அன்புள்ள வலைப்பூவிற்கு,
மது அருந்துதல் உடல்நலத்திற்கு தீங்கானது.
உங்களுக்கு சர்பத் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா...? தமிழகத்தில்
உள்ள நியாயவிலை கடைகளில் அடிக்கடி ஓமத்திரவம் வாங்கி குடிப்பீர்களா...? ஆமாம்
என்றால் உங்களுக்கு நிச்சயமாக சி.ஐ.டி.நகர் பாபுவை தெரிந்திருக்கும். நீங்கள்
சி.ஐ.டி நகர் பக்கம் தலை வைத்துக்கூட படுத்ததில்லை என்றாலும் பரவாயில்லை. சி.ஐ.டி.
நகர் பாபு என்பவர் தமிழகத்தின் எல்லா நியாயவிலை கடைகளிலும் காணப்படும் ஒரு சராசரி
உயிரினம் தான். அதற்காக, டேபிளுக்கு பக்கத்தில் கையில் வெறும் கிளாஸோடு
தயங்கியபடியே வந்து நின்று தலை சொறிவார்களே அந்த கூட்டத்தோடு பாபுவை சேர்த்துவிட
வேண்டாம். அண்ணன் கொஞ்சம் யூனிக். பாபு அண்ணனைப் பற்றி அடையாளம் சொல்வதென்றால்,
ஐந்தரை அடி உயரம், உறுத்தாத உடல்வாகு, வயது முப்பத்தி ஐந்திலிருந்து நாற்பதுக்குள்
இருக்கலாம். அங்கொன்று இங்கொன்று என்றே தலையிலுள்ள பாதி மயிர் நரைத்துவிட்டது. மங்காத்தா
படம் வெளிவந்தபிறகு அவருடைய தலைச்சாய செலவு மிச்சமாகிவிட்டது. சிக்ஸ் பேக்
இருக்கவேண்டிய இடத்தில் சிறிய அளவிலான ஸ்கூல் பேக். அதைப் பற்றியெல்லாம்
கவலைப்படுவார் இல்லை. யூத்தாக தன்னை நிறுவிக்கொள்ள டீ-ஷர்டையும் ட்ராக்ஸையும்
எடுத்து மாட்டிக்கொள்வார். பார்ப்பதற்கு நடிகர் மயில்சாமி போலவே தோற்றமளிப்பார்.
அவருக்கு தண்டபாணி என்ற புனைப்பெயரும் உண்டு...!
ஏதேனும் விடுமுறை நாளாக இல்லாத பட்சத்தில் காலை பத்து மணிக்கு முன்பு பாபு
அண்ணன் வீட்டிலிருந்து கிளம்பமாட்டார். அதே சமயம் பத்து மணிக்கு மேல்
வீட்டிலிருக்கவும் மாட்டார். வேறென்ன, கழுதை கெட்டா குட்டிச்சுவரு...!
பாபுவுக்கு நிரந்தர நண்பர்கள் என்று யாரும் கிடையாது. இன்றைய தினம்
அவர் யாருடைய நண்பர் என்பது அவருக்கே தெரியாத சுவாரஸ்யம். அழுக்கு பிடித்த அந்த
கடையின் பின்புறத்தில் உள்ள சிறிய அறைக்குள் அவர் நுழைந்ததுமே அவருடைய பழைய
நண்பர்கள் கொஞ்சம் மிரளுவார்கள். சுற்றி அமர்ந்துள்ள மனிதர்களை ஒரு சில
மணித்துளிகள் நோட்டம் விடுவார். அவர் யாரை தேர்ந்தெடுப்பார் என்பது உச்சபட்ச மர்ம
முடிச்சு. அறையின் மூலையில் தனியாக அமர்ந்திருக்கும் ரிக்ஷாக்காரன், தீவிரமாக
இலக்கியமோ பிஸினஸோ என்ன எழவோ பேசிக்கொண்டிருக்கும் ஜெண்டில்மென், மத்திய
வயதினருக்கு மத்தியில் நீளமாக மயிர் வளர்த்திருக்கும் அந்த இளைஞன், ஃப்ரெண்டு...
லவ் மேட்டரு... ஃபீல் ஆயிட்டாப்புல என்கிற ரீதியில் அமர்ந்திருக்கும் பொடியன்கள்
எல்லோரையும் ஒரு எட்டு பார்வையால் வலம் வருவார். மோட்டுவளையை பார்த்தபடி கணநேரம்
உக்கிரமாக சிந்திப்பார். தீர்க்கமான முடிவொன்றை எடுத்தவராக தன்னுடைய புதிய நண்பரை
அணுகி தன்னை அறிமுகப்படுத்தி கொள்வார். புதிய மனிதர்களிடம் பேசத்துவங்குவது
அவருக்கு ஒன்றும் சிரமமான காரியம் கிடையாது. வெள்ளை நிற ஜிப்பா, காதில்
அணிந்திருக்கும் கடுக்கன், நீளமான தலைமயிர் என்று எதையாவது காட்டி சூப்பர் பாஸ்
என்றபடி கச்சிதமாக பேச்சை துவங்கிவிடுவார். புகழ்ச்சிக்கு மயங்காத ஆண்கள் யாரேனும்
இருக்கிறார்களா என்ன...? கொஞ்சம் பேச்சு கொடுத்தால் போதும். சமர்த்தாக ஒரு ஸ்டூலை
எடுத்துவந்து போட்டு உங்கள் அருகிலேயே அமர்ந்துவிடுவார். சொற்பொழிவை ஆற்ற தொடங்குவார்.
உங்க பேரென்ன பாஸ்...? எங்க வேலை பாக்குறீங்க...? என்பது போன்ற சம்பிரதாய கேள்விகளுடன் தான் ஆரம்பிப்பார். பேச்சினூடே
அடிக்கடி அவருடைய முதல் வசனமான ஜிப்பா சூப்பர் பாஸை சொல்லிக்கொல்வார். முடிந்தால்
நீங்க ஹீரோ மாதிரி இருக்கீங்க என்ற பிட்டையும் போட்டுவிடுவார். நிம்மதியான வேலை.
இத்தனை அட்ராசிட்டியையும் உங்களுடன் வந்த நண்பர் யாரேனும் கலவரமாக பார்த்துக்கொண்டிருந்தால்
சந்தேகமே இல்லாமல் அவர்தான் காமெடியன். கூட்டத்தில் யாராவது குறுந்தாடி
வைத்திருந்தால் அவர் டைரக்டர். முரட்டுத்தனமாக யாரேனும் தோற்றமளித்தால் வில்லன்.
வில்லனைச் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் அவருடைய கையாட்கள். இந்த மூஞ்சிகளை எல்லாம்
வச்சி படம் எடுக்குற ப்ரொட்யூசர் யாரென்று தானே கேட்கிறீர்கள்...? அது ஷாத்ஷாத்
அந்த பாபு அண்ணனே தான்...! ப்ரொட்யூசர் சரி... பணம்...? என்ன பாஸ்
வெளையாடுறீங்க...? படம் எடுக்கத்தானே பணம் தேவை. சும்மா ஒரு பேச்சுக்கு பணம்
தேவையில்லை தானே...? பேச்சுக்கு இடையே சமயத்தில் ஹீரோவே காமெடியனாகவும்,
ப்ரொட்யூசர் வில்லனாகவும், டைரக்டர் ஹீரோவாகவும் மாறி மாறி அவதாரம் எடுப்பார்கள்.
புரியலையா...? இந்த கதையில எல்லாருக்கும் டபுள் ரோல்... போறுமா...?
பாபு அண்ணன் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதம் அலாதியானது.
நம்முடைய வலது கையை எடுத்து அவருடைய வலது கையில் பற்றிக்கொள்வார். அந்த பற்றுதலில்
ஒரு கரிசனம் இருக்கும். அச்சமயத்தில் அவருக்கு எப்போதெல்லாம் அன்பு ஊற்றெடுக்கிறதோ
அப்போதெல்லாம் நம்முடைய புறங்கையை கடித்து வைப்பார். யாராவது நம்மை கடித்தால்
வலிக்கும் தானே...? ஆனால் பாபு அண்ணன் கடித்தால் வலிக்காது. அது அன்புக்கடி. பாம்பு
கொத்தி வைத்தாற்போல புறங்கையில் பல் பதிந்து அதிலிருந்து சிகப்பு நிற திரவம் கூட
வழியும். அது பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஏதோ கே.எப்.சி கோழி கறித்துண்டை
கடித்த களிப்புடன் பாபு அண்ணன் அமர்ந்திருப்பார். அதுதான் பாபு அண்ணன்...!
இவ்வளவு அன்பாக பழகும் பாபு அண்ணன் யார் தெரியுமா...? அவர் எங்கே
பணிபுரிகிறார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். டைடல் பார்க்...!
ஒன்றுமில்லை டைடல் பார்க் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து M70 என்ற
பேருந்தை பிடித்தால் ஒரு மணிநேரத்தில் சி.ஐ.டி நகர் வந்து சேர்ந்துவிடலாம் என்று
சொல்ல வந்தேன். அங்கே எம்ஜியார் ஒரு கையால் ரோப்பை பிடித்துக்கொண்டே மறுகையால்
வாள் வீசுவது போலவோ அல்லது எம்ஜியார் ஜெயலலிதாவின் தோள்பட்டைகளை
தாங்கிப்பிடித்திருப்பது போலவோ ஒரு பதாகை இருக்கும். அதற்கு கீழே எம்ஜியார்
பக்தர்கள் குழு என்று எழுதியிருக்கும். அதற்கும் கீழே சில ப(க்)தர்களின்
திருவுருவப் படங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அவற்றில் இடமிருந்து வலம் மூன்றாவதாக
இடம் பெற்றிருப்பது எம்ஜியார் பாபு என்றும் அழைக்கப்படும் பாபு அண்ணன் தான். ஆமாம்,
பாபு அண்ணன் ஒரு தீவிர எம்ஜியார் பக்தர்.
அது மட்டுமல்ல, தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் உண்மையான தொண்டரும் கூட. எந்த அளவிற்கு தீவிரம் என்றால் நீங்கள்
ரோஸ்மில்க் குடித்துக்கொண்டிருக்கிறீர் என்று வைத்துக்கொள்வோம். அட ரோஸ்மில்க்
என்னய்யா ரோஸ்மில்க். ஒரு ஆப்பிள் மில்க்ஷேக்கோ, ஸ்ட்ராபெர்ரி ஜூஸோ
குடித்துக்கொண்டிருக்கிறீர்கள். அங்கே பாபு அண்ணா வருகிறார். நீங்கள் அவருக்கும்
சேர்த்து ஒரு ஆப்பிள் மில்க்ஷேக் சொல்லுகிறீர்கள். அவர் அதை குடிப்பார் என்றா
நினைக்கிறீர்கள்...? அம்மாவின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் அவர் அதனை குடிக்க
மாட்டார். அவர் தன்னுடைய வாழ்நாளில் ஏழைகளின் பானமான அம்மா குடிநீர் தவிர்த்து
வேறு எந்த திரவத்தையும் ஒரு மிடறு கூட குடிப்பதில்லை. அம்மா குடிநீரை சுமார்
நூற்றியெண்பது மில்லி மட்டும் பருகக்கொடுத்தால் போதும். நடுத்தெரு என்றாலும் கூட
கவலைப்படாமல் அம்மாவே நேரில் காட்சியளித்ததாக கருதிக்கொண்டு சாஷ்டாங்கமாக குப்புற
விழுந்து வணங்கிவிடுவார். சில சமயங்களில் அப்படி விழுந்து வணங்கினார் என்றால் சில
மணிநேரங்கள் ஆனாலும் கூட விழுந்தது விழுந்தபடியே தான் இருப்பார்.
நீங்கள் சாலையில் நடந்து செல்லும்போது கூட உங்கள் காலில் யாரேனும் ஒரு
சி.ஐ.டி. பாபு இடரலாம். அவரை தொந்தரவு செய்யாமல் தாண்டிச் செல்லுங்கள். அதுதான்
நல்லது... உங்களுக்கு...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|