23 February 2021

மியாவ்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மியாவ் என்றால் என்ன ? பூனையின் குரல். பூனையின் ஆங்கிலப் பெயர் CAT. இல்லை. அது இல்லை. விவகாரமான இன்னொரு பெயர் – PUSSY. ஆம், அதனுடைய குரல்தான் மியாவ். Voice of Pussies ! 2018ம் ஆண்டு எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் எழுத்தில் வெளிவந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு!
 
சமீப நாட்களாகத் தொடர்ந்து சில அபுனைவுகளையும், கட்டுரைத் தொகுப்புகளையும் படித்து வந்ததாலோ என்னவோ மியாவை படிக்கத் துவங்கியதும்தான் “ப்ளஷர் ஆஃப் டெக்ஸ்ட்” என்கிற ஒரு விஷயத்தின் இருப்பு குறித்து நினைவுக்கு வந்தது.
 
மொத்தம் ஒன்பது சிறுகதைகள். இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு கதைகளைப் பற்றி கடைசியில் எழுதுகிறேன். அதற்கு முன்னால் மற்ற கதைகள் பற்றி சுருக்கமாக -

முதல் சிறுகதை – நியூட்டனின் மூன்றாம் விதி. இருபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட அறிவியல் புனைவு. அவளை அணு அணுவாய் காதலிக்கிறேன், அவளை நினைக்கவே ஃப்ரக்டோஸ் ருசித்தது போல இருக்கிறது, அவளை வர்ணிக்கத் தமிழ் போதாது, பைனரியிலும் ஹெக்ஸாடெசிமலிலும் கூட முயன்றுவிட்டேன் என்று சுஜாதாயிஷ் சிறுகதை.

மோகினியாட்டம், அழியாக்கோலம் ஆகிய இரண்டு கதைகள் சமூக வலைதள உறவுகளைப் பற்றியது. இன்பாக்ஸில் யாரிடமும் ஃப்ளிர்ட் செய்து பழக்கமில்லாததால் இவையிரண்டும் கொஞ்சம் அந்நியமாகவே தெரிந்தன. இரண்டும் சாட்டில் வளரும் காதல் பற்றிய கதைகள். ஒன்று, ஃபேஸ்புக் சாட். மற்றொன்று, ட்விட்டர். ட்விட்டரை மையப்படுத்திய கதை அத்தளத்தின் பொற்காலம் என்று சொல்லப்படும் நாட்களை நினைவூட்டியது.

பொதுவாகவே புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையிலும் ஒரு அதிர்ச்சியூட்டக்கூடிய தனிமம் இருக்கிறது.

நான்காம் தோட்டா என்கிற சிறுகதை காந்தியின் கொலையில் கோட்ஸேவின் மூன்று தோட்டாக்கள் தவிர்த்து, நான்காவது தோட்டா (இரண்டாவது ஆள்) என்று ஒன்று இருக்கிறது என்ற கான்ஸ்பிரஸி தியரியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. அணங்கு என்கிற சிறுகதை NEET தேர்வு (சரியாகச் சொல்வதென்றால் அதன் ஒரு பகுதி மட்டுமே) எளிய மனிதர்களின் கனவை எப்படியெல்லாம் சீர்குலைக்கிறது என்பதைப் பற்றியது.

திரைப்படங்களில் ஆந்தாலஜி எடுப்பவர்கள் காதல், காமம், கெளரவக் கொலைகள் என்று ஏதாவது ஒரு தீம் வைத்துக்கொண்டு அது தொடர்பான படங்களை திரட்டுவது போல எழுத்தாளர்கள் சிறுகதைத் தொகுப்புகளில் ஒரே தீம் கொண்ட சிறுகதைகள் எழுதுவது குறித்து பரிசீலிக்கலாம். குறைந்தபட்சம், சீரியஸ் கதைகளையும் ஜாலி கதைகளையும் தனித்தனி தொகுப்பாக கொண்டு வர வேண்டும். அடுத்தடுத்து கதைகளை படிக்கும்போது ஏற்படும் “மூட் ஸ்விங்கை” தவிர்ப்பதற்காகச் சொல்கிறேன்.

பெட்டை மற்றும் நீதிக்கதை ஆகிய இரண்டும் நல்ல, அதே சமயம் ஒரு எதிர்மறைத் தொனி கொண்ட கதைகள். இதில் பெட்டை என்கிற சிறுகதை பற்றி எழுத்தாளரே முன்னுரையில் சொல்லியிருக்கிறார். நீதிக்கதை என்பது நீலத்திமிங்கலம் (blue whale) விளையாட்டைப் பற்றியது. இக்கதை எனக்குக் கொடுத்த உணர்வு வேறு மாதிரியானது. இதனை படிக்கும்போது மணி நள்ளிரவு ஒன்று. ஒரு பதின்பருவ வயதினனின் நீலத் திமிங்கல நாட்களை விவரிக்கிறது கதை. படிக்கப் படிக்க ஒரு மெல்லிய பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே செல்கிறது. இம்மாதிரி கதைகள் கம்பி மேல் நடப்பது போன்றது. இவற்றை இளம் பருவத்தினர் படிக்கும்போது அதன் விளைவுகள் எதிர்மறையாகக் கூட அமையலாம்.

சரி, இப்போது எனக்குப் பிடித்த இரண்டு கதைகள்.

முதல் கதை, காமத்தாழி. இது ஒரு நல்ல எராடிக்கா ! முதலில் நம் சூழலில் (அதாவது ஒரு எழுத்தாளர் ஏதாவது எழுதினால் அதை எழுத்தாளரின் சொந்த வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி சிந்திக்கக்கூடிய சூழலில்) இப்படி ஒரு கதை எழுதுவதற்கே ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்தப்பக்கம் போனால் இது செக்ஸ் கதை. மற்ற கதைகளுக்கு இருப்பது போல செக்ஸ் கதைகளுக்கும் Three Act Structure உண்டு. அவற்றில் முதல் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு சுவாரஸ்யம் சேர்த்தால் அதுதான் காமத்தாழி. செக்ஸ் கதைகளில் லஸ்ட் என்ற உணர்வின் கை ஓங்கியிருக்கும். இதில் அதனுடன் காதலும் சேர்வதால் அவற்றிலிருந்து வேறுபடுகிறது. இக்கதையின் ஒரு பகுதியில் அதன் நாயகி மாதொரு பாகன் படிக்கிறார். மாதொரு பாகனை எதிர்த்தவர்கள் கைகளுக்கு இப்புத்தகம் கிடைத்திருந்தால் சிக்கல் ஆகியிருக்கும் !

இரண்டாவது கதை, சகா – சில குறிப்புகள் (கதையின் தலைப்புப்படி மியாவ்).

ஒரு ஆணின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டு அவனது பிரஸ்தாபங்களை பேசும் இக்கதையில் அநேக சுவாரஸ்யங்கள். இக்கதையை முழுக்கவே ஒரு புன்னகையுடன் தான் படித்தேன். மீண்டும் மீண்டும் படித்தேன்.

ஸ்கூல் படிக்கும்போது ப்ரேயருடன் சேர்த்து pledge என்று ஒன்று எடுப்போம் நினைவிருக்கிறதா ? அதனிடையே All indians are my brothers and sisters என்ற வாக்கியத்தை சொல்லி முடித்ததும் ரகசியமாக உங்களுக்கு மட்டும் கேட்கும் வகையில் except “உங்கள் அப்போதைய காதலியின் பெயர்” என்று சொல்லாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா ? (90ஸ் கிட்ஸுக்கு மட்டுமான கேள்வி).

முன்னொரு காலத்தில், தினசரி காலை வேலைக்கு போகும்போது, பீச் ஸ்டேஷனை கடக்கையில், அங்கே ஒரு கடையின் பதாகையில் சோனி சைபர்ஷாட் விளம்பரத்திற்காக வைத்திருக்கும் தீபிகா படுகோனின் சித்திரத்தை தவறாமல் பார்த்துவிட்டு ஒரு நொடி அகமகிழ்ந்து கொள்வேன். அதனை ஒரு கணம் நினைவூட்டுகிறார் சகா. (டோமளூர் மேம்பாலத்தில் நின்று எந்தப்பக்கம் பார்த்தாலும் தொண்ணூறு தீபிகா படுகோன்கள் !)

நோட் பண்ணுங்கடா, நோட் பண்ணுங்கடா என்று சொல்லக்கூடிய நிறைய குறிப்புகள் இக்கதையில் உண்டு.

எழுத்தாளரின் கன்னித்தீவில் கவனித்த ஒரு விஷயம் இக்கதையிலும் தொடர்கிறது. கதையில் வரும் சின்னச் சின்ன விஷயங்களுக்கு பின்னால் ஒரு சிறிய ஆய்வு செய்திருக்கிறார் எழுத்தாளர், அதன் பின்னால் ஒரு reference இருக்கிறது. எதையுமே போகிறபோக்கில் எழுதிவிடவில்லை.

உதாரணமாக, இக்கதையில் தண்ணீரில் கரையக்கூடிய பிகினி உடையைப் பற்றி ஒரு பகுதி இருக்கிறது. அதுகுறித்து கூகுள் செய்தால் நிஜமாகவே அப்படி ஒரு பிகினி இருக்கிறது. அதைப் பற்றி கதையில் எழுதியிருக்கும் தரவுகள் நிஜத்துடன் ஒத்துப்போகிறது.
 
அதே போல கதையினூடே நிறைய டேட்டா ! ஜப்பானில் உள்ள நயோடைமோரி (NYOTAIMORI) என்கிற உணவுப் பழக்கம் குறித்து எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் ஒரே ஒரு முறை ஜப்பானிய போர்னோ பார்த்துவிட்டு ஜப்பானியர்களுக்கு கலாரசனை சுத்தமாக இல்லை என்ற முடிவை எடுத்திருந்தேன். இதைப் படித்ததும் அதனை மாற்றிக் கொண்டேன்.

இத்தொகுப்பில் கிட்டத்தட்ட இருபது சதவிகிதம் சகாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சகா சில குறிப்புகளை (போலவே மதுமிதா சில குறிப்புகள்) மட்டும் தனியாக ஒரு நாவலாகக் கொண்டு வரலாம். வர வேண்டும் !

மியாவ் அச்சுப்பதிப்பு உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. விலை ரூ. 130 (புத்தகம் வாங்க) (தற்சமயம் ஸ்டாக் இல்லை)

மியாவ் மின்பதிப்பு கிண்டிலில் கிடைக்கிறது. விலை ரூ. 65 (புத்தகம் வாங்க)

கூடுதல் தகவல் – எழுத்தாளரின் மற்றொரு புத்தகமான கன்னித்தீவு கிண்டிலில் இன்று ஒருநாள் மட்டும் (நள்ளிரவு வரை) சலுகை விலையில் (ரூ. 49) கிடைக்கிறது. (புத்தகம் வாங்க)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

28 January 2021

வர்கலா – மது மற்றும் சார்ந்தவை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பதிவு:
வடக்கு கடற்கரைகள்

வர்கலா கோவாவைப் போலவே இருக்கும் என்று நினைத்து நான் ஏமாற்றமடைந்த விஷயம் மது. 
 
கடற்கரையில், பூல் பெஞ்சில் லீஷராக கால் நீட்டி அமர்ந்தபடி, ரகம் ரகமாக பியர் குடிக்கலாம் என்று கனவு கண்டிருந்தேன். முதல் அடி, வர்கலாவில் கோவாவில் அமைந்திருப்பது போல கடற்கரைக்கு நெருக்கமாக குடில் உணவகங்கள் இல்லை. (கீழே கடல்; குன்றின் மேலே உணவகங்கள்). இரண்டாவது அடி, பியரின் ரகங்கள். கடந்த பதிவின் இறுதியில் விஜய் சேதுபதி மாடுலேஷனில் ஒரு அண்ணா, “அங்க இருக்குற எல்லா கடைலயும் கிடைக்கும்டா” என்று சொன்னார் என்று முடித்திருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது – அத்தனை கடைகளும் மது விற்க லைசன்ஸ் இல்லாத கடைகள். லைசன்ஸை விட்டுத் தொலையுங்கள். அத்தனை கடைகளிலும் KF தவிர வேறொன்றும் கிடைக்கவில்லை. அதை பழைய இங்க்லீஷ் பேப்பரில் சுற்றிக் கொண்டு வந்து மேஜையின் கீழ் வைக்கிறார்கள். கமுக்கமாக குடித்துக்கொள்ள வேண்டும். விலை மட்டும் இரண்டு மடங்கு. இங்கிருந்து மாநிலம் கடந்து போய் அங்கேயும் ஒரு மனிதனுக்கு KF தான் கிடைக்கும், அதையும் அவன் திருட்டுத்தனமாகத்தான் குடிக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய அவலம்.
 
வர்கலாவில் குடித்த முதல் பியர்
அன்று மாலையே பெவ்கோவிற்கு கிளம்பினேன். Beverages Corporation என்பதின் சுருக்கம்தான் பெவ்கோ. பெவ்கோ என்பது கேரளாவின் டாஸ்மாக். ஆனால் டாஸ்மாக் மாதிரி கலீஜாக இருக்காது. கேரள பெவ்கோக்களில் பார் வசதி கிடையாது. வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போய்தான் குடிக்க வேண்டும். அதே சமயம் யாரும் அங்கேயே வாங்கி முட்டுச்சந்துகளில் நின்று குடிப்பதில்லை. அப்படியென்றால் கேரளர்கள் எங்கே போய்தான் குடிக்கிறார்கள் ? அநேகமாக, கேரளர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே குடிக்கும் சுதந்திரம் இருக்கும் என்று நினைக்கிறேன். மலையாள சினிமாக்களில் வரும் மது அருந்தும் காட்சிகளைப் பார்க்கும்போது இதனை நம்மால் யூகிக்க முடிகிறது.

வர்கலாவில் ஒரேயொரு பெவ்கோ, டவுன் பகுதியில் உள்ளது. அதாவது கடற்கரை பகுதியில் இருந்து 2 – 3 கி.மீ. வெளியே வர வேண்டும். அங்கே ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் அமைந்திருக்கிறது பெவ்கோ. நான் சென்றபோது கீழே படிக்கட்டு வரை வரிசையில் ஆட்கள் நின்றுக்கொண்டிருந்தனர். வரிசை மெதுவாக நகர்ந்துக்கொண்டிருக்க, சில பேர் மட்டும் வரிசையில் நிற்காமல் கடந்து சென்றபடி இருந்தனர். அதே சமயம் எனக்கு முன்னால், பின்னால் நின்றிருந்த யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்திருந்து, எனக்கு முன்னால் நின்றிருந்தவரிடம் கேட்டுவிட்டேன். அதாவது அந்த மதுக்கடைக்கு அந்தப்பக்கம் இன்னொரு கதவு இருக்கிறதாம். ப்ரீமியம் செக்ஷன். அங்கே நாமாகவே உள்ளே சென்று நமக்கு வேண்டியதை பார்த்து எடுத்துக்கொள்ளலாமாம். அங்கே செல்கிறவர்கள் தான் எங்களைக் கடந்து அதற்குரிய வரிசையில் போய் நின்றிருக்கிறார்கள். இதைக் கேட்டதும் நான் உடனடியாக அந்த வரிசையில் இருந்து விலகி நாமே பார்த்து எடுத்துக் கொள்ளக்கூடிய பிரிவுக்கு நகர்ந்தேன். நம்முடைய சாதாரண டாஸ்மாக், எலைட் டாஸ்மாக் மாதிரியான வேறுபாடு இது. ப்ரீமியம் செக்ஷனில் குவார்ட்டர் / ஹாஃப் கிடையாது. அதனால் தினசரி மதுப்பிரியர்களின் கூட்டம் சாதாரண பிரிவில் அம்முகிறது. 

பெவ்கோவில் வாங்கியவை
ப்ரீமியம் செக்ஷனில் கூட்டம் குறைவு. வரிசை வேகமாக நகர்கிறது. நான்கு நான்கு பேராக கடைக்குள் அனுப்புகிறார்கள். (நான் சென்றது கோவிட் கட்டுப்பாடுகளுக்கு முந்தைய காலகட்டம்). நம் எலைட்டில் இருப்பது போலவே ஃபுல் பாட்டில்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள். பியர் வைத்திருக்கும் ஃப்ரிட்ஜ் மட்டும் ஒரு ஊழியரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாம் எது வேண்டும் என்று கேட்கிறோமோ அதை அவர் எடுத்துத் தருகிறார். ப்ரோ கோட் (Bro Code) என்கிற Brut இங்கு கிடைக்கிறது. Brut என்பது பியரையும் வைனையும் கச்சிதமான விகிதத்தில் மிக்ஸ் செய்த பானம். அல்கஹால் அளவு பதினைந்து சதவிகிதம் வரை இருக்கும். அதிலேயே ரியோ என்கிற உள்ளூர் தயாரிப்பும் கிடைக்கிறது. அவை தவிர, பீரா, சிம்பா உட்பட அனைத்து பிரபலமான பியர் வகைகளும் கிடைக்கின்றன.

ஆச்சர்யமாக பில் கவுண்டரில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். நம்புங்கள் அங்கே இருந்த ஊழியர் ஒரு பெண் என்பதால் எனக்கு எந்த நெருடலும் ஏற்படவில்லை. அந்த அறையின் சூழல் அப்படி அமைந்திருந்தது. இதுவே டாஸ்மாக் கவுண்டரில் ஒரு பெண் இருந்தால் அவர் எப்படி நடத்தப்படுவார் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அங்கே அந்தப் பெண்ணிடம் பணம் செலுத்தி பாட்டில்களைப் பெற்றபோது எனக்கு ஒரு அரசு அலுவலகத்தில் அதிகாரியிடம் ஃபைலில் கையெழுத்து வாங்கியது போலதான் இருந்தது.கடையை விட்டு வெளியேறியதும் ஒரு அலமாரியில் பழைய செய்தித்தாள்கள் வைத்திருக்கிறார்கள். அதை வைத்து பாட்டிலை சுற்றி எடுத்துச் செல்ல வேண்டியதுதான்.

வர்கலா கடற்கரையில் அதிகாரப்பூர்வமாக லைசன்ஸ் பெற்ற பார் ஒன்றே ஒன்று (ஹெலிபேட் அருகே உள்ள SS பார் மற்றும் உணவகம்) மட்டும்தான் உள்ளது. அதுவும் குளிரூட்டப்பட்ட கதவடைத்த பார். அதில் உட்கார்ந்துக் கொண்டு குடிப்பது என்பது சென்னையில் ஈகிள் பாரில் உட்கார்ந்து குடிப்பதற்கு சமம். ஒரு நல்ல விஷயம் அங்குமட்டும் பியரில் மற்ற பிராண்டுகளும், ப்ரோகோடும் கிடைக்கிறது.

கள்ளு விஷயத்திலும் ஏமாற்றம்தான். ஏற்கனவே காந்தளூரில் கள்ளு குடித்து அது மிகவும் பிடித்திருந்ததால் கண்டிப்பாக கள்ளு குடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். வர்கலாவில் கள்ளுக்கடைகள் இல்லை. கள்ளு வேண்டுமென்றால் வர்கலாவிலிருந்து ஒன்பது கி.மீ. தொலைவில் வெளிச்சக்கடவு என்கிற ஊருக்கு செல்ல வேண்டும். முதலில் நான் என் பயணத்தை ப்ளான் செய்தபோது ஒன்பது கி.மீ. என்பது எனக்கு சாதாரணமாகத் தெரிந்தது. கண்டிப்பாக போக வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன். ஆனால் அங்கு சென்ற முதல் நாள் அந்திப் பொழுதில் ஏற்பட்ட திகில் அனுபவத்தின் காரணமாக அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். இங்கிருந்து போகும்போது பிரச்சனையில்லை. மனதில் கள்ளை நினைத்துக்கொண்டே சந்தோஷமாக சைக்கிளை மிதித்துவிடலாம். திரும்பி வருகையில் ? அதனால் கள்ளு திட்டம் கைவிடப்பட்டது. இது தனிப்பயணத்தின் பாதகங்களில் ஒன்று. என்னுடன் துணைக்கு ஒருவர் இருந்திருந்தால் கூட நான் நிச்சயம் கள்ளுக்கடைக்கு சென்றிருப்பேன்.

பீஃப் மோமோஸுடன்

வர்கலா பயணிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர். அதுவும் லாங்-டெர்ம் பயணிகள். இந்தியர்களுக்கு மேலை நாட்டினர் மீது சில மூடநம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் இரண்டாவது பெரிய மூடநம்பிக்கை – மேலை நாட்டினர் அனைவரும் பணக்காரர்கள் என்று நினைப்பது. நீங்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்துகொண்டு உலகிலேயே மலிவான (லிவிங் காஸ்ட் அடிப்படையில்) நாடு என்று தேடினால் இந்தியா என்று பதில் வரும். பெரும்பாலும் இந்தியாவுக்கு பயணம் வருபவர்கள் இதன் அடிப்படையில் வருபவர்களே. குறிப்பிட வேண்டிய விஷயம் – வர்கலாவிற்கு வரும் மேலைநாட்டினர் யாரும் இவ்வுணவகங்களில் திருட்டு பியர் குடிப்பதை நான் பார்க்கவில்லை. பொதுவாக இவர்கள் ஒரு ஸ்மூத்தியை வாங்கி வைத்துக்கொண்டு நீண்ட நேரம் கதை பேசுகிறார்கள். பியரின் மீது இவர்களின் கவனம் இல்லை. அப்படியெனில் இவர்களுடைய அஜெண்டா ? இங்கு வரும் வெளிநாட்டினர் பலர் ரஷ்யர்கள். இவர்கள் அங்குள்ள கடும்குளிரிலிருந்து சிலகாலம் இளைப்பாற இங்கு வந்து சேர்கிறார்கள். இவர்களைக் குறி வைத்து வர்கலாவில் யோகா வகுப்புகள், ஸர்ஃபிங் பயிற்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

இவர்களுடைய போதைக்கு ? கிட்டத்தட்ட கோவாவின் கர்லீஸ் கதைதான். அதைப் பற்றி சற்று விரிவாக அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

அடுத்த பதிவு: லாஸ்ட் ஹாஸ்டல்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 January 2021

காந்தளூரும் கள்ளுக்கடையும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,
 
வர்கலாவைப் பற்றி எழுதிக்கொண்டே வரும்போது இடையில் எங்களுடைய  காந்தளூர் பயணம் பற்றி எழுதாமல் வர்கலாவின் சில பகுதிகளை எழுத முடியாது என்று தோன்றியதால் இந்த இடைச்செருகல் !

உடுமலைப்பேட்டையில் இருந்து அறுபது கி.மீ. தொலைவில், தமிழக – கேரள எல்லையில், கேரளாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது காந்தளூர். ஏதாவது ஆஃப்-பீட் தளத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து காந்தளூரைத் தேர்வு செய்திருந்தோம். சில்லென்ற தட்பநிலை. டூரிஸ்ட் கூட்டமில்லாத பகுதி.
 
2019 இந்திய பாராளுமன்றத் தேர்தல் நடந்துக்கொண்டிருந்தபோது நாங்கள் காந்தளூர் சென்றுவந்தோம். மிகச்சரியாக சொல்வதென்றால் தமிழ்நாட்டில் ஓட்டு போட்டுவிட்டு ஈர மையுடன் கிளம்பிச் சென்றோம். அப்போது கேரளாவில் தேர்தல் நாளுக்கு சில நாட்கள் எஞ்சியிருந்தன. 
 
தேர்தல் பரப்புரை ஊர்வலம்
காந்தளூர் என்பது இடுக்கி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. அங்கே கடைசிகட்ட தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடந்துக்கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் வேட்பாளரின் முகம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள். ஆனால் மேற்பார்வைக்கு அத்தனையும் ஒரே முகம் போலவே இருந்ததால், போஸ்டர்களை கூர்ந்து கவனித்தேன். நான் நினைத்தது போல இல்லை. மூன்று வெவ்வேறு வேட்பாளர்களே. இயல்பில் கேரள பெண்களைப் போலவே கேரள ஆண்களும் ஒரே சாயல் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, மூவரும் ஒரே மாதிரியான மீசை வைத்திருந்தார்கள்.

கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் பிரதான கட்சிகள். கிட்டத்தட்ட 2016க்கு முந்தைய தி.மு.க. – அ.தி.மு.க.வைப் போல. குறிப்பாக கம்யூனிஸ்டை தி.மு.க.வோடு ஒப்பிடலாம். பாரம்பரியமிக்க கட்சி, அதே சமயம் முன்பைப் போல இல்லை என்கிற சலசலப்புகள் கொண்ட கட்சி. மூன்றாவதாக பி.ஜே.பி – ஒப்புக்கு.

கேரள அரசியலை கவனிக்கும்போது ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க,விற்கும் இடையே சில தொழில் உறவுகள் உண்டு. ஆனால் களத்தில் இருவரும் எதிரிகள். ஒருவரை ஒருவர் தேர்தலில் வீழ்த்த, கொள்கை சமரசங்களுடன் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். கேரளாவில் அப்படியில்லாமல் கம்யூனிஸ்டுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஒரு புரிந்துகொள்ளுணர்வு இருக்கிறது என்று யூகிக்கிறேன். இவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒரு உடன்படிக்கை வைத்துக்கொண்டு மதவாத சக்திகள் கேரளாவில் காலூன்ற முடியாமல் செய்வதாகத் தோன்றுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது கேரளத் தலைவர்கள் ஒரே விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் என்ற செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அப்போதும் கூட கம்யூனிஸ – காங்கிரஸ் தலைவர்கள் தான் ஒன்றாக வந்தார்களே ஒழிய பி.ஜே.பி. கோமாளிகள் அல்ல.

2019 இடுக்கி தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக அவர்களுடைய ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் (சிட்டிங் எம்.பி.) போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் தமிழக முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் அதே ஆர்வத்துடன் இடுக்கி தொகுதி நிலவரத்தை தேடினேன். ஒன்றரை லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார். 

*************************

நாங்கள் காந்தளூர் சென்றிருந்த சமயத்தில் இடைப்பட்ட ஒருநாள் மட்டும்தான் மதுக்கடை இயங்கியது. முன்பும் பின்பும் தேர்தல் விதிகள் காரணமாக இயங்கவில்லை. கள்ளுக்கடைகளும் அவ்விதமே. இடைப்பட்ட அந்த ஒருநாளில் கள்ளுக்கடைக்கு படையெடுத்தோம். நான் அதற்கு முன்புவரை கள்ளு குடித்ததில்லை. ஒரேயொரு முறை கல்லூரியில் படிக்கும்போது அதற்கான வாய்ப்பு வந்தபோது, உடன் பயின்றவர்கள் புதிதாக குடிப்பவர்களுக்கு கள்ளு தூக்கி விட்டுவிடும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டதால் அந்த ஆசையை கைவிட்டுவிட்டேன். இப்போது சூழல் கூடி வந்ததால் கள்ளு குடித்துவிட வேண்டுமென முடிவு செய்திருந்தேன். 

காந்தளூர் கள்ளுக்கடை
கிட்டத்தட்ட ஊருக்கு ஒதுக்குப்புறமாக, குடியிருப்புகள் அற்ற பகுதியில் அமைந்திருந்தது காந்தளூர் கள்ளுக்கடை. ஒரு வயதான அம்மாளும் அவரது மகனும்தான் அக்கடையை நிர்வகித்து வருகின்றனர்.

கள்ளு - கப்பை - கடலைக்கறி

கள்ளுடன் சாப்பிட கப்பையும், பீஃப் கறியும் இருப்பதாகச் சொன்னார்கள். கப்பை என்றால் என்னவென்றே அப்போது தெரியாததால் அதனை ஒரு பிளேட் வாங்கி, அது மரவள்ளிக்கிழங்கு என்று தெரிந்து, அதனை கைவிட்டோம். அதன்பிறகு பீஃப் கறி வாங்கி அது சில பல ப்ளேட் ரீப்பீட்டில் சென்றது. கள்ளின் ஒருவகையான புளிப்புச்சுவை, அதிலிருந்த ஃபிஸ் போன்றவை மிகவும் பிடித்துப்போய்விட்டது.

தேர்தல் சமயம் என்பதால் கடையை நிர்வகித்து வந்த அம்மாள் அரசியல் குறித்து பேசத் துவங்கினார். அவருடைய பேச்சில் இருந்து அவருக்கு மற்றும் பொதுவாக அத்தொகுதி மக்களுக்கு ஸ்டாலின் மீது ஒரு ஸாஃப்ட் கார்னர் இருப்பது தெரிய வந்தது. அவரது முதலமைச்சர் வாய்ப்பு தள்ளிக்கொண்டே போகிறது என்பது மாதிரியான ஸாஃப்ட் கார்னர். மேலும் முன்பொரு முறை அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து நீண்ட முதல் மற்றும் ஒரே உதவிக்கரம் ஸ்டாலினுடையது என்றார்.

இதை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவரது மகன் இடைமறித்து, நான் ஒரு தகவல் சொல்கிறேன் அதைப் போய் உன் மாநில மக்களிடம் சொல் என்பது மாதிரி ஒரு விஷயத்தைச் சொன்னார். அங்கே மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு நேரடியாக அலைபேசியில் தகவல் தெரிவிப்பார்களாம். ச.ம.உ.வும் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்பாராம். ஒருவேளை அப்படி வராவிட்டால் அடுத்தநாள் ஊரே ச.ம.உ. வீட்டுவாசலில் நிற்குமாம். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் தமிழத்தில் இந்நிகழ்வில் ஒரு பத்து சதவிகிதத்தைக் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நினைத்துக்கொண்டேன்.

கேரளாவில் மட்டும் இது எப்படி சாத்தியம் ? கேரளாவில் எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுப்பதில்லை. மாறாக பணம் பெறுகிறார்கள். அதாவது மக்கள் அவரவர் சார்ந்த இயக்கங்களுக்கு தங்கள் ஒருநாள் ஊதியத்தை தேர்தல் செலவுகளுக்காக தருகிறார்கள். உதாரணமாக அந்த கள்ளுக்கடை உரிமையாளர் கம்யூனிஸ்ட் ஆதரவாளர். அதனால் அவரது ஒருநாள் வருமானத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக வழங்கியிருக்கிறார். அதனால் அவர்களால் உரிமைக்குரல் எழுப்ப முடிகிறது.

கேரளாவும் தமிழகமும் இந்தியாவின் முன்னோடி மாநிலங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் நாம் இன்னும் கேரளாவை விட பல படிகள் பின்தங்கியே இருக்கிறோம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment