28 October 2010

பதிவுலகில் philosophy prabhakaran - 50வது பதிவு

வணக்கம் மக்களே...

கிட்டத்தட்ட மொத்த பதிவுலகமே இந்த தொடர்பதிவை எழுதி முடித்தாகிவிட்டது. இப்போது நானும் எழுதுகிறேன். யாராவது தொடருவதற்கு அழைப்பார்கள் என்று காத்திருந்தேன். யாருமே அழைக்கவில்லை. வேறு வழியில்லாததால் அழைப்பில்லாமலே பதிவை தொடருகிறேன். அதுமட்டுமில்லாமல் இதனை ஐம்பதாவது பதிவாக வெளியிட வேண்டுமென்று விரும்பியதால் காத்திருந்தேன்.

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆரம்பக்காலத்தில் "flying taurus" என்று வைத்திருந்தேன். (ஏன் அப்படி வைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை). தொடர்ந்து எழுத ஆரம்பித்த பின்பு "philosophy prabhakaran" என்று மாற்றிக்கொண்டேன். இப்போது எங்கு பார்த்தாலும் தமிழாக்கம் தலை விரித்து ஆடுவதால் "தத்துபித்துவங்கள் பிரபாகரன்" என்று தமிழில் மாற்றிக்கொள்ளலாமா என்று யோசித்து வருகிறேன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


எனது உண்மையான, முழு பெயர் பிரபாகரன். பெரும் பகுத்தறிவாளரான எம் தந்தை, விடுதலைப்புலி பிரபாகரனின் நினைவாக எனக்கு இந்த பெயரை வைத்ததாக ஒரு வரலாறு உண்டு. நான் எப்போதும் என் பெயரை N.R.Prabhakaran என்று இனிஷியலோடு சொல்லிக்கொள்ளவே விரும்புவேன். நண்பர்கள் சிலர் என்னை N R என்று அழைப்பதால் அதுவே கூட சமயங்களில் என் பெயராக மாறி விடுவதுண்டு.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...?
பொழுது  போகாத ஒரு மாலைப்பொழுதில் கூகிள் அங்கிளை ஆராயந்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் ப்ளாக்கர் என்று ஒன்று இருப்பதை அறிந்தேன். காசா...? பணமா...? சும்மா ஒன்னு ஆரம்பிச்சு வைப்போம்னு ஆரம்பிச்சேன்.

ஆரம்பத்தில்  நான் ஆங்காங்கே படிக்கும், பார்க்கும் கதைகள், கவிதைகள், நகைச்சுவைகள், புகைப்படங்கள் இவற்றையெல்லாம் கொண்டு ஒரு பெட்டகமாக உருவாக்க வேண்டுமென்றே ஆரம்பித்தேன்.

நாளடைவில்  எனது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும், பிறரிடம் நேரில் சொல்ல முடியாத விஷயங்களை பதிவுகள் மூலமாக சொல்ல முற்பட்டேன்.

இறுதியாக  தல அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் படத்தின் விமர்சனம் எழுதியபோது தான் என் சமூகப்பயணம் ஆரம்பமானது.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
முன்பெல்லாம்  ஒரு பதிவு எழுதியவுடன், ஆர்குட்டில் இருக்கும் 300 நண்பர்களுக்கும் தனித்தனியாக சென்று scrap அனுப்புவேன். அதில் ஒரு முப்பது பேர்  வந்துபோவார்கள். யாராவது பின்னூட்டம் போடமாட்டார்களா என்று ஏங்குவேன். முதல் பாலோயரை பெற நான் என்ன பாடுபட்டேன் என்று எனக்குத்தான் தெரியும்.

பின்னர்  எதேச்சையாக ஒரு நாள், தமிழ்மணம் தளத்தில் பதிவு செய்தேன். அப்போதுதான் நான் கேட்காமலே கேக் கிடைக்க ஆரம்பித்தது. உடனே தமிழிஷ், தமிழ் 10, போகி என்று திரட்டிகள் அனைத்திலும் பதிவு செய்தேன். எனக்கு யாரெல்லாம் பின்னூட்டம் போடுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் நான் பின்னூட்டம் போட ஆரம்பித்தேன். புதுபதிவர்களை தேடிச்சென்று பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்தினேன். இப்போது நூறை தாண்டி  நடைபோட்டுக்கொண்டிருக்கிறேன்.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நிறைய...  அலுவலகத்தில் நடந்த சம்பவங்களை வைத்து இரண்டு பதிவு எழுதினேன். இதன் மூலம் அலுவலக நண்பர்கள் மத்தியில் என்னுடைய பதிவு பிரபல்யமடைந்தது. எனது அணித்தலைவருக்கும் எனக்கும் நல்ல புரிந்துக்கொள்ளுணர்வு ஏற்பட்டது.

எனது  நண்பர்கள் பற்றிய பதிவொன்றினை எழுத முயற்சி செய்தேன். சில நண்பர்கள் நம்மைப் பற்றி என்ன எழுதப்போகிறான் என்ற ஆர்வத்தில் ஆதரவு தெரிவித்தார்கள். சில நண்பர்கள் நம்மைப் பற்றி எழுதிவிடுவானோ என்று பயந்து என்னிடம் பேசுவதையே நிறுத்திக்கொண்டார்கள்.

கல்லூரியின்  பட்டமளிப்பு விழா பற்றிய பதிவொன்றினை எழுதியபோது கல்லூரி விரிவுரையாளர்கள் மத்தியிலும் ஏனைய மாணவர்கள் மத்தியிலும் நன்மதிப்பு கிட்டியது.

எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக எனது தற்காலிக தாயாரை தாளித்து ஒரு பதிவை போட்டபோது கடும் எதிர்ப்பை சந்தித்தேன். பதிவை delete செய்யுமாறு கூக்குரல்கள் கிளம்பின. எழுதிய பதிவை பின்வாங்கமாட்டேன் என்று பிடிவாதமாக கூறி என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றினேன்.

இப்போதுகூட காதலியை பற்றி ஒரு பதிவு எழுதப்போவதாக சொல்லி அவளிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டேன்.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
முழுக்க முழுக்க பொழுது போக்கத்தான். பதிவெழுதுவதின் மூலம் சம்பாதிப்பது எப்படி என்றுகூட எனக்கு தெரியாது.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்றே  ஒன்று மட்டும்தான். அலுவலக ஆணி அடிக்கடி அதிகம் ஆவதால் தூங்குவதற்கே நேரமில்லாமல் தவிக்கிறேன். இதில் இன்னொரு வலைப்பதிவு வேறையா...! அட போங்கப்பா...!

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபம்: இது ஒரு சூழ்நிலை கேள்வி. பதிவுலகில் பெரிய சண்டையே நடந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை.

பொறாமை என்று பார்த்தால் நிறைய இருக்கிறது. அதில் டாப்லிஸ்டில் இருப்பவர்கள் சேட்டைகாரனும், "அவிய்ங்க" ராசாவும். வரலாற்று சிறப்புமிக்க ஒரு பதிவை ஜஸ்ட் லைக் தட் எழுதி முடித்து விடக்கூடிய திறமைசாலிகள்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...?
இதை  நான் சொல்லியே ஆகவேண்டும். நான் இந்த பதிவை தொடர்ந்ததே இந்த கேள்விக்காகத்தான்.

என்  கல்லூரி நண்பன். அவன் பெயர் பொன் மகேஸ்வரன். இன்று வரை நான் எழுதிய அனைத்து பதிவுகளுக்கும் முதல் ரசிகனும் விமர்சகனும் அவனே. அவனுக்கு பதிவுலகம் அதிகம் பழக்கமில்லை. அதனால் அதிகம் பின்னூட்டம் போட்டதில்லை. ஆனால் பதிவெழுதி அரைமணி நேரத்தில் கால் வந்துவிடும். வரிவரியாக மொத்த பதிவையும் விமர்சனம் செய்துவிடுவான். அவன் என் பதிவுகளை பாராட்டி அனுப்பிய குறுந்தகவல்களை இன்னமும் என் செல்பேசியில் சேமித்து வைத்திருக்கிறேன்.

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...?
இது வரை என் புகைப்படத்தை வெளியிட்டதில்லை என்று நினைக்கிறேன். இப்போது உங்கள் பார்வைக்காக...


என்ன பாதி முகம் தான் தெரிகிறது என்று பார்க்கிறீர்களா...? மிச்சத்தை நூறாவது பதிவில் வெளியிடுகிறேன்...

கடைசியாக சொல்லிக்கொள்வது யாதெனில் சமூகப்பதிவுகளை தவிர்த்து இன்னும் நிறைய பர்சனல் பதிவுகள் எழுது வேண்டியிருக்கிறது. இன்னும் நிறைய பேரிடம் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. சொல்லுவேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN 

Post Comment

25 October 2010

Endhiran Revisited - சுஜாதாவுக்காக

வணக்கம் மக்களே...!

முன் குறிப்பு: ரங்குஸ்கி காட்சியையும் கலாபவன் மணி காட்சியையும் நீக்கிவிட்டார்கள், க்ளைமாக்ஸ் காட்சியின் நீளத்தை குறைத்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றிய டீம் மேனேஜர் ரிச்சர்டை வன்மையாக கண்டிக்கிறேன்...!!! (ஏன் பாஸ் இந்த கொலைவெறி...?)

ஏற்கனவே எந்திரன் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து டரியலாகி "எந்திரன் - உணர்ச்சிகள் இல்லை...!" என்ற பெயரில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். ஆனால் தற்போது சில நாட்களுக்கு முன்பு அமரர் சுஜாதா அவர்களின் என் இனிய இயந்திரா நாவலை படிக்க நேர்ந்தது. சான்ஸே இல்லை... நாவல் முழுவதையும் ஒரே சிட்டிங்கில் படித்து முடித்தபோது ஏதோ வேற்றுகிரகத்துக்கு போய்வந்தது போல இருந்தது. அப்பேர்பட்ட ஓர் பேரறிஞனின் வசனங்களை முதல்முறை பார்த்தபோது ரசிக சிகாமணிகளின் இரைச்சல்களுக்கு மத்தியில் ரசிக்க முடியவில்லை. எனவே இன்னொரு முறை ஆறு வாரங்கள் கழிந்த பின்னர் ஆரவாரங்கள் இல்லாமல் பார்க்க வேண்டுமென முடிவு செய்திருந்தேன். அதுமட்டுமில்லாமல் "கொளத்தூர் கங்கா, விருகம்பாக்கம் தேவி கருமாரியில் எல்லாம் பார்த்தால் டல்லா இருக்கும்... சத்யம் அல்லது எஸ்கேப் சினிமாஸில் பார்த்தால் நல்லா இருக்கும்..." என்று டீம் மேனேஜர் ரிச்சர்ட் திருவாய் மலர்ந்திருந்தார். ஆனால் நான் சத்தியமாக எஸ்கேப் சினிமாஸில் பார்க்கவில்லை. சென்னை ராயபுரத்தில் "மதுரை சுனாமி" அண்ணன் அழகிரி பினாமி பெயரில் வைத்திருக்கும் ஐட்ரீம் சினிமாஸில் படம் பார்க்க நேர்ந்தது. மூட்டைப்பூச்சி கடியைக் கூட தாங்கிக்கொள்ளலாம் ஆனால் ரசிகர்களின் அலப்பறையை எல்லாம் நிச்சயம் தாங்க முடியாது. எனவே இரவுக்காட்சிக்கு சென்றேன். (அப்படியும் கூட்டம் கும்மியடித்தது வேறு விஷயம்...!).

முதல்முறை ரசிக்க முடியாத இசை, வசனம், Sound Effects, பாடல் காட்சிகளை இந்த முறை ஆற அமர ரசித்தேன். சிட்டி தலையை திருப்பும்போதும், அங்க அசைவுகளின் போதும் கேட்கும் Buzzing Sound முதற்கொண்டு மொத்தத்தையும் ரசித்தேன். இந்தமுறைதான் கவனித்து பார்க்க முடிந்தது. ஐஸ்வர்யா ராய் கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். (எந்த இடத்தில் என்றெல்லாம் கேட்கக் கூடாது...!).

பாடல் காட்சிகள் - வழக்கமாக ஷங்கர் படங்கள் என்றாலே பிரமிப்பாக இருக்கும். இதிலும் அப்படித்தான் என்பதை நேற்றிரவே சன் டி.வியில் பார்த்திருப்பீர்கள். வெள்ளித்திரையில் பார்த்தால் இன்னும் இன்னும் ஆச்சர்யங்கள். காதல் அனுக்கள் பாடலில் காட்டப்பட்ட பாலைவனத்தையும் பாலைவனத்திற்கு நடுவில் ஆங்காங்கே காணப்பட்ட குட்டிக்குட்டி குளங்களையும் வெகுவாக ரசித்தேன். கிளிமாஞ்சாரோ பாடலில் காட்டுவாசிகளின் உடையலங்காரமும் அவர்களின் நடன அமைப்பும் பிடித்திருந்தது. ரோபோடிக் பாடலில் ஐஸின் நடனம் சிலிர்க்க வைத்தது. பக்கத்து சீட் நண்பனிடம் இருந்து பாப்கார்னை ஆட்டையை போடும் ஆட்டத்தில் மும்முரமாக இருந்ததால் இரும்பிலே ஓர் இருதயம் பாடலை மட்டும் சரிவர ரசிக்க முடியவில்லை.

பாடல் வரிகள் - வைரமுத்து, பா. விஜய், மதன் கார்க்கி ஆகிய மூவரும் வடித்திருக்கிறார்கள். ராணுவக் காட்சி கவிதையை நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டும் பிரம்மாண்டமல்ல பாடல் வரிகளிலும் தான். கவிப்பேரரசு வைரமுத்துவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் எழுதிய வரிகளில் எனக்குப் பிடித்த சில வரிகள்...

"கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்...
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை..." (புதிய மனிதா...)

"சனா... சனா... ஒரே வினா...?
அழகின் மொத்தம் நீயோ...?" (காதல் அனுக்கள்...)

"வயரெல்லாம் ஓசை... உயிரெல்லாம் ஆசை...
ரோபோவை போ போ வேண்ணாதே..." (அரிமா... அரிமா)

தந்தை ஒருபக்கம் அமர்க்களப்படுத்தினால் மகன் மறுபக்கம் அதகளமாக்குகிறார். வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி "இரும்பிலே ஓர் இருதயம்...." பாடலுக்காக வரலாற்று சிறப்புமிக்க வரிகளை எல்லாம் எழுதியிருக்கிறார். சாம்பிளுக்கு இரண்டு வரிகள்...

"எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா...
ரத்தம் இல்லாக் காதல் என்று ஒத்திப் போகச் சொல்வாயா..."

மேலும் பா.விஜய் "கிளிமாஞ்சாரோ..." பாடலில்...

"உதட்டையும் உதட்டையும் பூட்டிக்கொண்டு...
ஒரு யுகம் முடிந்து திற அன்பாய்..."

இந்த வரிகளை எல்லாம் ரசித்தபோது எந்திரன் படம் வெளியாவதற்கு முன் ஏன் பாடல்களை கேட்கவில்லை என்று என் மேலேயே கோபம் வருகிறது.

ரஜினி - வசீகரன், சிட்டி, சிட்டி v2.0 என்று மூன்று பாத்திரங்கள் இருந்தாலும் இரண்டாம் வெர்ஷன் சிட்டியே மொத்த சிக்ஸரையும் அடித்துவிடுகிறார். "சிவாஜி" படத்தில் ரஜினி அடிக்கடி கூல்... கூல்... என்று சொல்வார். ஆனால் இந்தப் படத்தில் வசீகரன் ரஜினி கொஞ்சம் கூட கூல் இல்லை. எதற்கெடுத்தாலும் கத்துவது, கோபப்படுவது என்று சராசரி மனிதனாகவே வலம் வருகிறார். சிட்டி கேரக்டர் உணர்ச்சிகள் எதுவும் இல்லாமல் வசனங்களை ஒப்பிக்கிறது. சிட்டி v2.0 கேரக்டரில் தான் பழைய ரஜினியை பார்க்க முடிந்தது. உதாரணத்துக்கு "ச்சீ... ன்னுறது, சீதா பிராட்டி சீன் போடுறது..." என்று ஆரம்பித்து தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு மூச்சு விடாமல் வசனம் பேசிமுடித்தபோது தியேட்டரில் அப்படி ஒரு அப்ளாஸ். மேலும் பி.எஸ்.வீரப்பா ஸ்டைலில் வில்லச்சிரிப்பு சிரிப்பதும் "மே... மே..." என்று ஆடு போல மிமிக்ரி செய்வதுமாக கலக்கி இருக்கிறார். ரஜினி ஹீரோயிசத்தை விட நன்றாகவே வில்லத்தனம் செய்கிறார். இனிவரும் படங்களில் ரஜினி இமேஜ் இம்சைகளையெல்லாம் விடுத்து வில்லனாக நடித்தால் அதிகம் ரசிக்கலாம்.

சுஜாதாவுக்காக - என்று தலைப்பில் போட்டுவிட்டு வசனத்தை பற்றி ஒன்றும் எழுதாவில்லை என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. சாதாரணமான படங்களுக்கே அசாதாரணமாக வசனம் எழுதுபவர் சுஜாதா. ஆயுத எழுத்து படத்தின் காதல் பற்றிய ஒரு காட்சியில் Androgen, Estrogen, Testosterone என்றெல்லாம் வசனமெழுதி பொளந்து கட்டியிருப்பார். அப்படிப்பட்டவருக்கு எந்திரன் போன்றொரு படத்துக்கு வசனம் எழுதச் சொன்னால் சும்மா விடுவாரா. அவரது கைவண்ணத்தில் எனக்கு பிடித்த சில வசனங்கள்...

1. ஐஸ்: உள்ள உயிரோட இருக்காரா...?
கருணாஸ்: உள்ள வயரோட இருக்கார்...

2. ஐஸ்: Can you please shutdown your stupid system...?
சந்தானம்: Control, Alt, Delete

3. ரஜினி: நான் கொடுத்த 2 பவர் 9, ஐநூத்தி பன்னண்டு முத்தம்...
ஐஸ்: முத்தம் கொடுக்கும்போது கூட கவுன்ட் பண்ணிட்டு இருப்பீங்களா... பீல் பண்ண மாட்டீங்களா... சரியான Matrix மண்டை...

4. டிராபிக் போலீஸ்: அட்ரஸ் சொல்லுய்யா...
ரோபோ: ஐ.பி அட்ரஸ் தான் இருக்கு... 108.11.0.1

5. ட்ராபிக் போலீஸ்: நக்கலா....?
ரோபோ: இல்ல நிக்கல்... போல்டெல்லாம்  நிக்கல்ல பண்ணது...

6. விஞ்ஞானி ஒருவர்: சிம்பிளா கேக்குறேன்... 24157817 Fibonacci நம்பரா...?
ரோபோ: ஆமாம், 22வது Fibonacci நம்பர்... பை தி வே அது மந்தவெளி பி.சுப்ரமணியத்தோட போன் நம்பர்...

7. ரோபோ: 98dB... Too loud... Who is that செல்லாத்தா...?

8. சந்தானம்: யேய்... நீ என்ன பெரிய இவனா...?
ரோபோ: இலக்கணம் தப்பு...

9. விஞ்ஞானி ஒருவர்: கடவுள் இருக்காரா இல்லையா...?
ரோபோ: கடவுள்ன்னா யாரு...?
விஞ்ஞானி: நம்மள எல்லாம் படைச்சவர்....
ரோபோ: என்னை படிச்சவர் டாக்டர் வசீகரன்... கடவுள் இருக்கார்...

10. விஞ்ஞானி போஹ்ரா: ஆபத்து வரும்போது யார முதல்ல காப்பத்துவ...? டாக்டர் ஐன்ஸ்டீனையா...? ஒரு சின்ன குழந்தையா...?
ரோபோ: Hypothetical Question...

இதெல்லாம் சும்மா சாம்பிள்தான். சுஜாதா வரிக்கு வரி கோல் போட்டிருக்கிறார். ஆனால் ஏனோ முதல் பாதியில் மட்டும்தான் இதுபோன்ற சுஜாதா டச் கொண்ட வசனங்கள் அதிகம் வருகிறது. ஒருவேளை அதுவரைக்கும்தான் அவர் எழுதியதோ என்னவோ. வசனங்கள் மட்டுமின்றி காதலிக்கு Freakonomics புத்தகத்தை பரிசாக தருவது, ரோபோவை வைத்து ஆயுத பூஜை செய்வது, ரோபோவுக்கு உணர்ச்சிகளை கற்பிக்க வேண்டி ஆசார கோவையை படிக்க கொடுப்பது என்று திரைக்கதையிலும் ஆங்காங்கே சுஜாதா டச்.

டிஸ்கி: இந்தமுறை பார்த்தபோது இடைவேளைக்குப்பின் காரமாக இருந்தது Lays Chips (Spanish Tomato Flavour).
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

22 October 2010

ஜாவா சுந்தரேசனின் நெஞ்சில் நிறைந்த நிரலிகள்...!

வணக்கம் மக்களே...!

ஒரு வழியாக நண்பர் ஜாவா சுந்தரேசனின் மொபைலை நொண்டி நொங்கெடுத்து பார்த்ததில் முதல் முறையாக ஒரு தொழில்நுட்ப பதிவு எழுத ஐடியா கிடைத்தது. ஜாவா சுந்தரேசன் இருக்கிறானே... ரெண்டு கால், ரெண்டு கை இல்லைன்னா கூட சமாளிச்சிடுவான் ஆனா மொபைல் மட்டும் இல்லன்னா விஜய் படம் பாத்துட்டு வெளிய வந்தவன் மாதிரி ஆயிடுவான். ஒரு நாள் "மொபைலுக்குள்ள தலைய விட்டு அப்படி என்னதான் டா பண்ற..." கேட்டேன். அப்ப தான் அவன் மொபைல்ல நெறய சமாச்சாரம் (அட... அது இல்லைங்க...) இருக்குதுன்னு தெரிஞ்சிகிட்டேன். அவன்கிட்ட இருந்த சில அப்ளிகேஷன்ஸ் பத்தி இப்ப உங்களுக்கு எடுத்து சொல்றேன்.

1. ஒபேரா மினி (Opera Mini)
பெயரை கேட்டுவிட்டு ஏதோ ஒப்பேறாத நிரலி என்று நினைத்து விடாதீர்கள். மொபைல் உலவிகளுள் ஒப்பற்ற நிரலி ஒன்று உண்டு என்றால் அது இதுதான். கணினிக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எப்படியோ அது போல மொபைலுக்கு ஒபேரா. கூகிளில் தேடுவதில் ஆரம்பித்து வலைப்பூக்களை படித்து பின்னூட்டம் போடுவது வரை அனைத்தையும் போகிற போக்கில் (On the go) செய்துவிடலாம். அதிலும் இப்போது லேட்டஸ்டாக வந்துள்ள வெர்ஷனில் Multiple Tabs, Password Manager போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மாற்று நிரலி: யூ.சீ பிரவுசர் (UC Browser)
ஒபெராவைப் போலவே சில சமயங்களில் ஒபெராவை விட வசதிகள் நிறைந்த ஓர் உலவி. இந்த உலவியில் மொபைல் பிரவுசிங் பற்றி அதிகம் தெரியாதவர்கள் கூட பயன்படுத்தும் வண்ணம் பல உதவிகரமான நூற்குறிகளை (Bookmarks) இணைத்திருக்கிறார்கள். முக்கியமான சங்கதி என்னவென்றால் ஒபேராவில் தமிழ் எழுத்துகளை படிப்பதற்கு ஏற்படும் சிரமம் யூ.சீயில் ஏற்படுவது இல்லை.

2. ஈ பட்டி (eBuddy)
பதினெட்டு பட்டி ஜனங்களும் அரட்டையடிக்க பயன்படுத்தும் நிரலி இதுதான். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரே நேரத்தில் யாகூ, ஜீடாக், பேஸ்புக் என்று அனைத்து விதமான கணக்குகளையும் பயன்படுத்தி சாட் செய்யலாம். இதை மிகவும் எளிமையாக பயன்படுத்தும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள். சொல்லப்போனால் கணினி மூலம் சாட் செய்வதைவிட இதன்மூலம் இன்னும் வேகமாக சாட்டடிக்கலாம்.

மாற்று நிரலி: ராக்கேடாக் (RockeTalk)
ரக்கேடாக்கிலும் ஒரே நேரத்தில் பல கணக்குகளை பயன்படுத்தி அரட்டையை போடலாம். ஆனால் இதில் பேஸ்புக் கணக்கை இணைக்கும் ஆப்ஷன் இல்லை. மேலும் ராக்கேடாக் சாட்டிங் செய்வதற்கு மட்டுமில்லாமல் ஒரு சோஷியல் நெட்வொர்கிங் நிரலியாகவும் விளங்குகிறது.

3. நியூஸ் ஹண்ட் (News Hunt)
செய்தி வேட்டை நிரலி உங்கள் மொபைலில் பல்வேறு செய்தித்தாள்களை படிக்க வழிவகை செய்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் ஆங்கில செய்திகள் மட்டுமில்லாமல் பல்வேறு பிராந்திய மொழிகளிலும் (பிராந்தி மொழி அல்ல) செய்திகளை படிக்கலாம். தற்போதைக்கு நான்கு தென்னிந்திய மொழிகள் உட்பட ஒன்பது மொழிகளில் நீங்கள் செய்தி படிக்கலாம். தமிழைப் பொறுத்தவரையில் தினகரன் மற்றும் தினமலர் நாளிதழ்களை நீங்கள் படிக்கலாம். கூடிய விரைவில் தனது சேவைகளை விரிவுபடுத்தப் போவதாக வலைத்தளம் குறிப்பிடுகிறது.

மாற்று நிரலி: பினு நியூஸ் (Binu News)
பினுவில் செய்திகள் தவிர்த்து கூகிள், விக்கிபீடியா, டிக்ஷனரி என்று மேலும் பல சேவைகள் இருக்கின்றன. செய்திகளிலும் இந்தியா மட்டுமில்லாமல் பன்னாட்டு செய்திகளும் படிக்க கிடைக்கின்றன. நியூஸ் ஹண்ட் நிரலியோடு ஒப்பிடும்போது தினமலர் செய்திகளை பினு வழங்குவதில்லை ஆனால் அதற்கு பதிலாக BBC தமிழ் செய்திகளை தருகிறது.

4. க்ரிக் செங்கா (Crick Zenga)
கிரிக்கெட் விரும்பிகளுக்கான நிரலி. எளிமையாக பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிரலியில் கிரிக்கெட் ஸ்கோர்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம். மேலும், நடந்து முடிந்த போட்டிகளின் முடிவுகள், இனி வரவிருக்கும் போட்டிகளின் அட்டவணைகள், கிரிக்கெட் சம்பந்தமான செய்திகள் போன்ற தகவல்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.

மாற்று நிரலி: க்ரிகின்போ மொபிகாஸ்ட் (Cricinfo Mobicast)
க்ரிகின்போ என்ற பிரபல கிரிக்கெட் வலைதளத்தின் சார்பாக வெளிவந்துள்ள நிரலி. இதில் கிரிக்கெட் ஸ்கோர்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்வதொடு மட்டுமில்லாமல் கமெண்ட்ரி கூட பார்க்க முடியும். செங்காவோடு ஒப்பிட்டு பார்த்தால் மொபிகாஸ்ட் பல விதமான போன்களிலும் பயன்படுத்த முடியும். மொபிகாஸ்ட் மூலம் கிரிக்கெட் சம்பந்தமான போட்டோக்களை பார்க்கும் வசதியும் உள்ளது.

5. ப்ரூவ் அரோமா (Broov Aroma)
பெயரைக் கேட்டால் காப்பிக்கொட்டை விளம்பரம் தான் நினைவுக்கு வருகிறது. பட் இது ஒரு அகராதி (Dictionary). அதாவது English to English dictionary. நாம் அர்த்தம் புரியாமல் திணறும் வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லிக்கொடுக்கிறது. தற்போது இந்த நிரலியில் விக்கிபீடியாவும் இணைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லமல் ஜோக்ஸ், பொன்மொழிகள், சிறுகதைகள், சமையல் குறிப்புகள் போன்ற ருசிகரமான தகவல்களையும் இந்த நிரலியின் மூலம் நாம் பெறலாம்.

மாற்று நிரலி: வோர்ட்னிக் டிக்ஷனரி (Wordnik Dictionary)
பினு மற்றும் வோர்ட்னிக் இணைந்து வழங்கும் இந்த நிரலியும் ஆங்கில வார்த்தைகளுக்கு எளிதான ஆங்கில வார்த்தைகளில் விளக்கம் கொடுக்கிறது. மேலும் அந்த வார்த்தையின் பயன்பாட்டினை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவது இதன் சிறப்பு. தற்போதைக்கு Google Translate வசதியின் மூலம் ஆங்கில வார்த்தைகளை ஹிந்தியில் மொழிபெயர்த்து தருகிறது.

நிரலிகளுக்கெல்லாம் நிரலி: ஸ்நாப் டியு (Snaptu)
பல்வேறு நிரலிகளை ஒரே கூரையின் கீழ் கொடுக்கும் ஓர் அற்புத நிரலி. மொபைல் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய ஓர் நிரலி. பேஸ்புக், டுவிட்டர், ஆர்குட், பிளிக்கர், பிகாஸா போன்ற இன்னும் ஏராளமான சோஷியல் நெட்வொர்கிங் நிரலிகளை இந்த ஒரே நிரலியின் மூலம் பயன்படுத்தலாம். செய்திகள், வானிலை அறிக்கை, கிரிக்கெட் ஸ்கோர் பல்வேறு நாட்டுநடப்புக்களையும் தெரிந்துக்கொள்ளலாம். கூகிள், யாஹூ, விக்கிபீடியா இன்னும் இன்னும் என ஏராளமான பயன்பாடுகளை அள்ளித்தருகிறது இந்த ஸ்நாப் டியு.

பி.கு: மேலே குறிபிட்டுள்ள நிரலிகள் அனைத்தும் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. மேலும் இந்த நிரலிகளை மொபைலில் பயன்படுத்தும் போது ஜிபிஆர்எஸ் (GPRS) வசதி அவசியம் இருக்க வேண்டும்.

முதல் முறையாக தொழில்நுட்பம் சார்ந்த பதிவினை எழுதியிருக்கிறேன். உங்கள் ஆதரவையும் ஊக்கங்களையும் கொடுத்தால் தொடர்ந்து இதுபோன்ற பதிவுகள் எழுத வாய்ப்பாக அமையும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 October 2010

எந்திரனின் முன்னோடி - Bicentennial Man

வணக்கம் மக்களே...

கடந்த மாதம் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த மெயிலில் உலக சினிமாக்களைப் பார்த்து காப்பி அடிக்கும் ஷங்கர், மணிரத்னம் மற்றும் கெளதம் மேனன் போன்றவர்களின் திறமை பற்றி குறிப்பிட்டிருந்தார். மேற்கூறிய மெயிலில் கடைசியாக எந்திரன் படம் ஹாலிவுட் படமான Bicentennial Man படத்தின் தழுவல் என்று குறிப்பிட்டிருந்ததால் எப்படியாவது எந்திரன் படத்தை பார்ப்பதற்கு முன்பாக அதன் ஒரிஜினல் பதிப்பான இந்தப் படத்தை பார்த்துவிட வேண்டுமென்று எண்ணினேன். அப்படி இப்படி என்று கூகிளாண்டவரின் உதவியோடு படத்தினைக் கண்டுபிடித்து பதிவிறக்கினேன். சப் டைட்டில் இல்லாமல் பார்த்தால் ஒரு மண்ணும் புரியாது என்பதால் சப் டைட்டிலையும் தேடி எடுத்தேன். நினைத்தபடி எந்திரன் படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஒரு பின்னிரவில் படத்தைப் பார்த்துவிட்டேன். ஆனால் பதிவெழுத தான் சமயம் வைக்கவில்லை.

Title: Bicentennial Man
Tagline: One robot's 200-year journey to become an ordinary man
Country: USA
Language: English
Year: 1999
Genre: Science Fiction, Drama
Cast: Robin Williams, Embeth Davidz, Sam Neill
Director: Chris Columbus
Story: Isaac Asimov
Cinematographer: Phil Meheux
Editor: Neil Travis

எந்திரன் படத்தின் பாடலொன்றில் "ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ...." என்று எழுதியிருப்பார்கள். அந்த ஐசக் அசிமோவ் யாரென்றால் ஒரு ரஷ்ய எழுத்தாளர். அதாவது Bicentennial Man எப்படி எந்திரன் படத்துக்கு முன்னோடியோ அதுபோல ஐசக் அசிமோவ் என்பவர் நம்ம ஊர் சுஜாதாவிற்கெல்லாம் முன்னோடி. 1976ம் ஆண்டில் (அப்பவே எந்திரன் கதை ரெடியாடிச்சு...) அசிமோ எழுதிய குறுநாவல் ஒன்றின் கதையையும் 1993ம் ஆண்டு அவர் எழுதிய Positronic Man என்ற நாவலின் கதையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதே இந்த திரைப்படம். 2004ல் வெளிவந்த i, robot திரைப்படம் கூட இவர் எழுதிய சிறுகதை தொகுப்பை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதே.

எந்திரன் படத்தின் அதிரடியான ட்ரைலரை பார்த்துவிட்டு இந்த படத்தை பார்த்தபோது கண்டிப்பாக இதற்கும் எந்திரனுக்கும் துளியளவும் ஒற்றுமை இருக்காது என்றே தோன்றியது. ஏனெனில், Bicentennial Man ஒரு ரோபோவின் உணர்வுகளைச் சொல்லும் மென்மையான திரைப்படம். ஒரு ரோபோ உணர்ச்சி பெற்று, உயிர் பெற்று மனிதனாகும் கதை.

கதை 2005ல் ஆரம்பிக்கிறது. ஜுராசிக் பார்க் படங்களில் டைனோசர் பற்றிய ஆராய்ச்சியாளராக நடித்திருப்பாரே, Sam Neill அவர் தனது வீட்டு உபயோகத்திற்காக ஒரு ரோபோ வாங்கி வருகிறார். ஆரம்பத்தில் ரோபோவை அவரது குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை. பின்னர் சாம் நெயிலின் இரண்டாவது குழந்தைக்கு மட்டும் ரோபோவை பிடித்துவிடுகிறது. காலப்போக்கில் தனது ரோபோவுக்கு ஆறாவது அறிவு இருப்பதை உணர்ந்துக்கொள்ளும் சாம் நெய்ல், அதற்கு மனித உணர்ச்சிகள் பற்றி பாடம் கற்பிக்கிறார். பின்னர் ரோபோவுக்காக வங்கி கணக்கு தொடங்குவது, ரோபோவுக்கு கோர்ட் சூட் போடுவது என்று மென்மேலும் புரட்சிகள் பலவற்றை செய்கிறார். ஒரு கட்டத்தில் ரோபோ சிந்திக்க ஆரம்பித்து தான் சுதந்திரமாக செயல்பட வேண்டுமென விருப்பம் தெரிவிக்கிறது. அது விருப்பம் போல சுதந்திரம் கிடைத்ததும், அது தன்னைப்போல ரோபோ ஏதும் உலகில் உள்ளதா என்று தேடி பயணமொன்றை மேற்கொள்கிறது. ஆண்டுகள் பல கடந்தும் பயணம் வெற்றிபெறவில்லை. இறுதியாக ஒரு ஆராய்ச்சியாளரை கண்டுபிடிக்கும் ரோபோ அவர் மூலமாக உயிர் பெற்று, உடல் பெற்று, மனித உணர்வுகள் பெற்று மீண்டும் வீடு திரும்பி சாம் நெய்லின் கொள்ளுப் பேத்தியை (!!!) கைபிடிப்பதே கதை. நம்ம தமிழ் சினிமா போலவே கிளைமாக்ஸ் காட்சி கோர்ட்டில். கதாநாயகனான ரோபோவை மனிதனாக ஏற்றுக்கொண்டு தீர்ப்பளிப்பதொடு நாயகனின் உயிர் பிரிய படம் நிறைவடைகிறது.

இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த ஒரு விஷயம் வசனம். க்ரேஸி மோகன் ஸ்டைலில் வார்த்தைகளை வைத்து ஆங்காங்கே விளையாடி இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, bored - board, weight - wait இதுபோல ஒரே உச்சரிப்பு கொண்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தது சிறப்பு. ரோபோவாகவும் பின்னர் மனிதனாகவும் ராப் வில்லியம்ஸ் திறம்பட நடித்திருக்கிறார். தன்னைப்போல உணர்ச்சிகொண்ட ரோபோவைக் கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று ஒரு டான்ஸ் ஆடும் பெண் ரோபோ பின்னால் போவதையும் பின்னால் கோபம் கொண்டு அதை உடைத்தெறிவதுமாக கலக்குகிறார். பாட்டி - பேத்தி என்று இரட்டை வேடங்களில் நடித்திருந்த நாயகியும் கூட சிறப்பாகவே நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் எனக்கு பிடித்த காட்சி ஒன்று உண்டு. தனது இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்த பிறகு அன்றிரவு சாம் நெய்ல் தனியாக அமர்ந்திருப்பார். அங்கே ரோபோ சென்று அவரிடம் பேச்சு கொடுக்கும். அப்போது சாம் நெய்ல் தனது இரண்டு மகள்களும் தன்னை விட்டுப் போய்விட்டதாக வருத்தப்படுகிறார். இதைக்கேட்ட ரோபோ "நான் இருக்கிறேன்" என்று சொல்வதும் அதற்கு ஆங்கிலத்தில் "One is still there..." என்ற வசனமும் நெகிழ்ச்சியாக இருந்தது.

1999ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றே கூறலாம். உணர்ச்சிகரமான படங்களை மேலை நாட்டவர்கள் விரும்பாதது கூட காரணமாக இருக்கலாம். சிறந்த மேக் அப்பிற்கான ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டாலும் விருது கிடைக்கவில்லை. எனக்கென்னவோ இந்தப் படத்தில் வரும் நாயகன் பாத்திரம் சுஜாதாவின் ஜீனோவை நினைவுபடுத்துகிறது. ஆனால் ஏனோ சுஜாதா, ஐசக் அசிமோவை பார்த்து காப்பி அடித்தார் என்று சொல்ல மனம் வரவில்லை.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

18 October 2010

தெரியலையே மச்சி... ஒரு குவார்ட்டர் சொல்லேன்...!

வணக்கம் மக்களே...!

மீண்டும் ஒரு பர்சனல் பதிவு. வழக்கமாக என் வாழ்க்கையில் முக்கியமான சம்பவம் எது நடந்தாலும் பதிவெழுதி விடுவது வழக்கம். அதுபோலத்தான் இந்த முறையும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பதிவைப் போடலாம் என்று கணினி முன் வந்து அமர்ந்தேன். வேலையை விட்ட பிறகும் அந்த அலுவலகத்திற்கு அலப்பறையை கொடுக்க வேண்டாமென்று கொஞ்சம் தயங்கினேன். ஆனால் இது பற்றி கண்டிப்பாக ஏதாவது எழுத வேண்டுமென்று நண்பர்கள் சிலர் கேட்டுக்கொண்டனர். (யார் அந்த நண்பர்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது - எல்லாம் ஒரு ப்லோவுல விடுற பீலா தான்).

ஏன் இந்த முடிவு...?
வேலையை விடப்போகிறேன் என்று சொன்னதில் இருந்து அலுவலக நண்பர்கள் யாரைப் பார்த்தாலும் இதே கேள்வியையே என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தனர். (எத்தனை பேருடா இதே கேள்வியை கேப்பீங்க...? என்று "சிவாஜி" ரஜினி ஸ்டைலில் மனதிற்குள் கறுவிக்கொண்டேன்). ஆனால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியாமல் மென்று முழுங்கினேன். அவ்வப்போது "அரசு" படத்தில் வரும் வடிவேலு காமெடி மனதிற்குள் வந்து செல்லும். ஆனால் அதற்காக அலுவலகத்தை குறை சொல்ல விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் யாரைப் பார்த்தாலும் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஏன் இந்த வேலையில் இருக்கிறாய் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். பக்கம் பக்கமாக பேசுவது தானே அக்கம் பக்கத்தின் வேலை என்று தொடக்கத்தில் இது பற்றியெல்லாம் நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. ஆனால் சமீப காலமாக reference என்ற பெயரில் ஒன்றும் தெரியாத கூட்டமொன்று ஓ.எம்.ஆர் பக்கம் சுற்றிக்கொண்டிருப்பதாக அறிந்துக்கொண்டேன். மனதிற்குள் எரிந்துக்கொண்டேன். கல்லூரி காலத்தில் கல்வியைத் தவிர மற்ற அனைத்து கருமத்தையும் கற்றுக்கொண்டிருந்த கழிசடைகள் சிலர் இன்று டேக் ஹோம் 25K டா மச்சான் என்று சொல்கின்றனர். இவனுக்கெல்லாம் யாருடா வேலை கொடுத்தது என்று யோசித்து முடிப்பதற்குள் எங்க மாமா மூலமா கெடச்சது, எங்க மச்சான் வாங்கித் தந்தார் என்று சொல்லி வயிற்றுக்கடுப்பை கிளப்பி விடுகின்றனர். இப்படியே போய்க்கொண்டிருந்தால் கலியுகத்தில் நாமொரு டம்மி பீஸாகிவிடுவோமென்று உணர்ந்துக்கொண்டு வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

நானும் அலுவலகமும்...
இது வரை பணியாற்றிய அலுவலகத்தை பற்றி சில வார்த்தைகள். நான் அலுவலகத்தையும், அலுவலகம் என்னையும் 60% கூட பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். என் மனதில் அலுவலகம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும், அலுவலகத்திற்காக இதையெல்லாம் செய்யலாம் என்று சில புதுமையான எண்ணங்கள் தோன்றியதுண்டு. ஆனால் எனக்கே உரிய சோம்பேறித்தனத்தால் எதையும் செய்ய முடியாமல் போய்விட்டது. யாராவது தட்டி கொடுத்திருந்தால் கூட முட்டிமோதி எதையாவது செய்திருப்பேன்.

நைட் ஷிப்ட் பற்றி சில வரிகள்...?
அது ஒரு உன்னதமான அனுபவம். ஒட்டுமொத்த தமிழகத்து வாடிக்கையாளர்களுக்கும் சேர்த்து நாங்கள் நான்கு பேர் மட்டுமே பணிபுரிந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போதே மனதிற்குள் ஜில்லென்று இருக்கும். நைட் ஷிப்ட் பற்றி மற்றவர்கள் அலுவலகத்து நேரத்தில் தூங்கிக்கொண்டிருப்பவர்கள் என்று அனுமானிக்கக்கூடும். ஆனால் நைட் ஷிப்டில் குறைந்தது ஒரு மாத காலமாவது இருந்து பார்த்தால் தான் தெரியும் அந்த ஆணி எப்படியெல்லாம் குத்துமென்று.

வாடிக்கையாளர்கள்...?
பக்கம் பக்கமாக எழுதலாம். இது வரைக்கும் எங்க அப்பா அம்மா கூட என்னை அந்த மாதிரியெல்லாம் திட்டி இருக்க மாட்டாங்க. கால் கடுக்க கால் எடுத்துக்கொண்டிருக்கும்போது ஒருத்தன் ஜஸ்ட் லைக் தட் ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்துவிட்டு போய்விடுவான். அந்த வார்த்தையில் இருந்து வெளியில் வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். கஸ்டமர் கேருக்கு கால் பண்ணி திட்டுவதில் அப்படி என்னதான் சந்தோஷமோ...!!!

கால் சென்டர் பற்றி ஒரு நாவல்...
ஏற்கனவே சில பதிவுகள் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த 14 மாத அனுபவத்தை வைத்து ஒரு 200 பக்க நாவலையே தயாரித்து வைத்திருக்கிறேன். ஆனால் அதற்கு எவ்வாறு உரிமம் பெறுவது, பதிப்பகங்களை எவ்வாறு நாடுவது, யாரிடம் சென்று இதைப் பற்றியெல்லாம் கேட்பது என்று தெரியாததால் கிடப்பில் போட்டு வைத்துள்ளேன். பதிவர்கள் யாருக்காவது இது பற்றி தெரிந்தால் தயவு செய்து சொல்லிக்கொடுங்கள்.

வேலையை விடும் போது "ஏன் இந்த முடிவு...?' என்று நச்சரித்த சமூகம் இப்போது "அடுத்தது என்ன செய்ய போகிறாய்...?" என்று கேட்க ஆரம்பித்திருக்கிறது. அவர்களுக்கெல்லாம்  இப்போதைக்கு என்னுடைய ஒரே பதில்...

"தெரியலையே மச்சி... ஒரு குவார்ட்டர் சொல்லேன்...!!!"
என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன்
பின் குறிப்பு: ராஜினாமா என்ற அகராதி பிடித்த வார்த்தைக்கு எத்தனையோ அகராதிகளில் தமிழ் அர்த்தம் தேடியும் கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். மேலும் சில வார்த்தைகளுக்கு கூட தமிழர்த்தம் தேவைப்படுகிறது.

Post Comment

1 October 2010

எந்திரன் - உணர்ச்சிகள் இல்லை....!

வணக்கம் மக்களே...

ஆன்லைன் புக்கிங் தந்த ஆதரவில் எந்திரன் படத்திற்கு முதல் நாள் டிக்கெட் கிடைத்தது. ஆனால் வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருக்கும் கொளத்தூர் கங்கா திரையரங்கில் தான் கிடைத்தது. பத்து டிக்கெட்டை எடுத்து வைத்துக்கொண்டு நான் பட்ட பாடு இருக்கே... அய்யுய்யுய்யோ.... சொன்னா நம்ப மாட்டீங்க... வர்றதுக்கு ஆள் இல்லைங்க... எப்படியோ நண்பரின் உறவினர், உறவினரின் நண்பர் என்று எப்படி எல்லாமோ தேடி ஆள் சேர்த்துவிட்டேன். பதிவில் திரைக்கு முன் என்று போட்டு ஒரு பத்தியை இணைப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே திரையரங்கிற்கு சென்றுவிட்டேன். ஆனால் பெரிய அளவில் ஆரவாரமில்லை. இரண்டே பேனர்கள் மட்டுமே கட்டியிருந்தனர். விசிலடிச்சான் குஞ்சுகள் சிலர் எதற்காக கத்துகிறோம் என்ற காரணமே தெரியாமல் கத்திக் கொண்டிருந்தனர். அரங்கின் உள் நுழையும் வரை சுற்றிச்சுற்றி வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். தனிப்பத்தி போடும்படி எதுவும் சுவாரஸ்யமாக நடக்கவில்லை. எனவே நேரடியாக விமர்சனத்திற்கு செல்வோம்....

அதற்கு முன்னால் சில வரிகளை சொல்லியே ஆகவேண்டும். எனக்கு ஷங்கரையும் ரஜினியையும் கொஞ்சம் கூட பிடிக்காது. ஆனால் அதையெல்லாம் தாண்டி படம் மிகவும் பிடித்திருந்தது, திரைக்கதை துரித வேகத்தில் அமைந்திருந்தது, அது மட்டுமில்லாமல் பல கோடி செலவு செய்து பத்து ஆண்டுகள் பாடுபட்டு எடுத்த படத்திற்கு கண்டிப்பாக பாசிடிவ் விமர்சனம் எழுதியே ஆகவேண்டும் என்றெல்லாம் தோன்றியது முதல்பாதி முடியும் வரை. அதன்பிறகு கொஞ்சம் தலை சுற்றியதும், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதும் ஏன் என்று தெரியவில்லை.

கதைச்சுருக்கம்
விஞ்ஞானி வசீகரன், தனது பத்து வருட உழைப்பில் சகலகலாவல்லவனாக ரோபோ ஒன்றினை உருவாக்குகிறார். அதுபோல பல ரோபோக்களை உருவாக்கி இந்திய ராணுவத்திற்கு பரிசளிக்க வேண்டுமென்பதே அவரது லட்சியம். ஆனால் இதற்கு நேர்மாறான எண்ணம் கொண்டவர் வசீகரனின் விஞ்ஞான குருவான விஞ்ஞானி போஹ்ரா. அழிவு சக்தி கொண்ட ரோபோக்களை உண்டாக்கி தீவிரவாதங்களில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவேண்டுமென்பதே அவரது விருப்பம். இடையில் இங்கே வசீகரனுக்கும் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் சனாவுக்கும் காதல். உன் ரோபோ முட்டாள் ரோபோ என்று விஞ்ஞானி போஹ்ரா குற்றம் சாட்டியதால் வசீகரன் ரோபோவுக்கு உணர்வுகளை கற்பிக்க அதற்கும் சனா மீது காதல் வருகிறது. வசீகரனுக்கும் ரோபோவுக்கும் நடக்கும் காதல் தகராறில் ரோபோவை உடைத்து குப்பையில் போடுகிறார் வசீகரன். விஞ்ஞானி போஹ்ரா குப்பையை அள்ளிக்கொண்டு வந்து கேடு கெட்ட சிப் ஒன்றினை சொறுக ரோபோ மனித இனத்திற்கு எதிராகி பல உயிர்களை கொன்று குவிக்கிறது விஞ்ஞானி போஹ்ரா உட்பட. கடைசியில் சனாவுடன் கை கோர்ப்பது வசீகரனா ரோபோவா என்பதே மீதிக்கதை. என்னது... தலை சுற்றுகிறதா... எனக்கும் அப்படித்தாங்க இருந்தது.

விரிவான கதை: (திரையரங்கில் தான் பார்ப்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் அடுத்த இரண்டு பத்திகளை ஸ்கிப் செய்துவிடவும்) 

முதல் பாதி முழுக்க சிட்டி செய்யும் அதிசயங்களை வைத்து ஜாலியாக கதையை நகர்த்தியிருக்கிறார்கள். ரஜினி உருவாக்கிய ரோபோவின் பெயர் தான் சிட்டி. வழக்கமாக ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துகொண்டும் ஒரு குத்துமதிப்பாக அரசியல் வரிகளை இணைத்து ரசிகர்களை கிறுக்கர்களாகவும் மாற்றும் ஒப்பனிங் சாங் இந்தப் படத்தில் இல்லை. அதற்கு பதிலாக டைட்டில் பாடலாக புதிய மனிதா பாடலும் பேக்ரவுண்டில் ரஜினி எந்திரனை அசெம்பிள் செய்யும் காட்சியும் சிறப்பாக பொருந்தியிருந்தது. டைட்டிலில் கலாநிதி மாறன் பெயர் போட்டதும் ஏதோ இவர்களும் கலாநிதி மாறனும் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் போல ஒரு கும்பல் ஓ வென்று கத்தி உயிரை வாங்கியது. இவ்வாறாக ரோபோ செய்வதில் ரஜினி பிஸியாக இருக்க காதலி ஐஸ் கோபித்துக்கொள்கிறார். ஐஸை சமாதானப்படுத்த ரஜினி போக அங்கே சில முத்த பரிமாற்றங்கள். (நோ... நோ... ரசிகர்கள் யாரும் கோபப்பட வேண்டாம்... ஒரு தாத்தா தனது பேரக்குழந்தையின் மீது கொண்ட பாசத்தில் முத்தம் கொடுத்ததாக நினைத்துக்கொள்வோம்). அப்படியே கட் பண்ணா பிரேசில் பாலைவனத்துல ரஜினியும் ஐஸும் காதல் அனுக்கள் டான்ஸ் ஆடுறாங்க. சும்மா சொல்லக்கூடாது... உண்மையில் பாலைவனத்திற்கு நடுநடுவே ஏரிகள் அமைந்த அந்த லொகேஷன் படு சூப்பர். அடுத்த காட்சியில் எந்திரனை விஞ்ஞானிகள் மத்தியில் ரஜினி அறிமுகப்படுத்த உடன் இருக்கும் ஐஸ் இம்ப்ரெஸாகி எந்திரனை இரண்டு நாட்களுக்கு அவரது வீட்டுக்கு அழைத்து செல்கிறார். பரீட்சைக்கு படிக்கும் ஐஸை தொந்தரவு செய்யும் பக்கத்து வீட்டு பக்கிகள், சவுண்ட் சர்வீஸ் கும்பல் ஆகியோரை அடித்து ஹீரோயிசம் காட்டுகிறார். பரீட்சைக்கு பின்நவீனத்துவ முறையில் பிட் கொடுத்து பாஸாக்குகிறார். பரீட்சை முடிந்து திரும்பும்போது மின்சார ரயிலில் அடியாள் கும்பலுடன் ஒரு பைட் சீன். மேற்படி சீனில் கிராபிக்ஸ் ரொம்பவே தூக்கல். குழந்தைகள் அதிகம் ரசிப்பார்கள். எந்திரனின் ஆற்றல் ஆபத்தானது என்று காரணம் கூறி அதனினை அப்ரூவ் செய்ய மறுக்கிறார் விஞ்ஞானி வில்லன். பின்னர் ஒரு தீ விபத்தில் எந்திரனை வைத்து ரஜினி சாகசங்கள் நிகழ்த்திக்காட்ட முயன்று அது விபரீதத்தில் முடிகிறது. அதற்குப்பின் எந்திரனுக்கு ஆறாவது அறிவாக உணர்ச்சிகளை கற்றுத்தருகிறார் ரஜினி. உணர்ச்சிகளை கற்றுக்கொண்ட எந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கும் ஒரு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் பார்க்கிறார். உணர்ச்சிப்பூர்வமான அந்த காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த சம்பவம் காரணமாக ஐஸ் உணர்ச்சிவசப்பட்டு எந்திரனுக்கு முத்தம் கொடுக்க, எந்திரனுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிருதுங்க. இடைவேளை.




இடைவேளை முடிந்ததும் ஏதோ கொசு மருந்து விளம்பரம் போட்டுவிட்டார்கள் என்றே எண்ணினேன். ஐஸை கடித்த கொசுவை எந்திரன் விரட்டி பிடிப்பதும் கொசு தங்களுக்குள்ளாக பேசிக்கொள்வதும் மொக்கை காமெடி. ஐஸின் பிறந்தநாள் விழாவில் ரஜினியும் எந்திரனும் ஐஸை போட்டி போட்டு காதலிக்க ஒரு கட்டத்தில் எந்திரன் ஐஸுக்கு முத்தம் கொடுத்து விடுகிறது. (யூ டூ ப்ரூட்டஸ்). ஐஸை தானும் காதலிப்பதாக சொல்லும் எந்திரனிடம் ரஜினியும் ஐஸும் சேர்ந்து யதார்த்தத்தை உணர்த்துகிறார்கள். எனினும் காதலை கைவிட முடியாமல் தவிக்கும் எந்திரனை உருவாக்கிய ரஜினியே அழித்து விடுகிறார். சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் வில்லன் உடைந்து போன பாகங்களில் இருந்து மீண்டும் எந்திரனை உருவாக்கி அதில் அழிவு சக்தி கொண்ட சிப் ஒன்றினை இணைத்துவிடுகிறார். அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கு சிட்டியின் அட்ராசிட்டி. ஹாலிவுட் படங்களில் வருவது போல அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகள். (ராம நாராயணனின் குட்டிப் பிசாசு படத்தில் வருவது போல என்றுகூட சொல்லலாம்). நீண்ட நெடிய கிளைமாக்ஸ் காட்சிக்குப்பின் ரஜினி எந்திரனின் உடலில் இருந்த அழிவுசக்தி சிப்பை கழட்டி எரிய, கட் பண்ணா கோர்ட். (அட... வழக்கமா தமிழ் சினிமாக்கள் அங்க தானப்பா முடியும்). இறுதிக்காட்சியில் ரஜினியும் ஐஸும் இணைய எந்திரனை மட்டும் பிரித்து எறிந்துவிடுகிறார்கள். கடைசியாக மனிதர்களின் கோபம், பொறாமை போன்ற உணர்வுகள் பற்றி எந்திரன் சொல்லும் மெசேஜ் நன்றாக இருந்தது.


கிராபிக்ஸ்:
படத்தின் நாயகன் கிராபிக்ஸ் தான் ரஜினி எல்லாம் அப்புறம் தான். எது கிராபிக்ஸ் எது உண்மை என்று கண்டுபிடிக்க முடியாதபடி செய்வதே உண்மையான கிராபிக்ஸ். அதை கச்சிதமாக செய்திருக்கிறார்கள் குழுவினர். இவர்களுக்கு உடந்தையாக கலை இயக்குனர் சாபு சிரிலும் கலக்கி எடுத்திருக்கிறார். படத்தில் ரஜினி ஸ்டைல் என்று சொல்லிக்கொள்ளும் பலதையும் கிராபிக்ஸ் மூலமே செய்திருக்கிறார்கள் என்பதால் ரஜினி ரசிகர்கள் ரொம்பவும் சிலிர்த்துக்கொள்ள வேண்டாம்.

ரஜினி:
விஞ்ஞானி வசீகரனாகவும் ரோபோ சிட்டியாகவும் இரட்டை வேடம். இருப்பினும் வசீகரன் கதாப்பாத்திரத்தை மட்டுமே ரஜினியாக பார்க்க முடிகிறது. வழக்கமாக ரஜினி மனிதராக வந்து செய்யும் சாகசங்களை எல்லாம் இந்தப் படத்தில் ரோபோவாக வந்து செய்கிறார். ஷங்கரின் பத்து வருட கனவு நிறைவேறியதா என்று தெரியவில்லை ஆனால் ரஜினியின் பத்து வருட ஐஸ் கனவு இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது.

ஐஸ்:
இந்தப் படத்தில் ஐஸுக்கு எதிர்பார்த்ததை விட முக்கியமான வேடம். ஐஸை பார்த்ததும் ரோபோவுக்கே காதல் வரும்போது நமக்கு வராதா. ஐஸின் உடை சம்பந்தப்பட்ட விஷயத்தில் மணி ரத்னத்திற்கு நான் ஒன்றும் சளைத்தவன் அல்ல என்று ஷங்கர் நிரூபித்திருக்கிறார்.






மற்றும் பலர்:
படத்தின் வில்லன் யாரோ டேனி டென்சொன்பா என்று சொன்னார்கள். ஆனால் அவர் சுத்த டம்மி பீசுங்க. எந்திரனுக்கு ஜட்டி மாட்டி விடும் உதவியாளர்களாக கருணாசும் சந்தானமும். சந்தானத்தை அநியாயத்துக்கு வேஸ்ட் பண்ணியிருக்காங்க. கொச்சின் ஹனீபாவும் கலாபவன் மணியும் தலா ஒரு மொக்கை காட்சியில் வந்து செல்கிறார்கள். பீட்டர் ஹெயினும் சாபு சிரிலும் ஆளுக்கொரு காட்சியில் முகம் காட்டுகிறார்கள்.

இசை & வசனம்:
இசையை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஏனென்றால் ரசிகர்கள் போட்ட கூச்சலில் ஒன்றையும் ரசிக்க முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக ரகுமான் கலக்கி இருப்பார் என்று புதிய மனிதா டைட்டில் இசையை கேட்ட போதே உணர முடிந்தது. சுஜாதாவின் வசனங்களும் அதுபோல தான். இரைச்சலில் ரசிக்க முடியவில்லை. இவர்கள் இவருக்காகவே பிறிதொரு நாளில் ரசிகர்கள் கூட்டம் ஆடி ஓய்ந்தபிறகு நைட்ஷோ பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.

எனக்குப் பிடித்த காட்சி:
ஐஸ் பரிட்சைக்காக படித்துக்கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருக்கும் மாரியாத்தா கோவிலில் சவுண்டாக பாடலை ஒலிபரப்பி இம்சை கொடுக்கிறது ஒரு கும்பல். அதை தட்டி கேட்கப்போகும் எந்திரன் அவர்களுடன் சண்டை போடுகிறார். அப்போது இரண்டே இரண்டு கைகளில் கத்தி, அரிவாள் என்று பல்வேறு ஆயுதங்களுடன் காட்சி அளிக்கும் எந்திரனை பார்த்து பெண்கள் சாமியாடுவது போலவும் சிலிர்ப்பது போலவும் காட்டி இருந்தது சிறப்பாக இருந்தது.

இந்தப் பதிவிற்கு ஏன் இந்தப் பெயர் வைத்தேன் என்று கேட்கிறீர்களா...? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்... இந்தப் படத்தில் ரஜினி தான் ஹீரோ என்று சொல்கிறார்கள். ஆனால் 90 சதவீதம் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ். ஐஸ் சம்பந்தப்பட்ட சில ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் ரஜினி டூப் - கிராபிக்ஸ் எதுவும் இல்லாமல் நடித்திருப்பார் போல. பேய்கள் பற்றி ரஜினியும் வடிவேலும் பேசிக்கொள்ளும் சந்திரமுகி காட்சியை கொஞ்சம் நினைவுக்கு கொண்டு வாருங்களேன். அந்தக் காட்சியில் இருந்த அந்த ஒரிஜினாலிடி இந்தப் படத்தில் சிற்சில காட்சிகளில் மட்டுமே காண முடிந்தது. எனவே தான் சொல்கிறேன்...

எந்திரன் - உணர்ச்சிகள் இல்லை....!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment