28 November 2012

பேருந்து தோழி

அன்புள்ள வலைப்பூவிற்கு,


உனக்கான நிறுத்தத்தை கடந்தபிறகு
பேருந்து ஊர்ந்து செல்கிறது

நீ அமர்ந்த ஜன்னலோர இருக்கைக்கு
ஜன்னி வந்துவிட்டதாம் #ஐஸ்

மழை நாட்களில் வேண்டுமென்றே
குடையை மறக்கிறேன்

திருடி ஜாக்கிரதை
என்றுதானே எழுதியிருக்க வேண்டும்


பிடித்திருந்தது - நீ என் கை
பிடித்திருந்தது

வேகத்தடைகளில் விரதம் கலைகிறது

காலேஜ் ஸ்டூடன்ட்ஸின் டப்பாங்குத்து கூட
உன்னிருப்பில் கண்ணே கலைமானே

உன்னெதிரில் வாய்தவறி வந்த கெட்டவார்த்தையை
அசிங்க அசிங்கமாக திட்டினேன்


அனுஷ்கா அப்படியொன்றும் அழகில்லை

அந்த லாங் சைஸ் நோட்டுக்கு மட்டும்
மன்னிப்பே கிடையாது

குழந்தையை ரசித்துக்கொண்டிருந்த
குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தேன்

ஸ்டெர்லிங் ரோடும் வண்ணாரப்பேட்டையும்
ஒரு ஆயிரம் மைல் தொலைவில் இருந்திருக்கலாம்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 November 2012

துப்பாக்கி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சமீப காலங்களில் வெளிவந்த முகமூடி, பில்லா 2, தாண்டவம், சகுனி, மாற்றான் வகையறாக்களை நினைத்தால் திரையரங்கிற்கு செல்லவே திகிலடிக்கிறது. அந்த வரிசையில் துப்பாக்கி நம்மை மிரட்டினாலும் காஜலுக்காக நமது சமூக கடமையை நிறைவேற்றியே ஆகவேண்டிய சூழ்நிலை. அதிக எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. ஏதோ காஜல் நான்கு பாடல்களில் தோன்றினால் சரி என்றே சென்றேன்.


ராணுவ அதிகாரியாக வித்தியாச விஜய். குத்து வசனங்கள் கிடையாது, ஒலிம்பிக் சாகசங்கள் இல்லை, பாடல்காட்சிகளில் எப்போதுமிருக்கும் நடன துள்ளலும் குறைவு. அறிமுகக்காட்சி, பாடல் தவிர்த்து விஜய் முழுக்க முழுக்க இயக்குனரின் கதாநாயகனாக மாறியிருக்கிறார்.

காஜல் - அகர்வால் ஸ்வீட்ஸ் காஜூ கத்லி. காஜல் மணப்பெண்ணாக அறிமுகமாகும் காட்சியிலேயே ப்ளாக்கில் கொள்ளை விலை கொடுத்து டிக்கெட் வாங்கிய கவலை நம்மை நீங்கிச்செல்கிறது. பொசுக்கென்று குத்துச்சண்டை வீராங்கனையாக மாறி இளைஞர்களின் இதயத்தை மணல்மூட்டையாக்கி குத்து குத்தென்று குத்துகிறார். அண்டார்டிகா பாடல்காட்சியில் ரக்பி பந்தை தூக்கிக்கொண்டு காஜல் ஓடிவரும்போது ரசிகர்களின் நெஞ்சங்கள் மகிழ்ச்சியில் பூத்து குலுங்குகின்றன. இரண்டாம் பாதியில், காஜல் கண்கலங்கும்போது, “உனக்கு நான் இருக்குறேன் தாயி... அழாதடா தங்கம்...”ன்னு கட்டியணைத்து சமாதானம் செய்யத்தோன்றுகிறது. சின்மயியுடைய பின்னணிக்குரல் சலிப்பு.

பில்லா வில்லன் வித்யுத் ஜம்வால் நடித்திருக்கிறார். சத்யனுடைய மாடுலேஷன் கடுப்படிக்கிறது. அரிதாக நல்ல ஜோக்ஸ் எட்டிப்பார்க்கிறது. ஜெயராம் கேரக்டரை பார்க்கும்போது ஏனோ ஏகன் படம் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.


தீப்தி, சஞ்சனாவை பார்க்கும்போது விஜய்யை உரிமையோடு ‘மச்சான்' என்றழைக்க தோன்றுகிறது. ஐட்டத்தை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று யோசித்தால், அடடே அக்ஷரா கவுடா...!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கூகுள் கூகுள் குதூகலிக்கிறது. பாடல் தொடங்கியதிலிருந்து முடியும்வரை திரையரங்கமே உற்சாக கூப்பாடு போடுகிறது. அலேக்கா, அண்டார்டிகா பாடல்கள் காஜலின் விஷுவல் ட்ரீட். பின்னணி இசை ஹாரிஸின் முந்தய படங்களோடு ஒப்பிடும்போது தேவலை.

சிற்சில குறைகள் தவிர்த்து வெகுஜன மக்கள் விரும்பும் வகையில், திரையரங்குகளில் நிஜமாகவே வெற்றிநடை போடும் வகையில் வெடித்திருக்கிறது துப்பாக்கி...!

குறைகளில் ரெண்டு சாம்பிள்:
- நான்கைந்து தீவிரவாதிகள் ஏ.கே 47 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு டுப்பு டுப்புன்னு சுடுறாங்க. ஆனா, விஜய் ஒரே ஒரு பிஸ்டலை வச்சே அம்புட்டு பேரையும் காலி பண்றாரு...!
- ஹீரோ ராணுவ வீரருன்னா காஷ்மீர்ல இருந்து வரும்போது கூட சீருடையிலேயே வருவாங்கன்னு இன்னமும் நம்மாளுகள நம்ப வைக்கிறீங்களே... நீங்க திறமைசாலிகளய்யா...!


உச்சக்கட்ட காட்சியில் என்ன நடக்குமென்று அவதானிக்க முடிந்தபிறகும் நீட்டி முழக்கி மொக்கை போடாமல் இருந்திருக்கலாம். படத்தின் நீளம் கருதி, ஜெயராம் காட்சிகளையும், க்ளைமாக்ஸில் சிறுபகுதியையும் சில நாட்களில் கத்தரிக்கலாம். அது ரிப்பீட் ஆடியன்ஸை வரவழைக்கும் யுக்தியாகவும் இருக்கலாம்.

துப்பாக்கி - ஒரு பக்கா கமர்ஷியல் / மசாலா / டைம்பாஸ் படம் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கிறது. மற்றபடி கில்லியை சாப்ட்ருச்சு, விஜய்'ஸ் பெஸ்ட் ஆக்குசன் மூவி எவர் என்றெல்லாம் அடித்து விடுவது டூ மச்...!

விஜய்யின் ஃபேமிலி, காஜல் காட்சிகளை அதிகப்படுத்திவிட்டு, ஆக்குசனை குறைத்திருந்தால் படம் கில்லியா இருக்கிறதென பாராட்டியிருக்கலாம்.



என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 November 2012

மேற்கிந்திய தீவுகளில் தீபாவளி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் மேலோங்கியிருந்த சமயம், மேற்கிந்திய தீவுகளின் கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய இந்தியர்களையும் சீனர்களையும்
கொத்தடிமைகளாக ஏற்றுமதி செய்தது ஆங்கிலேய அரசு. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். ஆரம்பத்தில் ஐந்தாண்டு, பத்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் சென்ற இந்தியர்கள் அங்கேயே தொடர்ந்து வாழ வேண்டிய சூழல். விளைவு - தற்போது ட்ரினிடாட் & டொபாகோ தீவுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் நாற்பது சதவிகிதத்திற்கு மேல் இந்தியர்கள், அவர்களில் பாதி ஹிந்துக்கள். அண்டை நாடுகளில் ஒன்றான கயானாவின் நிலையும் அதுவே.



தீபாவளி, தீப ஒளி, தீவாளி, திவாளி, டிவாலி, விடுமுறை தினம் - என்று பலவகையில் இந்தியாவில் உச்சரிக்கபட்டாலும் மேற்கிந்திய தீவுகளில் தீவாளி / திவாளி என்றே சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்பெல்லிங் மட்டும் DIVALI...! கயானா, டி & டி நாடுகளில் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தீபாவளி தேசிய விடுமுறை தினமாக இருந்து வருகிறது.

மேற்கிந்திய தீவுகளில் தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது என்று பார்ப்போம். தீபாவளிக்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே மக்கள் தத்தம் வீடுகளை சுத்தப்படுத்தி, புது வண்ணங்களை பூசி லக்ஷ்மி பூஜைக்கு தயார் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். நாட்கள் நெருங்கியதும் தோரணங்கள், ரங்கோலி கோலங்கள் அன்று கலைநயத்தோடு அழகுபடுத்துகின்றனர்.

தீபாவளியன்று அதிகாலை எண்ணைக்குளியல் போட்டுவிட்டு, கோழிக்கறி குழம்பில் இட்லியோ தோசையோ பெனஞ்சு அடிப்பது தான் தமிழ்நாட்டு வழக்கம். ஆனால் மேற்கிந்திய தீவு மக்கள் வட இந்திய பாணியில் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்று அவர்களின் உணவுமுறையில் இருந்தே புரிந்துக்கொள்ள முடிகிறது. தீபாவளியன்று மே.தீ வாழ் இந்தியர்கள் அசைவத்தை தொடுவதே இல்லை. சொல்லப்போனால் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே நோன்பிருக்க ஆரம்பித்து விடுகின்றனர். ரொட்டி, பட்டாணி - உருளைக்கிழங்கு, பருப்பு சாதம், பூசணிக்காய் என்று இவர்களின் தீபாவளி மெனு உப்பு சப்பில்லாமல் இருக்கிறது. குளோப் ஜாமூன், ஜிலேபி, கச்சோரி என்று பலகாரங்கள் கூட வட இந்திய கலாசாரத்தை பறைசாற்றுகின்றன.



தீபாவளியின் பின்பகுதியில் ராமர், கிருஷ்ணர், நரகாசுரன் என்று ஏராளமான புராணக்கதைகள் இருப்பினும் மே.தீ மக்கள் பெரும்பாலும் தீபாவளியன்று பொருளாதார கடவுளான லக்ஷ்மியையே வணங்குகின்றனர். அங்கிருக்கும் ஹிந்துக்கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதன்பிறகு முன்பத்தியில் குறிப்பிட்ட உணவுவகைகளோடு தங்களுடைய நோன்பை நிறைவு செய்கின்றனர். மாலை ஐந்து மணிக்கு மேல் வீடுகளில், தெருக்களில், கதவோரங்களில், படிக்கட்டுகளில் என தீபங்களை வைத்து நகரெங்கும் ஒளிமயமாக்குகின்றனர். குறிப்பாக மூங்கில்களை வளைத்து செய்யப்படும் விளக்குகள் மே.தீவுகளில் பிரசித்தி.


மேற்கு இந்திய தீவுகளில் கார்னிவல், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு அடுத்தப்படியாக நிற்பது தீபாவளி தான். சென்னையில் தீவுத்திடல் இருப்பது போல மேற்கிந்திய தீவுகளில் சகுவானாஸ் என்றொரு இடம் இருக்கிறது. இங்கே வருடாவருடம் தீபாவளிக்கு முந்தய இரு வாரங்களில் “தீபாவளி நகர்” என்ற பெயரில் திருவிழா நடக்கிறது. கலை நிகழ்ச்சிகள், இந்திய புராணக்கதைகளை ஒத்த நாடகங்கள், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், பொருட்கண்காட்சி என்று களேபரமாகி தீபாவளிக்கு முந்தய நாள் இரவோடு நிறைவுபெறுகிறது. 


ரம்ஜான் சமயத்தில் நம்மூர் அரசியல்வாதிகள் குல்லா அணிந்து இப்தார் கஞ்சியடிக்கும் ஸ்டில்களை ஃப்ளெக்ஸ் பேனர்களில் பார்த்திருப்போம். அதே போல மே.தீ. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் தீபாவளி நகர் திருவிழாவில் மக்களோடு மக்களாக பிணைந்து, இந்திய பாரம்பரிய உடை, அதாவது குர்தா பைஜாமா அணிந்து நம்மவர்களை மகிழ்விக்கிறார்களாம். 


தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக நடைபெறும் “மிஸ் தீவாளி நகர்” அழகிப்போட்டி தீபாவளி கொண்டாட்டங்களின் ஹைலைட். இந்திய - ஆப்பிரிக்க கூட்டுமுயற்சியில் படைக்கப்பட்ட அழகிகள் சேலை தரிசனம் தருவது கண்கொள்ளா காட்சி. இதே பாணி அழகிப்போட்டி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலும் நடைபெறுவது கூடுதல் செய்தி. மிஸ்டர் தீவாளி நகர் போட்டியும் நடைபெறுகிறது என்ற செய்தியை நமக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன்.

கார்னிவல் மற்றும் தீபாவளியை முன்னிறுத்தி T&T, கயானா போன்ற நாடுகள் மிகப்பெரிய அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதாக சொல்லப்படுகிறது. 



தீபாவளி திருநாளில் பட்டாசு வெடிக்கும் கலாசாரம் மேற்கிந்திய தீவுகளில் இருப்பதாக தரவுகள் எதுவும் காணப்படவில்லை. எனினும் பொதுவாக மேற்கிந்திய தீவுகளில் விளையாடப்படும் சாகச வெடி விளையாட்டை காணொளியில் பார்க்கலாம்...!




படங்கள் & தகவல்கள் www.triniview.com, விக்கிபீடியா மற்றும் பல தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டது.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 November 2012

ஆரோகணம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஏதோ பைபோலார் டிஸார்டர் பற்றிய படமாம் என்று சொன்னபோதே எனக்குள் எதிர்பார்ப்பு எகிறியது. டைட்டில் தான் என்ன எழவென்று புரியாமல் உறுத்தியது. ஆனால் நம் அனைவருக்கும் விருப்பமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆண்ட்டி இயக்கியிருக்கும் முதல் சினிமா என்பதால் பார்க்க முடிவு செய்திருந்தேன். சிலபல காரணங்களால் இப்போது தான் பார்க்க முடிந்தது. தாமதமாக பார்த்ததாலோ, அயர்ச்சியின் காரணமாகவோ ஆரம்பத்தில் இருந்த எதிர்பார்ப்பு குறைந்திருந்தது.



பிரதான வேடத்தில் விஜி, பழைய நடிகை சரிதாவின் தங்கை. இவரை இதற்கு முன்பு விஜய் டிவி நிகழ்ச்சியொன்றில் பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே அவரா இது, அவரா இது என்று பலமுறை சரிபார்த்துக்கொள்ளும்படி தோற்ற மாற்றம். நிஜத்தில் கூட விஜி படிக்காத ஏழை காய்கறி வியாபாரியாக இருப்பாரோ என்று சந்தேகப்பட தோன்றுகிறது. தப்பாட்ட குத்தாட்டத்தில் விஜி பாறைகள்...!

நாயகிக்கு அடுத்தாற்போல நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் இயக்குனர் மாரிமுத்து. (பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் படத்தின் இயக்குனராம்). விஜியின் மகளாக நடித்திருக்கும் புதுமுகம் பழைய நடிகை மாதவியை நினைவூட்டுகிறார். உமா பத்மநாபன், ராஜி (எந்திரனில் சனா தாயார்), ரித்திகா ஸ்ரீநிவாஸ் (வழக்கு எண் 18/9) என்று தன் சகவயது தோழிகளுக்கு வாய்ப்பு கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் இயக்குனர். ராஜியும் உமாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் சாமான்ய ரசிகனுடைய கடுப்பை கிளப்புகின்றன. ஜே.பியும் கவிதாலயா கிருஷ்ணனும் லேசான புன்முறுவலை வரவழைக்க முயற்சிக்கிறார்கள்.

முதல் பாதி முழுக்க தாயை காணாமல் ஏங்கும் குழந்தைகளின் பரிதவிப்பு நமக்குள் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இரண்டாம் பாதியில் சட்டென கதை வேறேதோ பாதையில் பயணிக்க முற்பட்டு நாய் பெற்ற தெங்கம்பழத்தை நினைவூட்டியது. இறுதியில் சொல்ல வந்த கரு(ம)த்தை படம் பார்ப்பவர்கள் எளிதில் புரிந்துக்கொள்ள முடியாதபடி சொல்லி முடித்திருக்கிறார்கள்.

கே’யின் இசையில் தப்பாட்ட பாடல் கொலவெறி மாதிரி மிகப்பெரிய சென்சேஷனை ஏற்படுத்தியிருக்க வேண்டியது. சொல்லப்போனால் படத்தின் மையக்கருவே அந்த பாடல் தான். வழக்கமாக படம் நிறைவடைந்ததும் திரையரங்கில் வெடிகுண்டு வைத்திருக்கிறார்களாம் என்ற நினைப்புடனேயே சிதறும் தமிழ் சினிமா ரசிகர்கள் இறுதியில் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட தப்பாட்ட பாடலை பொறுமையாக நின்று ரசிக்கிறார்கள்.



சராசரி ரசிகர்களை பொறுத்தமட்டிலும், “கடைசியா என்னதான்டா சொல்ல வர்றீங்க...?”, “இந்தமாதிரி ரெண்டு படம் பார்த்தா நானே மெண்டலாயிடுவேன்” போன்ற புலம்பல்களையும், இளைஞர்களின் கண்ணோட்டத்தில் படுமொக்கையான படமாகவும், கலைப்படமாகவும் வகைப்படுத்த முடியாமல் எந்த மாதிரியும் சொல்ல முடியாமல் வந்த மாதிரியே முடங்கிவிட்டது ஆரோகணம். இனி நீங்களே திரையரங்கம் சென்று ஆரோகணம் பார்க்க நினைத்தாலும் பார்ப்பது சிரமம் தான்.

மொத்தமே ஒன்றரை மணிநேரம் ஓடிய படத்திலிருந்து உருட்டி திரட்டி பார்க்கும்போது இரண்டு முக்கியமான விஷயங்களை ஆரோகணம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. முதலாவது, “உங்க இமேஜ் என்னாகும்...?” என்று அங்கலாய்க்கும் உதவியாளரிடம் “என்னடா பெரிய இமேஜ் ? இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா !” என்கிறார் அரசியல்வாதி வி.ஐ.பி. இரண்டாவது அளவுக்கு மீறி ஏற்படும் கோபமும் வைராக்கியமும் அல்லது எந்த ஒரு உணர்ச்சியும் ஆபத்தானது தான், ஆனால் அதையே பாஸிடிவ் எனர்ஜியாக மாற்றிக்கொண்டால் நீங்கதான் பாஸ்...!

ஆரோகணம் - நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனநோயாளியை தட்டிக்கொடுத்து, உங்களுக்கு ஒன்னுமில்லை பாஸ்... நீங்க நார்மலா தான் இருக்கீங்க....! என்று ஆறுதலூட்டுகிறது.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment