் நினைப்பது அத்தனையையும் ஒன்றுவிடாமல் எழுதிக்கொண்டே வந்தால் நன்றாகவா இருக்கும். இன்னொரு விஷயம், இலக்கியவாதிகள் சும்மா ஒரு கெத்துக்காக முலைகள், யோனி, விரைத்த ஆண்குறி, தேவடியாள் போன்ற வார்த்தைகளை மானே தேனே மாதிரி பயன்படுத்துவது நவநாகரிகமாக மாறிவிட்டது. அது ஒரு எல்லையை மீறிப்போகும்போது எரிச்சலை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, நாவலின் 139ம் பக்கம் ஒரு கதாபாத்திரத்தை விவரிக்கிறது – அவர் கண்ணை மூடி நமசிவாய நமசிவாய என உதடு குவித்து முணுமுணுத்தார். அப்படிக் குவியும்போது அவர் உதடுகள் பார்க்க நாயின் ஆசனவாய் திறந்து மூடுகிறாற் போல இருந்தன. இதனை படிக்கும்போது எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், எழுத்தாளர் எப்போதோ ஒரு சமயம் நாயின் ஆசனவாயைப் போய் குறுகுறுவென பார்த்திருக்கிறார். அது திறந்து மூடும்போது எப்படி இருக்கிறது என்று தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். பின்னர், பெரியவர் உதடு குவிக்கும்போது அது முன்பு பார்த்த நாயின் ஆசனவாய் போலவே இருக்கிறதா என்று ஒப்பிடுகிறார். நினைத்துப் பார்க்கவே நாராசமாக இருக்கிறது.

சமீபமாக படித்த நாவல்களில் உள்ள பொதுவான ஒரு அம்சம், போகிறபோக்கில் இலைமறை காயாக மற்ற எழுத்தாளர்களை பகடி செய்கிறார்கள். குறிப்பாக, சாரு நிவேதிதாவை அதிகம் சீண்டுகிறார்கள். ஒன்றிரண்டு நாவல் எழுதியிருக்கும் புதிய எழுத்தாளர்கள் இப்படி கிண்டலடிப்பது சுட்டுப் போட்டாலும் நடிப்பே வராத மிர்ச்சி சிவா ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ராமராஜனை கிண்டலடிப்பதை நினைவூட்டுகிறது.

ரசிகனை பொறுத்தவரையில் அபிலாஷின் முந்தைய நாவலைப் போல போரடிக்கவில்லை. ஆனால் அத்தியாயங்கள் போகப் போக நாவலின் கதாபத்திரங்களுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் அரைகிறுக்கு போல இஷ்டத்துக்கு எதையாவது செய்கிறார்கள். அத்தியாயத்துக்கு ஒரு பிராண்ட் என்று குடிக்கிறார்கள். முதலில் டைரெக்டர்’ஸ் ஸ்பெஷல், அப்புறம் ப்ளாக் லேபிள், பகார்டி லெமன், ஈ & ஜெ, ஓல்ட் மாங்க், மார்பியஸ் என்று டாஸ்மாக் வகையறா அத்தனையும் வந்து போகின்றன. பெண் கதாபாத்திரம் ஒன்று மார்பகங்களை உடைகளுக்கு வெளியே எடுத்து விபத்தில் இறந்த கணவனின் மூளையை நினைத்து உச்சம் அடைகிறது. ம்ஹூம். ரசிகன் என்பது என்ன ஒரு அற்புதமான தலைப்பு என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 March 2015

ஜே.கே & ராஜதந்திரம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஜே.கே – உண்மையில் எனக்கு ஜே.கே பார்க்கும் ஆர்வம் துளி கூட இல்லை. C2Hன் முதல் முயற்சியை ஆதரிக்கும் ஒரு சமிக்ஞையாக குறுந்தகடை மட்டும் வாங்கி வைத்திருந்தேன். பிறிதொரு சமயத்தில் படத்தை ஓடவிட்டு நகம் வெட்டுவது, காது குடைவது மற்றும் ஹாலில் நடை பயில்வது போன்ற உபயோகமான அலுவல்களுக்கு மத்தியில் கொஞ்சம் படமும் பார்த்தேன்.

பொதுவாக விமர்சகர்கள் கழுவி ஊற்றிய ஒரு படத்தை எந்த எதிர்பார்ப்புமின்றி பார்க்கும்போது, படம் ஒன்றும் அவ்வளவு மோசமில்லையே என்று தோன்றும். கத்தி, லிங்கா படங்களை நான் பின்னாளில் பார்த்தபோது எனக்கு அவை அவ்வளவாக ஏமாற்றம் அளிக்கவில்லை. ஜே.கேவும் அந்த லிஸ்ட் தான்.

ஏதோ வண்டி ஓடுது என்று சலித்துக்கொள்பவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய படம். என்ன ஒன்று, கேன்சர், ப்ரைன் டியூமர் போன்ற இத்யாதிகளை இன்னமும் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். சித்தார்த், ப்ரியா ஆனந்த் அப்புறம் இதே நித்யா நடித்த நூற்றியெண்பது படம் அங்கங்கே ஞாபகத்துக்கு வருகிறது.

அபாரமான தரம் என்பதாலும், விலை வெறும் ஐம்பது ரூபாய் மட்டும் தான் என்பதாலும் படம் சுமாருக்கு கீழ்தான் என்பதை மறந்துவிட்டு தாராளமாக ஜே.கே டிவிடியை வாங்கலாம்.

ராஜதந்திரம் – ஏற்கனவே செத்து புதைத்த படத்தை பற்றி எழுதுவதால் யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கிறதா என்று தெரியவில்லை. மீஞ்சூர் மணியில் இந்த வாரம் வெளியான படத்தை இரண்டே நாட்களில் தூக்கி வீசிவிட்டார்கள். திருவொற்றியூர் திரையரங்கு ஒன்றில் ஐ’யும் வேலையில்லா பட்டதாரியும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் சென்ற வாரம் வெளியான படம் எம்மாத்திரம். நான் சென்றபோது என்னையும் சேர்த்து சரியாக பதினைந்து பேர் மட்டும் திரையரங்கில் இருந்தோம்.

தமிழ் சினிமாவின் ஒரு சாபக்கேடு, ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் தொடர்ந்து அதே பாணியில் படங்கள் எடுப்பது. தற்சமயம் ட்ரெண்டில் இருப்பது ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது. ஆங்கிலத்தில் இதனை heist படங்கள் என்கிறார்கள்.

ராஜதந்திரத்தின் காட்சிகள் அப்படியே நமக்கு அதே சாயலில் சமீபத்தில் வெளியான மற்ற படங்களை நினைவூட்டுகின்றன. எவ்வளவு நாளைக்குத்தான் சின்ன சின்னதா அடிக்கிறது ? பெருசா அடிச்சிட்டு செட்டில் ஆயிடணும் என்கிற வசனம் வரும்போதும், எம்.எல்.எம் மீட்டிங்கில் எல்லோருமாக சேர்ந்து கை தட்டும்போதும் இதெல்லாம் ஏற்கனவே பார்த்த விஷயங்கள் ஆயிற்றே என்று நெருடுகிறது. உச்சகட்டமாக நகைக்கடை நூதன கொள்ளை காட்சி சதுரங்க வேட்டையை நினைவூட்டுவது மட்டுமல்லாமல் காட்சி படமாக்கப்பட்ட இடம் கூட அதே தானா என்று சந்தேகிக்க வைக்கிறது.

மற்றபடி, நூற்றிமுப்பது நிமிட படத்தில் கடைசி இருபது நிமிடங்கள் வரை யார் யாருக்கு பின் அடிக்கிறார்கள் என்று எந்த க்ளுவும் கொடுக்காமல் நகர்த்தி இருப்பது பாராட்டிற்குரியது. மிஷெல் டி’மெல்லோவை வைத்து தெலுங்கு சினிமாவில் என்னவெல்லாம் சாகசம் செய்கிறார்கள் தெரியுமா ? இங்கே என்னடா என்றால் அழவும், கதாநாயகனுக்கு அறிவுரை சொல்லவும் பயன்படுத்துகிறார்கள். கதாநாயகனின் துறுதுறு நண்பராக நடித்திருப்பவர் நல்ல ரிசோர்ஸ். யாரென்று விசாரித்தால் பண்பலை வானொலியை ஒருகாலத்தில் கலக்கிக்கொண்டிருந்த தர்புகா சிவாவாம். நல்வரவு தர்புகா சிவா.

விமர்சனங்களை படித்துவிட்டு நல்ல படத்தை தவற விட்ட குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம் என்று அடித்து பிடித்து கடைசி நாளன்று திரையரங்கில் பார்த்த படம், அவ்வளவு மோசமில்லை என்றாலும் இவ்வளவு ஆர்பாட்டங்களுக்கு பொருந்தாத ஒரு சுமாரான படமாகவே தோன்றுகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 March 2015

கால்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வளவு போரிங்கான நாவலை இதுவரையில் நான் வாசித்ததில்லை. உண்மையில், நான் அபிலாஷுடைய ரசிகனை வாசிக்க விரும்பினேன். அதனை வாசிப்பதற்கு அவருடைய முதல் நாவல் என்கிற வகையிலும், யுவ புரஸ்கார் விருது பெற்றது என்பதாலும் கால்கள் ஒரு Pre-requisite என்று நானாகவே கருதினேன்.

மொத்தம் 550 பக்கங்கள். நிறைய எழுத்தாளர்கள் எழுத்துரு அளவை பெரிதாக வைத்தோ, வரி வெளி அதிகமாக விட்டோ அல்லது படங்களைச் சேர்த்தோ பக்கங்களை அதிகரிக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் புத்தகம் முழுக்க முழுக்க எழுத்துகளால் நிறைந்திருக்கிறது என்பது முதல்முறை புரட்டும்போதே புரிந்துவிட்டது. ஆனால் உள்ளடக்கம் தான் சற்று சிக்கலானது. நான் பொதுவாக சோகமயமான படைப்புகளை விரும்புவது கிடையாது. கால்களை பொறுத்தவரையில் சோகம் என்று சொல்ல முடியாது. ஒருவிதமான அயர்ச்சியான உணர்வு.

சில நாவல்களை எடுத்து ஐம்பது பக்கம் வரை தாண்டி ஒரு Pleasure of the Text-ம் கிடைக்கவில்லை என்கிற பட்சத்தில் அதைத் தொடர்ந்து படித்து காலத்தை விரயம் ஆக்காமல் மற்றொன்றை ஆரம்பித்தல் என்றுமே சாலச் சிறந்தது என்கிறார் பிரபு காளிதாஸ். ஒவ்வொரு முறை மூடி வைத்துவிடலாமா என்று யோசிக்கும்போதும் யுவ புரஸ்காரை நினைத்துக்கொண்டே தம் கட்டி முடித்துவிட்டேன்.

இளம் பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட மது என்கிற பருவப்பெண்ணை மையப்படுத்தி கதை நகர்கிறது. தட்டையான நாவல் என்பார்களே, அதற்கு கால்கள் ஒரு நல்ல உதாரணம். கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள் வரை (365 பக்கங்கள் !) நாவல் ஒரே தொனியில் பயணிக்கிறது. அதற்குப் பிறகும் கூட பெரிய வித்தியாசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மதுவின் உணர்வுகள் தான் நாவலின் சாரம் எனும்போது அது எவ்வளவு வலிமையானதாக இருந்திருக்க வேண்டும். நாவலில், மது யாரிடமும் எந்த உணர்ச்சியையும் பெரிதாக காட்ட மறுக்கிறாள். அப்பா, அம்மா, வைத்தியர், கார்த்திக் என பல பாத்திரங்கள் வருகின்றன. அவர்களையெல்லாம் மது எந்தவித சலனமும் இல்லாமல் எதிர்கொள்கிறாள், எதிர்கொள்கிறாள், எதிர்கொண்டே இருக்கிறாள், கடைசி வரைக்கும் எந்த மாற்றமும் இல்லை. மதுவுக்கு யாரைப் பார்த்தாலும் சோர்வாக இருக்கிறது. மற்றொரு எழுத்தாளருக்கு அடிக்கடி துக்கம் தொண்டையை அடைப்பது போல மதுவுக்கு அடிக்கடி சோர்வாக இருக்கிறது. அதை படிக்கும்போது நமக்கும் சோர்வாக இருக்கிறது. வார நாளொன்றின் மதியவேளையில் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு மாதிரியான சவசவ உணர்வு ஏற்படும் அல்லவா ? அந்த உணர்வுதான் நாவல் முழுமைக்கும் கிடைக்கிறது.

ஆரம்ப அத்தியாயங்களில் மது, கார்த்திக் உரையாடல்கள் வருகின்றன. பழைய பாலச்சந்தர் படங்களில் வருவது போல ஒருமாதிரி லொட லொட. ஒரேயொரு ஆறுதல், நல்லவேளையாக மது ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கவில்லை. அப்படி பிறந்திருந்தால் அதற்கும் சேர்த்து வேறு அழுது வடிந்திருக்கும் நாவல்.

உண்மையாகவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதையே நினைத்து வருந்திக்கொண்டோ அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை காலிபர் இல்லாமல் நடந்து கீழே விழுந்து கொண்டோவா இருக்கிறார்கள் ? அல்லது அப்படி இருந்தால் அது ஊக்குவிக்கக் கூடிய விஷயமா ? என்னைப் பொறுத்தவரையில், கால்கள் ஆப்டிமிஸ்டிக் தொனியில் எழுதப்பட்ட ஒரு பெஸ்ஸிமிஸ்டிக் நாவல்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 March 2015

எனக்குள் ஒருவன்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சில வருடங்களுக்கு முன் இணையவெளியில் பரபரப்பாக பேசப்பட்ட படம் – லூஸியா (கன்னடம்). பொதுவாக இதுபோல ஊரே சிலாகித்து கொத்து பரோட்டா போட்டுவிடும் படங்களை பார்க்கும் ஆர்வம் மொத்தமாக வடிந்து விடுவதுண்டு. நான் இன்னமும் ‘திருஷ்யம்’ பார்க்கவில்லை. லூஸியாவை தமிழில் எடுக்கிறார்கள் என்பதில் எனக்கிருந்த ஒரேயொரு ஆர்வம் அதன் தமிழ் தலைப்பு. (கமலின் எனக்குள் ஒருவன் சிறுவயதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்களுள் ஒன்று). என்னதான் இருக்கிறது என்று லூஸியாவின் விக்கிபீடியா பக்கத்தை திறந்தேன். சைக்காலஜிக்கல் த்ரில்லர் என்று தொடங்கியது. அப்படியே மூடி வைத்துவிட்டேன். அதையே உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன். படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்வது உத்தமம்.

-- SPOILER ALERT –-

புராதன கால திரையரங்கு ஒன்றில் பணிபுரியும் கடைநிலை ஊழியன் விக்னேஷ் தூக்கமின்மையால் அவதிப்படுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் லூஸியா என்கிற போதை மாத்திரைகள் அவனுக்கு கிடைக்கிறது. அதனை உட்கொண்டால் நமக்கு விருப்பமான வாழ்க்கையை கனவுலகில் வாழலாம். அப்படி திரையரங்க ஊழியன் திரைப்பட கதாநாயகனாக கனவு காண்கிறான். போதும். கதை சொல்வதை நிறுத்திக்கொள்கிறேன்.

ஆரம்பத்தில் சில நிமிடங்கள் அவ்வளவு நம்பிக்கையூட்டுவதாக இல்லை. குறிப்பாக, ஜான் விஜய் அரை கிறுக்கன் போல அறிமுகமாகும் காட்சியை பார்த்ததும் எனக்கு எரிச்சலாகிவிட்டது. லூஸியாவை தொட்டதும் தான் நிமிர்ந்து உட்கார முடிகிறது. அங்கிருந்து இரண்டு கிளைகளாக ஒரே சீராக நகரும் கதை இறுதியில் சில ஆச்சர்யங்களுடன் நிறைந்த உணர்வை கொடுக்கிறது.

சித்தார்த்துக்கு இரண்டு பறக்கோடி வேடங்கள். இரண்டிலும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இரண்டு வேடங்களுக்கும் இடையே காட்டும் வித்தியாசம் வியப்பூட்டுகிறது. அதில் சினிமா ஹீரோ வேடம் சித்தார்த்துக்கு ஹோம் கிரவுண்ட் மாதிரி. நிதானமாக அசத்தியிருக்கிறார்.

தீபா சன்னிதிவிற்கு ஒடுங்கிய கன்னங்கள். பார்ப்பதற்கு வெகு சுமாராகவே இருக்கிறார். மேகா படத்தின் கதாநாயகி ஸ்ருஷ்டி சில காட்சிகளில் வருகிறார். முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேனும், (ஆஃபீஸ் புகழ்) உதயபானு மகேஸ்வரனும் கச்சிதம்.

இசை சந்தோஷ் நாராயண்தானா என்று சந்தேகமாகவே இருக்கிறது. பாடல்கள் அப்படியொன்றும் பிரபலமானதாக தெரியவில்லை. பிரபலமாகவே பாடலும் ஏண்டி இப்படி பாடலும் நன்றாக இருக்கின்றன. மற்றவை உறுத்தாமல் வந்து போகின்றன.

பவன் குமார்
எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் பிரதான அம்சம் அதன் கதை. எல்லாப் புகழும் பவன் குமாருக்கே. ஒரு கனவு எப்படி இருக்கும் என்பதை நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, நிஜத்தில் எஜமானராக வருபவர் கனவில் அதற்கு நேர்மாறாக பணியாளராக வருகிறார் (அல்லது வைஸ் வெர்ஸா). ‘பேரடாக்ஸ்’ என்ற சித்தாந்தத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள். உணர்வுப்பூர்வமான ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.

குறைகள் என்று பார்த்தால் முதலில் வருவது அடிக்கடி டைம் பார்க்க வைக்கும் மெதுவான திரைக்கதை. ஆடுகளம் நரேனின் குடும்பக்கதை எல்லாம் தேவையில்லாதது போல தோன்றியது. கமர்ஷியல் மூவி பப்ஸுகளுக்கு கண்டிப்பாக பிடிக்காது. திரையரங்கம் விட்டு வெளியே வரும்போது நிறைய பேர் சலம்பிக்கொண்டே வெளியேறுவதையும், வற்புறுத்தி அழைத்து வந்த நண்பனை கடிந்துகொண்டதையும் பார்க்க முடிந்தது.

மற்றபடி, நல்ல சினிமாவை தேடுபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம். நம்மவர்கள் அடிக்கடி ‘ஹாலியுட் தரத்தில்’ என்பார்கள். அதாவது தொழில்நுட்பத்தை ஒப்பிட்டு. எனக்குள் ஒருவன் அதைவிட ஒரு படி மேலே போய் கதையம்சத்தில் ஹாலியுட் தரத்தில் வெளிவந்திருக்கிறது. தவறவிடாதீர்கள் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 March 2015

ஃப்ராய்ட் தந்த முத்தம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மதியம் பன்னிரண்டே முக்காலுக்கு சைதாப்பேட்டை நிலையத்தை தாண்டி விரைந்துகொண்டிருக்கும் கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயிலின் ஒரு பெண்கள் பெட்டிக்கு முந்தைய பெட்டியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். கண்களில் தூக்கம் தேங்கியிருக்கிறது. கைகளோ சிக்மண்ட் ஃப்ராய்டின் புத்தகமொன்றை தாங்கியிருக்கின்றன. முப்பத்தி ஐந்தாம் பக்கத்தின் வலது மூலையில் உள்ள வரிகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்...

எல்லா கண்ணியமானவர்களுக்கும் அசிங்கமான...

நிறைந்த வெள்ளிக்கிழமை. மஞ்சள் பூக்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து நிறைந்திருக்கும் சாலை. ஒருபுறம் அரூபமான பாறைகள். மறுபுறம் மரவேலி அமைக்கப்பட்ட அழகழகான தோட்டங்கள். அவற்றில் ஒன்றிலிருந்து பெண் புலியொன்று சிரித்தபடி எட்டிப்பார்க்கிறது. எனது குறி விறைக்கிறது. சுற்றிலும் வீடுகள் எதுவும் தென்படவில்லை. மனிதர்களும், எனக்கு முன்னால் நடந்து கொண்டிருப்பவளைத் தவிர. சமீபத்தில் வெளியான ஒரு திரைப்பட பாடலை பாடியபடி அவள் நடக்கிறாள். நான் தொடர்கிறேன். புட்டங்களில் முரசு கொட்டும் அவள் கூந்தலை கவனிக்கிறேன். கொஞ்ச தூரத்தில் இன்னொரு மனிதன் தென்படுகிறான். கருத்த தேகத்துடன் முக்கால் நிர்வாணமாக நின்றுக்கொண்டிருக்கிறான். எனக்கு முன்பாக நடந்துகொண்டிருப்பவளை பார்த்து ஈஈஈஈ’யென இளிக்கிறான். ஒருவேளை முன்புறமும் முரசு இருக்கிறதோ என்னவோ ? இருந்தாலும் இசை எழுப்ப கூந்தல் இல்லையே. அவன் தடிமனான ஒரு மரக்கிளையை ஜில்லெட் ரேஸர் வைத்து ஷேவ் செய்துகொண்டிருக்கிறான். அதிலிருந்து உதிரும் இலைகள் பச்சையில் இருந்து சிகப்புக்கு மாறுகின்றன. திடீரென முரசொலி கவன ஈர்ப்பு செய்கிறது. நடந்துகொண்டிருந்தவள், சட்டென திரும்பிப் பார்க்கிறாள். பரிட்சயமான முகமாக தெரிகிறது. அவளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். பெயர்தான் நினைவுக்கு வரவில்லை. ஒரு படத்தில் நாயகனிடம் மன்னிப்பு கோருவதற்காக கைகளை பறவையின் இறக்கைகளைப் போல விரித்துக் காட்டுவாள். அது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. ஏதோ என்னிடம் ஏற்கனவே எதையோ பேசி தீர்மானித்து வைத்திருப்பது போல ஒரு பார்வையை உமிழ்ந்துவிட்டு மறுபடியும் நடக்கிறாள். பல மைல் தூரம் நடந்திருப்பாள். சலிக்கவில்லை. பத்து மைலுக்கு முன்னால் பார்த்த பார்வை மட்டும் கிடைத்திராவிட்டால் சலித்திருக்கக்கூடும். சாலையின் இடது புறத்தில் பல்வேறு மரங்களின் கிளைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து நீளமான கிளையொன்றை தேர்ந்தெடுக்கிறாள். இதழ்கள் பிரிகின்றன. அந்த மரக்கிளையை நேசிப்பதாக சொல்கிறாள். அது அவளுடைய தோட்டத்திற்கு தேவைப்படுகிறதாம். மரக்கிளையை தோட்டத்திற்கு கொண்டு வந்து போட முடியுமா ? என்கிறாள்.

ஜனத்திரளின் சத்தம் கேட்கிறது. கிண்டியின் நிலையத்தை கிழித்து நுழைந்துக்கொண்டிருக்கிறது ரயில். இன்னும் நிற்கவில்லை. வேகம் குறைந்துகொண்டே இருக்கிறது. ஜனத்திரள் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

... கனவுகள் வரத்தான் செய்கின்றன ...

அவளும் நானும் நகரத்தின் பிரபலமான ஷாப்பிங் மாலின் நான்காவது மாடியிலோ ஐந்தாவது மாடியிலோ நின்று கீழே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அன்றைய தினம் போகி என்பதால் மாலுக்கு நடுவே பிரம்மாண்டமாக அக்கினிக்குண்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. யுவன்களும் யுவதிகளும் ஆடைகளை களைந்து தீயில் வீசிவிட்டு நிர்வாணமாக திரும்பிச் செல்கிறனர். எனக்கு அருகில் நின்றுக்கொண்டிருப்பவளும் ஒரு யுவதிதான். அவள் பக்கமாக திரும்பி நேற்றைய ரயில் பயணத்தில் அவள் என் கனவில் வந்தது பற்றி கூறுகிறேன். என்ன கனவு என்கிறாள். சொல்கிறேன். ஒன்று விடாமல் சொல்லவில்லை. ‘முரசு’ சம்பவத்தை மட்டும் தந்திரமாக சென்ஸார் செய்துவிட்டு மற்றவைகளை சொல்கிறேன். உண்மையில் அந்த முரசு சம்பவம் நடைபெற வாய்ப்பில்லை. அவளுக்கு அவ்வளவு நீளமான கூந்தல் இல்லை. முழுக்கனவையும் கேட்டுவிட்டு சுவாரஸ்யமில்லாமல் சிரிக்கிறாள். ஒரு தற்செயலான பொருத்தம் என்ன தெரியுமா ? நான் தற்சமயம் சிக்மண்ட் ஃப்ராய்டை படித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை அதனால் தான் இப்படியெல்லாம் கனவுகள் வருகிறதா ? என்று கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன். பெண்களுக்கு கவலையுடன் இருப்பவர்களை பிடிக்கிறது. அப்போதுதானே சமாதானப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அருகில் வந்து என்னை கட்டிபிடித்து அரவணைக்கிறாள். நாவில் பட்ட எக்லேர்ஸ் சாக்லேட் போல உருக்குலைந்து கொண்டிருக்கிறேன். உருக்குலைந்த என்னை உருண்டையாக திரட்டி போகி நெருப்பில் வீசுகிறாள்.

... என்பது ஒரு அழகான உண்மை.

தொப்புள் தெரிய புடவை கட்டிய ஒருத்தி என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள். க்ளக் க்ளக் க்ளக். யாரோ பரோட்டாவுக்கு மாவு பிசைந்துவிட்டு கடப்பா கல்லில் போட்டு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அடப்பாவிகளா... இவ்வளவு பலமாகவா அடிப்பது ? அருமையான கனவொன்று கண்டு கொண்டிருக்கின்றேனே அய்யா என்று புலம்புகிறேன். யாரோ என் உச்சந்தலையில் கை வைத்து தம்பி தம்பி என்று அழைப்பது போல தெரிகிறது. அடேய், அரை மணிநேரம் கழித்து வா ஐம்பது பரோட்டா சாப்பிடுகிறேன். இப்போது போய் விடு !

“தம்பி... அக்காவுக்கு காசு கொடுப்பா...”

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment