13 November 2012

மேற்கிந்திய தீவுகளில் தீபாவளி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் மேலோங்கியிருந்த சமயம், மேற்கிந்திய தீவுகளின் கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய இந்தியர்களையும் சீனர்களையும்
கொத்தடிமைகளாக ஏற்றுமதி செய்தது ஆங்கிலேய அரசு. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். ஆரம்பத்தில் ஐந்தாண்டு, பத்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் சென்ற இந்தியர்கள் அங்கேயே தொடர்ந்து வாழ வேண்டிய சூழல். விளைவு - தற்போது ட்ரினிடாட் & டொபாகோ தீவுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் நாற்பது சதவிகிதத்திற்கு மேல் இந்தியர்கள், அவர்களில் பாதி ஹிந்துக்கள். அண்டை நாடுகளில் ஒன்றான கயானாவின் நிலையும் அதுவே.



தீபாவளி, தீப ஒளி, தீவாளி, திவாளி, டிவாலி, விடுமுறை தினம் - என்று பலவகையில் இந்தியாவில் உச்சரிக்கபட்டாலும் மேற்கிந்திய தீவுகளில் தீவாளி / திவாளி என்றே சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்பெல்லிங் மட்டும் DIVALI...! கயானா, டி & டி நாடுகளில் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தீபாவளி தேசிய விடுமுறை தினமாக இருந்து வருகிறது.

மேற்கிந்திய தீவுகளில் தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது என்று பார்ப்போம். தீபாவளிக்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே மக்கள் தத்தம் வீடுகளை சுத்தப்படுத்தி, புது வண்ணங்களை பூசி லக்ஷ்மி பூஜைக்கு தயார் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். நாட்கள் நெருங்கியதும் தோரணங்கள், ரங்கோலி கோலங்கள் அன்று கலைநயத்தோடு அழகுபடுத்துகின்றனர்.

தீபாவளியன்று அதிகாலை எண்ணைக்குளியல் போட்டுவிட்டு, கோழிக்கறி குழம்பில் இட்லியோ தோசையோ பெனஞ்சு அடிப்பது தான் தமிழ்நாட்டு வழக்கம். ஆனால் மேற்கிந்திய தீவு மக்கள் வட இந்திய பாணியில் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்று அவர்களின் உணவுமுறையில் இருந்தே புரிந்துக்கொள்ள முடிகிறது. தீபாவளியன்று மே.தீ வாழ் இந்தியர்கள் அசைவத்தை தொடுவதே இல்லை. சொல்லப்போனால் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே நோன்பிருக்க ஆரம்பித்து விடுகின்றனர். ரொட்டி, பட்டாணி - உருளைக்கிழங்கு, பருப்பு சாதம், பூசணிக்காய் என்று இவர்களின் தீபாவளி மெனு உப்பு சப்பில்லாமல் இருக்கிறது. குளோப் ஜாமூன், ஜிலேபி, கச்சோரி என்று பலகாரங்கள் கூட வட இந்திய கலாசாரத்தை பறைசாற்றுகின்றன.



தீபாவளியின் பின்பகுதியில் ராமர், கிருஷ்ணர், நரகாசுரன் என்று ஏராளமான புராணக்கதைகள் இருப்பினும் மே.தீ மக்கள் பெரும்பாலும் தீபாவளியன்று பொருளாதார கடவுளான லக்ஷ்மியையே வணங்குகின்றனர். அங்கிருக்கும் ஹிந்துக்கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதன்பிறகு முன்பத்தியில் குறிப்பிட்ட உணவுவகைகளோடு தங்களுடைய நோன்பை நிறைவு செய்கின்றனர். மாலை ஐந்து மணிக்கு மேல் வீடுகளில், தெருக்களில், கதவோரங்களில், படிக்கட்டுகளில் என தீபங்களை வைத்து நகரெங்கும் ஒளிமயமாக்குகின்றனர். குறிப்பாக மூங்கில்களை வளைத்து செய்யப்படும் விளக்குகள் மே.தீவுகளில் பிரசித்தி.


மேற்கு இந்திய தீவுகளில் கார்னிவல், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு அடுத்தப்படியாக நிற்பது தீபாவளி தான். சென்னையில் தீவுத்திடல் இருப்பது போல மேற்கிந்திய தீவுகளில் சகுவானாஸ் என்றொரு இடம் இருக்கிறது. இங்கே வருடாவருடம் தீபாவளிக்கு முந்தய இரு வாரங்களில் “தீபாவளி நகர்” என்ற பெயரில் திருவிழா நடக்கிறது. கலை நிகழ்ச்சிகள், இந்திய புராணக்கதைகளை ஒத்த நாடகங்கள், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், பொருட்கண்காட்சி என்று களேபரமாகி தீபாவளிக்கு முந்தய நாள் இரவோடு நிறைவுபெறுகிறது. 


ரம்ஜான் சமயத்தில் நம்மூர் அரசியல்வாதிகள் குல்லா அணிந்து இப்தார் கஞ்சியடிக்கும் ஸ்டில்களை ஃப்ளெக்ஸ் பேனர்களில் பார்த்திருப்போம். அதே போல மே.தீ. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் தீபாவளி நகர் திருவிழாவில் மக்களோடு மக்களாக பிணைந்து, இந்திய பாரம்பரிய உடை, அதாவது குர்தா பைஜாமா அணிந்து நம்மவர்களை மகிழ்விக்கிறார்களாம். 


தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக நடைபெறும் “மிஸ் தீவாளி நகர்” அழகிப்போட்டி தீபாவளி கொண்டாட்டங்களின் ஹைலைட். இந்திய - ஆப்பிரிக்க கூட்டுமுயற்சியில் படைக்கப்பட்ட அழகிகள் சேலை தரிசனம் தருவது கண்கொள்ளா காட்சி. இதே பாணி அழகிப்போட்டி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலும் நடைபெறுவது கூடுதல் செய்தி. மிஸ்டர் தீவாளி நகர் போட்டியும் நடைபெறுகிறது என்ற செய்தியை நமக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன்.

கார்னிவல் மற்றும் தீபாவளியை முன்னிறுத்தி T&T, கயானா போன்ற நாடுகள் மிகப்பெரிய அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதாக சொல்லப்படுகிறது. 



தீபாவளி திருநாளில் பட்டாசு வெடிக்கும் கலாசாரம் மேற்கிந்திய தீவுகளில் இருப்பதாக தரவுகள் எதுவும் காணப்படவில்லை. எனினும் பொதுவாக மேற்கிந்திய தீவுகளில் விளையாடப்படும் சாகச வெடி விளையாட்டை காணொளியில் பார்க்கலாம்...!




படங்கள் & தகவல்கள் www.triniview.com, விக்கிபீடியா மற்றும் பல தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டது.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 comments:

rajamelaiyur said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா...

rajamelaiyur said...

நாளை துப்பாக்கி விமர்சனம் எதிர்பார்க்கலாமா?

Philosophy Prabhakaran said...

இன்னைக்கே வேணும்னாலும் எதிர்பாருங்க... என் வலைப்பூவில் அல்ல...

Prem S said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே

Prem S said...

அட இவ்வளவு ஆராய்ச்சியா கலக்குங்க

ஹாலிவுட்ரசிகன் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே...

முத்தரசு said...

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மாதேவி said...

மேற்கிந்திய தீவுகளில் தீபாவளி கண்டுகொண்டோம்.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

aavee said...

தீபாவளி வாழ்த்துகள் நண்பா..!

கவிதை வானம் said...

நண்பரே
தங்களின் இப்பதிவு எனது வலைப்பூவில் இணைக்கப்பட்டுள்ளது ...நன்றியுடன்
http://parithimuthurasan.blogspot.in/2012/11/cinema.html

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு.

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.