வணக்கம் மக்களே...
நேற்றைக்கே படத்தைப் பார்த்துவிட்டு சுடச்சுட பதிவைப் போட்டுவிட எண்ணினேன். உடன் வருவதற்கு யாரும் சிக்காததால் ஒரு நாள் தள்ளிப்போய்விட்டது. நமக்கு பரிட்சயமான தேவியிலும், ஐ ட்ரீமிலும் படம் ரிலீஸ் ஆகாததால் நம்மூர் தியேட்டரிலேயே பார்க்கலாமென்று திருவொற்றியூர் MSMக்கு சென்றிருந்தேன். மலிவான விலையிலேயே டிக்கெட் கிடைத்தது. கூட்டம் கூட அதிகமில்லை. அநோன்ரும் இங்கொன்றுமாக ஒரு ஐம்பது பேர் மட்டுமே இருந்தனர். என்ன செய்வது...? நம்மூர்க்காரங்களோட ரசனை அப்படி. இதுவே அசலாகவோ வேட்டைகாரனாகவோ இருந்திருந்தால் முண்டியடித்துக்கொண்டு வருவார்கள்.
கதைச்சுருக்கம்
படம் க்ளைமேக்ஸில் ஆரம்பித்து பிளாஷ்பேக்கில் விரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் கதை ஆரம்பிக்கிறது. மகேஷும் பாண்டியும் நெருங்கிய நண்பர்கள். பள்ளிப்பருவம் கடந்தபின்னர் குடும்ப சூழ்நிலைக்காக சென்னையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸில் (நான் அப்படித்தான் சொல்லுவேன்... செந்தில்முருகன் ஸ்டோர்ஸ் என்றெல்லாம் சொல்லமாட்டேன்) வேலைக்கு சேர்கிறார்கள். கனவுகளோடு சென்னைக்கு வந்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள், காதலிக்கிறார்கள், கம்யூனிசம் பேசுகிறார்கள். மகேஷும் அஞ்சலியும் காதலிலும் வாழ்க்கையிலும் வெற்றிப் பெற்றார்களா என்பதே இறுதிக்காட்சி. இதுபோன்ற நல்ல படங்களுக்கெல்லாம் படத்தின் முடிவு பற்றி சொல்லி உங்கள் சுவாரஸ்யத்தை குறைக்கமாட்டேன்.
படத்தின் ஆரம்பக்காட்சிகள் சில நிமிடங்கள் கிராமத்து காட்சிகள், பருத்திவீரன் போன்ற படங்களைவிட யதார்த்தமாக அமைந்திருந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் கதை சென்னை நோக்கி பயணமானது. கதை ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்த பின்னர் இப்படியெல்லாம் பயனிக்குமென நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அண்ணாச்சிகளை படத்தில் இந்தளவுக்கு கிழித்திருப்பார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. அண்ணாச்சி அறிமுகமாகும் காட்சியிலேயே அவர் எப்படிப்பட்டவர் என்று தெளிவாக உணர்த்திவிடுகிறார் இயக்குனர். கடை ஊழியர்கள் கொத்தடிமைகள் போல நடத்தபடுகின்றனர். சிறையைவிட கொடுமையான ஒரு வாழ்க்கை, பாலியல் வன்முறை செய்யும் எடுபிடி சூப்பர்வைசர் என்றெல்லாம் ரொம்பவே கண்ணீர் சிந்த வைத்துவிட்டார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் அஞ்சலியும் மகேஷும் விரும்புகிறார்கள். கடை ஊழியர்கள் காதலித்தால் என்ன நடக்குமென்பதை முன்னதாகவே ஒரு காட்சியின் மூலம் உணர்த்திவிடுகிறார்கள். இதையும் மீறி காதலில் இறங்கும் காதலர்கள் வென்றார்களா என்று திரையில் பாருங்கள். படத்தின் திரைக்கதை ஆங்காங்கே ஹைக்கூ கவிதை சொல்கிறது. உதாரணத்துக்கு ஸ்ட்ராபெர்ரி சேற்றில் விழும் காட்சியை சொல்லலாம். ரங்கநாதன் தெருவில் சிறுதொழில் செய்பவர்களது காட்சிகள் ஒவ்வொன்றும் நல்ல கருத்துக்கள்.
மகேஷ்
கல்லூரியில் நடித்த அகிலும் ஐவரும் ஒருவரல்ல என்பதை கிட்டத்தட்ட பாதிப்படம் முடிந்தபின்னரே தெரிந்துக்கொண்டேன். ஆனால் கல்லூரியில் நடித்தவரை விட நன்றாகவே நடித்திருக்கிறார். முதல் பாதியைவிட இரண்டாம் பாதியில் அதிகம் கவனத்தை ஈர்க்கிறார். காதலிக்காக ரெளத்திரம் பழகிய காட்சிகள் அனைத்தும் அற்புதம்.
அஞ்சலி
அஞ்சலி இயற்கையாகவே ரொம்ப அழகு. அதனால்தான் அவருக்கு இதுபோன்ற யதார்த்தமான கதைகள் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட கற்றது தமிழில் பார்த்தது போலவே ஒரு பாத்திரப்படைப்பு என்று வைத்துக்கொள்ளலாம். குறும்பும் அடாவடியுமாக ஆரம்பக்காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார்.
பாண்டி
ஏறத்தாழ படத்தின் நாயகன் என்றே சொல்லலாம். மகேஷின் சோகக்காட்சிகளுக்கு நடுநடுவே வந்து கலகலப்பூட்டுகிறார். இருந்தாலும் கனா காணும் காலங்களில் இவரைப் பயன்படுத்தியதைப் போல இந்த இயக்குனர் பயன்படுத்த தவறியிருக்கிறார். இரண்டாம் பாதியில் கழட்டிவிடப்பட வேண்டிய பாத்திரம் சினேகாவிடம் டச்சப் பாயாக சேர்ந்துவிட்டதாக முடித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.
மற்றும் பலர்
முன்னர் சொன்னதுபோல ரங்கநாதன் தெருவில் காட்டப்படும் சில பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்தான கருத்துக்களை சொல்லிவிட்டு நகர்கின்றன. சூப்பர்வைசர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள வெங்கடேஷ் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புது ரகவில்லன். சோபியா, செல்வராணி என்று நம்ம ஊர் அழகிகளைஎல்லாம் திரையில் பார்க்கும்போது மகிழ்வாக இருந்தது. சினேகா கெளரவ வேடத்தில், சிநேகாவாகவே வந்து செல்கிறார்.
பாடல்கள்
"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..." என்ற பாடலின் காட்சி அமைப்பும் பாடலின் வரிகளும் அற்புதம். நீண்ட நாட்கள் நிலைக்கக்கூடிய காதல் பாடல். அடுத்தபடியாக "உன் பேரை சொல்லும்..." என்ற பாடல் சிறப்பாக இருக்கிறது. மற்ற பாடல்கள் அனைத்தும் வேகத்தடையே.
RESULT
படம் காதலைவிட அதிகமாக கம்யூனிசம் பேசியது இன்ப அதிர்ச்சி. கடையில் வேலை பார்க்கும் ஒரு பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் குதித்த அந்த இடத்தை கழுவிவிட்டு எப்போதும்போல அந்த இடத்தில் கோலம் போடும் காட்சி ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது.
இந்தப்படத்தின் கதைபற்றி அண்ணாச்சிகளுக்கு முன்னதாக தெரியாமல் இருந்திருக்கலாம். தெரிந்திருந்தால் கண்டிப்பாக கேஸ் போட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு அண்ணாச்சிகளின் சர்வாதிகாரத்தையும் முதலாளித்துவத்தையும் போட்டு உடைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தைப் பார்த்த பின்னர் இத்தகைய கடைகளின் முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் ரியாக்ஷன் என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டுமென ஆர்வமாக இருக்கிறது.
இனி, ரங்கநாதன் தெருவுக்கு போகும்போதெல்லாம் அங்காடித் தெருவின் ஞாபகம் தான் வரும்.
அங்காடித் தெரு - திருப்தியான ஷாப்பிங்
ஆனால் வலியுடன்,
N R PRABHAKARAN
|