1 November 2019

கோவா – நிறைவு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: கோவா – தெற்கின் அழகு

கோவா பயணத்தின் கடைசி நாள் வந்தது. இறுதிக்கட்டம் என்றாலே சொதப்பலாக அமையும் என்பது எழுதப்படாத விதி. 

முந்தைய இரவில் டெஸ்மாண்ட்ஜி என்னும் அரக்கனை கொன்று வீழ்த்திய களைப்பில் கொஞ்சம் அயர்ந்துவிட்டோம். மாலையில் தான் விமானம் என்பதால் சிக்கல் எதுவுமில்லை. ஆனால் கடைசி நாளுக்காக இரண்டு கடற்கரைகளையும், கடற்படை அருங்காட்சியகத்தையும் ஒதுக்கி வைத்திருந்தேன். நம் ஆட்கள் சாவகாசமாகக் கிளம்பி, ஷாப்பிங் ப்ளான் எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது போய் நான் அருங்காட்சியகம் செல்ல வேண்டுமென்று சொன்னால் உதைப்பார்கள். அதனால் எனது ஆசையை புதைத்துக் கொண்டேன். 

ஷாப்பிங் பற்றி எங்கள் ஐரோப்பிய விடுதி உரிமையாளரை விசாரித்தோம். அவர் பிக்-ஜி (BIG G)  என்ற வளாகத்தைப் பற்றி சொன்னார். பயணித்தோம். இம்முறை தெற்கிலிருந்து மத்திய கோவாவிற்கு. இறுதியில் அந்த பிக்-ஜி மால் அப்படியொன்றும் சிலாக்கியமாக இல்லை. கோவா என்றில்லை. மதுரையோ, கோவையோ, பொள்ளாச்சியோ எங்கு சென்றாலும் இவர்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸைத் தான் மால் என்கிறார்கள். அதை இவர்கள் உறுதியாக நம்பவும் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

கோவா விமான நிலையத்தின் முகப்புத்தோற்றம்
பின் வாஸ்கோவில் உள்ள சின்னச் சின்ன தெருக்களில் இறுதிநேர ஷாப்பிங் செய்துவிட்டு அங்கிருந்து விமான நிலையம் சென்றோம். விமான நிலையம் டாபோலிம் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. வாஸ்கோவிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. கோவா விமான நிலையத்தின் கட்டமைப்பு அப்படியே சென்னை விமான நிலையத்தை நினைவூட்டுகிறது. உள்நாடு, வெளிநாடு பயணங்களுக்கு ஒருங்கிணைந்த நிலையம். நிறைய ஐரோப்பிய மற்றும் ரஷ்ய விமானங்கள் ஸீஸன் சமயங்களில் மட்டும் கோவாவுக்கு வந்து செல்கின்றன. 

ரஷ்யா என்றதும் சில விஷயங்கள் நினைவுக்கு வருகிறது. எப்படி போர்த்துகேயர்களுக்கும் கோவாவுக்கும் ஒரு இணைபிரியா தொடர்பு உள்ளதோ அதே போல ரஷ்யர்களுக்கும் கோவாவுக்கும் உள்ளது. கோவாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை லிட்டில் ரஷ்யா / மினி மாஸ்கோ என்று சொல்லும் அளவிற்கு ரஷ்யர்கள் இப்பகுதியில் வந்து மாதக்கணக்கில் தங்கிவிட்டு போகிறார்கள். இப்பகுதிகளில் உணவகத்தின் பெயர் பலகைகள், மென்யூ கார்டு எல்லாம் ரஷ்ய மொழியில் தான் உள்ளன. 

அப்படியென்ன ரஷ்யர்களுக்கு கோவாவின் மீது காதல் ? நிறைய காரணங்களை பட்டியலிடுகிறார்கள். அதில் முக்கியமான காரணம் தட்பவெப்பம். ரஷ்யாவில் குளிர்காலம் என்பது கொடூரமானது. அக்டோபர் துவங்கி ஏப்ரல் மே வரை ரஷ்யாவின் தட்பநிலை மைனஸ் முப்பத்தைந்துக்கும் கீழ் செல்கிறது. சில பகுதிகளில் இது மைனஸ் அறுபது, எழுபது வரை செல்கிறது. சில அயல்தேசப் பறவைகள் வருடாவருடம் சீஸன் சமயத்தில் நம்மூர் வேடந்தாங்கலைத் தேடி வருவது போல இவர்களும் குளிர் தாளாமல் கோவா வந்துவிடுகிறார்கள். 

அத்தனை குளிரில் வாழ்ந்து பழகியவர்களுக்கு இந்திய வெய்யில் எப்படி இருக்கும் ! நேரே கடற்கரைக்கு வந்து பிகினியில் படுத்துவிடுகிறார்கள். ஒரு வகையில் இவர்களின் வருகையும், தாராள கவர்ச்சியும் தான் கோவாவிற்கென ஒரு சிறப்பு அந்தஸ்தை தருகிறது.

வேறெங்கோ செல்லாமல் குறிப்பாக கோவாவுக்கு ஏன் வருகிறார்கள் என்றால் இங்கு செலவு குறைவு என்பதும், இங்கே செக்ஸ், போதை போன்ற விஷயங்களில் கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதே காரணம். இத்தனைக்கும் அவ்வப்போது ரஷ்ய பயணிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதும், கொலை செய்யப்படுவதும், பணம் ஏமாற்றப்படுவதும் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன.

லிட்டில் ரஷ்யாவில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம். நாங்கள் வடக்கு கோவாவில் தங்கியிருந்த விடுதி வரவேற்பறையில் ஒரு பெரிய அலமாரி முழுக்க புத்தகங்கள் கேட்பாரின்றி கிடந்தது. நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளலாம் என்று அங்கே சென்று புரட்ட ஆரம்பித்தேன். அலமாரி முழுக்க புரட்டிப் பார்த்துவிட்டேன். அத்தனையும் ரஷ்ய புத்தகங்கள். குறிப்பாக நிறைய விண்வெளி சம்பந்தப்பட்ட அறிவியல் புனைவுகள் என்று அட்டைப்படங்களை வைத்து உணர முடிந்தது. ஒரு பக்கம் அந்த அட்டைப்படங்கள் ஈர்க்கிறது. இன்னொரு பக்கம் ரஷ்யமொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் அது ஒரு அவஸ்தை.கடைசியில் ஒரேயொரு ஆங்கில புத்தகம் கேரளா மற்றும் கோவா பற்றிய டிராவல் கைடு அது மட்டும் ஆங்கிலத்தில் கிடைத்தது.

போர்த்துகீஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகள், சோவியத் கூட்டுறவு நாடுகள் போன்ற தொடர்புகளால் கோவாவில் ஒரு முக்கியமான மாற்றத்தை காண முடிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் பெரும்பான்மை மதம், சச்சின் விருப்ப தெய்வம். ஆனால் கோவாவில் கால்பந்தின் மீதுதான் மக்களுக்கு காதல். 2016ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து கோப்பையை போர்ச்சுகல் கைப்பற்றியபோது அதனை கோவா கொண்டாடித் தீர்த்தது என்கிறது ஒரு குறிப்பு. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே கிளப் வைத்து கால்பந்து ஆடிய பெருமை கோவாவுக்கு உண்டு. ஐ.பி.எல் பாணியில் கால்பந்திற்கென இந்திய பிரிமியர் லீக் துவங்கப்பட்டபோது கிரிக்கெட்டில் பட்டியலில் கூட இல்லாத கோவாவிற்கு தனி ஃப்ராஞ்சைஸ் கொடுக்கப்பட்டது.

கோவா விமான நிலைய ரன்வே
அரக்கப் பறக்கச் சென்று கடைசியில் விமான நிலையத்தில் நீண்ட நேர காத்திருப்பின் பிறகு எங்கள் விமானம் புறப்படத் தயாரானது. இந்தியாவின் அபாயகரமான ரன்வேக்களில் கோவாவும் ஒன்று. அரபிக்கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் பார் என்று நம்மை பயமுறுத்திவிட்டு பறக்கத் துவங்குகிறது விமானம். 

ஒரு பந்தக்காலில் துவங்கிய நீண்ட பயணம் இன்னொரு பந்தக்காலில் வந்து நிறைவடைகிறது. 

விமானம் சென்னை வந்திறங்கியது !

அடுத்து வருவது: கோவா – சில தகவல்கள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 October 2019

கோவா – தெற்கின் அழகு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: கோவா – மிதக்கும் கஸினோ

கோவா தொடரில் மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது. மறுபார்வையிட விரும்புபவர்களுக்கு இத்தொடரின் முதல் பகுதியின் சுட்டி தொடக்கம்.

இதுவரை கோவாவின் பிரதான அடையாளங்களான கர்லீஸ், டிட்டோஸ் லேன், கஸினோ போன்றவற்றை பார்த்தோம். இக்கட்டுரையில் முற்றிலும் வேறொரு கோவாவை பார்க்கப்போகிறோம். தெற்கு கோவா !

கோவா தொடர் முதல் பகுதியில் வடக்கு கொண்டாட்டம், தெற்கு அமைதி என்று எழுதியிருந்தேன். கோவாவில் வடக்கு, தெற்கு என்பது ரஹ்மான். ராஜா போன்ற இரு துருவங்கள், முறையே. முதலாவது துவண்டு போயிருக்கும் மனிதனை துள்ளி எழுந்து ஆட வைக்கும் என்றால், இரண்டாவது அம்மனிதனை அரவணைத்து ஆறுதல்படுத்தும். இதை ஏன் வெகு குறிப்பாக ரஹ்மான், ராஜாவோடு ஒப்பிடுகிறேன் என்றால் ரஹ்மானின் இசையும் சமயங்களில் ஆறுதல்படுத்தும். போலவே ராஜாவின் இசையும் உற்சாகமூட்டும். ஆனால் இருவரது இசையின் பிரதான குணமும் முதலில் சொன்னதுதான். கோவாவும் அதுமாதிரி தான். வடக்கில் அமைதியான கடற்கரைகளும் உண்டு. தெற்கில் கொண்டாட்டமான கடற்கரைகளும் உண்டு.

நாங்கள் முதலிரு தினங்களை வடக்கில் களித்துவிட்டு, தெற்கை நோக்கி பயணித்தோம். பஞ்சிம் நகரத்தைக் கடந்ததும் ஆரவாரங்கள் குறைந்து தெற்கின் ஆதிக்கம் துவங்குகிறது. தெற்கின் அழகை புரியும்படி உதாரணத்தோடு சொல்ல வேண்டுமென்றால் ‘தெறி – ஈனா மீனா டீக்கா’ பாடலைப் பாருங்கள். கதைப்படி கேரளா என்று சொல்லப்பட்டாலும் இந்தப்பாடலின் பெரும்பகுதி தெற்கு கோவாவில் தான் படமாக்கப்பட்டுள்ளது. குறுகிய அகலம் கொண்ட நீண்ட சாலைகள், இருமருங்கிலும் சீரான இடைவெளியில் தென்னை மரங்கள், இடையிடையே சிற்றூர்கள், போர்த்துக்கேய கட்டிடமுறையில் கட்டிய வீடுகள் என்று ரம்மியமாக வரவேற்கிறது தெற்கு. 

தெற்கு கோவாவின் சாலைகள்
பொதுவாக தெற்கு கோவா ஒரு ஃபீல் குட் பகுதி. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு தெற்கு ஒரு மன உளைச்சலைத் தந்தது. ஒரு வெறுமை உணர்வு. பள்ளிப்பருவத்தில் வெள்ளி மாலை துவங்கி இரு தினங்கள் மகிழ்ச்சியாக சுற்றித்திரிந்துவிட்டு ஞாயிறு மாலை இருளத்துவங்கியதும் மனதில் ஒரு மென்சோகம் சூழும் இல்லையா ? அதுதான் எனக்கு ஏற்பட்டது. அதுவும் நாங்கள் வடக்கிலிருந்து தெற்கு பயணிக்கும் போது வழியில் மத்திய கோவாவில் அமைந்துள்ள தேவாலயம், அருங்காட்சியகம் எல்லாம் பார்த்து களைத்திருந்தோம். தெற்கில் போய்தான் உணவு என்று மதியம் சாப்பிடக்கூட இல்லை. ஆளரவமற்ற சாலைகள். தெற்கு கோவாவை சென்றடையும் போது மாலை நான்கு மணி. பிற்பகலின் இளவெயில் வேறு, 'நான் கிளம்புகிறேன்' என்று சதாய்க்கும் புதுக்காதலியைப் போல வாட்டியது. இவையெல்லாம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இது எனது தனிப்பட்ட உணர்வு. அநேகமாக மற்றவர்களுக்கு தெற்கு கோவா மகிழ்வான உணர்வையே கொடுக்கும் என்று நம்புகிறேன்.

கோல்வா கடற்கரை
ஏற்கனவே நேரம் ஆகிவிட்டதால் அறைக்கு செல்வதற்கு முன்பு நல்ல பீச் ஒன்றிற்கு சென்று மதிய உணவை முடித்துவிடலாம் என்று முடிவானது. கோல்வா கடற்கரையைச் சென்றடைந்தோம். இக்கடற்கரை மர்கோவா ரயில் நிலையத்திலிருந்து நேர்க்கோட்டில், ஒப்பீட்டளவில் மிக அருகிலிருப்பதால் வந்திறங்கி, “நேரா பீச்சுக்கு வண்டியை விடுப்பா” என்பவர்கள் இங்குதான் வருகிறார்கள். பெரியப் பெரிய ‘ரக்ஸாக்’ பைகளை சுமந்தபடி சுற்றும் பயணிகளை இங்கு பார்க்கலாம். வாட்டர் ஸ்போர்ட்ஸ் இருக்கின்றன. கடைத்தெரு உள்ளது. கடற்கரை மணலில் நடந்தபடி உணவகங்களைப் பார்வையிட்டோம். ஒவ்வொரு உணவகத்தின் வாயிலிலும் பணியாளர் ஒருவர் நின்று நடந்து செல்பவர்களை அழைத்தபடி இருந்தனர். ஒரு உணவகத்தை கடக்கும்போது மட்டும் தமிழ்க்குரல் எங்களை அழைத்தது. தெற்கிலிருந்து ஒரு குரல் ! அங்கே அடைக்கலமானோம். கோவாவின் அடையாள பியரான கிங்ஸ் பருகியபடி மதிய உணவை முடித்துவிட்டு, விடுதியை நோக்கி பயணித்தோம்.

அதற்கு முன் கோவா – போர்த்துகீஸ் இடையே உள்ள உறவு பற்றி ஒரு சிறுகுறிப்பு. 1498ம் ஆண்டு, போர்த்துகேய பயணி வாஸ்கோடகாமா இந்தியாவை அடையும் கடல் வழியைக் கண்டுபிடித்து கேரள மாநிலம், கோழிக்கோடை வந்தடைந்தார். அதுமுதல் போர்த்துகேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே வணிகம் துவங்கிற்று. குறிப்பாக இந்தியாவின் மிளகு, லவங்கம், கிராம்பு போன்றவற்றை இங்கிருந்து ஏற்றுமதி செய்தனர். இவற்றிற்குண்டான மருத்துவ குணங்களை கண்டுணர்ந்திருந்த போர்த்துகேயர்கள் அவற்றை தங்கம், வெள்ளியை விட மதிப்பாகக் கருதினர். அதற்கு மாற்றாக அங்கிருந்து ஆடைகள், வெள்ளி, செம்பு பாத்திரங்களை இறக்குமதி செய்தனர். 

வணிகப் போக்குவரத்து வழக்கமாகி ஒரு கட்டத்தில் போர்த்துகேயர்கள் தங்கள் முகாமிற்கு தோதான இடமாகக் கருதிய கோவாவில் கால் பதித்தனர். அப்போது கோவா முகலாய ஆட்சியின் கீழ் இருந்தது. கோவாவை படையெடுத்த போர்த்துகேயர்கள் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர் திம்மய்யா உதவியுடன் போரில் வென்று கோவாவை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அதன்பிறகு நான்கரை நூற்றாண்டுகள் கோவாவில் போர்த்துகேயர்கள் ஆட்சி தொடர்ந்தது, இந்திய விடுதலையின் பிறகும் கூட. 1961ம் ஆண்டு இந்திய அரசு ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் கோவாவை மீட்டெடுத்தது. இந்திய ஆட்சியின் கீழ் வந்த பிறகு கோவாவின் பழைய தடயங்களை மாற்றி அதனை ஒரு சுற்றுலா தலமாக அமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தை வடக்கு ஏற்றுக்கொண்டாலும் தெற்கு மட்டும் இன்னமும் விடாப்பிடியாக அதன் பழைய அடையாளங்களைக் கொண்டுள்ளது. தெற்கிற்கு எப்போதும் அந்தக் குணம் உண்டு !

கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டது. இன்னமும் கோவாவில் போர்த்துகேய தாத்தாக்களும், மாமாக்களும் சின்னதாக ஒயின்ஷாப்போ, ஹோட்டலோ, ஹோம் ஸ்டேயோ வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். போர்த்துகேயர்கள் மட்டுமல்லாமல் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற பல ஐரோப்பிய நாட்டினர் இங்கு வசிக்கிறார்கள் என்று அறிகிறேன். இந்த ஐரோப்பியர்களுக்கு இந்தியர்கள் என்றால் ஏதோவொரு ஒவ்வாமை இருக்கிறது. ஒரு சம்பவம் சொல்கிறேன். எங்கள் கோவா பயணத்தில் ஒருநாள் தெற்கு கோவாவின் தெருக்கள் வழியாக ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்தோம். மேப்பில் பாதையைத் தேடுகையில் கவனம் பிசகி ஸ்கூட்டர் தெருவோர கால்வாயில் லேண்டாகி இருவரும் கீழே விழுந்தோம். சத்தம் கேட்டு தெருவில் வசிக்கும் ஐரோப்பியர்கள் பலர் வெளியே வந்தனர். வந்து வேடிக்கை பார்த்தனர். ஒருவர் கூட எங்களையும் ஸ்கூட்டரையும் தூக்கவோ, உதவி செய்யவோ இல்லை. 

ஹோட்டல் செக்-இன் இன்னொரு படி மேல். டோனா ஸா மரியா (Dona Sa Maria) என்ற விடுதியில் அறை முன்பதிவு செய்திருந்தோம். தெற்கு கோவாவில் கார்மோனா என்ற சிற்றூரில் ஒதுக்குபுறமாக அமைந்திருந்தது அந்த விடுதி. உரிமையாளர் ஒரு இத்தாலியர். எங்களைப் பார்த்ததும் அவருக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை. தயங்கித் தயங்கி எங்களை அழைத்து, தனக்கும் மேக் மை ட்ரிப்புக்கும் ஏதோ பஞ்சாயத்து இருப்பதாகவும், அதனால் அதன்மூலம் பதிவு செய்பவர்களைத் தன்னால் தங்க வைக்க முடியாது என்றும் கூறினார். மாற்றாக அருகில் அவரது நண்பருடைய ஹோம் ஸ்டே ஒன்றில் தங்க வைப்பதாகக் கூறினார். அதே சமயம் அங்கே வந்த வெளிநாட்டு இணையருக்கு அறை ஒதுக்குவதை நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம். 

விடுதி (மிச்செட்'ஸ் ஹோம் ஸ்டே)
அப்போது நாங்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தோம். அவருடன் வாதம் செய்யும் அளவிற்கு தெம்பில்லை. அதனால் அவர் அழைத்துச் சென்ற ஹோம் ஸ்டேவில் தஞ்சமடைந்தோம்.

கார்மோனா கடற்கரை
ஒரு இரவு முழுக்க கஸினோவில் ஆட்டம் போட்ட களைப்பில், தெற்கு கோவாவின் பகல் பொழுதை தூக்கத்திடம் பறிகொடுத்தோம். எஞ்சியிருந்த ஒரு இரவை டக்கீலாவிடம். கடைசியாக எங்கள் ஹோம் ஸ்டேயில் இருந்து நடை தூரத்தில் அமைந்திருந்த கார்மோனா கடற்கரைக்கு சென்றோம். நீளமான கடற்கரை. துவக்கத்தில் நான்கைந்து குடில் உணவகங்கள். அவற்றைத் தாண்டி ஆளரவமற்ற, சுத்தமான, அமைதியான கடற்கரை. ஒரு கொண்டாட்டமான சினிமாவைப் பார்த்து முடித்தபிறகு அமைதியாக ஸ்க்ரால் ஆகும் எண்ட் க்ரெடிட்ஸ் போல அமைந்திருந்தது அது !

படங்கள்: இணையம்

அடுத்து வருவது: கோவா - நிறைவு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

17 June 2019

பிரபா ஒயின்ஷாப் – 17062019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் ஒயின்ஷாப் எழுத, சிந்திக்க இணக்கமான சூழல் அமையாததால் கடந்த வாரம் ஒயின்ஷாப் வெளியாகவில்லை. ப்ச்... திங்கட்கிழமைக்கும் ஒயின்ஷாப்பிற்கும் உள்ள மரபு உடைந்ததில் கொஞ்சம் வருத்தம்.

********************

ஒரு சிறிய கதையுடன் (சிறுகதை ?) இவ்வார ஒயின்ஷாப்பை துவங்கலாம். 

ஒரு பதின்பருவ பெண். அவளது அம்மா இறந்துவிட்டார். அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். சித்தியை அவளுக்கு பிடிக்கவில்லை. அவள் தனது அப்பா மற்றும் சித்தியுடன் புதுவீட்டில் குடியேறுகிறாள். ஆனால் புதுவீட்டில் நடக்கும் சில வினோத சம்பவங்கள் அத்தனை மகிழ்ச்சியானதாக இல்லை. கீழ் தளத்தில் இருக்கும்போது மேல் தளத்தில் யாரோ நடக்கும் சத்தம் கேட்கிறது. இவர்கள் வெளியே போய்விட்டு வரும்போது வீட்டிற்குள் யாரோ வந்துபோன தடயங்கள் தெரிகின்றன. உச்சகட்டமாக ஒருநாள் அவள் உடை மாற்றுகையில் யாரோ ஒருவன் அவளை வீட்டிற்குள் மறைந்திருந்து பார்ப்பதை உணர்கிறாள். உடனே தன் அப்பாவிடம் சென்று முறையிடுகிறாள். அப்பாவும் சித்தியும் இதுகுறித்து ஆலோசிக்கிறார்கள். மகளுக்கு புதுவீடு பிடிக்காததால் தான் இப்படியெல்லாம் புகார் சொல்கிறாள் என்று முடிவுக்கு வருகிறார்கள். 

வினோத நிகழ்வுகள் தொடர்கின்றன. இந்த வீட்டில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும் மகள் வீட்டைப் பற்றியும், அங்கே இதற்கு முன்பு குடியிருந்தவர்களைப் பற்றியும் பக்கத்து வீடுகளில் விசாரிக்கிறாள். அந்த வீட்டில் இதற்கு முன்பு ஒரு கணவன், மனைவி அவர்களது மகளுடன் வசித்து வந்ததாகவும், அவர்கள் ஒருநாள் மர்மமான முறையில் இறந்துபோனதாகவும் தெரிந்துகொள்கிறாள். வீடு திரும்பியதும் வீட்டிலுள்ள பழைய ஸ்டோர் ரூமில் இதற்கு முன் குடியிருந்தவர்களுடைய சில பொருட்கள் இறைந்து கிடப்பதை கவனிக்கிறாள். அதிலிருந்த ஒரு குடும்ப புகைப்படத்தை பார்க்கிறாள். அக்கம் பக்கத்து வீடுகளில் சொன்ன கணவன், மனைவி, மகள் குடும்பம். அவளது பயம் அதிகமாகிவிடுகிறது. அதே வீட்டில், அதே போல குடும்பமாக வசிக்கும் இவர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று நினைக்கிறாள். அதே சமயம் அப்பாவிடமும், சித்தியிடமும் எப்படி புரிய வைப்பது என்று தவிக்கிறாள். அவளுக்கு அந்த சிரமம் ஏற்படாமல், அடுத்தடுத்த வினோத அனுபவங்கள் அப்பாவுக்கும், சித்திக்குமே ஏற்படுகின்றன. அவர்களுக்கோ பக்கத்து வீட்டிலுள்ள வினோதமான ஆசாமியின் மீது சந்தேகம். அவனது பார்வையே சரியில்லை என்கிறாள் சித்தி. அப்பா மின்னணு பூட்டு இயந்திரங்களை நிறுவி வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்துகிறார். இனி எந்த பயமும் இல்லையென ஆசுவாசம் அடைகிறார்கள்.

ஒருநாள் அப்பாவும், சித்தியும் வெளியூர் சென்றிருக்க மகள் மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறாள். அத்தருணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள விழையும் மகள் அவளது காதலனை வீட்டிற்கு விளையாட அழைக்கிறாள். அப்பா, அம்மா விளையாட்டு ! பாவம், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த காரணத்தினால் அவர்களை ஒருவன் மறைந்திருந்து பார்க்கிறான் என்று அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஒரு சுற்று சுமூகமாக முடிந்து அடுத்த சுற்றுக்காக அவர்கள் காத்திருக்கும் வேளையில் அப்பாவும், சித்தியும் வந்துவிடுகிறார்கள். அவசர அவசரமாக காதலனை அலமாரியில் மறைந்துகொள்ளச் சொல்கிறாள். அப்பாவும், சித்தியும் வந்திருந்து கொஞ்ச நேரம் கழித்து அவர்களுடைய அறைக்கு சென்றுவிடுகிறார்கள். மகள் தனது அறைக்கு விரைந்து அலமாரியைத் திறந்து பார்க்கிறாள். காதலனைக் காணவில்லை. புத்திசாலி காதலன், கிடைத்த சமயத்தில் சாமர்த்தியமாக வீட்டிற்கு கிளம்பிப் போய்விட்டான் என்று நினைக்கிறாள். ஆனால் உண்மையில் காதலன் அங்கிருந்து கிளம்பியிருக்கவில்லை.

ஒரு இரண்டு, மூன்று நாள் கழித்து காதலனிடம் இருந்து எந்த குறுந்தகவலோ, அழைப்போ வராததால் அவனை போனில் அழைக்கிறாள். இப்போது அழைப்பு மணி அவளது அலமாரியில் ஒலிக்கிறது. ஒருவேளை அலைபேசியை அலமாரியிலேயே மறந்திருப்பானோ என்று நினைத்துக்கொண்டே மெல்ல அலமாரியைத் திறந்தால் காதலனின் பிணம் உள்ளேயிருந்து சரிந்து விழுகிறது ! போலீஸுக்கு தகவல் சொல்லப்படுகிறது. போலீஸ் அந்த குடும்பத்தையே சந்தேக வளையத்திற்குள் கொண்டு வருகிறது. அப்பாவும், சித்தியும் வேறு மகள் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். பிரச்சனை தீரும்வரை மகளை வீட்டுச்சிறையில் வைக்க முடிவு செய்து ஸ்டோர் ரூமுக்குள் தள்ளி கதவைப் பூட்டி விடுகிறார்கள். அங்கே அவளுக்கு ஒரு மருத்துவ கோப்பு கிடைக்கிறது. ஒரு பதின்பருவ இளைஞனின் மனநோய் பற்றிய குறிப்பு அது. அவனை பீடித்திருக்கும் அந்த மன நோயின் பெயர் – AGORAPHOBIA ! அதாவது வீட்டிலிருந்து வெளியே செல்வது குறித்த அதீத பயம். அந்த மருத்துவ கோப்பில் இளைஞனின் தந்தை பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அது இதற்கு முன் அந்த வீட்டில் குடியிருந்த குடும்பத் தலைவனின் பெயர் என்று அக்கம் பக்கத்தினர் சொன்னது நினைவுக்கு வந்து போகிறது. அவளுக்குள் ஏதோவொரு புதிர் விடுபட்டது போல தோன்றியது. முன்பொரு முறை அந்த ஸ்டோர் ரூமில் பார்த்த குடும்ப புகைப்படத்தை தேடியெடுத்து அதனை உற்று நோக்குகிறாள். வீட்டின் முன்புறம் கணவன், மனைவி, மகள் மூவரும் சிரித்தபடி போஸ் கொடுக்க, பின்னால் வீட்டின் ஜன்னலில் மறைந்திருந்து பார்க்கும் ஒரு முகம் தெரிந்தது. புகைப்படத்தில் அந்த முகத்தை கவனித்த வேளையில், அந்த அறையில் அவள் மட்டும் இல்லை என்பதை அவள் உணர்ந்தாள் ! முற்றும்.

********************

மேலே எழுதியிருப்பது 2016ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான வித்தின் (WITHIN) என்கிற படக்கதையின் சாரம். அதாவது அப்படத்தின் கதையை கொஞ்சம் முன்னும், பின்னும் மாற்றி, இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சில விஷயங்களை மாற்றி எழுதியிருக்கிறேன். சுவாரஸ்யமாக இருந்ததா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

தமிழில் எடுப்பதற்கான அம்சங்கள் பொருத்தமாக இருந்தாலும் கூட ஒரு முக்கியமான லாஜிக் இடிக்கிறது. அது – CRAWLSPACE. சில மேலை நாட்டு கட்டிட முறைகளில் ஒரு தளத்திற்கும் மற்றொரு தளத்திற்கும் இடையே சுமார் ஒரு அடி உயரத்தில் இடத்தை விட்டு வைப்பார்களாம். மின்சரடுகள், தண்ணீர் குழாய்கள் போன்றவற்றை வீட்டிற்குள் கொண்டுவர இந்த இடைவெளியை பயன்படுத்திக்கொள்வார்களாம். கதைப்படி நம் சைக்கோ நாயகன் இந்த இடைவெளியில் தான் ஒளிந்துகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்த CRAWLSPACE (தமிழில் தவழ்வெளி என்று வைத்துக் கொள்ளலாமா ?) ஒரு பெரிய டாபிக். இந்த ஒயின்ஷாப் தாங்காது. சுருக்கமாகச் சொல்வதென்றால் படத்தில் சொல்லப்படும் தவழ்வெளி சம்பவம் வெறும் கதைக்காக சேர்க்கப்பட்ட சம்பவம் அல்ல. மெக்ஸிகோவில் கடுமையான பஞ்சம் நிலவிய சமயத்தில் அங்கே வீடற்ற பல மனிதர்கள் இம்மாதிரி தவழ்வெளிகளில் மறைந்திருந்து வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நவீன உலகில் நடைபெற்ற இதுபோன்ற உண்மைச் சம்பவங்களை RANKER மற்றும் LISTVERSE போன்ற தளங்கள் பட்டியலிட்டுள்ளன. இவையெல்லாம் பிஸார். சுவாரஸ்யத்துக்காக கற்பனை கலந்து தயாரிக்கப்பட்ட பட்டியல் என்று கூட நினைக்கலாம்.

கைது செய்யப்பட்டவர்
அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு அண்மைச்செய்தி – அமெரிக்காவின் டெனஸி மாகாணத்தில் தனது பதினான்கு வயது மகளின் அறைக்கு மேலிருக்கும் இடைவெளியில் ஒரு மனிதன் வசிப்பதாக மகளின் தாயார் புகார் அளித்து அந்த ஆளை கைது செய்திருக்கிறார்கள். அந்த மனிதன் அந்த பதினான்கு வயது பெண்ணின் முன்னாள் காதலன் என்பது உபரித்தகவல்.

சரி, இப்போது WITHIN படத்தை தமிழில் யார் எடுக்கப் போகிறீர்கள். CRAWLSPACE என்பதை வேண்டுமானால் ஸ்டோர் ரூம் அல்லது அலமாரியின் பின்னால் மறைந்திருக்கும் ரகசிய அறை என்று மாற்றிக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 June 2019

பிரபா ஒயின்ஷாப் – 03062019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழல்லாத திராவிட மொழிகளில் வெளியான இரண்டு திரைப்படங்களைப் பற்றி இவ்வார ஒயின்ஷாப்பில் பார்க்கலாம்.

முதலாவது, கவளுதாரி (கன்னடம்). யூ-டர்னிற்குப் பிறகு நான் நேரடியாகப் பார்க்கும் இரண்டாவது கன்னட சினிமா. ப்ளாக்பஸ்டர், ஏராளமான பாராட்டுகள் குவிந்துக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாண்டி நம்மவர்கள் பலரும் கவளுதாரியைப் பார்த்து, மற்றவர்களுக்கு பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள். கவளுதாரியில் கதாநாயகியாக நடித்திருக்கும் ரோஷிணி பிரகாஷ் மீது எனக்கு ஒரு பிரத்யேக ஆர்வம். அது அப்புறம். முதலில் படத்தைப் பற்றி பார்க்கலாம்.

போக்குவரத்து காவல் துணை ஆய்வாளராக பணிபுரியும் ஷ்யாமுக்கு குற்றப் பிரிவில் இணைய ஆசை. ஆனால் கைகூடவில்லை. இன்னொரு பக்கம் திருமணத்திற்கு மணப்பெண் அமையவில்லை. அந்த சமயத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடத்திலிருந்து மூன்று பேருடைய எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன. அவை நாற்பது வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட தொல்லியல் துறை அதிகாரி, அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோருடையது என்று கண்டுபிடிக்கப்படுகிறது. குற்றப்பிரிவு காவல்காரர்கள் அதனை அலட்சியமாக கையாள, ஷ்யாம் தனது தனிப்பட்ட ஆர்வம் காரணமாக அந்த வழக்கைத் தொட்டு, அதனால் ஏற்படும் விளைவுகள், அதன் முடிவு மிச்சக்கதை. ப்ரைமில் இருக்கிறது.

கவளுதாரி நிறைய இடங்களில் இரண்டு படங்களை நினைவூட்டுகிறது. ஒன்று, யூ-டர்ன். மற்றொன்று, துருவங்கள் பதினாறு (ஹீரோ வேறு ரகுமான் சாயல்). குறிப்பாக, யூ-டர்னின் வார்ப்புருவை வைத்துக்கொண்டு அதிலே, அதே பாணியிலான வேறொரு கதையை உட்கார வைத்திருக்கிறார்கள். நிறைய இடங்களில் பார்வையாளர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள். அதே சமயம் படம் முடியும் போது, படத்தில் நிறைய gaps இருப்பதாகத் தோன்றுகிறது. அதற்காகவே இன்னொரு முறை பார்க்க வேண்டும்.

கன்னட சினிமா என்றால் ஹீரோக்கள் பார்ப்பதற்கு ஹீரோ மாதிரி இருக்க மாட்டார்கள் என்றொரு கருத்து உண்டு. ஒருமுறை ஒரு நண்பர் கன்னட தேசத்தில் பிறந்த ஆண்கள் அனைவரும் சபிக்கப்பட்டவர்கள், அதே சமயம் அங்கு பிறந்த பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார். கன்னட ஹீரோக்களின் தோற்றம் அதனை உறுதிப்படுத்தும். அப்படிப்பட்ட வரலாறு கொண்ட மண்ணில் இருந்து ஸ்மார்ட் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் ரிஷி. கவளுதாரிக்கு பிறகு ரிஷி பட வாய்ப்புகளால் பிஸி !

ரோஷிணி பிரகாஷ்
ரோஷிணி பிரகாஷ் ! நீண்ட நாட்களாக ரோஷிணி மீது ஏனென்றே தெரியாத ஒரு ஈர்ப்பு இருந்து அது ஏன் என்று இப்போது கண்டுபிடித்துவிட்டேன். ஈர்ப்புக்கு காரணம் கெளதமி. ரோஷிணியிடம் கெளதமியின் சாயல் அப்படியே இருக்கிறது. கெளதமி என்றால் இப்போதுள்ள கெளதமி அல்ல. மாசி மாசம் ஆளான பொண்ணு’வில் ஃப்ரெஷ்ஷாக இருப்பாரே அந்த கெளதமி. அதே கூர் நாசி, அதே ஜூஸியான கீழுதடு. சட்டென இருவரும் ஒரே பூர்வீகத்தில் இருந்து வந்திருப்பார்களோ என்று ஐயப்பட்டு விக்கியில் பார்த்தேன். இல்லை, கெளதமி ஆந்திரா. ரோஷிணி மைசூரு. இருக்கட்டும் இரண்டுக்கும் ஒரே ஸ்க்ரிப்ட் தான். 

சமீப வருடங்களில் சந்தனக்கட்டை என்று அழைக்கப்படும் கன்னட சினிமாவில் இருந்து கோலிவுட்டிற்கு அளிக்கப்பட்ட கொடை ஷ்ரதா ஸ்ரீநாத். அந்த வகையில் அடுத்த கொடை ரோஷிணி பிரகாஷாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். ரோஷிணி ஏற்கனவே ஏமாளி(லி) என்ற படத்தில் சிறிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். ரோஷிணியின் பேட்டியைப் பார்த்தேன். ஆங்கிலமும், கன்னடமும், தமிழும் கலந்து, அதிலே தமிழ் இலக்கணத்தை மிக்ஸியில் அடித்து மேலே ஊற்றியது போல கொஞ்சலான ஒரு புது மொழியைப் பயன்படுத்துகிறார். பாரதியார் இருந்திருந்தால் தமிழை விட அதுதான் இனிது என்று ஒப்புக்கொண்டிருப்பார். ரோஷிணி தமிழ் சினிமாவில் ஒரு சுற்று வர வேண்டும் !

இரண்டாவது, பார்க்கப்போவது ஆ (Awe) (தெலுங்கு). கவளுதாரியை ரோஷிணிக்காக பார்த்தேன் என்றால் ஆ’வை யாருக்காக பார்த்தேன் என்று தனியாக சொல்ல வேண்டியிருக்காது. ஆனால், அது மட்டும் காரணமல்ல. ஆ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் !

ஒரு உணவகம். அங்கே வரும் வெவ்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களின் பலதரப்பட்ட உணர்வுகளைப் பற்றியும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு புறம் காஜல் அகர்வால் எல்லோரையும் கொல்ல வேண்டுமென்ற உணர்வுடன் அதே உணவகத்திற்கு வருகிறார். காஜலுக்கும் உணவகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதைத் தெரிந்துகொள்ள படம் பார்க்க வேண்டும். கதை என்று சொல்வதை விட காட்சித்துணுக்குகளின் தொகுப்பு என்றால் பொருத்தமாக இருக்கும். கூடவே மனிதர்களின் வெவ்வேறு உணர்வுகளை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு லெஸ்பியன் ஜோடி, ஒரு ஆணாக இருந்து பெண்ணாக மாறப்போகும் விஞ்ஞானி, ஒரு மந்திரவாதி, அவரோடு போட்டி போட்டு மேஜிக் செய்யும் குழந்தை, டிரக்ஸ் எடுத்துக்கொள்ளும் ஒரு பணிப்பெண், அவளது காதலன், ஒரு சமையல்காரர், ஒரு தங்கமீன், ஒரு போன்சாய் மரம் என்று வெவ்வேறு தரப்பு காண்பிக்கப்பட்டு இறுதியில் எல்லாம் ஒரு புள்ளியில் வந்து முடிகிறது. நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.

போகிற போக்கில் லெஸ்பியன் உறவு, பாலின மறுசீரமைப்பு சிகிச்சை, பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள், போதைக்கு அடிமையாதல் போன்ற சமூக விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. கடைசி பதினைந்து நிமிட படம் நம்மை ஒரு மாதிரியாக குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது என்பதால் அதிலிருந்து விடுபடுவதற்காகவே இரண்டாவது முறை படம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் அந்தந்த மொழிகளில் உள்ள பிரபல கதாநாயகர்களால் தயாரிக்கப்பட்ட படங்கள். இரண்டிலும் டைட்டில் பாடல் அட்டகாசமாக இருந்து, ஒரு அமானுஷ்ய உணர்வைத் தருகிறது. இரண்டும் நமக்கு நெருக்கமான மொழிகள் என்பதால் சப்-டைட்டிலை படித்துக் கொண்டிராமல் படத்துடன் ஒன்ற முடிகிறது. இரண்டிலும் துணை வேடங்களில் சில தமிழ் படங்களில் பார்த்து பழக்கப்பட்ட துணை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இரண்டும் நல்ல படங்கள் !

இப்போது நான் இரண்டு பறக்கோடி எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறேன். ஒரு புறம், இவ்விரு படங்களை யாரும் தமிழில் ரீமேக் செய்துவிடக் கூடாது என்றும், இன்னொரு புறம், தமிழில் நமக்கு விருப்பமான நடிகர்கள், இயக்குநர்களின் கைவண்ணத்தில் இவற்றை பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment