அன்புள்ள வலைப்பூவிற்கு,
இனி பார்த்த படங்களைப் பற்றி -
திரையரங்குகளில் சமீபத்திய கட்டண உயர்விற்குப் பிறகு டிக்கட் எடுக்கவே
ஒருமாதிரி குற்ற உணர்வாக இருக்கிறது. மெர்சலுக்கு தேவியில் மொத்தமாக பதினெட்டு
டிக்கட்டுகளுக்கு நான்காயிரத்து முன்னூற்றி சொச்சம் ஆனபோது அது என் பணம் இல்லை
என்றாலும் கூட சங்கடமாக இருந்தது. கட்டண உயர்விற்குப் பிறகு ஆதர்ஸ திரையரங்கான
தேவியிலிருந்து எனது திட்டங்களை சத்யம் / எஸ்கேப்பிற்கு மாற்றிக் கொள்ள
முடிவெடுத்துவிட்டேன். சில காரணங்கள். ஒன்று, தேவியில் அது பத்து ரூபாய்
டிக்கெட்டாக இருந்த சமயத்திலாவது அதன் புக்கிங்கை திடீரென அகாலவேளையில் திறந்து
துரிதமாக மூடிக்கொள்வார்கள். இப்போது குறைந்தபட்ச டிக்கட் விலை ஐம்பது. வரிகள்,
இணையக் கட்டணம், லொட்டு, லொசுக்கு எல்லாம் சேர்த்து நூறு ரூபாய்க்கு கொஞ்சம்
அதிகம் வருகிறது. ஆனாலும் ஏனோ தேவியில் அதன் புக்கிங்கை திறப்பதே கிடையாது. அதே
சமயம், முன்பு மலிவுவிலை டிக்கட்டுகளை ரகசியமாக வைத்திருந்த சத்யம் / எஸ்கேப்
தற்போது அதனை இணையத்திலும் / நேரிலும் விற்பனை செய்யத் துவங்கியிருக்கிறார்கள்.
விலை: இணையத்தில் 94, நேரில் 64.
தேவியோடு ஒப்பிடும்போது சத்யத்தில் சில தொந்தரவுகளும்
இருக்கின்றன (இவ்வகை டிக்கெட்டில் சத்யத்தில் மேயாத மானும், எஸ்கேப்பில் சோலோவும்
பார்த்தேன்).
1. இருக்கை: சத்யத்தில் தரமும், அளவும் மோசம். உங்கள் அருகில் சற்று
வாட்ட சாட்டமான ஆள் வந்தால் உங்களை ஈஷிக்கொண்டு தான் அமர வேண்டும். எஸ்கேப்பில்
வேறொரு பிரச்சனை. சீட்டில் தலை சாய்க்குமிடத்தில் புடைப்பாக ஒரு குஷன்
வைத்திருக்கிறார்கள். அது நமக்கு வசதி செய்வதற்கு பதிலாக பெரும் கழுத்து வலியை
உண்டு பண்ணுகிறது. நிச்சயமாக இது முதல் வரிசையில் அமர்ந்து பார்ப்பதால் ஏற்படும்
கழுத்து வலி அல்ல என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
2. திரை: தேவி மற்றும் தேவி பாரடைஸின் பிரம்மாண்ட திரை, தேவி கலா
மற்றும் தேவி பாலாவின் மனதிற்கு நெருக்கமான குட்டி திரை இரண்டையும் மிஸ்
செய்கிறேன். சத்யம், எஸ்கேப் இரண்டிலும் திரையின் அளவு நடுத்தர அளவில்
இருக்கின்றன.
3. அரங்கின் வாயில்: தேவியின் எல்லா அரங்குகளிலும் வாசல் பின்புறம்
அமைந்திருக்கும். அதனால் மற்ற பார்வையாளர்களின் வருகையால் நமக்கு அதிகம் தொந்தரவு ஏற்படாது.
சத்யம் / எஸ்கேப்பில் உல்டாவாக முன்னாலிருந்து ஆட்கள் வருகிறார்கள். அதுவும் படம்
துவங்கி சுமார் இருபது நிமிடங்கள் வரை எருமை மாடுகள் போல வந்துக்கொண்டே
இருக்கிறார்கள்.
4. பார்வையாளர்கள்: தேவியின் பார்வையாளர்கள் பெரும்பாலும் நடுத்தர
வர்க்கம். அவர்கள் தரும் தொந்தரவுகள் என்றால் சப்தம் எழுப்புவது, மொபைலில் உரக்கப்
பேசுவது, ஆபாசமாக கத்துவது போன்றவை. சத்யம் / எஸ்கேப்பில் பெரும்பான்மை
மேட்டுக்குடி. இவர்களுடைய உருட்டு வேறு தினுசாக இருக்கிறது. ஆணும் பெண்ணும்
ஜோடியாக வந்து ஒரு வாளி நிறைய பாப் கார்ன் வாங்குகிறார்கள். பெண் அதற்குள் ஏதோ ஒரு
மசாலாத்தூளை போங்கெடுத்துப்போய் மொத்தமாக சாய்த்துக்கொள்கிறார். பின்பு ஆண் அந்த
வாளியை வாங்கி பத்து நிமிடத்திற்கு குலுக்கிக்கொண்டே நிற்கிறார். படம் முடியும்
வரை அதனை வதக் வதக்கென சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
சத்யத்தில் DND ஷோ என்று ஒன்று இருக்கிறது. அதில் மொபைல்
பயன்படுத்தக்கூடாது. பேசக்கூடாது, தாமதமாக வரக்கூடாது என சில கட்டுப்பாடுகள்
உள்ளன. அதிலாவது இந்த பாப்கார்னுக்கும் தடை விதிக்கும்படி நிர்வாகத்திடம் கோர
வேண்டும்.
குறிப்பாக இந்த மசாலாத்தூளை மொத்தமாக பாப்-கார்ன் வாளியில் கொட்டிக்கொள்ளும்
காட்சியைப் பார்த்து எலைட் ஆட்களிலும் எச்சைகள் இருக்கிறார்கள் என்பதை
உணர்ந்துக்கொண்டேன். இன்னொரு காட்சி. ஸ்டார்பக்ஸ் எனும் காபி கடையில் பயங்கரக்
கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. என்னவென்று விசாரித்தால் ஆண்டுவிழாவை
முன்னிட்டு சலுகை விலையில் காபி தருகிறார்களாம். சலுகை விலை எவ்வளவு தெரியுமா ?
நூறு ரூபாய். ஒரு காபியின் விலை நூறு ரூபாய் என்பதே எனக்கு அதிர்ச்சியாக
இருக்கிறது. ஸ்டார்பக்ஸின் வழக்கமான காபி விலையை நான் தெரிந்துக்கொள்ள விரும்பவில்லை.
இவ்வளவு இளவயதில் மாரடைப்பு வந்தால் கஷ்டம்.
இனி பார்த்த படங்களைப் பற்றி -
மேயாத மான். PBS-ன் வெள்ளித்திரை அறிமுகம், வடசென்னை கதை போன்ற
விஷயங்களால் ஈர்க்கப்பட்டு சென்றேன். காதல் கதைதான். ஆனால் ஏனோ மனதிற்கு
நெருக்கமான படமாக அமைந்திருந்தது. நிறைய காட்சிகளில் மெய்மறந்து
சிரித்துக்கொண்டும், சில காட்சிகளில் ரகசியமாக கண்களை துடைத்துக்கொண்டும்
ரசித்தேன். மேயாத மானின் மூலமாக கோலிவுட்டிற்கு நடிப்பில் நான்கு புதிய வரவுகள் கிடைத்திருக்கின்றன.
குறிப்பாக இந்துஜா !
PBS, PBS என்று திரையரங்கிற்கு சென்றால் அங்கே இந்துஜா சுடர்
எனும் கதாபாத்திரம் மூலம் தன் இயல்பான அழகாலும், பாவனைகளாலும் நம்மை காலி
செய்துவிடுகிறார். வினோத் துவக்கத்தில் சுடரை தங்கையாக நினைக்கிறான். அதிலிருந்து
தன் மனதை மாற்றிக்கொள்ள அவனுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. நமக்கோ ஆரம்பத்திலிருந்தே
சுடரை தங்கையாக நினைக்க முடியவில்லை. என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் இந்துஜா
ராஜூமுருகன் வகையறாக்களின் டார்லிங்காக சிலகாலம் வலம் வருவார். எங்க வீட்டு
குத்துவிளக்கு கானா, தங்கச்சி பாட்டு, எஸ்.மது பாட்டு மூன்றும் அதகளம். புதிய
இயக்குநர் ரத்னகுமார் கம்பீரமாக வருகை புரிந்திருக்கிறார். இப்படம் மெர்சலுடன்
மோதியது துரதிர்ஷ்டம். தப்பான சமயத்தில் வந்திருக்கிற நல்ல படம். மேயாத மானை
பார்த்துவிட்டு மெர்சல், விவேகம் போன்ற படங்களை நினைத்தாலே உவ்வேக் என்று
வருகிறது.
மார்க் மை வேர்ட்ஸ் இன்னொரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவை
திரும்பிப் பார்த்தால் அதில் கார்த்திக் சுப்பராஜின் பங்கு கணிசமாக இருக்கும்.
சோலோ. வாகான ஷோ நேரம் அமையாமல் இரண்டு வாரங்களாக போக்கு
காட்டிக்கொண்டிருந்தது. நான்கு தனித்தனி கதைகளை உள்ளடக்கிய படம். தட்டையாக
சொல்வதென்றால் நான்கு சிறுகதைகளை படித்த உணர்வு ஏற்படுகிறது. பொறுமையை நிறைய
சோதிக்கிறார்கள். ஆனால் இதில் சிவனின் நான்கு முகங்கள், நிலம், நீர், காற்று,
நெருப்பு என்று ஏதேதோ சொல்கிறார்கள். சோலோவிற்கு யாரேனும் கோனார் நோட்ஸ்
எழுதியிருக்கிறார்களா என்று தேட வேண்டும். டைட்டிலில் துல்கர் சல்மான் பெயரைக்
கண்டபோதும், அவருடைய அறிமுகக் காட்சியிலும் பின்வரிசையிலிருந்து சில யுவதிகள்
கோரஸாக கத்தினார்கள். அதன்பிறகு அவர்களுடைய குரலை நான் படம் முடியும் வரை கேட்கவே
இல்லை. நான்காவது கதையில் ருத்ரா தோன்றும் போதெல்லாம் ஒரேயொரு பெண் மட்டும் வீல்,
வீலெனே கத்திக்கொண்டிருந்தார். அவருடைய காலுக்கடியில் கரப்பான் அல்லது பெருச்சாளி
ஓடியிருக்கும் என்று யூகிக்கிறேன். மற்றபடி பெண்களுக்கு துல்கர் மீதிருக்கும்
பற்றைக் கண்டு எனக்கு பொறாமையெல்லாம் கிடையாது.
ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு அழகான
நடிகையை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். முதல் கதையில் – தன்ஷிகா ஒரு
கவிதையைப் போல அறிமுகமாகிறார். ஆனால் இருப்பதிலேயே அதிகம் பொறுமையை சோதிக்கும் கதை
அதுதான். இரண்டாவது கதையில் ஆர்த்தி வெங்கடேஷை பார்த்து ஜொள்ளிவிட்டு வாயை
மூடுவதற்குள்ளாகவே மறைந்துவிடுகிறார். நான்காவது கதையில் வருபவர் ஹ்யுமா குரேஷி
என்று நினைத்திருந்தேன். பின்பு ஏஸ்தெட்டிக்ஸ் பார்த்துவிட்டு இது ஹ்யுமா கிடையாதே
என்று விக்கி செய்தால் அவரது பெயர் நேஹா ஷர்மாவாம்.
என்னுடைய ரசனையில் கதைகளை வரிசைப்படுத்தினால் – 4, 2, 3, 1.
புத்திசாலித்தனமாக தன்ஷிகா கதையை முதலில் வைத்துவிட்டார்கள். அதனால் படம்
முடியும்போது மற்ற மூன்று கதைகளை நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்ள முடிகிறது.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|