26 December 2020

வர்கலா – வடக்கு கடற்கரைகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பதிவு: ஆதாமிண்ட ஸ்வர்க்கம் 

வர்கலா பயணத்தின் அடுத்த பகுதிக்கு போகும் முன் என் பயணத்துணைகளாக வந்த இரண்டு அஃறிணை நண்பர்களைப் பற்றி குறிப்பிட்டுவிடுகிறேன்.
 
முதல் நண்பன் – சைக்கிள்: எனக்கு பைக் – ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது என்பதால் பயணத் திட்டத்தின் போது சைக்கிள் வாடகைக்கு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன். சில இடங்களில் மெளன்டைன் பைக் என்று சொல்லப்படும் மலையேற்றத்திற்கான சைக்கிள் கிடைத்தது. கியர் வைத்த 21 ஸ்பீட் சைக்கிள் அது. நாளொன்றிற்கு வாடகை முன்னூற்றி ஐம்பது ரூபாய். நான் தேடியதோ மிதித்தால் ஒரே வேகத்தில் போகக் கூடிய சாதாரண சைக்கிள். பின்னர் கூகுள் மேப் வழியாக உன்னிக்கண்ணன் என்பவரிடம் சைக்கிள் வாடகைக்கு கிடைப்பதாக அறிந்தேன். கியர் வைத்தது தான், ஆனாலும் அந்த சைக்கிள் பழையது போல தோன்றியதால் ஒரு அணுக்கம் உண்டானது. தினசரி வாடகை நூற்றி ஐம்பது. வர்கலா சென்றதும் நேராக ஹெலிபேட் போய் இறங்கினேன் இல்லையா. அங்கு முதல் வேலையாக உன்னிக்கண்ணனை சந்தித்து சைக்கிளைப் பெற்றுக்கொண்டேன். உன்னிக்கண்ணன் ஒரு சிறிய ஹோம்ஸ்டே வைத்து நடத்துகிறார். டிராவல்ஸும் நடத்துகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் வாடகை சைக்கிளை பொறுத்தவரையில் அவர் அதனை தொழில்ரீதியாக செய்யவில்லை. அவரது சொந்த பயன்பாட்டிற்காக ஒரே ஒரு சைக்கிள் வைத்திருக்கிறார். அதைத்தான் உபரி சமயங்களில் வாடகைக்கு விடுகிறார். ப்ரொஃபஷனல் இல்லை என்பதால் உன்னிக்கண்ணனின் சைக்கிளில் பெல் இல்லை, பிரேக்கை கோபம் கொண்டு அழுத்தினால் பெருத்த ஒலியுடன் லேசாக வேலை செய்யும். ஆனாலும் எனது தேவைக்கு அது போதுமானதாக இருந்தது.

வாடகை சைக்கிள்
இரண்டாவது நண்பன் – மொபைல் ஸ்டாண்ட்: சுய புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கு பெரிய ஆர்வமில்லை என்றாலும் ஒரு ட்ரிப் முழுக்க புகைப்படங்கள் எடுக்காமல் இருக்க முடியாது அல்லவா. அது மட்டுமில்லாமல் அரபிக்கடலில் சூரியன் மறைவதை டைம் லாப்ஸ் வீடியோ எல்லாம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் இங்கிருந்து போகும்போதே மொபைல் போனுக்கான ட்ரைபாட் ஒன்றை வாங்கியிருந்தேன். அமெச்சூர் பொருள்தான். ஆனாலும் தேவையை பூர்த்தி செய்தது. அமேசானில் கிடைக்கிறது. விலை நானூறு. கூடவே ஒரு சிறிய ப்ளூடூத் ரிமோட்டும் கிடைக்கிறது. போனை ஸ்டாண்டில் செட் செய்துவிட்டு வந்து ரிமோட் பட்டனை அழுத்தினால் புகைப்படம் எடுக்கும். இந்த ட்ரிப் முழுக்க என்னை புகைப்படம் எடுத்துக் கொடுத்தவர் இவர்தான். எதிரில் நண்பர் இருந்து நம்மை புகைப்படம் எடுத்துக் கொடுத்தால் கூட நமக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கும். இவரிடம் அப்படி எந்த தயக்கமும் இல்லை.

வர்கலா பயணத்தை வடக்கு, தெற்கு என்று பிரித்திருந்தேன் அல்லவா. முதலிரண்டு தினங்கள் வடக்கு. விடுதியில் போய் இறங்கி குளித்து முடித்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிய இடம் ஆழியிறக்கம் கடற்கரை. விடுதியின் பின்புறம் தான் கடற்கரை. கிட்டத்தட்ட பிரைவேட் கடற்கரை மாதிரி தான். விடுதியிலிருந்து செங்குத்தாக இறங்கும் படிக்கட்டுகள் வழியாக கடற்கரையை அடைந்துவிடலாம். ஆனால் சாலை வழியாக முக்கால் கி.மீ. நான் சாலை வழியைத் தேர்வு செய்தேன். சரிவான பாதையில் ப்ரேக் இல்லாத என் சைக்கிள் தறிகெட்டு ஓட, ஒரு கட்டத்தில் முதல் நாளே சில்லறை வேண்டாம் என்று இறங்கி தள்ளிக் கொண்டே போய்விட்டேன்.

ஆழியறக்கம் கடற்கரை - புகைப்படம் 1
குன்றின் இறக்கத்தில் கடற்கரை அமைந்திருப்பதால் ஆழியிறக்கம் என்கிற பெயர் அமைந்திருக்கக்கூடும். ஆஃப் பீட் கடற்கரை. அக்கம் பக்கம் ஒரு கடை, ஒரு வீடு எதுவும் கிடையாது. நான் சென்றபோது நான் ஒருவன் மட்டும் கடற்கரையில் மொட்டை வெயிலில் நின்றுக் கொண்டிருந்தேன். டைம் லாப்ஸ் எடுத்துப் பார்க்கும் ஆர்வத்தில் மொபைல் ஸ்டாண்டை செட் செய்தேன். அதற்குள் சில உள்ளூர் சிறுவர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். பருந்துகள் வேறு மிகத் தாழ்வாக பறந்துக் கொண்டிருந்தன. சூழல் எனக்கு ஒரு மாதிரி பதற்றமூட்டுவதாக அமைந்திருந்ததால் அதிக நேரம் அக்கடற்கரையில் செலவிட இயலாமல் கிளம்பினேன்.

ஆழியறக்கம் கடற்கரை - புகைப்படம் 2
அடுத்தது, அங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாபநாசம் கடற்கரை. இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும், அஸ்தியை கரைக்கும் பழக்கம் இங்கிருக்கிறது என்று நினைக்கிறேன். கடற்கரையில் பத்தடிக்கு ஒரு பார்ப்பனர் குடை, போர்டு வைத்து கடை போட்டிருக்கிறார்கள். இந்த ப்ராஸஸுக்கு தேவையான துண்டு, வேட்டி, பூஜை சாமான்கள் போன்றவற்றின் விற்பனை ஒரு பக்கம் பரபரவென நடந்துக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டுப் பயணிகள் இவற்றையெல்லாம் விநோதமாகப் பார்த்துக்கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் கடக்கிறார்கள். எனக்கு இதிலெல்லாம் மனம் ஒட்டவில்லை. நான் வர்கலா சென்று இறங்கியதிலிருந்து அந்த நிமிடம் வரை ஒரு மிடறு மது கூட அருந்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாபநாசம் கடற்கரை - புகைப்படம் 1
பாபநாசம் கடற்கரையை ஒட்டிய சாலையில் வரிசையாக உணவகங்கள் இருந்தன. ஒவ்வொரு உணவகத்தின் வாசலிலும் ஒரு ஸ்டாண்ட் அமைத்து அதில் மெனு புத்தகத்தை வைத்திருந்தார்கள். ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்கிறேன். ஒன்றில் கூட மதுவின் விலைப்பட்டியல் இல்லை. ஒரு உணவகத்தில் கூட மது கிடைக்கும் என்கிற அறிவிப்பு இல்லை. அதிலும் ஒரு உணவகத்தின் மெனுவில் காழ்ப்புணர்வை தூண்டும் வகையில் “ஹாட் ட்ரிங்க்ஸ்” என்று காஃபி, டீ, பூஸ்ட், ராகிமால்ட் போன்றவற்றை பட்டியலிட்டிருந்தார்கள். எனக்கு படபடப்பாக ஆகிவிட்டது. 
 
பாபநாசம் கடற்கரை - புகைப்படம் 2
ஒரு கடைக்குள் நுழைந்து காண்டம் கேள் என்றால் சத்தமாகக் கேட்பேன். ஆனால் பியர் இருக்கிறதா என்று, அதுவும் வேற்றூரில், வேற்று மொழி ஆட்களிடம் கேட்க சங்கடமாக இருந்தது. யோசித்தபடி பாபநாசம் கடற்கரை மணலில் நடந்துக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு கீற்றுப் பந்தல் அமைத்து ஆபத்துதவிக்காக இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் பார்ப்பதற்கு விஜய் சேதுபதி மாதிரியே இருந்தார். அவரைக் கண்டதும் ஒரு அணுக்கம். அவருக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்கும் என்று உள்ளுணர்வு சொன்னதால், அண்ணா, இங்க எங்கே பியர் கிடைக்குமா என்று தமிழிலேயே கேட்டேன். அதற்கு அந்த வி.சே. அண்ணா நான் கடந்து வந்த உணவகங்களைக் காட்டி “அங்க இருக்குற எல்லா கடைலயும் கெடைக்கும்டா” என்று அச்சு அசலாக வி.சே. மாடுலேஷனிலேயே சொன்னார். 
 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 November 2020

வர்கலா – ஆதாமிண்ட ஸ்வர்க்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பதிவு: தொடக்கம்

வர்கலா பயணத்தில் உண்ண, உறங்க, உற்சாக பானம் அருந்த என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்த சமயம். ஏற்கனவே வர்கலா சென்று வந்த சில நண்பர்களிடம் தகவல்கள் கேட்டிருந்தேன். அதில் ஒரு அண்ணன் செளத் வேணாம் நார்த் போ, கீழே இருக்காதே மேலே போயிடு என்று சில சங்கேத குறிப்புகள் கொடுத்தார். எனக்குப் புரியவில்லை. நான் கீழே மேலே பாகுபாடெல்லாம் பார்ப்பதில்லை. மகிழ்ச்சிதான் முக்கியம். பின்னர், வர்கலாவின் புவியியலை ஆராயும்போது தான் அண்ணன் சொன்னது புரிய வந்தது.

கோவாவைப் போலவே வர்கலாவையும் வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்கலாம். அதே போல வடக்கு ஆரவாரமானது, தெற்கு அமைதியானது. இரண்டுக்கும் மத்தியில் வர்கலா ஹெலிபேட். வர்கலாவைப் பற்றி கூறும்போது க்ளிஃப் (cliff) என்று குறிப்பிடுகிறார்கள். Cliff என்றால் செங்குத்தாக இருக்கக்கூடிய சிறிய குன்று (குறிப்பாக கடற்கரைக்கு அருகில்) என்று பொருள். மேலே குன்று, கீழே கடல். அண்ணன் சொன்னது இதுதான் !

நான் எனது நான்கு நாள் பயணத்தை இரண்டாக வகுத்துக் கொண்டேன். முதலிரு நாட்கள் தெற்கு, அடுத்த இரு நாட்கள் வடக்கு. தெற்கில் நான் சல்லடை போட்டு தேடிச் சலித்து முன்பதிவு செய்த விடுதியின் பெயர் ஆதாமிண்ட ஸ்வர்க்கம் (Adam’s Paradise). எனக்காகவே பிரத்யேகமாக தயார் செய்தது போலிருந்தது அவ்விடுதி !
 
விடுதி கட்டிடம்
ஹெலிபேடில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில், கிட்டத்தட்ட வர்கலாவின் தென்மூலையில், ஒரு அமைதியான தெருவில் அமைந்திருக்கிறது விடுதி. தனிப்பயணி என்பதால் ஒருவர் மட்டும் தங்கும் சிறிய அறையை பதிவு செய்திருந்தேன். வாடகை நாளொன்றிற்கு அறுநூறு ரூபாய். 
 
நீச்சல் குளம்
குன்றின் உச்சியில் விடுதி, முதல் மாடியில் அறை, கீழே நீச்சல் குளம், அதையொட்டி சிறிய லான், அங்கிருந்து கீழே பார்த்தால் பிரம்மாண்டமான அரபிக்கடல், விடுதியிலிருந்து கடற்கரைக்கு இறங்க இரும்பால் செய்யப்பட்ட படிக்கட்டுக்கள். நல்ல வாரநாட்களாக பார்த்து பயணம் செய்ததால் இதையெல்லாம் அனுபவிக்க விடுதியில் என்னைத் தவிர வேறு விருந்தினர்கள் யாருமில்லை !

லானிலிருந்து கடல் !
அறையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் ஒரு கனவு அறை இருக்குமல்லவா. என்னுடைய கனவு அறை என்பது ஒருவர் மட்டும் படுக்கும் சிறிய கட்டில், ஒரு மேஜை, ஒரு நாற்காலி, ஒரு அலமாரி, சுத்தமான குளியலறை, கழிப்பறை. அது அத்தனையும் கச்சிதமாக அமைந்திருந்தது அந்த அறையில். தொலைக்காட்சி மட்டும் இருந்திருந்தால் பரிபூரணம் ! 

அறையில் மேஜை நாற்காலி
இந்த கோவிட், கீவிட் எல்லாம் வந்தபிறகு, தீவிரமாக WFH செய்துக் கொண்டிருந்த சமயத்தில் வர்கலாவில் நான் தங்கிய அந்த அறையை நினைத்துக் கொள்வேன். நாளொன்றிற்கு அறுநூறு ரூபாய் வாடகை. மொத்தமாக நீண்ட நாட்களுக்கு வாடகைக்குப் பிடிப்பதென்றால் இன்னும் குறைவான தொகைக்குக் கூட கிடைக்கும். மேஜை, நாற்காலி, நல்ல காற்று, கடற்கரை, கேரள உணவு. BEVCO சரக்கு, அப்படியே வைக்கம் முகம்மது பஷீரைப் படித்துக்கொண்டு, வாரம் ஒருநாள் ஃபஹத் ஃபாஸில் படமோ, பார்வதி படமோ பார்த்துக்கொண்டு மீதமிருக்கும் காலத்தை நிம்மதியாகக் கழித்திருக்கலாம் என்று தோன்றும்.

அந்த விடுதியில் தங்கியிருந்த இரண்டு நாட்களும் ஏதோ அந்தப்புரத்தில் தங்கியிருந்தது போல ஒரு அணுக்கம். கட்டோடு குழலாட ஆட என்று ரிலாக்ஸ்டாக நீச்சல் குளத்தில் மிதப்பது, லானில் அமர்ந்து அரபிக்கடலை ரசிப்பது, இரவில் மதுவுடன் லானில் அமர்ந்து கடலில் சின்னச் சின்ன படகுகளில் தெரியும் வெளிச்சப் புள்ளிகளின் தொகுப்பைப் பார்ப்பது என்று ரம்மியமாகக் கடந்தன அந்நாட்கள்.

இரவு நேரத்து கடல்

குறைகள் என்று பார்த்தால் நீச்சல் குளத்தில் இலைகள் மிதக்கும். லக்ஸுரியை விரும்பும் ஆட்களுக்கு ஒத்து வராது. இரவு நேரத்தில் வெளியே பூச்சிகள் தொந்தரவு (அநேகமாக இது எல்லா விடுதிகளிலும் உண்டு). நான் ஒரே ஒரு கெஸ்ட் என்பதால் விடுதியில் உள்ள உணவகத்தில் சமைக்கவில்லை. நல்ல உணவகம் வேண்டுமென்றால் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள டவுனுக்கு செல்ல வேண்டும் அல்லது அதே அளவு தொலைவில் உள்ள வடக்கு வர்கலாவுக்கு செல்ல வேண்டும்.

முதல் நாள் மாலை. சுமார் ஆறரை மணி இருக்கும். சைக்கிளை எடுத்துக் கொண்டு வர்கலா டவுனுக்கு கிளம்பினேன். BEVCO சென்று மது வாங்க வேண்டும், மதுவுடன் சாப்பிட பழங்கள் மற்றும் இரவு உணவு வாங்க வேண்டும். நிதானமாக ஒவ்வொன்றையும் வாங்கி முடிப்பதற்குள் இருட்டிவிட்டது. ஒரு அரை கி.மீ. வரை டவுன் கடைகளும் வெளிச்சங்களும் உதவின. அதன் பிறகு வெறும் இருட்டும் காடும் தான். ஆளரவமற்ற குறுகிய சாலைகள். திடீர் திடீரென ஒளியை பாய்ச்சியபடி கடந்து செல்லும் வாகனங்கள். ஒரு மாதிரி ஹாண்டட் அனுபவமாகிவிட்டது.

அடுத்த நாள் அதே தவறை செய்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்தேன். விடுதியில் இருந்து சுமார் முக்கால் கி.மீ. தூரத்தில் ஒரு உணவகம் இருப்பதை பகலிலேயே குறித்து வைத்துக்கொண்டேன். பக்கத்தில் தானே என்று எட்டு மணி வரைக்கும் விடுதியில் இருந்து உ.பா. அருந்திவிட்டு சாவகாசமாகக் கிளம்பினேன். நடைதொலைவு என்பதால் சைக்கிள் எடுத்துச் செல்லவில்லை. ஊர் ஓய்ந்துவிட்டது. ஆள் நடமாட்டமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகளில் மட்டும் வெளிச்சம் தெரிகிறது. யோசித்துப் பாருங்கள், இருள் சூழ்ந்த சாலை, தூரத்தில் ஒரே ஒரு வீடு, அதிலிருந்து வரும் வெளிச்சம், அங்கிருந்து கேட்கும் தொலைக்காட்சி சத்தம் ஒரு மனிதனை எவ்வளவு தொந்தரவு செய்யும். இது போதாதென்று தெரு நாய்கள் வேறு. இத்தனையையும் கடந்து உணவகத்திற்கு சென்றால் அதன் வாயிலுக்கும் உணவகம் இருக்கும் பகுதிக்குமே முன்னூறு மீட்டர் இருள் பாதை. ஆக, அன்றைய இரவும் திகிலாகவே கழிந்தது.

இவையெல்லாம் தனிப்பயணத்தின் சாதகங்களா பாதகங்களா என்றால் இரண்டும் தான் ! தனியாகச் சென்றதால் தான் இவ்வளவு த்ரில் கிடைத்தது. ஆனால் நண்பர்களுடன் சென்றிருந்தால் இது அப்படியே வேறு மாதிரி உற்சாகமான நிகழ்வாக மாறியிருக்கும்.

முக்கால் கி.மீ. நடந்து சென்றடைந்த அந்த உணவகத்தில் மூன்று மேல்நாட்டு சீமாட்டிகள் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் கிட்டாரோ ஏதோ இசைத்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் பஃபலோ சோல்ஜர் பாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஏனோ தேனிசைத் தென்றல் தேவாவும், கெளசல்யாவும் நினைவுக்கு வந்து போனார்கள்.

அடுத்த பதிவு: வடக்கு கடற்கரைகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 November 2020

வர்கலா – தொடக்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

ஒரு திரைப்படமோ, ஒரு புத்தகமோ மனதுக்கு பிடித்துவிட்டால் அதன் இயக்குநரின் / எழுத்தாளரின் மற்ற படைப்புகளை தேடுவோமில்லையா. அது போல கோவா சென்றுவந்த பிறகு இந்தியாவில் கோவாவைப் போல என்னென்ன ஐட்டங்கள் இருக்கின்றன என்று தேடத் துவங்கினேன். அத்தேடல்கள் அனைத்தும் இரண்டு ஊர்களை மீண்டும் மீண்டும் பரிந்துரைத்துக் கொண்டே இருந்தன. 


ஆம், கோவாவிற்கு இரண்டு தங்கைகள். ஒன்று, கோகர்னா. மற்றொன்று வர்கலா ! 

இரண்டில் ஒன்று என்றெல்லாம் கட்டுப்பாடுகள் வைத்துக்கொள்ளவில்லை. இரண்டும் வேண்டும். ஆனால் எது முதலில் என்ற கேள்வி வந்தபோது இரண்டு அங்குலம் முன்னால் வந்து நின்றது வர்கலா. ஏனெனில் அது கேரளா ! மென்சோகம் இழையோடும் சாலைகள், இருமருங்கே நீண்டு வளர்ந்த தென்னைகள், கட்டஞ்சாயா, கள்ளு, பீஃப் கறி இவையெல்லாம் தாண்டி கேரளா என்பது ஒரு உணர்வு !

வர்கலா செழிப்பான கடற்கரை ஸ்தலம் மட்டுமில்லாமல் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமும் கூட. அரபிக்கடலின் முத்து, தென்னகத்து காசி போன்றவை வர்கலா பெற்ற பெயர்கள். பாண்டிய மன்னனின் பாவம் போக பிரம்மன் கோவில் கட்டச் சொன்ன இடம், நாரதர் வீசிய வல்கலம் (மரப்பட்டை) வந்து விழுந்த இடம் என்று புராணமும் அதன் பங்குக்கு வர்கலா பற்றி கதைகள் சொல்கின்றன. இங்குள்ள அஞ்செங்கோ (அஞ்சு தேங்காய் என்பதின் வழுவல்) கோட்டை பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயே அரசால் நிர்மாணிக்கப்பட்டது. அரசுக்கு பாதுகாப்பு அரணாகவும், அதே சமயம் வணிகப் தொடர்புக்கு பயன்படுபவதாகவும் இருந்திருக்கிறது இந்தக் கோட்டை. ஆன்மிகவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு வர்கலாவைச் சேர்ந்தவர். இவர் அமைத்த சிவகிரி மடம் இன்றும் இங்கு செயல்பட்டு வருகிறது.
 
எனது இந்தப் பயணம் ஒரு சோலோ பயணம். Solo travel / traveller என்கிற சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களாக தனிப்பயணம் / தனிப்பயணி என்பவற்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் கவிஞர் மனுஷி. இனி நாமும் அவற்றையே பயன்படுத்துவோம். சில தவிர்க்க முடியாத / எழுத்தில் கொண்டு வர முடியாத காரணங்களுக்காக எனது பயணத்துணைகள் என்னோடு தொடர்ந்து பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. அதனால் நான் தனிப்பயணியானேன் ! 

உண்மையில் தனிப்பயணங்களில் சம அளவில் சாதகங்களும் பாதகங்களும் உள்ளன. சாதகங்களில் பிரதானமானது - சர்வாதிகாரம். அந்த இடத்திற்கு போனால் எனக்கு சளி பிடித்துவிடும், அவ்வளவு தூரம் உட்கார்ந்து வர முடியாது – எனக்கு பைல்ஸ், அலுவலகத்தில் லீவ் தர மாட்டார்கள் (பொய்), அந்த தேதியில் தான் வீட்டில் தலுவை போடுகிறார்கள் போன்ற விவாதங்களுக்கு வேலையில்லை. உங்கள் தேதி, உங்கள் தேர்வு. நீங்கள் திருமணமாகாதவர் என்றால் உங்கள் மேனேஜர் ஒருவரை மட்டும் சமாளித்தால் போதும், திருமணமானவர்களுக்கு இரண்டு. அவ்வளவுதான் ! 

புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல், சுயமறிதல் போன்ற சில சாதகங்களும் தனிப்பயணங்களில் உண்டு. இவை தவிர, தனிப் பயணங்களில் புது நண்பர்கள் கிடைப்பார்கள் என்பது பொது நம்பிக்கை. Introvert என்பதால் அதுகுறித்த கள நிலவரத்தை என்னால் கண்டறிய முடியவில்லை. 

பாதகங்களில் பிரதானம் ஒரு நல்ல புகைப்படம் எடுத்துத் தரக்கூட யாரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான். நம்முடன் நண்பர்கள் இருக்கும்போது கிடைக்கக்கூடிய ஒரு கூடுதல் தைரியம் தனிப்பயணங்களில் சாத்தியமில்லை. மாலை வேளைகளில் ஒருவிதமான வெறுமையுணர்வு தோன்றும்.

இன்னும் case specific சாதக பாதகங்களை இத்தொடரின் இடையிடையே தெரிந்துகொள்வீர்கள். 

திருவனந்தபுரம் மெயில்

தரை மற்றும் வான் மார்க்கங்களில் மிக எளிதாக அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது வர்கலா. சென்னை மத்திய ரயில் நிலையத்திலிருந்து வர்கலாவிற்கு தினசரி ரயில் செல்கிறது (திருவனந்தபுரம் மெயில் மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்). எக்மோரிலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் செல்கிறது. வர்கலா ரயில் நிலையத்திலிருந்து சில கி.மீ. தூரத்தில் சுற்றுலா தளத்தின் மத்திய பகுதி. ஆட்டோவில் நூறு ரூபாய். ஒருவேளை வர்கலா ரயில் நிலையம் சாத்தியமில்லை என்றால் கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ, திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து ஐம்பது கி.மீ. வான்வழி செல்வதென்றால் ஐம்பது கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் விமான நிலையம். அங்கிருந்து கேரள அரசு பேருந்துகள் வர்கலாவிற்கு இயக்கப்படுகின்றன. 
 
பழம்பொரி
என்னிடம் கைவசம் நாட்கள் தாராளமாக இருந்ததால், போக வர இரண்டுக்கும் திருவனந்தபுரம் மெயிலில் டிக்கட் எடுத்திருந்தேன். முதல்நாள் இரவு 7:45க்கு சென்னையிலிருந்து கிளம்பும் ரயில் சேலம், ஈரோடு, கோயமுத்தூர் வழியாக அதிகாலையில் கேரளா மாநில பாலக்காடு ரயில் நிலையத்தை கடக்கிறது. டீ, காபி, வடையுடன் பழம்பொரியும் விற்கப்படுவது கேரள வருகையை உறுதிப்படுத்துகிறது. அதன்பிறகு ரயிலில் தினசரி பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார்கள். காலை 10.50க்கு ரயில் வர்கலாவை சென்றடைகிறது. 

வர்கலா ரயில் நிலையம்
ஆர்ப்பாட்டமில்லாத சிறிய ரயில் நிலையம். அருகிலேயே நான் நீ என்று போட்டி போடாத ஆட்டோ ஸ்டாண்ட். வர்கலா ஹெலிபேட் என்று கேட்டு வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தேன். ரயில் நிலையத்திலிருந்து சரியாக மூன்றரை கி.மீ. வர்கலா ஹெலிபேட் என்பது ஒரு மலை முகட்டில் அமைந்துள்ள பிரம்மாண்டமான சமதளம். ஹெலிகாப்டர்கள் வந்து தரையிறங்குவதற்கான அமைப்பு. அதன் மத்தியில் என்னை இறக்கிவிட்டுச் சென்றார் ஆட்டோ ஓட்டுநர்.   

இருவர் படத்தின் ஒரு காட்சியில் பிரகாஷ்ராஜ் மோகன்லாலை அவரது வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்வார். மெல்ல மொட்டை மாடியின் விளிம்பிற்கு செல்லும் மோகன்லால் கீழே அவருக்காக ஆரவாரம் செய்துக் கொண்டிருக்கும் மக்களைக் காண்பார். அதுபோல நான் அந்த ஹெலிபேடின் மத்திய பகுதியிலிருந்து மலை முகட்டிற்கு மெதுவாக நடந்து செல்கிறேன். 

கீழே வர்கலா கடற்கரையின் பிரம்மாண்டமான எழில்தோற்றம் தோன்றுகிறது. “இருவர்” மோகன்லால் அடைந்ததை விட பரவசமான அனுபவம் அது !


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 May 2020

நள்ளிரவின் நடனங்கள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஊரடங்கிற்கு முன் ஒரு மாலைப்பொழுதில், ஒரு பேருந்து பயணத்தில், கிண்டிலில் நள்ளிரவின் நடனங்கள் புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். முதல் கதையே கோவா செல்லும் திருமணமான நான்கு பேச்சுலர்களைப் பற்றியது. இரண்டாவது கதை ஊட்டியில் தொடங்கியது. ஒரு நிமிஷம். இது பயணத்தில் படிப்பதற்கு உகந்த புத்தகம் போலிருக்கிறதே என்று எடுத்து கமுக்கமாக உள்ளே வைத்துக் கொண்டேன்.

அத்துடன் வர்கலாவில் ஒரு சிம்பாவையும், ஒரு பீராவையும் உள்ளே சாத்தியிருந்த ஒரு நள்ளிரவில் நடனங்களைத் தொடங்கினேன்.

மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள். எழுத்தாளருடைய சுருக்கமான, அடக்கமான முன்னுரை. வீம்புக்காக ஒரு குழந்தை எழுதிய கதைகள் என்று தனது முன்னுரையில் எழுதியிருக்கிறார் அராத்து. மேலும் முன்னுரையில் புது முயற்சி, தனித்துவம் போன்ற சில குறிச்சொற்களையும் கவனித்தேன்.

வழக்கமாக அராத்துவின் புத்தகங்களில் சாருவின் முன்னுரை இருக்குமில்லையா ! அது இந்த புத்தகத்தில் இல்லை. அதனால் மனதில் எந்த சஞ்சலமும் இல்லாமல் புத்தகத்தை தொடர்ந்து வாசிக்க முடிந்தது. 

பெரும்பான்மை கதைகள் நவீன உலகின் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது. அப்பர்-மிடில் கிளாஸ் வாழ்க்கை முறையைப் பேசுகிறது. அவ்வளவு கதைகளும் டிராவல் சம்பந்தப்பட்டவை இல்லை என்றாலும் கோவா, ஊட்டி, புவனேஷ்வர், லங்காவி, புக்கட் என்று பயணிக்கின்றன. பயணத்தில் படிப்பதற்கு உகந்த புத்தகம் என்ற கருத்தில் மாற்றமில்லை.

பொதுவாக தமிழ் புனைவுகளில் உவமைகளுக்கு என்று சில டெம்ப்ளேட்கள் வைத்திருப்பார்கள். அவற்றை மொத்தமாக காலி செய்து, முற்றிலும் வேறொரு கோணத்தில் உள்ளது அராத்தின் உவமைகள். சில உதாரணங்கள் - தெலுங்கு சினிமாவின் பாடல் காட்சியில் முதல் வரிசையில் ஆடுபவளைப் போல் இருந்த ஒருத்தி – மாபெரும் லேடீஸ் ஹாஸ்டலில் அழகிய இளம்பெண்கள் அனைவரும் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டதைப் போல கூடுதல் பச்சையுடன் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தன செடிகள்.

அதே போல சின்னச் சின்னச் கிண்டல்கள். வேலைக்காரி, வேலைக்காரி என்று தொடர்ந்து சொல்ல வேண்டாம். பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ் ஆசாமிகள் படையெடுப்புக்கு ஆளாக வேண்டி வரும் – ஃபில்டர் காஃபி குடிக்க வேண்டும் போலத்தான் இருந்தது. ஆனாலும் கிரீன் டீ. குடித்துக் கொண்டும் புகைத்துக் கொண்டும் இருப்பதால் மற்ற அனைத்திலும் ஹெல்த்தியாக இருந்தாக வேண்டி இருக்கிறது – இலக்கியம் என்றால் டி.ராஜேந்தர் பொண்ணுதானே என்று கேட்கும் அளவுக்கு சமர்த்தனாக தன்னை வளர்த்தெடுத்து இருந்தான். ஒரு சிறுகதைக்குள் குட்டிக்கதையாக வரும் நவ் ஹீன் முழுக்கவே பட்டாசு.

இந்திய நடுத்தர வர்க்க மனோபாவத்தைப் பற்றிய ஒரு மெல்லிய நையாண்டி அராத்துவின் கதைகளில் தொடர்ந்து இடம்பெறுகிறது. ஒரு இடத்தில் கோவாவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் பற்றிய வர்ணனை வருகிறது. எண்பது சதவிகிதம் வெளிநாட்டினரால் நிரம்பி வழியும் ரெஸ்டாரண்ட் அது. ஒவ்வொருவரும் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எழுதிக்கொண்டே வருகிறார். சில ரஷ்யர்கள் கஞ்சாவோ ஏதோ புகைத்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் கிடார் வாசித்துக்கொண்டிருந்தான். இரண்டு பெண்கள் மினி ஸ்கர்ட்டில் மெலிதாக இடுப்பை ஆட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர் என்று நீளும் அந்த வர்ணனை கடைசியாக ஒரு இந்தியன் ஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டு இருந்தான் என்று முடிகிறது.

அதே சிறுகதையில் இன்னொரு இடத்தில் வகதூர் பீச்சில் தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஒரு நடுத்தர வயது தொப்பைக் கூட்டம் தனியே வாந்தி எடுத்தபடி கிடந்தது. வாந்திக்கு நடுவில் ஒரு தொப்பை கர்ம சிரத்தையாக செந்தமிழ் தேன்மொழியாள் என சீரியஸாக பாடியபடியே ஆடிக்கொண்டிருந்தது என்று வருகிறது.

அராத்துவின் ஒரு சில கதைகளில் ஒரு பிரபல எழுத்தாளரின் சாயல் தெரிவதாக யோசித்துக் கொண்டிருந்தேன். சட்டென எழுத்தாளரின் பெயர் நினைவுக்கு வரவில்லை. ம்ஹும். சார்லஸ் புக்கொவ்ஸ்கி, ழார் பத்தாயெல்லாம் இல்லை. அவர்களை நான் படித்தது இல்லை என்பதால் அராத்து, அவர்களின் சாயலில் எழுதுகிறாரா அல்லது அவர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டாரா என்பது குறித்து என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. நான் கவனித்தது வாமு கோமுவின் சாயல். குறிப்பாக வெடுக் ராஜா, அபாயம் ஆகிய இரண்டு கதைகளும் வாமு கோமு ஸ்டைல். வெடுக் ராஜா கதையை படிக்கும்போது களவாணி விமல் நினைவுக்கு வந்தார்.

இச்சிறுகதைகளில் பெரும்பாலானவை எழுத்தாளரின் சொந்த மற்றும் நண்பர்களுடைய அனுபவங்களில் இருந்து எழுதப்பட்டவை என்று உணர முடிகிறது. உறைவிடப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது பற்றிய கதை ஒரு உதாரணம். இன்னொரு கதையில் ஹீரோ ஒரு பீச் ரெசார்ட் பார்ட்டிக்கு போகிறான். அந்தப் பார்ட்டியைப் பற்றி குறிப்பிடுகையில் – கண்டிப்பாக மறக்காமல் அவசியம் தங்களுக்கான மதுவை தாங்களே எடுத்து வாருங்கள் என காலில் விழாத குறையாக அந்தக் குழுவின் அட்மின் பல போஸ்ட்டுகள் மூலம் கெஞ்சிக் கொண்டு இருந்தார் என்று எழுதியிருக்கிறார். 

ஆங்காங்கே சில பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறார். அதில் முக்கியமான பரிசோதனை புக்கட் என்கிற சிறுகதை. மல்டிபிள் பர்ஸன் நரேடிவ் முறையில் பயணிக்கிறது இக்கதை. ஒரு தாய்லாந்து லோக்கல் ஆள், ஒரு விலைமகள், ஒரு இந்திய இளைஞன். ஒருவருக்கொருவர் அதிகம் அறிமுகமில்லை. அக்கதையில் ஒரு கட்டம் இப்படிப் போகிறது –

அவளை அழைத்து இந்திய நண்பனிடம் கை காட்டினேன். அவள் இயல்பாக அவனுடன் ஒட்டிக்கொண்டாள். லவ் யூ டார்லிங்க்என்றாள். 

லவ் யூ டார்லிங்க்என்று சொல்லி அவனை இயல்பாக்க முயற்சித்தேன். அவன் இதய துடிப்பை உணர முடிந்தது. அளவுக்கு அதிகமாக இருந்தது. 

லவ் யூ டார்லிங்க்என்று அவள் சொன்னது எனக்கு இதமாக இருந்தது. ஒரு ஒட்டுதல் வந்தது. இவள் அழகாகவும் ஸ்டைலாகவும் இருந்தாள்.

ஒரு சின்ன சம்பவம். அதனை மூவரும் அவரவர் பார்வையில் சொல்கிறார்கள். இக்கதை வாசகர்களுக்கு ஒரு சிறிய சவாலையும், வாசிப்பின்பத்தையும் வழங்குகிறது.

முன்னுரையில் எழுதியிருப்பது போலவே புது முயற்சியும், தனித்துவமும் அராத்துவின் கதைகளில் நிரம்பியிருக்கின்றன. அதே சமயம் ஒருவித அலட்சியமும் தென்படுகிறது. அராத்து தன்னுடைய கதைகளை ரொம்ப கேஷுவலாகவும், சில சமயம் வாய்ஸ் டைப்பிங் மூலம் எழுதுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்தாளன் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது தான். அதே சமயம் எழுத்தாளனுக்கு டிலிஜென்ஸ் மிக மிக அவசியம். எழுத்தாளர் கூடுதலாகக் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இதே புத்தகத்தை இன்னும் மேம்பட்ட வடிவில் தந்திருக்கலாம்.

கடைசியாகத்தான் கவனித்தேன். சாருவின் சுருக்கமான ஒரு முன்னுரை பின்னட்டையில் இருக்கிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 April 2020

கன்னித்தீவு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கன்னித்தீவு – மனதிற்கு நெருக்கமான நாவல்.

2004ம் ஆண்டு. சுனாமி வந்து சில நாட்களுக்குப் பிறகு “தி ஹிந்து” நாளிதழின் முகப்புப் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது. சுனாமிக்குப் பிறகு அந்தமானை சுற்றியுள்ள தீவுகளை மேற்பார்வையிட, இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டரில் ரோந்து சென்றிருக்கிறார்கள். அப்போது வடக்கு சென்டினல் தீவை கடக்கையில் அங்கிருந்த ஒரு பழங்குடி தனது ஈட்டி போன்ற ஆயுதத்துடன் ஹெலிகாப்டரை குறிபார்த்து ஓடிவரும் புகைப்படம் அது. தனிப்பட்ட முறையில் எனக்கு வியப்பையும் நிறைய அதிர்ச்சியையும் கொடுத்த புகைப்படம் அது.

© இந்திய கடற்படை
இதுகுறித்து ப்ளாகில் ஒன்றிரண்டு முறை எழுதவும் செய்திருக்கிறேன். அதன்பிறகு, குறிப்பாக 2012ல் நான் அந்தமான் சென்றுவந்த பிறகு வடக்கு சென்டினல் மக்களைப் பற்றி நிறைய தகவல்களைத் தேடித் தேடி படித்திருக்கிறேன். சென்டினிலியர்களைப் பற்றி படிப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. இதுதான், இப்படித்தான் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக இல்லாமல் கொஞ்சம் ரகசியமாக உள்ள விஷயங்களுக்கே உரித்தான கவர்ச்சி. ராமாவரம் சம்பவத்தையோ, ஆட்டோ சங்கர் வரலாறில் உள்ள நடிகைகளின் பெயர்களையோ, ஜெயலலிதாவின் மரண ரகசியத்தையோ தெரிந்துகொள்ள விழைவதற்கு இணையான கிக் அது. ஒருவேளை நீங்கள் இதனை நம்பாமல் கூட போகலாம். புனைவு எழுதும் வாய்ப்பு எப்போதாவது கிடைத்தால் அதில் வடக்கு சென்டினிலியர்களை எங்கேனும் புகுத்த வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன். சி.எஸ்.கே முந்திக்கொண்டார்.

நாவலின் அட்டைப்படமே ஒரு பரிபூரண உணர்வைத் தருகிறது. ஒரு முன்னூறு பக்க நாவலின் உயிரைக் குழைத்து அப்படியொரு ஓவியத்தை வரைந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். 

நாவலின் கதை இதுதான் என்று ஓரளவிற்கு யூகித்து வைத்திருந்தேன். In fact, யாராக இருந்தாலும் யூகித்துவிடலாம். வெளியீட்டு விழாவிற்கு வேறு சென்று வந்திருந்தேன். இருந்தாலும் முதல் பர்வம் ஒரு இனிய வியப்பு. அது எங்கள் முதல் கர்ப்ப காலத்தை நினைவூட்டியது. Intimate விஷயங்களை பொதுவில் எழுத வேண்டாம் என்று யோசிக்கிறேன். சில பகுதிகள் அச்சு அசலாக எங்களுடன் பொருந்திப் போனது. அநேகமாக எல்லா மகிழ்ச்சியான தம்பதிகளுக்கும் கன்னித்தீவு சில நினைவுகளை மீட்டெடுக்கும்.

எனது மனைவி ஒரு budding reader. அவர் தனது முதல் வாசிப்பை  தன்னிச்சையாக தேர்ந்தெடுத்தார் (பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்). அதனை படித்து முடித்ததும் அத்தோடு விடாமல் தொடர்ந்து புத்தகம் வாசிக்க விரும்புவதாக என்னிடம் கூறினார். பார்வதி பற்ற வைத்த நெருப்பை அணையாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என்னிடம் வந்தது போலிருந்தது. அவர் வாசிப்பதற்கான இரண்டாவது நாவலாக கன்னித்தீவை நான்தான் தேர்ந்தெடுத்தேன். எனது தேர்வு நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவும், திருப்திகரமாகவும் அமைந்தது.

நாவலில் உள்ள தர்க்கப்பிழைகளை வைத்து நிறைய எழுதிவிட்டார்கள். நிறைமாத கர்ப்பிணியை தேர்தல் பணிக்கு அனுப்ப மாட்டார்கள், பார்வதி எப்படி நாள் முழுக்க கடல்நீரில் மிதக்கிறாள், எப்படி சாகசங்கள் செய்கிறாள் என. திரைக்கதையில் மூன்று அங்க அமைப்பு என்பார்கள். அதன் முதல் பகுதி செட் அப். ஒரு குறிப்பிட்ட சூழலை நோக்கி கதையை நகர்த்திச் செல்வது செட் அப் பகுதியின் வேலை. டைட்டானிக் கப்பலின் மாலுமிகள் ஜாக்கும் ரோஸும் ரொமான்ஸ் செய்வதை பராக்கு பார்க்காமல் ஒழுங்காக கப்பலை செலுத்தியிருந்தால் அது பனிப்பாறையில் மோதாமல் இருந்திருக்கும் இல்லையா ? ஆனால் அப்படி அவர்கள் சூதானமாக நடந்திருந்தால் டைட்டானிக் படம் சாத்தியமில்லை. பிரகாஷ் ராஜ் சுவலட்சுமியை அடைய விரும்பினால் தான் ஆசை. விஜய் ஜோதிகாவின் இடுப்பைப் பார்த்தால் தான் குஷி ! 

சி.எஸ்.கே.விடம் நான் வியந்து ரசிக்கும் விஷயம் பெரியப் பெரிய விஷயங்களை ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிடுவது. இந்நாவலின் இடையே இப்படியொரு வரி வருகிறது – கல்பனா-1 ஏவப்பட்ட அதே நாளில் பார்வதியின் அப்பா அவள் ஜாதகத்தைக் கையில் எடுத்தார். எவ்வளவு சுருக்கம் பாருங்கள். ஒரு பக்கம் நாடு விண்வெளிக்கு செயற்கைக்கோளை ஏவும் அளவிற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. அந்தப் பணியில் பங்காற்றிக்கொண்டிருக்கும் முற்போக்கு சிந்தனை கொண்ட கதாநாயகன். இன்னொரு பக்கம் அதே விண்வெளியில் உள்ள கோள்களின் மீது மூடநம்பிக்கை கொண்ட கதாநாயகியின் அப்பா. இதே மாதிரி நாவல் முழுக்க நிறைய சுவையான, சுருக்கமான வாக்கியங்கள். சில உதாரணங்கள் - காமத்தை விட மனிதனுக்கு உத்வேகமூட்டக்கூடிய ஒன்று இருக்குமானால் அது உயிராசை தான் - பெண்களும் காதலும் இல்லாவிடில், பூமி நிர்வாணமாகவே இருந்திருக்கும் - கொதித்துப் பேசும் கணவன் தலையணையில் அடங்குவது போல் - ஓர் ஆண் யோனியிலிருந்து ஜனித்த கணம் முதல் அவன் போராடுவதெல்லாம் மீண்டும் ஒரு யோனிக்குள் புகுவதற்குத்தான்.

அந்தமானின் புவியியல் அமைப்பு, போர்ட் ப்ளேர் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் ஸ்டாடிஸ்டிக்ஸ், அந்தமானின் பழங்குடியின மக்கள், இந்தியாவின் தென்முனை குமரி அல்ல, இந்திரா முனை, அடல் பிஹாரி வாஜ்பாய் அறிவித்த நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் என்று ஏராளமான தகவல்கள். நிறைய உழைத்திருக்கிறார் எழுத்தாளர். 2004 லோக்சபா தேர்தலில் இந்த வாக்குச்சாவடியில் இரண்டு ஓங்கே இன மக்கள் வந்து வாக்களித்திருந்தார்கள். ஒரு 75 வயதுக் கிழவரும், ஒரு 32 வயதுப் பெண்ணும் - என்று போகிறபோக்கில் எழுதிவிடவில்லை. அது ஐம்பது சதவிகித உண்மைச்செய்தி. கதைக்காகவும், அதன் புவியியலுக்காகவும் பாதித் தகவலை மாற்றியிருக்கிறார். பார்வதியின் கதாபாத்திரமே கூட கால்வாசி உண்மைதான். படிக்க. அதே சமயம் சென்டினிலியர்கள் என்றே நேரடியாக எழுதாமல் ஏன் லெமூரியர்கள் என்கிற புனைவு பழங்குடியினத்தை தேர்வு செய்தார் என்பது புரியவில்லை. எப்படியும் சென்டினிலியர்கள் அவதூறு வழக்கு போட மாட்டார்கள், எழுத்தாளர் அவர்களை மதம் மாற்றும் நோக்கில் அங்கே பயணிக்காத பட்சத்தில் உயிருக்கும் ஆபத்தில்லை. அப்புறம் ஏன் ? ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் ஒரு விமர்சனத்தில் இந்த புத்தகத்தைப் படித்ததால் தெரிந்துகொண்ட தகவல்கள் என்று கீழே லெமூரியர்களை அந்தமான் பழங்குடியினர் என்று பட்டியலிட்டுள்ளார்கள்.

பொதுவாக படைப்பாளிகள் தங்களுடைய படைப்புகளில் தங்களையே ஒரு கதாபாத்திரமாக சிருஷ்டித்துக் கொள்வதுண்டு. பாய்ஸ் ஐவரில் யார் ஷங்கர் என்ற கேள்வியைக் அவரிடம் கேட்டபோது ஐவரிடமும் நான் கொஞ்சம் இருக்கிறேன் என்றார். மிஷ்கின் படத்தில் எல்லோரும் மிஷ்கின் என்று ஒரு வரி இந்நாவலிலேயே வருகிறது. தமிழ் நாவல்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். கணேஷ் – வசந்த் துவங்கி பிரபாகரன் வரை எழுத்தாளரின் சாயலை பரவலாகப் பார்க்கலாம். ஆனால் இந்நாவலோ ஒரு பெண்ணைப் பற்றியது. எழுத்தாளர் ஆண். இருப்பினும் எழுத்தாளர் விடுவாரில்லை. பார்வதி அவளது கணவனைப் பற்றி நினைப்பதாக, தன்னைப்பற்றியே நிறைய எழுதித் தீர்த்துவிட்டார். முருகன் இருந்திருந்தால் அப்படி செய்திருப்பான், முருகன் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பான், முருகன் அது, முருகன் இது, முருகன் ஒரு திருட்டுப்பயல், முருகன் ஒரு முரடன், முருகன் ஒரு பொறுக்கி இப்படி நீள்கிறது. ஒரு கட்டத்தில் எழுத்தாளரே மறந்துவிட்டால் கூட ச்சே முருகன் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பான்ல என்று நமக்கே தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.

கன்னித்தீவு நாவலை படிப்பவர்கள் அதன் கடைசி அத்தியாயத்தை மட்டும் படிக்காமல் விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். அது மட்டும் எனக்கு பிடிக்காமல் போயிற்று. அல்லது புரியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அது கதையின் இறுதிப்பகுதி என்பதால் அதுகுறித்து இன்னும் விரிவாக எழுதுவதை தவிர்க்கிறேன். மனைவியிடம் என்ன கடைசியில் இப்படி முடிந்துவிட்டது என்றேன். அவருக்கும் அந்த முடிவு பிடிக்கவில்லை. சினிமாக்களில் எல்லாம் இறுதியாக ஒரு ட்விஸ்ட் அல்லது இரண்டாம் பாகத்திற்கென ஒரு நுனியை வைப்பார்கள் இல்லையா அது மாதிரி போலிருக்கிறது. பார்வதி பற்ற வைத்த தீ ! 

இதில் இன்னொரு கோணமும் உண்டு. தற்போது வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தோற்று மனிதர்களுக்கு எப்படி முதன்முதலில் தொற்றியது என்று இன்னும் உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. வவ்வால்கள் மற்றும் பாங்கோலின்கள் என்று சொல்லப்படும் எறும்புத்தின்னிகள் மூலம் அவை பரவியிருக்கலாம் என்கிறார்கள். லெமூரியர்களோ பாரபட்சமின்றி சகல விலங்குகளையும் வேட்டையாடி உண்பதாக சொல்லப்படுகிறது. ஆக, கன்னித்தீவின் கடைசி அத்தியாயத்திலிருந்தே ஒரு புதிய நாவலை துவங்குவதற்கான சாத்தியங்கள் பிரகாசமாக உள்ளன.

கன்னித்தீவு
சி.சரவண கார்த்திகேயன்
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 276
விலை: ரூ.280

தொடர்புடைய சுட்டி: அந்தமான் பழங்குடியினர்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

19 January 2020

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

இக்கட்டுரையின் விசேஷம் என்னவென்றால் இதனை நீங்கள் புத்தகத்தின் தலைப்பாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது இக்கட்டுரையின் சாராம்சமாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒன்றுமில்லை, ஜோக். வேண்டாமா ? சரி ! 

மயிலன் நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது ஒரு பார்வையற்றவன் யானையைத் தழுவிப் பார்த்து கற்பனை செய்வது போல அந்நாவல் எப்படி இருக்கும் என்று சில அனுமானங்கள் வைத்திருந்தேன். சுருங்கச் சொல்வதென்றால் இலக்கிய உலகிற்கு இன்னொரு சரவணன் சந்திரன் (இது பாராட்டு !) வருகை தரவிருக்கிறார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அது அப்படி இல்லாமல், யாரைப் போலவும் அல்லாமல் தனித்துவமாகக் களமிறங்கியிருக்கிறார் மயிலன் ! 

நாவலின் முதல் வரியே பிரபாகரனின் தற்கொலையில் தான் துவங்குகிறது.  

ஒருவேளை நீங்கள் புத்தகங்களில் பிடித்தமான வரிகளை அடிக்கோடிட்டு படிக்கும் பழக்கம் உடையவரென்றால் இந்தப் புத்தகத்தில் பக்கத்திற்கு ஒரு வரியையாவது அடிக்கோடிட வேண்டியிருக்கும். அத்தனை தத்துவார்த்தமான வரிகள் புத்தகமெங்கும் விரவிக் கிடக்கின்றன.  

பொதுவாகவே எந்த புனைவிலக்கியம் படித்தாலும் அதனை சினிமா படங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு. அந்த அடிப்படையில் பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் இரண்டு திரைப்படங்களை நினைவூட்டுகிறது. ஒன்று, அர்ஜுன் ரெட்டி. இதுவரை நான் அர்ஜுன் ரெட்டி / ஆதித்ய வர்மா பார்க்கவில்லை என்பது வேறு விஷயம். அப்புறம் எப்படி அர்ஜுன் ரெட்டியை நினைவூட்டுகிறது என்றால் பெரும்பான்மை நேரம் ஃபேஸ்புக்கில் உழல்வதால் சின்ராசின் கூட்டத்துக்கு போகாமலேயே சின்ராசு சொன்ன பழமொழியை மனப்பாடமாக சொல்லும் பயிற்சியைப் பெற்றுவிட்டேன். அந்த வகையில் பிரபாகரின் சில குணங்கள் அர்ஜுன் ரெட்டியுடன் ஒத்துப்போவதாக அறிகிறேன். இரண்டாவது, ஒத்த செருப்பு. குற்ற விசாரணை பாணியில் அமைந்திருந்த அத்திரைப்படத்தின் துவக்கத்தில் ஏராளமான கேள்விகள் பார்வையாளர்கள் மனதில் எழும். பார்த்திபன் மட்டும் கதையை விவரித்துக்கொண்டே வருவார். போகப் போக ஒவ்வொரு கேள்விக்கும் விடை கிடைக்கையில், அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். அதே போல இந்நாவலும் மயிலனின் முதல்-நபர் விவரணையில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சுற்றியே நகர்கிறது. 

இந்நாவலில் வரும் பிரபாகரன் என்ற பெயர் மட்டுமல்ல, அந்த பிரபாகரனே நான்தான் என்று மனப்பூர்வமாக உணரும் வகையில் அந்த கதாபாத்திரத்தை என் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தேன். அக்கதாபாத்திரத்தின் எதிர்மறை குணங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். நான்தான் அந்த பிரபாகரன் ! 

இந்நாவலில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பகுதிகளைக் குறிப்பிடுகிறேன். ஸ்பாய்லர் வேண்டாம் என்பவர்கள் இத்துடன் விடைபெறலாம். 

பிரபாகரனின் தற்கொலைக்குப் பிறகு. நாவலிலிருந்து – 

பொதுஜனமாக இருந்தால் அந்த உடல் திரையரங்கத்திலிருந்து நேராகப் பிணவறைக்குத்தான் கொண்டு செல்லப்பட்டிருக்கும். ஒரு மருத்துவனின் உடல் என்பதால் அங்கு உருவான உணர்ச்சிப்பெருக்கில், தாங்கள் எல்லோரும் அறிவியல் தர்க்கங்களை ஓரங்கட்டிவிட்டு, இறந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியிருந்த அந்த பூத உடலை, அங்கு நிலவிய ஏக்கமும் அதிர்ச்சியும் தணியும் வரை, நிகழ்ந்து முடித்த நிஜத்தின் சாரம் உரைக்கும்வரை, சுவாசமளித்தும் இருதயத்தை அழுத்தியும் தவிர்க்கமுடியாத தோல்வியை அர்த்தமேயின்றி ஏற்க மறுத்துக்கொண்டிருந்தோம் என்று ரொம்பவே உருக்கமாக பாஸ்கர் சொன்னார். ஒரு கணம் எனக்கும் அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது போல இருந்தது. 

பூங்குன்றனும், பிரபாகரும் விடுதியில் ஒரே அறையில் தங்கியிருப்பவர்கள். ஒருநாள் பூங்குன்றன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறான். அவனது உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பிறகு பிரபாகரனின் அன்றைய நடவடிக்கைகள், நாவலிலிருந்து – 

நான்கு பெரிய சாக்குப் பைகளை வாங்கி வந்து பூங்குன்றனின் துணிகளையும், பொருட்களையும், புத்தகங்களையும் தனித்தனியே மூட்டைக்கட்டி அறையின் ஓரத்தில் ஒதுக்கிவைத்து, ஒரு பெரிய போர்வையை அவற்றின் மீது போர்த்தி மறைத்து வைத்தான். இரண்டு துப்புரவுப் பணியாளர்களை அழைத்து வந்து அறையைக் கழுவிவிட்டான். அந்த மின் விசிறியில் தொங்கிக்கொண்டிருந்த மிச்ச கயிற்றை ஏறி அறுத்தெடுத்து, சுவற்றிலிருந்த அந்த ஜோக்கர் படங்களையும் கிழித்து ஒரு செய்தித்தாளுக்குள் போட்டு கசக்கி ஜன்னலுக்கு வெளியே வீசினான். கடைக்குப் போய், ஜவ்வாதையும் பன்னீரையும் வாங்கிக் கலந்து அறையில் ஆங்காங்கே தெளித்துவிட்டு, ஒரு கொத்து சைக்கிள் ஊதுபத்தியைக் கொளுத்தி அறையின் மூலைகளில் பிரித்துப் பிரித்து வைத்தான். அதோடு அறையைப் பூட்டிவிட்டு எங்களின் அறைக்கு வருவான் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவன், மாலை ஆறு மணியளவில் போய் குளித்துவிட்டு வந்து, நடு அறையில் நாற்காலியைப் போட்டுக்கொண்டு, பூங்குன்றன் தொங்கிய அதே மின்விசிறியை வேகமாகச் சுழலவிட்டுக்கொண்டு, கால்மேல் கால் போட்டபடி புத்தகத்தை எடுத்துவைத்து வாசித்துக்கொண்டிருந்தான். 

துக்கம் தன் மாபெரும் நிழலை கவித்திருந்த அந்த அறையில், அப்போது நிலவிய காரிருளை, பிரபாகர் சட்டையே செய்யவில்லை. 

மயிலனின் விரிவான விவரணைகளை படிக்கும்போது இந்நாவலில் வரும் பெரும்பாலான விஷயங்கள் எந்தவித பாசாங்கும் இல்லாமல் எழுதப்பட்ட உண்மைச் சம்பவங்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக எல்லோருக்கும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மீது ஒரு அபிப்ராயம் இருக்கும் இல்லையா ? அது இந்நாவலைப் படித்தால் மாறக்கூடும். அவர்கள் என்ன மாதிரியான சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் ! 

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
மயிலன் ஜி சின்னப்பன்
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 208
விலை ரூ.250 

************************************************ 

இனி சில பர்சனல் அனுபவங்கள் - 

மயிலனிடம் நட்பும், மரியாதையும் கொண்டவர் என்ற முறையில் இந்நாவலை என் மனைவியும் அவருக்கென ஒரு தனிப்பிரதி வாங்கிக்கொண்டு படித்தார். அவரது கர்ப்பக்காலத்தில் நான் அவரிடம் வலுக்கட்டாயமாக படிக்கக்கொடுத்து அவர் ஏனோதானோ என்று அரைகுறையாகப் படித்த நாவல்களைத் தவிர்த்துவிட்டால் இதுதான் அவர் படிக்கும் முதல் நாவல். 

முதலில் நான் இரண்டு அத்தியாயங்கள் மட்டும் படித்துவிட்டு நேரம் கிடைக்காமல் வைத்திருந்தேன். அதற்குள் அவர் எட்டு அத்தியாயங்களைக் கடந்திருந்தார். அதன்பின் இருவரும் அருகருகே அமர்ந்து படிக்கத் துவங்கினோம். சரியாக, ஐந்து அத்தியாயங்கள் முடிந்ததும் இந்த நாவல் இப்படித்தான் போகப் போகிறது என்று ஒரு ஸ்பாய்லரை அவருக்கு முன்பு தூக்கிப் போட்டுவிட்டு நான் ஜாலியாகப் படிப்பதைத் தொடர்ந்தேன். 

ஒரு நாவலை இப்படி இணையான நேரத்தில் நாங்கள் இருவரும் அதுகுறித்து விவாதித்துக் கொண்டே படித்தது பரவசமான அனுபவமாக அமைந்தது. இடையிடையே வரும் மருத்துவம் தொடர்பான வார்த்தைகளுக்கு அர்த்தத்தை நான் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அதே போல காஜி, கரமைதுனம் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தத்தை அவர் என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். குறிப்பிட்ட அத்தியாயத்தை வாசிக்கையில், நான் எந்த வரியை அடிக்கோடிடுவேன் என்று கணித்து, நான் அதனை அச்சுபிசகாமல் செய்யும்போது மகிழ்ந்துகொள்வார்.  

நாவலின் மீதான ஈடுபாட்டின் காரணமாக திடீர், திடீரென நாவலை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொள்வார். அந்த சமயங்களில் நான் வேறு விஷயங்கள் பேசினாலும் அவரது காதில் விழாது. ஒரு வகையில் ஒரு வாசகன் அனுபவிக்கும் தொந்தரவுகளை அவர் புரிந்துகொள்ளும் வகையில் சில நிகழ்வுகள் அமைந்தது. நான் ஏன் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் மொட்டைமாடி சின்டெக்ஸ் டேங்கிற்கு அருகில் ஏறி அமர்ந்து புத்தகம் படிக்கிறேன் என்று அவருக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனி வரும் காலங்களில் எனது வாசக உணர்வுகளைப் புரிந்துகொண்டு சில கட்டுப்பாடுகளை நீக்குவதாக அறிவித்திருக்கிறார். 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment