18 April 2016

இவன் வேற மாதிரி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

ராஜ் டிவியில் ‘லாரி டிரைவர் ராஜாகண்ணு’ படத்தை ஒளிபரப்பினால் கூட சேனல் மாற்றாமல் பார்க்கும் சிவாஜி ரசிகர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் சிவாஜி ஆதர்ஸம் என்பதற்காக பிரபு நடித்த படம், ராம் குமார் கெளரவத் தோற்றத்தில் நடித்த படம், துஷ்யந்த் நடித்த படம், மச்சி, சிங்கக்குட்டி, சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த படம் என்று ஒன்றையும் விடாமல் பார்க்கும் மனிதரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? நான் அப்படி ஒரு நபரை அடிக்கடி பார்ப்பது மட்டுமில்லாமல் அவருக்கு (மூத்த) மருமகனாகவும் இருக்கிறேன். அப்படிப்பட்ட பொறுப்பில் இருந்துகொண்டு நான் இதுவரையில் ஒரு விக்ரம் பிரபு படத்தைக் கூட திரையரங்கில் பார்த்ததில்லை என்றால் நம்ப முடிகிறதா ?

இன்னொரு விஷயம். ஒவ்வொரு முறை விக்ரம் பிரபு படம் வெளியாகும்போதும் நான் ஒரு ‘மூவி பப்ஸ்’ என்ற முறையில் ‘படம் எப்படி இருக்காம் மாப்ள ?’ என்பார் என் மாமா. அந்த சமயத்தில் நம்மை ஒரு ஜில்மோர் சிவாவாக (கறாரான விமர்சகர்) நினைத்துக்கொண்டு, ‘குப்பையாம் மாமா’ என்றோ, ‘அஞ்சுக்கு 0.75 தானாம் மாமா’ என்றெல்லாம் உண்மையை விளம்பி விடக்கூடாது. என் மாமனார் அந்த காலத்திலேயே ஞாயிறு தவறாமல் சன் டிவியில் மீண்டும் மீண்டும் சிரிப்பு பார்ப்பவர். இப்பொழுதும் கூட ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ பார்க்கிறார். இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஆரூர் மூனா பாணியில் (அதாவது ஒரு சி செண்டர் ரசிகனாக) ‘சுமாரா இருக்காம் மாமா’, ‘ஒருமுறை பார்க்கலாமாம்’ என்று சொல்லி வைப்பது உசிதம்.

தற்போது என் ஹார்ட் டிஸ்கில் இடப் பற்றாக்குறை. பேக் லாக்ஸை கிளியர் செய்யும் பொருட்டு எப்போதோ டவுன்லோட் செய்து வைத்த படங்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் விக்ரம் பிரபுவின் ஐந்து படங்களை (கும்கி தவிர்த்து) அடுத்தடுத்து பார்த்து முடித்திருக்கிறேன். முறையே, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை, இது என்ன மாயம்.

இவற்றில் முதல் மூன்று படங்கள் ஏறத்தாழ ஒரே பாணி. மூன்று படங்களும் உண்மைச் சம்பவங்களை வைத்து புனையப்பட்டுள்ளன. ஒன்றில் சட்டக்கல்லூரி கலவரங்கள். ஒன்றில் சுனந்தா கொலை வழக்கு, ஒன்றில் ஏ.டி.எம் கொள்ளைகள். மூன்றிலும் சாதாரண மனிதனாக இருக்கும் விக்ரம் பிரபு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். மூன்று படங்களிலும் ஹீரோயின் கடத்தப்படுகிறார். ஹீரோ மீட்கிறார். இந்த மூன்று படங்களின் தலைப்பையும் ஒன்றிற்கு மற்றொன்றுடையது என்று மாற்றி வைத்தால் கூட எந்த பாதகமும் ஆகிவிடாது. பிரதான பொருத்தம்: மூன்று படங்களும் ஆவரேஜ் / அபவ் ஆவரேஜ் கட்டத்திற்குள் பொருந்துவது. மூன்று படங்களையும் வித்தியாசப்படுத்தி நினைவில் வைத்துக்கொள்ள சுலபமான வழி ஹீரோயின்கள்.

இப்படி படங்கள் எல்லாம் ஒரே மாதிரி. ஆனால் தலைப்பு மட்டும் இவன் வேற மாதிரி. வழக்கமாக க்ளைமாக்ஸ் ஷூட் செய்யப்படும் பாதி கட்டிய பில்டிங்கில் படத்தின் பாதி கதை நகர்கிறது. ஒப்பீட்டளவில் சுவாரஸ்யமான படம்தான். ‘வாவ்’ ஃபேக்டர் என்று எதுவும் இல்லாததால் சராசரி படமாகிவிடுகிறது.

அரிமா நம்பி உற்சாகமாக பார்க்கத் துவங்கியதற்கு காரணம் ப்ரியா ஆனந்த். நம் விருப்பத்திற்கேற்ப ப்ரியா ஆனந்துக்கு ரகளையான துவக்கக்காட்சிகள். ஆனால் அதன்பிறகு கதை வேறொரு தளத்தில் பாக்கெட் நாவல் வேகத்தில் செல்கிறது. இப்பொழுதெல்லாம் சினிமாவில் லாஜிக் பார்க்கக்கூடாது என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதை அனுகூலமாக எடுத்துக்கொண்டு இஷ்டத்துக்கு எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர்.

சிகரம் தொடு. போலீஸ் ஸ்டோரி. நல்ல வேளையாக ஒரேயடியாக எம்பி குதிக்காமல் அடக்கியே வாசித்திருக்கிறார். இயக்குநர் கெளரவ்வே வில்லனாகவும் நடித்திருக்கிறார். (சமீபத்தில் வெளிவந்த ஆறாது சினம் படத்தின் வில்லன்). படத்தின் எடிட்டருக்கோ, இயக்குநருக்கோ மேட்ச் கட் என்றால் விருப்பம் போல. நாம் நவீன சினிமா யுகத்திற்கு வந்தாயிற்று என்று யாராவது இயக்குநரை தட்டி எழுப்பி சொல்ல வேண்டும்.

வெள்ளைக்கார துரை. இந்த படத்தை பார்த்தபிறகு தான் விக்ரம் பிரபுவின் மற்ற படங்கள் பரவாயில்லை என்ற முடிவுக்கு நான் வர நேர்ந்தது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அத்தனையும் அரை கிறுக்கு. என்னடா இது என்றே முழு படத்தையும் பார்த்து முடித்தேன். இறுதிக்காட்சியில் வெடிகுண்டு கொண்ட ஒரு அறையில் சூரி தனித்து விடப்படுகிறார். என்ன எழவாயிருக்கும் என்று நாம் யோசித்துக்கொண்டிருக்கும்போது கூரையை பிய்த்துக்கொண்டு ஒரு ராக்கெட் சூரியையும் சேர்த்துக்கொண்டு பறக்கிறது. அதைப் பார்த்த பிறகுதான் அடடா இத்தனை நேரம் நாம் பார்த்தது ஒரு டார்க் காமெடி படம் என்பதே புரிகிறது. நல்ல ட்விஸ்ட்.

இது என்ன மாயம். அருமையான படம், ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால். இதைப் பார்த்ததும் ஏனோ எனக்கு பிரசாந்த், முரளி, அப்பாஸ் எல்லாம் ஹீரோவாக நடித்த காலகட்டம் மலரும் நினைவுகளாக வந்து போனது. ஒரேயொரு ஆறுதல். கீர்த்தி சுரேஷ். ஹவ் க்யூட் !

படங்கள் காமோ சோமோ என்று இருந்தாலும் ஆறு படங்கள் வரை தம் கட்டிவிட்டார் மனிதர். கைவசம் வேறு இரண்டு படங்கள் உள்ளன. கூடிய விரைவில் விக்ரம் பிரபு படமொன்றை திரையரங்கில் பார்க்கும் ஆர்வம் எனக்கு வாய்க்க வேண்டும். பார்த்துவிட்டு வந்து ‘படம் பட்டைய கெளப்புது மாமா’ என்று சொல்ல வேண்டும் என்றுதான் ஆவலாக காத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 comments:

சீனு said...

அதற்காகவாவது ஒரு படம் வந்து நீங்கள் உங்கள் அடுத்த பதிவை எழுத வேண்டும் ;-)

ADMIN said...

உங்கள் ஆசைபடியே நடக்கட்டும்.!

N.H. Narasimma Prasad said...

Hope u'r Dream come True one day...

Ajai Sunilkar Joseph said...

நண்பரே இதுவரை நான் திரையரங்கையே பார்த்ததில்லை என்றால் உங்களால் நம்ப முடியுமா...