18 February 2015

சென்னைக்கு மிக அருகில்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ராஜீவ்காந்தி சாலை எழுதிய விநாயக முருகனின் இரண்டாவது நாவல். தயக்கத்துடன்தான் படிக்கத் துவங்கினேன். ஏனென்றால் என்னிடம் உள்ள ஒரு கெட்டபழக்கம், ஒரு புத்தகத்தை பாதி படித்துக்கொண்டிருக்கும்போது பிடிக்காமல் போனால் உடனே தூக்கி கடாசிவிட மாட்டேன். எப்பாடு பட்டாவது அந்த புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட முயற்சி செய்வேன். இது எங்கே போய் முடியும் என்றால் நான்கைந்து நாட்களில் முடித்துவிட வேண்டிய புத்தகம் ஒன்றிரண்டு மாதங்கள் வரை நீளும். தேவையில்லாத மன உளைச்சல்களை ஏற்படுத்தும். ஏற்கனவே ராஜீவ் காந்தி சாலை படிக்கும்போது இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டேன் என்பதால் ஏற்பட்ட தயக்கம்.

சென்னைக்கு மிக அருகில் அப்படியில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

சித்திரை என்கிற பெரியவர் தான் கதையின் ஹீரோ. சென்னைக்கு மிக அருகில் உள்ள மணிமங்கலம் என்கிற கிராமத்தைச் சுற்றி கதை நகர்கிறது. அக்கிராமத்தில் வசித்துவரும் நில உரிமையாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சித்திரை மட்டும் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க மனம் ஒப்பாமல் சிறிய அளவில் விவசாயம் செய்துவருகிறார். அப்படியொரு கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருபவரை இந்த சமூகம் எப்படியெல்லாம் நெருக்குகிறது என்பதுதான் பிரதான கதை.

இதனோடு நூல் பிடித்தாற்போல சில கிளைக்கதைகளும் வருகின்றன. எப்படியென்றால் மணிமங்கலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மருதம் பில்டர்ஸ், அதனுடைய விளம்பரப் படங்கள் ஒளிபரப்பாகும் கேலக்ஸி டிவி, அந்த விளம்பரங்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகை, அந்த சின்னத்திரை நடிகைக்கும் ஒரு சாமியாருக்கும் இடையே நடந்த சல்லாபம்... இப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட பல கிளைக்கதைகள். இதிலுள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், நித்தியானந்தா – ரஞ்சிதா விவகாரம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகள், பள்ளி பேருந்து விபத்தில் சிறுமி பலியான விவகாரம், ஆழ்துளை கிணற்றில் சிறுவர் / சிறுமியர் விழுந்து பலியாகும் விபத்துகள் உள்ளிட்ட பல உண்மைச் சம்பவங்களை புனைந்து எழுதியிருக்கிறார் விநாயக முருகன்.

முந்தைய நாவலில் காணப்பட்ட குறைகளை கவனமாக களைந்தெடுத்திருக்கிறார் விநாயக முருகன். கூடவே சுவாரஸ்யத்தை சேர்ப்பதற்காக எதை எந்த இடத்தில் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று குறிப்பறிந்து கச்சிதமாக சேர்த்திருக்கிறார். 

எனினும் விநாயக முருகனின் இரண்டு நாவல்களுடைய தொனி மட்டும் ஒன்றுதான் – காலம் கெட்டுப்போய்விட்டது. அதாவது வயதானதும் மனிதர்கள் சமகால மாற்றங்களை சலித்துக்கொள்வார்கள் இல்லையா ? இந்த காலத்து பசங்க பெரியவங்க பேச்சை கேக்குறதில்ல, அரைகுறை துணியை உடுத்திக்கிட்டு திரியுதுங்க, சினிமாவே கதின்னு கெடக்குறாங்க, டிவியில போடுற கண்ட கருமத்தையும் பாக்குறாங்க இப்படி நிறைய. கூடவே, நாங்கள்லாம் அந்த காலத்துல என்று தொடங்கக்கூடிய வியாக்கியானங்கள். இப்படி நாவல் முழுவதும் பழமைவாதம் விரவிக் கிடக்கிறது. இது சில இடங்களில் ஈர்ப்பும் ஏற்பும் உடையதாக இருந்தாலும் பல இடங்களில் எரிச்சலையே தருகிறது. இத்தனைக்கும் நானே ஒரு பழமைவாதி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்புறம், மக்களுக்கு எல்லாமே செய்திதான், இரண்டு நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கத் துவங்கிவிடுவார்கள் என்பது போன்ற வசைகள். இவற்றை படிக்கும்போது ‘உங்கொப்பன் செத்தப்ப எத்தன நாள் அழுத ?’ என்கிற ராஜனின் ட்வீட் ஒன்று நினைவுக்கு வருகிறது. தயவு செய்து அப்டேட் ஆகுங்கள் விநாயக முருகன்.

விநாயக முருகனின் எழுத்தில் ஆச்சரியமூட்டிய ஒரு விஷயம், இடையிடையே சில இடங்களில் கனவுகளைப் பற்றி எழுதியிருக்கிறார். தூக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி தான். இதற்கு முன்பு சுஜாதாவின் சில நாவல்களில் இதுபோன்ற கனவுகளை படித்திருக்கிறேன். அவற்றை படிக்கும்போது நிஜமாகவே கனவு காணும் ஓர் உணர்வு ஏற்படும். விநாயக முருகன் எழுதியிருக்கும் கனவுகள் வேறு வகையானது. குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தின் சூழ்நிலையை வாசகர்களுக்கு மறைமுகமாக உணர்த்தும் பொருட்டோ அல்லது உருவகப்படுத்தி சொல்லும் பொருட்டோ வரும் கனவுகள். மொத்தத்தில், படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன.

இறுதியாக, சென்னைக்கு மிக அருகில் போரடிக்காமல் படிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு நாவல். ஆனால், அதில் எழுத்தாளர் மிகவும் சீரியஸாக சொல்ல முயன்றிருக்கும் விஷயங்கள் மனதில் சிறிய பாதிப்பையாவது ஏற்படுத்தியிருக்கிறதா ? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய சொற்றொடரை ‘என்னளவில்’ என்ற முற்சேர்க்கையுடன் படித்துக்கொள்ளுங்கள். ஐ.டி.யில் பணிபுரியும் சிலர், ‘இன்னும் பத்து வருஷம் கழிச்சு நானெல்லாம் வெவசாயம் பார்க்கப் போயிடுவேன்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரி ஆசாமிகள் வேண்டுமானால் சென்னைக்கு மிக அருகில் நாவலை படித்துவிட்டு தங்கள் வாய்ச்சவடாலுக்கு ஒரு வாய் அவலாக சேர்த்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 comments:

Yarlpavanan said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

'பரிவை' சே.குமார் said...

புத்தகம் குறித்து மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கீங்க...

Athulay said...

அருமையான விமர்சனம்....