அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஒரு சினிமாவை அது வெளியாகி நான்கு
வாரங்கள் கழித்து திரையரங்கில் பார்ப்பதெல்லாம் எனக்கு பழக்கமே இல்லை.
இன்னொன்று, இப்பொழுது வெளியாகும் படங்களின் நிச்சய ஆயுள் ஏழு தினங்கள் மட்டுமே. ஒன்றிரண்டு
சில வாரங்கள் வரை தாக்கு பிடிக்கின்றன. வெளியாகி ஒரு மாதமாகியும் திரையரங்கில் படம்
ஓடுவதும், அரங்கு நிறைவதும் ஆச்சர்யம் தான் !
உண்மையில், போட்டு வைத்திருந்த
திட்டம் ஒன்று தள்ளிப் போய்விட கிடைத்த நேரத்தை நிரப்புவதற்காக துருவங்கள் பதினாறு
பார்த்தேன். தேவிபாலாவில் ஒரேயொரு காட்சி ஓடிக்கொண்டிருந்தது. நிறைய பேர் பைரவா
பார்க்க வந்துவிட்டு டிக்கட் கிடைக்காமல் து-16க்கு வந்திருந்தார்கள். ஆனால் படம்
முடியும்வரை திரையரங்கில் மரண அமைதி. அவ்வளவு லயித்துவிட்டார்கள் படத்தோடு. வேறொரு
படத்தை பார்க்க வந்துவிட்டு, டிக்கட் கிடைக்காமல் உள்ளே நுழைந்தவர்களை இப்படி
வியப்பில் ஆழ்த்துவதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் அசத்தியிருக்கிறார். வெல்கம் கார்த்திக் :) உங்களுக்காக இன்னும் பெரிய களங்கள் காத்திருக்கின்றன.
இப்படத்தில் ரஹ்மான் செய்திருக்கும்
ரோல் சந்தேகமே இல்லாமல் அஜித்தின் கேக் துண்டு. ரஹ்மான் வேடத்தை அஜித்தும், அந்த
புது போலீஸ்காரர் வேடத்தை ‘மங்காத்தா’ அஷ்வினும் செய்திருந்தால் செமத்தியாக
இருந்திருக்கும். இதுபோன்ற புது இயக்குநர்களுக்கு கிடைக்கும் பட்ஜெட்டிற்கு
எட்டாக்கனியாக இருப்பது பெரிய நடிகர்களின் சாபக்கேடு. நல்லவேளையாக து-16ஐ
திரையரங்கில் பார்த்துவிட்டேன். இல்லாவிட்டால் அனாவசியமாக குற்றவுணர்ச்சிக்கு ஆளாக
வேண்டியிருந்திருக்கும்.
காலைக்காட்சி தேவிபாலாவில் து16
பார்த்துவிட்டு மேட்னி தேவிகலாவில் அதே கண்கள் பார்த்தேன். கிட்டத்தட்ட
பச்சைக்கிளி முத்துச்சரம் மாதிரியான கதை. ஆனால் படம் ரொம்ப டிராமாட்டிக்.
இப்படித்தான் நடந்துச்சு என்று டைரக்டர் சொன்னால் கேள்வி எதுவும் கேட்காமல்
நம்பிவிட வேண்டும். மேலும் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை மிக எளிதாக
யூகிக்க முடிகிறது. ஒரு பாதி படம் முடிந்ததும், மீதிக்கதையை புரிந்துக்கொண்டு
திரையரங்கில் இருந்து நடையை கட்டிவிடலாம். ஒரு காட்சியில், ஹீரோ சிக்கலான ஒரு
இடத்தில் மாட்டிக்கொள்கிறார். அப்பொழுது பழைய ப்ளாக் & ஒயிட் படங்களில் போலீஸ்
விசில் அடிப்பார்களே அதுபோல சத்தம் கேட்கிறது. அதைக் கேட்டதும் என்ன ஏது என்று கூட
யோசிக்காமல் ஹீரோ அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுகிறார். ரோஹின் வெங்கடேசன், அடுத்த
வாய்ப்பில் அசத்துங்கள் !
தேவிபாலாவில் து16 முடிந்ததற்கும்,
தேவிகலாவில் அதே கண்கள் தொடங்கியதற்கும் இடையே ஒரு மணிநேர இடைவேளை கிடைத்ததும்
சட்டென நினைவுக்கு வந்தது ரிச்சி ஸ்ட்ரீட் பீஃப் பிரியாணி ! நான் பணிபுரியும்
அலுவலகம் ஸ்பென்ஸரில் உள்ளது. வாரத்தில் ஒருமுறையாவது அங்கிருந்து பஸ் பிடித்து,
அடுத்த ஸ்டாப்பில் இறங்கி ரிச்சி ஸ்ட்ரீட்டுக்கு வந்துவிடுவேன். பீஃப்
பிரியாணிக்காக ! பீஃப் சமைப்பதெல்லாம் ஒரு தனி கலை. இதுவரை நிறைய இடங்களில்
நான் பீஃப் பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன். நான்கு கடைகளில் சாப்பிட்டால் ஒரு
கடையில் நன்றாக இருக்கும். அந்த ஒரு கடையிலும் எல்லா நாட்களும் பக்குவம்
தவறாமல் வராது. ரிச்சி ஸ்ட்ரீட்டில் இதுவரை பத்து முறையாவது சாப்பிட்டிருப்பேன்.
ஒருமுறை கூட பக்குவம் தவறியதில்லை. ஒவ்வொருமுறையும் அதே ருசி. இன்னொரு
சிறப்பம்சம், இந்த பிரியாணி கடையில் இரண்டாயிரம் நோட்டை நீட்டினால் கூட நொட்டை
சொல்லாமல் பொறுமையாக பத்தொன்பது நூறு ரூபாய் தாள்களுடன் சில்லறை தருகிறார்கள்.
நீண்ட வாரயிறுதிக்கு வயநாட் செல்வதாக
திட்டமிட்டிருந்தோம். கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டு திட்டத்தை மசினகுடியாக
மாற்றிக்கொண்டோம். பதிமூன்று மணிநேர பைக் பயணம், பந்திப்பூர் வனச்சாலையை கடந்து
சென்றது, மோயர் பள்ளத்தாக்கு மற்றும் சிகூர் அருவியைக் கண்டது, ஊட்டி மேகங்களை
தொட்டுவிட்டு வந்தது என்று நிறைய இருக்கிறது. தனியாக எழுத வேண்டும்.
ராகவா லாரன்ஸின் படங்களில் நடிக்கும்
ஹீரோயின்களை கவனித்தால் ஒரு பேட்டர்ன் தெரிகிறது. அநேகமாக லாரன்ஸுக்கு
வெள்ளைத்தோல் கொண்ட பெண்கள் மீது ஒரு ஈடுபாடு என்று நினைக்கிறேன். இவருடைய
முனியில் வேதிகா, காஞ்சனாவில் லக்ஷ்மி ராய் (இப்படத்தில் இந்த மாற்றுநிற ஈர்ப்பு
குறித்து ஒரு பாடலே வருகிறது), காஞ்சனா 2ல் டாப்ஸி, மொட்ட சிவா கெட்ட சிவாவில்
நிக்கி கல்ராணி (முதலில் பேசப்பட்டவர் காஜல் அகர்வால்), சிவலிங்காவில் ரித்திகா
சிங் என்று அடித்து ஆடுகிறார். போலவே அவருடைய சமீப படங்கள் எல்லாமே ஏறத்தாழ ஒரே
டெம்ப்ளேட் தான். தெரியாத்தனமாக முனி ஹிட்டாகிவிட அதே ரூட்டில் படங்களை எடுத்து
தள்ளிக்கொண்டிருக்கிறார். (முதலில் கோவை சரளா நடிப்பதற்கு தடை போட வேண்டும்).
சிவலிங்கா மற்றும் மொ.சிவா கெ.சிவா படங்களின் டிரைலர்களை பார்த்தேன். எப்படியும்
நான் இப்படங்களை எல்லாம் பார்க்கப் போவதில்லை. மற்ற சினிமா ரசிகர்களை நினைத்தால்
தான் கவலையாக இருக்கிறது.
இன்னொரு கவலை சிவலிங்காவில்
செல்லக்குட்டி ரித்திகா நடித்திருப்பது. இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை என்று
இரண்டு அல்வா மாதிரியான படங்களில் நடித்திருக்கிறார். இரண்டுமே வசூல்ரீதியாக
வெற்றி பெற்று, அதே சமயம் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்ற படங்கள். கதாநாயகிகளை
பொறுத்தவரையில் இப்படி தொக்காக இரண்டு படங்கள் கிடைப்பது அபூர்வம். அந்த ரூட்டைப்
பிடித்துக்கொண்டு அப்படியே நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்திருக்க
வேண்டும். தெரியாமல் போய் சிவலிங்கா என்றொரு புதைகுழியில் காலை விட்டிருக்கிறார்.
அதிலே ரங்கு ரக்கர ரங்கு ரக்கர என்று குத்தாட்டம் போட வைத்திருக்கிறார்கள்.
பார்க்கவே பாவமாக இருக்கிறது. பாவத்துக்கு படம் தெலுங்கில் வேறு வெளியாகிறது.
சொல்லவே தேவையில்லை. ரித்திகாவை யாராவது தமிழ் இயக்குனர்கள்தான் மனது வைத்து
காப்பாற்ற வேண்டும்.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|