12 March 2018

பிரபா ஒயின்ஷாப் – 12032018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வார வாசிப்பு சுஜாதாவின் மெரினா ! கணேஷ் – வஸந்த் தோன்றும் குறுநாவல். பொறுப்பில்லாத ஒரு பணக்கார இளைஞன் ஒருநாள் இரவு மெரினாவில் தன் நண்பர்களுடன் களித்துக்கொண்டிருக்கிறான். அப்போது எதிர்பாரா விதமாக அங்கே ஒருவனுடன் பிரச்சனையாகி அடிதடியில் முடிகிறது. மறுநாள் மெரினாவில் ஒரு அனாமதேய சடலம் கண்டுபிடிக்கப்படுகிறது. இதனை மையமாக வைத்து நாவலின் கதை போகிறது. இந்நாவலை தோராயமாக சுமார் ஒன்றே கால் மணிநேரத்திலேயே படித்து முடித்துவிட்டேன் (112 பக்கங்கள்). 

இது வழக்கமான வேகத்தை விட கொஞ்சம் அதிகம் என்று நினைக்கிறேன். காரணம், சுஜாதாவின் இலகுவான மொழிநடையா அல்லது கிண்டிலா என்று தெரியவில்லை. சோதனைகள் செய்து பார்க்க வேண்டும். அக்காலத்தில் கதைகளில், குறிப்பாக பிரபல வார இதழ்களில் அவை வெளிவரும்போது அவற்றிற்கென ஒரு மாரல் இருக்க வேண்டுமென கருதப்பட்டுள்ளது. தப்பு செய்பவன் நிச்சயம் தண்டனை அனுபவிப்பான் என்பது மாதிரி. அதனாலேயே மெரினா போன்ற நாவல்களில் வரும் கிளைமாக்ஸில் ஒரு செயற்கைத்தனம் இழையோடுகிறது.

**********

தமிழக அரசின் நாற்பத்தி நான்காவது சுற்றுலா பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பார்க்கிங்கில் சில்லறை கேட்பானே என்று பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளை துழாவிக்கொண்டிருந்த சமயம் ஹண்ட்ரட் சார் என்று அதிர்ச்சி கொடுத்தார் அந்த ஆசாமி ! ஒரு காலத்தில் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வரம் இந்த சுற்றுலா பொருட்காட்சி. (இப்போது கீழ்த்தட்டு மக்களுக்கு கிடையாது). ஒரு பக்கம் பறவைகள் உலகம், ஹாரர் ஹவுஸ், காஞ்சனா 3, பார்பி ஹவுஸ் (அத்தனை பேரும் பித்தலாட்டக்காரர்கள்) போன்ற தலங்கள், இன்னொரு பக்கம் ஃபேன்ஸி ஸ்டோர், ராஜஸ்தான் ஊறுகாய், ஜமுக்காள வகையறாக்கள், நடுவில் டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, கரும்புச்சாறு என உணவுவகைகள். 

நேப்பியர் பாலத்திலிருந்து பொருட்காட்சி (படம்: இணையம்)
இவ்விடத்தில் நிறைய அழகான, இளமையான, சிற்றிடை கொண்ட, சரிந்துவிடுமோ என்ற பதறக்கூடிய மெல்லிய ஷிஃபான் சேலை, பின்பக்கம் முடிச்சுகள் கொண்ட டிஸைனர் பிளவுஸ் அணிந்த, மார்வாடி மனைவிகள் உலவுவதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. குரான், பைபிள் இலவசமாக தருகிறார்கள். மிடில்கிளாஸ் (கணவன் – மனைவி)கள் வெவ்வேறு ஆட்கள் போல நடந்துசென்று ஆளுக்கொரு குரான் / பைபிள் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள் (என்ன செய்வார்கள் ?) டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு செல்லும் முன் அரசுக்கூடங்கள் பலவற்றில் விளக்குகளை அணைத்துவிட்டார்கள். எல்லா அரங்கு முகப்புகளிலும் நடுவில் ஜெயலலிதா படமும் இருபுறமும் தாய்மாமன்கள் போல எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

**********

டிவியில் விஷாலும் ஸ்ரீதிவ்யாவும் காதல் செய்யும் ஒரு பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஸ்ரீதிவ்யாவை பார்த்ததும் எனக்கு பல ஞாபகங்கள் வந்து போனது. நன்றாக வந்திருக்க வேண்டிய நடிகை. கீர்த்தி சுரேஷ், தான்யா ரவிச்சந்திரன் (பெருமூச்சு !) மற்றும் சசிகுமாரும் விஜய் ஆண்டனியும் போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்திய மீடியாக்கர் நடிகைகளின் வரவாலும் மார்க்கெட் இழந்த துரதிர்ஷ்டசாலி. இருப்பினும் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஹீரோயினாக பத்து படங்கள் என்பதே பெரிய சாதனைதான் !

கறுவாக்காட்டு கருவாயனுடன் ஸ்ரீதிவ்யா
மேற்படி பாடலில் ஒரு காட்சி. புதுமணத்தம்பதியான விஷாலும் ஸ்ரீதிவ்யாவும் சினிமாவுக்கு போகிறார்கள். அங்கே (ஒரு) குழந்தையுடன் இருக்கும் ஒரு தம்பதியை விஷால் ஸ்ரீதிவ்யாவிடம் காட்டுகிறார். பதிலுக்கு ஸ்ரீதிவ்யாவோ ஏழு குழந்தைகளுடன் வரும் ஒரு தம்பதியைக் காட்டி தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.

இன்னொரு பாடல் காட்சி. நித்யா (மேனன்) தன் தாயாரிடம் அவரை விட ஒரு குழந்தை அதிகமாக பெற்றுக்காட்டுவதாக சவால் விடுகிறார். அப்படத்தில் நித்யாவின் தாயார் பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை பத்தொன்பது !

இது தமிழ் சினிமாவின் நீண்ட கால கிளிஷேக்களில் ஒன்று. ஹீரோயின் ஹீரோவிடம் எனக்கெல்லாம் ஒன்னு, ரெண்டு போதாது, டஸன் கணக்கில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், பாடலின் லிரிக்ஸில் ஹீரோ ஹீரோயினிடம் நூறு பிள்ளைகள் பெற்றுக் கொடுக்கச்சொல்லி கேட்பதும் (தோராயமாக கணக்கிட்டால் இந்த ப்ராசஸை முடிக்க 72 ஆண்டுகள் ஆகும்), அக்குழந்தைகள் படிக்க தனி பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்பதும்... அப்பப்பா ! தமிழ் சினிமா வசனகர்த்தாகளுக்கும், பாடலாசிரியர்களுக்கும் அதிக காதல் என்றால் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்று யாரோ தவறாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். 

வரலாறும் அப்படித்தான் சொல்லிக் கொடுக்கிறது. நம்மூரின் காதல் சின்னமாம் தாஜ் மஹால் புகழ் ஷாஜஹான் – மும்தாஜ் கதையை கவனியுங்கள். 1612ல் ஷாஜஹானுக்கும் மும்தாஜுக்கும் திருமணம் நடைபெறுகிறது. 1631ம் ஆண்டு தனது பதினான்காவது பிரசவத்தின் போது மும்தாஜ் உயிரிழக்கிறார். பத்தொன்பது ஆண்டுகளில் பதினான்கு குழந்தைகள். யோசித்துப் பார்த்தால் ஷாஜஹான் மும்தாஜுக்கு மிகப்பெரிய மன மற்றும் உடல் உளைச்சலை கொடுத்திருக்கிறார். நியாயமாக செளதியில் கொடுப்பதாக சொல்லப்படும் அக்கொடூர தண்டனையை ஷாஜஹானுக்கு வழங்கியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் சரக்கடித்த மறுநாள் காலை இனி இந்த கருமத்தை தொடவே கூடாது என்று தோன்றுவது போல, குழந்தையை பெற்றெடுக்கும் தருணத்தில் பெண்களுக்கு இன்னொரு குழந்தையெல்லாம் முடியவே முடியாது என்று தோன்றுமாம். பிரசவ வைராக்கியம் ! ஆனாலும் இந்திய பொது மனப்பான்மையின்படி பெரும்பாலானோர் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இது பெண்களின் கோணம். ஆண்களைப் பொறுத்தவரையில் தன் மனைவியின் பிரசவத்தின்போது லேபர் வார்டுக்குள் அனுமதிக்கப்பட்ட ஆண், அவளிடம் அடுத்த குழந்தை கேட்கமாட்டான் என்கிறார்கள். இப்பொழுதெல்லாம் பெரும்பாலான தம்பதியர் ஸ்கூல் ஃபீஸை நினைத்து பயந்தே இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதில்லை.

ஸ்டாட்ஸ் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். ஃபியோதர் வஸில்யேவ் என்கிற ரஷ்ய விவசாயியின் முதல் மனைவி மொத்தம் 69 குழந்தைகள் பெற்றெடுத்திருக்கிறார். (பிரசவக்கணக்கு 27; 16 ட்வின்ஸ், 7 ட்ரிப்லெட்ஸ், 4 க்வாட்ரப்லெட்ஸ்). கின்னஸ் சாதனைப் பட்டியலின் படி அதிக குழந்தைகள் பெற்றேடுத்திருக்கும் பெண் இவர்தான். இருப்பினும் திருமதி.வஸில்யேவின் இச்சாதனை பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

தங்கள் இருபது குழந்தைகளுடன் ரேட்ஃபோர்ட் தம்பதியர் (படம்: The Sun)
ஆண்களைப் பொறுத்தவரையில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதில் அவர்களது பங்கு வெகு சுலபமானது என்பதாலும், அக்காலத்தில் பாலிகாமி சாதாரண விஷயம் என்பதாலும் வகை தொகையில்லாமல் பெற்றுப்போட்டிருக்கிறார்கள். செங்கிஸ்கான் டி.என்.ஏ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது ஆசியாவின் ஒரு பகுதியை (மங்கோலியா, வடக்கு சைனா, கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான் பகுதிகள்) எடுத்துக்கொண்டால் எட்டு சதவிகித மக்கள் செங்கிஸ்கானின் வழி வந்தவர்கள் என்கிறார்கள். 

பெர்டோல்ட் வெய்ஸ்னர் என்கிற செக்ஸ் மருத்துவ ஆராய்ச்சியாளர், தனது மருத்துவமனைக்கு வரும் குழந்தையில்லா பெண்களின் மீது தனது விந்தணுக்களை செலுத்தி அறுநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வரை பெற்றெடுத்திருப்பதாக குறிப்புகள் சொல்கிறது.

தமிழ் சினிமாவைப் பாருங்கள். நம் இளையதளபதி விஜய் என்னவோ இருபது குழந்தைகள் பெற்றெடுப்பது என்பது ஆண்மை பொருந்திய செயல் என்பதுபோல மாமியாரிடம் சைகை செய்கிறார். நல்லவேளையாக நித்யா இரண்டு குழந்தைகள் பெற்றபிறகு போய் சேர்ந்துவிட்டார். இப்போது என்னுடைய கவலையெல்லாம் எலிக்குஞ்சு மாதிரி இருக்கும் ஸ்ரீதிவ்யா ஏழெட்டு குழந்தைகள் பெற்றெடுக்க முடியுமா என்பதுதான் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

கோகுல் said...

எங்க அம்மா வீட்ல அம்மாவோட மொத்தம் பத்து பேர்

Ponmahes said...

>>இப்பொழுதெல்லாம் பெரும்பாலான தம்பதியர் ஸ்கூல் ஃபீஸை நினைத்து பயந்தே >>இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதில்லை.

அருமை....வாழ்த்துகள் தம்பி....