20 February 2017

பிரபா ஒயின்ஷாப் – 20022017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு பிடிக்காத ஒரு ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. அதனை அகற்றும் கடைசி நம்பிக்கையாக இருந்தது சனிக்கிழமை நடைபெற்ற சட்டமன்ற வாக்கெடுப்பு. அதுவும் சொதப்பலில் முடிந்துவிட்டது. சனியன்று எல்லாம் சரியான பாதையில் போய்க்கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரையில் இது சொதப்பலாக முடிந்ததற்கு காரணம் ஸ்டாலின் கைதானது தான். அவர் கைதாவதை தவிர்த்திருக்க வேண்டும். சூழ்நிலையை கணித்து தொண்டர்களுக்கு ரகசிய முன்னறிவிப்பு கொடுத்து மெரினாவில் கூட்டியிருக்கலாம். காவல்துறை ஸ்டாலினை கைது செய்துவிட முடியாதபடி தொண்டர்கள் அரண் அமைத்திருக்கலாம். அப்படி செய்திருந்து இன்னொரு இரண்டு மணிநேரத்தை கடத்தியிருந்தால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து தி.மு.க.வின் போராட்டத்தில் கலந்துகொள்ள துவங்கியிருப்பார்கள். அதன்பிறகு எல்லாம் வரலாற்று நிகழ்வாகியிருக்கும். முன்பே ஒருமுறை சொன்னது போல ஸ்டாலின் இன்னமும் கடந்த தலைமுறை அரசியலையே நம்பியிருக்கிறார். இப்போது கூட புதன்கிழமை அறப்போராட்டம் அறிவித்திருக்கிறார். அன்றைய தினம் அடையாளமாக எல்லோரும் கைது செய்யப்பட்டு, மண்டபங்களில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, மாலையில் விடுதலையாவார்கள். பிரயோஜனமில்லாத போராட்டம். கிரிக்கெட் மாட்சில் இந்தியா எட்டு விக்கெட்டுகளை இழந்தபிறகும் ஸ்ரீநாத்தும், கும்ளேயும் அடிப்பார்கள் என்றொரு குருட்டு நம்பிக்கையுடன் காத்திருப்போம் அல்லவா அப்படியொரு நம்பிக்கையுடன் இப்பொழுது கவர்னரை நம்பிக் காத்திருக்கிறேன்.

பார்க்க நினைத்து விட்டுப்போய் கிடப்பிலிருக்கும் படங்களிலிருந்து யாவரும் நலம் பார்த்தேன். பொதுவாக ஹாரர் படங்கள் மூன்று வகை. ஒன்று, தர்க்கப்பாதையில் போகும், இரண்டாவது அமானுஷ்யப் பாதையில் போகும், மூன்றாவது இரண்டும் கலந்து கொஞ்சம் ஆன்மிகம் சேர்ந்திருக்கும். யாவரும் நலம் முதல் வகையாக இருக்கும் என்று நினைத்திருந்தால் அது பொசுக்கென இரண்டாவது ரூட்டில் போய்விட்டது. அதன்பிறகு ஒருமாதிரியாக போய் படத்தின் தலைப்பிற்கேற்ப முடிவடைகிறது. மற்றபடி நல்ல கதை. எட்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம். நிறைய நாடகத்தனங்கள். நாடகத்திற்குள் ஒரு நாடகம் வேறு வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மிகத்தீவிரமாக அந்த நாடகத்தை பார்க்கிறார்கள். எப்படியென்றால் வீட்டில் மருமகளுக்கு அபார்ஷன் ஆகியிருக்கிறது. அந்தச் சூழலில் கூட நாடகம் பார்க்கிறார்கள். நாடகத்தின் தலைப்புப் பாடலுக்கெல்லாம் ஷங்கர் மஹாதேவன் குரல் ஒலிக்கிறதே என்று சந்தேகப்பட்டு பார்த்தால் படத்திற்கே அவருடைய குழுதான் இசையமைத்திருக்கிறது. ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்ட படம் போலிருக்கிறது. டப்பிங் கொடூரம். நீத்து சந்திராவுக்கு தமிழில் முதல் படம். கோலிவுட் கவனிக்காமல் தவறவிட்ட பொக்கிஷங்களில் நீத்துவும் ஒருவர் என்பது என் எண்ணம். அற்புதமான முகசாயல் நீத்துவுக்கு !

சூரியன் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் செல்வக்குமாரின் ஃபேண்டஸி கதைகள் படித்தேன். நண்பர் ஹரீஷ் கேட்டது போல புத்தகத்தில் எழுத்தாளரின் பெயர் ஏன் ‘செல்வு@selvu’ என்றிருக்கிறது என்று புரியவில்லை. எழுத்தாளரின் பெயர் என்பது கம்பீரமாக இருக்க வேண்டாமா ? எனக்குப் பொதுவாக குழந்தைகளுக்கு கதை சொல்ல தெரியாது. என் குழந்தைக்கு இதுவரை நான் ஒரு கதை கூட சொன்னது கிடையாது. செல்வாவின் புத்தகத்தை படித்தபிறகு இனி அந்த கவலையில்லை என்று தோன்றுகிறது. புத்தகம் எல்லா தரப்பினருக்குமானது என்றாலும் கதையில் வரும் பல விஷயங்களும் குழந்தைகளின் உலகத்தை நினைவூட்டுகிறது. ஒரு சின்ன இடத்தில் கூட விரசமோ, இரட்டை அர்த்தமோ இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படியொரு புத்தகம் படிக்கிறேன். பெரும்பாலான கதைகளில் ஒரு அதிசயப்பொருள் அல்லது அதிசய சக்தி வருகிறது. உதாரணத்திற்கு, ஒருமுறை ஏறி இறங்கினால் உயரம் கூட்டும் ராட்டினம், தொலைக்காட்சி தொகுப்பாளரின் நகையை கவரும் காந்தம், கரப்பான்களை கண்டாலே அடித்துக் கொல்லும் சுத்தியல் :), நிழலை தின்கிற ஆடு இப்படி ஏதாவது ஒன்று வருகிறது. அந்த அதிசிய பொருளையோ சக்தியையோ தவறாக பயன்படுத்தினால் பேக்ஃபயர் ஆகிறது. கதையினூடே நீதி போதனையும் செய்கிறார் செல்வா. கதை மாந்தர்கள் செய்யும் சின்னச் சின்ன தவறுகளுக்கு சின்னச் சின்ன தண்டனைகள் கிடைக்கின்றன. ஒரு கதையில் ஒரு நபர் அடிக்கடி திரைப்படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறார். அப்படி பார்க்கும்போதெல்லாம் அவரிடமிருந்து நூற்றியிருபது ரூபாய் காணாமல் போய்விடுகிறது. எழுத்துநடையில் அவ்வப்போது அராத்துவின் தற்கொலை கதைகளின் விளிம்புவரை தொட்டுவிட்டு வருகிறார். இரண்டு நாற்காலிகள் இருந்தன. அவை ஒவ்வொன்றிற்கும் நான்கு கால்கள் என்றெல்லாம் எழுதி அச்சமூட்டுகிறார். செல்வாவின் எழுத்து ஒரு வகையான படைப்பாற்றல் என்றால் அதற்கு கதிர் வரைந்துள்ள ஓவியங்கள் இன்னொரு கோண படைப்பாற்றல். இருவருமாக சேர்ந்து நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். 

தமிழ் சினிமாவில் உள்ள பெரிய (சம்பளம் வாங்கும்) நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினியில் தொடங்கி விஜய் சேதுபதி வரை அந்த நடிகருக்காகவே படம் பார்க்கும் ரசிகர்கள் / ரசிகைகள் உண்டு. ஏன் அசோக் செல்வனுக்காகவும், கலையரசனுக்காகவும் படம் பார்க்கும் ரசிகைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ‘பருத்தி வீரன்’ கார்த்திக்காக ஒரு படத்தைப் பார்த்த ரசிகரையோ ரசிகையையோ நான் இதுவரை பார்த்ததே இல்லை. ஹீரோவாகவே பதிமூன்று படங்களில் நடித்துவிட்டார். அவற்றில் ஒன்று கூட தரை மொக்கை என்று சொல்ல முடியாது. அவருடைய எல்லாப் படங்களும் ஏதோவொரு தரப்பை ஓரளவிற்காவது திருப்தி செய்யும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. நடிகர் திலகத்திற்குப் பிறகு முதல் படமே பிரம்மாண்ட வெற்றியாக அமைந்தது அவருக்குத்தானே. ஆனாலும் ஏன் அவருக்கென ரசிகர் வட்டம் இல்லையென்பது குழப்பமாகவே இருக்கிறது. ஆள் பார்ப்பதற்கும் ஒப்பீட்டளவில் ஸ்மார்ட்டாகவே இருக்கிறார். அமீர், செல்வராகவன், வெங்கட் பிரபு, ரஞ்சித் என பெரியப் பெரிய கைகளில் தவழ்ந்த கார்த்திக்கு இப்போது மணிரத்ன படவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மீசையெல்லாம் ட்ரிம் செய்து ஆளே மாறியிருக்கிறார். டீசர் பார்த்தால் நமக்கு இன்னொரு ரோஜா கிடைக்கும் போலிருக்கிறது. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நகைக்கடை விளம்பரத்தில் அதிதி ராவ் வருவார். பிரிந்து செல்லும் கணவரை ஏக்கமாய் ஒரு பார்வை பார்ப்பார். அவ்வளவு க்யூட்டாக இருப்பார். காற்று வெளியிடையில் அந்த அதிதி தான் ஹீரோயின், ஆனால் அந்த க்யூட்நெஸ் மிஸ்ஸிங்.

கோலியுட்டில் ஒரு காலத்தில் பெண் ரசிகைகள் அதிகம் கொண்டிருந்த அரவிந்த் சாமிக்கும், மாதவனுக்கும் அப்படி அமைவதற்கு காரணமாக இருந்தவர் மணிரத்னம். அஜித் கூட மணிரத்னத்தின் தயாரிப்பில் வெளியான ஆசையில் தான் பிரபலமடைந்தார். அந்த ராசி கார்த்திக்கு வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும். 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

No comments: