4 December 2017

பிரபா ஒயின்ஷாப் – 04122017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சில மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண வீட்டிற்கு சென்றிருந்தேன். மேடையில் மணமக்கள் நின்றிருக்க, விருந்தினர்கள் எல்லாம் மேலே எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். மணமக்கள் தானே அருந்ததி பார்ப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே மேலே பார்த்தால் ட்ரோன் காமிரா ! அதன்பிறகு சுமார் நான்கைந்து திருமணங்களில் ட்ரோன் காமிரா பார்த்துவிட்டேன். கழுகுக் கோணத்தில் படம்பிடிக்க பயன்படுகிறது என்பதை விட இது ஒரு கவர்ச்சி பேக்கேஜ் என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டு திருமணங்கள் இந்த மாதிரி கவர்ச்சி, ஆடம்பர விஷயங்களில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. அது போக வட இந்திய, மேற்கத்திய கலாசாரங்களை வேகமாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிகமில்லை, இன்னொரு பத்து வருடங்களில் நம் திருமணங்களில் என்னென்ன மாறுதல்கள் எல்லாம் நடைபெறும் என்று என் அனுமானங்கள் –

- வரவேற்பில் மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்து இறங்கலாம்.
- மண்டபத்திற்கு பதிலாக கப்பல், விமானம், தனித்தீவு போன்ற இடங்களில் திருமணம் நடத்தலாம்.
- மண்டபத்தில் நடாத்தினால் சேர்கள் வரிசையாகப் போடாமல் அவார்ட் நிகழ்ச்சி பாணியில் போடலாம்.
- அழைப்பிதழ்கள் டிஜிட்டல் மயமாகலாம். சின்னதாக ஒரு சினிமா ட்ரைலர் போல அச்சிதழ்கள் தயாராகலாம்.

ஃபோட்டோகிராபி என்கிற துறை போகப்போகிற எல்லையை நினைத்தாலே பகீரென்று இருக்கிறது. ஏற்கனவே கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் எல்லாம் சகஜமாகிக் கொண்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் –

- மணமக்கள் மீது பாடி மவுண்ட் கேமராவை மாட்டி விடலாம்.
- மணமக்களை வித விதமான பொஸிஷன்களில் படம் பிடிக்கலாம்.
- மணமகன், மணமகள் மற்றும் நண்பர்களை வைத்து ஒரு குறும்படம் எடுத்து வெளியிடலாம்.

சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு சினிமாவில் என்னென்ன துறை ஆட்கள் பணிபுரிகிறார்களோ அவர்கள் அத்தனை பேருக்கும் திருமணங்களில் வேலை உண்டு. கலை இயக்குநர், காஸ்டியூம் டிஸைனர், கோரியோகிராஃபர், எடிட்டர் போன்ற அத்தனை ஆசாமிகளும் திருமணத்திற்கும் தேவைப்படுவார்கள். ம்ஹூம்... ஸ்டண்ட் மாஸ்டரின் சேவைகள் எல்லாம் திருமணத்திற்கு பின்புதான் தேவைப்படும்.

சக்கரகட்டி என்கிற திரைப்படத்தைப் பற்றிய இப்பத்தியை நீங்கள் ஏற்கனவே கூட என் வலைப்பூவில் படித்திருக்கலாம். அப்படி படித்திருந்தால் பல்லைக் கடித்துக்கொண்டு இன்னொருமுறை படித்துவிடுங்கள் அல்லது அடுத்த பத்திக்கு தாவிவிடுங்கள். நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் சக்கரகட்டி வெளியானது. வெளியாகும் முன்பே பாடல்கள் பயங்கர ஹிட். குறிப்பாக டாக்ஸி, டாக்ஸி ! படம் வெளிவந்து அப்படியொன்றும் விசேஷமாக ஓடவில்லை. அப்பொழுதெல்லாம் எனக்கு திரையரங்கம் சென்று படம் பார்க்கும் வாய்ப்புகள் அதிகமில்லாததால் பர்மா பஜாரில் வாங்கித்தான் பார்ப்போம். நிறைய படங்களை இப்படி ஹாஸ்டலில் தேயத் தேய பார்த்திருக்கிறோம். சென்னை நகரத்தில் இருந்து வருபவன் என்பதால் நான்தான் அந்த வெப்பன் சப்ளையர் வேலையைச் செய்துவந்தேன். அப்படிப் பார்த்ததுதான் சக்கரகட்டி ! முதல்முறையே பிடித்துவிட்டது ! அதற்கு பல காரணங்கள். முக்கியமானது படத்தில் வரும் மேல்தட்டு கலாசாரம். அவர்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் மொழி என்று அவற்றின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. இரண்டாவது, வசனங்கள் மற்றும் சில கிரேசி நகாசு வேலைகள். படம் வெளிவந்த சமயத்தில் எனக்கு அதன் வசனங்கள் ஒவ்வொன்றும் மனப்பாடம். (ராகுல் டிராவிட் லேட் பிக்கப்). அப்படத்தில் சரியாக டாக்ஸி டாக்ஸி பாடல் முடிந்தபிறகு இயக்குநருக்கு ஒரு கிறுக்கு பிடித்திருக்கும். ஒருமாதிரியாக கோணலாக கொண்டுப்போய் படத்தை முடித்திருப்பார். மற்றபடி அதன் முதல் தொண்ணூறு நிமிடங்களின் தீவிர ரசிகன் நான்.

சில வருடங்களுக்குப் பிறகு அவரது அடுத்த படமான இந்திரஜித்தின் போஸ்டர் வெளியானது. ஃபேண்டஸி படம். அப்போதே அது வெளியாகும் சமயத்தில் அதனை பார்த்துவிட வேண்டுமென நினைத்திருந்தேன். பல வருடங்களுக்குப் பிறகு எனது அந்த எண்ணம் பலித்திருக்கிறது. அநேகமாக இதில் நடித்திருக்கும் அனைவரும் ஏற்கனவே கரையை கடந்துவிட்ட வலுவிழந்த புயல்கள். இந்திரஜித்தில் நடித்திருக்கும் இரண்டு வில்லன் நடிகர்களும் தமிழில் ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தத்தம் பழைய இடங்களுக்கே திரும்பிவிட்டார்கள். இவர்களில் சுதான்ஷு பாண்டேவின் கம்பீரமான தோற்றம் எனக்குப் பிடிக்கும். இவர் எந்திரன் இரண்டாம் பாகத்தில் பேராசரியர் போராவின் மகனாக நடிப்பதாகக் கேள்வி. படம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் சோனாரிகா படோரியாவை யாருக்கும் தெரிந்திருக்காது. இடையே பிகினி சர்ச்சைகளில் எல்லாம் சிக்கி கொஞ்சம் பிரபலமாகி மீண்டும் காணாமல் போனார். அஷ்ரிதா ரெட்டி தமிழில் இரண்டு படங்கள் நடித்துவிட்டு பின் வாய்ப்புகள் கிடைக்காமல் போனார். இவர்கள் எல்லோருக்கும் இப்படம் ஒரு நாஸ்டால்ஜியா அனுபவமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

படத்தில் எனக்கு பிடித்திருந்த சில சுவாரஸ்யங்கள் –

- மருத்துவ குணங்கள் கொண்ட கல் பற்றிய மையக்கதை.
- படத்தில் காட்டப்படும் மலைப்பிரதேசம்.
- கணிதமேதை பற்றிய அனிமேஷன் காட்சிகள்.
- மாவோயிஸ்டுகள் வைத்திருக்கும் ஏரோப்ளேன்.
- ஆயிரம் தாமரை பாடல் வரிகள் (ஜாடிக்குள் பலநாட்கள் மூடித்தான் கிடந்தாலும் பூதங்கள் இளைக்காதடா, நஞ்சுகொண்ட இதழில் கூட புன்னகைக்கும் திறனும் உண்டு)

படத்தில் பிடிக்காதவை மற்ற அனைத்தும் என்று சுருக்கமாக சொல்லிவிடலாம் என்றாலும் சில முக்கியமான ஆதங்கங்கள் –

சோனாரிகா படோரியா
- சோனாரிகா படோரியா (சரியாக திட்டமிட்டிருந்தால் அஷ்ரிதா ரெட்டி ரோலையும் இவருக்கே கொடுத்துவிட்டு, தலா ஒரு ஜல்சா காட்சி மற்றும் பாடலை வைத்திருக்கலாம்).
- மாவோயிஸ்டுகளை லுச்சாத்தனமாக காட்டியது (இதற்காகவே மாவோயிஸ்டுகள் கலாபிரபுவை கடத்திக் கொண்டுப்போய் போடலாம்).
- கிராஃபிக்ஸ் (மருதாணி பாட்டில் பார்த்த கிராபிக்ஸ் எல்லாம் இயக்குநரின் பாணி என்றுதான் நினைத்திருந்தேன். படம் முழுக்க அதே டுபாக்கூர் கிராபிக்ஸ் என்றால் எப்படி ?)

பொதுவாகவே சக்கரக்கட்டியில் பார்த்த அதே கிரேசிநெஸ் நிறைய இடங்களில் கண்கூடாக தெரிகிறது. அதே போலவே அல்லு சில்லு கிளைமாக்ஸ் ! மருத்துவ குணம் கொண்ட கல், கோவா, சோனாரிகா படோரியா அங்கிருந்து அருணாச்சல பிரதேச காட்டுப்பகுதி என்று அல்வா மாதிரியான களத்தை காலி செய்திருக்கிறார் கலா பிரபு. 

இந்திரஜித்தின் தீம் மியூசிக்கின் இடையே வரும் ஒரு பிட்டை ஏதோ ஒரு தமிழ் செய்தி சானலின் பிரேக்கிங் நியூஸ் பகுதியில் கேட்டிருக்கிறேன். நியூஸ் 7 தமிழ் அல்லது தந்தி தொலைக்காட்சி ?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

விமல் ராஜ் said...

///ஸ்டண்ட் மாஸ்டரின் சேவைகள் எல்லாம் திருமணத்திற்கு பின்புதான் தேவைப்படும்...
ஹா..ஹா..ஹா..

Ponmahes said...

பதிவு அருமை வாழ்த்துகள் தம்பி ...