அன்புள்ள வலைப்பூவிற்கு,
சமீப வருடங்களாக சினிமா ரசிகர்கள் பரவலாக படங்களின் வசூல்,
நடிகர்களின் மார்க்கெட் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு ரசிகன் என்ன
கூந்தலுக்கு படத்தின் வசூலை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான். வசூல்
மட்டுமல்ல. படத்தின் பட்ஜெட், படப்பிடிப்பிற்காக எடுத்துக்கொண்ட காலம், சிரத்தை
உள்ளிட்ட பல விஷயங்கள் ரசிகனுக்கு அவை மீது ஆர்வமில்லாத பட்சத்தில் அவசியமற்ற
விஷயங்கள். பல வருடங்கள் உழைத்து, பல கோடிகள் கொட்டி உருவாக்கிய ஒரே காரணத்திற்காக
ரசிகர்கள் ஒரு படத்தை பாராட்டியே ஆகவேண்டிய அவசியமில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம். அதே சமயத்தில் ஒரு ரசிகன்
கோச்சடையானையும் அவதாரையும் கூட கூச்சப்படாமல் ஒப்பிடலாம். ஏனெனில், அவன் இரு
படங்களையும் அதே 120ரூ கொடுத்துதான் பார்க்கிறான். In fact, முந்தயதிற்கு அதிக
பணம்.
என் எண்ணங்கள் இப்படியிருக்க, முழுக்க முழுக்க சினிமாவின் backend
தகவல்கள் அடங்கிய புத்தகமொன்று என்னை விக்ரமாதித்யன் வேதாளம் மாதிரி சில
வருடங்களாக தொடர்ந்து வருகிறது. கேபிள் சங்கர் எழுதியிருக்கும் சினிமா வியாபாரம்.
இரண்டு பாகங்கள். முதல் பாகத்தின் முதல் அத்தியாயத்தின் பெயர் ‘இலவச விளம்பரம்’.
சினிமா வியாபாரம் புத்தகத்திற்கு அது தாராளமாக கிடைத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆளாளுக்கு
‘இதெல்லாம் தெரியணும்ன்னா நீ சினிமா வியாபாரம் படிச்சிருக்கணும்’ன்னு சொல்ல
ஆரம்பித்துவிட்டார்கள். சொல்ல முடியாது இதுபோன்ற ஆசாமிகளை எல்லாம் கேபிளே கூட செட்
பண்ணியிருக்கலாம். எதற்கு வம்பு என்று இரண்டு பாகங்களையும் வாங்கி
படித்துவிட்டேன்.
முதல் பாகத்தில் பெரும்பாலும் திரைப்பட விநியோகம் பற்றியும் பல்வேறு
வகையான உரிமைகள் பற்றியும் எழுதியிருக்கிறார். வடிவேலு ஒரு நகைச்சுவை காட்சியில்
சிட்டி, செங்கல்பட்டு, நார்த் ஆற்காடு என்று தொடங்கி FMS வரை என்று முடிப்பார்.
இவைதான் தமிழ் சினிமாவின் விநியோக ஏரியாக்கள். விநியோகம் தவிர்த்து ஆடியோ ரைட்ஸ்,
டிவிடி ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், டப்பிங், ரீ-மேக் ரைட்ஸ் உட்பட நாமெல்லாம்
கேள்விப்பட்டிராத பல விஷயங்களை சொல்லியிருக்கிறார். தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் –
திரையரங்க உரிமையாளர் பரிவர்த்தனைகள் என்ன மாதிரியெல்லாம் நடைபெறுகிறது, என்ன
மாதிரியான படங்களுக்கு யாருடைய கை ஓங்குகிறது போன்ற விவரங்களை புரிந்துகொள்ள உதவுகிறது
முதல் பாகம். என்ன ஒன்று, பாதி புத்தகத்திற்கு பிறகு ஹாலியுட்டுக்கு தாவி அங்குள்ள
தொழில்நுட்பங்கள், பெருநிறுவனங்கள், அவற்றின் அரசியல் போன்றவற்றை சுவாரஸ்யமாக
சொன்னாலும் கூட ஏனோ அந்நியமாக தெரிகிறது.
முதல் பாகத்தை ஒப்பிடும்போது இரண்டாம் பாகம் எனக்கு மிகவும்
நெருக்கமாக படுகிறது. ஏனெனில், இரண்டாவது ஒரு திரையரங்கத்தை எடுத்து நடத்துவது
பற்றியது. நான் திரையரங்குகளை உணர்வுப்பூர்வமாக கருதுபவன். ஒரு படம் என்னுள் எவ்வளவு
தாக்கம் ஏற்படுத்துமோ, அதற்கு இணையான தாக்கத்தை திரையரங்குகளும் என்னுள்
ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பிட்டு சொல்வதென்றால் ஒரு திரையரங்கில் என்ன
பிராண்ட் ‘ரூம் ஸ்ப்ரே’ பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டுபிடித்து அதே ரூம் ஸ்ப்ரேயை
என் வீட்டிற்கு வாங்கும் அளவிற்கு பைத்தியக்காரன் நான். திரையரங்குகள் குறித்து
நான் எழுதத் துவங்கினால் தனி புத்தகம்தான் போட வேண்டும்.
விஷயத்திற்கு வருவோம். சிட்டி பார்டரில் உள்ள ஒரு திரையரங்கத்தை
எடுத்து நடத்திய தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் கேபிள். திரையரங்கத்தின்
பெயரை மட்டும் குறிப்பிடாமல் எழுதியதால் எதுவாக இருக்கும் என்று யோசிக்க
வேண்டியதாக போயிற்று. உதயம், காசிக்கு அருகில் என்று எழுதியிருக்கிறார்.
பிட்டுப்படம் ஒட்டிய தியேட்டர் என்றும் சொல்கிறார். ஜோதி என்று நினைத்தால் அதனை
வேறொரு திரையரங்கமாக பாவித்தும் ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். ஒரு கட்டத்தில்
அது கண்டிப்பாக கே.கே.நகர் விஜயா தான் என்று நானாகவே முடிவு செய்துவிட்டேன். விஜயா
திரையரங்கம் கேபிளின் இல்லத்தில் இருந்து நடைதொலைவு. ஆனால் கே.கே.நகர் சிட்டி
லிமிட்டிற்குள் தானே வரும் என்று யோசித்து, கடைசியாக ஆலந்தூர் எஸ்.கே என்று முடிவு
கட்டியிருக்கிறேன். உண்மையில் அது எந்த திரையரங்கம் என்பது கேபிளுக்கே வெளிச்சம்.
பாடாவதியான அந்த திரையரங்கை லீசுக்கு எடுக்கிறார்கள். புதுப்பிக்கிறார்கள்.
தடைகளை கடந்து முதல் படமாக முரளி நடித்த மனுநீதி படத்தை வெளியிடுகிறார்கள். அதன்பிறகு
ஒரு திரையரங்க உரிமையாளராக என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது
என்பதை நூல் பிடித்ததை போல தெளிவாகவும் எளிமையாகவும் எழுதியிருக்கிறார். ஒன்றுமில்லை,
திரைப்படங்களுக்கென போஸ்டர் ஓட்டுவது என்பது நாம் அன்றாடம் சாலையில்
பார்த்துவிட்டு கடந்துபோகும் விஷயங்களில் ஒன்று. அதற்குப் பின்னால் என்ன மாதிரியான
அரசியல் இருக்கிறது என்றெல்லாம் தெரியும்போது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது.
இன்று சென்னையில் வசிக்கும் மூவி பப்ஸ்கள் பெரும்பாலானாவர்களுக்கு
ஆதர்ஸ திரையரங்கம் என்றால் அது சத்யம் தான். ஒரு கட்டத்தில், சத்யம்
திரையரங்கத்திற்கு மூடுவிழா நடத்த முடிவாகியிருந்ததும், அதிலிருந்து சத்யம் மீண்டுவரக்
காரணம் நக்சலைட்டுகள் தான் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று புத்தகத்தில் இடம்
பெற்றிருக்கிறது.
ஆனால் ஒன்று, சினிமா வியாபாரம் பாகம் இரண்டினை வாங்க விரும்புபவர்கள்
தயவு கூர்ந்து முதல் பாகத்தையும் சேர்த்து வாங்கிவிடுங்கள். ஏனென்றால் இரண்டாம்
பாகத்தில் ஆங்காங்கே ‘இது தெரிய வேண்டுமென்றால் நீங்கள் முதல் பாகம் படித்திருக்க
வேண்டும்’ என்று சொல்லி சொல்லியே வெறுப்பேற்றியிருக்கிறார் மனிதர்.
சினிமா வியாபாரம் – பாகம் 1
கேபிள் சங்கர்
மதி நிலையம்
144 பக்கங்கள்
ரூ.90
சினிமா வியாபாரம் – பாகம் 2
கேபிள் சங்கர்
டிஸ்கவரி புக் பேலஸ்
88 பக்கங்கள்
ரூ.70
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|