31 January 2018

கோவா – தொடக்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கோவா இந்திய இளைஞர்களின் கட்டாய கனவுப் பிரதேசம். ஒருமுறையாவது கோவா போய்விட வேண்டும் என்பது இந்திய இளைஞர்கள் பலருடைய வாழ்நாள் கனவு, ஏக்கம். அநேக நண்பர் குழுக்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட அதே சமயம் அதிகம் கைவிடப்பட்ட பயணத்திட்டம் என்றால் அது கோவாவாகத்தான் இருக்கும். கோவா செல்வதற்கு திட்டமிடுபவர்களில் வெறும் எட்டு சதவிகித மக்கள் மட்டுமே நிஜமாகவே கோவா செல்வதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. 

சமீபத்தில் அறிமுகமான நண்பர் ஒருவர், கோவா போகணும் தல, குறைஞ்சது முப்பது நண்பர்களையாவது சேர்த்துக்கொண்டு கோவா போகணும் என்றார். எனக்கு ரெண்டு நிமிஷம் தலையே சுத்திடுச்சு. முப்பது அல்ல, மூன்று நண்பர்களுடன் கோவா சென்றாலே அது சாதனைதான். நண்பர்கள் மத்தியில் முதலில் கோவா போகலாமா என்கிற டாபிக்கை தொடங்கினாலே பலருக்கும் குளுகுளுவென்று இருக்கும். செலவு நபர் ஒன்றுக்கு இருபத்தி ஐயாயிரம் ஆகும் என்றதும் குழுவில் பாதி பின்வாங்கும். லாங் வீக்கெண்டுடன் சேர்த்து ஒன்றிரண்டு நாட்கள் லீவு போட வேண்டியது வரும் என்றதும் இன்னும் கொஞ்சம் பின்வாங்கும். அப்புறம் தோப்பனார் அனுப்பமாட்டார் வகையறாக்கள், அன்னைக்குத்தான் முக்கியமான ஃபேமிலி ஃபங்க்ஷன் இருக்கிறது வகையறாக்கள் என்று கடைசியில் திட்டம் டிராப் ஆகும். இன்னும் சிலர் கடைசி வரை கோவா போக வேண்டும் என்பதை பேசிப் பேசியே ஆர்கஸமடைவார்கள். இப்படி எந்தவித சிக்கல்களும், உணர்ச்சிவயப்படல்களும் இல்லாமல் இயல்பான ஒரு மாலைப்பொழுதில் எங்கள் கோவா பயணம் முடிவானது. அம்முடிவை நாங்கள் கடைசிவரை கைவிடவே இல்லை என்பதுதான் அதில் சிறப்பு. அதிகமில்லை, மூன்றே பேர் ! ஒருவகையில் இவ்வளவு சிறிய குழு, அதுவும் நெருக்கமான குழு என்பதாலேயே இப்பயணம் சாத்தியமானது.

எப்போதும் போல பயணத்திற்கு திட்டமிடும் பணியை நான் விரும்பித் தேர்வு செய்துக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரையில் பயணம் என்பதில் பயணத்திற்கு திட்டமிடலும் சேர்த்தி. சொல்லப்போனால் பயணத்தை விட பயணத்தை திட்டமிடுவதில் தான் சுவாரஸ்யம் அதிகம், புணர்ச்சிக்கு ஃபோர்ப்ளே போல ! 

எனது திட்டமிடல் துவங்கியது. எந்த பயணத்தை எடுத்துக்கொண்டாலும் இலக்கை சென்றடையும்போது அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் திரும்பி வருகையில் நேரம் குறைவான வழிமுறையைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்படி சென்னை – கோவா ரயில் பயணம் என்றும், கோவா – சென்னை விமானப் பயணம் என்றும் முடிவு செய்தோம். முதல் வேலையாக விமான பயணச்சீட்டு முன்பதிவு முடிந்தது. ரயில் டிக்கெட்டுகள் ஒரே கோச்சில் அப்பர், மிடில், லோயர் வருமாறு கவனமாக தேர்வு செய்து எடுத்துக்கொண்டோம். 

கோவா மேப் (நட்சத்திர குறியிடப்பட்டவை பார்க்க வேண்டிய இடங்கள் / கடற்கரைகள்)
அதன்பிறகு எனது டேபிள்வொர்க் துவங்கியது. கோவாவை வரைபடத்திலேயே அப்போதுதான் நான் முதல்முறையாக பார்க்கிறேன். பார்க்க வேண்டிய இடங்களை ஒவ்வொன்றாக குறித்துக்கொண்டு வருகிறேன். அகோண்டா பீச், பலோலம் பீச், கேவ்லாஸிம் பீச்... இப்படியே பீச், பீச், பீச் என்று பட்டியல் நீள்கிறது. கிட்டத்தட்ட ஐம்பது பீச்சுகள் இருக்கும். நிச்சயமாக எல்லா கடற்கரைக்கும் செல்ல முடியாது என்பதை உணர்ந்து ஒவ்வொரு கடற்கரையின் சிறப்பம்சங்களையும் குறித்து தேட ஆரம்பித்தேன். சில கடற்கரைகள் அமைதியானவை, சில கொண்டாட்டமானவை, ஒன்றில் சூர்ய அஸ்தமனம் அழகாக இருக்கும், ஒன்றில் டால்ஃபின்கள் பார்க்கலாம், ஒன்றில் பாராசெய்லிங் செய்யலாம், ஒன்றில் ரஷ்ய தேவதைகளின் மேனியழகை ரசிக்கலாம் என்று ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சிறப்புகள். திட்டமிடலைத் துவங்கிய சில மணிநேரங்களிலேயே ஒரு சவாலான வேலையை கையில் எடுத்திருக்கிறோம் என்பது புரிந்துவிட்டது. சுருக்கமாக சொல்கிறேன். பொதுவாக ஒரு மலைவாசஸ்தலத்தை எடுத்துக் கொண்டால் அங்கே மலையுச்சியில் துவங்கி இறங்கிக்கொண்டே வந்தால் பார்க்க வேண்டிய இடங்கள் ஒவ்வொன்றும் வரிசையாக வரும். சில தலங்களில் இரண்டு அல்லது மூன்று வழித்தடங்கள் இருக்கும். எப்படிப் பார்த்தாலும் தலத்தின் ஒட்டுமொத்த பரப்பளவை முப்பது கிலோமீட்டருக்குள் அடக்கிவிடலாம். கோவாவில் அப்படி கிடையாது. கோவாவின் வடக்கோடி கடற்கரையான க்வெரிம் பீச்சிலிருந்து தென்கோடி கடற்கரையான கல்கிபாகா பீச்சிற்கு இடையே உள்ள தூரம் ஏறத்தாழ நூற்றி ஐம்பது கிலோமீட்டர்கள். இவற்றிற்கு இடையே மத்தியில் அமைந்திருக்கிறது கோவா விமான / ரயில் நிலையங்கள். எப்படிப் பார்த்தாலும் குறுக்குவெட்டாக கோவாவில் நீண்ட சாலைப்பயணம் தேவைப்படும். 

கோவாவைக் குறித்து தொடர்ந்து ஆராய்ந்தபோது எளிமையான ஆனால் முக்கியமான தகவல் ஒன்று கிடைத்தது. உங்களுக்கு ஏற்கனவே கூட தெரிந்திருக்கலாம். கோவாவில் வடக்கு கொண்டாட்ட மயமானது. தெற்கு அமைதியானது. எங்களுடைய நோக்கம் கொண்டாட்டம்தான். ஆனாலும் முதல்முறை என்பதால் வடக்கு மட்டும் போதும் என்கிற உறுதியான முடிவை எங்களால் எடுக்க முடியவில்லை. எங்கள் நான்கு நாட்கள் பயணத்தை வடக்கிற்கு இரண்டு, தெற்கிற்கு இரண்டு என்று வகுத்துக்கொண்டோம். வேலை சுலபமானது. கடற்கரைகளை மூன்றாக தரம் பிரித்தேன் – பார்த்தே தீர வேண்டியவை, பார்க்க வேண்டியவை, தவிர்க்கக்கூடியவை. கடற்கரைகள் தவிர்த்து வேறு என்னென்ன இடங்கள் பார்க்கலாம் – கோட்டைகள், அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள், மார்கெட்டுகள், கஸினோ என்று தனியாக அது ஒரு பட்டியல்.

இவற்றிற்கு இடையே எங்கே தங்குவது என்பதை தேர்வு செய்ய சில உள்பெட்டி விவாதங்கள். ஒருவருக்கு நீச்சல் குளம் வேண்டும், ஒருவருக்கு தொலைக்காட்சி வேண்டும், ஒருவருக்கு கடற்கரை மிக அருகிலிருக்க வேண்டும் இப்படி வெறும் மூன்று பேருக்கிடையிலேயே நிறைய கருத்து வேறுபாடுகள். பட்டியல், வடிகட்டப்பட்ட பட்டியல், இறுதிப்பட்டியல் என பலப் பட்டியல்களை தயாரித்து இறுதியில் வடக்கில் ஒரு ரெசார்ட்டும் தெற்கில் ஒரு ரெசார்ட்டும் புக் செய்தோம் (2 + 2 நாட்கள்). 

இப்போது சில மையப்புள்ளிகள் கிடைத்துவிட்டன. வாஸ்கோ ரயில் நிலையத்தில் இறங்குகிறோம், வடக்கு கோவாவில் இருநாட்கள் தங்குகிறோம், பின் தெற்கு கோவாவில் இருநாட்கள், பின் விமான நிலையம் என்கிற மேலோட்ட வரைபடம். இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்தோம். கிடைத்த மையப்புள்ளிகளை வைத்து ஸ்கெட்ச் போட்டோம். ஸ்கெட்ச் போடுவது என்றால் வேறொன்றுமில்லை. நீங்கள் சிறுவர் மலர் / தங்க மலரில் புள்ளிகளை இணைக்கும் ஓவியத்தை பார்த்திருப்பீர்கள். ஒன்றிலிருந்து துவங்கி ஒவ்வொரு எண்ணாக கோடுகள் இழுக்க வேண்டும். அதற்குப் பெயர் தான் ஸ்கெட்ச் போடுவது. முதல்நாள் வாஸ்கோ ரயில் நிலையம் துவங்கி இறுதிநாள் விமான நிலையம் வரை ஸ்கெட்ச் போடுவது.

தோராயமான இந்த பயணத்திட்டத்தை போடும்போதே எனக்கு சில விஷயங்கள் தெளிவாகத் தெரிந்துவிட்டன. ஒன்று, இத்திட்டத்தை நடைமுறையில் கச்சிதமாக செயல்படுத்துவது சாத்தியமே கிடையாது. இரண்டாவது, கோவா என்பது ஒருமுறை மட்டும் பயணம் செல்ல வேண்டிய இடமே கிடையாது. கஜினி முகமது போல குறைந்தது பதினெட்டு முறையாவது படை எடுத்தால்தான் கோவாவை முழுமையாக அனுபவிக்க முடியும். ஏற்கனவே ஐம்பது கடற்கரைகளில் முப்பதை கழித்தாயிற்று மீதியிருப்பவற்றிலும் நிறைய தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து அதற்கும் சேர்த்தே தான் திட்டமிட்டேன். 

இவற்றிற்கு இடையே என்னென்ன சர்பத் வகைகள் கிடைக்கும், என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டும், என்னென்ன உணவுகள், எந்தெந்த உணவகங்கள், பப், பார், கஸினோ, வாட்டர் ஸ்போர்ட்ஸ் என்று ஏராளமான விஷயங்களைப் பற்றி டேபிள்வொர்க் செய்து, அவற்றை அவ்வப்போது சக பயணாளிகளுக்கு வாட்ஸப் மூலம் தெரிவித்து அவர்களுக்கு உற்சாகமூட்டியபடி இருந்தேன்.

கடைசியாக அந்தநாள் வந்தது ! எங்கள் நாள் ! ஒரு நிறைந்த வெள்ளிக்கிழமை மதியத்தில் சென்னை செண்டிரலில் இருந்து கோவா செல்லும் ரயிலை பிடித்தோம் !

அடுத்த பகுதி: கோவா – ரயில் பயணம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 January 2018

பிரபா ஒயின்ஷாப் – 29012018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இம்முறை சென்னை புத்தகக் காட்சி செலவுகளுக்கென அவ்வப்போது சிறுகச்சிறுக சேர்த்து ஐயாயிரம் ரூபாய் வைத்திருந்தேன். ஆனால் கடைசியில் மொத்த பர்ச்சேஸும் அதில் பாதியிலேயே முடிந்துவிட்டது. தேவையில்லாத புத்தகம் ஒன்று கூட வாங்கவில்லை. சொல்லப்போனால் இரண்டே பதிப்பகங்களில் என் கொள்முதல் முடிந்துவிட்டது. பு.கா.வில் வாங்கியவற்றின் பட்டியல்.

**********

ஏ.கே.செட்டியாரின் குடகு புத்தகத்தை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். செட்டியாரின் எழுத்துநடை எளிமையாக இருக்கிறது. புத்தகத்தின் துவக்கக்கட்டத்தில் ப்ளாக் எதவும் படிக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு யாரெல்லாம் உடன் வந்தார்கள், அவர்கள் என்ன சேட்டை செய்தார்கள், யார் வீட்டில் தங்கினார்கள், அவருக்கு எத்தனை குழந்தைகள், அக்குழந்தைகள் என்னென்ன பணியில் இருக்கிறார்கள் என்று நீள்கிறது. பின்னர் படிப்படியாக குடகர்களின் கலாசாரம், அரசியல், வாழ்வியல் முறைகள், திருமண முறைகள், பண்டிகைகள் என்று விவரிக்கிறார். தோராய கணக்கீட்டின் படி இப்புத்தகம் எழுதப்பட்டு குறைந்தது ஐம்பது வருடங்கள் ஆகியிருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனை மனதில் வைத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால் குடகர்களின் வாழ்க்கைமுறை வியக்க வைக்கிறது. அக்காலத்திலேயே குடகர்கள் படித்து, நல்ல வேலையில் இருந்திருக்கிறார்கள். ராணுவத்தில் உயர்பதவி வகித்த K.M.கரியப்பா (மற்றும் அவரது மகன் K.C.கரியப்பா) இருவரும் குடகர்கள். இவர்களை தவிர்த்து விளையாட்டு, சினிமா உட்பட பல துறைகளில் குடகர்கள் சாதித்திருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா கூட குடகை பூர்வீகமாக கொண்டவர்தான். குடகர்களின் குடும்பப்பெயர்கள் பெரும்பாலும் கரியப்பா, பெல்லியப்பா, உத்தப்பா என்றோ அப்பையா, திம்மைய்யா, நானய்யா என்றோ இருக்கிறது.

தலைக்காவேரி !
குடகர்களைப் பற்றிய இன்னொரு ஆச்சர்யம், குடகர்கள் பேசும் மொழி தமிழோடு நிறைய இடங்களில் ஒத்துப்போகிறது. நிறைய வார்த்தைகளுக்கு தமிழிலும் குடகிலும் ஒரே பொருள்தான். 

**********

நீண்ட வாரயிறுதியில் இரண்டு உருப்படியான காரியங்கள் செய்தேன். 

முதலாவது, என்னிடமுள்ள அச்சு புத்தகங்கள் அத்தனையையும் முறைப்படுத்தியது. ஏற்கனவே ஓரளவு முறைப்படுத்தித்தான் வைத்திருந்தேன். வீட்டில் புத்தகங்களுக்கென தனியாக அலமாரி எதுவும் இல்லாத காரணத்தினால் ஒரு பத்து, பதினைந்து புத்தகங்கள் தவிர்த்து மற்றவை அனைத்தும் பரணில் தான் இருக்கும். கீழே இருக்கும் பத்து, பதினைந்து சுழற்சி முறையில் மாற்றப்படும். இருப்பினும் திடீரென கடைகளில் ஏதேனும் ஒரு புத்தகத்தைப் பார்த்தால் இது நம்மிடம் இருக்கிறதா இல்லையா ? எந்த பெட்டியில் இருக்கிறது ? அப்பெட்டி பரணில் எங்கே இருக்கிறது ? என்றெல்லாம் குழப்பம் ஏற்படுகிறது. மேலும் கிழக்கு அரங்கில் சுஜாதாவின் அத்தனை புத்தகங்களையும் ஒருசேர பார்க்கும்போது மேற்கே ஒரு குற்றம் / மேலும் ஒரு குற்றம், அனிதா இளம் மனைவி / அனிதாவின் காதல்கள் போன்ற நூல்களுக்கிடையே பயங்கரக் குழப்பம் ஏற்படுகிறது. தீண்டும் இன்பம் என்கிற சுஜாதா நாவலில் ஒரு பதின்ம வயதுப் பெண் விபத்தாக செக்ஸில் வீழ்கிறாள். ஆதலால் காதல் செய்வீர் என்கிற திரைப்படத்தில் இதேபோல ஒரு பதின்ம வயதுப் பெண் செக்ஸில் வீழ்கிறாள். ஆனால் சுஜாதாவின் மற்றொரு நாவலான ஆதலினால் காதல் செய்வீர் கதை அது கிடையாது. இப்படி நிறைய குழப்பங்கள். எனவே இவற்றையெல்லாம் தீர்க்க, கிட்டத்தட்ட ஒரு லெவல் 5 ப்ராஸஸை தயார் செய்தேன். என்னிடமுள்ள எல்லா புத்தகங்களையும் கீழே இறக்கி ஹாலில் அடுக்கினேன். அவற்றில் ஒரு நூறை மட்டும் நூலகத்திற்கு கொடுத்துவிடலாம் (நூலகத்திற்கு கூட கொடுக்க முடியாதவற்றை எடைக்கு போட்டுவிடலாம்) என்று தனியாக கழித்தேன். மீதமுள்ளவற்றில் என்சைக்ளோபீடியா போன்றவற்றை எல்லாம் எளிதில் எடுக்க முடியாத தூரத்தில் ஒரு உள்பெட்டி. ஏற்கனவே படித்து முடித்தவை அதற்கடுத்த பெட்டி. படிக்க வேண்டும், ஆனால் எப்போதென்று தெரியாது என்பவை அதற்கடுத்த பெட்டி. சுஜாதாவுக்கு தனிப்பெட்டி. அடுத்து சுழற்சி முறையில் இறக்க வேண்டியவை எளிதில் எடுக்கக்கூடிய முன்பெட்டி. மேஜையில் அடுத்து படிக்கப்போகிற பத்து புத்தகங்கள் மட்டும் ! இவையணைத்தையும் எந்தெந்த தலைப்புகள், எந்தெந்த பெட்டியில் இருக்கிறது என்று ஒரு எக்ஸல் ஷீட்டிலும் போட்டு வைத்தாயிற்று. மொத்தமாக இச்செயலை செய்து முடித்ததும் ஒருமாதிரி மனநிறைவாக இருந்தது. 

இரண்டாவது, அமேஸான் கிண்டில் வாங்கியது. வாங்க வேண்டும் என்று சுமார் ஆறு மாதங்களாகவே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நல்ல ஆஃபரும், கையில் பணமும் ஒருசேர அமையும் தருணத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருந்தேன். இரண்டாவது விஷயம் அமையவே அமையாது என்று ஒரு தருணத்தில் புரிந்து, EMIயில் வாங்கிவிட முடிவெடுத்தேன். இப்படி பெரிய திட்டமெல்லாம் போட்டு வாங்கிய கிண்டில் கையில் வந்ததும் கவனித்த முதல் விஷயம் அதன் திரையின் வலது மூலையில் ஒரு சிறிய கீறல். பதறியடித்து அமேஸானை தொடர்புக்கொண்டு, எல்லாம் சுமூகமாக முடிந்து புதிய கிண்டில் நேற்று கைக்கு வந்து சேர்ந்தது. புது மனைவியைப் போல கவனமாக கையாள வேண்டியிருக்கிறது. இங்கே தொட்டால் சிணுங்குவாளோ, அங்கே தொட்டால் கோபித்துக்கொள்வாளோ என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள இன்னும் கால அவகாசம் தேவையென்று நினைக்கிறேன்.

**********

இவ்வார சரஹா கேள்வி –

உங்களுக்கு வயதாவதை நீங்கள் உணர்கிறீர்களா ? முன்பு நீங்கள் அஜித் படங்களை விரும்பினீர்கள், இப்போது விரும்புவதில்லை (அவர் முன்பைவிட மோசமான படங்களில் நடிப்பதாக நான் நினைக்கவில்லை). உங்களுக்கு வயதாகி விட்டதை நீங்கள் உணர வேண்டும் / ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆம், எனக்கு வயது முப்பது நிறைவடையப்போகிறது.

ஆனால் அஜித்தை ரசிப்பதையும் வயதையும் ஒப்பிடுவதை என்னால் சுத்தமாக புரிந்துகொள்ள முடியவில்லை. அஜித்தை தொடர்ந்து கொண்டாடிக்கொண்டே இருக்கும் அண்ணன் கணேசன் அன்புக்கு என்னைவிட பத்து வயது கூட இருக்கும். அஜித் படங்களை விரும்பினால் இளமையானவர் என்று அர்த்தம் கிடையாது. மாறாக நேரெதிராக வேண்டுமானால் கருதலாம். அதாவது தற்போது வரும் இளம் இயக்குநர்களின் (கார்த்திக் சுப்பராஜ், நலன் குமாரசாமி வகையறா) படங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு இன்னமும் சிட்டிசனில் தலை ஒன்பது கெட்டப்புகள் போட்டார், வரலாறில் அஜித்தின் டிரான்ஸ்ஃபார்மேஷன் சீன் பயங்கரமாக இருக்கும் என்று அங்கேயே நின்றுக்கொண்டிருந்தால் அப்போதுதான் எனக்கு வயதாகிவிட்டது என்று கருத்தில் கொள்ள வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

22 January 2018

பிரபா ஒயின்ஷாப் – 22012018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த வாரம் சென்னை புத்தகக் காட்சி சென்றிருந்தபோது எப்போதும் போல வெளியே அமைக்கப்பட்டிருந்த பழைய ஆங்கில நாவல் கடைகளை ஒரு எட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். சில சமயங்களில் ஜெஃப்ரி ஆர்ச்சர், மைக்கல் க்ரைட்டன் போன்றவர்களின் புத்தகங்கள் சல்லிசு விலையில் கிடைக்கும். அவர்களின் ஆங்கில ஆற்றலை நம்மால் அவ்வளவு எளிதாக பின்தொடர முடியாது என்பது வேறு விஷயம். ஆனால் இருபது / முப்பது ரூபாய்க்கு கிடைப்பதால் ஒரு ஆர்வத்திலாவது வாங்கி விடுவேன். இம்முறை அப்படி எதுவும் கிடைக்கவில்லை. மாறாக அட்டையில் நிர்வாணப் பெண்ணின் படம் அச்சிடப்பட்ட ஒரு நாவல் கிடைக்க, அதனை வாங்கினேன். நாவலின் பெயர் – The Devil in Miss Jones. எழுதியவர் – David Danziger. 

வாங்கிய ஆர்வத்தில் பு.கா. வளாகத்திலேயே வைத்து புரட்டிப் பார்க்க, அத்தனை எளிதான ஆங்கிலம். நேரடியான ஆங்கிலம்.

மிஸ். ஜோன்ஸ் பேரழகி இல்லை என்றாலும் அழகானவள். முப்பது வயது நிரம்பிய கன்னிப்பெண். ஆம், கன்னிப்பெண். அதுவரை அவள் சந்தித்த நிறைய ஆண்கள் அவளை நேரடியாகவும், மறைமுகமாகவும் செக்ஸுக்கு அழைத்திருக்கிறார்கள். ஆனால் அவள் யாருக்கும் இசைந்ததில்லை. அவளுக்கு கற்பிக்கப்பட்டுள்ள ஒழுக்கங்கள் அப்படி. மிஸ். ஜோன்ஸுக்கு ஜார்ஜ் எனும் இளைஞனிடம் காதல் தோன்றுகிறது. காதலன் ஜார்ஜ் அவளிடம் எல்லா காதலன்களும் காதலிகளிடம் கேட்பது போல செக்ஸ் கேட்கிறான். அவனுக்கு ஒவ்வொரு முறையும் அது மறுக்கப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு மட்டும்தான் அனுமதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள் மிஸ்.ஜோன்ஸ். ஒருமுறை மிஸ்.ஜோன்ஸுக்கும் அவரது காதலனுக்கும் செக்ஸ் விவாதம் துவங்கி, அது நீண்டு, அவர்களின் காதல் முறிகிறது. மிகுந்த மனக்கவலையுடன் மிஸ்.ஜோன்ஸ் குளியலறைக்கு செல்கிறாள். ஷேவிங் ரேசரை எடுக்கிறாள். அவளது மணிக்கட்டில் ஆழமாக பதிக்கிறாள். பாத் டப் தண்ணீர் ரத்த மயமாகிறது. முதல் அத்தியாயத்தின் நிறைவு !

இரண்டாவது அத்தியாயத்தில் மிஸ்.ஜோன்ஸுக்கு ஒரு நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. கடவுள் அல்லது ஒரு சக்தி நடத்தும் சொர்க்கமா, நரகமா என்பது குறித்த நேர்முகத்தேர்வு. மிஸ்.ஜோன்ஸ் மீண்டும் பூமிக்கு செல்ல விரும்புகிறாள். இம்முறை காம இச்சை நிரம்பப்பெற்ற பெண்ணாக ! மிஸ்.ஜோன்ஸின் கோரிக்கை ஏழு நாட்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஏழு நாட்கள் மட்டும் காம இச்சை நிரம்பிய பெண்ணாக மிஸ்.ஜோன்ஸ் பூமியில் வாழலாம்.

அதன் பிறகு வருவதெல்லாம் பக்கா போர்னோகிராபி. பூமிக்கு திரும்பும் மிஸ்.ஜோன்ஸ் MFM, MFF, லெஸ்பியன், கேங் பேங் என்று ரகம் ரகமாக அனுபவிக்கிறார். அத்தனை வர்ணனைகளும் தரம். ஆங்கிலமும் முன்பே குறிப்பிட்டது போல மட்டையடி எளிமை. என்ன ஒரு மனக்குறை என்றால், கொஞ்சம் போகப்போக முழுநீள ஹார்ட்கோர் செக்ஸ் படம் பார்ப்பதுபோன்ற ஒரு அயர்ச்சி ஏற்படுகிறது. 

பொதுவாக செக்ஸ் கதைகளின் முக்கிய அங்கம் செக்ஸ் கிடையாது. செக்ஸ் நடக்கும் சூழ்நிலைதான். சவிதா பாபியின் ப்ரா சேல்ஸ்மேன் கதையை எடுத்துக்கொள்வோம். சேல்ஸ்மேன் சவிதாவின் வீட்டுக்கு வருவது, ப்ரா விற்க முயல்வது, அது முடியாமல் போக தண்ணீர் கேட்பது தொடங்கி சவிதா ப்ராவை அணிந்து பார்க்க முயல்வது, அதனை சேல்ஸ்மேன் கண்ணாடி வழியாக பார்ப்பது, ப்ரா கொக்கியை அவிழ்க்க முடியாமல் சேல்ஸ்மேனை உதவிக்கு அழைப்பது வரை அக்கதையில் செக்ஸ் கிடையாது. ஆனால் கதையில் கிளர்ச்சியூட்டும் பகுதி அதுதான். அதன்பிறகு அக்கதை பூரண ஹார்ட்கோர் தளத்திற்கு சென்றுவிடுகிறது. சில பேர் ஹார்ட்கோர் பகுதியை மட்டும் கூட விரும்பிப் படிக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் முதல் பகுதிதான் முக்கியம். டெவில் இன் மிஸ் ஜோன்ஸில் முதல் பகுதியை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. மிஸ்.ஜோன்ஸுக்கு செக்ஸ் தேவைப்பட்டால் சிம்பிளாக செக்ஸ் பாருக்கு செல்கிறாள். அவ்வளவுதான். மேலும் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் ஒவ்வொரு படியாய் முன்னேறும் மிஸ்.ஜோன்ஸ் ஒரு கட்டத்தில் இன்செஸ்ட் வரை போகும்போது அருவருப்பை தவிர்க்க முடியவில்லை. 

நான் இந்நாவலில் அதிகம் ரசித்தது அதன் கான்செப்ட் தான். ஏழு நாள் கட்டற்ற செக்ஸ் சுதந்திரம் ! தமிழில் பாலியல் எழுத்துகள் இல்லை, இல்லையென்று அடிக்கடி தமிழ் புத்தகங்களின் முன்னுரைகளில் மட்டும் படித்திருக்கிறேன். புத்தகங்களை விடுங்கள். இதுவரை எத்தனை பலான பி-கிரேடு படங்கள் எடுத்திருப்பார்கள். ஒன்றிலாவது இதுபோன்ற புதிய / ஆக்கப்பூர்வமான கதைகளை முயற்சித்திருப்பார்களா ? அங்கேயும் பழி வாங்குவது, இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்வது என்று கழுத்தறுக்க வேண்டியது. ஆங்கிலத்தில் மிஸ்.ஜோன்ஸை சினிமாவாக எடுக்கவும் செய்திருக்கிறார்கள். 

ஒருமுறை கிழக்கு பத்ரி தமிழில் ஸாஃப்ட் எராடிக் வகை நூல்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அப்போது பலரும் அவரிடம் வேண்டாம் என்று அறிவுறுத்தியதால் அவர் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார் என்று நினைக்கிறேன். அவர் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

*****

தமிழகத்தின் அடுத்த முதல்வர் நடித்த சினிமாவை சமீபத்தில் பார்த்தேன். ரஜினி / கமல் படம் என்று விபரீதமாக ஏதாவது நினைத்துக்கொள்ள போகிறீர்கள். நான் பார்த்த படத்தின் பெயர் – ஒரே ரத்தம். தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் துணை கதாபாத்திரம் ஒன்றில் நடித்த திரைப்படம். குங்குமம் இதழில் கலைஞர் எழுதி வெளிவந்த தொடர். ஒரு கிராமத்தில் நடைபெறும் சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை ஆகியவை தான் கதைக்கரு. பிரச்சாரநெடி கலந்த சிறிய வேடத்தில் ஸ்டாலின். சொற்ப நேரமே வந்து சாதி ஒழிப்புக்கு எதிராக போராடி மடிகிறார். எப்படிப் பார்த்தாலும் இத்திரைப்படத்தை எடுக்கும்போது ஸ்டாலினுக்கு குறைந்தபட்சம் முப்பத்தியிரண்டு வயதாவது இருக்கும். ஆனால் பார்ப்பதற்கு பதினெட்டு அல்லது இருபது வயது இளைஞர் போல தெரிகிறார். இப்போது பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் வெளிப்படும் அதே மாடுலேஷன். 

மேலோட்டமாக பார்த்தால் ஏதோ சமூகநீதி குறித்த படம் போல தோன்றினாலும் படம் முழுக்க ஏராளமான ஃபேக் வசனங்கள். புலி – மான் என்றொரு வசனம், பொங்கல், புளியோதரை – வறண்டுபோன ரொட்டித்துண்டு என்றொரு வசனம். இப்படி படத்தில் வரும் முற்போக்கு கதாபாத்திரங்களே அதற்கு நேரெதிரான வகையில் வசனம் பேசுகிறார்கள். 

ஒரு வகையில் இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரம் கிஷ்முதான். ‘எனக்குன்னு ஒரு கொள்கை இருக்கு. பிரளயமே வந்தாலும் நான் அதை மாத்திக்கமாட்டேன்.’ என்பதுதான் கிஷ்முவின் ஒன்லைன். கிஷ்முவின் கதாபாத்திரத்தை மையபடுத்தி, இன்னும் கறாராக இயக்கியிருந்தால் காலங்கள் கடந்து பேசபட்டிருக்கும் ஒரே ரத்தம்.

*****

சரஹாவில் வந்த ஒரு அதிர்ச்சியூட்டும் பர்சனல் கேள்வி.

நீ உனது முதல் வேலையில் முதல் நாள் சேர்ந்தது எனக்கு நினைவிருக்கிறது. எப்படி இத்தனை குறுகிய காலத்தில் ப்ராஜெக்ட் லீட் ஆனாய் ? நீ உன் நிறுவனத்தில் என்ன மாதிரியான ப்ராஜெக்ட் செய்கிறாய் ?

முதலில் இக்கேள்வியை கேட்டது யாராக இருக்கும் என்று யூகிக்க முயன்று, பின் அதனால் பலனில்லை என்று அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

தற்போது கேள்வியாளருக்கு மனநிம்மதியை தரும் வகையில் சில தகவல்கள் சொல்கிறேன். முதலில், நான் ப்ராஜெக்ட் லீட் கிடையாது. டீம் லீடர். அதுவும் எனது அனுபவத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள ஒரு பெயரளவு போஸ்டிங். எனக்கு கீழே எனக்கென்று அணி அல்ல ஒரு தனியாள் கூட கிடையாது. இப்போது நான் பணிபுரிவது ஒரு சப்போர்ட் ப்ராஜெக்ட். நீங்களும் ஐ.டி.யில் பணிபுரிபவராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு சப்போர்ட் ப்ராஜெக்ட் என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். இதைச் செய்ய உங்களுக்கு பெரிய தொழில்நுட்ப அறிவெல்லாம் வேண்டியதில்லை. ஒரு பெட்டி. அதற்குள் ஒரு பூதம். பூதம் பெட்டியை விட்டு வெளியே வந்துவிடாதபடி கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.  இன்னும் சொல்கிறேன், எனக்கு ஐ.டி. துறையில் மட்டும் சுமார் ஏழு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. ஐ.டி.யில் இவ்வளவு அனுபவத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு குறைவான பதவியில், குறைவான ஊதியம் பெற்று வாழ்பவன் நானாகத்தான் இருப்பேன். சொல்லப்போனால் நான் ஐ.டி.யில் பணிபுரிகிறேன் என்றே வெளியே சொல்லிக்கொள்வதில்லை. ஒரு நகைச்சுவை காட்சியில் கருணாஸ் சொல்வதைப் போல நான் ஐ.டி.லலாம் வேலை செய்யலங்க. ரயில்வே ஸ்டேஷன்ல பிச்சை எடுக்குறேன் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 January 2018

பிரபா ஒயின்ஷாப் – 15012018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

புத்தாண்டு வாழ்த்துகள் :)

பிசகில்லாத ஒரு ஃபேமிலி ட்ரிப்புடன் புத்தாண்டு அபாரமாக துவங்கியிருக்கிறது. கூடுதல் செழிப்பாக நண்பர்களிடமிருந்து பரிசாக சில புத்தகங்கள் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக நண்பர் பாக்யராஜ், கிம் ஸ்டான்லி ராபின்சனின் மார்ஸ் முத்தொகுதியை அனுப்பியிருக்கிறார். ஒருவேளை நானே பணம் செலுத்தி மார்ஸ் முத்தொகுதியை வாங்கியிருந்தால் கூட அதனை படித்திருப்பேனா என்பது சந்தேகம். இன்னொருவர் கொடுத்த பரிசு என்பதால் கண்டிப்பாக படிக்க வேண்டும். 

கடந்த புத்தாண்டை 'இருவர்' பார்த்து துவக்கினேன். இம்முறை 'சிறைச்சாலை' பார்க்க வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன். மோகன்லால், தபு அல்லது செம்பூவே பூவே பாடல் கூட காரணமாக இருக்கலாம். மற்றபடி இரு படங்களுக்கும் தொடர்பில்லை. 

சிறைச்சாலை மொழிபெயர்ப்பு திரைப்படம் என்கிற விஷயமே இத்தனை நாள் தெரியாமல் இருந்திருக்கிறேன். காலா பானி என்கிற மலையாள சினிமாவின் மொழிபெயர்ப்பு. மலையாளத்தில் கிளாஸிக் சினிமா வரிசையில் காலா பானியும் ஒன்று. இப்படத்திலிருந்து நூல் பிடித்துக் கொண்டுபோனால் இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள உதவும். 

வைப்பர் தீவு சிறைச்சாலை © Rik Dhar
காலா பானி என்பது அந்தமான் சிறைச்சாலையை குறிக்கிறது. வடமொழியில் கருப்பு நீர் என்று பொருள். பிரிட்டிஷ் இந்தியாவின் கொடிய சிறைச்சாலை. அந்தமான் சிறை 1906ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. எனினும் அதற்கு முன்பே அரசியல் கைதிகளை அந்தமானுக்கு நாடு கடத்தும் பழக்கம் இருந்திருக்கிறது. அந்தமானில் உள்ள வைப்பர் தீவைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கிட்டத்தட்ட அரை சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மிகச்சிறிய தீவு. விஷப்பாம்புகள் நிறைந்த தீவு என்று சொல்லப்படுகிறது. கைதிகளை கை, கால்களை பிணைத்து இங்கு விட்டுவிடுவார்களாம். தொடர்ச்சியாக உணவு, குடிநீர் கிடைக்காமல் வெயிலிலும், மழையிலும், குளிரிலும் வாடி, பாம்புகளிடம் கடிப்பட்டு மிகுந்த துயரத்தோடு உயிர் நீத்திருக்கிரார்கள் கைதிகள். அதன் பிறகு (1867) இங்கே சிறிய சிறை ஒன்று நிறுவப்பட்டது. சிப்பாய் கலக போராளிகள் நிறைய பேர் வைப்பர் தீவு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் அங்கேயே தூக்கிலிடப்பட்டனர். போர்ட் ப்ளேரில் செல்லுலர் ஜெயில் கட்டி முடித்தபிறகு வைப்பர் சிறையில் பெண் கைதிகள் மட்டும் அடைக்கப்பட்டனர்.

செல்லுலர் சிறை வளாகம் © Milind Sathe
அந்தமான் சிறை வரலாற்றில் முக்கியமான வில்லன் கதாபாத்திரம் அங்கே ஜெயிலராக பணியாற்றிய டேவிட் பெர்ரி. போர்ட் ப்ளேரின் கடவுள் என்று தன்னைத்தானே விளித்துக்கொண்ட டேவிட் கைதிகளை கொடிய வேலைகளுக்கும் தண்டனைகளுக்கும் ஆளாக்கினார். ஓய்வில்லாமல் தேங்காயிலிருந்து நார் எடுப்பது, செக்கிழுப்பது போன்ற பணிகள் கைதிகளுக்கு கொடுக்கப்பட்டன. அப்பணிகளில் அவர்களுக்கு எட்ட முடியாத இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. எட்டத் தவறியவர்களுக்கு கசையடிகள் வழங்கப்பட்டன. இயற்கை உபாதைகளுக்கு கூட அனுமதிக்கப்பட்ட நேரம் வரும் வரையில் அடக்கி வைத்திருக்க வேண்டும். உடல்ரீதியான துன்புறுத்தல்கள் ஒருபுறம் என்றால் மனரீதியான, உணர்வுரீதியான துன்புறுத்தல்கள் இன்னொரு புறம். அந்தமான் சிறையின் குறிப்பிடத்தகுந்த அம்சம் அங்கே ஒரு அறையில் ஒரு கைதியை மட்டும்தான் அடைப்பார்கள். 12 x 9 சிறிய அறை. ஜன்னல்கள் கிடையாது. சிறைக்கம்பிக்கு எதிர்ப்புறம் இன்னொரு அறை இருக்காது. இப்படி தனிமைப்படுத்தப்பட்ட சிறைக்கைதிகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் பார்ப்பனர்களின் பூணூலை அகற்றுவது, ஹிந்து – முஸ்லீம் கைதிகளுக்கு இடையே கலவரத்தை தூண்டுவது போன்ற செயல்களும் சிறையில் நிகழ்ந்திருக்கிறது. அப்போதைய பார்ப்பனர்களின் நம்பிக்கையின் படி கடல் கடப்பது பாவச்செயல். அதனால் அந்தமான் சிறைக்கு அழைத்துச் செல்வதே அவர்களை மனதளவில் பலவீனமாக்கியது.

கசையடி சித்தரிப்பு © Sapna Kapoor
நிறைய பேர் தண்டனைகள் காரணமாகவும், உடல் உபாதைகள் காரணமாகவும் மடிந்தனர். அப்படி மடிந்தவர்களின் உடல்களைக் கூட கடலில் கல்லைக் கட்டி போட்டுவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

தீவு என்பதால் அங்குள்ள ஆங்கிலேயர்களுக்கே போதுமான உணவு, குடிநீர் கிடைக்கவில்லை. இங்கிருந்து கப்பல்களில் அவர்களுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அதனால் கைதிகளுக்கு குறைந்த உணவே கொடுக்கப்பட்டது. தரமும் மோசம். இதனை எதிர்த்து கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக ஆறேழு நாட்கள். அதன்பிறகு போராடிய கைதிகளுக்கு வலுக்கட்டாயமாக உணவு புகட்டப்பட்டது. மஹாவீர் சிங் (பகத் சிங் குழுவில் ஒருவர்) என்கிற கைதிக்கு உணவு புகட்டும்போது அது நுரையீரலுக்கு சென்றதால் அவர் உயிரிழந்தார்.

சாவர்க்கர்
அந்தமான் சிறையைப் பற்றி பேசும்போது தவிர்க்க முடியாத ஒரு நபர் சாவர்க்கர். இந்தியாவில் காந்தி எப்படி போற்றப்படுகிறாரோ அதே போல அந்தமானில் சாவர்க்கர் போற்றப்படுகிறார். அந்தமான் விமான நிலையத்திற்கு அவருடைய பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. சாவர்க்கர் ‘அபினவ் பாரத்’ (இளைய இந்தியா) எனும் இயக்கத்தை நடத்தி வந்தார். பல அரசியல் செயல்பாட்டாளர்களும், புரட்சியாளர்களும் அதில் இணைந்தனர். 1909ம் ஆண்டு ஜாக்சன் என்கிற ஆங்கிலேயே அதிகாரியை அபினவ் பாரத்தின் பதினேழு வயது இளைஞர் சுட்டுக் கொல்கிறார். அதன் நீட்சியாக இளைஞர் தூக்கிலிடப்பட்டார். இளைஞர் பயன்படுத்திய கைத்துப்பாக்கி லண்டனில் இருந்து அபினவ் பாரத் இயக்கத்தின் மூலமாக பெறப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சாவர்க்கர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து தப்ப முயன்றதால் ஐம்பது ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டு அந்தமானுக்கு அனுப்பப்பட்டார். அந்தமான் சிறை அனுபவங்கள் சாவர்க்கரிடம் தீவிர மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். சிறை சென்ற ஆறே மாதத்தில் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார் சாவர்க்கர். ஒன்றல்ல இரண்டல்ல. ஐந்து முறை மன்னிப்புக் கடிதம் எழுதுகிறார். பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு சாவர்க்கரை சில நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது. மராட்டிய ரத்தினகிரி மாவட்டத்தைத் தாண்டி வெளியே போகக்கூடாது, அரசியல் போராட்டங்களில் பங்கெடுக்கக் கூடாது என்பவை முக்கியமான நிபந்தனைகள். அதன்படி விடுதலையான பிறகு வேறொரு திசையை நோக்கி பயணமானார் சாவர்க்கர்.

சிறைச்சாலை படத்திலும் சாவர்க்கர் வருகிறார். கொஞ்சம் திரிபுகளோடு. சாவர்க்கர் சிறையிலிருந்த காலம் 1911 – 1921. சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நிகழ்ந்த வருடங்கள் 1933 மற்றும் 1937. படத்தில் இப்போராட்டத்தை சாவர்க்கர் தலைமையேற்று நடத்தியதாக காண்பிக்கப்படுகிறது. சிறைச்சாலையில் அஹிம்ஸா சிந்தனையாளராக மோகன் லாலும், கம்யூனிஸ சிந்தனையாளராக பிரபுவும் நடித்திருக்கிறார்கள். மோகன் லாலுக்கு ஒரு காதல் வருகிறது, ஒரு டூயட் வருகிறது. இப்பாடலில் ரசிக்கத்தகுந்த அம்சம் ஒன்று வருகிறது. ஒரு தாமரைப்பூ. அதிலிருந்து இரண்டு சொட்டு நீர் தபுவின் தொப்புளிலிருந்து சரியாக ஒரு அங்குலம் தொலைவில் வந்து விழுகிறது. பின்னர் தபுவின் இடையில் கட்டியிருக்கும் முத்துமணி மாலையை யாரோ விடுவிக்க அதிலிருந்த முத்துகள் சிதறி ஓடுகின்றன. முழுக்க டாக்குமெண்டரியாக எடுத்துத் தொலைக்காமல் இதுபோன்ற லெளகீக விஷயங்களை படத்தில் சேர்ப்பது நல்லவிஷயம்தான். ஆனால் சில வரலாற்று எல்லைமீறல்கள் தான் கவலைகொள்ள வைக்கின்றன. சாவர்க்கரின் சித்தரிப்பு ஒரு எல்லைமீறல். இன்னொரு எல்லைமீறல் – வங்காளத்தைச் சேர்ந்த பீனா தாஸ் என்கிற சுதந்திரப் போராளி. தன்னுடைய பட்டமளிப்பு விழாவில் அப்போதைய வங்காள கவர்னரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்று, ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று, அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைச்சாலை படத்தில் பீனா தாஸுக்கும் முகுந்த் ஐயங்காருக்கும் (பிரபு கதாபாத்திரத்தின் பெயர்) ஒரு மெல்லிய ரொமான்ஸ் வருகிறது. டூயட், தாமரைப்பூ, முத்துமணி மாலை இல்லாதது ஆறுதல்.
*****
கடந்த ஆண்டின் கடைசி இடுகையில் ஃபீட்பேக் கேட்டதற்கு நல்ல ரெஸ்பான்ஸ். ஃபீட்பேக் என்னவென்று மட்டும் தெரிந்துக்கொண்டு, முடிந்தால் அதனை செயல்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒரு சில கேள்விகள் பதில் எதிர்பார்க்கும் தொனியில் வந்திருக்கின்றன. அவற்றை அடுத்ததடுத்த வாரங்களில் ஒவ்வொன்றாக பார்க்கலாம். இருந்தாலும் 'சூனா கானா பற்றி சில வார்த்தைகள்..?' போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதாக இல்லை !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment