13 March 2013

வசந்த மாளிகை

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கர்ணன் படம் டிஜிட்டலில் வெளியாகி சரியாக ஓராண்டு பூர்த்தியாகவிருக்கிறது. இப்படியொரு தருணத்தில் வசந்த மாளிகையின் மறு வெளியீடு. கிட்டத்தட்ட அதே கொண்டாட்டம், அதே ஆரவாரம். சம்பவ இடம் மட்டும் சாந்தியிலிருந்து ஆல்பட்டிற்கு மாறியிருக்கிறது. ஏன் சாந்தியில் வெளியாகவில்லை ? சொந்த திரையரங்கிலேயே ஓட்டிக்கொண்டார்கள் என்று வரலாறு பழிக்கக்கூடும். சென்ற ஆண்டு வெளிவந்த டிஜிட்டல் கர்ணன் சாந்தியில் ஓடியது ஏழு வாரங்கள், சத்யம் திரையரங்கில் 152 நாட்கள்...! அதுதான் வரலாறு...!!


நான் திரையரங்கை சென்றடைந்தபோது சாலையெங்கும் பட்டாசுக் குப்பைகள் பரவிக்கிடந்து அங்கு ஏற்கனவே நடைபெற்ற உற்சவத்தை அறிவித்தன. விளம்பர பதாகைகள் ஆல்பட்டில் துவங்கி அருகிலிருந்த டாஸ்மாக்கையும் தாண்டி வியாபித்திருந்தன. வசந்த மாளிகை அவருடைய 159வது படம் என்ற புள்ளி விவரத்திற்கு ஒத்திசைந்து 159 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. ஒலிபெருக்கியில் அவருடைய படப்பாடல்கள் ஒலிக்க, ரசிகர்கள் உற்சாக மிகுதியுடன் நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கழுத்தில் ஏதோவொரு மூவர்ண துண்டுடன் தீப்பூசணி ஏந்திக்கொண்டிருக்கிறார். கர்ணன் பார்த்தபோது அவர்கள் குடித்திருப்பார்களோ என்று சந்தேகித்தேன். சர்வநிச்சயமாக அது மது போதையல்ல. அவர் மீது கொண்ட அன்பின் உணர்ச்சிக்குவியல். அவர்தான் சிவாஜி...!

ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு துருவங்களாக விளங்கிய நடிகர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கும். ஒருவர் திரைப்படங்களில் நல்லவராக மட்டுமே நடிப்பார், மற்றொருவர் கதைக்கு தகுந்தபடி நடிப்பார். ஒருவர் ஏழைப்பங்காளனாகவே பெரும்பான்மை படங்களில் நடிப்பார். மற்றொருவர் கோர்ட்டு சூட்டு போட்டும் நடிப்பார். முன்னவர் கோட்டு சூட்டு போட்டால் ஊரார் எள்ளி நகையாடுவர். பின்னவர் கோமணம் கட்டினால் கூட ரசிக்கப்படும். அதற்கேற்ப அவர்களுடைய ரசிகர்களும் வேறுபடுவார்கள். முன்னவருடைய ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக செயல்படக்கூடியவர்கள், பின்னவருடைய ரசிகர்கள் தர்க்கரீதியாக செயல்படுபவர்கள். ஆனால் அங்கே ஆல்பட் திரையரங்கில் அன்றைய தினத்தில் மட்டும் உணர்வுப்பூர்வமாக உருமாறியிருந்தார்கள் இதய வேந்தனின் ரசிகர்கள்.

ஒலிபெருக்கியில் மயக்கம் என்ன கசிந்திருக்கொண்டிருக்க, ஐம்பது அல்லது அறுபதைக் கடந்த பலரும் தன்னிலை மறந்து நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் தங்கள் அன்பிற்கினிய நாயகன் கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பதாக உணர்கிறார்கள். அப்போது அங்கே விவேக் நகைச்சுவை காட்சிகளில் நடிக்கும் சாத்தப்பன் வருகிறார், ஏற்கனவே கர்ணனுக்கு வந்திருந்தார். அந்த நேரம் பார்த்து என்னடி ராக்கம்மா என்று ஒலிபெருக்கி அலற, சாத்தப்பனை கூட்டத்தில் நடனமாட இழுத்துவிட்டனர். அவரும் தன் பங்குக்கு ரெண்டு சாத்து சாத்திவிட்டு போனார்.

மிகுந்த நெருக்கடிக்கிடையில் திரையரங்கிற்குள் நுழைய, உள்ளே சிம்மக்குரலோன். (அந்த வார்த்தையை பயன்படுத்தியமைக்கு சிவாஜி ரசிகர்கள் மன்னிக்க). காருக்குள் பிண்ணனி பாடகர் T.M.செளந்திரராஜன். அவர் காரை விட்டு இறங்கிய சமயம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சூழ்ந்து நின்று கைதட்டி வரவேற்றது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய ட்ரிபியூட்...! எழுத்துக்காக சொல்லவில்லை, எண்பதை கடந்த TMS, 50ரூபாய் டிக்கெட் வரிசையில் ரசிகர்களுடன் அமர்ந்து முழுப்படத்தையும் பார்த்தார்.

வசந்த மாளிகையை பொறுத்தவரையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். அந்த காலகட்டத்தில் மட்டுமல்ல, முக்காலத்திற்கும். இப்போதும் கூட வசந்த மாளிகையின் எந்த பாடலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் ரிமோட் கண்ட்ரோல் செயலிழந்துவிடுகிறது. தெய்வீகமான காதல் பாடல் என்று வரும்போது சூப்பர் ஸ்டாரே கூட மயக்கம் என்ன பாடலைத் தானே தெரிவு செய்தார். கோவில் திருவிழாக்களில் நடைபெறும் இசை கச்சேரிகளில் யாருக்காக பாடலை பாடியே தீரவேண்டுமென்ற எழுதப்படாத விதிமுறை இன்னமும் நடைமுறையில் உள்ளது. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் காலத்தால் அழியாத கொண்டாட்டப் பாடல். அந்தப்பாடலின் இறுதியில் நடிகர்திலகம், கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச்சக்கரம் சுத்துதடா...! அதில் நான் சக்கரவர்த்தியடா...!! என்று முடிக்கும்போது சிலிர்க்காத ரோமங்கள் உண்டா ?

டிஜிட்டல் ப்ரிண்ட், ஸ்டீரியோஸ்கோபிக் ரெஸ்டோரேஷன், லொட்டு, லொசுக்கெல்லாம் இருந்தாலென்ன, இல்லையென்றால் என்ன ? அவருடைய படங்களை பெருந்திரையில் பார்க்கக்கிடைப்பதே போதுமே !


இறுதியாக அறிந்துக்கொண்ட ஒரு தகவலோடு நிறைவு செய்கிறேன். வசந்தமாளிகை படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் திலகத்தின் தாயார் மறைந்துவிட்டார். இறுதிச் சடங்குகள் முடிந்து ஐந்தாம் நாள் வீட்டிலிருந்து நடிகர் திலகம், தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு, ‘வீட்டிலிருந்தால் அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வருகிறது, படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். மனம் அமைதியாகவாவது இருக்கும்' என்று கூறினார். அத்தனை சோகத்திலும் தயாரிப்பாளரின் நலன் கருதி, ஒத்துழைப்பை நல்கும் அவரின் உயர்ந்த குணத்தை எண்ணி வியந்த தயாரிப்பாளர், படப்பிடிப்பை ஊட்டியில் துவக்கினார். நடிகர்திலகம் அப்போது நடித்த காட்சி எது தெரியுமா ? ‘மயக்கமென்ன... இந்த மெளனமென்ன...’ பாடல் காட்சி. கவலையின் ரேகையே தெரியாத அளவு மிகவும் இயல்பான ஒரு காதலனைப் போல் அக்காட்சியில் நடித்திருப்பார். அதுதான் சிவாஜி...!

தொடர்புடைய சுட்டிகள்:
கர்ணன் – கொண்டாட்டத் துளிகள்
ஓ மானிட ஜாதியே!
வசந்த மாளிகை - ரசிகர்களின் கொண்டாட்டமும்... டிஜிட்டல் ஏமாற்றமும்.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 comments:

Philosophy Prabhakaran said...

வசந்தமாளிகை - சில தகவல்கள்:
முதன்முதலாக வண்ணத்தில் ஸ்லோ மோஷன் காட்சிகள் கொண்டது.

ஒரே ப்ரிண்டை வைத்து யாழ்ப்பாணம் வெலிங்டன் - லிடோ என இரு வெவ்வேறு திரையரங்குகளில் கால்மணிநேர இடைவெளிவிட்டு தினசரி 4 காட்சிகள் 17 வாரங்கள் வரை ஓடியது.

காட்டான் said...

இந்தப்படம் இந்தியாவை விட இலங்கையில் அதிக நாட்கள் ஓடியது என்று நினைக்கிறேன்,அதிலும் யாழ்பாணத்தில் அதிக நாட்கள்.!

Philosophy Prabhakaran said...

காட்டான், கொழும்பு கேபிட்டல் திரையரங்கில் 287 நாட்கள் ஓடியது அதிகபட்சம்... யாழ்ப்பாணம் வெலிங்டனில் 208, மதுரையில் 205...

வருண் said...

நல்ல விமர்சனம். :-)

உங்களுக்கு உள்ள மெச்சூரிட்டி கூட இந்த "ஓசை"னு ஒப்பாரி வைக்கிற "கிழ"த்துக்கு இல்லை!

சினிமாவை சினிமாவாப் பார்க்கணும்னு தெரியாதா அந்த முண்டத்துக்கு!

aavee said...

உங்க விமர்சனம் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது..

உலக சினிமா ரசிகன் said...

இந்த தலைமுறையினர் சிவாஜியை
எப்படி கொண்டாடுகிறார்கள்
என்பதை உங்கள் பதிவுதான் மிகச்சிறப்பாக சொல்லி இருக்கிறது.
நன்றி கூறி வாழ்த்துகிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தமிழ்நாட்டை விட இலங்கையில் இப்படத்திற்கு வரவேற்பு என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.விமர்சனம் படத்தை பார்க்கத் தூண்டுகிறது. இன்றைய தலைமுறையினரையும் இப்படம் கவர்ந்திருப்பது ஆச்சர்யம்தான்.
சிறப்பான விமர்சனம்.

பால கணேஷ் said...

என் மாணவப் பருவத்தில் பார்த்து ரசித்த படம். அப்போது சிவாஜியி்ன் பிறந்த தினத்தி்ல வெளியானதால் ஏகக் கொண்டாட்டம்! இப்போது இங்கே நடந்த மறு கொண்டாட்டத்தைப் பற்றிப் படித்ததும் மனசு இன்னும் இளமையாச்சு. திரையரங்கில் நிச்சயம் போய்ப் பார்த்துடணும்னு தோணிடுச்சு பிரபா!

பாலா said...

சிம்மக்குரலோன் என்பது சிவாஜி கணேசனையே குறிக்கும். டி‌எம்‌எஸ் வெண்கலகுரலோன் என்று அழைக்கப்பட்டார். இது என் அம்மா சொன்னது

Anonymous said...

//ஒத்திசைந்து//

ம்ம்....

Anonymous said...

மாம்சுக்காகவே சிவாஜி ரசிகனா மாறி இருக்கய்யா.

Ponmahes said...

நீ இந்த படத்துக்கு போனது உங்க மாமாவ தாஜா பண்ணவா இல்ல உண்மையிலேயே உனக்கு சிவாஜிய புடிக்குமா பிரபா

படத்துக்கு பாட்டு எழுதுன கவிஞர் கண்ணதாசனை பற்றி சில் வரிகள் எழுதியிருக்கலாம் ....


K.s.s.Rajh said...

காலத்தால் அழியாத காவியம்

Unknown said...

இனி அனைத்து படமும் ரீ - ரிலிஸ் செய்ய படும்

சென்னை பித்தன் said...

படம் நான் மதுரையில் பார்த்தேன்.அன்றும் ,இன்றும் என்றும் நான் சிவாஜி ரசிகன்!

Unknown said...

இந்த படம் வெளியிடும் போதெல்லாம் எங்க ஊர்ல மத்த தியேட்டர்ல கூட்டம் காத்தாடுமாமாம்....!

சென்னை பித்தன் said...

இரண்டு வாரங்களாகக் குமுதத்தில் இந்த மகா நடிகன் பற்றி சோ எழுதி வருகிறார்;படித்தீர்களா பிரபா!

Amudhavan said...

கொஞ்சம் குத்துப்பாடல்கள், கிளப் டான்ஸ் பாடல்கள் என்று வந்துகொண்டிருந்த சமயம்...'கவிஞரே ஒரு படத்தின் எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கிறமாதிரியான பாடல்கள் எழுதி ரொம்ப நாட்கள் ஆகுதே' என்று பெங்களூர் வந்திருந்த கண்ணதாசனை உட்லண்ட்ஸ் ஓட்டலில் வைத்துக்கேட்டனர்."இன்னும் ஒரு ரெண்டு மாசம் பொறுங்க.வசந்தமாளிகை படம் வருது. அதுல எல்லாப் பாடல்களும் நல்லா வந்திருக்கு. எனக்கு ரொம்ப நாட்களுக்குப் பின் மனதுக்குப் பிடித்தமாதிரி எழுதின படம் அது. 'இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்'அப்படின்னு ஒரு பாட்டு எழுதியிருக்கேன். அது என்னைப்பற்றிய பாடல்தான்" என்று அவர் சொல்லியது ஞாபகம் வருகிறது.

'பரிவை' சே.குமார் said...

ஆடுபவர்களிடம் சிவாஜியை நேரில் பார்த்த சந்தோசம்...

அருமையான பகிர்வு...

ஆதிரா said...

இந்த படம் எங்க அம்மாக்கு ரொம்ப புடிக்கும்..அவங்க அதை இன்றும் ரசித்து பார்பப்பதை பார்க்கையில் சிவாஜி எத்தனை ஒரு வரவேற்பை பெற்றிருப்பார் என்று புரிகிறது..

Philosophy Prabhakaran said...

தகவலுக்கு நன்றி பாலா...

Philosophy Prabhakaran said...

பொன் மகேஸ், மாமாவை தாஜா பண்ண இவ்வளவு மெனக்கெட வேண்டிய அவசியமில்லை...

Philosophy Prabhakaran said...

சென்னை பித்தன், குமுதம் - சோ இரண்டையுமே நான் படிப்பதில்லை...

Anonymous said...

""குமுதம் - சோ இரண்டையுமே நான் படிப்பதில்லை...""

Same blood....


Raviraja.