27 March 2017

பிரபா ஒயின்ஷாப் – 27032017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எழுதிய இரண்டு (குறு)நாவல்களை படித்தேன். குடும்ப நாவல் ஜி.அசோகன் இவற்றை மீள் பிரசுரம் செய்திருக்கிறார். முதல் நாவல் வெறும் 90 சிறிய பக்கங்கள். மீதிப்பக்கங்களை ஜெயலலிதா இரங்கல் கட்டுரைகள் (கீழே இப்படிக்கு தமிழக மக்கள் என்று எழுதப்பட்ட இரங்கல் கட்டுரையை உண்மையாக எழுதியவர் கிடைத்தால் கையை உடைக்க வேண்டும்), ஜெயலலிதாவின் பழைய சினிமா புகைப்படங்கள், ஜெயலலிதா பற்றிய துணுக்குச் செய்திகள், கட்டுரைகள், அவர் மேடைகளில் சொன்ன குட்டிக்கதைகள் போன்றவற்றை பயன்படுத்தியிருக்கிறார்கள். சில விஷயங்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. குறிப்பாக ஜெயலலிதா சொந்தக்குரலில் சில பாடல்கள் பாடியிருக்கிறார் என்பதும், அதுவும் அடிமைப்பெண் அம்மா என்றால் அன்பு பாடலை பாடியவர் ஜெயலலிதா என்பதும் ஆச்சர்யம். ஜெயலலிதா எழுதிய நாவல்களை பேருந்தில் வைத்து படித்தால் பார்ப்பவர்கள் எங்கே வாங்கினீர்கள் ? எப்போது வாங்கினீர்கள் ? என்றெல்லாம் கேட்டு கண் வைக்கிறார்கள்.

முதல் நாவலின் பெயர் ஒருத்திக்கே சொந்தம். எந்தவித விசேஷங்களும் இல்லாத தட்டையான, ஆணாதிக்க சிந்தனை கொண்ட நாவல். ரவிக்கும் பத்மினிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இருவரும் கடிதங்களில் காதல் புரிகிறார்கள். திருமணம் நின்றுவிடுகிறது. காலப்போக்கில் ரவி சினிமாவில் பெரிய ஸ்டார் ஆகிவிடுகிறான். அவனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமும் நடந்துவிடுகிறது. இந்நிலையில் அவனது வாழ்க்கையில் பத்மினி மீண்டும் வருகிறாள். பழைய காதலை மறக்காத ரவி பத்மினியையும் மணமுடித்து, மனைவியையும் தக்க வைத்துக்கொள்ளும் பயங்கரமான கதை. கேட்பதற்கே ரொம்ப மொக்கையாக இருந்தாலும் அந்த காலக்கட்டத்தில் வெளிவந்த பல கருப்பு – வெள்ளை திரைப்பட கதைகளுடன் ஒப்பிடும்போது ஒருவேளை இதனை சினிமாவாக எடுத்து எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா – லதா  (அல்லது டபுள் ஜெயலலிதா) நடித்திருந்தால் படம் வெற்றிவிழா கண்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

இரண்டாவது நாவல் உறவின் கைதிகள். ராஜீவ் என்ற ஒரு பிரபல சினிமா நடிகனைப் பற்றிய கதை. ஒரு வகையில் பார்த்தால் முதல் நாவலில் வரும் ரவியின் வாழ்க்கையில் இடையில் வரும் சம்பவங்களை ராஜீவின் கதை என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது ரவியின் கதையின் மற்றொரு கோணம். ஒரு பாதி கதை முடியும்போதே இது எங்கே போய் முடியப்போகிறது என்று ஓரளவிற்கு யூகித்துவிட முடிகிறது. ஆனால் சேச்சே எழுதியிருப்பது ஜெயலலிதா அப்படியெல்லாம் பாலச்சந்திரத்தனமாக எழுதியிருக்க மாட்டார் என்று நினைத்துக்கொண்டே படித்தேன். என் நம்பிக்கை பொய்யானது. ஜெயலலிதாவைத் தவிர வேறு யார் எழுதியிருந்தாலும் இது பிரசுரிக்க தகுதியில்லாத, பிரசுரம் ஆகக்கூடாத ஒரு கேவலமான நாவல். ஒருவகையான குரூர மனப்பான்மை கொண்டவரால் மட்டுமே இது மாதிரி கதைகளை எல்லாம் கற்பனை செய்ய முடியும். இப்போது என் கவலை என்னவென்றால் என் மேஜையில் இருக்கும் சில புத்தகங்களை என் அம்மா அல்லது அப்பா படிப்பார்கள். ஒருத்திக்கே சொந்தம் நாவலை என் அம்மா படித்துவிட்டார். அடுத்து உறவின் கைதிகளையும் படிப்பதற்கு முன் அதனை எரித்துவிட வேண்டும்.

சில அரியப்படங்களை யூடியூபில் தேடிப் பார்த்து வருகிறேன். அந்த வரிசையில் பார்த்தது பொன்னி. 1976ல் வெளியான மலையாள சினிமா. கமலஹாசன், லக்ஷ்மி நடித்தது. மலையட்டூர் ராமகிருஷ்ணன் எழுதிய பொன்னி நாவலின் திரைப்பட வடிவம் இது. பொன்னி நாவல் அல்லது சினிமா சொல்ல நினைத்த விஷயங்கள் – 1. ஆதிவாசி இன குழுக்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. கலப்பு மணம் புரிவதில் தவறில்லை. 2. காடுகளை அழிப்பது தவறு, 3. ஆதிவாசி மக்களுக்குள் மூடநம்பிக்கைகள் இருக்கக்கூடாது. ஆனால் உண்மையில் படம் இந்த விஷயங்களில் இருந்து தடம் புரண்டு கமல் – லக்ஷ்மி ரொமான்ஸ் பண்ணுவதிலேயே குறியாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் நாம் ஏதாவது பி-கிரேடு படம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்று சந்தேகமே வந்துவிட்டது. அந்தக்கால கமல் ரசிகைகளுக்கு செமத்தியான படம். படம் முழுக்க சட்டையில்லாமல் தான் வருகிறார். இதிலே ரொமான்ஸ் காட்சிகளுக்கு டப்பிங்கில் முக்கல், முனகல் வேறு சேர்த்திருக்கிறார்கள். 1960ல் கேரளாவில் ஒரு பணிபுரிந்த ஒரு சப்-கலெக்டர் தான் பார்த்த சம்பவங்களை கதையாகச் சொல்லி அதனை மலையட்டூர் ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்த பொன்னியின் தமிழ் பெயர் கொல்லிமலை மாவீரன் !

தற்போது யுவல் நோவா ஹராரி எழுதிய சேபியன்ஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். (ஞாபகமிருக்கிறதா ? கமலஹாசன் பரிந்துரைத்த புத்தகம்). 2011ம் ஆண்டு ஹிப்ரு மொழியில் வெளியாகி உலகெங்கிலும் வரவேற்பைப் பெற்று, 2014ல் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. விரைவில் தமிழிலும் வெளிவரும். முப்பது பக்கங்கள் தாண்டிவிட்டேன். முன்னூறு பக்கங்களில் எழுத வேண்டிய விஷயங்களை கேப்ஸ்யூலில் அடக்கிக் கொடுத்திருக்கிறார்கள். மையச்சரடு இதுதான். ஒரு காலத்தில் பூமியில் நியாண்டர்தால், டெனிசோவன் உட்பட பல்வேறு மனித இனங்கள் இருந்தன. அவற்றை எல்லாம் அழித்து நம்முடைய ஹோமோ சேபியன்ஸ் மட்டும் பிழைத்திருக்கிறார்கள். பொதுவாக வெளிநாட்டு ஆங்கில புத்தகங்கள் என்றால் படிப்பதற்கு கடினமானதாக இருக்கும். ஒவ்வொரு வார்த்தைகளுக்கான அர்த்தத்தையும் களஞ்சியத்தில் தேடிக் கண்டுணர வேண்டும். சேபியன்ஸில் அந்த சிக்கல்கள் எதுவுமில்லாமல் பளிங்கு மாதிரி புரியக்கூடிய எளிமையான ஆங்கிலம். ஆரம்பநிலை ஆங்கில வாசிப்பாளர்கள் கூட தயங்காமல் வாங்கிப் படிக்கலாம்.

ராகவா லாரன்ஸ் படங்கள் எதுவும் எனக்கு பார்க்கும் எண்ணத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அவருடைய படங்களில் ஒன்றை மட்டும் கேரண்டியாக எதிர்பார்க்கலாம். நல்ல டான்ஸ் மற்றும் கிளாமர் இரண்டும் கொண்ட பாடல் ஒன்று கண்டிப்பாக இருக்கும். காஞ்சனாவில் கருப்பு பேரழகா, காஞ்சனா 2வில் டாப்ஸி கருப்புப் புடவையில் பேரழகியாக வரும் பாடல்களைச் சொல்லலாம். மொட்ட சிவா கெட்ட சிவாவில் அதுமாதிரி இரண்டு பாடல்கள் இருக்கின்றன. 

ஒன்று, ஹரஹர மஹாதேவகி. அப்பப்பா ராய் லட்சுமி ! நெய்யில் செய்ப்பட்ட சிலை போல இருக்கிறார். எவ்வளவு இறக்கம் காட்ட முடியுமோ அவ்வளவு காட்டியிருக்கிறார். லாரன்ஸுடன் போட்டி போட்டுக்கொண்டு டான்ஸும் ஆடியிருக்கிறார். இரண்டாவது, ஆடலுடன் பாடலை ரீமிக்ஸ். இதிலே நிக்கி கல்ராணி வருகிறார். இதிலே நிக்கியின் கிளாமரை விட, லாரன்ஸின் டான்ஸை விட, ஷங்கர் மஹாதேவனின் கின்னென்ற குரல்தான் அதிகம் ஈர்க்கிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 March 2017

பிரபா ஒயின்ஷாப் – 20032017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படத்தை அதன் முதல் வாரயிறுதியில் பார்க்கத் தவறிவிட்டால் அதனால் நான் அடையும் அவஸ்தைகள் அதிகம். அந்த படத்தைப் பற்றி யார் எழுதியிருந்தாலும் அதனை சுந்தர்.சியை கடந்து போகும் வடிவேலுவைப் போல கவனிக்காதது போல கடந்து செல்ல வேண்டும். ஃபேஸ்புக் பரவாயில்லை. நான்கைந்து வரிகளுக்கு பீடிகை போட்டுத் துவங்குவதால் சுதாரித்து தப்பித்துவிடலாம். வாட்ஸப்பில் எல்லாம் ஒன்றிரண்டு வரியில் விஷயத்தை சொல்லி கடுப்படித்து விடுகிறார்கள்.

முதலில் மாநகரம் பட விளம்பரங்கள் எனக்கு அதன் மீது எந்த ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. அதன் ட்ரைலரைக் கூட நான் பார்க்கவில்லை. எல்லோரும் ஓஹோபித்த விதமாக பாராட்டுவதை அறிந்து பார்க்கலாம் என்று முடிவெடுப்பதற்குள் சற்று தாமதமாகிவிட்டது. அதாவது வாரநாட்கள் துவங்கிவிட்டன. தேவிகலாவில் இரவு 7 காட்சியாக மாநகரம் ஓடிக்கொண்டிருந்தது. என் அலுவலகத்திலிருந்து தேவி திரையரங்கம் சரியாக பன்னிரண்டு நிமிட தூரம். (லிஃப்டுக்காக காத்திருப்பது, பேருந்து கிடைப்பது, சாந்தி தியேட்டர் சப்வேயில் இறங்கி ஏறுவது, தேவி தியேட்டர் சுழற்பாதையில் நடப்பது உள்ளிட்டவற்றை சேர்த்து கணக்கிட்டப்பட்டது). மாலை ஆறே முக்காலுக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பினால் கூட தேசிய கீதம் பாடும் நேரத்திற்கு உள்ளே சென்றுவிடலாம். சென்ற வாரம் முழுவதும் மணி மாலை ஆறைத் தாண்டியதும் இன்று எல்லாம் சுபமாக முடிந்து படம் பார்த்துவிடலாமா என்று காத்திருந்து பார்த்தேன். ம்ஹூம். ஆனால் காத்திருப்பின் பலனாக இந்த வாரம் மாநகரம் தேவிகலாவிலிருந்து தேவிக்கு மாறியிருக்கிறது. (தேவிகலா / தேவிபாலாவில் படம் பார்ப்பதும் தேவி / தேவி பேரடைஸில் படம் பார்ப்பதும் முழுமையாக வெவ்வேறு அனுபவம் என்று அறிக). கூடவே பத்து ரூ. டிக்கட் பச்சையில் காட்டியதும் நேற்று மதியக்காட்சிக்கு படையெடுத்துவிட்டேன். அற்புதமான படம், நேர்த்தியாக பின்னலாடையைப் போன்ற திரைக்கதை என்பதைத் தாண்டி எழுத வேண்டிய சில விஷயங்கள் இருப்பதால் இரண்டொரு நாட்களில் விரிவாக எழுதுகிறேன். சோம்பலாக இருந்தால் எழுதமாட்டேன்.

மாநகரத்திற்காக வார நாட்களில் மாலையில் சீக்கிரம் அலுவலகத்தை கிளம்பும் வாய்ப்பு ஒருநாள் ஏழு மணிக்கு ஐந்து நிமிடம் முன்னதாக கிடைத்தது. அடித்து பிடித்து டிக்கட் கவுண்ட்டரை அடையும்போது ஐந்து நிமிட சினிமா ஓடியிருந்திருக்கும். அதனால் ஏழேகால் காட்சி ‘காங்: ஸ்கல் ஐலேண்டுக்கு’ நுழைந்தேன். கருந்தேள், எஸ்கா இருவரும் எழுதியிருந்ததை படித்திருந்ததால் தான் மனது இந்த மாற்று ஏற்பாடுக்கு சம்மதித்தது. 2Dயில் தான் பார்த்தேன். ஆனால் தேவியில் பார்ப்பது 3Dயை விட பிரம்மாண்ட அனுபவம். 

நான் இதுவரை எந்த கிங்காங் படமும் பார்த்ததில்லை. மேலும் கதை தனிப்பட்ட முறையில் எனது கற்பனையுலகிற்கு தீனி போடும் விதமாக அமைந்ததால் பயங்கரமாக ரசித்தேன். ஆங்கிலப்படங்களில் உள்ள ஒரு நெருடல் என்னவென்றால் ஆங்கிலத்தில் பார்த்தால் வசனங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கும். நகைச்சுவை வசனங்களுக்கு தியேட்டரே சிரிக்கும்போது நாம் மட்டும் அமைதியாக மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்க வேண்டும். தமிழில் பார்த்தால் டப்பிங் கொடூரமாக இருக்கும். மேலும் தமிழ் டப் செய்து வெளியிடும் திரையரங்கள் புறநகர் சுமார் திரையரங்கள். ஆனால் அடிப்படை கதை புரிகிறது, விஷுவல் அசத்துகிறது அது போதும். எண்ட் கிரெடிட்ஸில் ஏதோ விஷயமிருப்பதாய் கருந்தேள் சொன்னதால் உட்கார்ந்து சுவரில் வரும் ஓவியத்தை எல்லாம் கூர்ந்து கவனித்து, ஒன்றும் புரியாமல் ஒன்றிரண்டு நபர்களைத் தவிர எல்லோரும் திரையரங்கை விட்டு வெளியேறி, கூட்டிப்பெருக்கும் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். டைட்டில் முழுவதும் முடிந்து அவசர அவசரமாக வெளியேற நினைத்தபோது பணியாளர் ஒருவர் இருங்கண்ணா... இதுக்கப்புறம் ஒரு சீன் இருக்கு... என்று என்னை நிறுத்தினார். கருந்தேள், எஸ்கா இருவர் எழுதியதையும் படித்ததால் இப்பொழுது காட்ஸில்லா ரீபூட்டையும் பார்க்கத் தோன்றுகிறது.

காங் படம் பார்க்கும்போது ஒருவகையில் நாம் கூட மான்ஸ்டர் உலகில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா என்று தத்துவார்த்தமாக தோன்றுகிறது. காங் படத்தின் இறுதிக்காட்சியில் பிட் லிஸார்ட்ஸ் மனிதர்களை கொல்ல வரும்போது காங் வந்து காப்பாற்றும். ஜுராஸிக் பார்க் படத்தில் இதேபோல ஒரு காட்சி வரும். டைனோசர் ஒன்று மனிதர்களை கடித்துத்துப்புவதற்கு நெருங்கிவிடும். அவ்வளவுதான் என்று நாம் நினைக்கும் சமயத்தில் இன்னொரு பெரிய டைனோசர் வந்து பழைய டைனோசருடன் சண்டையிடும். இரண்டு டைனோசர்களுக்கும் ஏதோ பழைய பகை. மற்றபடி புதிய டைனோசருக்கு மனிதர்கள் மீது பாசமெல்லாம் கிடையாது. இந்த இடைவெளியை பயன்படுத்தி மனிதர்கள் தப்பித்துவிடுவார்கள். நம் வாழ்க்கை (ஐ.டி. கம்பெனியில் பணிபுரிவது) என்பதும் கூட கிட்டத்தட்ட ஜுராஸிக் பார்க்கில் பிழைப்பு நடத்துவதைப் போலத்தான். இங்கேயும் விதவிதமாக பல ‘பிக் ஷாட்ஸ்’ உலவிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அவர்களில் யாராவது ஒருவர் நம்மை வச்சு செய்வதற்கு வரும்போது இன்னொருவர் ஆபத்பாந்தவனாக நம்மை வந்து காப்பாற்றுவார். நம் மீது உள்ள பாசத்தில் அல்ல. மற்றவர் மீதுள்ள பகையில். அதுபோக பிரம்மாண்ட டைனோசர்கள் போல குறுக்க மறுக்க ஓடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் கால்களில் மிதிபட்டுவிடாமல் தந்திரமாக தப்பிக்க வேண்டும்.

ஜீவ கரிகாலனின் டிரங்கு பெட்டிக் கதைகள் படித்தேன். ஒருமாதிரி ஜனரஞ்சக எழுத்திற்கும் இலக்கியத்தரத்திற்கும் இடையே ஊசலாடுகிறது ஜீ.க.வின் எழுத்து. கண்ட கண்ட புஸ்தகங்களையெல்லாம் படித்து குழம்பிப் போயிருக்கிறார் என்று தெரிகிறது. 


மொத்தம் பன்னிரண்டு கதைகள். அவற்றில் இரண்டு, மூன்று கதைகளுக்கு ஒரே மாதிரியாக முடிவில் ட்விஸ்ட். முதல் கதையில், இரண்டு பக்கங்கள் வரை சினிமாவில் இதுதாங்க மதுரை. இந்த ஊர்க்காரய்ங்க பாசக்காரய்ங்க, ரோசக்காரய்ங்க என்று வாய்ஸ் ஓவர் கொடுப்பது போல நீட்டிவிட்டு பின்னர் கதைக்குள் நுழைக்கிறார். சீரியஸாக ஏதோ சொல்லப் போகிறார் என்று நினைக்கும்போது நமீதா நாட்டுக்கோழி கடை என்று முடிக்கிறார். இதை ஏன் இவ்வளவு வருத்தப்பட்டு சொல்கிறேன் என்றால் சிறுகதைத் தொகுப்பின் முதல் கதை என்பது நம் மனநிலையை புத்தகத்திற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும். முதல் கதை இப்படியிருந்து, இரண்டாவது கதையிலேயே முழுமையாக வேறொரு தளத்திற்கு போய்விடுகிறார். மறுபடியும் இரண்டு கதைகளுக்குப் பிறகு தூத்துக்குடி கேசரி என்கிற ஜனரஞ்சக எழுத்துக்கு திரும்புகிறார். சேவ் தி பெஸ்ட் ஃபார் லாஸ்ட் எனும் கூற்றுக்கிணங்க, கடைசி கதை தரமானதாக இருந்தது. நான்கு பாகங்கள் கொண்ட அந்த கடைசி சிறுகதை நான்கு லார்ஜை கொஞ்சம் கொஞ்சமாக அருந்துவது போலே இருந்தது. ஆனால் அதிலேயும் கடைசியில் அதே பாழாய்ப்போன ட்விஸ்ட். ஜீவ கரிகாலன் ஏதோவொரு கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். யாராவது அவரை மீட்டு மெய்யுலகிற்கு அழைத்து வர வேண்டும்.

ஒரு கதையின் ஒரு பகுதியை மட்டும் தனியாக படிப்பது சரியான அபிப்ராயத்தை கொடுக்காது என்றாலும் நான் படித்து உவந்த பின்தொடரும் பத்தியை நீங்களும் படித்து உவகை யடைய வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் டிரங்கு பெட்டிக் கதைகள் கோடுகளில் நெளியும் காதல் கதையிலிருந்து சில வரிகளை பகிர்கிறேன் :-

பாம்பிற்கு டால்ஃபின் தான் உணவு. ஆனால் டால்ஃபின் அதன் இரையல்ல. அந்த உணவும் அதற்கு வேட்டையால் கிடைத்தது அல்ல. இப்பொழுது பாம்பின் பசிக்கு பெயர் வேறாகின்றது. மெதுவாகப் பாம்பின் நிழல் டால்ஃபினின் நிழலைச் சுற்றிக்கொள்ள ஆரம்பிக்கின்றது. பாம்பு தன்னைச் சுற்றிக்கொண்டிருந்தும் டால்பின் பயம் கொள்ளவில்லை. அப்பொழுது கருப்பிற்கும், நீலத்திற்கும் இடையே மறைந்திருந்து குறுநகைக் கோடுடன் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான் கடவுள் என்னும் பெயர் கொண்டிருந்த சாத்தான். எனினும் அந்தச் சாத்தான் மனிதனுக்கு காதல் செய்யக் கற்றுத்தரவில்லை. மனிதனுக்கு காதலைக் கற்றுத்தரும் அந்தப் பணியை பாம்பு தான் ஏற்றிருந்தது. இவை அனைத்தும் நடப்பது ஏக காலத்தில் தான். ஆனால் அந்தக் கணம் இன்னும் முடியவில்லை. அதே வேளை, டால்பினின் நிழல் முழுக்க பாம்பு சுற்றித் தழுவியிருந்தது. நிழல் வழியே தொடங்கிய புணர்தலை நீங்கள் புரிந்துக் கொண்டீர்களென்றால், டால்பினின் முகத்திலுள்ள பாம்பின் ரேகைகளை நீங்கள் கண்டு கொள்வீர்கள். அப்பொழுது இந்த ஓவியம், அவளைப் போலவே உங்களுக்கும் பரிச்சயம் ஆகியிருக்கும். 

தலை சுற்றுகிறதா ? எனக்கும்தான் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 March 2017

மசினகுடி – பந்திப்பூர் வனச்சாலை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: தொடக்கம்

மசினகுடியை நோக்கிய எங்கள் பயணத்தில் மாலை மூன்று மணியளவில் பந்திப்பூர் செக் போஸ்ட் சென்றடைந்தோம். அங்கே காட்டிலாகா அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் எதற்காகவோ காத்திருந்தனர். முதலில் இது என்னடா சோதனை என்றுதான் நினைத்தேன். ஏற்கனவே பெங்களூரு நண்பர் ஒருவர் செக் போஸ்ட் பற்றி எச்சரித்ததால் மாம்பழ ஜூஸை நெகிழிக்குப்பிக்கு மாற்றி வைத்திருந்தோம். விசாரித்ததில் வரிசை காட்டுலா (ஜங்கிள் சஃபாரி) செல்வதற்கான டிக்கட் வாங்குவதற்கு என்றும், மற்றவர்கள் நிற்கத் தேவையில்லை என்று தெரிந்துக்கொண்டோம். 

படம்: இணையம்
பந்திப்பூர் வனச்சாலையில் எங்கள் பயணம் துவங்கியது. சாலையின் இருபுறங்களிலும் பத்து அடிக்கு ஒரு மான் கும்பலை பார்க்க முடிகிறது. அதுபோக மயில்களும், குரங்குகளும். வாகனத்தை மெதுவாக செலுத்தியபடி எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டே வந்தோம். வானம் மசமசவென்று இருந்தது. ஏற்கனவே மழை பெய்த ஈரத்தடங்கள் தெரிந்தன. பந்திப்பூர் சாலையிலிருந்து வனப்பகுதிக்குள் செல்வதற்காக ஆங்காங்கே சிறிய மண்சாலைகள் கிளை பிரிகின்றன. ஆனால் அவை பொதுவழி கிடையாது. காட்டுலா செல்லும் வேன்கள் மட்டும் அந்த சாலை வழியாக பயணிக்கின்றன. வாகனங்களை நிறுத்தக்கூடாது, புகைப்படங்கள் எடுக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் கூட மற்றவர்களுக்குத் தான். காட்டிலாகாவிடம் டிக்கெட் பெற்று வேனில் உலா செல்பவர்கள் மிருகங்களைக் கண்டால் உடனே வாகனத்தை நிறுத்தச்சொல்லி DSLRஐ தூக்கிவிடுகின்றனர். 

திடீரென ஒரு இடத்தில் காட்டிலாகாவின் வேனும், சில கார்களும் நின்றுக்கொண்டிருந்தன. அவர்கள் எதையோ பார்த்துக்கொண்டும், படம் பிடித்துக்கொண்டும் இருந்தனர். காட்டின் முக்கிய பிரமுகர் யாரோ வந்திருக்கிறார். ஒருவேளை புலியாக இருக்குமோ அல்லது யானை. யோசித்துக்கொண்டே எட்டிப்பார்த்தால் கரடி ! கரிய, பெரிய உருவத்துடன் செடிகளுக்கிடையே எதையோ தேடிக்கொண்டிருந்தது. சுற்றி ஒரு ஐம்பது பேர் அதனை குறுகுறுவென வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது குறித்த எந்த பிரக்ஞையும் இல்லாமல் சாதாரணமாக உலவிக்கொண்டிருந்தது. நாங்களும் அந்த வாகனங்களுக்கு அருகே சென்று கரடியைக் கண்டோம். கரடிக்கும் எங்களுக்கும் அதிக பட்சம் ஒரு பதினைந்து அடி இடைவெளி இருந்திருக்கும். கரடி சாவகாசமாக சாலையைக் கடந்தது. மறுபடியும் மேயத் துவங்கிவிட்டது. 

சில நிமிடங்கள் இப்படி கரடியை பார்த்துக் கொண்டிருந்தோம். DSLR வைத்திருந்தவர்கள் சலிக்காமல் கரடியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் அங்கிருந்து கிளம்புவதாக தெரியவில்லை. எங்களுக்கு அதற்கு மேல் அங்கே சுவாரஸ்யமாக எதுவும் இல்லாததால் கிளம்பத் தயாரானோம். எங்களுக்கு முன்னே ஒரு கார் நின்றுக்கொண்டிருந்தது. அதனை வலது பக்கமாக கடந்து நாங்கள் முன்னேற வேண்டும். கரடியும் சாலையின் வலது பக்கம்தான் இருக்கிறது. அது பிரச்சனையில்லை. வலது பக்கம் காருக்கும் கரடிக்கும் இடையே தாராளமாக இடைவெளி இருக்கிறது என்பதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் காருக்கு மிக அருகிலேயே சில குரங்குகள் நின்றுக்கொண்டிருந்தன.

ஆமாம், குரங்குகள் தான் ! இந்த இடத்தில் பிரகாஷின் வரலாறை நாம் கொஞ்சம் புரட்ட வேண்டியிருக்கிறது. சின்ன வயதில் பிரகாஷை அவருடைய பெற்றோர் மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கே குரங்குகளுக்கு வாழைப்பழமோ, காராச்சேவோ எதையோ பையனிடம் கொடுத்து குரங்குக்கு கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். பையனும் தைரியமாக கொடுத்திருக்கிறான். குரங்கு கவ்விவிட்டது. பிரகாஷின் கையை ! நீங்கள் நாய்க்கடி வாங்கியவரை பார்த்திருப்பீர்கள், சுஜாதாவின் ஒரு கதையில் குதிரையிடம் கடி வாங்கிய நபரைப் பற்றி படித்திருக்கிறேன், குரங்கின் கடி வாங்கிய ஒரே நபர் பிரகாஷாகத்தான் இருக்கும். பிரகாஷின் கையில் அந்த தழும்பு இப்போதும் கூட இருக்கிறது. எனக்கு அந்த தழும்பை பார்க்கும் போதெல்லாம் ஏனோ காராச்சேவு நினைவுக்கு வரும். அந்த சம்பவம் நடந்ததிலிருந்து விலங்குகளைக் கண்டாலே பிரகாஷுக்கு ஒவ்வாமை. குறிப்பாக குரங்குகளைக் கண்டாலே இது அதுல்ல என்றபடி பின்வாங்குவார்.

பந்திப்பூர் சாலைக்கு திரும்புவோம்... இப்பொழுது முன்னே இருக்கும் காரை கடக்க வேண்டும். வலது புறம் குரங்குகள். எனவே வேறு வழியில்லாமல் இடது புறமுள்ள சகதியில் வண்டியை விடுகிறார் பிரகாஷ். ஊஷ்ஷ்... வண்டி சமநிலை குலைந்து சாய்ந்துவிட்டது. தந்திரமாக இருவரும் அடிபடாமல் எழுத்துக்கொண்டோம். பதற்றம்தான். ஆனாலும் நூற்றிமுப்பது கிலோ R15யை இருவருமாக தூக்கி, மறுபடியும் கிளம்பத் தயாரானோம். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை ! இரண்டு, மூன்று முறை முயற்சி செய்தும் பலனில்லை. பதற்றம் அதிகரிக்கிறது. வலதுபுறம் கரடி. கரடி கூட அது பாட்டுக்கு அது வேலையை பார்க்கிறது. இடையே கடந்து செல்பவர்கள், கார்களில் பத்திரமாக அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் எங்களை பரிதாபமாக பார்க்கத் துவங்குகிறார்கள். அதுதான் வயிற்றில் பந்து உருட்டுகிறது. கீழே சகதியில் விழுந்ததில் வண்டிக்கு ஏதேனும் கோளாறு ஆகிவிட்டதோ ? ஒருவேளை அப்படியிருந்தால் வண்டியை உருட்டிக்கொண்டு போவதற்குள் கரடி தஹ தஹன்னு குதிச்சு ஓடி வந்து விடும். இதற்குள் பின்னாலிருந்து ஜெய்ரமேஷும் வந்து R15யை ஏதோ செய்ய, வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது. 

விறுவிறுவென அவ்விடத்தைக் கடந்து ஆசுவாசமடைந்தோம். ஒருபுறம் ஆபத்தில்லாமல் தப்பித்தோம் என்ற நிம்மதியும், அதே சமயம் இப்படி ஒரு சம்பவமே நடைபெறாமல் போயிருந்தால் இந்த காட்டுவழி பயணத்தில் என்ன சுவாரஸ்யம் இருந்திருக்கும் என்றும் நினைத்துக்கொண்டு பந்திப்பூர் வனச்சாலையை கடந்து, மசினகுடி எல்லையை அடைந்தோம்...

அடுத்த பகுதி: சென்றடைதல்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 March 2017

பிரபா ஒயின்ஷாப் – 13032017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

டர்மரின் 384 படித்தேன். சுதாகரின் நாவல்கள் மூன்றும் ஆனந்த் ஷங்கரின் படங்கள் போன்றவை. ஒரு ஹை-டெக் க்ரைம் திரில்லராய் எடுக்கக்கூடிய தகுதிகள் கொண்டவை. அவருடைய நாவல்களுக்கென ஒரு டெம்ப்ளேட் அமைந்துவிட்டது போல தெரிகிறது. நாயகனுக்கும் நாயகிக்கும் காதலில் சிக்கல்கள். இருவரும் கதைக்கருவான ப்ராஜெக்ட்டில் உள்ள புதிரை அவிழ்க்க பங்கெடுத்துக் கொள்கிறார்கள். கதையினூடே இவர்கள் காதல் கதையும் வந்து போகிறது. இறுதியில் எல்லாம் முடிந்து சுபம். 

சுதாகரின் முந்தைய நாவலிலும் சுனந்தாவைப் போல ஒரு கதாபாத்திரம் கடைசி வரை கோமாவில் இருக்கும் என்று நினைக்கிறேன். உயிரியல் பரிசோதனைத் துறையில் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய மூலக்கூறையும், இருபெரும் உயிரியல் நிறுவனங்களையும் மையமாகக்கொண்டு நகர்கிறது கதை. சுதாகரின் கதைகளை கண் முன்னே கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று 7.83 Hz படிக்கும்போதே உணர்ந்தேன். அது ட.384லிலும் தொடர்கிறது. வெயிட்டான கதை, ஆனால் லைட்டாக சொல்லியிருக்க வேண்டும்.

கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் செல்கிற வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது நள்ளி மல்க்கம்மாள் கோவில். இதனை குறிப்பிட்டு எழுதுவதற்கு மல்க்கம்மாளின் சுவாரஸ்ய ஸ்தல வரலாறு ஒரு காரணம். வெள்ளையர் காலத்தில் நள்ளியில் ஒரு வெற்றிலை வணிகர் இருந்தார். தன் பொதிமாடுகளுடன் சாத்தூர் அருகே உள்ள ஆவுடையார்புரம் சென்று வெற்றிலை வாங்கி வருவது அவருடைய வழக்கம். ஒருமுறை அப்படிச் சென்றபோது நிறைமாத கர்ப்பவதியான ஒரு இஸ்லாமியப் பெண்ணை சந்திக்க நேர்கிறது. அந்த பெண்ணின் பெயர் மலுக்கம்மா. தன் கணவரையும், பெற்றோர்களையும் எதிரிகள் கொன்றுவிட்டதால், ஆதரவில்லாமல் இருப்பதாகவும், தனக்கு அடைக்கலம் தரச்சொல்லியும் வணிகரிடம் கேட்கிறார் மலுக்கம்மாள். இரக்கப்பட்டு தன்னுடைய பொதிமாடுகளுள் ஒன்றில் மலுக்கம்மாளை அமர்த்தி நள்ளிக்கு அழைத்து வருகிறார் அந்த வணிகர். 

மூலம்: malukkamma.blogspot.in
அக்கால வழக்கத்தின்படி, பேறு காலத்திற்கான பிரத்யேக குடிசையமைத்து மலுக்கம்மாளை குடியிருக்க வைத்தார் அந்த வணிகர். சில தினங்களில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துவிட்டு இறந்து போனார் மலுக்கம்மாள். அவர் இறப்பதற்கு முன் அவருடைய மகனை வளர்க்கும் பொறுப்பை அந்த வணிகரிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார். வருடங்கள் உருண்டோடின. வளர்ந்த மலுக்கம்மாளின் மகனுக்கு தன்னுடைய மகளையே மணமுடித்து வைத்தார் வணிகர். அந்த இணைக்கு ஏழு மகன்கள் பிறந்தனர். பல்கிப் பெருகிய இவர்களுடைய வழித்தோன்றல்கள் தற்போது மலுக்கம்மாளையும் அந்த வணிகரை கருப்பசாமியாகவும் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.

கோலிவுட் சரிவர பயன்படுத்தாமல் விட்ட திறமைகளில் ஒன்று ப்ரியா சுப்ரமணியனின் குரல். ஒருமாதிரி நம்மை மயக்கத்தில் ஆழ்த்தும் வல்லமை கொண்டவர் ப்ரியா. பொதிகை காலத்தில் இருந்து நான் ப்ரியாவை கவனித்து வருகிறேன். 

அப்போது ஒரு இசைக்குழு பங்கேற்கும் நிகழ்ச்சி (பெயர் துள்ளாத மனமும் துள்ளும் ?). முதல்முறையாக அதில்தான் ப்ரியாவை கண்டேன் / கேட்டேன். அவர் பாடும்போது எனக்கு டி.ஆர்.ராஜகுமாரி நினைவுக்கு வரும். சொக்க வைக்கும் குரல், டி,ஆர்.ரா.வைப் போலவே சொக்க வைக்கும் கண்கள். அதன் பிறகு ஜெயா தொலைக்காட்சியில் சொக்குதே மனம் என்ற நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்து இவர் சினிமாவில் பாடிய முதல் பாடல் பரமசிவன் படத்தில் இடம்பெற்ற ‘ஆசை தோசை...’. இவருடைய முதல் பாடல் ஒரு தரைக்குத்து பாடலாக அமைந்தது ஒரு துரதிர்ஷ்டம். அடுத்து பெரியார் படத்தில் ‘இடை தழுவிக்கொள்ள...’ பாடினார். (இதன் காணொளி இணையத்தில் கிடைக்காதது பெரும்சோகம்). இந்தப்பாடலும் மக்கள் பார்க்க விரும்பாத ஒரு படத்தில் போய் சிக்கிக்கொண்டது. (இரு பாடல்களிலும் நடித்தவர் ரகஸ்யா என்பது ஒத்திசைவு). கோ படத்தில் இடம்பெற்ற ‘அகநக...’ பாடலில் இடையே வரும் தெலுங்கு பிட்டை பாடியவர் ப்ரியா தான். சமீபத்தில் என்னை அறிந்தால் படத்தில் மாயா பஸார் பாடலின் ஒரு பகுதியை பாடியிருக்கிறார். தற்போது ப்ரியாவுக்கு ஒரு நாற்பது வயதிருக்கலாம். பதினைந்து வருடங்களுக்கு முன்பே சினிமாவில் கோலோச்சியிருக்க வேண்டியவர் ப்ரியா. இப்போதும் தமிழ் சினிமா இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் மனது வைத்தால் ப்ரியாவை கவனிக்கலாம்.

கொஞ்ச நாட்களுக்கு முன் மீனாவைப் பற்றி எழுதியிருந்தேன். மீனாவைப் போன்ற இன்னொரு மேஜிக் தேவயானி. முதலில் கிளாமராக நடிக்கும் எண்ணத்தில் சினிமாவுக்கு வந்தவர் தேவயானி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காலப்போக்கில் காதல் கோட்டை, சூர்ய வம்சம் போன்ற அவரது படங்கள் வெற்றி பெற்று அந்த தன்மையை மாற்றியிருக்கக்கூடும். கதாநாயகிகளை பொறுத்தவரையில் இம்மாதிரி அரிதான ஆட்களை இனம் காணும் சேவையை நீண்டகாலமாக செய்து வருகிறார் கமல்ஹாசன். கமல் இல்லாவிட்டால் வசுந்தரா தாஸ், அபிராமி போன்ற நடிகைகள் எல்லாம் நமக்கு கிடைக்காமலே போயிருப்பார்கள். தெனாலியில் இடம்பெற்ற அத்தினி சித்தினி பாடலை கவனியுங்கள். 

குறிப்பாக தேவயானி, ஜோதிகா இருவரும் தாவணியில் வரும் பகுதி. இதைப்பார்த்த பல அறிஞர்கள் ஜோதிகாவை விட தேவயானிக்கு தான் கிளாமர் அதிகம் என ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 March 2017

மசினகுடி – தொடக்கம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மசினகுடி – கொஞ்சமாக சூறையாடப்பட்ட வனப்பகுதி ! ஊட்டியை மலைகளின் அரசி என்பார்கள். மசினகுடி அரசியின் தங்கை. தமிழக – கர்நாடக – கேரள எல்லைப்பகுதியில் தமிழகத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது மசினகுடி. இயற்கை, காடு, விலங்குகள் (குறிப்பாக யானை) – இவையெல்லாம் மசினகுடியின் சிறப்பம்சங்கள். சென்னையிலிருந்து தோராயமாக 600 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது மசினகுடி.

கட்டுரையின் உள்ளே செல்வதற்கு முன் என்னுடன் பயணித்த, பயணிக்கப் போகிற, என் தளபதிகள் இருவரை அறிமுகப்படுத்திவிடுகிறேன்.

ஜெய்ரமேஷ். மஹேந்திரா மோஜோவின் உரிமையாளர். பைக் ஓட்டுவதில் பேரார்வம் கொண்டவர். இந்த ஆண்டின் இறுதிக்குள் ‘அயர்ன் பட்’ எனப்படும் 24 மணிநேரத்தில் ஆயிரம் மைல்கள் பைக்கோட்டும் சாகஸத்தை நிகழ்த்திவிடும் முனைப்பில் இருக்கிறார்.

பிரகாஷ். யமஹா R15யின் உரிமையாளர். ஒப்பீட்டளவில் பைக் ஆர்வம் இல்லையென்றால் கூட சளைக்காமால் முன்னூறு சிசி மோஜோவுடன் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டக்கூடியவர். மாரத்தான், சைக்லிங், என பிற சாகசங்களில் அதிக ஈடுபாடுடையவர்.

குடியரசு தினத்திற்கு மறுநாள். முந்தைய பயணங்களை விட தொலைவு அதிகம் என்பதால் விடியும் வரை காத்திராமல் நள்ளிரவே கிளம்பிவிடலாம் என்று திட்டம். தயாராகி வெளியே வந்தபோது இரண்டு சாகசக்காரர்களும் R15யின் பெட்ரோல் டேங்கின் உள்ளே தலையை விட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள். பெட்ரோல் டேங்க் சாவித்துவாரத்தில் ஏதோ கோளாறு, திறக்க முடியவில்லை. மாற்றுச்சாவியையும் முயன்று பார்த்தாயிற்று. பெட்ரோல் இல்லாமல் ட்ரிப் எப்படி ? ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் போராடியும் பலனில்லை. இருக்கிற பெட்ரோலில் இருநூறு கி.மீ. வரை ஓடும் என்றார் பிரகாஷ். சரி, அப்படியே உருட்டிக்கொண்டு போவோம். போகிற வழியில் ஏதாவது நெடுஞ்சாலை ஒர்க்ஷாப் கிடைக்கும். அங்கே சரி செய்துக்கொள்ளலாம் என்று ஏதோவொரு குருட்டு நம்பிக்கையில் கிளம்பினோம். பயணத்தின் துவக்கத்தில் இருக்கும் எந்த உற்சாகமும் இல்லை. வழியில் உள்ள கடைகளை எல்லாம் கழுகாக நோட்டமிட்டு, பஞ்சர் கடையில் தூங்கிக்கொண்டிருந்த ஹிந்திவாலாவை எழுப்பி கலவரப்படுத்தி, பெட்ரோல் பங்க் அண்ணாக்களிடமெல்லாம் ஆலோசனை கேட்டு எதுவும் பலனளிக்கவில்லை. 

அதிகாலை மூன்றரை மணி. மெதுவாக ஸ்ரீபெரும்புதூர் தாண்டியிருந்தோம். திட்டமிட்டபடி பயணம் தொடங்கியிருந்தால் எங்கள் மனநிலையே வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும். சாவித்துவார சிக்கலின் காரணமாக தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது. அதிகபட்சம் ஆம்பூர் வரை செல்ல முடியும். பேசாமல் எங்கேயாவது ரூம் போட்டு தூங்கிவிட்டு, காலையில் நிதானமாக எழுந்து பயணத்தை தொடங்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். எதுவுமே வேலைக்காகவில்லை என்றால் ப்ளானை ஏற்காடுக்கு சுருக்கிக்கொள்ளலாம் என்று மனதிற்குள் ஒரு ரகசியத்திட்டம் போட்டு அதனை ஆறுதல் படுத்தி வைத்திருந்தேன். ஸ்ரீபெரும்புதூர் தாண்டி ஒரு பெரிய பெட்ரோல் பங்க். அங்கே பணிபுரிபவர்களிடம் கேட்டுப் பார்த்தோம். வழக்கம் போல பலனில்லை. வெறுப்புடன் பெட்ரோல் பங்க் வாயிலில் நின்று அடுத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்டிருந்தோம். கடுப்பில் இருந்த பிரகாஷ் சாவியை துவாரத்தில் விட்டு கோபமாக முறுக்கியிருக்கிறார். வெளியே எடுக்கும்போது சாவி மிகவும் பலவீனமாக இருந்தது. கை பட்டதும் பாதி சாவி உடைந்து கீழே விழுந்துவிட்டது. தூக்கிப் போடப்போன மீதிச்சாவியை சும்மா போட்டுப் பார்க்கலாம் என்று முயற்சி செய்ய, க்ளிக் !

ஸ்ரீபெரும்புதூர் பெட்ரோல் பங்க் வாசலில்...
பயணம் தொடங்கியது. ஆற்காடு, ஆம்பூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரை அணைத்தபடி கடந்து, மண்டியா, மைசூரு தாண்டி, மாலை மூன்று மணிக்கு குண்டுலுபேட்டை செக் போஸ்ட் வந்து சேர்ந்தோம். கடைசி ஸ்ட்ரெச் ! முப்பது கிலோ மீட்டரில் மசினகுடி. இடையில் பந்திப்பூர் வனப்பகுதி. 

கடைசி நேர பயணத்திட்ட மாற்றம், சாவித்துவார சர்ச்சை எல்லாம் தந்த மன உளைச்சலில் மசினகுடி பயணத்தைப் பற்றி மட்டும் எழுதவே கூடாது என்று நினைத்திருந்தேன். பந்திப்பூர் வனத்தில் கரடி ஒன்றைக் காணும் வரை, சிகூர் அருவி மற்றும் மோயர் பள்ளத்தாக்கின் பிரம்மாண்டத்தை காணும் வரை...

அடுத்த பகுதி: பந்திப்பூர் வனச்சாலை

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 March 2017

பிரபா ஒயின்ஷாப் – 06032017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஆண்ட்ரியா தமிழில் பாடிய முதல் பாடல் எது தெரியுமா ? விடை இறுதியில்.

கடந்த திங்கள் எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாள். ரொம்ப சென்டிமென்ட் இல்லையென்றால் கூட ஏதோ ஒரு புத்தகத்திற்கு பதிலாக அவருடையதை எடுக்கலாமே என்று நைலான் கயிறு படித்தேன். அவருடைய முதல் நாவல். முதல் என்பதை நம்ப முடியவில்லை. பம்பாய் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கிருஷ்ணன் கொல்லப்படுகிறான். பேரலலாக சுனந்தா எனும் இளம்பெண்ணின் டைரிக்குறிப்புகள் வருகின்றன. இறுதியில் ஒரு புள்ளியில் இரண்டும் இணைந்து கதையின் முடிவை நோக்கிச் செல்கின்றன. கணேஷ் மட்டும் வரும் இந்த நாவலில் கணேஷும் கொஞ்சம் வசந்த் போல குறும்பு செய்கிறார், பெண்களிடம் வழிகிறார். ப்ரியா பார்த்தபிறகு கணேஷை படிக்கும்போதெல்லாம் பழைய ரஜினி நினைவுக்கு வருகிறார். ஒரு சமயம் கணேஷ் கதாபாத்திரமே ரஜினியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருக்குமோ என்று கூட அபத்தமாக தோன்றியது. கணேஷ் அறிமுகமானது 1968. ரஜினி 1975. கணேஷ் ரஜினியை நினைவூட்டும் அதே சமயத்தில் வசந்த் ‘திடீர்’ கன்னையாவை நினைவூட்டாதது ஆறுதலாக இருக்கிறது.

நைலான் கயிறை தொடர்ந்து சுஜாதாவின் இரண்டாவது நாவலான அனிதா இளம் மனைவி படித்தேன். ஒரு தொழிலதிபர் கொல்லப்படுகிறார். அவருடைய இருபத்தி எட்டு வயது இளம் மனைவியையும், மனைவியை விட ஆறு வயது குறைவான மகளையும் மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் துப்பறியும் நாவல். இதிலும் கணேஷ் மட்டும் தனியாக வருகிறார். அனிதா சினிமாவாகவும் வந்திருக்கிறாள் என்று தெரிந்து அதையும் பார்க்கத் துவங்கினேன். படத்தின் பெயர் 'இது எப்படி இருக்கு'. கணேஷாக ஜெய்ஷங்கர் (இந்தியன் ஜேம்ஸ்பாண்ட்), அனிதாவாக ஒய்.விஜயா, தொழிலதிபரின் மகளாக ஸ்ரீதேவி. ஏதோ ஒரு ஆர்வத்தில் பார்க்கத் துவங்கினாலும் கொஞ்ச நேரத்திலேயே போரடிக்க துவங்கிவிட்டது. சுஜாதா ஸ்டைலா, கெத்தா சொன்ன பல விஷயங்களை சுரத்தே இல்லாமல் தட்டையாக கையாண்டிருக்கிறார்கள். உதாரணமாக, நாவலில் பாஸ்கர் என்கிற கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அவன் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கிறான். அது குறித்த விவரணைகள் வருகிறது. விவரனையின் முடிவில் பாஸ்கர் எடுத்த காரியத்தை அளவாக, கச்சிதமாக முடிப்பான். அதிகம் பேசமாட்டான் என்ற தகவல் நமக்கு சொல்லப்படுகிறது. இதுவே சினிமாவில் அவன் அப்போது சீட்டு விளையாடிக்கொண்டிருந்தான் என்று மட்டும் தட்டையாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. ஜெய்ஷங்கர் சோதிக்கிறார். ஸ்ரீதேவி சோதிக்கிறார். இருவரும் காதல் வேறு செய்து சோதிக்கிறார்கள். ஆறுதலான வேடம் ஒய்.விஜயா. நிஜமாகவே அப்போது இளமையாக இருந்திருக்கிறார். ஆனாலும் ஸ்ரீதேவி அந்த வேடத்தில் நடித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. இது எப்படி இருக்கு படத்தோடு ஒப்பிடும்போது ப்ரியா ஆயிரம் மடங்கு பெட்டர். 

மூன்று வாரங்களுக்கு முன் பண்பலை பற்றி எழுதியதில் சுசித்ரா என்ன ஆனார் என்று கேட்டிருந்தேன். இப்போது ட்விட்டர் போனால் ஒரே சுசித்’ராவாக’ இருக்கிறது. சுசித்ரா மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் ஒரு சின்ன நெருடலை ஏற்படுத்துகிறது. அதே சமயம் பல மாமாங்கமாக ட்விட்டர் பக்கம் போகாதவர்கள் எல்லாம் சுசித்ரா அக்கெளண்டை தேடி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் (என்னையும் சேர்த்து ஹி ஹி..). இப்போது ட்விட்டரில் சுச்சி கணக்கை கண்டுபிடிப்பது என்பது திருநெல்வேலி பஸ் ஸ்டாப்பில் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸை தேடுவது போலிருக்கிறது. எல்லா கணக்கிலும் லீலை, லீலை என்று ஏதேதோ பிட்டுக்களை அவரவர் விருப்பத்திற்கு தகுந்தாற்போல பெயர் சூட்டி வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். In fact, சுச்சி வெளியிட்டுள்ளவற்றில் அனுயா, சஞ்சிதா தவிர்த்து மற்ற எதுவும் ஸ்கேண்டல்களே கிடையாது. கட்டிப்பிடிப்பது எல்லாம் மேல்தட்டு ஆட்கள் மத்தியில் சாதாரணமாகிவிட்டது. ஒருவகையில் சுசித்ரா வெளியிடும் எப்பசாப்பையான ஸ்கேண்டல்களைக் கூட பொறுத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இதுதான் சாக்கு என்று அடுத்தவர் படுக்கையறையை அவருடைய அனுமதி இல்லாமல் எட்டிப்பார்ப்பது என்று துவங்கி ஒழுக்க மதிப்பீடுகள், தனிமனித உரிமை மீறல், போன்ற வார்த்தைகளைப் போட்டு பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். இவர்கள் அந்த ஸ்கேண்டல்களை வக்கணையாக பார்த்துவிட்டு பிறகு இப்படி எழுதுகிறார்கள் என்பதுதான் கொடுமை. இதையெல்லாம் பார்க்கும்போது எங்களுக்கு பிட்டே வாணாம்டா தயவு செய்து எங்களுக்கு மாரல் சயின்ஸ் கிளாஸ் எடுக்காதீங்கடா என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

சுசித்ராவைப் போலவே இப்போது என்ன ஆனார் என்று யோசிக்கும் இன்னொரு ஆதர்ஸ பாடகி வசுந்தராதாஸ். கோலியுட் முதலில் பயன்படுத்தத் தவறியது வசுந்தராவின் இளமையை. ஒருமாதிரி தொப்பை போட்டபிறகு தான் அவரை ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கிறார்கள். அதுவும் கலைஞானிதான் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார். இரண்டாவது பயன்படுத்தத் தவறியது அவருடைய குரலை. இரண்டாவது கொஞ்சம் பரவாயில்லை. தமிழில் ஒரு பத்து, பதினைந்து பாடல்கள் பாடியிருப்பார் என்று நினைக்கிறேன். வசுந்தராவைப் பற்றி சொன்ன விஷயங்கள் (என்ன ஆனார் என்பதைத் தவிர) பொருந்தக்கூடிய இன்னொரு பாடகி & நடிகை ஆண்ட்ரியா. அந்நியனில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா தான் ஆண்ட்ரியா பாடிய முதல் பாடல். இந்தப்பாடலை வசுந்தரா தாஸும் சேர்ந்து பாடியிருக்கிறார் என்பது இதன் சிறப்பு. ஆண்ட்ரியா குரலையும், வசுந்தராவின் குரலையும் ஒருசேர கேட்பது என்பது த்ரீஸம் ஆஸம். கொஞ்சம் ஆர்வமுள்ளவர்கள் இந்தப்பாடலில் இந்த இரு தேவதைகளின் குரல்களையும் பிரித்தறியுங்கள்.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment