10 December 2014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மொக்கையா படம் எடுங்க, வேணாம்ன்னு சொல்லல. ஆனால் புதுசா ஏதாவது மொக்கை படம் எடுங்க'ன்னு எழுதியதற்கு இவ்வளவு சீக்கிரம் எதிர்வினை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

அஜய் – ரென்யா காதலித்து மணம் செய்துகொள்கின்றனர். முதலிரவில் ரென்யா அகால மரணம் அடைகிறாள். மனதளவில் பாதிக்கப்பட்ட அஜய் இறந்துபோன ரென்யாவை (ரென்யாவின் ஆவியை) தொடர்புகொள்ள முயற்சிக்கிறான். அந்த முயற்சியில் ரெட் டோர் என்று சொல்லப்படும் ஒரு மர்மக்கதவை திறந்துவிடுகிறான். அதனால் ஏற்படும் சம்பவங்களை வழவழ கொழகொழவென்று சொல்லி படுத்தியிருக்கிறார்கள்.

பொதுவாக ஹாரர் படங்களில் அமானுஷ்யம் அல்லது அறிவியல் அல்லது இரண்டையும் இணைத்து கதை சொல்லியிருப்பார்கள். ர இதில் எந்த வகையிலும் சேராது. கொஞ்சம் ஆவி இத்யாதிகள், கொஞ்சம் சைக்காலஜி, கொஞ்சம் க்ரைம் த்ரில்லர், கொஞ்சம் மர்மம் எல்லாம் சேர்த்து குழப்பி அடித்திருக்கிறார்கள். ஹாரர் என்றில்லை, எல்லா மர்மக்கதைகளிலும் கதையின் முடிவில் அல்லது முடிவுக்கு முன்னால் முடிச்சுகளை அவிழ்த்துவிட வேண்டும். ர’வில் அப்படியில்லை. செங்கதவு என்கிறார்கள். அதனை திறந்தால் உலகமே அழியும் அபாயம் இருப்பதாக சொல்கிறார்கள். செங்கதவை வரலாற்றில் ஏற்கனவே இரண்டு முறை திறந்திருப்பதாக சொல்கிறார்கள். Red door cannot be closed என்றும் சொல்கிறார்கள். ஆனால் கடைசி வரை செங்கதவுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை சொல்லவே இல்லை. முடிக்கும்போது வழக்கம் போல அடுத்த பாகத்திற்கு லீடு, ஆமாம் அது ஒன்றுதான் கேடு.

ஒரு சிலர் தவிர, மற்றவர்களின் நடிப்பு படுசெயற்கை. ஹீரோ அஷ்ரப் எதற்கெடுத்தாலும் ரென்யாடா, ரென்யாமா என்று மொக்கை போடுகிறார். தேடிக் கண்டுபிடித்து ஒரு மொக்கை ஹீரோயினை போட்டிருக்கிறார்கள். நல்லவேளையாக அவர் சில நிமிடங்களில் இறந்துவிடுகிறார் என்றாலும் ஹீரோவின் நினைவுகள் வழியாக அடிக்கடி வந்து உயிரெடுக்கிறார்.

படத்தில் உருப்படியான ஒரே காட்சி - ஒரு மின்தடை ஏற்பட்ட இரவில், அஜய் வீட்டில் தனியாக இருக்கும்போது ஒரு உருவம் படியில் ஏறிச்செல்வதை காண்கிறான். டார்ச் லைட் அடித்து பார்க்கிறான். மெஸனைனில் அவனைப் போலவே ஒருவன் நிற்கிறான். அஜய் பதட்டத்துடன் படியேறி அந்த உருவம் நின்ற இடத்திற்கு செல்கிறான். வெறுமையாக இருக்கிறது. அந்த உருவம் நின்ற இடத்தில் நின்று கீழே பார்க்கிறான். இப்பொழுது கீழேயிருந்து அவனைப் போன்ற ஒருவன் அவன் முகத்தில் டார்ச் வெளிச்சம் பாய்ச்சுகிறான்.

முடிவில் ஃபில்மோகிராபி என்று இன்ஸிடியஸ் உட்பட மூன்று ஆங்கில படங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் ட்ரைலரை பார்த்த மாத்திரத்தில் இன்ஸிடியஸ் சாயல் என்று நிறைய பேர் சொன்னது நினைவுக்கு வந்தது. நான் இன்ஸிடியஸ் பார்த்ததில்லை. 

EXPERIMENTAL FANTASY THRILLER என்றார்கள். ஆனால் அதற்கான சோதனை எலிகள் பார்வையாளர்கள் தான் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். குழந்தைகள் ஏதோ புதிதாக முயற்சி செய்திருக்கிறார்கள் என்கிற ஒரு காரணத்திற்காக வேண்டுமானால் ர'வை ஒருமுறை பொறுத்துக்கொள்ளலாம். மற்றபடி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 comments:

விமல் ராஜ் said...

நானும் தான் இந்த படம் பார்த்தேன்... நீங்கள் சொல்லும் அளவுக்கு மொக்கை இல்லை... ஆனால் என்ன சொல்ல வருகிறோம் என்பதை மறந்து நம்மை குழப்பி விட்டார்கள்.... எனக்கும் நீங்கள் சொன்ன 'கரண்ட் கட் ' சீன் ரொம்ப பிடித்திருந்தது தான்...

'பரிவை' சே.குமார் said...

மொக்கைதானா... பயமுறுத்துறேன்னு கழுத்தறுக்குறானுங்களா?

Ponmahes said...

//லீடு, ஆமாம் அது ஒன்றுதான் கேடு.

//EXPERIMENTAL FANTASY THRILLER என்றார்கள். ஆனால் அதற்கான சோதனை எலிகள் பார்வையாளர்கள் தான் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். குழந்தைகள் ஏதோ புதிதாக முயற்சி செய்திருக்கிறார்கள் என்கிற ஒரு காரணத்திற்காக வேண்டுமானால் ர'வை ஒருமுறை பொறுத்துக்கொள்ளலாம். மற்றபடி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

அருமை..வாழ்த்துக்கள்..