அன்புள்ள வலைப்பூவிற்கு,
மீண்டும் புத்தகக் காட்சி ! இம்முறை மாதவனின் (ஸ்ரீரங்கம்) பிறழ்,
ஷான் கருப்பசாமியின் வெட்டாட்டம் உட்பட சில புதிய புத்தகங்கள் வெளியாகியிருந்தன. ஜீவா படைப்பகம் ஸ்டாலில் நண்பர் கார்த்திக் புகழேந்தி கண்ணும் கருத்துமாக சார்ட்
பேப்பரில் இருபத்தைந்து சதவிகித தள்ளுபடி (இன்று மட்டும்) என்று
எழுதிக்கொண்டிருந்தார். நான் ஏற்கனவே வாங்கிப் படித்து முடித்துவிட்ட சில நல்ல
புத்தகங்கள் அதில் இருந்ததை கவனித்தேன்.
ஹாலிடே நியூஸ் என்னும் தமிழ் சுற்றுலா இதழ் சார்பாக ஒரு ஸ்டால்
போட்டிருக்கிறார்கள். தமிழில் லோன்லி பிளானெட், அவுட்லுக் டிராவலர் போல ஒரு இதழ் வராதா
என்பது எனது நீண்டகால ஏக்கம். ஹாலிடே நியூஸ் அதனை பூர்த்தி செய்துவிடும்
போலிருக்கிறது. அட்டகாசமான, வழவழப்பான தாளில், தமிழ்நாடு, இந்தியா, வெளிநாடு என்று
கலந்துகட்டிய தகவல்களுடன் வருகிறது. 68 பக்கங்கள். விலை ரூ.50. உள்ளே புரட்டினால்
கரந்தை ஜெயகுமார், (கடல் பயணங்கள்) சுரேஷ்குமார், (வீடு திரும்பல்) மோகன் குமார்
என்று எல்லோரும் நம்மவர்கள். இதழ் குறித்து விசாரித்தேன். மதுரையில் இருந்து
வெளிவருகிறது. இது புதிய இதழ் கிடையாது. 2013லேயே தொடங்கப்பட்டு இடையிடையே ப்ரேக் எடுத்துக்கொண்டு, கடந்த இரண்டு வருடங்களாக சீராக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. ஒரேயொரு
இதழின் பிரதிகளை கடை முழுக்க வைத்திருந்தார்கள். பழைய இதழ்கள் ஒன்றுகூட இல்லாதது
ஏமாற்றம். சந்தா கட்டுவதற்கு வசதி (எனக்கு) இல்லாததால் அந்த ஒரு இதழை மட்டும்
வாங்கிக்கொண்டு திரும்பினேன்.
மாசக்கடைசியில் புத்தகக்காட்சி நடாத்துபவர்களுக்கு ஒரு வகையில் சாடிஸ
மனோபாவம் இருக்கக்கூடும். நீண்ட நேரம் அரங்கைச் சுற்றி வந்து, அலசி ஆராய்ந்தபிறகு
நான்கு புத்தகங்கள் மட்டும்தான் வாங்க முடிந்தது.
1. டாக்ஸி டிரைவர் (சிறுகதைகள்) – ஆனந்த் ராகவ் – கிழக்கு பதிப்பகம்
2. சிவந்த கைகள் (நாவல்) – சுஜாதா – கிழக்கு பதிப்பகம்
3. கனவுராட்டினம் (நாவல்) – மாதவன் ஸ்ரீரங்கம் – யாவரும் பப்ளிஷர்ஸ்
4. கலை உலக சக்ரவர்த்திகள் பாகம் 2 – எஸ்.எம்.உமர் – அல்லயன்ஸ்
கடைசியாக கலை உலக சக்ரவர்த்திகள் வாங்கியபோது கார்டில் பணம்
தீர்ந்துபோக, பையில் இருந்த சில்லறைகளை எல்லாம் துழாவி எடுத்துக் கொடுத்துவிட்டு,
இன்டர்வெல் ப்ளாக் ரஜினி போல பரிதாபமாக அரங்கத்தை விட்டு வெளியேறினேன்.
கலை உலக சக்ரவர்த்திகள், குறிப்பாக பாகம் இரண்டு வாங்கியதற்கு ஒரு பின்னணி உண்டு. பழம்பெரும்
சூப்பர் ஸ்டார் பி.யு.சின்னப்பாவைப் பற்றி முன்பு தினத்தந்தி வரலாற்று சுவடுகளில்
படித்திருக்கிறேன். எம்.கே.தியாகராஜ பாகவதர் காலகட்டத்தில் அவருக்கு இணையாக புகழ்
பெற்றிருந்தவர். இருவரும் அக்கால ரஜினி – கமல் மாதிரி. சின்னப்பா பற்றிய
எக்ஸ்க்ளுசிவ் புத்தகங்கள் ஏதாவது கிடைக்குமா என்று சில வருடங்களாகவே தேடிக்கொண்டிருக்கிறேன்.
ஒருமுறை பி.யு.சின்னப்பாவின் ஜகதலப்பிரதாபன் பார்த்திருக்கிறேன்.
அத்திரைப்படத்தில் ஒரே ஃப்ரேமில் ஐந்து பி.யு.சின்னப்பாவை காட்டுவார்கள் (அப்போது
அதுவே பிரம்மாண்டம்). மற்றபடி பி.யு.சி மீது எனக்கு பெரிய ஆர்வம் என்று சொல்ல
முடியாது. இப்போது எம்.ஜி.ஆர், சிவாஜியே விண்டேஜ் பட்டியலில் சேர்ந்துவிட்டார்கள்.
எம்.கே.டி பற்றி கூட ஒன்றிரண்டு புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் பி.யு.சி பற்றிய விவரங்கள்
அரிதாகவே கிடைக்கின்றன. காவ்யா பதிப்பக விலைப்பட்டியலில் பி.யு.சி பற்றிய
புத்தகமொன்றை பார்த்திருக்கிறேன். கேட்டால் அச்சில் இல்லை என்கிறார்கள்.
கிடைத்துக் கொண்டிருக்கும் சில விஷயங்களும் காணாமல் போய்விடுவதற்கு முன் அவற்றை
வாங்கி ஆவணப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு எண்ணம். அவ்வளவுதான் !
இந்நூலை எழுதிய கலைமாமணி எஸ்.எம்.உமர், எம்.கே.டி, பி.யு.சி.,
என்.எஸ்.கே., போன்றவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
புத்தகத்திலிருந்து பாகவதர் – சின்னப்பா பற்றிய ஒரு சுவாரஸ்யமான குறிப்பு –
ஒருமுறை பாகவதரும், சின்னப்பாவும் ஒரே மேடையில் பங்கேற்றார்கள். காரைக்குடி சண்முக
விலாஸ் தியேட்டரில் ‘பவளக்கொடி’ நாடகம். அப்போது சினிமா நடிகர்கள் மீதிருந்த
க்ரேஸ் பற்றி சொல்லவே வேண்டாம். கட்டுக்கடங்காத கூட்டம். அர்ஜுனனாக பாகவதர் ஒரு
பாடலைப் பாடிக்கொண்டு மேடையில் தோன்றினார். பாடல் முடியும் வரை மக்கள் கைதட்டிக்
கொண்டே இருந்தார்கள். அப்படியொரு வரவேற்பு. கிருஷ்ணர் வேடமிட்டு தயார் நிலையில்
இருந்த சின்னப்பாவிற்கு பாகவதரை மீறி ரசிகர்களை திருப்தி படுத்த முடியுமா என்று
நம்பிக்கை தளர்ந்துவிட்டது. ஒருவாறு மனதை திடப்படுத்திக் கொண்டு மேடையில் தோன்றி
பாடினார் சின்னப்பா. மக்கள் ரசித்து, கைதட்டினார்கள். ஆனால் பாகவதர் அளவுக்கு
இல்லை. சின்னப்பாவும் விடுவதாக இல்லை. அர்ஜுனனை விஷ வண்டு கடித்து மரணமடைந்ததாக வரும்
காட்சியில் மாயப்பெண் உருவில் வந்து மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்துப்
பாடி அழுது புரண்டு அமர்க்களப்படுத்திவிட்டார் சின்னப்பா. ரசிகர்களின் கரகோஷம்
அடங்க வெகுநேரம் பிடித்தது. தியாகராஜ பாகவதரும் இதை இந்த அளவிற்கு
எதிர்பார்க்கவில்லை. உள்ளே வந்தபின் கட்டித்தழுவி அபாரம் என்று பாராட்டினார்.
மாதவரம் ஸ்ரீ சுயம்பு அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு குடும்பத்துடன்
வந்திருக்கும் அந்தப்பெண், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி அம்மனிடம் பிள்ளைவரம் கேட்கிறார். கேட்டு இரண்டாவது நிமிடம் அப்பெண் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு
சரிகிறார். தொடரும். வருடங்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வாணி
ராணியின் கடந்தவார எபிஸோடு தான் இது. 1328வது எபிஸோடு. அநேகமாக என் திருமணத்திற்கு
முன்பிருந்தே இந்த தொலைக்காட்சித் தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். மாமனார் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் இத்தொடரை பார்க்கும் பாக்யம் பெறுகிறேன்.
இப்பொழுது சனி இரவும் போட ஆரம்பித்துவிட்டார்கள். நவ்யா
ஸ்வாமிக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|