வணக்கம் மக்களே...
கெளதம் மேனன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர். காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் ரசனையான மனிதர். அபாரமான கிரியேட்டிவிட்டி கொண்டவர். குறிப்பாக காதல் காட்சிகளை படமாக்குவதில் அவருடைய ஸ்டைலே தனி. அப்படிப்பட்ட ஒருவர் ஒரு த்ரில்லர் படம் எடுத்தால்...? இப்படியான எதிர்பார்ப்புகளோடு நடுநிசி நாய்கள் படத்திற்காக நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இரண்டு மணிநேரங்கள் கடந்தபிறகு என்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகியிருந்தது.
கதைச்சுருக்கம்:
எட்டு வயதில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படும் ஒரு சிறுவன். அதுவும் அவரது தந்தையால் உட்படுத்தப்படுகிறான். அதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கு பக்கத்து வீட்டு ஆன்ட்டியின் ஆதரவும் அன்பும் கிடைக்கிறது. ஆன்ட்டியின் உதவியால் தன் தந்தையிடம் இருந்து மீண்டு வரும் சிறுவன் ஆன்ட்டியின் பராமரிப்பிலேயே வளர்கிறான். ஆனால் தந்தையிடம் இருந்து மீண்ட சிறுவன் தனது மனப்பிறழ்வில் இருந்து மீளவில்லை. அதனால் ஏற்படும் சம்பவம்களும் பாதிப்புகளுமே மீதிக்கதை.
மீதிக்கதையை திரையில் பாருங்கள் என்றெல்லாம் சொல்லவே மாட்டேன். ஆனாலும் ஒரு நல்ல விமர்சனத்தை எழுதும் நோக்கில் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.
நாயகனாக சமர், வீரா என்ற கேரக்டர்களில் புதுமுகம் வீரா நடித்திருக்கிறார். அப்படியென்றால் டபுள் ஆக்ஷனா என்று கேட்காதீர்கள். ஸ்பிளிட் பர்சனாலிட்டி. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் மல்டிபிள் பர்சனாலிட்டி. நல்ல நடிப்பு, பிரமாதமான நடிப்பு. ஆனால் எரிச்சலூட்டுகிறார். அவரது பாத்திர படைப்பு அப்படி. அதிலும் முதல் பாதியில் அடிக்கடி மீனாட்சி அம்மா, மீனாட்சி அம்மா என்று சொல்லி சொல்லியே வெறுப்பேற்றுகிறார்.
நாயகி சுகன்யாவாக சமீரா ரெட்டி. நாயகி பெயரை சுகன்யா என்று வைத்ததில் எனக்கு பர்சனலாக மிகவும் வருத்தம். (ஏன் என்றெல்லாம் கேட்கப்பிடாது...) நல்லவேளையாக அவருக்கு கடைசிவரை எந்த அசம்பாவிதமும் நடக்காததால் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன். ஆனால், அழகையா நடிப்பையோ ரசிக்க முடியாதபடி இரண்டாம் பாதி முழுக்க வதைக்கப்படுகிறார்.
படத்தில் மொத்தமே நான்கு (முக்கிய) கேரக்டர்கள்தான். நாயகன் நாயகியை தவிர்த்து பக்கத்து வீட்டு ஆன்ட்டியாக புதுமுக நடிகை ஸ்வப்னா. அவரை தேர்ந்தெடுத்ததில் கெளதமின் ரசனையை வியக்கிறேன். நல்ல அழகு, எனினும் அந்த அழகு சிதைக்கப்படுகிறது. அப்புறம், விஜய் என்னும் போலீஸ் அதிகாரியின் கேரக்டரில் புதுமுக நடிகர் தேவா. ஆரம்பத்தில் வரும் சில காட்சிகள் அவர் புத்திசாலி போலீஸ் என்று கூறுகிறது. ஆனால் இறுதிவரை அந்த புத்திசாலித்தனத்திற்கு வேலை கொடுக்கப்படவில்லை.
ஒரே ஒரு காட்சியில் சமந்தா. படத்தில் அவருக்கு கொடுக்கப்படாத முக்கியத்துவத்தை எனது பதிவில் கொடுத்து ஆறுதலடையவே மேலே இருக்கும் ஸ்டில்.
படத்தில் பாடல்களோ, பிண்ணனி இசையோ இல்லை. ஆனாலும் அது ஒரு குறையாக தெரியவில்லை. சிறப்பு சப்தங்களை வைத்து அந்த காலியிடங்களை கச்சிதமாகவே நிரப்பியிருக்கிரார்கள். சிறப்பு சப்தங்கள் வேலைப்பாடுகள் செய்தவரின் பெயர் ரெங்கநாதன் என்று திரையில் பார்த்ததாக ஞாபகம்.
ஈரம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா இந்தப்படத்திற்கும் ஒளிப்பதிவியிருக்கிறார். ரெண்டும் த்ரில்லர் கதை என்பதாலோ என்னவோ அந்தப்படத்தின் பாதிப்பு ஆங்காங்கே ஒளிப்பதிவில் தெரிகின்றன. எடிட்டிங்கை சில பேர் சிலாகிக்கலாம், ஆனால் எனக்கென்னவோ பிடிக்கவில்லை. இந்த படத்திற்கு இரண்டு மணிநேரம் தேவையே இல்லை. ஒன்றரை மணிநேரத்திலேயே கதை சொல்லி முடித்திருக்கலாம்.
வசனங்கள் மிகவும் குறைவே. அடிக்கடி பீப் ஒலிகள் கேட்கின்றன. (புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்). சில இடங்களில் ஷார்ப்பான வசனங்கள். உதாரணத்திற்கு சமூக வலையமைப்பு தளங்களின் மறுபக்கத்தை விவரிக்கும் வசனம்.
படத்தின் ப்ளஸ்:
- சொல்லப்படாத கதை என்று சொல்லமாட்டேன். எனினும், ஒரு புதிய உணர்வை கொடுத்தது. தொடர்ந்து மதுரக்காரைங்க, கோவில் திருவிழா டைப் படங்கள் பார்த்ததில் இருந்து ஒரு ரிலீப்.
மற்றபடி வேறொன்றும் சொல்வதற்கில்லை...
படத்தின் மைனஸ்:
- வக்கிரமான காட்சியமைப்புகள். இத்தனைக்கும் இன்னும் நிறைய வக்கிரங்களை இயக்குனர் கேமராவின் கோணத்தில் காட்டாமல் புரிய வைத்திருக்கிறார். அப்படி இருந்தும் ரொம்ப மோசம். அதிலும் முதல்பாதியில் செக்ஸ், செக்ஸ், செக்ஸ்.
- இசை, பாடல்கள், சண்டைக்காட்சிகள் இப்படி எதுவுமே இல்லாதது புதிய முயற்சிதான் என்றாலும் ஒரு கமர்ஷியல் சினிமாவாக தோற்றுப்போகிறது.
- நிறைய லாஜிக் மீறல்கள். உதாரணத்திற்கு பட்டணத்து பக்கத்துவீட்டுப்பெண் இப்படியெல்லாம் வலிய வந்து பரிவு காட்டுவார் என்பதில் உடன்பாடில்லை.
- ஏகப்பட்ட குழப்பங்கள். முக்கியமாக, மீனாக்ஷி அம்மா கேரக்டர் எப்படிப்பட்டது என்பது இறுதிவரைக்கும் விளங்கவே இல்லை.
எனக்குப் பிடித்த காட்சி:
உண்மையில் அப்படி எந்தக் காட்சியும் இல்லை என்றாலும் வீரா மீனாட்சி அம்மாவை பலவந்தப்படுத்தி வன்புணரும் காட்சியில் அந்த நடிகையின் நடிப்பு, முக பாவனைகள் பிரமிக்க வைத்தது.
வெர்டிக்ட்:
படம் முழுவதும் முடிந்ததும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களைப் பற்றி இரண்டு ஸ்லைட் காட்டினார்கள். (மெசேஜ் சொல்றாராம்). அந்த கருத்தை சொல்வதற்கு இரண்டு மணிநேரம் கருமத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். கெளதம் மேனன் தான் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் அதை இப்படித்தான் தவறான பாதையில் நிரூபிக்க வேண்டுமா...? இயக்குனர் தனது ரசனையையும், மூளை பலத்தையும் குப்பையில் கொண்டுபோய் கொட்டியிருக்கிறார். மாஸ், கிளாஸ் இரண்டையும் முயன்று இரண்டிலும் பரிதாபமாக தோற்றிருக்கிறார் இயக்குனர்.
எதிர்பார்க்கப்படும் ஆவி மார்க்: 37, குமுதம் ரேட்டிங்: ஓகே.
டிஸ்கி: Border Town படத்திற்கும் இந்தப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவேளை இருந்தால் அதுவும் எதேச்சையாக அமைந்ததாகவே இருக்கும். மற்றபடி ஏற்கனவே நிறைய தமிழ் சினிமாக்களில் பார்த்த சைக்கோத்தனங்கள் இருக்கின்றன. என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
Post Comment