அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஞாநி என்னுடைய மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். ஆனந்த விகடனில் வெளிவந்த கண்ணகி சிலை – கரடி பொம்மை கட்டுரையில் இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு வாசிக்க ஆரம்பித்தேன். திடீரென ஒருநாள் எனக்கு இன்ப அதிர்ச்சி. நண்பரின் நண்பர் மூலமாக ஞாநியின் வீட்டுக்கு சென்று அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு பக்கத்தில் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டது மறக்க முடியாத நிகழ்வு. அடுத்த ஒருவாரத்திற்கு ஒருவித பரவச நிலையிலே தான் இருந்தேன். இன்றும் எனது மொபைலில் அந்த போட்டோவை வைத்திருக்கிறேன். இப்படியெல்லாம் நான் அவரைப் பற்றி சிலாகிப்பதை அவரே கூட விரும்பமாட்டார். அதுதான் ஞாநி.
அன்பே சிவம் படத்தில் கமல் மண்சோறு சாப்பிடும் பக்தனை மடக்கி, மண்ணும் கடவுள் சோறும் கடவுள் ரெண்டையும் ஏன் குழைச்சு அடிக்கிறன்னு கேக்குற மாதிரி, புத்தக சந்தையில் தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த ஒரு இளைஞனை மடக்கி நானும் மனிதன், நீயும் மனிதன். என்னிடம் ஏன் ஆட்டோகிராப் வாங்குற....? என்று கேட்டார். ஒருவேளை அந்த இளைஞன் அவரிடம் அன்று ஆட்டோகிராப் கேட்காமல் இருந்திருந்தால் அவருடைய கேள்வி எனக்கானதாக இருந்திருக்கும். ஏனென்றால் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு கையெழுத்து கேட்கலாமா என்று தயங்கியபடியே அருகில் நின்றிருந்தவன் அடியேன்தான்.
சரி, Coming to the matter. ஞாநி சமீபத்தில் எழுதிய ஒய் திஸ் கொலவெறி...? இடுகையிலிருந்து ஒரு பத்தி:
“இன்றைக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக தொடர்புக்கான இணைய தளங்களில் ஒரு பாட்டோ ஒரு பொருளோ ஒரு விஷயமோ ஹிட் ஆவது பெரிய விஷயம் இல்லை. சர்வதேச அளவில் பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பொய்க் கணக்குகளை ஆயிரக்கணக்கில் வைத்திருக்கின்றன. இவையெல்லாம் இளம் ஆண்கள், பெண்கள் பெயரில் உலவுகின்றன. இவற்றில் ‘லேட்டஸ்ட் மாடல் …… ஷூவை பார்த்தியா? அருண் போட்டுகிட்டு வந்தான். ஆவ்சம்’ என்று அகல்யா ஷோபாவுக்கு ஸ்டேட்டஸ் போடுவாள். இதை ஐநூறு பேர் லைக் பண்ணுவார்கள். அருண், அகல்யா, ஷோபா லைக் பண்ணும் ஐநூறு பேர் எல்லாரும் கற்பனைப் பாத்திரங்கள். ஃபேஸ்புக்கில் நிஜம் போல உலவுபவர்கள். ஷூ கம்பெனியால் உலவவிடப்பட்டவர்கள். புது ஷூ செய்தி போதுமான அளவு பரப்பப்பட்ட்ட பின்னர்தான் கம்பெனி ஷூவை மார்க்கெட்டுக்கே அனுப்பும்...!”
தொடர்ந்து இந்த இடுகையை படிக்க படிக்க யாரோ என் கன்னத்தில் பளார் பளாரென்று அறைவது போலிருந்தது. காரணம் – இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒய் திஸ் கொலவெறி...? பாடலை ரிப்பீட் மோடில் வைத்து கேட்டுக்கொண்டிருப்பதாக என்னுடைய பதிவொன்றில் சிலாகித்திருந்தேன். ஞாநியின் இந்த கட்டுரையை முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும். (ஞாநியின் தளத்தில் லாகின் செய்தால் மட்டுமே படிக்க முடியும் என்பதால் வடக்குப்பட்டி ராம்சாமி லிங்க்). இதை படித்ததும் எனக்கு என்ன கேட்க தோன்றியதோ அதையே வாசகர் ஒருவர் கேள்வி கேட்க, அந்த கேள்வியை என்னிடம் யாராவது கேட்டிருந்தால் நான் என்ன பதில் சொல்லியிருப்பேனோ அதே பதிலை வ.ராம்சாமியும் சொல்லியிருந்தார்.
மேட்டர் இதுதான். எனக்கு அந்த பாடலை பிடித்திருக்கிறது. நான் ரசிக்கிறேன். நாளைக்கு வேறு புதிய பாடல் வந்ததும் இதை மறந்துவிட்டு அதை கேட்பேன். அவ்வளவே. மற்றபடி இந்தப்பாடலுக்கும் எனக்கும் எந்த சென்ட்டிமென்ட்டும் கிடையாது, நானும் தனுஷும் ஒரே தட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் கிடையாது. இந்தப்பாடலை ரசிக்கும் பெருவாரியான இளைஞர்களின் கருத்தும் இதுவே. இதை ஏன் ஞாநி இவ்வளவு சீரியஸா சொல்றாரு என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் அந்தாளுக்கு வேற வேலையே இல்லைன்னு சொல்லிட்டு அவங்களோட கலெக்டர் வேலையை கண்டின்யூ பண்ண போயிடுறாங்க.
பாடலை வெறும் பாடலாக எடுத்துக்கொண்டு கடந்தால் பிரச்சனையில்லை. ஆனால் அடித்தட்டு ரசிகர்களின் மனது அப்படி இருப்பதில்லை. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை எனது பதிவுகளில் வேதனை பட்டிருப்பேன். என்னுடைய தமிழ் சினிமாவின் தறுதலை ஹீரோக்கள் என்ற இடுகையின் சாரமே இதுதான். இதே கருத்தை ஞாநி தன்னுடைய கட்டுரையிலும் வலியுறுத்தியிருக்கிறார். இதுபோன்ற பாடல்கள், படங்களை கடக்கும் அடித்தட்டு ரசிகர்கள், தனுஷை மாதிரியே அப்பா, அம்மாவை எதிர்த்து பேசுகிறார்கள், பெண்களை கேவலப்படுத்துகிறார்கள், பொறுக்கித்தனம் செய்கிறார்கள், குடித்து சீரழிகிறார்கள். தனுஷ் நிஜவாழ்க்கையில் அவருடைய அப்பாவின் பேச்சை கேட்டு முன்னுக்கு வந்துவிடுவது பாவம் ரசிகனுக்கு தெரிவதில்லை.
இங்கே தனுஷ் என்று குறிப்பிட்டிருப்பது தனுஷ் மட்டுமல்ல. எல்லா மாஸ் ஹீரோக்களும் தான்.
****************************************************
அடுத்ததும் தனுஷ் நடித்த ஒரு படத்தைப் பற்றிதான்.
மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பிக்கொள்வதில் நம் கோலிவுட் இயக்குனர்களுக்கு நிகர் யாருமில்லை. அதாவது, தன் வீட்டில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்துக்கொண்டு கருப்பு பணத்தின் தீமைகளை பற்றி படம் எடுப்பார்கள் (ஷங்கரின் சிவாஜி), தான் காப்பி அடித்து படம் எடுத்துவிட்டு காப்பி அடிக்கும் இயக்குனர்களை கிண்டலடிப்பார்கள் (கே.வி.ஆனந்த் – அயன், கோ). இப்போது அந்த வரிசையில் Plagiarism (அறிவுதிருட்டு) பற்றிய ஒரு படத்தை எடுத்திருப்பவர் செல்வராகவன் ஆச்சர்யக்குறி.
நிற்க... இதுவரைக்கும் செல்வராகவன் காப்பியடித்து படமெடுப்பவர் என்று நான் நினைக்கவில்லை. சில பதிவர்களும் பின்னூட்டவாதிகளும் மயக்கம் என்ன படம் “A Beautiful Mind” படத்தின் காப்பி என்று சொல்கிறார்கள். நான் இதுவரைக்கும் அந்த “Beautiful Mind” படத்தை பார்க்கவில்லை. இயக்குனரின் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் காட்சிகள் கூட பல படங்களில் இருந்து உருவப்பட்டதாக கூறினர். என்னுடைய தனிப்பட்ட கருத்து, செல்வராகவன் Comparatively Better. கிகுஜிரோவை பிரதி எடுத்த மிஷ்கின், ஐயாம் சாமை காப்பியடித்த இயக்குனர் விஜய் போன்றவர்களோடு ஒப்பிட்டால் கொஞ்சம் புத்திசாலி திருடன்தான் செல்வராகவன்.
ஒரே படத்தில் திருடாமல் பல படங்களில் இருந்து பல காட்சிகளை திருடுவது. சந்தேகமே இல்லாமல் செல்வராகவன் ஒரு புத்திசாலி தான். ஆனால் யோக்கியனா...? Coming back to ஞாநி. ஞாநி அவருடைய அயோக்கியர்களும் முட்டாள்களும் என்ற புத்தகத்தில் ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் புத்திசாலிகள், ஆனால் அயோக்கியர்கள். அவர்களிடம் ஏமாறுபவர்கள் நல்லவர்களாக இருப்பினும் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பார். இதே “அயோக்கியன்-முட்டாள்” சொல்லாடலைத்தான் என்னுடைய கோ படம் பற்றிய கோபமான இடுகையில் பயன்படுத்தியிருந்தேன். அதை தவறாக புரிந்துக்கொண்ட நண்பர்கள் சிலர் யாரை முட்டாள் என்று சொல்கிறாய் என்று கோபம் காட்டினார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்திருந்த செல்வராகவன், காப்பியடிக்கும் இயக்குனர்களுக்கு காயடியுங்கள் என்ற அர்த்தத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதுதான் இந்த கோபத்திற்கு காரணம். ஆயிரத்தில் ஒருவன் படம் வெளிவந்திருந்த சமயம் நான் காப்பியடிப்பதாக நிரூபித்தால் சினிமா எடுப்பதையே நிறுத்திவிடுகிறேன் என்று சவால் விட்டவர். திருடனுக்கு தேள் கொட்டினது மாதிரி பொத்திக்கொண்டு இருந்திருக்கலாம். What a beautiful mind...?
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|