12 February 2014

வாசித்தவை – 2

அன்புள்ள வலைப்பூவிற்கு,


ஜாலியா தமிழ் இலக்கணம்
சென்ற புத்தகக்காட்சியிலேயே வாங்கியிருக்க வேண்டிய புத்தகம். இது அட்டையிலிருந்து அட்டை வரை ஒரே அமர்வில் படிக்கக்கூடிய புத்தகமில்லை. தினசரி கொஞ்சம் கொஞ்சமாக படித்து, கற்றுக்கொள்ள வேண்டிய புத்தகம். சொல்லப்போனால் தமிழில் எழுதுபவர்கள் ஒரு குறிப்புக்காக எப்போதும் மேஜையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம். வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள், ர-ற வேறுபாடு, ன-ண வேறுபாடு என எழுதும்போது திடீரென தோன்றி தொலைக்கும் சந்தேகங்களை உதாரணங்களோடு விளக்கியிருக்கிறார்கள்.

‘ஜாலியா’ என்பது தான் புத்தகத்தில் பிரதானம். தமிழ் என்றால் பிணக்கு என்பவர்களுக்கு பயன்படக்கூடும். மற்றவர்கள் ஜாலி பாகத்தை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பிரிவிலும் பிற்பகுதியில் செய்திக்கூறுகளை மட்டும் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். விஷயம் மட்டும் போதும் என்பவர்கள் அதை மட்டும் படித்து தெரிந்துக்கொள்ளலாம். கண்டிப்பாக வாங்கி பத்திரப்படுத்த வேண்டிய புத்தகம். அடுத்த பதிப்பின் அட்டையில் இலியானா அல்லது நயன்தாரா படத்தை போடலாம் என்பது எனது ஆலோசனை.

ஜாலியா தமிழ் இலக்கணம் – இலவசக் கொத்தனார் – கிழக்கு பதிப்பகம் – ரூ.75 – ஆன்லைனில் வாங்க

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள்
இது எனக்கான தேநீர் கோப்பை அல்ல. உண்மையில் இது நண்பருக்காக வாங்கிய புத்தகம். அவரிடம் கொடுப்பதற்கு முன்பு கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். முப்பத்தைந்து பக்கங்களை தாண்ட முடியவில்லை. அதன்பிறகு சீரின்றி சில பக்கங்களை வாசித்துப் பார்த்தேன்.

உலகின் பண்டை நாகரிகங்களின் கடவுள்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல். கிட்டத்தட்ட கடந்த பதிவில் பார்த்த குமரிக்கண்டமா...? சுமேரியமா...? புத்தகத்தை போன்றது. ஆனால் அந்த புத்தகம் தமிழர்களின் வரலாற்றை ஒட்டியே எழுதப்பட்டிருந்தமையால் உண்மை, பொய் என்ற நிலையைத் தாண்டி சுவாரஸ்யமாக இருந்தது. இது அப்படியில்லை. அபோஃபிஸ், எனுமா எலிஷ், கில்காமேஷ் காவியம், ரஸ்ஷம்ரா என நிறைய பிதற்றொலிகள். புத்தகத்தின் இறுதியில் ரோம், கிரீஸ், ஹிந்து கடவுள்களை ஒப்பிட்டு அவற்றிலுள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். வரலாறு குறித்து தெரிந்துக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம்.

இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள் – ஆர்.எஸ்.நாராயணன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – ரூ.145 – ஆன்லைனில் வாங்க

பாம்புத் தைலம்
பேயோன் என்பவர் யாரென்று எழுத்துலகில் நீண்டகாலமாக ஒரு குழப்பம் நிலவி வருவதாக அறிகிறேன். இருக்கட்டும். அது எனக்கு தேவையில்லாத விஷயம்.

நான் ஏற்கனவே பேயோனின் திசைகாட்டிப்பறவை படித்திருக்கிறேன். இன்னதென்று வகைப்படுத்த முடியாமல் ஆழ்மனது போகிற போக்கில் போகும் அவருடைய எழுத்தில் ஒரு கிக் இருக்கிறது. பாம்புத்தைலமும் அப்படித்தான் இருக்கிறது. பேயோன் ஒரு சட்டையர் வாத்தியார். பின்னியெடுத்திருக்கிறார். வரும் புத்தகக்காட்சியில் எனது நூல்கள் என நூற்றியெட்டு தலைப்புகளை பட்டியலிட்டிருக்கிறார். அத்தனையும் வி.வி.சி ரகம். ரஜினி என்னும் சினிமா நடிகர் என்று ஒரு கட்டுரை வாழைப்பழ ஊசி மாதிரியான பகடி.

பாம்புத் தைலம் – பேயோன் – ஆழி பப்ளிஷர்ஸ் – ரூ.100

ஆ..!
குரல் மருட்சி குறித்த கதை என்றதும் அபாரமான ஆர்வம் வந்து தொற்றிக்கொண்டது. என்னுடைய பிரச்சனை என்னவென்றால் என்னிடம் இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக செலவிட்டு ஒரு புத்தகத்தை ஒரே அமர்வில் படித்து முடிக்கும் அளவிற்கு நேரம் கிடையாது. கிடைக்கும் இடைவெளிகளில் பத்து, இருபது நிமிடங்கள் என கொஞ்சம் கொஞ்சமாகவே படிப்பேன். அப்படி படித்ததாலேயே ஆ’வின் சிலிர்ப்பை முழுமையாக அனுபவிக்க முடிந்தது. வாத்தியார் வேறு எங்கே எவ்வளவு ரகசியத்தை அவிழ்க்க வேண்டுமோ அவ்வளவை மட்டும் கச்சிதமாக அவிழ்க்கிறார். யாரு இந்த ஜெயலட்சுமி...? யாரு கோபாலன்...? என்று அடுத்த நாள் புத்தகத்தை தொடும் வரையில் உள அலைவு படுத்தியெடுத்துவிட்டது.

சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி அவருடைய கண்களுக்கு மட்டும் தெரியும் ஷாலுவைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பார். அதைக் கேட்கும் சிம்ஹா, என்ன பண்ணா பாஸ் இந்த வியாதி வரும்...? என்று கேட்பார். அதுபோல ஒரு கட்டத்தில் நமக்கும் குரல்கள் கேட்காதா...? ஜயலட்சுமியை பார்க்க முடியாதா...? என்று தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் ‘ஆ’ என்ற எழுத்தோடு முடித்திருக்கிறார். இந்த கதை தொடராக வெளிவந்தபோது வாசகர்கள் நிறைய பேருக்கு குரல் மருட்சி அனுபவம் கிடைத்திருக்கிறது.

ஆ..! – சுஜாதா – கிழக்கு பதிப்பகம் – ரூ.135 – ஆன்லைனில் வாங்க

கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் !
காமிக்ஸை எனக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளும்பொருட்டு கப்பல், கடல், தீவு, ஆதிவாசிகள் என என் விருப்பமான விஷயங்களைப் பற்றியதாக அமைந்திருந்த பயங்கரப் புயலை வாங்கினேன்.

கேப்டன் பிரின்ஸும் நண்பர்களும் ஒரு உல்லாசத்தீவிற்கு செல்கிறார்கள். அங்கு மற்றொரு நண்பன் செய்த வினையால் போலீஸ் துரத்துகிறது. எல்லோருமாக சேர்ந்து அருகிலிருக்கும் இன்னொரு தீவுக்கு செல்கிறார்கள். அங்கே காட்டுவாசிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் ஒரு குழுவால் ஆபத்து நேர்கிறது. கூடவே இயற்கை சீற்றமும், கடலில் வாழும் ஒரு ராட்சத மீனும். நெருக்கடியை பிரின்ஸும் நண்பர்களும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கதை.

எப்பொழுதும் புதிய புத்தகங்களை படிக்க துவங்குவதற்கு முன்பு ஒரு முறை வாசம் பிடிப்பேன். அது ஒரு ராஜ போதை. பயங்கரப் புயல் காமிக்ஸ் ஒசத்தியான தாளில் அச்சாகியிருக்கிறது. அப்படியொரு மணம்...! படக்கதை விறுவிறுவென ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே முடிந்தது தான் வருத்தமாகி போய்விட்டது.

கேப்டன் பிரின்சின் பயங்கரப் புயல் ! – லயன் முத்து காமிக்ஸ் – ரூ.60 – ஆன்லைனில் வாங்க


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஜாலியா தமிழ் இலக்கணம் ஆன்லைன் தகவலுக்கு நன்றி... (யானா + தாரா OLD...!)

Anonymous said...

ஜாலியா தமிழ் இலக்கணம் - தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் என நானும் பரிந்துரைக்கின்றேன். காரணம் நம்மவர்கள் எழுதும் போது காணப்பட்டும் அனாவசியமான எழுத்துப் பிழைகள், இலக்கண பிழைகள் என எக்கச்சக்க பிழைக்கள். நல்ல எழுத்தாளராக வருவதற்கு முதல் படியே எழுத வேண்டும் பிழையின்றி எழுத வேண்டும். அந்த வகையில் இந்த நூல் நிச்சயம் உதவும்.

Karthik Somalinga said...

//படக்கதை விறுவிறுவென ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே முடிந்தது தான் வருத்தமாகி போய்விட்டது.//
பொதுவாக ஃபிரெஞ்சு காமிக்ஸ் ஆல்பங்கள் அதிகபட்சம் 44 முதல் 64 பக்கங்கள் வரை மட்டுமே இருக்கும்! ஆனால், சில கதைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பாகங்களோடு நீண்டு செல்லும் (நீங்கள் வாங்கிய மற்றொரு காமிக்ஸான 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' - இரண்டு பாகங்களைக் கொண்டது!). சில வருடங்களுக்கு முன்பு, இரத்தப் படலம் என்ற 18 பாக மெகா க்ரைம் தொடர், 800 பக்கங்களில் (மட்டமான தாள்) வெளியானது!

//கப்பல், கடல், தீவு, ஆதிவாசிகள் என என் விருப்பமான விஷயங்களைப் பற்றியதாக அமைந்திருந்த//
கேப்டன் ப்ரின்ஸின் பெரும்பாலான கதைகள் இப்படி பட்டவையே!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு முறை மின்னல் வரிகள் கூட இந்த நூலை அறிமுகம் செய்தார்/. வலைப் பதிவில் எழுத்துப் பிழைகளுக்குக் காரணம் transliteration முறையை பயன்படுத்துவதே. எழுதி முடித்த பின் பிழை திருத்தம் செய்வதற்கு கொஞ்சம் நேரத்தை நிறையப் பேர் ஒதுக்குவதில்லை (நான் உட்பட) அதுவும் google input இல் சில எழுத்துக்களை சுற்றி வளைத்து பெற வேண்டி இருக்கிறது. NHM writter பரவாயில்லை
வாக்கிய அமைப்புகளில் செய்யும் பிழைகளை தவிர்க்க இது போன்ற நூல்கள் அவசியமே

சீனு said...

ஜாலியா தமிழ் இலக்கணம் சிறிய புத்தகம் நிறைய தகவல்கள்... ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் தரபட்டிருக்கும் சிறு குறிப்பு பார்த்ததும் நிம்மதி அடைந்தேன்.. ஒருவேளை அப்படி தரபடப்வில்லை எனில் நானே அதனை ஒரு ரப்நோட்டில் குறிப்பெடுக்க வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்...

வவ்வால் said...

பிரபா,

//தமிழில் எழுதுபவர்கள் ஒரு குறிப்புக்காக எப்போதும் மேஜையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம். //

பதிவர் எழுதிய நூல் என்ற அடிப்படையில் இந்த நூலை நான் விமர்சிக்க விரும்பியதில்லை, ஆனால் தமிழில் எழுதுபவர்களுக்கு அவசியமான ஒரு நூல் என நினைத்துக்கொள்வதால் குறுக்கிட வேண்டியதாப்போச்சு.

தோராயமாக கதை,கவிதை,கட்டுரை எழுதலாம்,ஆனால் இலக்கண நூல் எழுதினா எப்பூடி?

அவரோட பதிவுகளில் இந்த ஜாலியா தமிழ் இலக்கணம் எழுதிய காலத்திலயே அதில் வரும் பிழைகளை சுட்டிக்காட்டியவன்,அதனால் அவருக்கு கடுப்பாகி "பின்னூட்ட" தடை எல்லாம் செய்தார் அவ்வ்!

புத்தகத்தில் பிழைகளை நீக்கினாப்போல தெரியலை, தமிழை வளர்க்கணும் என்ற நல்லெண்ணம் போற்றத்தக்கது,ஆனால் பல ஆண்டுகளூக்கு முன்னரே எழுதிவிட்ட இலக்கணத்தை குத்து மதிப்பாக கொதறி வைப்பதை "தமிழ் வளர்ச்சி" என சொல்ல இயலாது.

# தமிழ் எழுத்திலக்கணத்தை யார் வேண்டுமானாலும் வளைத்து புதிய பொருளில் சரி என நிறுவ முடியும், அதுக்கும் தமிழில் இடம் இருக்கு,காரணம் தமிழின் சொல்வளம் அத்தகையது. வேறு பொருளில் உள்ள சொல்லை எடுத்து ,அதான் இதுன்னு காட்டலாம் :-))

மெட்ராஸ் பாஷையில பேசுற துன்றது, கீச்சிடுவேன்,இஸ்துக்கினு கூட இலக்கணப்படி சரினு காட்ட முடியும்.

துண்- துண்டு - துணுக்கு ,

கைத்தறி துண்டு, நகைச்சுவை துணுக்கு.

துண் என்றால் "சிறிய அளவு"- a piece

எனவே சின்ன பீஸ் பீசாக கடிச்சு சாப்பிடுவது தான் துண்றது!

ஹி...ஹி கொஞ்சம் மொழியறிவு இருந்தா போதும் "போலியா ஒரு இலக்கணம்" உருவாக்கிடலாம்!

மேலும் மேற்கண்ட புத்தகம் ,தினமணிக்கதிரில் பிழையின்றி தமிழ் எழுதுவோம்(கவிக்கோ.ஞானசெல்வன்) என வந்த தொடரை சுட்டு பெரும்பாலும் எழுதப்பட்ட்டுள்ளது . மேலும், பெரும்பாலும் இணையத்தில் உள்ளதையே பயன்ப்படுத்தி இருக்கிறார்கள்,தவறொன்றுமில்லை,ஆனால் ஒரு கிரடிட்டாவது கொடுத்தாங்களானு தெரியலை.

# இறந்த நாகரீங்களின் இறவாக்கதை படிச்சு பார்க்கலாம்னு தோன்றுது,ஆனால் தப்பா எழுதிட்டாங்கனு கடுப்பாகுமோனும் டவுட்டும் வருது அவ்வ்!

# //குரல் மருட்சி //

குரல் மருட்சி நல்ல தமிழாக்க முயற்சி, இதற்கு "அசரிரீ" என ஒற்றைச்சொல்லும் பயன்ப்படுத்தலாம், அகக் குரல்.அக மன ஓசை என பல வகையில் படைப்புகளில் பயன்ப்படுத்தி இருக்காங்க.

யாஸிர் அசனப்பா. said...

'ஜாலியா தமிழ் இலக்கணம்' புத்தக முகப்பில் மோனிகா படம் போட்டதால் தான் விலை 75 நீங்க சொன்னமாதிரி இலியானா, நயன்தாரா படம் போட்டால் 750 ஆக இருந்திருக்கும்.

Anonymous said...

Y no updates on படித்ததில் பிடித்தது boss

-Eswaran