28 July 2012

பொல்லாங்கு


அன்புள்ள வலைப்பூவிற்கு,

வசீகரமான ட்ரைலரை நம்பி நிறைய படத்திற்கு போயிருக்கிறேன், சில சமயங்களில் க்ரியேடிவான நாளிதழ் விளம்பரங்கள் கூட படம் பார்க்க வைத்திருக்கிறது, ஏன் வித்தியாசமான தலைப்பை நம்பி மட்டுமே கூட சிற்சில படங்களை பார்த்திருக்கிறேன், ஆனால் முதல்முறையாக ஒரு இயக்குனரின் பெயர்...! காந்தி மார்க்ஸ்...! என்னவொரு முரண்...!

ஹனிமூன் கொண்டாடுவதற்காக மலை பங்களாவிற்கு செல்லும் தம்பதியின் அமானுஷ்ய அனுபவங்கள். 

விறுவிறுப்பான கார் சேசிங் காட்சியோடு படம் ஆரம்பமாகிறது. ஹனிமூன் ஜோடியை நால்வர் குழு ஒன்று ஜீப்பில் துரத்திக்கொண்டு வருகிறது. அவர்கள் ஏன் துரத்திக்கொண்டு வருகிறார்கள்...? ஹீரோ ஏன் டூமாங்கோலி மாதிரி நடந்துக்கொள்கிறார்...? ஹீரோயின் மறைத்து வைக்கும் பொருள் என்ன...? துரத்தி வந்த வில்லன் குழு இறுதியில் என்ன ஆனது...? சாமியார் ஏவிவிட்ட ஆத்மா யாருடையது...? மேலும் பற்பல உப கேள்விகளுள் பலவற்றிற்கு இரண்டாம் பாதியில் விடை சொல்லியும், சிலவற்றிற்கு படம் முடிந்தபின்னரும் கூட விடையே சொல்லாமல் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் காந்தி மார்க்ஸ்.

ஹீரோ ஒரு மொக்க ப்ளேடு. டிவி சீரியல்களுக்கும், கவர்ச்சி நடிகைகளை மோந்து பார்ப்பதற்கும் பொருத்தமான முகம். நல்ல வசனங்களை கூட சுரத்தே இல்லாமல் பேசி சாகடிக்கிறார். படத்திலும் ஹீரோவினுடைய கதாபாத்திரம் அவ்வாறே சித்தரிக்கப்பட்டுள்ளது, இரண்டாம் பாதி ட்விஸ்டை தவிர்த்து பார்த்தால். கூடல் முடிந்த தருணத்தில் படுக்கையில் கட்டிப்பிடித்தபடி ஹீரோயின் ஃபீல் பண்ணி ஒரு ரொமாண்டிக் கவிதை சொல்கிறார். அதற்கு நம்மவர், “ஙே... புரியலையே...” என்கிறார். இதெல்லாம் எதுக்கு ஹனிமூன் போகுதோ...!

ஹீரோயின் நிஷா லால்வாணி அரைக்கிழவி. அண்ணி கேரக்டரில் நடித்தால் கூட சைட்டடிக்க தோன்றாது. சொற்ப காட்சிகளில் அழகாக தெரிகிறார். இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் வரும் ரொமாண்டிக் காட்சிகள் ஓகே. ஆனால் முதல் பாதிக்காக நிறையவே உழைத்திருக்கிறார் நிஷா. காடு, மலை பகுதிகளில் உருண்டு புரளுகிறார், மரம் ஏறுகிறார், நீச்சல் அடிக்கிறார். அவற்றில் பாதி கிராபிக்ஸ், டூப்பாக இருந்தாலும் கூட மற்ற ஷோகேஸ் பொம்மை நடிகைகளைவிட நிஷாவிற்கு ஒரு மதிப்பெண் அதிகமாக கொடுக்கலாம், அழகில் அல்ல.

ஹீரோ, ஹீரோயினை தவிர நான்கு வில்லன்கள் இருக்கிறார்கள், அவ்வளவுதான் படத்தின் மொத்த ஜனத்தொகை. (ஓரிரு காட்சிகளில் தோன்றுபவர்களை சேர்க்கவில்லை). Dude, Yo, Wazzup man போன்ற அதிநவீன சொற்களை பயன்படுத்தினால் அவர் பணக்கார வீட்டு பையனாமாம்...! நால்வருமே மிகையான நடிப்பை வெளிப்படுத்தி வெறியேற்றுகிறார்கள். 

கதைக்கு சம்பந்தமே இல்லாமல் இரண்டு ஐட்டம் சாங்குகள் வருகின்றன. அவற்றிற்கு ஆட்டம் போடும் அம்மணிகள் அனைத்தும் தினத்தந்தி அழகிகள் ரகம்...!

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் வரும் காதல் ரசம் சொட்டும் காட்சிகளும் வசனங்களும் ரசிக்க வைக்கின்றன. நிறைய காட்சிகளில் இயக்குனரின் ரசிப்புத்தன்மை வெளிப்படுகிறது ஒரு காட்சியில் ஹீரோயின் ஒளியூடுருவும் குளியறையில் குளிக்க, ஹீரோ அதனை வெளியில் அமர்ந்து தம்மடித்துக்கொண்டே ரசிக்கிறார். என்ன, ஹீரோயின் துண்டு கட்டிக்கொண்டு குளிப்பதில் தான் தர்க்க ரீதியான தவறு இருக்கிறது. 

என்னவோ இருக்கு, ஏதோ பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்று கிட்டத்தட்ட கடைசி வரைக்குமே சஸ்பென்ஸ் வைத்திருப்பது சபாஷ்...! அந்த பில்டப்புகளுக்கு தகுந்தபடி அழுத்தமான காட்சிகள் இல்லாததற்கு இயக்குனர் மட்டுமில்லாமல் நம்முடைய சென்சார் விதிமுறைகளும் கூட காரணமாக இருக்கலாம்.

பிற்பாதியில் ஒரு பாழடைந்த அறையில் பாடாவதி நாற்காலியில் கதாநாயகி உட்கார வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார். தேகம் நாவலின் அட்டைப்படத்தை நினைவூட்டும் காட்சி. அதன்பிறகு வரும் சில காட்சிகளில் கூட சாரு ஞாபகம் வருகிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய அதிகபட்ச சாடிஸ திரைப்படமெனச் சொல்லலாம்.

தமிழ் சைக்கோ படங்கள் பெரும்பாலானவற்றில் வரும் இறந்தவர்களை இருப்பதாக நினைப்பது இங்கேயும் தொடருகிறது. வானத்திலிருந்து ஒரு டியூப் லைட் வெளிச்சம் காட்டி ஆத்மான்னு சொன்னா நம்புறதுக்கு பாக்குறவங்க ஒன்னும் டியூப் லைட்ஸ் கிடையாது.

சாமியார் கேரக்டரை கிண்டலடிப்பது மாதிரி இரண்டு வசனங்கள் வைத்துவிட்டு அப்புறம் அவரையே ஆபத்பாந்தவர், அப்பாட்டாக்கர் மாதிரி காட்டுவது என்ன எழவென்று புரியவில்லை. நிறைவே இல்லாமல் தொபுக்கடீர்’ன்னு படத்தை முடித்துவிடுகிறார்கள். அதுவும் படுமொக்கையான க்ளைமாக்ஸ்.

தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் குப்பைகளுக்கு மத்தியில் வித்தியாசமான குப்பை ஒன்றை கொட்டியிருப்பதற்க்காக மட்டும் இயக்குனரை பாராட்டலாம்...! மற்றபடி “எனக்கு பிடிச்சிருக்கு ஆனா படம் நல்லாயில்லை” வகையறாவில் இதையும் சேர்க்கலாம். ஆரோகணம், 18 வயசு வருகிற வரைக்கும் பொல்லாங்கு தந்த பாதிப்பு போதும் என்று நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 July 2012

பில்லா 2


அன்புள்ள வலைப்பூவிற்கு,

மாஸ் ஹீரோக்களின் படங்களைப் பொறுத்தவரையில் அடுத்தடுத்த படங்களில் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே தான் போகிறது, தொடர் தோல்விகள் கொடுத்தாலும் கூட. பில்லாவின் முன்பதிவுகளே அதன் சாட்சி. Ticket New தளமே இரண்டு நாட்கள் தொங்கிவிட்டது. இதோ மூன்றே நாட்களில் பணம் போட்டவர்கள் லாபம் பார்த்துவிடுவார்கள், ஆனால் ரசிகர்கள் தேவையை பூர்த்தி செய்திருக்கிறதா பில்லா...?

Scarface கதையில் கொஞ்சம் நாயகன் பிராண்ட் மசாலாவை தூவி ஒரு சர்வதேச டானின் பயோக்ராபியாக கொடுத்திருக்கிறார்கள்.

அஜீத் எப்பவும் போல ஸ்மார்ட் அண்ட் ஸ்டைலிஷ். தனுஷுக்கு சைக்கோ படங்கள் போல அஜித்துக்கு டான் படங்கள் என்ற வட்டத்திற்குள் மாட்டிக்கொள்வார் போல. சூட், கூலிங் க்ளாஸ், அளவெடுத்து வைத்த பேச்சு, ஸ்லோ மோஷன் நடை என அத்தனையும் அதே அதே. “தல” புராணம் பாடும் தொண்டர்களும், கார் / பைக் சேசிங் காட்சியும் இல்லாதது தலவலி நிவாரணம்.

பார்வதி ஓமனக்குட்டன் ஸ்டார் வேல்யூவிற்கான சேர்க்கை. என்ன ஒரு கூர்மை...! நான் அவங்க மூக்கை சொன்னேன். பா.ஓ’க்கு மொத்தமே நான்கைந்து காட்சிகள்தான். ஆனால் திடீர் திடீரென்று வந்து ஹீரோவிடம் ஐ லவ் யூ சொல்லிவிட்டு பார்வையாளர்களுக்கு ஹீரோவின் பொடனியை மட்டும் காட்டியபடி கிஸ்ஸடித்துவிட்டு டூயட் பாடும் லூசுப்பெண்ணாக காட்டாதது மிகப்பெரிய ஆறுதல். 

ப்ரூனா அப்துல்லா - டான் படங்களில் வழக்கமாக ஒரு ரிவால்வர் ரீட்டா கேரக்டர் வருமே, அதேதான். பார்வதியுடன் ஒப்பிடும்போது அதிகம் கவர்கிறார். அவ்வப்போது பிகினியில் தோன்றி கிறங்கடிக்கிறார். பார்வதி, ப்ரூனா இணைக்கு முன் நயன்தாராவும் நமீதாவும் அறுபது ரூபாய் சரக்காக தெரிவது ஆச்சர்யமில்லை.

சுபான்ஷு, வித்யுத் போன்ற வட இந்திய வில்லன்கள் படத்திற்கு சர்வதேச பாலிஷ் போட்டிருக்கிறார்கள். பின்னவரை துப்பாக்கியிலும் பார்க்கக்கடவது. ரஹ்மான், ரஞ்சித் போன்றவர்கள் முதல் பாகத்தில் நடித்தமைக்காக கடனே என்று சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் ரஞ்சித்துக்கு பிரதான பாத்திரம் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். இளவரசு, ஹீரோயினின் அம்மா தவிர்த்து தமிழ் நடிகர்கள் சொற்பமே.

பாடல்கள் மூன்று பப் ரகம். மதுரை பொண்ணு பாடலில் ஆடும் அத்தனை அழகிகளும் அல்வாத்துண்டுஸ். மீனாட்சி டிக்ஸிட் ஊறுகாயாக தோன்றி தொட்டுக்கொள்ளவா... என்னை தொட்டுக்கொள்ள வா... என்று அழைக்கிறார். இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் வரும் காமிக்ஸ் ஸ்டைல் பாடல் புதுமை. படத்தின் போக்கு கருதி வெளிநாட்டு தெருக்களில் நடனமாடும் டூயட் பாடல்களை தவிர்த்திருப்பது நலம். எண்ட் கார்ட் பாடலில் யுவன் தோன்றுகிறார்.

அஜீத் பேசும் வசனங்கள் ஆங்காங்கே ஷார்ப். “தீவிரவாதி வெற்றி கண்டால் போராளி” என்ற கருத்தை வலியுறுத்தும் வசனத்தில் என்னையே அறியாமல் என் கரங்கள் தட்டிக்கொண்டன. 

படத்தின் பட்ஜெட்டில் பாதியை தக்காளி ஜூஸுக்காகவே செலவு செய்திருப்பார்கள் போல. படம் பார்ப்பவர்கள் ஒரு கணம் ஜெர்க் ஆகும்படி கன்னாபின்னாவென்று ‘சதக் சதக்’ செய்கிறார்கள். 

அண்ணாச்சி – அப்பாசி – டிமிட்ரி என்று கதை பயணிக்கும் விதம் அருமை. நாயகன், புதுப்பேட்டை போல அற்புதமாக சொல்லக்கூடிய வாய்ப்பு இருந்தும்கூட அவற்றை முழுமையாக பயன்படுத்த தவரியிருக்கிறார் சக்ரி. விக்கியில் படித்தவரைக்கும் பில்லா Scarface உருவல் என்பது “தல”குனிவு.

படத்தில் அஜித்தை ஏன் இலங்கை அகதியாக காட்டவேண்டும்...? அஜீத் ஏன் இலங்கைத்தமிழ் பேசவில்லை....? நல்லவேளையாக அஜீத் ஈழபாஷை பேசவில்லை. (அட்டகாசம் தூத்துக்குடி பாசை நினைவிருக்கிறதா...? தமிழ் தப்பித்தது...!) அந்த மனிதர்களை தமிழ் சினிமா இயக்குனர்கள் இதற்கு மேலும் சித்திரவதை செய்யாமல் இருக்கலாம். 

கடைசியில் இதுதான் நடக்கும் என்று முன்பே தெரிந்துவிடுவதால் படத்தினூடே சுவாரஸ்யம் குறைந்துக்கொண்டே போகிறது. நீளம் குறைத்திருப்பது சலிப்பை தவிர்க்கிறது. படத்தின் இறுதியில் காட்டப்படும் சர்வதேச டான் பில்லாவை முதல் பாக பில்லாவோடு பொருத்த முடியவில்லை.

மொத்தத்தில் கண்களுக்கு கவர்ச்சியாக, அதிக பொருட்செலவு செய்து ஹாலிவுட் ஸ்டைலில் (பழைய டயலாக்தான்... பொறுத்துக்கோங்க, இப்ப முடிஞ்சிடும்...!) படம் காட்டியதற்காக பில்லாவை பாராட்டலாம்.

பில்லா – டாஸ்மாக்கில் ஒரு ஹாப்சன்ஸ்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 July 2012

பிரபா ஒயின்ஷாப் – 09072012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

வெள்ளிக்கிழமை இரவு, ஒருவேளை கொஞ்சம் குஜாலாக இருக்குமோ என்று நம்பி ஒரு நடிகையின் வாக்குமூலம் பார்க்க ஆரம்பித்தேன். ஸ்கூல் பசங்க மேடை நாடகத்தில் நடிப்பது போல அப்படியொரு செயற்கைத்தனம் அத்தனை பேர் நடிப்பிலும். ஜோதிலட்சுமி, மனோபாலா போன்றவர்கள் விதிவிலக்கு. “ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்கு தான் தெரியும்”, “என்னய்யா கையில வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்யுக்கு அலையுற” என்று ரொம்ப ஃப்ரெஷ்ஷான டயலாக்ஸ். மெகா சீரியல் பார்க்கும் உணர்வு. பாதி படத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. அட்லீஸ்ட் சோனியா அகர்வாலுடைய அம்மா கேரக்டரிலாவது வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம்.

ஸ்பென்சர் பிளாசா எளியோர்களின் ஷாப்பிங் மாலாகவும், EAவில் பார்க்கிங் பணம் கட்டி மாளாதவர்களுக்கு பார்க்கிங் கூடாரமாகவும் மாறியிருப்பது அறிந்ததே. இருப்பினும் லேண்ட்மார்க், மியூசிக் வேர்ல்டு போன்ற கடைகளில் பழைய கம்பீரத்தை காண முடியும். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றிருந்தபோது, மால் பெரும்பான்மைக்கு ஏசி வேலை செய்யவில்லை. லேண்ட்மார்க் கடையில் நிறைய புத்தகங்களுக்கு 70 சதம் தள்ளுபடி இருந்தாலும் புழுக்கம் தாளாமல் வெளியே அலறியடித்து வந்தபடி இருந்தனர் மக்கள். இதைக்கண்டு மனம் வருந்திய லேண்ட்மார்க் மேனேஜர் வாடிக்கையாளர்கள் தாகம் தணிக்க இலவச பெப்சி கொடுத்து மகிழ்விக்கிறார். ஃபுட் கோர்ட் பகுதியில் நிறைய கடைகள் மூடப்பட்டு விட்டன. எஞ்சியிருக்கும் கே.எப்.சி போன்ற கடைகளில் கூட முன்பிருந்த வாடிக்கையாளர் சேவை கிடைப்பதில்லை. நடக்கும் சம்பவங்களை கோர்த்துப் பார்க்கும்போதே விரைவில் ஸ்பென்சர் ப்ளாசாவும் எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்கு இணையாக புதுப்பிக்கப்படும் என்றே தோன்றுகிறது.

சிவாஜி நடித்த சிறந்த பத்து படங்களில் நிச்சயமாக தேவர் மகனும் இருக்கும். ஆனால் அந்த ரோலில் எஸ்.எஸ்.ஆர் தான் நடிப்பதாக இருந்தது. சிவாஜிக்கு அந்த நேரத்தில் உடல்நிலை சரியில்லை. ஆனால் சிவாஜிகிட்ட போய் கமல் கதையைச் சொன்னதும் உடல்நிலையை பற்றி கவலைப்படாமல் நானே நடிக்கிறேன்னு கிளம்பிட்டார் சிவாஜி. அது மட்டுமல்ல, ரேவதி ரோலில் நடிப்பதற்கு மீனாதான் தேர்வானார். ஷூட்டிங் தொடங்க தாமதமாகி, அதற்குள் மீனாவிற்கு ஆந்திர படவாய்ப்புகள் குவிய, மீனா எஸ்கேப். இல்லையென்றால் மீனாதான் இஞ்சியிடுப்பழகி...! நன்றி: சினிமா விகடன்

ட்வீட் எடு கொண்டாடு:
திருமணத்திற்க்கு அறிவு,அழகு,பணிவு,சம்பாதிக்கும்,குடும்ப பாங்கான பெண் வேண்டுமாம்# ஹைலி ஹைபோதெடிகல் ரிக்வையர்மெண்ட்!

கொய்யால! விம்பிள்டன்னை விஜய் டிவில தான் டெலிகாஸ்ட் பண்ணனும்! எல்லாரும் ஒரே அழுகாச்சி!

பிக் பேங் தியரியை நாம் பிராக்டிகலாகக் காணும் நாள் வெகுதொலைவில் இல்லை! # கலா மாஸ்டர் - குசுபு – நமீதா

ரேசனில் சீனி பார்த்து வர சொன்னாள் அம்மா; அவளுக்கு எங்கே தெரிய போகிறது 70 kg சீனி மூடை எதிர் வீட்டில் இருப்பது தேன்மொழி என்ற பெயரில்.

Jus spoke to power star! Nxt week shankar's -i shooing with vikram. Way to go power star!

மதராசப்பட்டினம்
நாட்டுக்கதையாக “லஸ்” வந்த விதம் இவ்வாறு கூறப்படுகிறது :- “கடலில் புயலால் அவதியுற்ற மாலுமிகள் சிலர் தமது தெய்வத்தை வேண்டிக்கொண்டபோது, அவர்களுக்கு ஆகாயத்தில் ஒரு ஒளி தெரிந்து அது இவ்விடத்திற்கு கடல் வழி காட்டி இட்டுச் சென்றதென்றும், அவ்வாறு அவர்கள் உயிர் தப்பிக்கரை சேர்ந்த இடம் லஸ் என்றும், அங்கு அந்த ஒளி மிகப்பிரகாசமாக தெரிந்து மறைந்ததென்றும், அந்த மறைந்த இடத்தில் அவர்கள் ஒரு மாதா கோவிலெழுப்பி, அதற்கு “எங்கள் புனித ஒளி மாதா கோவில்” என்று பெயரிட்டதாகவும் தெரிகிறது. (லத்தீன் மொழியில் லஸ் என்றால் ஒளி என்று பொருள்)

இரண்டு நாட்களுக்கு முன், நண்பர் வீட்டுக்கு அவசர அவசரமாக சென்றுக்கொண்டிருக்கும்போது தெருவோரத்தில் ஒரு டெம்போவில் இருந்து சினிமா பாடல் ஒலித்தது. அதன்முன்பு ஒரு யுவனும் யுவதியும் டான்ஸிக்கொண்டிருந்தார்கள். நேரமின்மை காரணமாக சட்டென கடந்து சென்றாலும் பாடல் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டது. யூடியூபில் சல்லடை போட்டு தேடியெடுத்து போட்டிருக்கிறேன். எதிர்க்கட்சி தலைவரு என்னமா ஆடுறாரு பாருங்க...! பாடல் முடிந்தபிறகு கிளுகிளுப்பான விஜயகாந்த் தொப்புள் காட்சியை தவறவிட வேண்டாம்.

சென்ற வாரம் பார்த்த தர்மம் போலவே விரக்தியான இளைஞர் ஒருவரின் படைப்பு. ஆனால் எல்லோருமே அப்படியல்ல, ஒருசில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கிறது No Comments...!

மேலே இருக்கும் வீடியோ - காலையில் கக்கா வராமல் அவதிப்படுவோருக்கு அருமருந்து...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 July 2012

பிரபா ஒயின்ஷாப் – 02072012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பல தடைகளை தாண்டி தடையறத் தாக்க படம் பார்த்தேன். ரிலீசாகி முழுசாக முப்பது நாட்கள் ஆகியிருந்தாலும் கடைசி நிமிடம் வரைக்குமே செம த்ரில். தேவையில்லாத காட்சியென்று ஒன்று கூட இல்லை. இரண்டு பாடல்களையும் கத்தரித்திருந்தால் செம நீட். மம்தா – கேன்சரை கேன்சல் பண்ணிப்புட்டு வந்திருக்கும் நம்பிக்கை நாயகி. அருண் விஜய்யிடம் “பிச்சிபுடுவேன்...” என்று செல்லமாக மிரட்டும் காட்சிகள் க்யூட். ஒரு பாடல் காட்சியில் ஆர்ப்பாட்டமே இல்லாமல் மானாவாரியாக காட்டியிருக்கிறார். முக்கியமாக மம்தாவுக்கு டப்பிங் கொடுத்தவருடைய வாய்ஸ் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டுகிறது. திரையரங்கில் பார்க்காமல் விட்டதற்காக கர்த்தரிடம் பாவமன்னிப்பு கேட்டுவிட வேண்டும்.

உலகப்படங்களை உருவியெடுத்து தமிழ் பூசும் வேலையை நம்மவர்கள் நாசூக்காக செய்துக்கொண்டிருக்கும் வேளையில் “ALONE” என்ற தாய்லாந்து திரைப்படத்தின் இந்திய ரீமேக் உரிமையை அதிகாரப்பூர்வமாக பணம் கொடுத்து வாங்கியிருக்கிறது க்ளோபல் ஒன் ஸ்டுடியோஸ். OATS சாப்பிடக்கூடிய சாத்தியம் இருந்தாலும் நேர்மையாக செயல்பட்டிருக்கும் அந்நிறுவனத்தை பாராட்டலாம். தமிழ், தெலுகு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகிக்கொண்டிருக்கும் தாய்மொழி ரீமேக்கில் ப்ரியா மணி ஓட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளாக நடித்திருக்கிறார்.

“நான் அப்பவே சொன்னேன்ல...!” என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியாத விஷயம். அரசு கஜானாவில் இழப்பீட்டு தொகை கொடுக்க பணம் இல்லாததால் திருவொற்றியூர் சாலை விரிவாக்கப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்காலிகம் என்றால் நான்கைந்து, பத்து, பதினைந்து வருடங்கள் கூட ஆகலாம். அதுவரைக்கும் இடித்தது இடித்தபடி, போட்டது போட்டபடி. செய் அல்லது செத்து மடி என்றே சொல்லத்தோன்றுகிறது.

சின்ன வயதிலிருந்தே ஹிந்தி கற்க வேண்டுமென்ற என்னுடைய பேராவலை பூர்த்தி செய்யும்பொருட்டு காமாஸ்த்திரி எனும் பி-கிரேடு காம காவியத்தை கண்டேன். சிலர் வித்தியாசமான கான்செப்ட் புடிக்கிறேன் என்று கஜுராஹோ, காம சூத்ரா, பூர்வ ஜென்மம் என்று ஜல்லியடிப்பது என்ன எழவென்று தெரியவில்லை. அதுவரைக்கும் கதையோடு படமெடுக்கிறேன் என்று மொக்கை போடாமல் படம் முழுவதுமே முகர்ந்து பார்க்கும் காட்சி வைத்து நகர்ந்து இருக்கிறார்கள். அதையாவது காட்டினார்களே என்று வருத்தப்படுவதை தவிர வேறு வழியில்லை. ம்ம்ம் முன்னமாதிரி இல்லை,  இப்ப வர்ற பிட்டுப்படங்களில் மெசேஜ் சொல்வதே கிடையாது. உபரித்தகவல்: பல்லாவரம் லட்ச்சுமி திரையரங்கம் தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.

ட்வீட் எடு கொண்டாடு:
இப்போதும் ஜன்னலோர சீட்டுக்கு ஏங்கும் எண்ணத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் என் மிஞ்சிய குழந்தைத்தனம்.

கமிட்டானவங்க சிங்கிளா இருக்கிற மாதிரியும் ,சிங்கிளா இருக்கிறவங்க கமிட்டானவங்க மாதிரியும் காட்டிக்கிறதுல ஒரு கிக்கு தான்!

டீனேஜர்களும் மேனேஜர்களும் யார் பேச்சையும் கேட்பதில்லை

அஜித்த ஓட்றவன் விஜய் ரசிகனா இருப்பான் ..ஆனா விஜய ஓட்றவன் மன்சூர் அலி கான் ரசிகனா கூட இருப்பான் !!

பவர் ஸ்டார் பதறணும்...! சாம் ஆண்டர்சன் சிதறணும்...! என்று வெறியோடு களமிறங்கியிருக்கிறார் வில்பர் சற்குணராஜ்...! ஆம், தலைவர் சினிமாவில் நடிக்கப்போகிறார். சிம்பிள் சூப்பர் ஸ்டார் (ம்க்கும்) என்று பெயரிடப்பட்டுள்ள அன்னாரின் திரைப்படத்திற்கு போஸ்டர் வடிவமைக்கும் போட்டி கோலாகலமாக நடந்துக்கொண்டிருக்கிறது. போட்டோ ஷாப் பாய்ஸ், உங்க திறமையை கொஞ்சம் காட்டுங்க...! போட்டி விவரங்கள்

மதராசப்பட்டினம்
சாந்தோமில் கம்பீரமாக நிற்கும் கதீட்ரல் 1896ல் கட்டப்பட்டது. 12ம் நூற்றாண்டில் இங்கு நேமிநாதர் சமணக்கோவில் இருந்ததாக நம்பப்படுகிறது. அப்போது கடல் அரிப்பு இருந்த காரணத்தால், மூலவர் அகற்றப்பட்டு தென் ஆற்காடு – மேல் சித்தாமூருக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. போர்ச்சுகீசியர்கள் அப்போது வெற்றுக்கட்டிடமாக இருந்த கோவிலின் பகுதிகளை தங்கள் கோட்டையாக மாற்றிக்கொண்டது மட்டுமின்றி அங்கிருந்த மற்றோர் ஹிந்து கோவிலையும் இடித்து அந்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டனர். போர்ச்சுகீசியர்களுக்கு மற்ற மதங்களின் துவேஷம் அதிகமாக இருந்தது. மதப்பரப்பை புனிதமான கடமையாக கருதினர். பல இடங்களில் அவர்கள் கட்டாயமாகப் பல இந்துக்களை மதமாற்றம் செய்வித்து வந்தனர்.

முனிவர்களின் கல்லறைகளின்மேல் கட்டப்பட்ட கிறிஸ்தவத் தொழுமிடங்கள் அரிதானவை. அவ்வகை தொழுமிடங்களில், கதீட்ரல் சிறந்த அமைப்பு கொண்டது. கதீட்ரலில் உள்ள வண்ணத்தால் ஆன ஜன்னல் கண்ணாடிக் கதவுகள், ஜெர்மனியின் மியூனிச் நகரில் செய்யப்பட்டவை. இங்கிருக்கும் மூன்றடி மாதா சிலை போர்ச்சுகலிலிருந்து 1543ல் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.
(நரசய்யா எழுதிய மதராசப்பட்டினம் புத்தகத்திலிருந்து...)

சட்டென பார்த்ததும் “இது யாருய்யா கோமாளி மாதிரி...?” என்று எண்ணத்தோன்றினாலும் கனடாவை சேர்ந்த ரிவ்யூ ராஜாவின் வீடியோக்கள் ரசிக்க வைக்கின்றன. ராஜாவின் சகுனி விமர்சனம் உங்கள் பார்வைக்காக...!

திருமண நிகழ்வுகளில் வீடியோ எடுக்கும் நண்பர்களுக்காக மேற்கண்ட பாடலை அர்பணிக்கிறேன்...! ங்கொய்யால சாவட்டும் :)

சிக்னல் பிச்சைக்காரர்களுக்கு நாகரிகமாக ஒரு செருப்படி கொடுத்திருக்கிறார் மடோன் அஷ்வின்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment