16 January 2015

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

புதுவருட சபதம் போல ஒவ்வொரு முறையும் இனி இயக்குநர் ஷங்கர் படங்களை பார்க்கவே கூடாது என்று நினைக்கும் ஆள் நான். ஆனால் படம் வெளியாவதற்குள் எப்படியும் ஏதாவது ஒரு தனிமம் என்னை காமன் மேன் ஜோதியில் ஐக்கியமாக்கி விடும். படம் பிடிக்கிறதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். இம்முறை அத்தகைய பிரத்யேக தனிமங்கள் விக்ரமின் தோற்றம் மற்றும் நோய்க்கிருமி சமாச்சாரம்.

இந்த கால்பந்தில் எல்லாம் ‘கோல்’ அடித்தவுடன் எதிரணி ரசிகர்களை பார்த்து ‘சத்தம் போடாதே’ என்று சைகை காட்டுவார்களே, அதுபோல விக்ரம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வாயடைக்க வைத்திருக்கிறார். சில காட்சிகளில் சீனியரை நினைவூட்டுகிறார். உதாரணமாக, எமியிடம் உங்க ஸாரியை நான் ஏத்துக்கிட்டேன். நீங்க போகலாம் என்று சொல்லும்போது எனக்கு அன்பே சிவம் படத்தில் கமல் சந்தான பாரதியிடம் பேசும் காட்சி நினைவுக்கு வந்தது. விக்ரமுடைய அபார நடிப்பையும், உழைப்பையும் போலவே ஒப்பனைக்காரர்களும், ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் ஆட்களும், ஒளிப்பதிவாளரும் போற்றப்பட வேண்டியவர்கள். அத்தனையும் விக்ரமிற்கும் படத்திற்கும் பலம் கூட்டியிருக்கிறது.

உமி நீக்கிய தானியமாய் எமி. எமியின் அந்த உதடுகள்... அடடா எப்படி இத்தனை நாட்கள் கவனிக்காமல் போனேன் ? உயிரூட்டப்பட்ட ஆரஞ்சு சுளைகள். திரையில் எமி தோன்றிய காட்சிகளில் எல்லாம் நான் அந்த சுளைகளை மட்டும்தான் பார்த்தேன். நம்ப முடியவில்லை அல்லவா ? சரி, எமியின் கழுத்துக்கு கீழே காட்டாத காட்சிகளில் என்று படித்துக்கொள்ளுங்கள்.

விளம்பர உலகம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் படத்துக்கு அல்வா மாதிரி ஸ்பான்சர்கள் கிடைத்திருக்கிறார்கள். படச்செலவுக்கு பணமும் ஆச்சு, விளம்பரமும் கிடைத்த மாதிரி ஆச்சு. 

ஷங்கர் இம்முறை சமூக பிரச்சனைகளில் வாயை வைக்காதது என் போன்றவர்களுக்கு பெரிய ஆறுதல். குளிர்பான சர்ச்சை தொடர்பாக ஒரு காட்சி வந்ததும், போச்சுடா பொது மக்கள் ஆவேசமாக கருத்து சொல்லப்போகிறார்கள் என்று பயந்தே போனேன்.

என்னோடு நீ இருந்தால் என்ற பாடல் நெஞ்சே எழு’வையும் (மரியான்) அடியே’வையும் (கடல்) சேர்த்து பிசைந்தாற் போல இருக்கிறது. காலத்திற்கும் நிற்கக்கூடிய பாடல் அது. மற்ற பாடல்கள் பார்த்து ரசிக்கக் கூடியவை.

ஷங்கர் படங்கள் ஒரு மேஜிக் போன்றவை. பது மலர்ச்சியாக பார்க்கும்போது பரவசப்படுத்தும். சில வருடங்கள் கழித்து நினைவு கூர்ந்தால் இப்படியா தாழம்பூவை காதில் வாங்கி சொருகிக்கொண்டோம் என்று நமக்கே சங்கடமாக இருக்கும். ஐ’யிலும் அப்படி நிறைய. Influenza நோய்க்கிருமி தாக்கிய ஒருவர் பல சாகசங்கள் புரிகிறார். கதாநாயகியை தூக்கிக்கொண்டு குழாய் வழியாக மாடியிலிருந்து இறங்குகிறார், ஓடும் ரயிலின் மீது தாவி குதித்து சண்டை போடுகிறார். சண்டைக்காட்சிகளில் இயற்பியல் விதிகளை எல்லாம் சர்வசாதாரணமாக மீறுகிறார்கள். Well, இப்பொழுதெல்லாம் சினிமாக்களில் யாரும் தர்க்கம் பார்ப்பதில்லை, பார்த்தால் சக சினிமா ரசிகர்களே உதைக்க வருவார்கள்.

(கிட்டத்தட்ட) கதை என்னவென்று சில மாதங்களுக்கு முன்பே இணையத்தில் கசிந்துவிட்டது ஐ’க்கு ஒரு மிகப்பெரிய பலவீனமாக போய்விட்டது. ஒருவேளை அப்படி கசியவில்லை என்றாலும் கூட அடுத்தடுத்து வரப்போகும் காட்சிகளை யூகிப்பது பெரிய சிரமமில்லை. சுரேஷ் கோபி எமியிடம் ‘என்னை அங்கிள்’ன்னு கூப்பிடாதே’ என்று சொல்லும்போது அந்த எந்தபெத்த சஸ்பென்ஸ் உடைபட்டுவிடுகிறது. 

நீளம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் அலுப்பு தட்டவில்லை. வேண்டுமானால், பவர் ஸ்டார், சந்தானம் காட்சிகளை கொஞ்சம் கத்தரிக்கலாம். கிட்டத்தட்ட படம் முடிவுறும் தருவாயில் வரும் சந்தானத்தின் “நல்லா இருந்தேன். நாசமா போயிட்டேன்” காமெடியை எல்லாம் தவிர்த்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்தும்.

இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வாங்குவதற்காக டெல்லி வரை சென்றார்கள் என்று ஊடகங்களில் தெரிந்துக்கொண்டேன். நல்லவேளையாக கொடுக்கவில்லை. நியாயமாக ‘ஏ’ சான்றிதழ் பெற வேண்டிய படம். கவர்ச்சிக்காக அல்ல. வன்முறை என்று சொல்வதை விட, இத்தனை கோரமான காட்சிகளை எல்லாம் சிறார்கள் பார்த்தால் மனதளவில் பாதிக்கப்படக்கூடும். 

குறைகளை மீறி திரையில் தோன்றும் படத்தில் விரவிக்கிடக்கும் ஒரு செழிப்பான தோற்றம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. பொதுவாக வில்லன்கள் என்றால் அடித்து கை, காலை உடைப்பார்கள், சுடுவார்கள், கொல்வார்கள். அந்தமாதிரி இல்லாமல் நோய்க்கிருமியை செலுத்துவது, பதிலுக்கு கதாநாயகன் வில்லன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விகாரத்தோற்றத்தை ஏற்படுத்தும்படி செய்வது ஒரு அதிர்ச்சியான வசீகரத்தை ஏற்படுத்துகிறது. சில ஸைக்கோ படங்கள் எல்லாம் பார்த்தால் ஒருவித போதை ஏறும் இல்லையா, அதுபோல ஐ ஒரு விலக்கப்பட்ட பரவச உணர்வை ஏற்படுத்துகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 comments:

Ponmahes said...

பதிவு அருமை...

//உமி நீக்கிய தானியமாய் எமி.
//எமியின் அந்த உதடுகள்...
அடடா ....


பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்....தம்பி...

கும்மாச்சி said...

நல்ல விமர்சனம், படத்தை ஒரு தடவை பார்க்கலாம் போல.

N.H. Narasimma Prasad said...

'படம் பரவாயில்லை' என்று சொல்வதை விட, 'அதுக்கும் மேலே' என்று சொல்லலாம். என்ன ஒன்று, சுஜாதா இல்லாத ஷங்கர் படம் எப்படி இருக்கும் என்பதற்கு 'ஐ' படமே சாட்சி. அத்தனை 'வசன வறட்சி' படத்தில்...

Ravi said...

Boss eluthunga boss eluthunga ungal pathivai ethir nokki kondirukkum ayirathil oruvan