29 May 2011

மாவீரன் - காஜல் ஸ்பெஷல்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பொதுவாக நான் டப்பிங் படங்கள் பார்ப்பதில்லை. அதிலும் தெலுங்கு டப்பிங் படங்கள் என்றால் கண்டிப்பாக உவ்வே. இருந்தாலும் மாவீரன் படத்தினை பார்க்க முடிவு செய்ததற்கு மூன்று காரணங்கள்.

1. சமீப காலமாக பீரியட் படங்களின் மீது ஏற்பட்டுள்ள அதீத ஆர்வம்.
2. இந்த படத்துடைய தமிழ் ரீ-மேக்கில் "தல" அஜித் நடிக்க இருப்பதாக ஒருகாலத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
3. மிகவும் முக்கியமாக, என்னுடைய செல்லக்குட்டி, வெல்லக்கட்டி காஜல் அகர்வால் இரு வேடங்களில் நடித்த படம்.

சில வருடங்களுக்குப்பின் (புதிப்பிக்கப்பட்டபின்பு முதல்முறையாக) தேவி திரையரங்கம் சென்றிருந்தேன். ப்ளாக் டிக்கெட் விற்கும் ஆயாக்களை காணவில்லை. டிக்கெட் கவுண்டர் நவீன மயமாக்கப்பட்டிருந்தது. திரையரங்கின் உள்ளே படம் தொடங்குவதற்கு முன்பும், இடைவேளையின் போதும் சாக்ஸபோன் இசை ஒலிபரப்பப்பட்டது. ஹை-கிளாஸ் தியேட்டர் ஆக்கிட்டாங்களாமாம்.

கதைச்சுருக்கம்:
ஏற்கனவே பெரும்பாலானோர் பார்த்த மகதீரா டப்பிங் என்றாலும் சம்பிரதாயத்திற்காக சில வரிகளில் கதை. நானூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜ பரம்பரையை சேர்ந்த காஜல் அகர்வாலுக்கும் போர்வீரன் ராம் சரணுக்கும் காதல். சந்தர்ப்ப சூழ்நிலைகள், சதி வேலைகள் காரணமாக இருவரும் இறக்க நேரிடுகிறது. அப்போது சேராமல் போனவர்கள் கலியுகத்தில் மீண்டும் பிறந்து காதலிக்கிறார்கள். கூடவே வில்லனும் மறுபடி பிறந்து தொலைக்கிறார். இந்தமுறையாவது காதலர்கள் சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை.


கதாநாயகனாக சிரஞ்சீவி மகன் ராம்சரண். முதல்காட்சியிலேயே டாகுடரை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு பைக் ஜம்ப் செய்து நம்மை சிரிக்க வைக்கிறார். விடுங்க, அதெல்லாம் தெலுங்கு சினிமாவின் தலைவிதி. ராம்சரணிடம் அழகு, திறமை எல்லாம் இருந்தாலும் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஜொலிக்க மாட்டார். தமிழ் சினிமா ரசிகர்களின் மென்டாலிட்டி அப்படி.

காஜல், இவங்க சும்மா சிரிச்சாலே தீயா இருக்கும். இந்தப்படத்திலோ தாராளமாக கவர்ச்சியையும் காட்டியிருக்கிறார், கூடவே நடிப்பையும். (அதற்காக க்ளீவேஜ் தெரியும் ஸ்டில்லை பேனரில் போட்டது டூ மச்). காதலை கன்பார்ம் செய்வதற்கு முன்பு காதலனின் வேலை, சம்பளம், பேங் பேலன்ஸ் என்று எல்லாவற்றையும் உஷாராக கேட்டுத்தெரிந்துக்கொள்ளும் நவநாகரீக யுவதியாக ஒரு கேரக்டர். இளவரசியாக இருந்துக்கொண்டு போர்வீரனை உருகி உருகி காதலிக்கும் இன்னொரு கேரக்டர். அமலா பால்களும் ஓவியாக்களும் ஓடி வந்தாலும் காஜல்ன்னா காஜல்தான்.

வேட்டைக்காரனில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஸ்ரீஹரி, சுறாவில் வில்லனாக நடித்த தேவ் கில், ஒரே ஒரு காட்சியில் பிரம்மானந்தம், சரத்பாபு இன்னும் நிறைய பெயர் தெரியாத நடிகர்கள் வந்து செல்கிறார்கள். காமெடி கொஞ்சமே வந்தாலும் டப்பிங் என்பதால் சகிக்கவில்லை.

முமைத் கானும் கிம் ஷர்மாவும் ஆளுக்கொரு பாடலில் "கெளரவத்தோற்றம்" அளிக்கிறார்கள். இவற்றில் முமைத் கான் பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ஓகே. பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார். கிம் ஷர்மா பாடல் கிளைமாக்ஸுக்கு அணைக்கட்டு போட்டதோடு மட்டுமில்லாமல் படுமொக்கையாக இருந்து எரிச்சலூட்டியது. அந்தப்பாடலில் இடையிடையே காஜலை காட்டியது ஆறுதல்.


கிராபிக்ஸ் மற்றும் சண்டைக்காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்று கூறலாம். ஒவ்வொன்றும் ஒருவித காமெடி. ஹெலிகாப்டரில் தொங்கியபடி சண்டை போடுவதை எல்லாம் குஞ்சுமோன் காலத்திற்குப்பிறகு மீண்டும் பார்க்க முடிந்தது.

பாடல்கள் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவை என் காதுகளில் விழவே இல்லை. கண்கள் காஜலை பார்த்துக்கொண்டிருக்கும்போது காதுகள் ஏனோ வேலைநிறுத்தம் செய்துவிட்டன. காஜல் காட்டிய கவர்ச்சி போதாதென்று கேமராமேன் வேறு ஆ...ஊன்னா டாப் ஆங்கிளுக்கு போய்விடுகிறார். ம்ம்ம்... மொத்தத்தில் நம்ம மனசு நம்மகிட்ட இல்லை.

இசுலாமிய மன்னன், "நான் சிவன்டா..." என்று சொல்லுவதாக வசனம் எழுதி மதநல்லினக்கத்தை வாழ வைத்திருக்கிறார் கே.பாக்யராஜ். கூடவே, ஷேர் கானை மறுஜென்மத்தில் சாலமனாக பிறக்க வைத்து இயக்குனரும் அவரது பங்கிற்கு இந்திய இறையாண்மையை நிலைநாட்டியிருக்கிறார். சும்மாக்காட்டி "இவன் என் டவுசரை கிழிச்சிட்டான்...", "அவன் என் கோவணத்தை உருவிட்டான்..." என்று டீச்சரிடம் கம்ப்ளெயின்ட் செய்யும் மத இயக்கங்கள் எங்கே போனதென்று தெரியவில்லை. (ஒருவேளை திருந்திவிட்டார்களோ... இருக்காதே...).

படத்தின் பிளஸ்:
- காஜலும் கவர்ச்சியும்.
- சரித்திர பின்னணி.

படத்தின் மைனஸ்:
- மட்டமான கிராபிக்ஸ், சண்டைக்காட்சிகள்.
- அரைத்த மாவு வகையறா காட்சிகள். (ஹீரோயின் விரல் பட்டதும் ஹீரோ சிலிர்ப்பதெல்லாம் எங்க தாத்தா காலத்து டெக்னிக்).

எனக்குப் பிடித்த காட்சி:
கிளாடியேட்டர் வகையறா காட்சி இல்லாமல் சரித்திர கதையா...? இந்தப்படத்திலும் ஒரு போட்டி நடைபெறுகிறது. துப்பட்டா போட்டி. லாஜிக் போத்தல்கள் இருந்தாலும் இந்த ஒரு காட்சி மட்டும் கொஞ்சம் மெய்மரக்கவும் கொஞ்சம் சிலிர்க்கவும் வைத்தது.


வெர்டிக்ட்:
இந்தப்படத்தை எந்த லிஸ்டில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. சரித்திர பெருமை வாய்ந்த அம்மியில் அரைத்திருந்தாலும் அதே தெலுங்கு மசாலாதான். நிச்சயமாக படம் ஓடாது. ஒருவேளை ஆட்சி மாறாமல் இருந்து, உதயநிதி ஸ்டாலினே படத்தை வெளியிட்டிருந்தால் படத்தை ஓட்டியிருக்கலாம்.

ஆனால் ஒன்று காஜலுக்காக கண்டிப்பாக படத்தை பார்க்கலாம்.
என்றும் அன்புடன், 
N.R.PRABHAKARAN

Post Comment

16 May 2011

பிரபா ஒயின்ஷாப் – 16052011

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஒருவழியாக கலைஞர் ஆட்சி ஒழிந்தது என்று பார்த்தால் அம்மா ஆட்சி ஆரம்பித்துவிட்டது. முதல் அதிரடியாக புதிய சட்டமன்ற கட்டிடத்தை புறக்கணித்திருக்கிறார். (தியாகம் பண்றாங்களாமாம்...) இப்போது நம்ம வீட்டு வரிப்பணத்தை வாரியிறைத்து கட்டிய சட்டமன்ற கட்டிடம் வீணாகிவிட்டது. இதுவாவது பரவாயில்லை, இனி கலைஞர் காப்பீடு திட்டம் நிறுத்தப்படும், உழவர் சந்தைகள் மூடப்படும் இன்னும் என்னென்னவோ நடக்கும். ஆனாலும் அந்தம்மாவுக்கு ஈகோ ஜாஸ்தி. ம்ம்ம்... ஓட்டு போட்டாச்சு... இனிமே என்ன பண்ண முடியும்... இதைத்தான் எங்க ஊருல “நாயை மிதிப்பானே... &*%$# சுமப்பானே...” என்று சொல்வார்கள்.

இந்தியாவின் மக்கள்தொகை 100 கோடியாக இருந்தபோது சீனாவின் மக்கள்தொகை 127 கோடியாக இருந்தது. இப்போது இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி. சீனாவின் மக்கள்தொகையோ 134 கோடி. எப்படி நம்முடைய நாட்டின் வளர்ச்சி...? இப்படியே போனால் 2030ல் இந்தியா முதலிடத்தை அடைந்துவிடும் என்று புள்ளியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சென்ற வாரத்தில் ஒருநாள் ஆணி முடிந்து அலுவலக காரில் திரும்பிக்கொண்டிருந்தேன். போன் பேசியபடியே டிரைவர் வழக்கமான வழியை தவறவிட்டிருந்தார். போன் பேசி முடித்தபின் சுதாரித்து வழி மாறி வந்ததற்காக உச்சு கொட்டிக்கொண்டார். அப்போது மயிலை கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் வர, ஸ்டீயரிங்கில் இருந்து கைகளை எடுத்து கன்னத்தில் போட்டபடி “சாமிதாங்க நம்மள வழிமாறி வர வச்சிருக்கு...” என்று என் முகத்தைப் பார்த்து சிரித்தார். “சரியா சொன்னீங்கண்ணே...” என்று நானும் பதிலுக்கு சிரித்து தொலைத்தேன்.

வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வந்துக்கொண்டிருந்த வேளையில் சூப்பர்ஸ்டார் ரஜினி பற்றி ஒரு புரளி. அது என்ன புரளின்னு நான் சொல்ல விரும்பலை நீங்களே இங்க படிச்சு தெரிஞ்சிக்கோங்க. எஸ்.எம்.எஸ்., மெயில் என்று பரப்புரைகள் பறக்க ரஜினி ரசிகர்கள் பயங்கர அப்செட். அவர்களை மகிழ்விக்க ஒரு ரஜினி ஜோக்...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேரன் யாத்ராவுக்கு துப்பாக்கி சுட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார் = சர்வதேச தீவிரவாதி பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டான்...

முகமிலியில்... அட அதாங்க ஃபேஸ்புக்கில் உலவிக்கொண்டிருந்தபோது “ஸ்டில்ஸ்” ரவியின் ப்ரோபைல் கண்ணில் சிக்கியது. வளைத்து வளைத்து போட்டோ எடுத்து வைத்திருக்கிறார். எனக்கு பிடித்த போட்டோக்களை எல்லாம் சுட்டுக்கொண்டேன். காப்பிரைட் சிக்கல்கள் வருமா என்று தெரியாததால் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் இங்கே...

மொத்த ஆல்பங்களையும் பார்க்க இங்கே கிளிக்கவும்...

ட்வீட் எடு கொண்டாடு:
athisha அதிஷா
திரையுலகமே இணைந்து நடத்தும் பாசத்தலைவிக்கு பாராட்டுவிழா எப்போ! எப்போ! எப்போ! #சில்லியன்டால்ர்கேள்வி

RajanLeaks ராஜன்
’டீ சாப்பிட்டே பேசலாமா’ - சொக்கத்தங்கம் சோனியா ஜெயலலிதாவிடம்! # தாத்தா கவுத்துப்புட்டாய்ங்க தாத்தா!

kaattuvaasi காட்டுவாசி
தமிழ் - அழகாய் இருக்கிறாய்.... பயமாக இருக்கிறது... சென்தமிழ் - சோக்காக்கீறே... மெர்சலாக்கீது... #மொலிபெயர்ப்பு

Kaniyen கனியன்
நவீன சேகுவேரா மாதிரி தன்னை நினைத்துகொண்டு பேட்டியளித்த திருமா எங்கய்யா போனார்? # கிழிஞ்ச டவுசரை தைக்க ஊசிவாங்க போயிருப்பார்!

(அரசியல் முடிவுகள் வெளிவந்த நிலையில் நான்கு ட்வீட்டுக்களை மட்டும் தேர்ந்தெடுக்க ரொம்பவும் சிரமப்பட்டேன்... ஏகப்பட்ட கலக்கல் கலகல ட்வீட்ஸ்...)

பதிவுலகில் புதியவர்: “எழுத்துரு” கிருபாகரன்
இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்று சொல்லும் அளவிற்கு புத்தம்புதிய பதிவர். முதல் கஸ்டமராக அடியேன் தான் சேர்ந்தேன். தாய் வணக்கம் சொல்லி பதிவெழுத தொடங்கியிருக்கிறார். வடிவேலுவை வைத்து ஒரு காமெடி பதிவு போட்டிருந்தாலும் கவிதைதான் இவருடைய களம் என்று அறிகிறேன். இந்த ஹைக்கூ கவிதைகளை படித்துப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.

இந்த வாரப்பாடல்:
போனில் மெமரி கார்டில்லாத ஒரு பின்னிரவில் வேறு வழியின்றி பண்பலையில் பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒலிபரப்பானது அந்த அருமையான பாடல். “மழைபெய்யும் போது நனையாத யோகம்...” என்று ஆரம்பிக்கும் ரேணிகுண்டா படத்தின் பாடல். இசையும் இரவுக்கேற்றபடி இனிமையாய் இருந்தது. பாடல் வரிகள் அதைவிடவும் அருமை. காதலைப் பற்றி அந்தப்பாடலில்... “மூடாமல் கண்கள் ரெண்டும் தண்டோரா போடும்... பேசாமல் மெளனம் வந்து ஆராரோ பாடும்...”

இந்த வார புகைப்படம்:
இந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் ஏனோ வடிவேலு ஞாபகம் வருகிறது... அய்யோ... அய்யோ...


பின்நவீனத்துவம்:
-          ஜட்டி போட்டுட்டு முட்டி போடா முடியும், ஆனா முட்டி போட்டுட்டு ஜட்டி போடா முடியாது.

கல்லூரி வாழ்க்கையின் மூன்று முத்தான நகைச்சுவைகள்:

1. மச்சான் டிஸ்டர்ப் பண்ணாதடா ,நான் படிக்கணும்.
2. ச்சே, கிளாஸ் இல்லை, வாங்கடா லைப்ரரி போலாம்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
3.சார், ஒன் டவுட்.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 May 2011

தேர்தல் முடிவன்று ஆப்பு வைத்த பிளாக்கர்...!!!

கிட்டத்தட்ட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திரட்டிகளில் அரசியல் குறித்த இடுகைகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அரசியல் செய்திகளை உடனுக்குடன் தருவதில் சில வலைப்பூக்கள் சிறந்து விளங்கி வந்தன. காப்பி - பேஸ்ட் என்றாலும் செய்திதானே முக்கியம்.


நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்ததும் ப்ளாக்கரை திறந்து நம்ம பங்காளிகள் ஏதாவது எழுதியிருப்பாங்க படிக்கலாம் என்று பார்த்தால் அதிர்ச்சி. பிளாக்கர் தளம் இயங்கவில்லை. ஒருவேளை நமக்கு மட்டும் தான் இப்படியோ என்று பயந்து நண்பருக்கு கால் செய்து அவரிடம் கேட்க அங்கேயும் சேம் பிளட்.

என்னவென்று கூகிளாத்தாவிடம் விசாரித்தேன். அதாவது புதன்கிழமை இரவு ப்ளாக்கர் தளத்தில் சில திட்டமிட்ட பராமரிப்பு வேலைகள் நடந்துள்ளன. அப்போது ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறுகளால் நேற்று முழுவதும் கிட்டத்தட்ட இருபதரை மணி நேரத்துக்கு பிளாக்கர் தளம் இயங்காமல் இருந்திருக்கிறது.

மற்றபடி இதற்கும் தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கலைஞரின் வழுக்கை மீது சத்தியம் செய்து சொல்கிறார் ப்ளாக்கர் நிர்வாகி எடி கெஸ்லர். "நாங்களும் எங்கள் சொந்த வலைப்பூக்களுக்கு ப்ளாக்கரையே பயன்படுத்துகிறோம். அதனால் எங்களுக்கும் அதன் வலி புரியும். இனி இதுபோன்ற கோளாறு ஏற்படாது என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்" கெஸ்லர்.

ஒரிஜினல் செய்தி லிங்க்

ப்ளாக்கர் தளங்களில் மட்டும் இடுகை வெளியிட முடியாமல் இருக்க அரசியல் செய்திகளை தெரிந்துக்கொள்ள இணையதளங்களையும், வேர்ட் பிரஸ் தளங்களையும் நாடினேன். அவற்றுள் ஒற்றன், விறுவிறுப்பு, என் வழி போன்ற தளங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.

Post Comment

3 May 2011

பிரபா ஒயின்ஷாப் - 03052011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முஸ்கி: பி.எஸ்.என்.எல் கனெக்ஷன் நேரம் காலம் புரியாமல் பெப்பே காட்டுவதால் நேற்று வெளிவர வேண்டிய ஒயின்ஷாப் இடுகை இன்று...

நாட்டுநடப்பைப் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத நண்பர் ஒருவர் திடீரென டைம்ஸ் ஆப் இந்தியா, என்.டி.டி.வி என்று செய்தி இணையதளங்களை பார்வையிட்டபடி இருந்தார். என்னவென்று விசாரித்தேன். மனிதர் வார இறுதியை கோவாவில் கொண்டாடுவதாக முடிவு செய்து டிக்கெட் எடுத்து வைத்திருந்திருக்கிறார். இப்போது விமானிகள் ஸ்ட்ரைக் காரணமாக விமானம் பறக்குமா பறக்காதா...? பறக்கவில்லை என்றால் டிக்கெட் பணம் மீண்டும் கிடைக்குமா...? என்று தவித்திருக்கிறார். பாவம்யா...


சில படங்களைத் திரையரங்கம் சென்று மூன்று மணிநேரம் தொடர்ந்து பார்க்க முடியாது. ஆனால் அதே படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது வசீகரிக்கும். அப்படி ஒரு படம்தான் பதினாறு. சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்ப, அரைத்த மாவுதான் என்றாலும் கிராமத்துக்காதல் சம்பந்தப்பட்ட போர்ஷன் முடியும்வரை படத்தில் இருந்து கவனம் சிதறவில்லை.


ஞாயிறு இரவு எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் சர்வதேச சூப்பர்ஸ்டார் வில்பர் சற்குணராஜின் பேட்டி ஒளிபரப்பானது. மனிதர் சீரியசாக பேசியே சிரிக்க வைக்கிறார். முழு நிகழ்ச்சியையும் கண்டுகழித்தேன்.


கிழக்கு பதிப்பகத்தின் டிஸ்கவுண்ட் சேல் இந்தமுறை ராயபுரம் வரை பாய்ந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சுஜாதாவின் மாயா, தீண்டும் இன்பம், ஹாய் மதன் இரண்டு பாகங்கள் ஆகியவைகளை கண்டதும் லபக்கினேன். பின்னர், ரஜினி சப்தமா..? சகாப்தமா...? உள்ளிட்ட மேலும் சில புத்தகங்களை வாங்கிக்கொண்டு கிளம்பினேன். ஒருகாலத்தில் 100, 150 ரூபாய் கொடுத்து வாங்கிய புத்தகங்கள் இப்போது 10, 20 ரூபாய்க்கு கிடைப்பதை பார்க்கும்போது மனது வலிக்கிறது.


இணைய நண்பர் ஒருவர் அவரது குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்திருந்தார். ஏற்கனவே அவரது திருமணத்திற்கு அழைத்தும் செல்லாததால் இந்தமுறை கட்டாயம் சென்றுவிட வேண்டுமென்று கிளம்பினேன். உள்ளே நுழைந்ததும் நண்பர் என்னை அடையாளம் கண்டுகொண்ட விதமாக சிரித்தமுகத்துடன் வரவேற்று உட்கார வைத்தார். சுமார், அரைமணிநேரம் கழித்து என்னிடம் வந்து ஓ... நீங்கதான் பிரபாகரா...? என்று கேட்க செம பல்பு வாங்கினேன்.

இந்தவார ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் காஜல் அகர்வால் செம க்யூட். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல...

ட்வீட் எடு கொண்டாடு:
ராதா மகளிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது! # இது வளர்த்த புருவமா முன்னூறு ரூவா குடுத்து வரைஞ்ச புருவமா!

ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்: கலைஞர் பேட்டி #யாருய்யா சொன்னா, எங்க முதல்வர் மக்கள் நல மேம்பாட்டுக்கு உழைப்பதில்லை என்று. வாழ்க முதல்வர்

முதல்முறையாக படம் பார்ப்பவனை சாகடிக்காமல், தான் செத்துப் போவதுபோல ஒரு படம் செய்திருக்கிறார் சொம்பு # வானம்

மே டே வாழ்த்து சொன்னவங்களை விட அஜீத் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவங்க தான் அதிகம் போல. ஹ்ம்ம்


பதிவுலகில் புதியவர்: விஜய்கோபால்சாமி
பழைய பதிவர்தான், ஆனாலும் நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. இன்ட்லியில் உலவிக்கொண்டிருந்தபோது கிடைத்தார். லேட்டஸ்டாக கருணாநிதி டுவிட்டர் கணக்கு வைத்திருந்தால்...? எப்படி இருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறார் பாருங்கள். பாராட்டுவிழா நடத்துபவர்களுக்கு மத்தியில் பாசத்தலைவனுக்கு டெம்ப்ளேட் வெளியிட்டிருக்கிறார் பாருங்கள்.


இந்த வார பாடல்:
உத்தமபுத்திரன் படத்தில் இடிச்ச பச்சரிசி... என்றொரு கொண்டாட்டப்பாடல். வழக்கமாக இந்தப்பாடலை தொலைக்காட்சியில் பார்த்ததுமே டபக்கென்று சேனல் மாற்றிவிடுவேன். சில நாட்களுக்கு முன்பு வேறு வழியில்லாமல் கேட்டேன். நெனச்ச கனவு ஒன்னு நெஜமா நடந்திருச்சு... என்று ஆரம்பிக்கும் சரணம் வசீகரித்தது. அந்த பெண்குரல் செவிக்கினிமை. பாடியவர் பெயர் சந்கீதாவாம்.


இந்த வார புகைப்படம்:
இந்த போட்டோ உண்மையானது தானா என்று சந்தேகமாகவே இருக்கிறது. அந்த வண்டிகள் விழாமல் செல்லும் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.


இந்த வார புதிர்:
ம்ம்ம்... எவ்வளவு கஷ்டமான புதிரைக் கேட்டாலும் பத்து பதினைந்து பேர் சரியான பதிலை சொல்லிவிடுகிறீர்கள். அப்புறம், மின்புத்தகம் வரலைன்னு சலிப்பு வேறு. இனி புதிர் போடுவதாக இல்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 May 2011

நான் அஜித் ரசிகன் - ஏன்...?

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இன்று பிறந்தநாள் காணும் "தல" அஜித் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களோடு இந்த இடுகையையும் சமர்ப்பிக்கிறேன். நான் அஜித் ரசிகனானது எப்படி என்பதை இந்த இடுகையில் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்...


சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பப்படம் என்ற பெயரில் சரத்குமார், சத்யராஜ் படங்களுக்கு மட்டுமே என்னை அழைத்துச்செல்வார்கள். உனக்கு பிடித்த நடிகர் யாரென்று யாராவது கேட்டால் சரத்குமார் என்றுதான் சொல்லுவேன். என்னுடைய விருப்பமே இல்லாமல் அந்த விருப்பம் என்மீது திணிக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது முதல்முறையாக நண்பர்களுடன் திரையரங்கம் செல்லும் உரிமை கிடைத்தது. அதுவும் தூரத்தில் உள்ள மாநகர திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை. நடந்து செல்லும் தொலைவில் உள்ள ஓடியன்மணிக்கோ, எம்.எஸ்.எம் திரையரங்கிற்கோ தான் செல்லவேண்டும். வெங்கடேஸ்வரா, ராகவேந்திரா திரையரங்குகளில் பிட்டுப்படங்கள் மட்டுமே வெளியிடுவார்கள் என்பதால் அதற்கும் அனுமதி மறுப்பு தான்.

ஆக, இந்த இரண்டு திரையரங்குகளில் ஒன்றில் தீனாவும் மற்றொன்றில் ஃபிரண்ட்ஸ் படமும் ஓடிக்கொண்டிருந்தன. நான் தன்னிச்சையாக எவ்வித கருத்தையும் வெளிப்படுத்தாத காரணத்தால் நண்பர்கள் முடிவின்படி தீனா படத்திற்கு சென்றோம். அதுவே அஜித்துக்கும் எனக்குமான உறவின் முதல் படி. அடிதடி, ஆக்ஷன், பஞ்ச் டயலாக் போன்றவற்றால் சூடேறி கொஞ்சம் அஜித் கவர ஆரம்பித்தார்.


கொஞ்ச நாளைக்கு அந்த பஞ்ச் டயலாக்குகளை மனப்பாடம் செய்து சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் எனது எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் விதமாக சிட்டிசன் வெளியானது. படம் வெளியான இரண்டாவது நாளே பார்த்து அப்புறம் வெறியாகி நாற்பத்தைந்து நாட்களுக்குள் படத்தை கெட்டப்புக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒன்பது முறை பார்த்துவிட்டேன். இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது.

இப்படியெல்லாம் இருந்தாலும் பேனருக்கு பாலபிஷேகம் செய்வது, கோஷம் போடுவது போன்ற அபத்தங்கள் எதையும் செய்ததில்லை. அதற்கு காரணம் எனக்கு அதெல்லாம் செய்யத் தெரியாதது என்று கூட சொல்லலாம். அதற்கடுத்து ரெட் படத்தின் தோல்வியால் கொஞ்சம் வேகம் குறைந்தது.

அடுத்த ஆண்டே தளபதியின் பகவதியும், தலயின் வில்லனும் ஒரே நாளில் வெளியானது. பள்ளியில் அஜித் ரசிகர்கள் - விஜய் ரசிகர்கள் என்று குருப் அமைத்துக்கொண்டு சண்டை போட்டதுண்டு. அப்புறம் பத்தாம் வகுப்பு வந்ததும் கொஞ்சம் படிப்பு, பருவப்பெண்கள் என்று திசைமாறி சினிமா ஆர்வம்  குறைந்தது. அஜித்துக்கும் ராஜா, ஆஞ்சநேயா, ஜனா என்று தொடர்ந்து சறுக்கல்கள்.

அட்டகாசம் படம் வெளிவரும்போது அடித்துபிடித்து முதல்நாள் முதல்காட்சி பார்க்கும் அளவிற்கு தேறியிருந்தேன். அநேகமாக அதற்குப்பின் வெளிவந்த அனைத்து அஜித் படங்களையும் முதல்நாள் முதல்காட்சி தான் பார்த்தேன் என்று எண்ணுகிறேன் (ஜி படத்தை தவிர்த்து). நாளடைவில் அஜித் படங்கள் மொக்கையாக இருந்தாலும் தல என்ற மந்திரச்சொல்லுக்காகவே படத்தை ரசிக்க ஆரம்பித்தேன். மேலும், அஜீத்தைப் பற்றி ஊடகங்கள் சொன்ன பர்சனல் பக்கங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டேன். அவர் சத்தமில்லாமல் செய்துவரும் சமூக சேவைகள், அவரது மேன்லிநெஸ், ஜென்டில்நெஸ் என்று நிறைய பிடித்திருந்தது.

பில்லா படம் வெளிவந்தபோது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி நண்பர்கள் பலரும் அஜித் ரசிகர்கள் என்பதால் விடுதி முழுவதும் திருவிழா போல காட்சியளித்தது. குறிப்பாக பில்லா பாடல்கள், ட்ரைலர் வெளியான தினங்களெல்லாம் கொண்டாட்டம்தான். டிவி ரூமில் பில்லா ட்ரைலர் சத்தத்தை கேட்டால் எல்லா ரூம்களில் இருந்தும் நண்பர்கள் ஓடி வருவார்கள்.

ஏகன் படம் வெளிவந்தபோது ஆர்குட் அஜித் கம்யூனிட்டி தான் எனது இன்னொரு வீடு. சதா சர்வகாலமும் அஜீத்தைப் பற்றிய செய்திகளை படித்து  அகமகிழ்ந்துக் கொண்டிருப்பேன். போகப்போக அந்த ரசிக மோகம் கொஞ்சம் சலிக்க ஆரம்பித்தது என்றால் அது அந்த ஆர்குட் கம்யூனிட்டி அஜித் ரசிகர்கள் தான் காரணம் என்று சொல்லுவேன். ஏகன் படம் வெளியாவதற்கு முந்தய இரவு. மறுநாள் காலைக்காட்சிக்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தேன். ப்ரீமியர் ஷோ பார்த்த ரசிகர்கள் சிலர் அஜித் - ஜெயராம் காமெடி அட்டகாசமாக இருக்கிறது, அஜித்தின் டான்ஸ், இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்றெல்லாம் வெறியேற்றிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை அந்த எதிர்பார்ப்புகளோடு படம்பார்த்து எல்லாம் தவிடுபொடியாக, அஜித் ஃபேன்ஸ் என்றாலே அட கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா என்று சொல்லும் அளவிற்கு கடுப்பாகிவிட்டது.

ஆனலும் அஜித் மீதுள்ள கிரேஸ் மட்டும் குறையவில்லை. குறையவும் குறையாது. அசல் படம் வெளிவந்தபோது நான் பதிவுலகின் அரவணைப்பில் இருந்தேன். அப்போது ஒரு மேடைப்பேச்சில் "மிரட்டுறாங்க..." என்று தைரியமாக அஜித் பேசியது, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தது, "நான் நடிகன் அரசியலுக்கு வரமாட்டேன்..." என்று அழுத்தம் திருத்தமாக கூறியது போன்ற சம்பவங்கள் அவர் மீதுகொண்ட மரியாதை எக்கச்சக்கமாக கூடியது.


இப்போது மங்காத்தா வெளிவரவுள்ள நிலையில் 50வது படம், கிரிக்கெட் சூதாட்ட கதை, தாராவி, நெகடிவ் ரோல், நடிகர் பட்டாளம், வெங்கட் பிரபு, யுவன் என்று பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளோடு காத்துக்கொண்டிருக்கிறேன். காத்துக்கொண்டிருக்கிறோம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment