19 June 2017

பிரபா ஒயின்ஷாப் – 19062017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

­தமிழ் சினிமாவில் எடுப்பதற்கு சிரமமான ஜான்ரா ஆக்ஷன்தான் என்பேன். காலம் காலமாக பார்த்து. பார்த்து, பார்த்து, பார்த்து, சலித்த வகையறா. அதனாலேயே பார்வையாளர்கள் இப்ப அவனை கொன்னுடுவாங்க பாரேன் என்று எளிதாக காட்சிகளை கணித்துவிடும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு ஆக்ஷன் படம் என்றாலே அது நன்றாக இருக்காது என்று முன்முடிவு செய்யும் பழக்கம் உண்டு. காரணம் சலிப்புதான். ஆக்ஷன் படங்களில் குறிப்பாக கேங்ஸ்டர் படங்களுக்கென ஒரு டெம்ப்ளேட் இருப்பதை கவனியுங்கள். 

வில்லன் அதிபயங்கர டானாக இருப்பார். டிம்லைட்டில்தான் வாசம் செய்வார். அதிகம் பேசமாட்டார். பயங்கர கோபக்காரராக இருப்பார். யார் மீதோ உள்ள கோபத்தை அடியாட்களிடம் காட்டுவார். உதாரணமாக, செஸ் விளையாட்டிலோ, சீட்டுக்கட்டிலோ அடியாள் வில்லனை ஜெயித்துவிட்டால் அடியாளை டொப்பென சுட்டுத்தள்ளிவிடுவார், அடியாள் கெட்டசெய்தி கொண்டுவந்து சொன்னால் உடனே ஒரு டொப். எதிர் கேங் ஆசாமி வில்லனிடம் சிக்கிக்கொண்டால் உண்மையைச் சொல்லாவிட்டால் கொன்றுவிடுவேன் என்று டார்ச்சர் செய்வார். உண்மையைச் சொன்னதும் டொப். பார்ப்பவர்களை எல்லாம் டொப், டொப், டொப். சுருக்கமாக சொல்வதென்றால் வில்லன் ஒரு அரைகிறுக்கன். இப்படி யாரைப் பார்த்தாலும் சுட்டுவிடும் பைத்தியக்கார வில்லன், ஹீரோவை மட்டும் டக்குன்னு சுட்டு சாகடிக்க மாட்டார். தன் அடியாட்களை ஒவ்வொருவராக விட்டு அடிவாங்க வைப்பார். அப்படியும் ஹீரோ வில்லன் குரூப்பிடம் வசமாக மாட்டிக்கொண்டால் ஹீரோவை மொத்தமாக முடிக்காமல் கொஞ்சம் உயிரை மீதி வைத்து விட்டுவிடுவார்கள். அதிலிருந்து மீண்டுவந்து ஹீரோ வில்லன் ஆட்களை புரட்டி எடுப்பார். வில்லன் துப்பாக்கி எத்தனை முறை சுட்டாலும் ஹீரோ மீது படாது. ஹீரோ துப்பாக்கி முதல்முறையே வில்லனை சுடும். லாஜிக் என்பது துளியும் இருக்காது. ஆக்ஷன் படங்களை எதார்த்தமாக எடுப்பது என்பது சாத்தியமே இல்லை என்றாலும் ஒரு முப்பது சதவிகிதமாவது முயற்சிக்கலாம்.

இவ்வளவையும் தாண்டி சுவாரஸ்யமான ஆக்ஷன் படம் தருவதென்றால் அது ஒரு சாகசம். அதனை மகிழ் திருமேனி இரண்டாவது முறையாக நிகழ்த்திய மீகாமன் பார்த்தேன். மேலே சொன்ன டெம்ப்ளேட் சமாச்சாரங்கள் மீகாமனில் நிறைய வருகின்றன. ஆனால் அவற்றையும் தாண்டி ரசிக்க முடிகிறது. மீகாமனை விட அவரது தடையறத் தாக்க எனக்கு அதிகம் பிடித்திருந்தது. அதிலே ஒரு காட்சியில், செல்வா கறிக்கடை சேகரை தேடிச் செல்கிறார். அந்த சமயத்தில் சேகர் (செல்வாவிற்கு பயம் காட்டுவதற்காக) தன் அடியாள் வாங்கி வந்த தேநீர் பன்றி மூத்திரம் போல இருப்பதாக சொல்லி கோபம் கொள்கிறார். அந்தக் காட்சியில் நடிகர் அருள் தாஸ் பிரமாதப்படுத்தியிருப்பார். இம்மாதிரி சின்னச்சின்ன நகாசு வேலைகளில் தான் மகிழ் திருமேனி தனித்து தெரிகிறார். மீகாமனிலும் அப்படி அங்கங்கே சில காட்சிகள் ஒரு கவிதை அல்லது சிறுகதையைப் போல ஒரு நொடி வந்துவிட்டுப் போகிறது. அடுத்த மகிழ் திருமேனி படம் வெளிவரும்போது திரையரங்கில் பார்க்க வேண்டும்.

ஆக்ஷன் படங்களில் இயக்குநர்கள் கவனமாக இருக்க வேண்டியது வில்லன் கதாபாத்திரத்திற்கு தரும் வெயிட்டேஜ். சொத்தையான வில்லன் கதாபாத்திரம் கொண்ட எந்தப் படமும் வெற்றி பெறாது. மீகாமன் வில்லன் கதாபாத்திரமான ஜோதியைப் பற்றிய வர்ணனை இப்படி போகிறது. அவன் எங்க இருப்பான், எப்படி இருப்பான்னு கூட யாருக்கும் தெரியாது. ஒரு செல்போனை ஒரு நாளைக்கு மேல யூஸ் பண்றதில்லை. பொம்பள ஆசை, ஆடம்பரம் கிடையாது. சம்பாதிக்கிற பணத்தை செலவு பண்றதும் கிடையாது. எனக்கு இதைக் கேட்டதும் தூக்கி வாரிப்போட்டது. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்றும் இல்லையென்றால் என்ன இதுக்கு ஒருவன் டானாக இருக்கவேண்டும். தாளமுத்து நடராசன் மாளிகையில் குமாஸ்தாவாக வேலை பார்க்கலாம். 

சரியான இன்புட்ஸ் கொடுத்தால் ஹன்சிகா கூட அழகுதான் ! மீகாமன் சமயத்தில் சவிதாவுக்கும் ஹன்சிகாவுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் எம்.எம்.மானசி டப்பிங் கொடுத்திருக்கிறார். செக்ஸியான குரல். ஆனால் சொல்லி வைத்தாற்போல விமர்சகர்கள் எல்லோரும் டப்பிங் பொருந்தவில்லை என்று சொல்லிவிட, மீண்டும் சவிதாவுடன் சமரசமாகிவிட்டார் ஹன்சிகா. விமர்சகர்கள் தான் சினிமாவை கெடுக்கிறார்கள்.

சினிமாவில் ஹீரோயின்களுக்கென ஒரு காலாவதி தேதி இருக்கிறது. எத்தனை திறமையான, அழகுள்ள நடிகையாக இருந்தாலும் அதிகபட்சம் பத்து வருடங்கள். அதன்பிறகு அவர்கள் பெண்ணியவாதிகளாக உருமாறி நடிகைகள் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டுமென அடுத்த தலைமுறை கதாநாயகிகளுக்கு வகுப்பெடுப்பார்கள். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். வில்லன்களின் ஆயுள் அதைவிட மோசமாக இருக்கிறது. ஹிந்தியில் அல்லது தெலுங்கில் ஒரு சுற்று முடித்துவிட்டு தமிழுக்கு வருகிறார்கள். முதல் படத்தில் பேசப்பட்டால் அடுத்த வாய்ப்பு. அதன்பிறகு எத்தனை பெரிய வஸ்தாதாக இருந்தாலும் நான்கைந்து படங்களுக்குப் பிறகு, துணை வில்லன், உப வில்லன், அடியாள், குணச்சித்திரம் என டீமோட் ஆகி காணாமல் போய்விடுகிறார்கள். மீகாமனில் மட்டும் அப்படி அரை டஜன் வில்லன்கள் வருகிறார்கள். ஆஷிஷ் வித்தியார்த்தி (தில்), அவினாஷ் (திருமலை), மகாதேவன் (பிதாமகன்), சுதான்ஷு பாண்டே (பில்லா 2). எல்லோருக்கும் துண்டு வேடங்கள்.

ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதற்காக கண்ணீர் விட்டு அழவெல்லாம் செய்திருக்கிறேன். ஜவகல் ஸ்ரீநாத்தும் அணில் கும்ளேயும் விளையாடும்போது கூட நம்பிக்கையாக உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஒரு சின்ன நெருடலைத் தாண்டி வேறெதுவும் செய்யவில்லை இந்தியாவின் தோல்வி. வீட்டில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வரவில்லை. கொஞ்ச நேரம் ஹாட் ஸ்டாரில் பார்த்தேன். RJ பாலாஜிக்கு நிரந்திரப்பணி கிடைத்துவிட்டது. சமீபத்தில் தமிழ் வர்ணனை மீள்வருகை புரிந்தபோது பிராமண ஸ்லாங் வருவதாக நிறைய கிண்டல்கள் எழுந்தன. உண்மையில் கிரிக்கெட் வர்ணனையைப் பற்றி நம்முடைய மனங்களில் ஒரு ஆழமான பிம்பம் பதிந்துள்ளது. அதனை மாற்றுவது கடினம். பிராமண ஸ்லாங் மட்டுமல்ல. லூஸ் மோகன் ஸ்லாங், நெல்லை சிவா ஸ்லாங் அல்லது கிருபானந்த வாரியாரின் கதாகாலட்சேப ஸ்லாங் (அளவோடு வந்த பந்து... ஆஃப் சைடில் வந்த பந்து...) என்று எந்த ஸ்லாங்கில் வந்தாலும் நாம் தமிழ் வர்ணனைகளை கிண்டலடித்துக் கொண்டுதான் இருப்போம். ஆங்கில வர்ணனையைக் கேட்பது என்பது நம் கிரிக்கெட் பார்க்கும் கலாசாரத்தின் ஒரு பகுதி. சந்தேகமிருந்தால் முந்தைய தலைமுறை அங்கிள்களை கேட்டுப் பாருங்கள். இத்தனைக்கும் ஆங்கில வர்ணனை ஒன்றும் புரிந்து தொலையாது. ஆனாலும் தூர்தர்ஷனின் ஹிந்தி வர்ணனையை சபித்துவிட்டு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வராதா என்று டியூன் செய்து பார்ப்போம். ரவி சாஸ்திரியும், ஜெஃப்ரி பாய்காட்டும் கத்தும்போது வரும் ஒரு குதூகலம். புரியும்படி சொல்வதென்றால் பெருமைக்கு எருமை மேய்ப்பது. ஹாலிவுட் சினிமாவில் பேசும் ஆங்கிலம் நமக்கு மருந்துக்கும் புரியாது. அதே சமயம் தமிழ் டப்பிங் பார்க்கவும் பிடிக்காது. ஹாலிவுட் படங்களை மிகவும் தொழில்முறையாக மொழிபெயர்த்தால் கண்றாவியாக இருக்கும். ஆனால் பழைய விஜய் டிவி ஜாக்கி சான் பட மொழிபெயர்ப்புகளுக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட் வர்ணனைக்கும் அதுதான் பாதை. முடிந்தவரை நகைச்சுவை உணர்வுடன், க்வெர்க்கியாக பேசினால் பார்வையாளர்களை கவரலாம். ஸ்டார் நிறுவனம் என்பதால் விஜய் டிவியின் ஆஸ்தான ஆட்கள் நண்டு ஜகன், படவா கோபி போன்றவர்களை களமிறக்கலாம். மாயந்தி லாங்கருக்கு ஈடு செய்யும் வகையில் ஜாக்குலின் அல்லது ப்ரியா பவானிசங்கரை கொண்டு வரலாம். மா கா பா ஆனந்த், தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ்,பாவனா போன்றவர்களை கிட்டக்கவே சேர்க்கக்கூடாது. 

பீச்சாங்கை, மரகத நாணயம், உரு, வெருளி என்று மே பி லிஸ்ட் படங்கள் நான்கு வந்திருக்கின்றன. பீச்சாங்கை மற்றும் வெருளியை செயினில் இருந்து நீக்கியாயிற்று. சனி மாலை வேலை சீக்கிரம் முடிந்தால் தேவியில் உரு அல்லது மரகத நாணயம் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். கறார் விமர்சகர் ஐந்துக்கு நான்கு கொடுத்ததால் மரகத நாணயத்திற்கு சென்றேன். அட்வென்ச்சர், ஃபேண்டஸி, காமெடி, த்ரில்லர் என்று எல்லாவற்றையும் போட்டு மிக்ஸியில் அடித்துக் கொடுத்திருக்கிறார்கள். நிறைய அச்சு பிச்சு நகைச்சுவைகள். முதல் முப்பது நிமிடப்படத்தை தவறவிட்டால் கூட ஒரு பாதகமுமில்லை. அதன்பிறகு படம் நம்மை உள்ளிழுத்து விடுகிறது. ஆனந்தராஜும், முனிஷ்காந்தும் ரகளை செய்கிறார்கள். ஆனந்தராஜ் தீவிர வில்லனாக இருந்தபோது கூட இவ்வளவு ரசிக்க வைத்திருக்கமாட்டார். முனிஷ் நமக்குக் கிடைத்திருக்கும் அட்டகாசமான நடிகர். (ஆனால் தமிழ் சினிமா கொஞ்ச நாளில் அவரை சிதைத்துவிடும் பாருங்கள்). காளி வெங்கட்டின் டப்பிங்கிற்கு நிக்கியின் நடிப்பு செம க்யூட் ! ஏதாவது படம் பார்ப்பதாக இருந்தால் மரகத நாணயம் பாருங்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

King Viswa said...

//ஹாலிவுட் படங்களை மிகவும் தொழில்முறையாக மொழிபெயர்த்தால் கண்றாவியாக இருக்கும்.//

ஙே? அப்படியா?

இதென்ன லாஜிக்? இதற்கு ஏதேனும் உதாரணம் கொடுத்து விளக்க முடியுமா?

VIJIYAAN said...

வணக்கம் நண்பா
நீங்கள் சொன்னது முற்றிலும் சரி.ஆக்ஷன் படங்களை அதற்குண்டான இலட்சணங்களோடு எடுப்பது தற்போது மகிழ் மட்டுமே.பிரபல நடிகர்கள் சேரும்போது அவர் புகழ் வெளிச்சத்திற்கு வருவார்.அடுத்த படத்தைக் காண நானும் ஆவலாக உள்ளேன்.