அன்புள்ள வலைப்பூவிற்கு,
கிண்டிலில் நம்மிடமுள்ள PDF புத்தகங்களையும் வாசித்துக் கொள்ளலாம்
என்று தெரிந்துக்கொண்டேன். வேலை மிகவும் சிம்பிள். கிண்டில் செட்டிங்க்ஸ்
பகுதிக்கு போனால் அதற்கென்று இருக்கும் பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை காட்டும்.
அம்முகவரிக்கு உங்களிடமுள்ள PDF கோப்பை அனுப்பினால் போதும், நிமிடங்களில் PDF இடம்
பெயர்ந்துவிடுகிறது. இதனை தெரிந்துக்கொண்ட பின் என் ஹார்ட் டிஸ்கை துழாவினால்
ஆங்கிலமும் தமிழும் கலந்து நூற்றி சொச்ச PDF கோப்புகளை எப்போதாவது தேவைப்படலாம்
என்று சேமித்து வைத்திருக்கிறேன். இவற்றை நான் சேமித்த காலகட்டம் 2009 – 2011.
ஆனால் அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மற்றதை தொட்டுக்கூட பார்த்ததில்லை.
சோதனையோட்டமாக அவற்றிலிருந்து வாத்தியாரின் தங்க முடிச்சு நாவலை கிண்டிலுக்கு அனுப்பிப்
பார்த்தேன். கச்சிதம் !
தங்க முடிச்சு ஒரு சினிமா நடிகையின் கொலை பற்றிய எளிய நாவல். கணேஷ் –
வசந்த் கிடையாது. யூகிக்கக்கூடிய முடிச்சுதான். ஆனால் நாவலின் துவக்கத்தில் வரும்
அக்கால சினிமா வாழ்க்கை பற்றிய விவரணைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
**********
சமீபத்தில் திறக்கப்பட்டுள்ள அம்மையார் சிலையை இணையத்தில்
யாரோடெல்லாம் ஒப்பிட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
வளர்மதி
ஜெ. தீபா
கலா மாஸ்டர்
சசிகலா
நிர்மலா பெரியசாமி
திருமதி. பழனிச்சாமி
காந்திமதி
வடிவுக்கரசி
கே.பி.சி.லலிதா
பண்டரி பாய்
கே.பி.சுந்தராம்பாள்
இன்னும் நான்கைந்து ப்ளாக் & ஒயிட்
காலத்து குணச்சித்திர நடிகைகள். ஆனால் ஒருவர் கூட அது சம்பந்தப்பட்ட நபர் மாதிரி
இருப்பதாகக் கூறவில்லை.
**********
இவ்வாரம் தொடர்ச்சியாக நிறைய
துயரச்செய்திகள். கேரளாவில் மது என்கிற ஆதிவாசி இளைஞர் மக்களால் அடித்துக்
கொல்லப்பட்ட சம்பவம், விழுப்புரத்தில் நடந்த சாதிப் படுகொலைகள் (இச்செய்தியை தமிழ்
நாளிதழ்கள் எவ்வாறு ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள் என்று கவனியுங்கள்), சிரியா
உள்நாட்டுப் போர் என எல்லை பேதமின்றி துயரங்கள். சோஷியல் மீடியாவைத் திறந்தாலே சங்கடம்
ஏற்படுத்துகிற புகைப்படங்களை கடந்துதான் போக வேண்டியிருக்கிறது.
இவற்றில் தனிப்பட்ட முறையில் என்னை
ஒருமாதிரி உறைய வைத்த செய்தி காஞ்சிபுரம்,
சாலவாக்கத்தில் உள்ள ஒரு முதியோர் / கருணை இல்லத்தில் ஆதரவற்றவர்களை, இறந்தால்
கேட்பதற்கு ஆளில்லாதவர்களைக் தேடிப்பிடித்து அவர்களை பட்டினி போட்டுக் கொன்று,
அவர்களது எலும்புகளை வியாபாரம் செய்கிறார்களாம். இச்செய்தி இன்னும்
உறுதியாகவில்லை. ஆனாலும் வேனில் சடலம் கடத்தல், அதிலிருந்து மூதாட்டி கூச்சல்,
டிரைவர் தப்பியோட்டம் போன்ற விஷயங்களைக் கேள்விப்படும்போது உண்மையாக இருக்கலாம்
என்றே தோன்றுகிறது. மேலும் கடந்த ஏழு வருடங்களில் மொத்தம் 1590 சடலங்களை
புதைத்திருப்பதாகவும், ஆனால் சட்ட விரோதமெல்லாம் இல்லை என்கிறார் இல்லத்தை
நடத்தும் மத போதகர். ஏழு வருடத்தில் 1590 என்றால் தோராயக் கணக்காக பார்த்தால் கூட,
ஒரு கருணை இல்லத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருவர் இயற்கை எய்தினார் என்பது
நம்பும்படியாக இல்லை.
கொலம்பாரியச் சுவர்கள் என்கிற சுவற்றில் லாக்கர் போன்ற
கல்லறைகள் அமைத்திருக்கிறார்கள். அதற்குள் ஒரு சடலத்தை குச்சியால் தள்ளும்
காணொளியைப் பார்த்தேன். சடலத்தில் இருந்து எலும்புகளை சேகரிப்பதற்காக இருபது
அடியாழத்தில் ஒரு குழி வைத்திருக்கிறார்களாம். இச்செய்தியில் உள்ள தீவிரத்தை
கற்பனை செய்து பார்த்தாலே தலை சுற்றுகிறது.
**********
ஆறு அத்தியாயம் பார்த்தேன். ஆறு குறும்படங்கள், முதலில் அவற்றை
க்ளைமாக்ஸ் மட்டும் இல்லாமல் வரிசையாக காட்டுகிறார்கள். பின்னர் கிளைமாக்ஸ்கள்
வருகின்றன. இம்முறை உலகிலேயே புதுசு என்கிறார்கள்.
சூப்பர் ஹீரோ: கேபிள் சங்கர் இயக்கியது. ஒரு மனநல மருத்துவருக்கும், அவரிடம்
வரும் நோயாளிக்கும் இடையே நடைபெறும் உரையாடல். அதன் விளைவாக மருத்துவர் எடுக்கும்
ஒரு முடிவு க்ளைமாக்ஸ். ஆறு படங்களிலேயே மிகக் குறைவான செலவில் தயாரிக்கப்பட்டது
இதுவாகத்தான் இருக்கும் என்று யூகிக்கிறேன். எஸ்.எஸ்.ஸ்டான்லியை க்ளோஸப் ஷாட்டில்
பார்க்கும்போது கே.ஆர்.பி.செந்தில் சாயல் தெரிகிறது. பேசாமல் இரண்டாமவரை
அறிமுகப்படுத்தியிருந்தால் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல குணச்சித்திர / வில்லன்
நடிகர் கிடைத்திருப்பார்.
இனி தொடரும்: சைல்டு அப்யூஸ் பற்றிய கதை. ஆறில் மிகவும் மொக்கையான
ஷார்ட் இதுதான். குறிப்பாக இதன் க்ளைமாக்ஸ் அப்பப்பா ஸ்வாமி ! யூனிட்டில் யாரோ
ப்ரொட்யூசர் சாரிடம், சார் நீங்களே ஒரு படம் டைரக்ட் பண்ணலாம் என்று உசுப்பேத்தி
விட்டிருக்கிறார்கள். அனுதாபங்கள்.
மிசை: ஒரு காதல் தோல்வியைப் பற்றிய கதை. ஆறில் ஹாரர் / அமானுஷ்ய எலிமன்ட்
குறைவான கதை இதுதான். இக்கதையில் ஓர் அறையில் தங்கியிருக்கும் மூன்று நண்பர்களைப்
பற்றியும் அவர்களுக்குள் இருக்கும் மனத்தடங்கல்களைப் பற்றியும் ஒரு சுவாரஸ்யமான
இழை வருகிறது. க்ளைமாக்ஸ் மொக்கை.
அனாமிகா: கேபிளின் உதவியாளர் சுரேஷ் இயக்கியது. சினிமா கதை எழுதும்
இளைஞன் ஒருவன் ஒருநாள் கதை எழுதுவதற்காக அவரது மாமா வீட்டுக்கு செல்கிறார்.
அப்போது மாமா அவசரமாக சின்ன அத்தையைப் பார்க்க சென்றுவிடுகிறார். வீட்டில் வேறு
யாரும் இல்லை. அன்றிரவு இளைஞன் சந்திக்கும் விஷயங்கள் தான் கதை. என்னைக் கேட்டால்
ஆறு படங்களில் சிறந்த கதையம்சம் கொண்ட படம் இது. முன்னே, பின்னே, கொஞ்சம் பட்டி
டிங்கரிங் பார்த்திருக்கலாம். விவகாரமான மாமாவாக கேபிள் சங்கர் நடித்திருக்கிறார்.
சூப் பாய் சுப்பிரமணி: ஒரு இளைஞன் ஒவ்வொரு முறை ஏதேனும் ஒரு பெண்ணோடு
நெருக்கமாகும் போதும் ஏதோ ஒரு சக்தி அவனை அப்பெண்ணிடம் இருந்து பிரித்து
வைத்துவிடுகிறது. ஒரு மாந்திரிகரின் உதவியுடன் சிக்கலிலிருந்து இளைஞன் மீள்வதே
கதை. இப்படத்தின் இயக்குநர் தியேட்டருக்கு ஒரு கும்பலை சிரிப்பதற்காக அனுப்பி
வைத்திருந்தார். அவர்கள் மொக்கை ஜோக்குகளுக்கெல்லாம் அடக்க முடியாமல் சிரிப்பது
போல பாவனை செய்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். மற்றபடி சுமாரான படம்.
சித்திரம் கொல்லுதடி: சற்று ஆழமான கதையம்சம் மற்றும் நீளமான படம் இது.
சங்க காலத்தில் வாழ்ந்த கோகிலா என்கிற பெண்ணைப் பற்றி ஒரு எழுத்தாளர் புத்தகம்
எழுதுகிறார். அந்த எழுத்தாளர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தொடர்ச்சியாக
அப்புத்தகத்தை படிக்கும் எல்லோரும் கொல்லப்படுகிறார்கள். காரணம், அப்புத்தகத்தில்
கோகிலாவின் கண்களைப் பற்றிய ஓர் வர்ணனை வருகிறது. அதனைப் படிப்பவர்கள் அவர்களையே
அறியாமல் அக்கண்களை வரைந்து பார்க்க முயல்கிறார்கள். கோகிலாவின் சாபத்தின்படி
அவளது கண்களைப் பார்க்க முயலும் ஒவ்வொருவரும் கொல்லப்படுகிறார்கள். ஓவியங்கள்,
செய்யுள்கள் என்று நிறைய வொர்க் செய்திருக்கிறார்கள்.
இக்கதை எனக்கு சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பதிமூன்றாம் பக்கம்
பார்க்க என்ற திரைப்படத்தை நினைவூட்டியது. இப்படத்தின் கதையில் ஒரு புத்தகம்
வருகிறது, அதன் பதிமூன்றாம் பக்கத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்தால்
பேய் வந்து மந்திரம் உச்சரித்தவரை கொன்றுவிடும்.
பொதுவாக ஆறு அத்தியாயம் படத்தில் மிகப்பெரிய லெட் டவுன் என்று நான்
கருதுவது படங்களின் க்ளைமாக்ஸ் தான். ஒவ்வொரு படமும் கிளைமாக்ஸுக்கு முன்பு வரை
ஏதோ ஒரு வகையில் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. ஆனால் க்ளைமாக்ஸ் ப்பூ
இவ்வளவுதானா என்று ஏமாற்றம் ஏற்படுத்துகிறது. என்னளவில் இப்படங்களின் தரவரிசை :-
அனாமிகா, சித்திரம் கொல்லுதடி, சூப் பாய் சுப்பிரமணி, சூப்பர் ஹீரோ, மிசை !
வரிசையில் இனி தொடரும் எங்கே எனக் கேட்காதீர்கள் !
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|