25 December 2017

பிரபா ஒயின்ஷாப் – 25122017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தொடர்ச்சியாக வெளிவரும் ஐம்பதாவது ஒயின்ஷாப் இடுகை இது. எச்சரிக்கை: சுய புராணம். நான், எனது, எனக்கு போன்ற சொற்களை விரும்பாதவர்கள் ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் என்று கமெண்ட் போட்டுவிட்டோ, போடாமலோ ஓடிவிடலாம்.

நான் சொல்லப்போகும் விஷயங்கள் உங்களுக்கு வேடிக்கையாக அல்லது சில்லறைத்தனமாகக் கூட தெரியலாம். என்னளவில் தொடர்ச்சியாக ஐம்பது வாரங்கள் விடாப்பிடியாக ஒயின்ஷாப்பை எழுதி முடித்திருப்பதை ஒரு சாதனையாகவே பார்க்கிறேன். 

ஒயின்ஷாப்பின் கதை :-

முதன்முறையாக ஜனவரி 2011ல் பிரபா ஒயின்ஷாப் என்கிற தலைப்பில் வாராவாரம் எழுதத் துவங்கினேன். (பழைய இடுகைகளை படித்துப் பார்ப்பது சங்கடமூட்டும் விஷயம் என்பதால் இணைப்பு கொடுக்கவில்லை). அது கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் என்ற இரு ஜாம்பவான்கள் கோலோச்சிக் கொண்டிருந்த சமயம். ஜாக்கியின் சாண்ட்வெஜ் அண்ட் நான்வெஜ் புதன் மற்றும் வெள்ளி வெளிவந்துக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். கேபிளின் கொத்து பரோட்டா முறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளிவரும். இவர்கள் தவிர்த்து அவியல், குவியல், காக்டெயில் என்று இன்னும் ஏராளமான பெயர்களில் நிறைய பேர் கலவை இடுகை எழுதிக் கொண்டிருந்தார்கள். நானும் அப்படி ஒன்றை எழுத ஆசைப்பட்டேன். தலைப்பு என்ன வைக்கலாம் என்று யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்தது காக்டெயில் தான். அதனை ஏற்கனவே கும்மாச்சி பயன்படுத்திக் கொண்டிருந்ததால் குவார்ட்டர் அல்லது சரக்கு நிமித்தமாக ஏதாவது வைக்கலாம் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒருநாள் வடிவேலுவின் ஒயின்ஷாப் காமெடி என் சிந்தனைக்கு எப்படியோ எட்டிவிட்டது. பத்து பொருத்தமும் கொண்ட கச்சிதமான பெயர். அப்படி துவங்கியது தான் ஒயின்ஷாப். சில மாதங்கள் கழித்து அதற்கென ஒரு ரகளையான பேனரை வடிவமைத்துக் கொடுத்தார் நண்பர் சுகுமார் சுவாமிநாதன். தற்போது என் வலைப்பூவில் இருக்கும் ஆளவந்தான் கமல் படம் போட்ட பேனரை வடிவமைத்துக் கொடுத்தும் அவரே. 

வாராவாரம் எழுத வேண்டுமென்றால் கொஞ்சமாவது அதற்கென நேரம் ஒதுக்க வேண்டும். எனவே ஞாயிற்றுக்கிழமையில் நேரம் கிடைக்கும்போது எழுதி திங்களன்று வெளியிட வேண்டுமென முடிவு செய்துக்கொண்டேன். இந்த விஷயத்தில் எனது முன்னோடியான கேபிளைப் போலவே ஒவ்வொரு திங்கட்கிழமையும் எழுதுகிறேன் என்று எனக்கு அப்போது ஒரு கர்வம் இருந்தது. கேபிளிடம் எப்போதும் வியக்கும் விஷயம் அவரது கன்ஸிஸ்டன்ஸி. அவர் சினிமாவில் இயக்குநரான பிறகும் கூட விடாமல் கொத்து பரோட்டா எழுதிக் கொண்டிருந்தார். கன்ஸிஸ்டன்ஸியை பொறுத்தவரையில் என்னால் அவருக்கு அருகில் கூட நெருங்க முடியவில்லை. ஆரம்பத்தில் திட்டம் எல்லாம் பயங்கரமாக போட்டாலும் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் அவசர அவசரமாக எழுதும்படி இருந்தது. என்னுடைய கேஸ் ஹிஸ்டரியை எடுத்துப் பார்த்தால் தெரியும். புத்தாண்டு துவங்கியதும் உத்வேகமாக எழுதத் துவங்குவேன். ஒன்றிரண்டு மாதங்கள் கடந்தபிறகு கொஞ்சம் கொஞ்சமாக எழுதுவது குறைய ஆரம்பிக்கும். என்ன பெரிய ஒயின்ஷாப் என்கிற சலிப்பு ஏற்படும். சோர்வு வீழ்த்தும். மாதங்கள் செல்லச் செல்ல ஜனவரியில இருந்து ஃப்ரெஷ்ஷா தொடங்குறோம் என்று நினைக்க ஆரம்பித்துவிடுவேன். 

இப்போதும் அந்த சலிப்பு, சோர்வு, புத்தாண்டில் பார்த்துக் கொள்ளலாம் என்கிற நினைப்பு எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் இந்த ஒயின்ஷாப் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கறாராக இருந்திருக்கிறேன். சற்று மிகைப்படுத்தி சொல்வது போல தோன்றினாலும் இதுதான் உண்மை. சில எழுத்தாளர்கள் எல்லாம் தங்கள் புத்தகத்தின் முன்னுரையில் புத்தகம் அதுவே அதனை எழுதிக்கொண்டது என்பார்கள். அப்படி படிக்கும் போதெல்லாம் மனதிற்குள் ஒரு நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொள்வேன். ஆனால் ஒயின்ஷாப் விஷயத்தில் அதனை நானே நேரடியாக உணர்ந்தேன். மேலும் என்னை இணைய நண்பர்கள் யாராவது நேரில் சந்தித்தால் நான் அமுக்குணி மாதிரி இருப்பதை பார்த்துவிட்டு எனக்கும் நான் எழுதுவதற்கும் சம்பந்தமே இல்லை என்பார்கள். அது உண்மைதான். உங்களை நேரில் வந்து சந்திக்கும் அந்த அம்மாஞ்சிக்கும் இதனை எழுதிக் கொண்டிருக்கும் நபரும் ஒரே ஆள் கிடையாது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஜனவரியில் மசினகுடி போயிருந்தோம். அங்கிருந்து திரும்பி வரும்போது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆகியிருந்தது. பயங்கரமான அயர்ச்சி. ஒயின்ஷாப்பாச்சு மயிராச்சு என்று நேராக போய் படுத்துவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தால் ஒயின்ஷாப் வெளியாகியிருந்தது. வீட்டில் கேட்டதற்கு இடையில் சுமார் இரண்டு மணிநேரங்கள் நான் படுக்கையில் இல்லை என்று மட்டும் சொன்னார்கள்.

இப்படி ஒரு சம்பவம் மட்டுமல்ல. நான் திங்கட்கிழமையை தேர்ந்தெடுத்து வைத்திருப்பதால் லாங் வீக்கென்ட் அல்லது விடுப்பு எடுத்து பயணம் சென்றால் அங்கேயிருந்து எழுத வேண்டியது வரும். ஒருமுறை விளாத்திகுளத்தில் உறவினர் இல்ல காதுகுத்துக்கு போய் அங்கிருந்து எழுதினேன், சமீபத்தில் ஒரு வாரம் கொல்லிமலையில் நள்ளிரவில் கொல்லி பிசாசு போல விழித்துக்கொண்டு ஹோட்டல் ரிசப்ஷன் மோடம் அருகே லேப்டாப்பை எடுத்துக்கொண்டு போய் அமர்ந்து அடித்த கூத்தெல்லாம் மறக்கவே முடியாது. பல சமயங்களில் எதைப் பற்றி எழுதுவது என்று எந்த ஐடியாவும் இருக்காது. டெஸ்க்டாப் முன்பு அமர்ந்துக்கொண்டு இரண்டு, மூன்று மணிநேரங்களை விரயமாக்குவேன். பின்னர் பயங்கரமாக தூக்கம் வந்து படுத்துவிடுவேன். திரும்பவும் அதிகாலை எப்படியோ எழுந்து குறைந்தது அறுநூறு வார்த்தைகளில் ஏதோ ஒன்றை எழுதிவிடுவேன். இதில் ‘எப்படியோ’ என்கிற வார்த்தையில் தான் சூட்சுமம் இருக்கிறது.

வேகமாக ஒரு கிளான்ஸ் ஜனவரியில் இருந்து எழுதிய ஒயின்ஷாப்பை வாசித்துப் பார்த்தேன். வழக்கம் போல தான். ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை ஒப்பீட்டளவில் தரமாக எழுதியிருக்கிறேன். மே, ஜூன், ஜூலையில் தொய்வடைந்து ஆகஸ்டுக்கு பிறகெல்லாம் கிடைத்த ஒரு டாபிக்கை வைத்து தென்னை மரம் – பசு மாடு கதை எழுதியிருக்கிறேன். நிஜமாகவே வாசித்தவர்கள் பாவம்தான். 

இதில் இன்னொரு முக்கியமான விஷயம். சிலர் நான் யாருக்காகவும் எழுதவில்லை எனக்காக மட்டும்தான் எழுதுகிறேன் என்பார்கள். கலைத்தாயை ஓழ் போடுவதற்காக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பார்கள். சுத்த பேத்தல். எப்போதும் ஒரு இரண்டாம் நபரிடம் இருந்து கிடைக்கும் அங்கீகாரம் தரும் போதை அலாதியானது. உண்மையோ, பொய்யோ நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் டோப்படித்தது போன்ற ஒரு கிறக்கம் மூளை நரம்பிற்குள் போய்விட்டு வரும். அதே சமயம் தொடர்ச்சியாக இப்படி எழுதிக் கொண்டிருந்தது வருடம் முழுக்க என்னை உற்சாகமாக வைத்திருந்ததை நானே உணர்ந்தேன். திங்கட்கிழமை காலை கச்சிதமாக ஒயின்ஷாப்பை பப்ளிஷ் செய்துவிட்டு ஆபீஸ் போகும்போது கிடைக்கும் மனநிறைவு அலாதியானது. ஒருவேளை ஒருவர் கூட ஒயின்ஷாப்பை படிக்கவில்லை என்றால் கூட அந்த மனநிறைவுக்காக தொடர்ந்து எழுதியிருப்பேன் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

இருப்பினும் வருடம் முழுக்க என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திய உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற ஆண்டிலும் இதே போல தொடர்ந்து ஒயின்ஷாப் எழுதுவேன். அதற்கு முன்பு இரண்டு வாரங்கள் இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். மூளையை கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாக்கிக் கொள்ள இவ்விரு வாரங்களை பயன்படுத்திக்கொள்ள போகிறேன். அடுத்த ஒயின்ஷாப் 15012018 அன்று வெளிவரும்.

என் மீது அன்புள்ளம் கொண்டவர்கள், ஒயின்ஷாப் பகுதியை தொடர்ந்து வாசிப்பவர்கள் ஃபீட்பேக் கொடுத்து என்னையும் என் எழுத்துகளையும் செரிவூட்டலாம். குறிப்பாக சில கேள்விகளை முன்வைக்கிறேன்.

ஒரு ஒயின்ஷாப் இடுகை அதிகபட்சம் எத்தனை வார்த்தைகள் இருந்தால் வாசிப்பீர்கள் ?

ஒயின்ஷாப்புக்கு நுழைந்து பாதியில் வாசிக்காமல் திரும்பிப் போனதுண்டா ? ஆமாம் என்றால் ஏன் ?

ஒயின்ஷாப்பில் எழுதிய குறிப்பிட்ட பகுதி ஏதாவது உங்கள் நினைவில் இருக்கிறதா ? எது ஏன் ?

மொக்கையாக எழுதியிருக்கிறான் என்று நினைத்த தருணங்கள் ?

ஒயின்ஷாப்பில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷயம் ?

குறிப்பாக ஏதாவது விஷயத்தை பற்றி எழுத வேண்டுமென நினைக்கிறீர்களா ?

ஒயின்ஷாப்பைப் பற்றி பொதுவாக உங்கள் கருத்து என்ன ?

கேள்விகளைத் தாண்டி சொந்தமாக உங்களுக்கு தோன்றும் விஷயத்தை நீங்கள் என்னிடம் எந்த சங்கடமும் இல்லாமல் தெரிவிக்கலாம். இதில் ஏதேனும் தயக்கமாக இருந்தால் சரஹாவில் கூட தெரிவிக்கலாம். இணைப்பு: https://philosophyprabhakaran.sarahah.com/

மீண்டும் புத்தாண்டில் சந்திக்கலாம். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 December 2017

பிரபா ஒயின்ஷாப் – 18122017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒரு மாதத்திற்கு முன்னால் யாரேனும் என்னிடம் வந்து அருவி பார்க்கும் எண்ணம் இருக்கிறதா ? என்று கேட்டிருந்தால் நான் ஏன்டா நடுராத்திரில சுடுகாட்டுக்கு போகப் போறேன் என்றுதான் பதில் சொல்லியிருப்பேன். சில படங்கள் மீது எனக்கு அப்படி ஒரு பயம் உண்டு. ஒரு ஆறேழு மாதங்களுக்கு முன்பு லென்ஸ் என்றொரு படம் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இணையத்தில் பரவலாக பாராட்டுகளை பெற்றது. அப்படத்தின் பேசுபொருள் என்னவென்பது படம் பார்க்கும் முன்பே உ.க.நெ.க.யாக தெரிந்துவிட்டது. அத்துடன் அந்த படத்தை பார்க்க வேண்டுமென நினைப்பையே குழி தோண்டி புதைத்துவிட்டேன். வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். நான் செக்ஸ் ஸ்கேன்டல்கள் (குறிப்பாக செலிப்ரிட்டீஸ்) வந்தால் அதனை பார்க்கும் சராசரி ஆசாமி. சில விஷயங்களில் ரொம்ப லாஜிக்காக யோசித்தால் வாழ்க்கையே நரகமாகிவிடும். ஸ்கேன்டல்கள் அப்படித்தான். பார்க்கிறோம், ரசிக்கிறோம், முடிந்துவிடுகிறது. லென்ஸ் மாதிரியான படங்களைப் பார்த்தால் தேவையில்லாத குற்றவுணர்ச்சி ஏற்படும். அது உடலுக்கும் மனதுக்கும் நல்லதில்லை. மேலும் என்னால் ஒரு பக்கம் ஸ்கேண்டல் பார்த்து கையடித்துவிட்டு, இன்னொருபுறம் இப்படம் சமூகத்திற்கு ஒரு பாடம் என்றெல்லாம் கப்ஸா அடிக்க முடியாது. அதனாலேயே லென்ஸை புறக்கணித்துவிட்டேன்.

அதே மாதிரி இந்த அருவி படமும் சில குற்ற உணர்வுகளை தோற்றுவிக்கக்கூடும் என்று முன்பே கணித்து வைத்திருந்தேன். படம் வெளியாவதற்கு நெருக்கமான சமயத்தில் எனது எண்ணத்தை மீறி இரண்டு விஷயங்கள் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டின. ஒன்று படத்தின் போஸ்டர் வடிவமைப்பு. குறிப்பாக, கதாநாயகியின் கண்கள் மட்டும் நீர்பரப்பின் மேலே தெரியும் போஸ்டர். போஸ்டர்களை வடிவமைத்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு என் அன்பு முத்தங்கள். இரண்டாவது, குக்கோட்டி குன்னாட்டி பாடல். பட ரிலீஸுக்கு முன்பே பாடல் கேட்பது எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை. நண்பர் பத்மநாபனின் (சென்ற ஒயின்ஷாப்பில் இவருடைய பெயரை பாடி நாகராஜ் என்று எழுதியதை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை. ஏனென்றால் அவருடைய வீடு இருப்பது கேளம்பாக்கத்தில். மேலும் இப்போதுதான் ஜிம் போக ஆரம்பித்திருக்கிறார் என்பதால் பாடி அவ்வளவாக டெவலப் ஆகவில்லை) ப்ளே லிஸ்டில் தான் பாடலைக் கேட்டேன். கேட்ட முதல் முறையே பிடித்துவிட்டது. அவரிடம் எத்தனை முறை ரிப்பீட் கேட்பது என்று சங்கடப்பட்டு அந்த பயணம் முடியும்வரை பொறுத்துக்கொண்டேன். அதன்பிறகு அப்பாடலின் சில பகுதிகளை நான் எத்தனை முறை கேட்டேன் என்று கணக்கே இல்லை. குறிப்பாக பாடலில் மூன்று நிமிடங்களுக்குப் பிறகு வரும் வேதாந்த் பரத்வாஜின் குரல் அபாரம் (ஒரு கண்ணாலே சூரியனே, மறு கண்ணாலே மாமழையே). அந்த ஆண் குரலோ அல்லது இசையோ அல்லது அந்த வரிகளோ அல்லது அந்த வரிகள் வரும்போது கர்வமாக தன் மகளை தூக்கிக் கொண்டு வரும் தந்தையின் பிம்பமோ ஏதோ ஒன்று என்னை கண் கலங்க வைத்துவிட்டது. இப்படத்திற்கு இசையமைத்த வேதாந்த் பரத்வாஜ் – பிந்துமாலினி தம்பதியர் இதற்கு முன் ஜிங்கிள்ஸ் மட்டும் செய்துக் கொண்டிருந்ததாகவும், இயக்குநர் அவர்களை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதாகவும் பத்மநாபன் சொன்னார். அதனாலோ என்னவோ இவர்கள் திரையிசையின் வார்ப்புருவில் (பல்லவி, சரணம் 1, சரணம் 2) பொருந்தாமல் சுதந்திரமாக இசையமைத்திருக்கிறார்கள். குக்கோட்டி குன்னாட்டி பாடலை எடுத்துக்கொண்டாலே தனித்தனியாக செய்யப்பட்ட கைவினை அலங்காரப் பொருட்களை மாலையாக கோர்த்தது போல அத்தனை பிரமாதமாக வந்திருக்கிறது.

சனிக்கிழமை மாலை எஸ்கேப்பில் படம் பார்த்தேன். படத்தின் துவக்கப் பாடலே நம்முடைய ஃபேவரைட்டான குக்கோட்டி குன்னாட்டி தான் ! சத்யம் / எஸ்கேப் பாரம்பரியத்தின்படி நிறைய மக்கள் படம் துவங்கி பத்து நிமிடங்களுக்குப் பிறகு வதக் வதக்கென வந்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள் ஒரு உன்னத அனுபவத்தை தவற விட்டுவிட்டீர்கள். 

நிற்க. ஸ்பாய்லர்களை வெறுப்பவர்கள் இத்துடன் நிறுத்திக்கொண்டு வேறு உருப்படியான வேலைகளை பார்க்கலாம். இனிவரும் பத்திகள் ஏற்கனவே படம் பார்த்தவர்களுக்கும், படம் பார்க்கலாமா வேணாமான்னு அய்யாவுக்கு ஒரு நல்ல சீட்டா எடுத்துப் போடு என்று கிளி ஜோசியம் கேட்பவர்களுக்கு மட்டும்.

துவக்கப் பாடலில் அருவியின் குழந்தைப் பருவம் காண்பிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவரது முன்கதை சுருக்கமாக காட்டப்படுகிறது. பள்ளி, கல்லூரி, பணிபுரியும் படலம். எவ்வளவு சுருக்கமாக எத்தனை விஷயங்களைச் சொல்ல முடியுமோ அத்தனையையும் கச்சிதமாக சொல்லி விடுகிறார்கள். அதன்பிறகு கதை வேறொரு தளத்திற்கு செல்கிறது. இத்தனை நாட்கள் பிரஸ் ஷோ பார்த்துப் பார்த்து புகழ்ந்தவர்கள் பார்த்த அதே அருவியைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் நடந்துவிட்டதா என்று சந்தேகிக்கும் அளவிற்கு என்னென்னவோ தமாஷ் செய்கிறார்கள். என்னாங்கடா என்றுதான் உட்கார்ந்திருந்தேன். இப்படத்தின் கடைசி இருபது நிமிடங்களை நீக்கிவிட்டால் இது வெகுசுமாரான படம். கடைசியில் குன்ஸாகப் போய் ஒரு ரூட்டைப் பிடித்து, குழந்தை பிறந்தால் அருவி என்று பெயர் சூட்டுங்கள் என்றெல்லாம் உளறிக்கொட்டி ஒரு வழியாக படத்தை ஷேப்புக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

மற்ற விஷயங்களை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள். இயக்குநரிடம் எனக்கு ஒரேயொரு கேள்வி. டீசரில் காண்பித்த விஷயங்களுக்கும் படத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா அய்யா ? (டுஸ்ட் வைக்கிறாராம்). இதிலே ஒரு காட்சியில் விசாரணை அதிகாரி அருவியிடம் மேல கை வைக்கக்கூடாதுன்னு பார்க்கிறேன் என்று மிரட்டும் தொனியில் சொல்கிறார். அதற்கு அருவி கை வை பார்ப்போம் என்கிறார். உண்மையைச் சொல்லுங்கள் டீசரில் சென்சேஷன் கிளப்ப வேண்டும் என்றுதானே இப்படி ஒரு சம்பந்தமே இல்லாத காட்சியைக் கொண்டு வந்து உள்ளே சொருகினீர்கள் ?

போலவே மசமசவென போகும் திரைக்கதைக்கு ஒரு இடைவேளை ட்விஸ்ட் தேவைப்படுகிறது. உடனே வைக்கிறார் ஒரு நீளமான வசனம். இப்படத்தின் இயக்குநருக்கு நிறைய விஷயங்களின் மீது கோபம் இருக்கிறது. பணம் சம்பாதிப்பவர்கள் மீது, குழந்தைகளை இங்க்லீஷ் மீடியம் ஸ்கூலில் சேர்ப்பவர்கள் மீது, சினிமா ஷாப்பிங் மால் செல்பவர்கள் மீது, குப்பைப் படம் எடுக்கும் இயக்குநர்களின் மீது, அதனைப் குடும்பத்துடன் சென்று பார்ப்பவர்கள் மீது, TRP TRP என்று அலையும் மீடியாக்கள் மீது, லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் மீது, (ஒருவேளை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கேஸ் போட்டு அவரை கிண்டலடிக்கும் காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டால் மீதியிருக்கும் வெறும் முப்பத்தைந்து நிமிட படத்தை வைத்து என்ன செய்வீர்கள் ?), நடிகர் விஜய் மீது, இரண்டரை நிமிடத்தை நிரப்புவதற்காக வாயில் வந்ததை உளறிவிட்டு வீரம் படத்திலிருந்து பாடலை ஒலிபரப்பும் பண்பலைகளின் மீது, மொத்தமாக நுகர்வு கலாசாரத்தின் மீது, மருத்துவ வணிகத்தின் மீது இப்படி பட்டியல் நீள்கிறது. கூடவே இலங்கைத் தமிழர் படுகொலை, மீனவர் பிரச்சனை என்று இஷ்டத்துக்கு வாய் வைக்கிறார். குறிப்பாக 120 ரூபாய்க்கு குப்பைப் படம் என்பதை திரும்பத் திரும்ப சொல்கிறார். பாவம், மனிதர் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். மன்னிக்கவும். இதுபோல படம் பார்க்க வந்த பார்வையாளர்களின் மீதே குற்றம் சாட்டி, நீங்கள்லாம் இப்படி ஒரு வாழ்க்கை வாழுறதுக்கு பதிலா எயிட்ஸ் வந்து சாகலாம் என்று சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை. நுகர்வு கலாசாரத்திற்கெதிரான இந்த நீண்ட வசனத்தைப் பார்த்துவிட்டு ‘தெறி இன்டர்வெல் ப்ளாக்’ என்று சிலாகிப்பவர்கள் தங்கள் நிஜவாழ்க்கையிலும் நுகர்வு கலாசாரத்திற்கு எதிராக இருந்தால் நான் அகமகிழ்வேன். இயக்குநருக்கு நுகர்வு கலாசாரத்தின் மீது கோபமென்றால் சினிமாவே நுகர்வு கலாசாரம் தானே. இந்த பிரஸ் மீட், ப்ரோமோ எல்லாம் வைத்து பாரு, பாரு, பாரு என்று ஏன் தாலியறுக்கிறீர்கள்.

கிட்டத்தட்ட படம் முடிவடையும் தருவாயில் அது என்ன சொல்ல நினைத்ததோ அந்த திசையை நோக்கி பயணிக்கிறது. ஏறத்தாழ ஒரு ஆவணப்பட தொனியில் சென்று முடிவடைகிறது. அருவி சென்றடையும் புள்ளியிலிருந்து பார்த்தால் ஒரு நல்ல ஃபீல் குட் படம். ஆனால் அதனை உணர வேண்டுமென்றால் படத்திற்கு கொடுக்கப்பட்ட சீன், பேசிய பேச்சுகள், வாய் எல்லாம் மறந்துவிட்டுதான் பார்க்க வேண்டும். மற்றபடி இப்படத்தை ஏன் பெரும்பாலோனோர் சிலாகிக்கிறார்கள் என்பதற்கு உளவியல் காரணிகளும், இன்னபிற காரணிகளும் இருக்கின்றன. விழுந்துவிடாதீர்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 December 2017

பிரபா ஒயின்ஷாப் – 11122017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தற்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் ஒயின்ஷாப்பானது கொல்லிமலையில் இணைய தொடர்பை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத பகுதியில் இருந்து மைபர் நெட் எனும் உள்ளூர் சேவையின் மூலம் வெளியாகிறது. நன்றி மைபர் நெட் !

திடீரென வியாழக்கிழமை  மதியம் ”வீக்கென்ட் ஃப்ரீயா ?” என்றொரு இன்பாக்ஸ் கேள்வி. அனுப்பியது ஃபேஸ்புக் பிரபலம் ‘பாடி’ நாகராஜ்.

வியாழன் இரவு தீர்மானித்து வெள்ளி இரவு கிளம்பிவிட்டோம் கொல்லிமலைக்கு ! முதல்முறையாக காரில் நீண்ட பயணம். சுத்தமாக களைப்பே தெரியாதபடி மூன்றே பிரேக்கில் அதிகாலை குமாரமங்கலம் கொண்டு சேர்த்தார் நண்பர் பாடி. அங்கே இன்னொரு நண்பர் வீட்டில் கொஞ்சம் இளைப்பாறல், சுத்தமான சைவ உணவு. நான்கைந்து இளநீரை உள்ளே இறக்கிவிட்டு மதியம் போல கொல்லி ஏறத்துவங்கினோம். இத்துடன் மூன்றாவது முறையாக கொல்லி செல்கிறேன்.

சீக்குப்பாறை நோக்குமுனையிலிருந்து (கோப்பு படம்)
சோளக்காடு பழங்குடியினர் சந்தை, மூலிகைப் பண்ணை, சீக்குப்பாறை வியூ பாயிண்ட், வல்வில் ஓரி சிலை ஆகியவற்றை பார்த்துவிட்டு, ஆளுக்கு ஒரு தட்டு குழி பணியாரத்தை காபந்து பண்ணிவிட்டு ஹோட்டலை சென்றடைந்தோம்.

கடந்த ஒரு வருடத்தில் கொல்லியில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

சீக்குப்பாறை வியூ பாயிண்ட் அருகில் புதிதாக ஒரு ஹோம் மேட் சாக்லேட் ஷாப் முளைத்திருக்கிறது. ஊட்டி, மூணாறு போன்ற இடங்களில் வரிசையாக சாக்லேட் கடைகளை பார்க்க முடியும். கொல்லியில் இதுவே முதல் மற்றும் ஒரே கடை. கடை திறக்கப்பட்டிருக்கிறது என்பதை விட அங்கே கம்ப்யூட்டரைஸ்ட் பில் கிடைக்கிறது, பே.டி.எம் வசதி உள்ளது, அதன் உரிமையாளருக்கு லிண்டா கிரேஸன் சொன்ன சாக்லேட் பற்றிய தத்துவமொன்று தெரிந்திருக்கிறது என்பதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறது. விரைவில் தமிழ்நாடு முழுக்க பார்சல் விநியோக சேவை செய்யவிருக்கும் அந்த இளம் தொழிலதிபருக்கு எனது வாழ்த்துகள். கடையின் பெயர்: பர்ஃபீ சாக்லேட்ஸ்

கொல்லிமலையில் எல்லோருக்கும் தெரிந்த பிரபல உணவகம் என்றால் அது வசந்தமாளிகை. அங்கே நல்ல உணவு கிடைக்குமா என்பது அடுத்த விஷயம். ஆனால் சென்னைக்கு சரவண பவன் மாதிரி கொல்லிக்கு வசந்தமாளிகை (அசைவமும் கிடைக்கும்). இப்போது புதிதாக நியூ ஸ்டார் கிளாஸிக் எனும் உணவகம் திறக்கப்பட்டிருக்கிறது. அதன் உரிமையாளர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு பத்து வருடங்கள் அமீரகத்தில் அது தொடர்பான பணிபுரிந்துவிட்டு கொல்லி திரும்பி இந்த உணவகத்தை நிறுவியிருக்கிறார். உணவகம் திறந்து இருபது நாட்களே ஆகியிருக்கிறது. கொல்லியில் ரேண்டமாக யாரையாவது நிறுத்தி, சாப்பிட நல்ல ஹோட்டல் என்ன என்றால் யோசிக்காமல் நியூ ஸ்டார் கிளாஸிக்கை கை காட்டுகிறார்கள். உரிமையாளரின் மார்கெட்டிங் வித்தை என்று யூகிக்கிறேன். உணவின் தரம், சுவை அபாரம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் கொல்லியை பொறுத்தவரையில் ஒப்பீட்டளவில் நல்ல ஆம்பியன்ஸ் கொண்ட, டீஸண்ட்டான உணவகம்.

மூன்றாவது விஷயம்தான் ஹைலைட் ! கொல்லியில் நல்ல தங்குமிடங்கள் என்றாலே நல்லதம்பி மற்றும் பி.ஏ, ஹாலிடே இன் மட்டும்தான் என்பார்கள். பயணத்தொடர் எழுதியபோது கூட கொல்லியில் ரிசார்ட் என்பதே கிடையாது என்று எழுதியிருந்தேன். அதனை பொய்யாக்கும் வகையில் சில்வர்லைன் ரெட்ரீட் எனும் பகட்டான விடுதியில் தங்கினோம். இது முன்பே இருந்ததா என்று தெரியவில்லை. சோளக்காடு, செம்மேடு போன்ற பிரதான பகுதிகளில் இருந்து சுமார் ஐந்தாறு கி.மீ தொலைவில், மோசமான சாலைகளை கடந்தபிறகு வருகிறது சில்வர்லைன் ரெட்ரீட். ஃபோட்டோஷூட்டுகளுக்கெல்லாம் உகந்த அட்டகாசமான லான் மற்றும் விசாலமான ப்ளே ஏரியாவுடன் சிறப்பாக அமைந்திருக்கிறது. பாடாவதி தான் என்றாலும் இதோ இந்த ஒயின்ஷாப்பை தட்டுத்தடுமாறி வெளியிடும் அளவிற்கு வைஃபை கிடைக்கிறது. குளிப்பதற்கு வெந்நீர், படுப்பதற்கு எட்டு இன்ச் தடிமனான மெத்தை என்று வசதியாக இருக்கிறது. என்ன ஒன்று, மலையிலேயே தி பெஸ்ட் என்பதால் கொஞ்சம் ஷோக்கு காட்டுகிறார்கள். இரவு நேரத்தில் நாம் உணவுக்காக வெளியே பயணிக்க முடியாத சமயத்தில் புஃபே டின்னர் முன்னூற்றி இருபது + டாக்ஸஸ் என்று கூறி அலற வைக்கிறார்கள்.

காலையில் நேரே கொல்லியின் ஸ்பெஷல் ஸ்பாட்டான ஆகாய கங்கைக்கு சென்றோம். உச்சகட்ட சீஸனில் ஆவேசமாக கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறது அருவி. அருவிக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை. சுமார் நாற்பதடி தொலைவிலேயே அருவியின் சாரல் த்வம்சம் செய்துக்கொண்டிருந்தது. வழக்கம்போல ஆயிரம் படிக்கட்டுகள் ஏறும்போது தாவு தீர்த்துவிட்டது. அச்சமயம் காஜல் அகர்வால் வெறியேற, விதிமாற, சதிகாரர் கதிமாற என்று பாடுவதாக நினைத்துக்கொண்டு ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்தேன். பின்னர் அறப்பளீஸ்வரரை துரிதமாக ஒரு விசிட் அடித்து முடித்துவிட்டு மாசிலா அருவிக்கு சென்றோம்.

மாசிலா அருவிக்கூட்டம் எனக்கு எப்போதும் ஒவ்வாதது. எட்டுக்கு எட்டு இடத்தில் இருபாலரும் ஈஷியபடி குளித்துக் கொண்டிருப்பார்கள். சென்றமுறை ஆகஸ்ட் மாதம் சென்றபோது நீர்வரத்து குறைவாக இருந்தது. தற்போது சீஸன் என்பதால் தாராளமான நீர்வரத்து காணக்கிடைத்தது. மேலும் இந்த அருவியில் பாடி மஸாஜ் செய்யும் ஆசாமி ஒருவர் புதிதாக தோன்றியிருக்கிறார். விலை இருநூறு. ‘பாடி’ அவரிடம் மஸாஜ் செய்துக்கொண்டார். ‘பாடி’யின் உடலைப்பார்த்து அஜித் மாதிரி இருப்பதாக மஸாஜ் ஆசாமி புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அருவியின் அருகிலுள்ள பூங்காவில் யாருமில்லாததால் அங்கிருக்கும் ஊஞ்சலில் சுமார் பதினைந்து நிமிடங்கள் குழந்தையாகவே மாறி ஆடித்தீர்த்தேன்.

நம்ம அருவியின் எழில் தோற்றம் (கோப்பு படம்)
அடுத்ததாக நம்ம அருவி நோக்கி சென்றோம். நம்ம அருவியின் சிறப்பம்சம் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அந்த சுஹானுபவத்தை மீண்டும் பெறுவதற்காகவே நம்ம அருவியை எதிர்பார்த்து சென்றோம். அங்கே சென்றதும் ரெளடியைப் போல இருந்த ஒரு ஆள் எங்களை வழிமறித்து குளிக்கக்கூடாது, அருவி ஃபுல்லா இருக்கு என்றார். அருவி எப்படி ஃபுல்லாகும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ‘பாடி’ அவரிடம் சற்று குரலை உயர்த்த அண்ணன் உண்மையை கக்கலானார். உள்ளே காவல்துறை கண்காணிப்பாளரும் அவரது குடும்பப்பெண்களும் குளித்துக்கொண்டிருக்க கான்ஸ்டபிள் மாமா அப்பக்கம் யாரும் சென்று மஹாராணிகள் குளிப்பதை பார்த்துவிடாதபடி காவல் காத்துக்கொண்டிருக்கிறார். ஒருவழியாக அம்மாள்கள் குளித்துவிட்டு வந்தபிறகு எங்களை அனுமதித்தார். எங்களுக்கே எங்களுக்காக கிடைத்தது அருவி. ஒருவேளை அரவிந்த்சாமி கஜோலை நம்ம அருவிக்கு அழைத்து வந்திருந்தால் அவருக்கு செட் ஆகியிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அப்படிப்பட்ட ப்ளிஸ்ஃபுல்லான அருவி இது. அதனால்தானோ என்னவோ இதற்கு நம்ம அருவி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது போல மிதமான நீர்வரத்து, நல்ல சுற்றுச்சூழல் இவற்றுடன் அட்டகாசமான ப்ரைவஸி ! கூடவே இம்முறை அருவிக்கு மேலே இயற்கை அமைத்துள்ள இன்ஃபினிட்டி பூல் ஒன்றைக் கண்டுபிடித்தோம். அங்கேயும் சற்று நேரம் நீருடன் அளவளாவினோம்.

பின்னர் கொல்லியின் உட்புற கிராமங்கள் வழியாக ஒரு சுற்று வந்து அறைக்கு திரும்பினோம். கொல்லி டாஸ்மாக்கில் கார்ல்ஸ்பெர்க் பியர் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல். கூலிங்கே தேவைப்படாத குளிர். வாரயிறுதி தரமாக கழிந்தது.

ஒருபுறம் கொல்லி பயணத்தினால் ஏற்பட்ட மனமகிழ்வு என்றால் இன்னொரு புறம் பாடி நாகராஜின் நட்பினால் கிடைத்த மனமகிழ்வு. பயங்கரமான ஒத்துப்போகக்கூடிய டிராவல் பார்ட்னர். அட்டகாசமாக கார் ஓட்டுகிறார். சாவனில் செமத்தியான ப்ளே லிஸ்ட் (நேபாளி – வேடனைப் போல நான் மாறவா உட்பட) தயார் செய்து வைத்திருக்கிறார். இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவின் அண்டர் ரேட்டட் கதாநாயகிகள் என்கிற ஒரு பட்டியலை தயார் செய்தோம். அதில் பெரும்பாலும் எங்கள் ரசனை ஒத்துப்போனது. ஆனால் ஏனோ அவருக்கு பிரணிதா சுபாஷை பிடித்திருக்கிறது.

குறிப்புகள்:
1. வை ஃபை தடைகள் காரணமாக புதிய புகைப்படங்களை பதிவேற்ற முடியவில்லை.
2. மீண்டும் ஒருமுறை பயணக்கட்டுரைகள் வராது. கவலை வேண்டாம். பழைய தொடரை வாசிக்க: கொல்லிமலை பயணக்கட்டுரைகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 December 2017

பிரபா ஒயின்ஷாப் – 04122017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சில மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண வீட்டிற்கு சென்றிருந்தேன். மேடையில் மணமக்கள் நின்றிருக்க, விருந்தினர்கள் எல்லாம் மேலே எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். மணமக்கள் தானே அருந்ததி பார்ப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே மேலே பார்த்தால் ட்ரோன் காமிரா ! அதன்பிறகு சுமார் நான்கைந்து திருமணங்களில் ட்ரோன் காமிரா பார்த்துவிட்டேன். கழுகுக் கோணத்தில் படம்பிடிக்க பயன்படுகிறது என்பதை விட இது ஒரு கவர்ச்சி பேக்கேஜ் என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டு திருமணங்கள் இந்த மாதிரி கவர்ச்சி, ஆடம்பர விஷயங்களில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. அது போக வட இந்திய, மேற்கத்திய கலாசாரங்களை வேகமாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிகமில்லை, இன்னொரு பத்து வருடங்களில் நம் திருமணங்களில் என்னென்ன மாறுதல்கள் எல்லாம் நடைபெறும் என்று என் அனுமானங்கள் –

- வரவேற்பில் மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்து இறங்கலாம்.
- மண்டபத்திற்கு பதிலாக கப்பல், விமானம், தனித்தீவு போன்ற இடங்களில் திருமணம் நடத்தலாம்.
- மண்டபத்தில் நடாத்தினால் சேர்கள் வரிசையாகப் போடாமல் அவார்ட் நிகழ்ச்சி பாணியில் போடலாம்.
- அழைப்பிதழ்கள் டிஜிட்டல் மயமாகலாம். சின்னதாக ஒரு சினிமா ட்ரைலர் போல அச்சிதழ்கள் தயாராகலாம்.

ஃபோட்டோகிராபி என்கிற துறை போகப்போகிற எல்லையை நினைத்தாலே பகீரென்று இருக்கிறது. ஏற்கனவே கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் எல்லாம் சகஜமாகிக் கொண்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் –

- மணமக்கள் மீது பாடி மவுண்ட் கேமராவை மாட்டி விடலாம்.
- மணமக்களை வித விதமான பொஸிஷன்களில் படம் பிடிக்கலாம்.
- மணமகன், மணமகள் மற்றும் நண்பர்களை வைத்து ஒரு குறும்படம் எடுத்து வெளியிடலாம்.

சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு சினிமாவில் என்னென்ன துறை ஆட்கள் பணிபுரிகிறார்களோ அவர்கள் அத்தனை பேருக்கும் திருமணங்களில் வேலை உண்டு. கலை இயக்குநர், காஸ்டியூம் டிஸைனர், கோரியோகிராஃபர், எடிட்டர் போன்ற அத்தனை ஆசாமிகளும் திருமணத்திற்கும் தேவைப்படுவார்கள். ம்ஹூம்... ஸ்டண்ட் மாஸ்டரின் சேவைகள் எல்லாம் திருமணத்திற்கு பின்புதான் தேவைப்படும்.

சக்கரகட்டி என்கிற திரைப்படத்தைப் பற்றிய இப்பத்தியை நீங்கள் ஏற்கனவே கூட என் வலைப்பூவில் படித்திருக்கலாம். அப்படி படித்திருந்தால் பல்லைக் கடித்துக்கொண்டு இன்னொருமுறை படித்துவிடுங்கள் அல்லது அடுத்த பத்திக்கு தாவிவிடுங்கள். நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் சக்கரகட்டி வெளியானது. வெளியாகும் முன்பே பாடல்கள் பயங்கர ஹிட். குறிப்பாக டாக்ஸி, டாக்ஸி ! படம் வெளிவந்து அப்படியொன்றும் விசேஷமாக ஓடவில்லை. அப்பொழுதெல்லாம் எனக்கு திரையரங்கம் சென்று படம் பார்க்கும் வாய்ப்புகள் அதிகமில்லாததால் பர்மா பஜாரில் வாங்கித்தான் பார்ப்போம். நிறைய படங்களை இப்படி ஹாஸ்டலில் தேயத் தேய பார்த்திருக்கிறோம். சென்னை நகரத்தில் இருந்து வருபவன் என்பதால் நான்தான் அந்த வெப்பன் சப்ளையர் வேலையைச் செய்துவந்தேன். அப்படிப் பார்த்ததுதான் சக்கரகட்டி ! முதல்முறையே பிடித்துவிட்டது ! அதற்கு பல காரணங்கள். முக்கியமானது படத்தில் வரும் மேல்தட்டு கலாசாரம். அவர்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் மொழி என்று அவற்றின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. இரண்டாவது, வசனங்கள் மற்றும் சில கிரேசி நகாசு வேலைகள். படம் வெளிவந்த சமயத்தில் எனக்கு அதன் வசனங்கள் ஒவ்வொன்றும் மனப்பாடம். (ராகுல் டிராவிட் லேட் பிக்கப்). அப்படத்தில் சரியாக டாக்ஸி டாக்ஸி பாடல் முடிந்தபிறகு இயக்குநருக்கு ஒரு கிறுக்கு பிடித்திருக்கும். ஒருமாதிரியாக கோணலாக கொண்டுப்போய் படத்தை முடித்திருப்பார். மற்றபடி அதன் முதல் தொண்ணூறு நிமிடங்களின் தீவிர ரசிகன் நான்.

சில வருடங்களுக்குப் பிறகு அவரது அடுத்த படமான இந்திரஜித்தின் போஸ்டர் வெளியானது. ஃபேண்டஸி படம். அப்போதே அது வெளியாகும் சமயத்தில் அதனை பார்த்துவிட வேண்டுமென நினைத்திருந்தேன். பல வருடங்களுக்குப் பிறகு எனது அந்த எண்ணம் பலித்திருக்கிறது. அநேகமாக இதில் நடித்திருக்கும் அனைவரும் ஏற்கனவே கரையை கடந்துவிட்ட வலுவிழந்த புயல்கள். இந்திரஜித்தில் நடித்திருக்கும் இரண்டு வில்லன் நடிகர்களும் தமிழில் ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தத்தம் பழைய இடங்களுக்கே திரும்பிவிட்டார்கள். இவர்களில் சுதான்ஷு பாண்டேவின் கம்பீரமான தோற்றம் எனக்குப் பிடிக்கும். இவர் எந்திரன் இரண்டாம் பாகத்தில் பேராசரியர் போராவின் மகனாக நடிப்பதாகக் கேள்வி. படம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் சோனாரிகா படோரியாவை யாருக்கும் தெரிந்திருக்காது. இடையே பிகினி சர்ச்சைகளில் எல்லாம் சிக்கி கொஞ்சம் பிரபலமாகி மீண்டும் காணாமல் போனார். அஷ்ரிதா ரெட்டி தமிழில் இரண்டு படங்கள் நடித்துவிட்டு பின் வாய்ப்புகள் கிடைக்காமல் போனார். இவர்கள் எல்லோருக்கும் இப்படம் ஒரு நாஸ்டால்ஜியா அனுபவமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

படத்தில் எனக்கு பிடித்திருந்த சில சுவாரஸ்யங்கள் –

- மருத்துவ குணங்கள் கொண்ட கல் பற்றிய மையக்கதை.
- படத்தில் காட்டப்படும் மலைப்பிரதேசம்.
- கணிதமேதை பற்றிய அனிமேஷன் காட்சிகள்.
- மாவோயிஸ்டுகள் வைத்திருக்கும் ஏரோப்ளேன்.
- ஆயிரம் தாமரை பாடல் வரிகள் (ஜாடிக்குள் பலநாட்கள் மூடித்தான் கிடந்தாலும் பூதங்கள் இளைக்காதடா, நஞ்சுகொண்ட இதழில் கூட புன்னகைக்கும் திறனும் உண்டு)

படத்தில் பிடிக்காதவை மற்ற அனைத்தும் என்று சுருக்கமாக சொல்லிவிடலாம் என்றாலும் சில முக்கியமான ஆதங்கங்கள் –

சோனாரிகா படோரியா
- சோனாரிகா படோரியா (சரியாக திட்டமிட்டிருந்தால் அஷ்ரிதா ரெட்டி ரோலையும் இவருக்கே கொடுத்துவிட்டு, தலா ஒரு ஜல்சா காட்சி மற்றும் பாடலை வைத்திருக்கலாம்).
- மாவோயிஸ்டுகளை லுச்சாத்தனமாக காட்டியது (இதற்காகவே மாவோயிஸ்டுகள் கலாபிரபுவை கடத்திக் கொண்டுப்போய் போடலாம்).
- கிராஃபிக்ஸ் (மருதாணி பாட்டில் பார்த்த கிராபிக்ஸ் எல்லாம் இயக்குநரின் பாணி என்றுதான் நினைத்திருந்தேன். படம் முழுக்க அதே டுபாக்கூர் கிராபிக்ஸ் என்றால் எப்படி ?)

பொதுவாகவே சக்கரக்கட்டியில் பார்த்த அதே கிரேசிநெஸ் நிறைய இடங்களில் கண்கூடாக தெரிகிறது. அதே போலவே அல்லு சில்லு கிளைமாக்ஸ் ! மருத்துவ குணம் கொண்ட கல், கோவா, சோனாரிகா படோரியா அங்கிருந்து அருணாச்சல பிரதேச காட்டுப்பகுதி என்று அல்வா மாதிரியான களத்தை காலி செய்திருக்கிறார் கலா பிரபு. 

இந்திரஜித்தின் தீம் மியூசிக்கின் இடையே வரும் ஒரு பிட்டை ஏதோ ஒரு தமிழ் செய்தி சானலின் பிரேக்கிங் நியூஸ் பகுதியில் கேட்டிருக்கிறேன். நியூஸ் 7 தமிழ் அல்லது தந்தி தொலைக்காட்சி ?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment