அன்புள்ள வலைப்பூவிற்கு,
இப்படி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை தனிமையில் சந்திக்கிறீர்கள். ஒருவேளை அங்கே நீங்கள் அவரை காரணமே இல்லாமல் கொலை செய்தால் கொலை செய்தது நீங்கள்தான் என்று எப்படி கண்டுபிடிக்க முடியும். மோட்டிவேஷனே இல்லாமல் கொலை செய்தால் நம்மை கண்டுபிடிக்க முடியாது என்ற ஒன்லைனை எப்போதோ ஒரு சிறுகதையில் படித்ததாக ஞாபகம். (அநேகமாக சுஜாதா எழுதியது). கற்றது தமிழ் படத்தில் கூட இப்படியொரு கருத்து சொல்லப்பட்டிருக்கும். அதுதான் இந்தப்படத்தின் உயிர்நாடி.
- Title: Strangers on a Train
- Country: United Kingdom
- Language: English
- Year: 1951
- Genre: Crime, Thriller
- Cast: Farley Granger, Ruth Roman, Robert Walker
- Direction: Alfred Hitchcock
- Cinematography: Robert Burks
- Editing: William H. Zeigler
- Music: Dimitri Tiomkin
- Produced By: Alfred Hitchcock
- Length: 101 Minutes
டென்னிஸ் வீரர் கய். அவருடைய மனைவி ஒரு... எப்படி சொல்வது... கமல்மொழியில் லோலாயி. மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று காதலியை கரம்பிடிக்க நினைக்கிறார் கய். ஆனால் அவரது மனைவி அவருக்கு விவாகரத்து தருவதாக இல்லை. இப்போது அவருக்கு மனைவியை கொல்லனும் போல இருக்கு.
புருனோ ஒரு அதிபுத்திசாலி. ரசனைக்காரன். அதிகம் பேசுவான். அவனுக்கு சின்ன வயதிலிருந்தே அவனது தந்தையை பிடிக்காது. பிடிக்காதென்றால் தந்தையை கொன்றுவிட வேண்டும் என்னுமளவிற்கு ஒரு வெறி.
“முரண்” கொண்ட, முன்பின் அறிமுகமில்லாத இவர்கள் ஒரு ரயில்பயணத்தில் சந்திக்கிறார்கள். (Strangers on a Train). டென்னிஸ் வீரனிடம் ரசிகனாக அறிமுகமாகும் புருனோ, கய்யின் விருப்பம் இல்லாமலே அவனது பர்சனல் விஷயங்களைப் பற்றி அலசி ஆராய்கிறான். ஒரு கட்டத்தில் உனக்கு உன் மனைவியும் எனக்கு என் தந்தையும் கொல்லப்பட வேண்டும். நாமிருவர் கொலையை பரிமாறிக்கொண்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பலாம் என்று கய்யிடம் கூறுகிறான். அவன் செவிசாய்ப்பதாக இல்லை.
பிறிதொரு நாளில் கய்யின் மனைவியை பின்தொடர்ந்து செல்லும் புருனோ, ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் வைத்து அவளை கொலையும் செய்கிறான். பதிலுக்கு கய் தனது தந்தையை கொல்ல வேண்டுமென்பது அவன் எதிர்பார்ப்பு. கய் போலீசிடம் செல்ல நினைத்தும் முடியவில்லை, ஏனென்றால் அனைவரின் சந்தேகமும் அவன்மீதுதான். தொடர்ந்து புருனோ தனது தந்தையை கொல்லும்படி தொல்லை கொடுக்க கய் என்ன முடிவெடுத்தான், இறுதியில் யார் சட்டத்தின் பிடியில் சிக்கினார்கள் என்பதே மீதிக்கதை.
70 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் இந்த அளவிற்கு பிரமிக்க வைக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு காட்சியில் டென்னிஸ் போட்டியையும், சிகரெட் லைட்டரையும் வைத்து நம்மை சீட் நுனிக்கு வர வைக்கிறார். அந்தகாலத்துப் படம் என்பதால் செல்போன், டிவி என்று எதையும் படத்தில் காண முடியவில்லை. அதிகபட்ச விஞ்ஞானம் ரயிலும் தரைவழி தொலைபேசியும் தான்.
இவர்தான் படத்தின் ஹீரோயின். நம்மூர் எம்.என்.ராஜம் மாதிரி. இப்போது உயிரோடு இருந்திருந்தால் 89 வயது இருக்கும். 89 வயது கிழவியைப் போய் ஏன் சைட்டடிப்பானேன்.
இதன் இயக்குனர் ஹிட்ச்காக் உலக சினிமாவிற்கு ஒரு உன்னதமானவர். மாஸ்டர் ஆப் சஸ்பென்ஸ் என்று பெயரெடுத்தவர். தம் சினிமாக்களில் பல வித்தியாசமான ஷாட்டுகளையும் இன்னபிற புதுமைகளையும் புகுத்தியவர். கிட்டத்தட்ட 80 படங்களை இயக்கியிருக்கிறார். 1960ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ திரைப்படம் உலகப்புகழ் வாய்ந்தது. மேலே பார்க்கும் புகைப்படம் அவரது புதுமையான முயற்சிகளில் ஒன்று.
இதுதான் தமிழில் முரண் என்பது உளவுத்துறை செய்தி. (வில்லன் சேரனா...? பிரசன்னாவா...?). ஆனால் வழக்கம் போல இயக்குனர் இது தழுவல் மட்டுமே, படத்தின் ஒன்லைனை மட்டும் எடுத்துக்கொண்டு வித்தியாசமான திரைக்கதை அமைத்திருக்கிறோம் என்று டக்கால்டி விட்டிருக்கிறார். (இந்தப்படத்தை எடுக்க ஆறு மாசமா தூங்கலை. ஏழு மாசமா பல் தேயக்கலைன்னு சொல்லாம இருந்தா சரி). ஹிட்ச்காக்கை போலவே சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருந்தால் இது ஹிட் படம். பொறுத்திருந்து பார்ப்போம்.
சமீபத்தில் எழுதியது: வாகை சூட வா
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|