Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

9 May 2010

அம்மா... (அன்னையர் தின கவிதை)

எனக்கு
ஆட்டோ வரும் முன்பே
உனக்கு
பேருந்து வந்துவிடுகிறதே
அம்மா...
ஒவ்வொரு நாளும்...!

பள்ளியிலிருந்து
வீடு திரும்புகையில்
யாருமே இல்லாத வீட்டை
பார்க்கையில்
எதுவுமே இல்லாததுபோல்
தோன்றுகிறது
எனக்கு.

இரவு ஒன்பது மணிக்குள்
எப்படியும் வந்துவிடும்
உன்னையும்
பதினோரு மணிக்குள்
வந்துவிட முயற்சிக்கும்
அப்பாவையும்
பள்ளிக்கூடத்தில்
நினைக்கையில்
மங்கலாய்த்தான்
ஞாபகம் வருகிறது.

இப்போதெல்லாம்
டாம் அண்ட் ஜெர்ரியும்,
போகோ டிவியும்
புளித்துவிட்டது.
ப்ரிஜ்ஜில் ஸ்நாக்சும்,
செல்போனில் உன் குரலும்,
அலுத்துவிட்டது.

வரவேற்பறையினை
அலங்கரிக்கத் தெரிந்த 
உனக்கு,
உன் ஸ்பரிசங்களுக்கு
ஏங்கும் என்னை
ஏனம்மா
புரிந்துக்கொள்ள
இயலவில்லை...?

வீட்டுவேலைகளை 
ஞாயிற்றுக்கிழமைகளுக்கு
தள்ளிப்போடும்
உன்னைப்போலவே,
ஏக்கங்களை 
தள்ளிப்போட
எனக்கும் தெரிந்துவிட்டது...

அன்பான 
வார்த்தைகளால்
தற்காலிக தாயாகிவிடுகிறாள்
வேலைக்கார ஆயா...
அப்போதெல்லாம் 
தோன்றுகிறது எனக்கு...
"அவளுக்கே - நான் 
பிள்ளையாகியிருக்கலாம்..."

உன் பிள்ளையென 
உணர்த்த - நான்
நன்றாக படிப்பதாய்
மார்தட்டுகிறாய்...
என் அம்மாவென
உணர்த்த
என்ன செய்யப்போகிறாய் 
நீ...?
- சூர்யா சுரேஷ்

Post Comment

27 April 2010

கட்டிலறை கட்டளைகள் (18+)

வணக்கம் மக்களே...

(பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே படிக்க வேண்டுமென சொன்னால் கேட்கவா போகிறீர்கள். படியுங்கள். படித்து தொலையுங்கள்)

எழுதலாமா கூடாதா என்று தெரியவில்லை. ஒரு வித தயக்கத்துடனே இந்தப் பதிவை வெளியிடுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, உங்கள் எண்ணங்களை ஓரத்தில் இருக்கும் ஓட்டுப்பெட்டியில் சொல்லிவிடுங்கள். தொடர்ந்து இதுப்போன்ற பதிவுகளை எழுதலாமா என்பது நீங்கள் சொல்லும் முடிவில் தான் இருக்கிறது.

நாதியற்ற ஒரு மாலைப்பொழுதில் மெரீனா கடற்கரைக்கு சென்றிருந்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக காதலர்கள் ஆன்மிக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கண்கள் என் பேச்சை கேட்கமாட்டேன் என்று அடம் பிடித்தது. ஒரு வழியாக கட்டுபடுத்திக்கொண்டு ஆளரவமற்ற ஒரு கட்டுமரத்தில் ஏறி மல்லாந்து படுத்தேன். பறந்து விரிந்த ஆகாயத்தை பார்த்து வியந்துக் கொண்டிருந்தேன். ஆகாயத்தை மறைத்தபடி என் தலைக்கு நேரே ஒரு உருவம் தென்பட்டது. கடலை விற்கும் சிறுவன் பல்லைக் காட்டினான். என் தனிமைக்கு தடையாய் இருந்த அவனை அப்புறப்படுத்துவதற்காக கடலை பொட்டலத்தை கையில் வாங்கினேன். கடலை போட்டுக்கொண்டிருந்தவர்களை ரசித்தபடி கடலையை கொறித்தேன், கடலலையை வெறித்தேன். கடலை காலியான பின் தான் கவனித்தேன், கடலை மடித்து தந்த காகிதத்தில் அட்டகாசமான ஒரு பெண்ணின் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. ஓவியத்தை ஒதுக்கிவிட்டு செய்தி என்னவென்பதை படித்தேன். சில வருடங்களுக்கு முன்பு வந்த ஆனந்த விகடனின் பக்கம் அது. எழுத்துருக்கள் இடாலிக்ஸில் இருந்ததால் கவிதையாக இருக்குமென்று எண்ணிக்கொண்டேன். ஏதோவொரு படத்தின் பாடல் வரிகள் அவை. வைரமுத்துவின் வரிகள் விளையாடி இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். வரிகளை படித்து முடித்தபோது ஒரு மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்துவிட்டதாகவே தோன்றியது.

*****
ஆண்:
மீசை முத்தம் வேண்டுமா...?
மீசையில்லாத முத்தம் வேண்டுமா...?

பெண்:
அப்படின்னா...?

ஆண்:
மீசை முத்தம் என்றால் பெண்ணே
நான் உனக்கு தருவது
மீசையில்லாத முத்தம் என்றால்
நீ எனக்கு தருவது...

*****
பெண்: 
தண்ணீர் முத்தம் வேண்டுமா...?
தரையின் முத்தம் வேண்டுமா...?

ஆண்:
அப்படின்னா..?

பெண்:
தண்ணீர் முத்தம் என்றால் அன்பே
தடயமில்லாமல் இடுவது
தரையின் முத்தம் என்றால்
கொஞ்சம் தடயத்தோடு விடுவது...

*****
பெண்: 
கட்டில் மேலே பத்துக் கட்டளை
கட்டளைப்படியே செய்வாயா...?

ஆண்:
என்ன கட்டளை இடு பார்ப்போம்...

பெண்:
என்னை மெதுவாய்த் துடிக்கவிடு...
எச்சில் மாற்றி உண்டுவிடு...
உடையை மெல்ல உதறிவிடு...
உன்னை எனக்கு உடுத்திவிடு...
சிவந்த பாகம் வெளுக்கவிடு...
கறுத்த பாகம் சிவக்கவிடு...
எந்தன் உயிரை உறிஞ்சிவிடு...
உந்தன் உயிரால் நிரப்பிவிடு...
எந்த நிலையிலே நான் கிடப்பெனோ
அந்த நிலையிலே தூங்கவிடு...
இந்த நிம்மதி நிரந்தரமென்று
எனது காதிலே ஒதிவிடு...

*****
ஆண்:
கட்டில் மேலே பத்துக் கட்டளை
கட்டுப்பட்டு நடப்பாயா...?

பெண்:
என்ன கட்டளை இடு பார்ப்போம்...

ஆண்:
நயனம் இரண்டும் மூடிவிடு...
நான்கு புலன்கள் திறந்துவிடு...
கூறைப் புடவை கலைந்துவிடு...
கூந்தல் சேலை உடுத்திவிடு...
என்னைக் கொஞ்சம் ஆளவிடு...
எதிர்ப்பது போல வளைந்துகொடு...
கவிதைபோல் சில உளறிவிடு...
கட்டில் கடன்கள் திருப்பிக் கொடு...
எந்த சுகங்களை நீ ரசித்தாயோ
அந்த சுகங்களைப் பேசிவிடு...
அந்த சுகங்கள் மீண்டும் தொடர
அரைமணி நேரத் தவணை கொடு...

*****
என்ன ஒரு ரசனை. இப்படி ஒரு ரசனையுடன் தாம்பத்தியத்தை அனுபவிக்க தமிழனால் (உண்மைத் தமிழன் பற்றி நான் எதுவும் சொல்லலைங்கோ...) மட்டுமே முடியும். நானும் ரசித்தேன். அட... கவிதையை சொன்னேங்க...

வாசகர்களுக்கு ஒரு சின்ன போட்டி. வைரமுத்து எழுதி திரைப்பட பாடலாக வெளிவந்த இந்த வாழ்க்கை தத்துவம், எந்த திரைப்படத்தில் இடம் பெற்றதென யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.சரியான விடையை முதலில் குறிப்பிடும் அதிர்ஷ்டசாலி அல்ல... புத்திசாலி நேயருக்கு சுஜாதா எழுதிய "என் இனிய எந்திரா..." புத்தகத்தின் PDF பதிப்பு இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்தப் பதிவுக்கும் சுஜாதா எழுதிய புத்தகத்துக்கும் சம்பந்தமே இல்லையே என்று பதிலை சொன்னவர் விரும்பினால் அவர் எதிர்பார்க்கும் அந்த மாதிரியான புத்தகம் ஒன்றும் இலவச இணைப்பாக அனுப்பப்படும்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

23 April 2010

அவள் ஒரு பட்டாம்பூச்சி - பாகம் 2

வணக்கம் மக்களே...

இந்தப் பதிவை எனது 25வது பதிவாக வெளியிடுவதில் நான் பெருமைப்படுகிறேன். வலைப்பூ ஆரம்பித்ததில் இருந்து எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்கள் பொன் மகேஷ், sweet பிரபாகரன், சாமியார் தினேஷ், CSE ரமேஷ் மற்றும் சக பதிவர்கள் சைவக்கொத்துப்பரோட்டா, சேட்டைக்காரன் உள்ளிட்ட பெயர் குறிப்பிட மறந்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

இந்த வலைப்பூ என் வலிகளில் இருந்தெல்லாம் தொடர்ந்து எனக்கு விடுதலை அளித்து வருகிறது. நான் சொல்ல முடியாமல் தயங்குவதை எல்லாம் என் வலைப்பூ சொல்லிக்கொண்டு இருக்கிறது. இப்போது பட்டாம்பூச்சியைப் பற்றிய உணர்வுகளை பட்டாம்பூச்சியிடமும், சுரேஷைப் பற்றிய கருத்துக்களை அவரிடமும் சொல்லி முடிந்தாகி விட்டது. இன்னமும் நிறைய பேரிடம் நிறைய சொல்லவேண்டி இருக்கிறது.

இரண்டாம் பாகமாக எழுதப்பட்டுள்ள இந்த கவிதைப்பதிவின் முதல் பாகத்தை படிக்காத அன்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை சொடுக்கி படித்துக்கொள்ளலாம்.
பட்டாம்பூச்சி பதிவின் முதல் பாகத்தை தீட்டியபோது அந்தப் பட்டாம்பூச்சியே நேரடியாக வந்து இந்த வலைப்பூவை மொய்க்குமென நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் பின்னூட்டம் போடுவது, அடிக்கடி விசிட்டடிப்பது என்று அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சிகளை கொடுத்துவருகிறாள். இது மட்டுமில்லாமல், சுரேஷ், நிரஞ்ஜ், வந்தனா (அதே வந்தனா தான்...!) என்று எனக்கு பிடித்தவர்களெல்லாம் பின்னூட்டம் போட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

ஏற்கனவே, முதல் பாகத்தில் சொல்லிவிட்டேன், இருந்தாலும் புதிதாக படிப்பவர்களுக்கு சொல்லிவிடுகிறேன். இங்கே இருக்கும் கவிதைகள் அனைத்தும் ஆட்டையைப் போட்டவை தான். ஆனால் அவற்றில் ஒளிந்திருக்கும் உணர்வுகள் அனைத்தும் எனது உண்மை உணர்வுகளே. முதல் பாகத்தில் படித்ததை விட கொஞ்சம் பவர்புல்லான கவிதைகள் இங்கே:-

முன் குறிப்பு: சில கவிதைகளை கூர்ந்து படித்தால் பட்டாம்பூச்சி யாரென்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். ம்ம்ம்... புரிந்துக்கொள்பவர்கள் புரிந்துக்கொள்ளட்டும்.

சின்ன வயசில் நிறைய 
சிலேட்டு குச்சிகளை 
முழுங்குவேனாம்...!
இருபது வயதுகளில் 
இப்படியெல்லாம்
உன்னைப்பற்றி
எழுதத்தானோ...?
*****
எத்தனையோ பொய்களை 
எளிதாகச் சொல்லிவிட்டேன்...
உன்னிடம் ஒரே ஒரு உண்மையைச் சொல்ல
காலங்காலமாய்த் தயங்கிக் கொண்டிருக்கிறேன்...!
*****
பொம்மைக் கடைப்பக்கம் போகாதே 
என்றால் கேட்கிறாயா பார்...
குழந்தை ஒன்று தன் தாயிடம்
உன்னைக் காட்டி
இந்த பொம்மையை வாங்கிக்கொடு 
என்று அடம் பிடிப்பதை...!
*****
ஒரு வழியாய் தைரியம் வரவழைத்துச் 
சொல்லிவிட்டேன் காதலை 
சலனமற்றிருக்கிறது
உன் புகைப்படம்...!
*****
ஒரு வண்ணத்துபூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது - 
"ஏன் இந்தப்பூ
நகர்ந்துக்கொண்டே இருக்கிறது...?"
*****
கும்பலில் எல்லாம் 
நீ போகாதே...
யார் யாரோ மிதிக்கிறார்கள் 
உன் நிழலை...!
*****
கல்லூரிக்கு நீ
பிரயாணிக்கும் அரசுப்பேருந்து 
நீ ஏறியவுடன் 
அரசிப்பேருந்தாகிறது...!
*****
பயணம் முடிந்ததும் 
நீ வீசிவிட்டுப்போன பயணச்சீட்டு 
வீதியில் கிடந்து புலம்பிக் கொண்டிருந்தது...
பயணம் முடிந்துவிட்டதை நினைத்து...!
*****
நீ ஒட்டப்போகும்
ஸ்டிக்கர் பொட்டுக்காக 
காத்திருக்கிறது 
என் குளியலறை...!
*****
நம் வீட்டில் நடக்கும் எல்லா 
நிகழ்ச்சிகளிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் 
உன்னைப் பார்த்துக்கொண்டே நிற்கிறேன் நான்...!
*****
கடைசி நாள் பிரேயரில்
தேசிய கீதத்துக்கு ஏன் 
தேம்பித் தேம்பி அழுதேன் என்று 
எனக்கு மட்டும்தான் தெரியும்...!
*****
கை சூப்பும் குழந்தையின் விரலை 
எடுத்து எடுத்து விட்டுக்கொண்டிருந்தாய்...
மறுபடி மறுபடியும் கை சூப்பினாள்...
முதலில் நீ
கையை எடுத்துவிடுவதை நிறுத்து...
உன் கையின் சுவை 
அதன் விரலில் படவும்தான்
மறுபடி மறுபடியும் சூப்புகிறது...!
*****
நீ கெட்ட வார்த்தைகளே பேசியதில்லையாம்...
இப்போது புரிகிறதா...?
அந்த வார்த்தைகள் ஏன் கெட்டனவென்று...!
*****
என்னை ரொம்ப ரொம்ப உருக வைத்த இரண்டு பீலிங் கவிதைகள்:-
சொந்தம் மறந்தவனென்று
உறவுகள் தூற்றட்டும் 
இறந்தவர் வீட்டுக்கெல்லாம்
வரவேமாட்டேன்...
நீ
அழுதுக்கொண்டிருப்பதை
பார்க்கமுடியாது என்னால்...
*****
நீ யாருக்காகவோ சிந்திய
கண்ணீர்த் துளிகளைப் பார்த்ததும்...
எனக்கும் செத்துவிடத் தோன்றியது...
*****
கடைசியாக ஒரு சூழ்நிலைக் கவிதை:-
எல்லா கவிதைகளுமே 
உன்னைப் பற்றியவைதாம் எனினும் 
ஒரு கவிதைகூட 
உன்னை மாதிரி இல்லையே...!
*****

பட்டாம்பூச்சி யாரென்பதை உணர்ந்துக்கொண்ட நண்பர்கள் கட்டாயம் பின்னூட்டம் போடும்படி கேட்டுக்கொள்கிறேன். ஏய் பட்டாம்பூச்சி... உனக்கும்தான்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

22 March 2010

பிள்ளையாரின் நான்கு வகை பிறப்புகள்

(வரலாறு குறித்த பதிவுகளையும் போடச்சொல்லி கருத்து தெரிவித்த சுரேஷுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்)
இந்துக்கடவுள்களில் முதன்மைப் பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக்கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனை கணபதி என்றும், விக்கினேஸ்வரன் என்றும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.

ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக்கூடியதும் அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைச் சற்று கவனிப்போம்.

1. ஒரு நாள் சிவனின் பெண் சாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப்போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஓர் ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஓர் ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து - "நான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!..." என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனைப் பார்த்து, "பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக்கூடாது..." என்று தடுத்ததாகவும், அதனால், பரமசிவக் கடவுளுக்குக் கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, "காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்...?" என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், "காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்" என்று சொன்னதாகவும், இதுகேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஓட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியே வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்டவைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகிறது. இக்கதைக்கு சிவபுராணத்திலும், கந்தபுராணத்திலும் ஆதாரங்கள் இருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது, சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3.  பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஓர் அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக்கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பியதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்க யாக பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.

எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்ப்க்கொள்ள வேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவா பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு, உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மக்கள் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா...? நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய்- தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் - தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்...? (இவைகளைப் பார்க்கும்போது, கடவுள்கள் தாமாகவே ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்...? ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைப் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது.)

கடவுளைப் பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் "கடவுள் ஒருவர்தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு, இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்" என்று சொல்லுவதும், மற்றும் "அது ஒரு சக்தி" என்றும், "ஒரு தன்மை அல்லது குணம்" என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள் தான் உணர வேண்டும்.

(சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் தந்தை பெரியார் அவர்கள் 26.8.1928 "குடிஅரசு" இதழில் எழுதியது)

Post Comment

24 February 2010

அவள் ஒரு பட்டாம்பூச்சி - பாகம் 1

வணக்கம் மக்களே...

(மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தலைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ளது...)

followers எண்ணிக்கை இரட்டை இலக்கை எட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சி. என்னுடன் இணைந்த உண்மைத்தமிழன், SUREஷ், சேட்டைக்காரன் (நல்லவேளை... வேட்டைக்காரன் இல்லை) ஆகியோருக்கு நன்றி. சிலை வைக்கவில்லை என்று கோபித்துக்கொள்ள வேண்டாம். பின்னூட்டம் எழுதிய நண்பர்களுக்கு அங்கேயே பதிலளித்துள்ளேன்.


தேடித்தேடி ஓட்டளிப்பு பட்டைகள் சிலவற்றை இணைத்துள்ளேன். இன்னும் ஏதேனும் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்.
 
ஒரு மாலை நேரத்து மயக்கத்தில் அடுத்த பதிவுக்கான அக்கினிக்குஞ்சு (spark) கிடைத்தது. ஆனால் எவ்வளவோ சிந்தித்தும் தலைப்பை தாண்டி எதுவும் பிடிபடவில்லை. பிப்ரவரி முப்பதாம் தேதி வந்தாலும் எனக்கு கவிதை வராது என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. எனவே துளியும் தாமதப்படுத்தாமல் பரணில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஆனந்த விகடன்களையும் தபூ சங்கரையும் புரட்டினேன். இரண்டு பதிவுகளுக்கான matter ஒற்றை இரவிலேயே கிடைத்தது.

குறிப்பு: இது sweet பிரபாவின் கவிதைப்பதிவுக்கு போட்டியாக எழுதப்பட்டதல்ல...

அந்த நேரத்தில், அந்தி நேரத்தில் முன்னூற்றுக்கும் மேற்ப்பட்ட கவிதைகளை ரசித்தாலும் அனைத்தையும் copy, paste செய்துவிடவில்லை. முத்தான முப்பது கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை இரண்டாக பிரித்தேன். அதென்ன முத்தான கவிதைகள்...

எனது பட்டாம்பூச்சி மீதான என் உணர்வுகளைச் சொல்லும் கவிதைகள் மட்டும் இங்கே : -

முன் குறிப்பு: பதிவைப் படிக்கும் நண்பர்கள் யாரும் யாரந்த பட்டாம்பூச்சி
என்றோ, பட்டாம்பூச்சி பெயர்க்காரணம் குறித்தோ வினவ வேண்டாம்.

இந்த இரவையே
உனக்கு கடிதமாக அனுப்புகிறேன்...
அஞ்சல்தலையாய் அந்த நிலா...!
*****
எத்தனை குதிரைச் சக்தி கொண்டதோ...?
என்னைச் சுற்றிச் சுழலடிக்கும் 
உன் குதிரை வால் கூந்தல்...!
*****
நான் கிளையானபோது பூவானாய்...
கிடாரானபோது கம்பியானாய்...
காதலானபோது ஏன் மௌனமானாய்...?
***** 
இன்னும் அதிகம் ரசிப்பதுண்டு...
என்னை அடித்துவிட்டு 
நீ அழுத நிமிடங்களை...!
*****
நீ செய்த தவறு
என்னை நேசிக்காமல் இருப்பதல்ல...
நான் நேசிக்கும்படி இருப்பது...!
*****
பொம்மையை நீ கொஞ்சாதே...
அதற்கு உயிர் வந்துவிட்டால் 
யார் வளர்ப்பது...?
*****
வீட்டுக்கு ஒரு
மரம்தானே வளர்ப்பார்கள்...?
உன் வீட்டில் மட்டும்
ஏன் மயில் வளர்க்கிறார்கள்...?
*****
கனிவானதொரு சொல்லோ...
நேசம் துளிர்க்குமொரு பார்வையோ...
சில்லரையற்ற பொழுதில் 
நீயெடுக்கும் பயனச்சீட்டோ...
போதுமானதாயிருக்கிறது
உன்னை நேசிக்க...!
*****
துடிப்பதைவிட 
உன்னை நினைப்பதற்கே 
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு...!
*****
நீ இரவுகளில் தூங்குவதே இல்லை...
என் கனவுகளில் அல்லவா இருக்கிறாய்....?
நானோ காலையிலும் எழுவதே இல்லை...
கனவுகள் கலையப் பிடிக்காமல்...!
*****
ஏற்கனவே பூத்த பூ தான் 
எனினும் நீ சூடும்போது 
மறுபடியும் பூக்கிறதே...!
***** 
என்னை நினைத்துக்கொண்டு உறங்கு 
என்றாய்...
அதற்குப் பதிலாய் 
கண்ணைத் திறந்துக்கொண்டு உறங்கு
என்று சொல்லியிருக்கலாம்...!
***** 
சிற்பம்...
கவிதை...
ஓவியம்...
இசை...
நான்கு முனைச் சந்திப்பு நீ...!
***** 
எதற்காக 
நீ கஷ்டப்பட்டுக் கோலம் 
போடுகிறாய்...?
பேசாமல் 
வாசலிலேயே 
சிறிது நேரம் உட்கார்ந்திரு 
போதும்...!
***** 
என்னை நல்லவன் என்று 
நினைத்துக் கொண்டிருந்தேன்...
அந்த நினைப்பில் 
மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது
உன் மீதான காதல்...!
உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது ஆடையை ஆட்டையைப் போடச்சொல்லி 
நச்சரிக்கிறதே மனசு...!
*****
எல்லாச் சொற்களும் தீர்ந்துவிட்டன...
உன் புன்னகையின் வரி வடிவம் கொடேன்...
கொஞ்சம் கவிதை செய்கிறேன்...!
*****
அப்பாடா இப்போதான் மனதில் உள்ள பாரமே கொஞ்சம் குறைஞ்சிருக்கு... இப்போ ஒரு situation still... சும்மா சாப்பிடுங்க...
ம்ம்ம்... இது சும்மா sample தான். பலமான கவிதைகளை அடுத்த பதிவிற்காக பதுக்கியிருக்கிறேன். பிடித்திருந்தால் பின்னூட்டம் போடுங்கள்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

21 February 2009

என் கடவுள்...!

வணக்கம் மக்களே...


[25.2.2009 தேதியிட்ட ஆனந்த விகடனில் "ப்போ... பொய் சொல்றே...!" என்றபெயரில் தாமிரா எழுதிய இந்த சிறுகதை எனக்கும் கடவுளுக்குமான உறவைபற்றி தெளிவாக சொல்வது மட்டுமில்லாமல் என் நிஜவாழ்க்கையை உரசிச்செல்வதால் இதனை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.]


"என் கடவுளை நானே உருவாக்கப் போறேன்" என்று சொன்னதும் ராகவன் சிரித்தான். அவன் சிரிப்பில் டேபிள் முழுக்க பீர் தெறித்தது.



"ஒயின் ஷாப்ல உக்காந்து கடவுளை உருவாக்கறானாம். லூஸாடா நீ...? இருக்கிற கடவுள்களுக்குள் நடக்கற எழரையையே தீர்க்க முடியல. புதுசா ஒரு கடவுளை உருவாக்கப் போறாராம் இவரு. "சரக்கப் போடுறா... சரக்கப்போடு!" என்றபடி மீண்டும் குடிக்கத் துவங்கினான்.



"எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. அதே சமயம் நான் நாத்திகனும் இல்லை. ஆனாலும், எனக்குள்ள இருக்கிற பக்தியைச் செலவழிக்க ஒரு கடவுள் வேணும்." - தீர்க்கமாக இதைச் சொன்னபடி, மிச்சமிருந்த சரக்கை ஒரே மடக்காக எடுத்துக் குடித்தேன்.



"நாட்ல எத்தனை கடவுள், அதுல எத்தனை சப் டிவிஷன்ஸ், வெஜிடேரியன், நான் வெஜிடேரியன், ஆல்கஹால், நான் ஆல்கஹால்னு."



"எந்தக் கடவுளையும் எனக்குப் பிடிக்கலை. எனக்கு கம்பர்ட்டபிளா ஒருகடவுள் வேணும்."



"எப்படிப்பட்ட கடவுள். புரியலடா...?"



"பிரெண்ட்லியா இருக்கணும்."



"அப்ப என்னைக் கடவுளா ஏத்துக்க. டெய்லி ரெண்டு பீர் பாட்டில் படையல் சாத்து. அருள் பாலிக்கிறேன்" என்றபடி சைட் டிஷ்ஷுக்காக டேபிளைத் தடவினான். இனி, இவனிடம் பேசினால் எனக்குள் இருக்கும் கடவுளைக் கருக்கலைத்துவிடுவான். நான் எழுந்துக்கொண்டேன்.



அறைக்குத் திரும்பியபோது என்னுள் கடவுளின் தேவை அதிகரித்திருந்தது. ராகவனின் கேள்வி உள்ளே முட்டித் திரிந்தது.



"எப்படிப்பட்ட கடவுள் வேணும்...?"



அந்தக் கேள்வியில் பயணமானேன். 'என் கடவுளின் பெயர் என்ன...? நிறம்என்ன...? அதன் சக்தி என்ன...? என் கடவுள் ஆணா... பெண்ணா...?' - கேள்விகள் சங்கிலித் தொடராக நீண்டன. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.



காலையில் டீப்பாய் மீது கடவுள் அமர்ந்து இருந்தாள். பச்சை நிறத்தில் சல்வார் அணிந்திருந்தாள். கறுப்பென்றாலும் களையான முகம். குட்டிக்குட்டிக் கை விரல்கள். அதில் சின்னதாக சோம்பலில் வளர்ந்த நகம். எண்ணெய் வாராத ஒற்றைக் கூந்தல். சிரித்தால் பளீரெனத் தெரியும் பல்வரிசை. இவள் யார் என்கிற குழப்பத்தையும் மீறி, அவளை எனக்குப் பிடித்திருந்தது.



நான் அவளைக் குழப்பமாகப் பார்த்தேன். அவள் சிரித்தபடியே என்னைப் பார்த்தாள். என் கடவுள் ஒரு பெண் என்று நான் தீர்மானித்திருக்கவில்லை. ஆனாலும், அவள் பெண்ணாக வந்தது நன்றாகத் தான் இருந்தது.



"முகம் கழுவிட்டு வா... டீ சாப்பிடலாம்" - அது கடவுள் எனக்கிட்ட முதல்கட்டளை. நான் அவசரமாகப் புறப்பட்டேன்.



இருவரும் சாலையில் இறங்கி நடந்தபோது, இரவு பெய்த மழையால் சாலை ஈரமாக இருந்தது. இருவரும் அமைதியாக நடந்துகொண்டு இருந்தோம். அவளிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. என் கடவுள் எப்படி இருக்குமென நானே தீர்மானிக்குமுன் வந்து நிற்பவளிடம் என்ன பேசுவது?



அவள் பேசினாள். "நான் வேணும்னு ஏன் நெனைச்சே...?"



"எனக்கே எனக்குன்னு ஒரு கடவுள். அது என் பிரார்த்தனையை மட்டும்தான் கேக்கணும். என் வழிபாட்டை மட்டும்தான் ஏத்துக்கணும். பாரதி, காளியைக் கொண்டாடின மாதிரி, கண்ணம்மாவைக் கொண்டாடின மாதிரி நானும் கொண்டாடனும்."



அவள் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.



நான் தயக்கமாக, "இப்ப இப்படித் தோணுது. கடவுள் வேணும்னு நினைச்சப்போ இதெல்லாம் யோசிக்கலை" என்றேன்.



அவள் சிரித்தாள். அதில் தெய்வீகம் இருந்தது. இருவரும் டீ சாப்பிட்டோம். நான் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன்.



"எனக்கும் ஒன்னு குடு" என்றாள்.



"ஐயையோ! கடவுள் சிகரெட் பிடிக்கலாமா?"



"அப்ப நீயும் பிடிக்காத" என்றபடி என் உதட்டில் இருந்த சிகரெட்டைப் பிடுங்கி எடுத்துப்போட்டாள். எனக்கு அந்த இயல்பு சினேகமாக இருந்தது. பிடித்திருந்தது. அவள் கடவுள் என்கிற நம்பிக்கை வந்தது.



"சந்நிதி ஏதும் அவளுக்கில்லை - அவள்
சாத்திரம் பேசும் கடவுளில்லை.
ஐம்பெரும் பூதப் பெருங்கலவை - இந்த
அவனியில் அவள் போல் தெய்வமில்லை"

என நான் கவிதை சொன்னதும், அவள் "என்ன இது?" எனக் கேட்டாள். நான்முதல் முறையாக அவள் முன் சிரித்தேன்.



"கடவுள்னா ஒரு துதிப் பாடல் வேணும்ல" என்றேன்.



அவள் ஒரு முறை அந்தக் கவிதையை முணுமுணுப்பாகச் சொல்லிப்பார்த்துவிட்டு, "எனக்குப் பிடிக்கலை" என்றபடி வேகமாக நடக்கத் துவங்கினாள். கடவுளுக்கும் எனக்கும் ஏற்பட்ட முதல் முரண் அது.



"ஏன் பிடிக்கலை?"



"உனக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிடிக்கலைன்னாபிடிக்கலை. அவ்ளோதான்" என்றபடி போய்க்கொண்டே இருந்தாள்.



அந்தக் கோபம் எனக்குப் பிடித்திருந்தது. அன்று மாலை வரை இருவரும்எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மாலையில் அவள் வாசல் படிக்கட்டில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தாள். கன்னத்தில் கை வைத்து உதடு சுழித்து அவள் படித்த விதம் அழகாக இருந்தது.



"இந்த போஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கே" என்றேன். சட்டெனத் திரும்பிஎன்னைத் தீர்க்கமாகப் பார்த்தபடி, "நான் தேவதையா... கடவுளா...?" என்றாள்.



அவளிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஒருசின்னத் தடுமாற்றம் எழுந்தது. கடவுளை உருவாக்குவதில் ஏதோ தவறு நேர்ந்து, தேவதையை உருவாக்கிவிட்டேனோ என்ற சந்தேகம் எழுந்தது.



"என்ன முழிக்கிறே...? சொல்லு, தேவதையா... கடவுளா?



"தேவதைக் கடவுள்!"



"ப்போ... பொய் சொல்றே" என்றாள். ப்போ எனக் கண் சிமிட்டித் தலைசாய்த்துச் சொன்னபோது அவள் மீது பேரன்பும் பெருங்காதலும் ஏற்ப்பட்டது.



அந்தக் கணத்திலிருந்து நான் ஆண் ஆண்டாளாக மாறி இருந்தேன். சட்டெனஅனிச்சையாக அவள் பாதம் தொட்டேன். விசுக்கேனக் காலைஇழுத்துக்கொண்டாள்.



"இது எனக்குப் பிடிக்கலை... ப்ளீஸ்!"



"ஏன்? கடவுள்னா பாதம் தொட்டுக் கும்பிடணும்ல?"



"இதுக்கெல்லாம் எனக்குத் தகுதி இல்லேன்னு தோணுது."



"இருக்கு. நீ கடவுள்.!"



அவள் மெளனமானாள். அந்த மெளனம் ஆழமானதாக இருந்தது. நீண்டநேரத்துக்குப் பிறகு, "அந்தக் கவிதை நல்ல கவிதை... சந்நிதி ஏதும் அவளுக்கில்லை... அவள் சாத்திரம் பேசும்... திரும்பச் சொல்லேன்" என்றாள்.



நான் கவிதை சொன்னதும் அவள் என் விரல்களை கோத்துக்கொண்டாள்.கடவுளின் முதல் ஸ்பரிசம். மெல்லத் தோள் சாய்த்து அரவணைத்துக்கொண்டாள். கடவுளின் முதல் அரவணைப்பு.



அதன்பின் கடவுளுக்கும் எனக்கும் இணக்கமான சூழல் ஏற்ப்பட்டது. நான் எங்கு சென்றாலும் கடவுளோடு தான் சென்றேன். எதைத் துவங்கினாலும், அவள் பாதம் தொட்டுத்தான் துவங்கினேன். அடுத்து வந்த பெருமழைக்காலம் முழுவதும் நானும் அவளும் சேர்ந்தே இருந்தோம். அது தாய்மையும் கருணையும் பெருகிப் பெய்த காலம்.



மழை பெய்யும்போதெல்லாம் ஒரு பறவையின் சிறகுகள் அவள் விலாப்புறத்தில் முளைக்கும். ஏகாந்தமாக கைகளை அகல விரித்து நனைவாள். ஒவ்வொரு துளியும் அவளுக்கு ஒவ்வொரு மழை. துளித்துளியாய் தொட்டு நனைவாள். மழை அழகு. அவள் நனையப் பெய்கிற மழை பேரழகு. ஈரம் சொட்டச் சொட்ட அவள் வந்து அமர்கையில், அவள் கூந்தலிலிருந்து மழை பொழியும். அந்த தண்ணீர்த் தருணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை.



நனைந்து திரும்பும்போதெல்லாம் அவளுக்கு ஒரு கறுப்புத் தேநீர் தேவைப்படும். நான் ஊற்றிக் கொடுக்க, அந்தக் கோப்பையை மழையில்ஏந்தி இரண்டொரு துளிகளோடுதான் தேநீர் அருந்துவாள். "இதென்ன பழக்கம்?" எனக் கேட்டேன்.



"மழைத் தேநீர்டா!" என்பாள்.



இந்தக் கேள்வியும் பதிலும் எங்களுக்குள் நிலையானது. "மழை பற்றிஏதாவது சொல்லேன்" என்றாள் ஒரு நாள். அது மழையற்ற நாள். சூரியன் உச்சியில் எரித்த நேரம்.



"இப்ப எதுக்கு மழைபற்றிச் சொல்லணும்?" எனக் கேட்டேன்.



"சொல்லேன்" என்றாள் என் ராக மனுஷி.



"உலர்ந்து போய்விட்டன



முன்னர் பெய்த மழை ஈரங்களும்



நம் முத்தங்களும்" என்றேன்.



சட்டெனக் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுத்தமாகக் கன்னத்தில் முத்தமிட்டாள். அது அவள் எனக்களித்த முதல் முத்தம். அந்த முத்த அதிர்ச்சியில் நான் உறைந்துபோயிருந்தேன். அவளது இரண்டாவது முத்தம் உயிர் கொடுத்தது.



"இந்த ஈரம் காயரதுக்குள்ள மழை பெய்யும் பாரு" என்றாள். பெய்தது. அது அவள் மழை. கடவுள் மழை.



கடவுளுக்கும் எனக்குமான ஸ்பரிச பந்தம் அன்றிலிருந்து துவங்கியதுதான். அடுத்து நான் எழுதிய கவிதை தொகுப்பு முழுக்க மழையாக இருந்தது. அவளாக இருந்தாள். மழை சகி, மழை ரட்சகி, மழை ராட்சசி என்று எழுதியதில் அவளுக்கு அநேக கோபம் எழுந்தது.



அந்த ராட்சச அன்புக்குக் கட்டுப்பட்டவனாக நான் இருந்தேன். எனக்கான நண்பர்கள் வட்டம், உறவுச் சங்கிலிகள் எல்லாம் அறுந்து, என் உலகம் ஒற்றை மனுஷியால் ஆனது என்றாகிவிட்டது. அவளைத் தவிர்த்து வேறுயாரிடமும் பேச எனக்கு எதுவும் இல்லாமல் இருந்தது. பெருநகர வீதிகளில்அவளோடு நடந்தால், அந்தச் சந்தடி சாலையில் நாங்கள் இருவர் மட்டும் இருப்போம்.



ஒரு நாள் கோயிலுக்குப் போகலாம் என அழைத்தான் ராகவன். "நான்தெய்வத்தோடுதான் இருக்கிறேன்" என்றேன். அவனுக்கு அந்த பதில் புரியவில்லை. அவள் சிரித்தாள்.



"ஏன் சிரிச்சே?" என ராகவன் போனதும் கேட்டேன்.



"உன் கடவுள் உனக்குள்ள இருக்கிற ரகசியம். அவன்கிட்ட தெய்வத்தோடு இருக்கிறேன்னு சொன்னா உன்னைப் பைத்தியமாப் பார்ப்பான்" என்றாள்.



அவள் பேச்சின் உண்மை என்னை மெளனமாக்கியது. பகிர்ந்துகொள்ள இயலாத சந்தோஷங்களும் துயரங்களும் எத்தனை வலிமிக்கவை எனஉணர்ந்துகொண்டேன். யாரிடமாவது கடவுள் பற்றிச் சொல்ல வேண்டும்என்று தோன்றியது. நண்பர்களற்ற இன்றைய நிலையில் நான் யாரிடம் சொல்வது?



என் குழப்பத்தை அவள் ரசித்தாள். "நான் உனக்குப் பெரிய இம்சையா இருக்கிறேன்" என்றாள். இல்லையென வெளிப்படையாக மறுத்தாலும், இவள் ஓர் அவஸ்தை என உள்மனம் உணர்த்தியது. என்னுள் மெள்ளப்படர்ந்து என்னை ஆக்கிரமித்தவள், என் எழுத்துக்களையும் ஆக்கிரமித்துக்கொண்டாள். அவளைத் தவிர்த்து எழுத என்னுள் எதுவும் இல்லை. என் கடவுள் என்னை முடக்கிவிட்டது என்றே தோன்றியது. இதை அவளிடம் சொன்னபோது, "நான் போகிறேன்" என்றாள் மூர்க்கமாக.



பக்தர்களைக் கடவுள் நிராகரிக்கலாம். கடவுளை பக்தர்கள் நிராகரிக்க இயலுமா? நான் மீண்டும் அவளிடம் சரணடைந்தேன். கூப்பித் தொழுத என்கை விரல்களில் கூடக் கண்ணீர் கசிந்தது.



எதுவும் பொருட்டில்லை அவளுக்கு. எழுந்து நடந்தாள். ஒரு யாசகப்பயணமாக நான் அவளைப் பின்தொடர்ந்தேன். நீண்ட நடைக்குப் பின் சற்று நின்று திரும்பிப் பார்த்தவள்...



"கடவுள் கடவுள்னு கொண்டாடுறியே... எனக்கு ஒரு பேர் வெச்சியா?" என்றாள். நான் ஓடிச் சென்று அவள் எதிரே போய் நிற்க, அருகில் இருந்த மைல் கல் மேல் அமர்ந்தாள்.



"சரி வா, உனக்கு ஒரு பேரைக் கண்டுபிடிப்போம்."



"மாட்டேன் போ. எனக்கு பேர் வெச்சிட்டுக் கூப்பிடு. வர்றேன்." என்றாள்.



சாலையில் வாகனங்கள் இரைச்சலுடன் கடந்து சென்றுகொண்டு இருந்தன. வானம் கருமேகமாக திரண்டு மழைக்கான ஆயத்தங்களில் இருந்தது. மழைபெய்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. மழைக்கு என் கடவுள்சாந்தமாகும்.



இவளுக்கு மழையைத்தான் படையல் சாத்த வேண்டும். மனசுக்குள் மழைப்பிரார்த்தனை தொடங்கியது. நான் கண்களை மூடிக்கொள்ள, அவள் பேசத்துவங்கினாள்.



"மழை பெய்யப்போகுது. என் மேல் முதல் துளி விழறதுக்குள்ள என் பேர்என்னன்னு சொல்லிரனும். இல்லன்னா போயிட்டே இருப்பேன்."



"பிரைடா காலா" என்றேன்.



"ஐய..."



"காலி, மாரி, அம்மான்னு ரொட்டீனா வேணாமேன்னு பார்த்தேன். பிரைடாகாலான்னா, ஒரு பெண் ஓவியரோட பேர்."



உதடு பிதுக்கிப் பிடிக்கவில்லை என மறுத்தாள். அவள் மேல் முதல் துளிவிழுந்த கணத்தில், "லிவ் உல்மன்" என்றேன். அவள் முகம் பிரகாசமாகியது. 'லிவ் உல்மன்' - ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டாள்.



"நல்லா இருக்குடா. யார் இவங்க?" என்றாள்.



"ஒரு பெரிய நடிகை" என்றேன்.



தலையைக் கம்பீரமாகச் சாய்த்து எழுந்து, "நானும் பெரிய நடிகை. எல்லாஉணர்ச்சிகளையும் எப்படி வெளிப்படுத்தறேன்னு பாரு" - சட்டென மாறிய பாவனைகள் அழகாக இருந்தன. அவள் விரல்களைக் கோர்த்துக்கொண்டு, "என் மேல கோபப்படாத. என்னைவிட்டுப் போயிடாத. உன்னைப் பிரியற மனசும் தெம்பும் எனக்கு இல்லை" என்றேன். இதைச் சொல்லும்போது நான் ஒரு குழந்தையாகி இருந்தேன்.



இருவரும் நனைந்தபடியே நடந்தோம்.



"என் பேரை ஒரு தடவி சொல்லு."



"லிவ் உல்மன்..."



"நீ என்னை எப்படிக் கூப்பிடுவே?"



"லிவ்னு கூப்பிடுறேன். ப்ளீஸ்! ஆல்வேஸ் லிவ் வித் மீ லிவ்" என்றுசொல்லவும் கலகலவெனச் சிரித்தாள். அவள் பற்களில் மழைத்துளிகள் பட்டுத் தெறித்தன.



அந்தக் கணத்தில் கடவுளை நான் ஒரு ரசனைமிக்க குழந்தையாக பார்த்தேன். அவள் விரல்கள் மழையில் தாளமிட்டபடி வந்தன. மழைச்சத்தத்தையும் மீறி அதில் ஓர் இசை தெறித்ததாக உணர்ந்தேன்.



நாங்கள் எங்கள் தேநீர்க் கடையைத் தாண்டினோம்.



"ஒரு மழைத் தேநீர் அருந்தலாமா?" கேட்டேன். அவள் அண்ணாந்து வாய்திறந்து மழை குடித்தபடி "மழையையே அருந்தலாம்" என்றாள்.



"லிவ்" என்றேன். ஆயிரம் வார்த்தைகளின் அழுத்தம் அந்த ஒற்றைஅழைப்பில் இருந்தது.



அவள் தலை கவிழ்த்து என்னைப் பார்த்தாள். நான் அவளிடம் சொல்லஇயலாத ஒரு தடுமாற்றத்தோடு நின்றேன். முகத்திலிருந்த மழை நீரை வழித்து துடைத்தாள். பறவைகள் சிறகு உலுப்புவது போல் உடலை ஒருமுறை உலுக்கிக்கொண்டாள்.



நான் அவளையே பார்த்தபடி இருந்தேன். என் அருகில் நேருக்கு நேராகப்பார்த்தபடி, "வாட் மேன்?" என்றாள். நான் அமைதியாக இருந்தேன்.



"இப்ப நீ எதுவும் பேச மாட்டே. எனக்குத் தெரியும்."



அவள் சொல்வது சரி. இப்போது நான் எதுவும் பேசமாட்டேன். என்னுள் வார்த்தைகள் பாறையாக உறைந்து போயிருந்தன. எங்கள்இருவருக்குமிடையே மழை பேசிக்கொண்டு இருந்தது.



நான் நிற்பதா... நடப்பதா என்ற கேள்வியோடு இருந்தேன். ஈரநடுக்கம் என் இதயம் வரை பரவி நின்றது. துளித் துளியாகப் பெய்தது துக்க மழை.



என்னை ஊடுருவிக் கடக்கும் பார்வையுடன் அவள் நின்றாள். அந்தப்பார்வை எனக்குள்ளிருந்த பக்தியையும் பேரன்பையும் வருடித்தான் சென்றிருக்கும்.



வலது கையை என் தோளில் வைத்தபடி பேசத் துவங்கினாள். "உனக்குத்தேவைப்பட்டது கடவுள் இல்லை... காதல். காதல் வேற, கடவுள் வேற. காதல், கடவுளாக முடியாது. கடவுள், காதலியாக முடியாது. ஒரு நல்ல பெண்ணாத் தேடிக்கோ" என்றபடி நடந்தாள்.



என் தேவை கடவுள்தான். நான் காதலைக் கடந்து வந்தவன் என்பதைஅவளுக்கு உணர்த்த முடியவில்லை. அல்லது, அவள் உணரவில்லை.



இப்போதும் என் எதிரிலேயே இருக்கிறாள். குறுக்கும் நெடுக்குமாக என்னைக் கடந்தும் செல்கிறாள். அவள் முகத்தில் பழைய ஒளி இல்லை. புன்னகை இல்லை. அவளுள் எதையோ பறிகொடுத்த துயரம் உறைந்துகிடக்கிறது. என்னை நோக்கி நகர யத்தனிக்காத வைராக்கியம் அவளுள் நிரம்பித் தளும்புகிறது. இன்னும் அவள் எனக்குக் கடவுளாக இருக்கிறாள். ஆயினும், நான் கடவுளற்ற மனிதனாக இருக்கிறேன்...!


என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment