அன்புள்ள வலைப்பூவிற்கு,
தமிழ்
சினிமா விழித்துக்கொண்டதாக தோன்றுகிறது. ரசிகர்களை தியேட்டருக்கு
வரவழைப்பது எப்படியென்று தெளிவாக புரிந்துக்கொண்டார்கள். குறிப்பாக
இளைஞர்கள். மூன்று மீடியம் பட்ஜெட் படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் கூட
சூது கவ்வும் ரசிகர்களை கவ்வியிருக்கிறது, என்னையும் சேர்த்து.
அரைகுறை
கிட்னாப் ஆசாமி விஜய் சேதுபதி. சூழ்நிலை காரணமாக அவருடன் இணையும் மூன்று
இளைஞர்கள். ஒரு கட்டத்தில் அமைச்சரின் மகனை கடத்த வேண்டியிருக்கிறது. அந்த
கடத்தலை மையமிட்டு கதை நகர்கிறது.
நயன்தாராவுக்கு
கோவில் கட்டிய வாலிபர் என்கிற சுமாரான நகைச்சுவை காட்சியுடன் தான் படம்
துவங்குகிறது. அதன்பிறகும் கூட ஒரு மாதிரியான தொய்வாகவே ஆங்காங்கே சிரிக்க
வைக்கும் வசனங்களுடன் படம் ஓடிக்கொண்டிருந்தது. கடைசி வரைக்கும் கூட
பரபரப்பு இல்லை. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிடித்திருக்கிறது.
படத்தின் பலம், பலவீனம் இரண்டுமே மிதவேக திரைக்கதை தான். நிஜவாழ்க்கையில்
ஒவ்வொரு நொடியும் பரபரப்பாக எதுவும் நடைபெறுவதில்லை. அதுபோல தான் சூது
கவ்வும். கதையின் ஓட்டத்திற்கு நேரடியாக தொடர்பில்லாத அல்லது தேவையில்லாத
இடங்களில் நீளமான காட்சிகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. கதைக்கு
தேவைப்படாத சின்னச் சின்ன டீடெயிலிங் மூலம் சுவாரஸ்யப்படுத்த
முயன்றிருக்கின்றனர். அது சில இடங்களில் மொக்கை தட்டினாலும் சரியாகவே கை
கொடுத்திருக்கிறது. அட்டகத்தி, நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் போன்ற
படங்களோடு சூது கவ்வும் படத்தை ஒப்பிடலாம். முந்தய இரண்டினை ரசித்தவர்கள்
இதையும் ரசிக்கலாம். மற்றவர்கள் தவிர்க்கலாம்.
குறும்பட
இயக்குனர்களின் செல்லப்பிள்ளை விஜய் சேதுபதிக்கு மைடாஸ் டச். படத்தில்
அவருடைய தோற்றம் நாற்பது வயதுக்காரருடையது என்று சினிமா செய்திகளில்
படிக்காமல் இருந்திருந்தால் தெரிந்திருக்காது. இளநரை தோன்றியவர்களெல்லாம்
நாற்பது+ ஆகிவிட முடியுமா ? நாயகத்தனத்தை காட்டாமல் காட்டும் வேடம் விஜய்
சேதுபதியுடையது. அவர் இனிவரும் படங்களில் ஆக்குசன் வழிமுறையை மட்டும்
பின்பற்றிவிடக் கூடாது.
கதாநாயகி
சஞ்சிதா ஷெட்டியின் மூக்கை பார்க்கும்போது அவதார் பட நாயகி நினைவுக்கு
வருகிறார். ரப்பர் உதடுகள். சஞ்சிதா படுகோன் என்ற பெயரில் ஒரு நடிகையும்
இதேபோல படுமொக்கையாக இருந்ததாக ஞாபகம். சஞ்சிதா என்று பெயர் வைத்தாலே
அப்படித்தான் போல. நாயகி வேடத்திற்கு மகா மட்டமான தேர்வு. சஞ்சிதாவோடு
ஒப்பிடும்போது காசு பணம் துட்டு மணி மணி பாடலில் ஆடும் இளம்சிட்டுக்கள் அம்புட்டும் ஜூப்பர்.
மற்ற
காஸ்டிங் படத்தினுடைய பிரதான பலம். குறும்பட ஆட்களின் படங்களில் பார்த்த
முகங்களாகவே தென்படுகின்றன. டாக்டர் ரவுடியாக நடித்த அருள்தாஸ் தடையறத்
தாக்க படத்தின் ஒரு காட்சியில் அதகளப் படுத்தியிருப்பார். இந்த படத்தில்
அவ்வளவு வெயிட்டான ரோல் இல்லையென்றாலும் கூட சின்னச் சின்ன உடல்மொழிகளில்
சீரிய நடிப்பு. அடுத்ததாக சைக்கோ போலீஸ் அதிகாரியாக வரும் யோக் ஜெப்பி.
இவருக்கு கடைசி வரைக்கும் வசனமே இல்லை. நாயகனுக்கு அடுத்து பலம் பொருந்திய
வேடம் இவருடையது. அருமை பிரகாசமாக நடித்த கருணாகரனும், பகலவனாக நடித்த
சிம்ஹாவும் நடிப்பில் மற்ற உப நடிகர்களை காட்டிலும் தனித்து தெரிகிறார்கள்.
அமைச்சரின் மனைவியாக நடித்திருப்பவர் அம்மா வேடங்களுக்கான புதிய
கண்டுபிடிப்பு. எம்.எஸ்.பாஸ்கர் கிளாஸ்.
பாடல்கள்
இசைப்பிரியர்கள் மத்தியில் ஏற்கனவே ஹிட் என்று நினைக்கிறேன். நான்
முதல்முறை கேட்டதால் அதிகம் ஒட்டவில்லை. கானா பாலாவின் பாடல் மட்டும்
மீண்டும் தேடிக் கேட்க தூண்டுகிறது. அந்த பாடலுக்கு பாரம்பரிய மேற்கத்திய
கலவை நடனம் அட்டகாசம். வசனங்கள் பலதும் நறுக்கென்று இருக்கின்றன. ஓ மை காட் என்று பரட்டை தலையை உலுக்குவதும், டவுசர் கிழிஞ்சிருச்சு என்ற வசனமும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடையக் கூடும்.
ஆள்
கடத்தலை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படத்தில் ரத்தம், மரணம் போன்ற
குரூரங்கள் இல்லாதது படத்தினுடைய சிறப்பு. இத்தனைக்கும் ஒரு குற்றவாளியை
சைக்கோ போலீஸ் அதிகாரி உயிருடன் புதைக்கும் காட்சியோ மின்னணுவியல் மாணவனை
மாடியில் இருந்து தலைகீழாக கீழே போடுவது கூட அவ்வளவு கொடூரமாக தோன்றவில்லை.
டாம் & ஜெர்ரி கார்ட்டூனில் ஜெர்ரியுடைய மரணம் எப்படி இருக்குமோ
அப்படி உறுத்தாமல் கடந்து செல்கிறது.
டிராவிட்
போன்ற ஒரு விளையாட்டு வீரர் துவக்கத்திலிருந்து நிலைக்கொண்டு விளையாடி
ஆட்டத்தின் முடிவில் அதிரடியாட்டம் ஆடினால் எப்படி இருக்கும் ?
அப்படித்தான் இருக்கிறது சூது கவ்வும். படத்தின் இறுதியில் வரும் இருட்டு
அறையில் முரட்டுக்குத்து, துப்பாக்கி சூடு போன்ற காட்சிகளுக்கு
திரையரங்கில் எழும் சிரிப்பலை படத்தினை கரை சேர்த்துவிடும்.
படத்தில்
இடம்பெற்றிருக்கும் நேர்மையான கடத்தல் கும்பலைப் போலவே படக்குழுவினரும்
சினிமாவை புரட்டிப்போடும் பெருமுயற்சி எதுவும் எடுக்காமல் கருத்து சொல்லி
உசுரை வாங்காமல் பக்காவாக ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தினை
கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் நலன் குமரசாமிக்கு வாழ்த்துகள் :)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|