5 April 2014

ரத்தம் ஒரே நிறம் !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நான் சுஜாதா நாவல்களை விரும்பி வாசிக்கிறேன் என்பதையும், ரத்தம் ஒரே நிறம் படித்ததில்லை என்பதையும் தெரிந்துகொண்ட நண்பர் செந்தில்குமார் (ஆரூர் மூனா அல்ல !) அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். முதற்கண் நன்றி செந்தில்குமாருக்கு. அவர் அனுப்பிய சமயத்தில் தற்செயலாக சீனு ரத்தம் ஒரே நிறத்தை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இருக்கலாம். ஆனால் இது என்னுடைய சிலபஸ் கிடையாது. நான் கொஞ்சம் ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், த்ரில்லர் போன்றவை வாசிக்க விரும்பும் ஆசாமி. ரத்தம் ஒரே நிறத்தின் கதைக்கரு என்னவென்று தெரிந்தபோதே எனக்கு அசுவாரஸ்யமாக ஆகிவிட்டது. புத்தகம் வேறு முன்னூறு பக்கங்களுக்கு மேல். பிறகு படிக்கலாம் என்று கிடப்பில் போட்டாயிற்று. 

புத்தகம் கையில் கிடைத்து ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் கழித்து மெதுவாக மனமுவந்து புத்தகத்தை பிரித்தேன். வடிவமைப்பை பொறுத்தவரையில் சுஜாதா புத்தகங்களில் மாஸ்டர்பீஸ் என்பதில் சந்தேகமே இல்லை. புக்மார்க் தான் கொஞ்சம் நைந்து போயிருந்தது. எனக்கெல்லாம் சரித்திர கதை என்றாலே மன்னர் கால கதை என்றுதான் எண்ணம். சுஜாதா அவ்வளவு தூரம் செல்லவில்லை. 1857ம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தை அடிப்படையாக கொண்டு அதனோடு ஒரு தமிழ் சினிமா பாணி பழி வாங்கல் கதையையும் சேர்த்து எழுதியிருக்கிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில், ஆலப்பாக்கத்தில் வசிக்கும் முத்துக்குமரன் என்பவனுடைய தந்தையை ஆங்கிலேய லெப்டினன்ட் எட்வர்ட் மக்கின்ஸி என்பவன் கொன்றுவிடுகிறான். முத்துக்குமரன் மக்கின்ஸியை பழி வாங்கத் திட்டமிடுகிறான். அங்கிருந்து கதை துவங்குகிறது. ஒரு பெண் ஒரு நல்மனம் படைத்த ஆண் மீது காதல் வயப்படுகிறாள். ஆனால் அசம்பாவிதமாக அவளுடைய உடலை விரும்பும் ஒருவனுக்கு மனைவியாக்கப்படுகிறாள். இதையே இரண்டாக பெருக்கிக்கொள்ளுங்கள். ஒன்றுமில்லை, முத்துக்குமரன் – பூஞ்சோலை – ராக்கன், ஆஷ்லி – எமிலி – மக்கின்ஸி இரு முக்கோண காதல்களும் ஒரே மாதிரியாகவே பயணிக்கிறது. பதினெட்டு அத்தியாயங்கள் வரை இவர்களுடைய காதல் கதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அதன்பிறகு சிப்பாய் கலகத்திற்குள் மெதுவாக நுழைகிறது கதை. அதாகப்பட்ட சிப்பாய்க் கலகம் என்பது என்னவென்றால் ஆங்கிலேயர்களின் என்ஃபீல்டு ரக துப்பாக்கியில் பன்றி கொழுப்பை பயன்படுத்தினார்கள். இதனை உபயோகிக்கும் பொருட்டு கடிக்க வேண்டும் போல தெரிகிறது. இயல்பில் புலால் மறுக்கும் பிராமண சிப்பாய்களும், பன்றி இறைச்சி உட்கொள்வதை பாவமாக நினைக்கும் இஸ்லாமிய சிப்பாய்களும் எதிர்க்கிறார்கள். அதாவது பன்றி கொழுப்பை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக புரட்சி செய்கிறார்கள். சிப்பாய்க் கலகத்தில் வட இந்தியர்களே கணிசமான அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் ஒரு தமிழன் பங்கேற்றால் எப்படி இருந்திருக்கும் என்ற கண்ணோட்டம் நாவலின் ஒரு சிறப்பு.

ஒரு கதை அல்லது நாவலை படிக்கும்போது அதன் கதை மாந்தர்களுக்கென ஒரு உருவத்தை நம் மனம் தானாகவே வரைந்துகொள்ளும் இல்லையா...? முத்துக்குமரன் என்ற கதையின் நாயகன் பெயரை படித்ததும் சட்டென ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் கண்களில் தெரிகிறார். அடுத்து எமிலி. சந்தேகமே இல்லாமல் எமி ஜாக்சனை நினைவூட்டுகிறார். சில காட்சிகள் மதராஸபட்டினத்தை நினைவூட்டுகிறது. பைராகி ஏனோ பிரேமானந்தாவாக தெரிகிறார். 

நிறைய இடங்களில் ஒரு தேர்ந்த மசாலா சினிமாவைப் போல செல்கிறது ரத்தம் ஒரே நிறம். கதையின் நாயகன் இரண்டு முறை சாவின் விளிம்பு வரை சென்று தப்பித்துவிடுகிறான். நம்பமுடியாத செயல்களை எல்லாம் செய்கிறான். பூஞ்சோலை ஆண் வேடமணிகிறாள். பைராகி என்கிற சித்தர் கதாபாத்திரம் வேறு.

ஏராளமாக உழைத்திருக்கிறார் சுஜாதா. கூகுள் பரிட்சயமில்லாத கால கட்டத்திலேயே நிறைய தகவல்களை திரட்டி எழுதியிருக்கிறார். படிக்கும்போது சாதாரணமாக தெரியக்கூடிய ஒரு பத்தியை எழுதுவதற்கு கூட நிறைய உழைப்பை செலவிட்டிருக்கிறார். முட்டை நடனம் என்ற ஒன்றை கூத்து கலைஞர்கள் செய்வதாய் ஒரு அத்தியாயத்தில் வருகிறது. அது பற்றிய விவரணையாக ஆங்கில புத்தகம் ஒன்றின் பெயரை கடைசி பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

செந்தில் குமார் எனக்கு அனுப்பி வைத்த பிரதியின் முதல் பக்கத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார். ஒருவர் நமக்கு பரிசளித்த பொருளை நாம் மற்றவருக்கு பரிசளிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த புத்தகம் ஒரு தவறான கைகளுக்கு கிடைத்திருப்பதில் எனக்கு வருத்தம் உள்ளது. இந்த நாவலை என்னிடமிருந்து இரவலாக பெற்று யாரேனும் படிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.

ரத்தம் ஒரே நிறம்
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
342 பக்கங்கள்
ரூ.260

என்றும் அன்புடன், 
N.R.PRABHAKARAN

Post Comment