29 May 2017

பிரபா ஒயின்ஷாப் – 29052017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கொஞ்ச வருடங்களுக்கு முன்பு கிழக்கில் (உண்மையான) அதிரடி தள்ளுபடி தந்தார்கள் நினைவிருக்கிறதா ? அப்போது வாங்கிய புத்தகங்கள் படிக்காமல் இருக்கின்றன. செக்ஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் கூட நான்கைந்து வாங்கியிருந்தேன். (கிழக்கில் ஸாஃப்ட் எராட்டிக் புத்தகங்கள் வெளியிடும் உத்தேசம் இருப்பதாக பத்ரி ஒரு ஃபேஸ்புக் உரையாடலில் சொல்லியிருக்கிறார்). அவற்றிலிருந்து ஓம் ஷின்ரிக்கியோ எனும் புத்தகத்தை எடுத்தேன். ஜப்பான் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஹிரோஷிமா, நாகசாகி. பின்பு டெக்னாலஜி. அவர்களின் உழைப்பு, உயர்வு. ஜப்பானில் ஒரு வருடகாலம் ஆன்சைட் அனுபவித்துவிட்டு வந்த நண்பர் ஒருவர் உலகிலேயே கவர்ச்சிகரமான பெண்கள் ஜப்பானிய பெண்கள் தான் என்றார். அதைப் பற்றியெல்லாம் இல்லாமல் ஜப்பான் – மத தீவிரவாதம் என்ற வித்தியாசமான காம்பினேஷனில் இருந்ததால் வாங்கி வைத்திருந்தேன். அநேகமாக இந்த வருடம் படித்த முதல் அபுனைவு. நூறு பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகம். ஆனால் தொட்டதும் வழுக்கிக்கொண்டு போகிற சுவாரஸ்யம். 

ஜப்பானில் ஒரு சாமியார். முழுப்பெயர் உச்சரிப்பதற்கு சிரமம் என்பதால் ஷோகோ என்று சுருக்கமாக வைத்துக்கொள்வோம். ஷோகோ ஹிந்து மதத்தையும், பெளத்த மதத்தையும் கலந்து, ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்குகிறார். அதுதான் ஓம் ஷின்ரிக்கியோ ! உண்மையான மதம் என்று பொருள். ஒரு சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்டில் துவங்கிய ஷோகோவின் சாமியார் வாழ்க்கை சில வருடங்களிலேயே அபார வளர்ச்சி பெறுகிறது. ஷோகோவின் ஆசாமியிலிருந்து சாமி கதையில் இந்திய சாமியார்களிடம் உள்ள சில பண்புகள் ஒத்துப்போகின்றன. ஷோகோ சாமியாராக ஃபார்ம் ஆனபிறகு செய்த முதல் காரியம், தன் அமைப்பின் பெயரில் சத்துபான விற்பனையில் இறங்கியது. பாபா ராம்தேவின் பதாஞ்சலி பிஸினஸ் நினைவுக்கு வருகிறதா ? அடுத்த காரியம், ஒரு பெரிய சிவலிங்கத்தை தன் ஆசிரம அறையில் அமைத்தது. இது ஈஷா ஜக்கி வாசுதேவ். ஆனால் இந்த ஷோகோ ஒரு மனநோயாளி போல தெரிகிறது. ஏதோ ஆசிரமம் அமைத்தோம் ஜாலியாக இருந்தோம் என்றில்லாமல் உலகத்தையே அழிக்க நினைத்திருக்கிறார். ஒரு பக்கம் ஆன்மிக இயக்கத்தை வளர்த்துக் கொண்டே இன்னொரு பக்கம் ரஷ்யாவிலிருந்து கள்ளத்தனமாக ஆயுதங்களையும் வாங்கிக் குவித்திருக்கிறார். ஆயுதங்கள் என்றால் கத்தி, துப்பாக்கி அல்ல. ஹெலிகாப்டரெல்லாம் வாங்கி மறைத்து வைத்திருக்கிறார். 

ஜப்பானில் Religious Corporation Status என்று ஒன்று உள்ளது. மத இயக்கம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் சட்டரீதியாக அதன் மீது கை வைப்பது அத்தனை எளிதல்ல. அது ஷோகோவுக்கு சாதகமாய் அமைந்துவிட்டது. ஆய்வுக்கூடம் அமைத்து ரசாயன ஆயுதங்கள் தயார் செய்திருக்கிறார். 1994ம் ஆண்டு ஸாரின் (Sarin) எனும் ரசாயன தாக்குதல் நிகழ்த்தியதில் ஏழு பேர் இறந்து போயிருக்கிறார்கள். அப்போது பல கோணங்களில் ஆராய்ந்த ஜப்பானிய காவல்துறைக்கு இது ஒரு திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. உற்சாகமடைந்த ஷோகோ அடுத்த வருடமே டோக்கியோ சுரங்க ரயில்பாதையில் ஒரு ரசாயன தாக்குதல் நிகழ்த்துகிறார். பதினான்கு பேர் இறந்து போயிருக்கிறார்கள். ஏராளமானவர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. சுதாரித்துக்கொண்ட ஜப்பான் காவல்துறை நூல் பிடித்துப்போய் ஷோகோவை பிடித்துவிட்டது. விசாரணையின் இறுதியில் ஷோகோவுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதிலே நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் ஷோகோவை இன்னமும் தூக்கிலிடவில்லை. ஷோகோவின் வயது 62. இன்னும் சில வருடங்களில் அவரே கூட இயற்கை எய்திவிடலாம். 

ஓம் ஷின்ரிக்கியோ புத்தகத்தைப் பற்றி சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். முழுக்க படித்துப் பாருங்கள். சில இடங்களில் சமீபத்தில் வெளிவந்த இருமுகன் படத்தை நினைவூட்டுகிறது.

பெர்முடா முக்கோணம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான விமானங்களையும், கப்பல்களையும் காவு வாங்கியிருக்கிறது. சென்னையிலேயே ஒரு பெர்முடா முக்கோணம் இருக்கிறது தெரியுமோ. சென்டிரல் ரயில் நிலையம், பாரிமுனை பேருந்து நிலையம், பீச் ஸ்டேஷன் – இவை மூன்றுக்கும் உட்பட்ட நிலப்பரப்புதான் சென்னையின் பெர்முடா முக்கோணம். இப்பகுதியைக் கடக்கும்போது மர்மமாக உங்கள் செல்போன்கள் தொலைந்து போகலாம். என்னுடைய பிரசித்தி பெற்ற நோக்கியா 3110c மாடல் போன் பீச் ஸ்டேஷனில் வைத்துதான் தொலைந்துபோனது. இவர்களுடைய டார்கெட், பேருந்தைக் கண்டதும் அவசர, அவசரமாக நெரிசலில் நுழைந்து பேருந்து ஏறுபவர்கள்தான். சில வாரங்களுக்கு முன்பு ஒருநாள், சென்டிரலில் நெரிசல் மிகுந்த ஒரு பேருந்தில் விடாப்பிடியாக ஏறிவிட்டேன். என்னுடையது பாதுகாப்பாக இருந்தது. இன்னொரு இளைஞரின் போனைக் காணவில்லை. பேருந்து நகரத்துவங்கிவிட்டது. அந்த நபர் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் சந்தேகப்பார்வை பார்க்கிறார். சக பயணிகள் ஆளாளுக்கு ஒரு இலவச அட்வைஸ் கொடுக்கிறார்கள். ஒரு ஆசாமி அதெல்லாம் அஷ்டு அப்பயே இறங்கியிருப்பான் சார். கீழே இறங்கிப் போய் தேடுங்க என்கிறார். அதற்குள் இன்னொருவர் தன்னுடைய போனிலிருந்து டயல் செய்துகொள்ளச் சொல்கிறார். டயல் செய்துக்கொண்டிருக்கும் போதே கீழே இறங்கித் தேடச் சொன்ன ஆசாமி நைஸாக படியில் இறங்குகிறார். செல்போனை தொலைத்தவர் குரல் எழுப்பி, எல்லோருமாக சேர்ந்து அந்த ஆளை பிடித்து மொத்தப்போகும் போது, போனை எடுத்து என் காலுக்கருகே போட்டுவிட்டு அங்கே இருக்கு பாருங்க என்று யோக்கியத்தனமாக எஸ்கேப் ஆகப்பார்த்தார் மிஸ்டர்.திருடர். அவர்தான் எடுத்தார் என்பது தெரிந்தாலும் செல்போன் கிடைத்துவிட்டதால் திருடரை அடிக்காமல் விட்டுவிட்டோம். வெளியூரிலிருந்து வருபவர்கள் அதிகம் புழங்கக்கூடிய பகுதி இது. வெளியூர்க்காரர்கள் சென்னை வரும் சமயங்களில் முக்கோணத்தை ஜாக்கிரதையாக கடக்க வேண்டும். எனக்குத் தெரிந்து பெர்முடா முக்கோணம், சென்னை முக்கோணம் என்றில்லை. எல்லா முக்கோணங்களையுமே ஜாக்கிரதையாகத்தான் கடக்க வேண்டும்.

வேலு பிரபாகரனின் காதல் கதை மீண்டும் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான சமயத்தில் நான் உட்லேண்ட்ஸ் திரையரங்கில் பார்த்தேன். நான் சிறு வயதிலிருந்த போது வே.பி. கடவுள் என்று ஒரு படம் எடுத்திருந்தார். கமர்ஷியல் கலந்த பிரச்சாரப்படம். அப்பொழுதெல்லாம் அம்மன் படங்கள் அடிக்கடி வெளிவரும். கடவுள் படத்தில் அதே போன்ற ஒரு பாடல் உண்டு. அதன் காரணமாக நிறைய பெண்கள் தெரியாமல் கடவுள் படத்திற்கு வந்துவிட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அடுத்து சில வருடங்கள் கழித்து புரட்சிக்காரன் எடுத்தார். சுத்தமான பிரச்சாரப்படம். அந்த சமயத்தில் திராவிடர் கழக விழாக்களில் புரட்சிக்காரன் பாடல்களை ஒலிபரப்புவார்கள். அதில் மண்ணுக்கு நாமதான் சொந்தக்காரங்க, தூங்கும் புலியை (பாரதிதாசன் பாடல்) ஆகிய பாடல்களை இப்போது கூட சில சமயங்களில் கேட்பதுண்டு. வித்யாசாகர் இசை. சில வருடங்கள் கழித்து, ஞான ராஜசேகரன் பெரியார் படத்தை இயக்கினார். அப்போது அப்படத்திற்கு இளையராஜாவை இசையமைக்கக் கேட்டு, அவர் பெரியாருக்கு இசையமைக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதே சமயத்தில் வே.பி.யின் காதல் கதை (காதல் அரங்கம்) எனும் பிட்டு படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். வே.பி.யின் காதல் கதை படத்தின் துவக்கத்தில் ஒரு நீண்ட பிரசங்கம் செய்கிறார் இயக்குநர். அதன்பிறகு இடையிடையே சில பிரச்சார / புரட்சி வசனங்கள். அவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வே.பி.யின் காதல் கதை ஒரு சுத்தமான பிட்டுப்படம். குறிப்பாக அதில் வரும் வேலைக்கார பெண்மணி போர்ஷன் எல்லாம் சரோஜா தேவி ரக பிட்டு. பிட்டுப்படம் என்பதாலேயே அதில் இடம்பெற்ற ஒரு அபாரமான பாடல் (காட்டுக்குள்ளே தொடங்கியதே காதல் வேள்வி) வெளிச்சத்திற்கு வராமல் போய்விட்டது. இப்போதும் நான் அடிக்கடி முனுமுனுக்கும் அந்தப்பாடல் உங்களுக்காக –

வே.பி.யின் காதல் கதையில் இன்னொரு பாடலை இளையராஜாவே பாடவும் செய்திருக்கிறார். ரசத்த ஊத்து பங்காளி அதுல பூனை கெடக்குதான்னு பாப்போம் என்பதுபோல அடுத்து வெளிவரவிருக்கும் வே.பி.யின் காதல் டைரியையும் பார்க்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 May 2017

மசினகுடி - முப்பத்தியாறு வளைவுகளிலே

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: மோயாறு பள்ளத்தாக்கு

மசினகுடியில் பிரத்யேக அனுபவமாக சிகூர் அருவி / மோயாறு பள்ளத்தாக்கை பார்த்துவிட்டோம். அதைத் தாண்டி வேறெதுவும் இடங்கள் இருப்பதாக தெரியவில்லை. பைக்காரா சென்றால் அங்கே ஒரு அணை, ‘அனுமதி இல்லைபலகை, சிடுசிடு அதிகாரி எல்லாம்தானே இருக்கப்போகிறது. மசினகுடியிலிருந்து முப்பத்தியாறு கொண்டையூசி வளைவுகளில் ஊட்டி அமைந்திருக்கிறது. ஊட்டியின் எல்லையை மட்டும் தொட்டுவிட்டு வந்துவிடலாம் என்பது திட்டம்.

நீளும் வனச்சாலை
மைசூரு – ஊட்டி சாலையில் பன்னிரண்டு கி.மீ. ஆள் நடமாட்டம் அதிகமில்லாத காட்டுவழிச் சாலை. கிட்டத்தட்ட பந்திப்பூர் வனச்சாலையில் பார்த்த அதே காட்சிகள். மான்கள், மயில்கள், குரங்குகள். பந்திப்பூர் என்பது கர்நாடக கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி. இது தமிழ்நாடு ! பந்திப்பூரிலிருக்கும் எந்த கட்டுப்பாடுகளும் இங்கே இல்லை. சஃபாரி ஜீப்புகள் இல்லை, மேலைநாட்டு பயணிகள் இல்லை. கொஞ்ச தூரம் செல்ல செல்ல உதகையின் பிரம்மாண்ட மலைகள் தெரிய ஆரம்பித்தன. 

பைசன் பாயிண்டிலிருந்து
வனச்சாலையின் முடிவில் பைசன் பாயிண்ட் எனும் நோக்குமுனை வருகிறது. கொண்டையூசி வளைவுகளுக்கு முன்னதாக ஒரு சிறிய ஓய்வு எடுத்துக்கொள்வதற்கு உகந்த இடம். இங்கிருந்து பார்த்தால் மலை மீது ஊர்ந்து செல்லும் காட்டெருமைகளை பார்க்கலாம் என்கிறார்கள். 

கொண்டையூசி வளைவுகள் துவங்குகின்றன. மொத்தம் முப்பத்தியாறு. ஒரு ஒப்பீட்டுக்காக சொல்கிறேன். கொல்லியின் உயரம் சுமார் ஆயிரத்து இருநூறு மீ., எழுபது கொ.ஊ வளைவுகள். ஊட்டியின் உயரம் இரண்டாயிரம் மீட்டருக்கு மேல், ஆனால் முப்பத்தியாறே வளைவுகள். அப்படியென்றால் வளைவுகள் எவ்வளவு உக்கிரமாக இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். மலையேறத் துவங்குகிறோம். அதே சமயம், மழைச்சாரல் துவங்குகிறது. மழை துவங்கியதா அல்லது மழையின் எல்லைக்குள் நாங்கள் நுழைந்துவிட்டோமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அடிவாரம் வரை மழையில்லை. மேலே ஏற, ஏற ஒரே பனிமூட்டமாக இருக்கிறது. மேகங்களுக்கு உள்ளே புகுந்து வெளியே வருகிறோம். டைட்டானிக் முக்கிலிருந்து கடலை ரசிப்பதுபோல பரவசமடைகிறோம். உடலெல்லாம் சிலிர்க்கிறது. பரவசம் மட்டுமல்ல. ஊட்டி குளிர் அப்படி. போதாததற்கு மழை வேறு. 

மலையழகு !
ஒவ்வொரு வளைவிலும் ஒரு பெரிய கண்ணாடி வைத்திருக்கிறார்கள், சாலையின் மறுபுறம் வரும் வாகனங்களை தெரிந்துகொள்வதற்காக. ஆங்காங்கே சில டீக்கடைகள். ஒரு குறுக்குவழி முகப்பில் ஏதோ ஒரு அருவிக்கு செல்லும் வழி. ஊட்டியில் எந்த இடங்களையும் சுற்றிப்பார்க்க வேண்டாம் என்று முன்பே முடிவு செய்திருந்ததால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொள்வது போல கடந்தோம். முப்பத்தியாறையும் கடந்தோம்.

ஊட்டியின் எல்லை
ஊட்டியின் மைய இணைப்புச் சாலைக்கு வந்திருந்தோம். பற்ற வைத்தோம். குளிர் தாங்க முடியாமல் அதுவே தான் எங்களை பற்ற வைத்தது. பனி படர்ந்த அந்த மலையை அண்ணாந்து பார்த்தோம். இன்னும் இருக்கிறது உயரம். கொஞ்ச நேரம் பயணித்தால் உச்சகட்டத்தை எட்டிவிடலாம். இப்போது அவசரம். பொழுது சாய்வதற்குள் மசினகுடிக்கு திரும்பியாக வேண்டும். அது மட்டுமல்ல, ஊட்டி என்பது பெரிய சம்பவம். சமயம் பார்த்து செய்யவேண்டும்.

இறங்கத் துவங்கினோம். மலைகளைப் பொறுத்தவரையில் ஏறும்போது இருக்கும் அதே பரவசம் இறங்கும்போதும் இருக்கிறது. ஏற்கனவே பார்த்து வைத்திருந்த இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். ஒரு தேநீர்க்கடை, அதையொட்டி சோளக்கடை. வாகனங்களை நிறுத்திவிட்டு இளைப்பாறினோம். தூரத்தில் எங்கேயோ ஒரு படுகர் இல்லத் திருமண இசை கேட்டது. 

மீண்டும் மசினகுடி ! தொடரில் மசினகுடி ஊர்பகுதியைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதில் விடுபட்ட ஒரு பகுதி ட்ரீம் லேண்ட் உணவகம். பேக்கரி, சூப்பர் மார்க்கெட், உணவகம் மூன்றையும் உள்ளடக்கியிருக்கிறது. விசாலமான டைனிங் ஹால். நாங்கள் போன வேளையில் அதிக கூட்டமில்லை. சூழலும் விருந்தோம்பலும் தரமாக இருந்தது. ஊட்டியிலிருந்து திரும்பியதும் இங்கேதான் மதிய உணவை சாபிட்டோம். மதிய உணவை சாப்பிடும் சமயம் மாலை ஆகியிருந்தது. 

ஊர் திரும்பும் பாதை
மறுநாள் காலையும் அதே உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு திரும்புதலுக்கு தயாரானோம். மீண்டும் பந்திப்பூர் வனச்சாலை. திரும்பிவரும் போது முதுகுப்புறத்தை காட்டியபடி ஒரு யானை காட்டுக்குள் சென்றுக்கொண்டிருந்தது. மக்கள் குழுவாக அதனை பார்த்துக்கொண்டிருந்தனர். வனச்சாலையை கடந்தபிறகு நினைவுப்பொருட்கள் வாங்கிக்கொள்ள சில கடைகள் இருக்கின்றன. போகும்போது கடந்த அதே கர்நாடக நெடுஞ்சாலைகள் திரும்பும்போது ரணமாக இருந்தன. வெயில் வேறு. அந்தி சாயும் சமயத்தில் ஆம்பூர் ஸ்டாரில் பிரியாணியை த்வம்சம் செய்தபிறகு தான் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. அந்தி சாய்ந்தது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

22 May 2017

பிரபா ஒயின்ஷாப் – 22052017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சங்கலி புங்கிலி கதவ தொற ! ஹாரர் – காமெடி என்பது பொங்கல் – வடகறி போல மட்டமான சேர்க்கை. என்னைப்பொறுத்தவரையில். யாமிருக்க பயமே போன்ற சில விதிவிலக்குகள் இருக்கலாம். மேலும் படத்தின் பெயரே அத்தனை ஈர்ப்பாக இல்லை. அடிக்கடி ப்ரொமோக்கள் என் கண்களில் பட்டுத் தொலைக்க, டிரைலர் பார்த்தால் யாமிருக்க பயமே சாயலிலேயே இருந்தது. ஏதோவொன்று உறுத்திக்கொண்டே தான் இருந்தது. தேவி தியேட்டருக்கு போய் சில வாரங்கள் ஆகிவிட்டன, பத்து ரூ. டிக்கெட் இருப்பு பச்சையில் இருந்து, டிக்கெட்நியூவில் ஆஃபர் வேறு இருந்ததால் ஒரு கனப்பொழுது தடுமாற்றத்தில் டிக்கெட் புக்காகிவிட்டது. வழக்கமாக மாலை ஏழு மணி வாக்கில் ஆபீஸில் ஏழரைகள் துவங்கும். (மேனேஜர்கள் வேறு, உன் ப்ளாக்கை லைட்டா படிச்சேன் என்று சொல்லி புளியை கரைக்கிறார்கள். பாட்டாளி வடிவேலுவின் ‘முழுசா படிச்சா செத்துருவ’ நகைச்சுவையை நினைவுகூரவும்). அந்த மாதிரி எந்த தடையும் ஏற்படாததால் ச.பு.க.தொ படத்தை பார்க்கும்படி ஆகிவிட்டது. 

படத்தின் இயக்குநர் ஜக், எம்.ஆர்.ராதாவின் பேரன் என்பது முதல் வியப்பு. இரண்டாவதுதான் கடைசி வரை ஏற்படவே இல்லை. பேய்ப் படங்களுக்கே உரிய வார்ப்புரு. ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில், ஒரு தனி பங்களா, அங்கே தங்கியிருக்கும் பெரிய குடும்பம், விசுக்கென கேமராவில் கடந்துபோகும் உருவம், சிரிப்பு வராத காமெடி, அப்புறம் பாழாய்ப்போன செண்டிமென்ட். சொல்வதற்கு ஏதுமில்லை. படம் பார்த்தபிறகு எதேச்சையாக பழைய குங்குமம் இதழில் இயக்குநரின் பேட்டி படித்தேன். இவர் படம் எடுக்கத் துவங்கியபோது காஞ்சனா மட்டும்தான் வந்திருந்ததாக கூறியிருக்கிறார். துயரம்தான். சூரியின் கெட்டப்புக்காக வெளிநாட்டிலிருந்து விக் வரவைத்ததாக கூறியிருக்கிறார். உப்புக்கு பெறாத விஷயங்களுக்கு எல்லாம் இவர்கள் மெனக்கெடுவதை பாருங்கள். இதில் காட்டும் கவனத்தை கதை, திரைக்கதையில் காட்டினாலே நமக்கு ஆறுதலாக இருக்கும். சூரியின் ஜோடி மதுமிளா என்பது இன்னொரு பொங்கல் – வடகறி சேர்க்கை. ஆனால் மதுமிளா வடகறியல்ல கோழிக்கறி ! 

தமிழ் சினிமா படங்களில் சில நடிகர்கள் இருந்தால் அந்தப் படத்தை பார்க்கக்கூடாது என்று விளையாட்டாக நினைப்பேன். இனிமேல் நடிகர்களை பட்டியலிட்டு அதனை தீவிர நடைமுறையாக கடைபிடிக்க வேண்டுமென நினைக்கிறேன். அந்த வகையில் என்னுடைய முதல் பட்டியல் :- பரோட்டா சூரி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி. இவர்களில் ஸ்ரீமன், சிங்கம் புலியை தவிர மற்ற அனைவரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். சங்கிலி புங்கிலி பார்த்ததற்காக நான் செலவு செய்த தொகை வெறும் பதினான்கு ரூபாய். அந்த வகையில் எனக்கு எதுவும் நஷ்டமில்லை. ஆனால் நேரம்தான் நெருடுகிறது. ஏலியன் கொவநென்ட், லென்ஸ் எல்லாம் பார்க்கக் கிடைக்காத நேரம் என் நேரம்.

பிரணிதா சுபாஷ், ஜனனி ஐயருக்குக் கூட சில ரசிகர்கள் இருப்பதை கவனித்திருக்கிறேன். ஸ்ரீதிவ்யாவுக்கு யாராவது இருக்கிறீர்களா ? ஓகே, பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கிறார். நாயகிகளை வர்ணிப்பது என்பது ஒரு உணர்வு. அது மனதின் அடியாழத்திலிருந்து ஊற்றெடுத்து வரவேண்டும். அது ஏனோ ஸ்ரீதிவ்யாவிடம் வரவில்லை. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் முன்னொரு காலத்தில், ஒரு விமர்சகர் இருந்தார். படங்களின் எல்லா துறையையும் அலசி எடுத்துவிடுவார். ஆனால் கதாநாயகியைப் பற்றி மூச்சு விடமாட்டார். கிட்டத்தட்ட அவர் ஒரு குட்டி விவேகானந்தர் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரிடம் இதை சுட்டிக் காட்டினேன். அவருடைய அடுத்த விமர்சனத்திலிருந்து கதாநாயகியை ஐஸ்க்ரீம், ஃபலூடா என்று விகடத்தனமாக ஒரு கமெண்ட் கொடுப்பார். குறிப்பாக அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் ஏதேனும் டெஸ்ஸர்டாகவே இருக்கும். எனக்கு ஏன்டா சொன்னோம் என்று ஆகிவிட்டது. இப்பொழுது ஒரு விமர்சகர் இருக்கிறார். உணர்வு ஊற்றெல்லாம் இல்லை, சொட்டு கூட சுரந்திருக்காது. ஆனால் சும்மானாச்சுக்கும் (அநேகமாக தானும் யூத்துதான் என்று நிரூபிப்பதற்கு அல்லது பொதுஜன நீரோட்டத்தில் கலந்துகொள்வதற்காக) சமந்தா சம்மந்தமில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறார். வரலைன்னா விட்ருங்களேன் ஆஃபிஸர்ஸ் !

விமல் நடித்த மாப்ள சிங்கம் என்ற பழைய படத்தினை பார்த்தேன். அதிலேயும் மதுமிளா வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு பார்த்த ரோமியோ ஜூலியட்டிலும் மதுமிளா. ச.பு.க.தொ.விலும் மதுமிளா. எங்களுக்குள் ஏதோவொரு மானசீக பந்தம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. நான் பார்க்கும் காலாவதியான படங்கள் எல்லாமே சுமார்தான் என்பதால் அதுகுறித்து சொல்வதற்கு எதுவுமில்லை. இப்படத்தில் ஒரு அரசியல் கூட்டக் காட்சி. ஓட்டு கேட்கும்போது எங்களுக்கு வாக்களித்தால் வறண்டு கிடக்கும் ஊரை செழிப்பாக மாற்றுவோமென உறுதியளிக்கிறார் சூரி (வேட்பாளரின் நண்பர்). உடனே கூட்டத்திலிருந்து ஒரு முதியவர் எழுந்து அப்படியிருந்த ஊரத்தான்டா இப்படி நாசம் பண்ணிட்டிங்க என்கிறார். உடனே மேடையிலிருப்பவர்கள் பதற்றமாகி அவனை வெளியனுப்புங்க என்கிறார்கள். இந்தக்காட்சியைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஞாபகம் வந்தது. அது 2006 தேர்தல் சமயம் என்று நினைக்கிறேன். அல்லது அதற்கும் முன்பு கூட இருக்கலாம். ஆனால் இப்போதுள்ள அளவுக்கு மீடியாக்களின் கவனம் அப்பொழுது கிடையாது. கலைஞர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஒருவர் கூட்டத்திலிருந்து எழுந்து கலைஞரின் சொத்துக்கணக்கை கேட்டுவிட்டார். உடனே கலைஞர் கரகரப்பான குரலில் வெளியேத்துங்க, வெளியேத்துங்க என்றார். அநேகமாக எதிர்க்கட்சி ஆட்களுக்குக் கூட இப்படியொரு சம்பவம் நடந்தது நினைவிலிருக்காது. ஆனால் படத்தில் இக்காட்சியை அமைத்தவர் அந்த சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு தான் அமைத்திருப்பார் என்பது என் கணிப்பு. படத்திற்கு வசனம் எழுதியவர் டான் அசோக் (தி.மு.க.காரர்) என்பது குறிப்பிடத்தக்கது. முன்பொருமுறை கலைஞரின் ஃபேஸ்புக் கணக்கை நடாத்தும் இரண்டு இளைஞர்கள் வார இதழொன்றிற்கு அப்ரூவர் பேட்டி கொடுத்தது நினைவுக்கு வந்தது. தி.மு.க.வை வெளியாட்களால் அழிக்க அல்ல, அசைக்கக்கூட முடியாது. அதற்கான ஆட்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 May 2017

பிரபா ஒயின்ஷாப் – 15052017

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

மாநகரம் படம் வெளிவந்தபோது அதனை பார்த்துவிட்டு நீளமானதொரு கட்டுரை எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். சோம்பல் காரணமாக அந்த எண்ணத்தை கைவிடும்படி ஆனது. மேலும் நான் எழுத நினைத்த கட்டுரைக்கு மனதிற்குள் ஒரு டீஸர் ஓட்டிப்பார்த்தபோது, ஒரு சினிமாவிற்காக எதற்காக இவ்வளவு உக்கிரமாக பொங்கல் வைக்க வேண்டும் என்று சலிப்பாக இருந்ததால் போய்த் தொலையட்டும் என்று விட்டுவிட்டேன். தற்சமயம் இரண்டாவது முறையாக மாநகரம் பார்த்தேன். ஏன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தமிழ் ராக்கர்ஸில் மாநகரம் வெளியாகியிருக்கிறது. நீளமான கட்டுரையெல்லாம் எழுதப் போவதில்லை என்றாலும் இரண்டு விஷயங்களை மட்டும் சொல்லிவிட வேண்டுமென உறுத்திக்கொண்டே இருக்கிறது. 

முதல் விஷயம், மாநகரம் படத்தில் நான் புரிந்துக்கொண்ட மையப்பொருள் என்னவென்றால் சென்னை நகரத்தின் மீது வந்தேறிகளுக்கு ஒரு கெட்ட அபிப்ராயம் இருக்கிறது. அது ஓரளவிற்கு உண்மையும் கூட. ஆனால் அதற்காக ஒட்டுமொத்த சென்னையையும் பழிக்கக்கூடாதென்றும், தனிப்பட்ட முறையில் சென்னைவாசிகள் தங்கள் கண்ணெதிரே நடைபெறும் அநியாயங்களை தட்டிக்கேட்கத் துவங்கினால் இந்நகர் மீதான களங்கத்தை துடைத்தெறியலாம் என்பதுதான் அது. அதன்படி கதையில் சில கெட்டவர்களும், சில நல்லவர்களும் வருகிறார்கள். இதிலே எல்லாம் சரியாகப் போகும் வேளையில், சென்னையை நாசமாக்கிக்கொண்டிருக்கும் P.K.பாண்டியன் என்கிற பொறுக்கியை ஏதோ தியாகி போல காட்டுவது நெருடலாக இருக்கிறது.

இரண்டாவது விஷயம், படத்தின் ஒரு காட்சியில் ஸ்ரீ ஓத்தான்னா என்னன்னு தெரியுமா சார்ன்னு கேட்டு அந்த வார்த்தையில் உள்ள ஆபாசத்தை சொல்லி பொருமுகிறார். உண்மையில் சென்னையில் அந்த வார்த்தையை உபயோகிக்கும் முக்கால்வாசி பேர் அதன் அர்த்தத்தை உணர்ந்து, நேரடியாக அந்த வார்த்தையில் உள்ள ஆபாசத்தை யார் மீதும் வீசுவதில்லை. ஓத்தா என்பது ஒரு உணர்வு. ஓத்தா என்ற வார்த்தையின் அர்த்தம் ஓத்தா கிடையாது. அது பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கக்கூடிய ஒரு வார்த்தை. ஆங்கிலத்தில் உள்ள Fuck என்கிற வார்த்தையைப் பற்றி ஓஷோ என்ன சொல்லியிருக்கிறார் என்று படித்துப் பாருங்கள். கிட்டத்தட்ட ஆங்கில ஃபக்குக்கு இணையான வார்த்தைதான் ஓத்தா. Life fucks everyone என்கிற வாசகத்துக்கு வாழ்க்கை எல்லோருடனும் செக்ஸ் வைத்துக்கொள்கிறது என்று அர்த்தமில்லை. கூடவே, ஏதோ இந்தமாதிரி தாயைப் பழிக்கும் அர்த்தம் வரக்கூடிய வார்த்தைகள் சென்னையில் மட்டும்தான் புழங்குகிறது என்ற தொனியில் பேசுவது அயோக்கியத்தனம். எனக்குத் தெரிந்த சில தென் மாவட்டத்து ஆசாமிகள் துவங்கும்போதே கிறுக்குக்கூதி மவனே என்றுதான் துவங்குவார்கள். புண்டா மவனே, ஒக்காள ஓழி, கண்டார ஓழி போன்ற வார்த்தைகளை எல்லாம் சென்னைவாசிகள் பயன்படுத்துவதில்லை.

நம்முடைய சமூகத்தில் சில விஷயங்களை விமர்சிக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாது, கேட்டால் உடனே கிட்னா தான். எனக்கு NGOக்கள் மீதும் அவர்களுடைய சில செயல்பாடுகள் மீதும் எப்போதும் ஒரு சந்தேகக்கண் இருக்கிறது. என்னுடைய சந்தேகத்தில் எந்த விதண்டாவாதமோ, நக்கலோ, நெகடிவ் ஆட்டிடியூடோ கிடையாது. நிஜமாகவே தெரியாமல்தான் கேட்கிறேன். NGO ஆட்கள் திடீரென மெரினாவிலோ, பெசன்ட் நகர் பீச்சிலோ இறங்கி நாள் முழுக்க உழைத்து குப்பைகளை அகற்றுகிறார்கள். மறுநாள் விடிந்ததும் வழக்கம்போல ஜனத்திரள் வந்து அவ்விடத்தை குப்பையாக்குகிறது. இதனால் என்ன பயன். மாறாக நிறைய பேரின் ஒருநாள் உழைப்பும் விரயமாகிறது இல்லையா ? இன்னொரு விஷயம், புற்றுநோயாளிகளுக்காக அழகான யுவதிகள் தங்கள் தலைமுடியை யாசகம் தருவது. எவ்வளவு யோசித்தாலும் என் மூளைக்கு எட்டாத விஷயம் இது. தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்துவிட்டது ? ‘விக்’ என்று சொல்லப்படும் அந்த தலைமுடியை செயற்கையாக உற்பத்தி செய்துகொள்ள முடியாதா ? அப்படியெல்லாம் செய்ய முடியாது என்றால் திருப்பதியில், பழனியில், வேளாங்கன்னியில் காணிக்கை செலுத்தும் தலைமுடியெல்லாம் எங்கே தான் போகிறது. அவற்றைக் கொண்டு இந்த சேவையை செய்ய முடியாதா ? எதற்காக யுவதிகள் தங்களை வருத்திக்கொள்ள வேண்டும். யுவதிகள் காணிக்கை செலுத்தும் இந்த தலைமுடி, நிஜமாகவே ஒரு புற்றுநோயாளிக்கு இலவசமாக சென்று சேர்கிறதா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் யாரேனும் விளக்கிச் சொன்னால் புரிந்துக்கொள்வேன். அதுவரையில் NGO என்பதை மூன்று ஆங்கில எழுத்துகளாக பிரித்துப் படிக்காமல் ஒரே வார்த்தையாக படித்துக்கொள்கிறேன்.

நீருக்கடியில் சில குரல்கள் படித்தேன். பிரபு காளிதாஸின் முதல் நாவல் (இரண்டாவது புத்தகம்). இன்னதென்று வகைப்படுத்த முடியாத அவருடைய முதல் புத்தகத்தை படித்துவிட்டு நானெல்லாம் கமுக்கமாக இருந்துக்கொண்டேன். ஏனென்றால் சாரு பள்ளி மாணவர்கள் எல்லாம் ஒருமாதிரி உக்கிரமானவர்கள், அவர்களைச் சுற்றி ஒரு பதினோரு பேர் கொண்ட துதி பாடும் குழு எப்போதுமிருக்கும். நாம் தப்பித் தவறி ஏதாவது மாற்றுக்கருத்து சொல்லிவிட்டால் ங்கோத்தா, ங்கொம்மா தான். பயம் என்று நினைத்துவிடாதீர்கள். இவர்களிடம் உள்ள இன்னொரு கெட்டப்பழக்கம் பிடிக்கலன்னா போ என்று அன்ஃப்ரென்ட் / ப்ளாக் செய்வது. என்னைப் பொறுத்தவரையில் அன்ஃப்ரென்ட் / ப்ளாக் கொயந்தத்தனமான செயல். இவர்கள் அன்ஃப்ரென்ட் செய்துவிட்டால் நமக்கு ஒரு பொழுதுபோக்கு பறிபோகும் இல்லையா. அதனாலேயே பல்லைக் கடித்தபடி பொறுத்துக்கொள்வேன். உண்மையில் சாருவின் பள்ளி மாணவர்கள் எழுதும் கமிங் ஆஃப் ஏஜ் வகையறா படைப்புகளை வாசிப்பது என்பது உவப்பான விஷயம்தான். ஆனால் அதில் சாரு எழுதும் முன்னுரையும், பின்னட்டை வாசகங்களும் தான் நமக்கு சங்கடங்களை ஏற்படுத்தித் தொலையும். சாரு முன்னுரையில் சடாரென வாய்க்குள் நுழையாத ஒரு லத்தீன் அமெரிக்க எழுத்தாளரின் பெயரை எடுத்துவிட்டு அவருக்கு அப்புறம் இவர்தான் என்பார். பின்னட்டை வாசகங்களோ கட்டமைக்கிற சட்டகங்கள், மீறல்கள், பிறழ்வுகள், ரகசிய நீரோட்டங்கள், சமூகத்தின் ஒப்புக்கொள்ளப்பட்ட நியாயங்களுக்குப் புறம்பானவை, இருளடர்ந்த மனவெளி என்றெல்லாம் பயம் காட்டுகின்றன. உள்ளே இருப்பதென்னவோ லோக்கல் டாஸ்மாக் சரக்குதான். 

இது உண்மையில் இரண்டு குறுநாவல்கள். அல்லது இரண்டு சிறுகதைகளின் விஸ்தரிக்கப்பட்ட வடிவம். சுந்தர் என்கிற சிறுவனையும், கதிரவன் என்கிற இளைஞனையும் பற்றி தனித்தனியாக எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் நாவலின் ஒற்றைப்படை அத்தியாயங்களையும், இரட்டைப்படை அத்தியாயங்களையும் தனித்தனியாக வாசித்துப் பார்க்கலாம். அப்புறம், நாவலில் வரும் பெண்கள் எல்லாம் யாருடனாவது ஓடிப்போகிறார்கள், யாருடனாவது கள்ள உறவு வைத்துக்கொள்கிறார்கள். முலை, யோனி, குறி என்றெல்லாம் எழுதி கவிதை சமைப்பது போல, பலான காட்சிகள் நிறைய இணைத்தால் நாவலுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்துவிடும் என்று யாரோ எழுத்தாளரை நம்ப வைத்திருக்கிறார்கள். நாவலுக்கிடையே ‘குறைந்த ஒளியில்’ என்கிற வார்த்தை மூன்றுமுறை வருகிறது. ஏதேச்சையாகக் கூட இருக்கலாம். முதல் புத்தகத்துடன் ஒப்பிட்டால் அபார முன்னேற்றம். நாவல் என்ற வடிவத்தின் பெயரைக் கெடுக்காமல் 120 பக்கங்களை நிரப்பியிருப்பதே வெற்றியின் முதல் படி ! ஜால்ரா ஆசாமிகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, விமர்சனங்களுக்கு செவி சாய்த்தால் எழுத்தாளர் உயரங்களைத் தொடுவார்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 May 2017

பிரபா ஒயின்ஷாப் – 08052017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த குறிப்பிட்ட ஒயின்ஷாப்பானது விளாத்திகுளத்திலிருந்து வெளியாகிறது !

லக்கி பாட் போல என்னுடைய ஹார்ட் டிஸ்கில் மெளஸை விட்டுத் துழாவியதில் ‘வாலு’ படம் சிக்கியது. ஹன்சிகாவை பார்க்கும்வரை வாலு என்பது சிம்புவும், நயன்தாராவும் பேசிக்கொண்டே இருக்கும் படம் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். இது வேற ஆளு என்று அப்புறம்தான் தெரிந்தது. வாலுவில் எனக்கு பிடித்திருந்த ஒரு விஷயம், கதாபாத்திரங்களின் தன்மையை நம் மனதில் நிலை நிறுத்தும் யுக்தி. குறிப்பாக வில்லனுடையது. நடிகருடைய பெயர் ஆதித்யா. கன்னட நடிகர் போலிருக்கிறது. ஒரு மாதிரி கோனையாக ‘ரஜினி’ தமிழ் பேசுகிறார். படத்தில் ஆதித்யா ஒரு தொழிலதிபர். ரெளடி / தாதா என்று சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் செய்யும் எந்த கெட்ட காரியத்தையும் ஆதித்யா செய்யவில்லை. மேலும் தமிழ் சினிமாக்களில் ரெளடி கம் தொழிலதிபர் என்றாலே ஏராளமான பணத்தை வைத்துக்கொண்டு அதனை செல்லுமிடமெல்லாம் வாரி இறைப்பவர். ஆதித்யா அப்படியில்லை. அவருடைய மண்டியிலிருந்து வாழைப்பழங்களை வண்டியேற்றும் போது ஊழியர் ஒருவர் ஒரு பழத்தை கீழே தவறவிடுகிறார். ஆதித்யா அவரை அழைத்து ஒரு பழம் நான்கு ரூபாய் என்றும், கவனமாக எடுத்துச்செல்லுமாறும் எச்சரிக்கிறார். இன்னொரு காட்சியில், வட்டியில் பணம் கடன் கொடுக்கும் ஆதித்யாவை சந்திக்க கடனாளியின் மனைவியான மந்த்ரா வருகிறார். எதுவாக இருந்தாலும் தன்னிடம் கேட்குமாறும், எப்போது கூப்பிட்டாலும் வருவதாகவும் குழைகிறார். ஆதித்யா ஸ்லிப் ஆகாமல் அவருடைய காரை பறிமுதல் செய்துகொண்டு அவரை ஆட்டோவில் வழியனுப்பி வைக்கிறார். (ஒருவேளை தேடினேன் வந்தது காலத்து மந்த்ரா வந்திருந்தால் ஓகே சொல்லியிருப்பாரோ ?). இதுபோல ஆதித்யா ஒவ்வொரு ரூபாயின் மீதும் கவனமாக இருப்பதாக மீண்டும் மீண்டும் காட்டப்படுகிறது. பிரச்சனை என்னவென்றால் வில்லன் ஏதோ பெரிதாக செய்யப்போகிறார் என்று படபடப்பாக காத்திருந்தாலும், கடைசி வரை தன்னுடைய தன்மையை வெளிக்காட்டுவதைத் தவிர எதுவும் செய்யவில்லை. அதேபோல சிம்புவின் கதாபாத்திரமும் வீரனெல்லாம் இல்லை, ஆனால் கோபம் வந்துவிட்டால் எத்தனை பேரை வேண்டுமானால் த்வம்சம் செய்துவிடுவார் என்று காட்டப்படுகிறது. 

சிம்புவுடைய ஆழ்மனதிற்குள் சென்று யாரோ அவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று நம்ப வைத்திருக்கிறார்கள். குறிப்பாக எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் இந்த வரிசையில் அடுத்து அவர்தான் என்பதை மீண்டும் மீண்டும் அவருடைய படங்களில் வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறார். தற்போதைய தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்கள் என்றால் ரஜினி, கமல், அஜித், விஜய் மட்டும்தான். சிவகார்த்திகேயன் கூட இன்னும் நான்கைந்து வருடங்களாகும். ஆனால் சிம்பு தற்போதே தானொரு மாஸ் நடிகர் என்கிற மிகுபுனைவுலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். சிம்பு தன்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் சினிமா ரசிகர்களைப் பற்றிய அவருடைய எண்ணம் கவலைக்குரியதாக இருக்கிறது.

விநாயக முருகனின் ‘நீர்’ நாவலை படித்தேன். எழுத்தாளரின் நான்காவது நாவல். இவற்றில் வலம் தவிர மற்ற மூன்றையும் படித்தாயிற்று. நீர் என்பது சென்னை செம்பரம்பாக்க புகழ் வெள்ளத்தைப் பற்றியது. 

நீரை வாசிக்கும்போது எனக்கு இருவேறு உணர்வுகள் தோன்றின. ஒன்று, இந்நாவல் சென்னை பெருவெள்ளத்தைப் பற்றிய ஒரு ஆவணம் போல இருக்கிறது. புத்தகத்தில் உள்ள சில விஷயங்கள் சென்னை அல்லாதோருக்கு கொஞ்சம் அதிகப்படியாகக் கூட தோன்றியிருக்கலாம். இப்படியெல்லாம் நடந்திருக்காது என்று நினைத்திருப்பார்கள். ஆனால் வெள்ளச் சமயத்தில் நானே கூட நிறைய துயரச் செய்திகளை கேள்விப்பட்டிருக்கிறேன். நீர் நாவலின் குறைபாடு என்று எனக்குத் தோன்றுவதும் ஆவணம் போல இருக்கும் அதன் நடைதான். தட்டையான நாவல். கிட்டத்தட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஐ.டி. நிறுவன ஊழியரின் மூன்றுவார டைரிக்குறிப்பு போலவே இருக்கிறது. எப்படியெல்லாம் அடித்து ஆடவேண்டிய களம் வி.மு.விற்கு கிடைத்திருக்கிறது. எதையும் புனையக்கூட அவசியமில்லை. நடந்த விஷயங்களை அதன் பின்புலத்தோடு சுவாரஸ்யமாக எழுதியிருந்தாலே செமத்தியாக இருந்திருக்கும். வி.மு.விடம்  சுவாரஸ்யம் என்றால் அது எங்கேயோ திருச்சி பக்கம், திண்டுக்கல் பக்கம் இருக்கு என சொல்லிவிடுவார் போலிருக்கிறது. நாவல் என்றால் கொஞ்சம் செக்ஸ் கலக்க வேண்டுமென யாரோ ஒரு பிரகஸ்பதி வி.மு.வுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் சந்திரா என்றொரு கதாபாத்திரத்தை தண்டத்திற்கு உருவாக்கி உலவ விட்டிருக்கிறார். என்னதான் கடைசியில் பெண்ணின் காமத்தையும், நீரின் தன்மையையும் ஒப்பிட்டு ஜல்லியடிக்க முயன்றாலும், நாவலில் இருந்து சந்திரா கேரக்டரை உருவியிருந்தால் அட்லீஸ்ட் இருபது பக்கங்களுக்கு உண்டான மரத்தையாவது பாதுகாத்திருக்கலாம்.

உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும் சுஜாதா விருதுகள் நிகழ்வில் ஒரு பார்வையாளனாக கலந்துக்கொண்டேன். சு.வி. நிகழ்வில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்றும் முதல் அமர்வில் யுவா, அதிஷா பேச்சு இருந்ததாலும் நேரத்திற்கு செல்ல வேண்டுமென நினைத்திருந்தேன். அலுவலகத்தில் முன்பே பர்மிஷன் கேட்டிருந்தாலும் மேனேஜரிடம் இருந்து லாவகமாக தப்பித்து கிளம்புவதற்குள் மணி ஐந்தரையாகி விட்டது. ஸ்பென்சரில் இருந்து கவிக்கோ மன்றம் குறைந்த தொலைவுதான் என்றாலும் பேருந்து ரூட் தெரியாமல், கண்டக்டரிடம் திட்டு வாங்கி இறங்கி ஏறி, ஒரு கி.மீ. நடந்து நிகழ்விடத்திற்கு சென்றபோது மணி ஆறு. அவசர அவசரமாக உள்நுழைந்து, முதல் அமர்வு முடிந்துவிட்டதா என்று பின்சீட்டு ஆசாமியைக் கேட்டால் இன்னும் தொடங்கவே இல்லை என்று வயிற்றில்  பியரை வார்த்தார். சற்று நேரம் கழித்து நிகழ்ச்சி தொடங்கியது. நான் எதிர்பார்த்தது போலவே செளம்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செளம்யாவின் தமிழை கேட்கும்போது ழ, ள, ல உச்சரிப்பு வேறுபாடுகள் அத்தனை அழகாக இருக்கிறது. ஆனால் செளம்யாவைப் பார்த்தால் அவருடைய தமிழ் உச்சரிப்பு ஒன்றும் அவ்வளவு அழகில்லை என்று தோன்றுகிறது. நல்ல கவிதைகளை படைப்பது மட்டுமல்ல, நல்ல கவிதைகளை வாசகர்களுக்கு அடையாளம் காட்டுவதிலும் கூட மனுஷ்யபுத்திரன் வல்லவராக இருக்கிறார். ஆனால் செளம்யா ஒரு ட்விஸ்ட் கொடுத்தார். சில காரணங்களுக்காக, முதல் அமர்வையும், இரண்டாம் அமர்வையும் மாற்றிப் போட்டுவிட்டார்கள். முதல் அமர்வில் மட்டும் அமர்ந்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடலாமென்ற நினைப்பில் மண். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கதாகாலட்சேபம் நடத்த ஆரம்பித்தார்கள்.  பிரபு காளிதாஸ் வேட்டைக்கு தயாராகும் ஒரு சிங்கத்தினை போல பதுங்கி, பதுங்கி புகைப்படங்களை சுட்டுத்தள்ளுகிறார். மற்ற புகைப்படக்கலைஞர்களைப் போல டேபிளின் மீது ஏறி நின்று ரெளடித்தனம் செய்வது, விழா அரங்கின் மத்தியில் நின்றுக்கொண்டு யாரையும் பார்க்க விடாமல் செய்வது, சார் கொஞ்சம் சிரிங்க, சார் ஒரு ரெண்டு பேர் இந்தப்பக்கம் வந்து நில்லுங்க என்று பாவனையாளர்களை டார்ச்சர் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடாத புகைப்படக் கலைஞரை முதல்முறையாக கண்டேன். 

மேடையில் பேசும்போது வார்த்தைகளை எவ்வளவு கவனமாக கையாள வேண்டும் என்று தமிழ்மகன் பேசியபோது தெரிந்துக்கொண்டேன். இணைய விருது பெற்றவர்களைப் பற்றி பேச வந்த இரா.முருகன் அவர்களைப் பற்றி பேசாமால் ராயர் காப்பி கிளப் காலத்து பழங்கதைகளை பேச ஆரம்பித்துவிட்டார். எழுத்தாளர் சுஜாதாவின் சித்தப்பா மகள் ஒருவர் அவர்களுடைய சிறுவயது வாழ்க்கையைப் பற்றி பேசியது நெகிழ்வாக இருந்தது. சாரு நிவேதிதா பேசும்போது சுஜாதா வாசகர்கள் பெரும்பாலும் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் படித்திருக்க மாட்டார்கள் என்றார். குற்ற உணர்வு எழுந்தது. நான் கணையாழியின் கடைசிப் பக்கங்களை துண்டு துண்டாக கொஞ்சம் வாசித்திருக்கிறேன். முழுமையாக வாசித்ததில்லை. நட்சத்திர கலை விழாக்களில் கமலையும், ரஜினியையும் கடைசியாக பேச வைப்பது போல யுவாவும், அதிஷாவும் கடைசியாக பேசினார்கள். ஆனால் நேரம் காரணமாக இருவரும் சுருக்கமாக முடித்துக்கொண்டது போலிருந்தது. திருமதி. சுஜாதா நன்றியுரை கூறி முடித்தபோது மணி ஒன்பதரை. 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 May 2017

பிரபா ஒயின்ஷாப் – 01052017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இன்று மே தினம். மே தினம் என்றதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது ? எனக்கு உழைப்பாளர் சிலை (காலண்டரில் அந்த படம்தான் போட்டிருப்பார்கள்) மற்றும் அஜித் பிறந்தநாள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு. தொழிலாளர்கள் அதிகமாக சுரண்டப்பட்ட காலகட்டம் அது. அப்பொழுதெல்லாம் வேலை நாள் என்பது அதிகாலை முதல் இரவு வரை. கிட்டத்தட்ட பதினாறிலிருந்து பதினெட்டு மணிநேரங்கள். உலகெங்கிலும் தொழிலாளர்கள் அவ்வப்போது வேலை நேர குறைப்புக்காக போராடியிருக்கின்றனர். குறிப்பாக 1858ம் ஆண்டு ஆஸ்திரேலிய கட்டிடத் தொழிலாளர்கள் ‘எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு, எட்டு மணிநேர ஓய்வு’ என்கிற கோரிக்கையை முன்வைத்து போராடி வெற்றியும் கண்டிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிலாளர் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்தன. 

ஆஸ்திரேலிய தொழிலாளர் போராட்டம்
1886ம் ஆண்டு மே ஒன்றாம் தேதியன்று சிகாகோ மாநகரில் மாபெரும் தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தொழிலாள தலைவர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. மகத்தான அப்போராட்டத்தின் அடையாளம் இன்று (கிட்டத்தட்ட) உலகம் முழுவதும் மே தினமாக அனுசரிக்கப்படுகிறது. சரி நிகழ்காலத்திற்கு வாருங்கள். மற்ற துறைகள் பற்றி தெரியவில்லை. ஐ.டி. துறையில் உள்ளவர்கள் நாளொன்றிற்கு எத்தனை மணிநேரங்கள் பணிபுரிகிறீர்கள் ? குறிப்பாக சப்போர்ட்டில் உள்ளவர்கள். வாடிக்கையாகவே காலை பத்து மணிக்கு துவங்கி இரவு பதினோரு மணிவரை பணிபுரிபவர்களை நான் பார்த்திருக்கிறேன். இது தவிர சனி, ஞாயிறுகளில் கூட அலுவலகமே கதி என்று கிடப்பவர்களும் உண்டு. இப்படி கடமை கண்ணியம் கட்டப்பாக்களாக பணிபுரிபவர்கள் ஒவ்வொரு அப்ரைஸலிலும் கணிசமான சம்பள உயர்வை பெற்று விடுகிறார்கள் என்றாலும் கூட என்னைப் பொறுத்தவரையில் நாம் வேலைக்கு போவது, சம்பாதிப்பது எல்லாமே நம்முடைய சுமூகமான சமூக வாழ்க்கைக்காகத் தானே. அதுவே பாதிக்கப்படுகிறது எனும்போது லட்சங்களில் சம்பாதித்து என்ன கிழிக்கப் போகிறீர்கள் ? யோசியுங்கள். தேவைப்பட்டால் இன்னொரு மே தின போராட்டத்திற்கு தயாராகுங்கள் !

ஐந்தாண்டு காலம் தொடர்ந்து மின்சார ரயிலில் பயணித்திருக்கிறேன். தினசரி பேருந்துப் பயணம், அவ்வப்போது பங்குதானி என பொது போக்குவரத்து முறைகள் எல்லாவற்றையும் பயன்படுத்தியிருக்கிறேன். இவற்றில் கிடைக்கும் அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். கூட்டமான பேருந்தில் ஏறியவுடன் உட்கார்ந்திருப்பவர்களிடம் உங்கள் பையை கொடுப்பது என்பது ஒரு கலை. கருணை அடிப்படையில் வயோதிகர்களிடம் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. கால்களை ‘V’ வடிவத்தில் அகட்டி வைத்திருப்பவர்களிடம் கொடுக்கக்கூடாது. செருப்பை கழட்டிவிட்டு உட்கார்ந்திருப்பவர்களிடம் கொடுக்கக்கூடாது. சில பேர் மதிய உணவுக்காக ஒரேயொரு சிறிய பையை மட்டும் சுமந்து வருவார்கள். அதனை கையிலோ மடியிலோ வைக்க மாட்டார்கள். கால்களுக்கிடையே ஒய்யாரமாக பையை உட்கார வைத்திருப்பார்கள். இவர்களிடம் கண்டிப்பாக கொடுக்கவே கூடாது. இவர்களில் சிலர் நமக்கு பெரிய சகாயம் செய்வதாக நினைத்துக் கொண்டு தாமாகவே முன்வந்து நம் பையை வாங்கி அவர்கள் காலுக்குக் கீழே வைத்துவிடுவார்கள். கவனமாக இருக்க வேண்டும். யுவதிகளிடம் யோசிக்காமல் கொடுக்கலாம். நம்மைப் போலவே பையைக் கொண்டுவரும் இளைஞர்களிடம் கொடுக்கலாம். என்ன அய்யா ஒரு பையை கொடுப்பதில் இவ்வளவு ஆராய்ச்சியா என்று உங்களுக்கு தோன்றக்கூடும். இது ஒரு சாம்பிள்தான். தொடர்ந்து பொது போக்குவரத்தில் பயணிப்பதால் நிறைய விசித்திர மனிதர்களையும் மனோபாவங்களையும் பார்க்க முடிகிறது. இனி வரும் காலங்களில் அவற்றை ஒவ்வொன்றாக எழுதுகிறேன்.

ஜூலியஸ் சீஸரின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் I came, I saw, I conquered என்பார்கள். அதுபோல எழுத்துத்துறையில் நுழைந்ததும் புகழ் பெற்று அடுத்தடுத்து நாவல்கள் எழுதி, அத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் சரவணன் சந்திரன். ஸ்கூலில் சில டீச்சர்கள் கோபப்பட்டால் நாளை வரும்போது நூறு முறை இம்போஸிஷன் எழுதி வா என்பார்கள். அப்படி யாராவது சரவணன் சந்திரனிடம் நாவல் எழுதச் சொன்னால் கூட சலிக்காமல் எழுதித் தந்துவிடுவார் போலிருக்கிறது. 

வசீகரமான எழுத்துநடை. ஒரு இருபது நிமிடங்கள் படித்துவிட்டு எழுந்தால் ஹாட் பாக்ஸில் உட்கார்ந்துவிட்டு வந்தது போலிருக்கிறது. ரசிக்க வைக்கும் எழுத்து என்பது ஒரு வகை. சரவணனுடைய எழுத்து அதையும் தாண்டி படிப்பவர்களையும் எழுதத் தூண்டுகிறது. சரவணனுடைய மூன்று நூல்களும் ஆரம்பகட்ட வாசகர்களுக்கு உகந்தவை. மூன்றும் கிட்டத்தட்ட ஒரே பாணியிலானவை. மற்ற இரு நாவல்களிடமிருந்து அஜ்வாவில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் மற்ற இரண்டும் அனுபவத் தொகுப்புகள். அஜ்வாவும் அப்படித்தான். ஆனால் இதிலே கடைசி அத்தியாயம் ஒரு சினிமா படத்தைப் போல நிறைவடைகிறது. சரவணனின் எழுத்தில் கவனித்த ஒரு விஷயம் இஷ்டத்துக்கு கிளை விட்டுக் கிளை தாவிக்கொண்டே இருக்கிறார். நாங்கள் பொறியியல் தேர்வுகளில் நாற்பத்தி நான்கு பக்கங்களை நிரப்புவதற்காக மனதில் தோன்றுவதை எல்லாம், சாராயம், கருவாடு, துண்டுபீடி என்று கடகடவென எழுதிக்கொண்டே வருவோம். அதுபோல நாவலில் ஒரு கொலை விவரணை வருகிறது. ஒரு நபரின் கழுத்தை அறுத்து கொலை செய்கிறார்கள். அங்கே துவங்கி கோழி கழுத்தை அறுப்பது நினைவுக்கு வந்து, தீபாவளி நாஸ்டால்ஜியா, ரத்தப் பொரியல், புரோட்டா என்று போய்க்கொண்டே இருக்கிறார். நாவலின் பல இடங்களில் இதுபோல தாவிக்கொண்டே இருக்கிறார். அடிக்கடி ராஜூ முருகன் சாயல் தெரிகிறது. பார்த்தசாரதி கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பாட்டியிடம் ஒளி தெரிந்தது என்கிறார். நள்ளிரவில் பண்ணாடி வந்து ‘இன்றிரவு மழை வரும்’ என்றதாக சொல்கிறார். இவையெல்லாம் ஆரம்பகட்ட அறிகுறிகள். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாவல்கள் இதே நடையில் எழுதினால் சரவணன் சந்திரன் போரடித்துக் கூட போகலாம்.

பாகுபலி பார்த்தாயிற்று. இப்படித்தான் இருக்கப்போகிறது என்று முன்பே தெரிந்திருந்ததால் முதல் பாகத்திற்கு இருந்த அளவிற்கு எதிர்பார்ப்பில்லை. இருந்தாலும் அதன் விஷுவல் பிரம்மாண்டத்தின் முன்பு சரணடைந்துவிட்டேன். நிறைய வடை சுட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மொத்தமுமே வடைதான். அதே சமயம் நம்முடைய மன்னர்களைப் பற்றிய வரலாறும், வரலாற்றுப் புனைவுகளும் முழுக்க முழுக்க வடைகளால் ஆனவைதானே. அவற்றின் திரை வடிவம் தான் பாகுபலி. 

எனக்கு படம் முழுக்க நெருடலாக இருந்த ஒரு விஷயம், வசனங்களுக்கான உதட்டசைவு. முதல் பாகமும் இப்படித்தான் இருந்ததா என்று நினைவில்லை. ஆனால் இதில் நடிகர்களின் உதட்டசைவை கவனிக்கும்போது பக்கா டப்பிங் படத்தை பை-லிங்குவல் என்கிற பெயரில் நம் தலையில் கட்டியிருக்கிறார்கள் என்று புரிகிறது. மதன் கார்கியின் வசனங்கள் அட்டகாசம். குறிப்பாக நாசருக்காக எழுதியவை. தமிழ் சினிமாவின் சிறந்த MILF யாரென்று கேட்டால் ஒரு நொடி கூட யோசிக்காமல் ரம்யா கிருஷ்ணனை கை காட்டிவிடலாம். சிவகாமியின் மிடுக்கைப் பார்க்கும்போது தமிழ் சினிமாவில் எப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமாவாக எடுத்தாலும் அதில் ஜெயலலிதாவாக நடிக்க வேண்டியவர் ரம்யா கிருஷ்ணன் தான். குரல் கூட அத்தனை பொருத்தம். மஹதீரா வெளிவந்தபோது அதன் இசையமைப்பாளரின் பெயர் மரகதமணி என்றதும் பெண் என்று நினைத்தேன். பின்னாளில் உண்மையைத் தெரிந்துக்கொண்டேன். பாகுபலி பின்னணி இசையில் அவ்வப்போது சம்ஸ்கிருத மந்திரங்கள் போலவும், செவிக்குள் எளிமையாக நுழையாத வார்த்தைகள் இருந்தால் கூட முணுமுணுக்க வைக்கின்றன. நாத்திகர்களைக் கூட சிவா சிவாய போற்றியே நமச்சிவாய போற்றியே என்று பாட வைத்த பெருமை மரகதமணிக்கு உண்டு. கருந்தேள் போன்றவர்கள் லிஸ்ட் போட்டு பாகுபலியை கழுவி ஊற்றினால் கூட, பாகுபலி தமிழ் / தெலுங்கு சினிமாவில் பல கதவுகளை திறந்துவிடப் போகிறது என்பதை மறுக்க முடியாது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment