21 February 2009

என் கடவுள்...!

வணக்கம் மக்களே...


[25.2.2009 தேதியிட்ட ஆனந்த விகடனில் "ப்போ... பொய் சொல்றே...!" என்றபெயரில் தாமிரா எழுதிய இந்த சிறுகதை எனக்கும் கடவுளுக்குமான உறவைபற்றி தெளிவாக சொல்வது மட்டுமில்லாமல் என் நிஜவாழ்க்கையை உரசிச்செல்வதால் இதனை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.]


"என் கடவுளை நானே உருவாக்கப் போறேன்" என்று சொன்னதும் ராகவன் சிரித்தான். அவன் சிரிப்பில் டேபிள் முழுக்க பீர் தெறித்தது.



"ஒயின் ஷாப்ல உக்காந்து கடவுளை உருவாக்கறானாம். லூஸாடா நீ...? இருக்கிற கடவுள்களுக்குள் நடக்கற எழரையையே தீர்க்க முடியல. புதுசா ஒரு கடவுளை உருவாக்கப் போறாராம் இவரு. "சரக்கப் போடுறா... சரக்கப்போடு!" என்றபடி மீண்டும் குடிக்கத் துவங்கினான்.



"எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. அதே சமயம் நான் நாத்திகனும் இல்லை. ஆனாலும், எனக்குள்ள இருக்கிற பக்தியைச் செலவழிக்க ஒரு கடவுள் வேணும்." - தீர்க்கமாக இதைச் சொன்னபடி, மிச்சமிருந்த சரக்கை ஒரே மடக்காக எடுத்துக் குடித்தேன்.



"நாட்ல எத்தனை கடவுள், அதுல எத்தனை சப் டிவிஷன்ஸ், வெஜிடேரியன், நான் வெஜிடேரியன், ஆல்கஹால், நான் ஆல்கஹால்னு."



"எந்தக் கடவுளையும் எனக்குப் பிடிக்கலை. எனக்கு கம்பர்ட்டபிளா ஒருகடவுள் வேணும்."



"எப்படிப்பட்ட கடவுள். புரியலடா...?"



"பிரெண்ட்லியா இருக்கணும்."



"அப்ப என்னைக் கடவுளா ஏத்துக்க. டெய்லி ரெண்டு பீர் பாட்டில் படையல் சாத்து. அருள் பாலிக்கிறேன்" என்றபடி சைட் டிஷ்ஷுக்காக டேபிளைத் தடவினான். இனி, இவனிடம் பேசினால் எனக்குள் இருக்கும் கடவுளைக் கருக்கலைத்துவிடுவான். நான் எழுந்துக்கொண்டேன்.



அறைக்குத் திரும்பியபோது என்னுள் கடவுளின் தேவை அதிகரித்திருந்தது. ராகவனின் கேள்வி உள்ளே முட்டித் திரிந்தது.



"எப்படிப்பட்ட கடவுள் வேணும்...?"



அந்தக் கேள்வியில் பயணமானேன். 'என் கடவுளின் பெயர் என்ன...? நிறம்என்ன...? அதன் சக்தி என்ன...? என் கடவுள் ஆணா... பெண்ணா...?' - கேள்விகள் சங்கிலித் தொடராக நீண்டன. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.



காலையில் டீப்பாய் மீது கடவுள் அமர்ந்து இருந்தாள். பச்சை நிறத்தில் சல்வார் அணிந்திருந்தாள். கறுப்பென்றாலும் களையான முகம். குட்டிக்குட்டிக் கை விரல்கள். அதில் சின்னதாக சோம்பலில் வளர்ந்த நகம். எண்ணெய் வாராத ஒற்றைக் கூந்தல். சிரித்தால் பளீரெனத் தெரியும் பல்வரிசை. இவள் யார் என்கிற குழப்பத்தையும் மீறி, அவளை எனக்குப் பிடித்திருந்தது.



நான் அவளைக் குழப்பமாகப் பார்த்தேன். அவள் சிரித்தபடியே என்னைப் பார்த்தாள். என் கடவுள் ஒரு பெண் என்று நான் தீர்மானித்திருக்கவில்லை. ஆனாலும், அவள் பெண்ணாக வந்தது நன்றாகத் தான் இருந்தது.



"முகம் கழுவிட்டு வா... டீ சாப்பிடலாம்" - அது கடவுள் எனக்கிட்ட முதல்கட்டளை. நான் அவசரமாகப் புறப்பட்டேன்.



இருவரும் சாலையில் இறங்கி நடந்தபோது, இரவு பெய்த மழையால் சாலை ஈரமாக இருந்தது. இருவரும் அமைதியாக நடந்துகொண்டு இருந்தோம். அவளிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. என் கடவுள் எப்படி இருக்குமென நானே தீர்மானிக்குமுன் வந்து நிற்பவளிடம் என்ன பேசுவது?



அவள் பேசினாள். "நான் வேணும்னு ஏன் நெனைச்சே...?"



"எனக்கே எனக்குன்னு ஒரு கடவுள். அது என் பிரார்த்தனையை மட்டும்தான் கேக்கணும். என் வழிபாட்டை மட்டும்தான் ஏத்துக்கணும். பாரதி, காளியைக் கொண்டாடின மாதிரி, கண்ணம்மாவைக் கொண்டாடின மாதிரி நானும் கொண்டாடனும்."



அவள் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.



நான் தயக்கமாக, "இப்ப இப்படித் தோணுது. கடவுள் வேணும்னு நினைச்சப்போ இதெல்லாம் யோசிக்கலை" என்றேன்.



அவள் சிரித்தாள். அதில் தெய்வீகம் இருந்தது. இருவரும் டீ சாப்பிட்டோம். நான் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன்.



"எனக்கும் ஒன்னு குடு" என்றாள்.



"ஐயையோ! கடவுள் சிகரெட் பிடிக்கலாமா?"



"அப்ப நீயும் பிடிக்காத" என்றபடி என் உதட்டில் இருந்த சிகரெட்டைப் பிடுங்கி எடுத்துப்போட்டாள். எனக்கு அந்த இயல்பு சினேகமாக இருந்தது. பிடித்திருந்தது. அவள் கடவுள் என்கிற நம்பிக்கை வந்தது.



"சந்நிதி ஏதும் அவளுக்கில்லை - அவள்
சாத்திரம் பேசும் கடவுளில்லை.
ஐம்பெரும் பூதப் பெருங்கலவை - இந்த
அவனியில் அவள் போல் தெய்வமில்லை"

என நான் கவிதை சொன்னதும், அவள் "என்ன இது?" எனக் கேட்டாள். நான்முதல் முறையாக அவள் முன் சிரித்தேன்.



"கடவுள்னா ஒரு துதிப் பாடல் வேணும்ல" என்றேன்.



அவள் ஒரு முறை அந்தக் கவிதையை முணுமுணுப்பாகச் சொல்லிப்பார்த்துவிட்டு, "எனக்குப் பிடிக்கலை" என்றபடி வேகமாக நடக்கத் துவங்கினாள். கடவுளுக்கும் எனக்கும் ஏற்பட்ட முதல் முரண் அது.



"ஏன் பிடிக்கலை?"



"உனக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிடிக்கலைன்னாபிடிக்கலை. அவ்ளோதான்" என்றபடி போய்க்கொண்டே இருந்தாள்.



அந்தக் கோபம் எனக்குப் பிடித்திருந்தது. அன்று மாலை வரை இருவரும்எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மாலையில் அவள் வாசல் படிக்கட்டில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தாள். கன்னத்தில் கை வைத்து உதடு சுழித்து அவள் படித்த விதம் அழகாக இருந்தது.



"இந்த போஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கே" என்றேன். சட்டெனத் திரும்பிஎன்னைத் தீர்க்கமாகப் பார்த்தபடி, "நான் தேவதையா... கடவுளா...?" என்றாள்.



அவளிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஒருசின்னத் தடுமாற்றம் எழுந்தது. கடவுளை உருவாக்குவதில் ஏதோ தவறு நேர்ந்து, தேவதையை உருவாக்கிவிட்டேனோ என்ற சந்தேகம் எழுந்தது.



"என்ன முழிக்கிறே...? சொல்லு, தேவதையா... கடவுளா?



"தேவதைக் கடவுள்!"



"ப்போ... பொய் சொல்றே" என்றாள். ப்போ எனக் கண் சிமிட்டித் தலைசாய்த்துச் சொன்னபோது அவள் மீது பேரன்பும் பெருங்காதலும் ஏற்ப்பட்டது.



அந்தக் கணத்திலிருந்து நான் ஆண் ஆண்டாளாக மாறி இருந்தேன். சட்டெனஅனிச்சையாக அவள் பாதம் தொட்டேன். விசுக்கேனக் காலைஇழுத்துக்கொண்டாள்.



"இது எனக்குப் பிடிக்கலை... ப்ளீஸ்!"



"ஏன்? கடவுள்னா பாதம் தொட்டுக் கும்பிடணும்ல?"



"இதுக்கெல்லாம் எனக்குத் தகுதி இல்லேன்னு தோணுது."



"இருக்கு. நீ கடவுள்.!"



அவள் மெளனமானாள். அந்த மெளனம் ஆழமானதாக இருந்தது. நீண்டநேரத்துக்குப் பிறகு, "அந்தக் கவிதை நல்ல கவிதை... சந்நிதி ஏதும் அவளுக்கில்லை... அவள் சாத்திரம் பேசும்... திரும்பச் சொல்லேன்" என்றாள்.



நான் கவிதை சொன்னதும் அவள் என் விரல்களை கோத்துக்கொண்டாள்.கடவுளின் முதல் ஸ்பரிசம். மெல்லத் தோள் சாய்த்து அரவணைத்துக்கொண்டாள். கடவுளின் முதல் அரவணைப்பு.



அதன்பின் கடவுளுக்கும் எனக்கும் இணக்கமான சூழல் ஏற்ப்பட்டது. நான் எங்கு சென்றாலும் கடவுளோடு தான் சென்றேன். எதைத் துவங்கினாலும், அவள் பாதம் தொட்டுத்தான் துவங்கினேன். அடுத்து வந்த பெருமழைக்காலம் முழுவதும் நானும் அவளும் சேர்ந்தே இருந்தோம். அது தாய்மையும் கருணையும் பெருகிப் பெய்த காலம்.



மழை பெய்யும்போதெல்லாம் ஒரு பறவையின் சிறகுகள் அவள் விலாப்புறத்தில் முளைக்கும். ஏகாந்தமாக கைகளை அகல விரித்து நனைவாள். ஒவ்வொரு துளியும் அவளுக்கு ஒவ்வொரு மழை. துளித்துளியாய் தொட்டு நனைவாள். மழை அழகு. அவள் நனையப் பெய்கிற மழை பேரழகு. ஈரம் சொட்டச் சொட்ட அவள் வந்து அமர்கையில், அவள் கூந்தலிலிருந்து மழை பொழியும். அந்த தண்ணீர்த் தருணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை.



நனைந்து திரும்பும்போதெல்லாம் அவளுக்கு ஒரு கறுப்புத் தேநீர் தேவைப்படும். நான் ஊற்றிக் கொடுக்க, அந்தக் கோப்பையை மழையில்ஏந்தி இரண்டொரு துளிகளோடுதான் தேநீர் அருந்துவாள். "இதென்ன பழக்கம்?" எனக் கேட்டேன்.



"மழைத் தேநீர்டா!" என்பாள்.



இந்தக் கேள்வியும் பதிலும் எங்களுக்குள் நிலையானது. "மழை பற்றிஏதாவது சொல்லேன்" என்றாள் ஒரு நாள். அது மழையற்ற நாள். சூரியன் உச்சியில் எரித்த நேரம்.



"இப்ப எதுக்கு மழைபற்றிச் சொல்லணும்?" எனக் கேட்டேன்.



"சொல்லேன்" என்றாள் என் ராக மனுஷி.



"உலர்ந்து போய்விட்டன



முன்னர் பெய்த மழை ஈரங்களும்



நம் முத்தங்களும்" என்றேன்.



சட்டெனக் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுத்தமாகக் கன்னத்தில் முத்தமிட்டாள். அது அவள் எனக்களித்த முதல் முத்தம். அந்த முத்த அதிர்ச்சியில் நான் உறைந்துபோயிருந்தேன். அவளது இரண்டாவது முத்தம் உயிர் கொடுத்தது.



"இந்த ஈரம் காயரதுக்குள்ள மழை பெய்யும் பாரு" என்றாள். பெய்தது. அது அவள் மழை. கடவுள் மழை.



கடவுளுக்கும் எனக்குமான ஸ்பரிச பந்தம் அன்றிலிருந்து துவங்கியதுதான். அடுத்து நான் எழுதிய கவிதை தொகுப்பு முழுக்க மழையாக இருந்தது. அவளாக இருந்தாள். மழை சகி, மழை ரட்சகி, மழை ராட்சசி என்று எழுதியதில் அவளுக்கு அநேக கோபம் எழுந்தது.



அந்த ராட்சச அன்புக்குக் கட்டுப்பட்டவனாக நான் இருந்தேன். எனக்கான நண்பர்கள் வட்டம், உறவுச் சங்கிலிகள் எல்லாம் அறுந்து, என் உலகம் ஒற்றை மனுஷியால் ஆனது என்றாகிவிட்டது. அவளைத் தவிர்த்து வேறுயாரிடமும் பேச எனக்கு எதுவும் இல்லாமல் இருந்தது. பெருநகர வீதிகளில்அவளோடு நடந்தால், அந்தச் சந்தடி சாலையில் நாங்கள் இருவர் மட்டும் இருப்போம்.



ஒரு நாள் கோயிலுக்குப் போகலாம் என அழைத்தான் ராகவன். "நான்தெய்வத்தோடுதான் இருக்கிறேன்" என்றேன். அவனுக்கு அந்த பதில் புரியவில்லை. அவள் சிரித்தாள்.



"ஏன் சிரிச்சே?" என ராகவன் போனதும் கேட்டேன்.



"உன் கடவுள் உனக்குள்ள இருக்கிற ரகசியம். அவன்கிட்ட தெய்வத்தோடு இருக்கிறேன்னு சொன்னா உன்னைப் பைத்தியமாப் பார்ப்பான்" என்றாள்.



அவள் பேச்சின் உண்மை என்னை மெளனமாக்கியது. பகிர்ந்துகொள்ள இயலாத சந்தோஷங்களும் துயரங்களும் எத்தனை வலிமிக்கவை எனஉணர்ந்துகொண்டேன். யாரிடமாவது கடவுள் பற்றிச் சொல்ல வேண்டும்என்று தோன்றியது. நண்பர்களற்ற இன்றைய நிலையில் நான் யாரிடம் சொல்வது?



என் குழப்பத்தை அவள் ரசித்தாள். "நான் உனக்குப் பெரிய இம்சையா இருக்கிறேன்" என்றாள். இல்லையென வெளிப்படையாக மறுத்தாலும், இவள் ஓர் அவஸ்தை என உள்மனம் உணர்த்தியது. என்னுள் மெள்ளப்படர்ந்து என்னை ஆக்கிரமித்தவள், என் எழுத்துக்களையும் ஆக்கிரமித்துக்கொண்டாள். அவளைத் தவிர்த்து எழுத என்னுள் எதுவும் இல்லை. என் கடவுள் என்னை முடக்கிவிட்டது என்றே தோன்றியது. இதை அவளிடம் சொன்னபோது, "நான் போகிறேன்" என்றாள் மூர்க்கமாக.



பக்தர்களைக் கடவுள் நிராகரிக்கலாம். கடவுளை பக்தர்கள் நிராகரிக்க இயலுமா? நான் மீண்டும் அவளிடம் சரணடைந்தேன். கூப்பித் தொழுத என்கை விரல்களில் கூடக் கண்ணீர் கசிந்தது.



எதுவும் பொருட்டில்லை அவளுக்கு. எழுந்து நடந்தாள். ஒரு யாசகப்பயணமாக நான் அவளைப் பின்தொடர்ந்தேன். நீண்ட நடைக்குப் பின் சற்று நின்று திரும்பிப் பார்த்தவள்...



"கடவுள் கடவுள்னு கொண்டாடுறியே... எனக்கு ஒரு பேர் வெச்சியா?" என்றாள். நான் ஓடிச் சென்று அவள் எதிரே போய் நிற்க, அருகில் இருந்த மைல் கல் மேல் அமர்ந்தாள்.



"சரி வா, உனக்கு ஒரு பேரைக் கண்டுபிடிப்போம்."



"மாட்டேன் போ. எனக்கு பேர் வெச்சிட்டுக் கூப்பிடு. வர்றேன்." என்றாள்.



சாலையில் வாகனங்கள் இரைச்சலுடன் கடந்து சென்றுகொண்டு இருந்தன. வானம் கருமேகமாக திரண்டு மழைக்கான ஆயத்தங்களில் இருந்தது. மழைபெய்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. மழைக்கு என் கடவுள்சாந்தமாகும்.



இவளுக்கு மழையைத்தான் படையல் சாத்த வேண்டும். மனசுக்குள் மழைப்பிரார்த்தனை தொடங்கியது. நான் கண்களை மூடிக்கொள்ள, அவள் பேசத்துவங்கினாள்.



"மழை பெய்யப்போகுது. என் மேல் முதல் துளி விழறதுக்குள்ள என் பேர்என்னன்னு சொல்லிரனும். இல்லன்னா போயிட்டே இருப்பேன்."



"பிரைடா காலா" என்றேன்.



"ஐய..."



"காலி, மாரி, அம்மான்னு ரொட்டீனா வேணாமேன்னு பார்த்தேன். பிரைடாகாலான்னா, ஒரு பெண் ஓவியரோட பேர்."



உதடு பிதுக்கிப் பிடிக்கவில்லை என மறுத்தாள். அவள் மேல் முதல் துளிவிழுந்த கணத்தில், "லிவ் உல்மன்" என்றேன். அவள் முகம் பிரகாசமாகியது. 'லிவ் உல்மன்' - ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டாள்.



"நல்லா இருக்குடா. யார் இவங்க?" என்றாள்.



"ஒரு பெரிய நடிகை" என்றேன்.



தலையைக் கம்பீரமாகச் சாய்த்து எழுந்து, "நானும் பெரிய நடிகை. எல்லாஉணர்ச்சிகளையும் எப்படி வெளிப்படுத்தறேன்னு பாரு" - சட்டென மாறிய பாவனைகள் அழகாக இருந்தன. அவள் விரல்களைக் கோர்த்துக்கொண்டு, "என் மேல கோபப்படாத. என்னைவிட்டுப் போயிடாத. உன்னைப் பிரியற மனசும் தெம்பும் எனக்கு இல்லை" என்றேன். இதைச் சொல்லும்போது நான் ஒரு குழந்தையாகி இருந்தேன்.



இருவரும் நனைந்தபடியே நடந்தோம்.



"என் பேரை ஒரு தடவி சொல்லு."



"லிவ் உல்மன்..."



"நீ என்னை எப்படிக் கூப்பிடுவே?"



"லிவ்னு கூப்பிடுறேன். ப்ளீஸ்! ஆல்வேஸ் லிவ் வித் மீ லிவ்" என்றுசொல்லவும் கலகலவெனச் சிரித்தாள். அவள் பற்களில் மழைத்துளிகள் பட்டுத் தெறித்தன.



அந்தக் கணத்தில் கடவுளை நான் ஒரு ரசனைமிக்க குழந்தையாக பார்த்தேன். அவள் விரல்கள் மழையில் தாளமிட்டபடி வந்தன. மழைச்சத்தத்தையும் மீறி அதில் ஓர் இசை தெறித்ததாக உணர்ந்தேன்.



நாங்கள் எங்கள் தேநீர்க் கடையைத் தாண்டினோம்.



"ஒரு மழைத் தேநீர் அருந்தலாமா?" கேட்டேன். அவள் அண்ணாந்து வாய்திறந்து மழை குடித்தபடி "மழையையே அருந்தலாம்" என்றாள்.



"லிவ்" என்றேன். ஆயிரம் வார்த்தைகளின் அழுத்தம் அந்த ஒற்றைஅழைப்பில் இருந்தது.



அவள் தலை கவிழ்த்து என்னைப் பார்த்தாள். நான் அவளிடம் சொல்லஇயலாத ஒரு தடுமாற்றத்தோடு நின்றேன். முகத்திலிருந்த மழை நீரை வழித்து துடைத்தாள். பறவைகள் சிறகு உலுப்புவது போல் உடலை ஒருமுறை உலுக்கிக்கொண்டாள்.



நான் அவளையே பார்த்தபடி இருந்தேன். என் அருகில் நேருக்கு நேராகப்பார்த்தபடி, "வாட் மேன்?" என்றாள். நான் அமைதியாக இருந்தேன்.



"இப்ப நீ எதுவும் பேச மாட்டே. எனக்குத் தெரியும்."



அவள் சொல்வது சரி. இப்போது நான் எதுவும் பேசமாட்டேன். என்னுள் வார்த்தைகள் பாறையாக உறைந்து போயிருந்தன. எங்கள்இருவருக்குமிடையே மழை பேசிக்கொண்டு இருந்தது.



நான் நிற்பதா... நடப்பதா என்ற கேள்வியோடு இருந்தேன். ஈரநடுக்கம் என் இதயம் வரை பரவி நின்றது. துளித் துளியாகப் பெய்தது துக்க மழை.



என்னை ஊடுருவிக் கடக்கும் பார்வையுடன் அவள் நின்றாள். அந்தப்பார்வை எனக்குள்ளிருந்த பக்தியையும் பேரன்பையும் வருடித்தான் சென்றிருக்கும்.



வலது கையை என் தோளில் வைத்தபடி பேசத் துவங்கினாள். "உனக்குத்தேவைப்பட்டது கடவுள் இல்லை... காதல். காதல் வேற, கடவுள் வேற. காதல், கடவுளாக முடியாது. கடவுள், காதலியாக முடியாது. ஒரு நல்ல பெண்ணாத் தேடிக்கோ" என்றபடி நடந்தாள்.



என் தேவை கடவுள்தான். நான் காதலைக் கடந்து வந்தவன் என்பதைஅவளுக்கு உணர்த்த முடியவில்லை. அல்லது, அவள் உணரவில்லை.



இப்போதும் என் எதிரிலேயே இருக்கிறாள். குறுக்கும் நெடுக்குமாக என்னைக் கடந்தும் செல்கிறாள். அவள் முகத்தில் பழைய ஒளி இல்லை. புன்னகை இல்லை. அவளுள் எதையோ பறிகொடுத்த துயரம் உறைந்துகிடக்கிறது. என்னை நோக்கி நகர யத்தனிக்காத வைராக்கியம் அவளுள் நிரம்பித் தளும்புகிறது. இன்னும் அவள் எனக்குக் கடவுளாக இருக்கிறாள். ஆயினும், நான் கடவுளற்ற மனிதனாக இருக்கிறேன்...!


என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

2 February 2009

வரவேற்பறை

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.


இது என்னுடைய கருத்துக்களை உங்களுடன் பகிர்வதற்கான இடம். பல்வேறு நாளேடுகளிலும், வாரமலர்களிலும் நான் படித்த நல்ல கருத்துக்களையும் அன்றாட உலகில் நான் கற்ற நல்ல விஷயங்களையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

அரசியல், சினிமா, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த தகவல்களும் கருத்துகளும் இங்கே இடம் பெறும்.

என் பார்வைகளை உங்கள் முன் வைப்பது என் உரிமை. அவற்றை நீங்கள் ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை.என் இணைய வீட்டுக்கு நீங்கள் வந்திருப்பதற்கு நன்றி.


என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment